ஸ்கூல் முடிந்ததும் இருவரும் சைக்கிள் ஸ்டாண்ட்க்கு நடக்க “ஏய் சரண்யா, என்ன ஆச்சு? நீயும் என்கூட வீட்டுக்கு கிளம்புற? நீ பிராக்டிஸ் போகலையா?”, என்று கேட்டாள் ஆஷா. 
“இல்லை, நான் இனி கிரவுண்டுக்கு போக மாட்டேன்”
“ஏய் ஏன்? நான் வரலைன்னா நீயும் போகாம இருக்க?”
“அப்படி எல்லாம் இல்லை. எனக்கு போக பிடிக்கலை”
“கேம் பிடிக்கலையா?”
“அதெல்லாம் இல்லை. நான் மனோஜ்க்காக தான் இந்த கேம்ல சேந்தேன். ஆனா நேத்து அவங்க என்னை அண்ணான்னு சொல்லுன்னு சொல்லிட்டாங்க. அது மட்டுமில்லாம என்னை ரொம்ப திட்டிட்டாங்க”
“என்ன சொல்ற நீ?”, என்று ஆனந்த அதிர்ச்சியாக கேட்டாள் ஆஷா. 
“ஆமா, அண்ணான்னு நினைச்சு பேசு. இல்லைன்னா வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இனி போக மாட்டேன். அவங்க கிட்ட பேசவும் மாட்டேன்”, என்று சொல்லி சைக்கிள் எடுத்துக் கொண்டு சென்றதும் சந்தோசத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது ஆஷாவுக்கு. 
“ஐ ஜாலி மனோஜ் இனி இவ கிட்ட பேச மாட்டாங்க. இவளும் இனி கிரவுண்டுக்கு வர மாட்டா. ஐயையோ இன்னைக்கு ஸ்போர்ட்ஸ் டிரெஸ்ஸ் கொண்டு வந்திருந்தா கிரவுண்டுக்கு போயிருக்கலாமே? சரி நாளைக்கு பாத்துக்கலாம்”, என்று எண்ணிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள். 
மனோஜ் சரண்யாவிடம் பேசியதை அறிந்திருந்த நிர்மல் வீட்டுக்கு சென்ற போது ஆஷா முகம் மலர்ந்திருப்பதை அறிந்து கவலை கொண்டான். “நாளைக்கு மனோஜ் இவளையும் திட்டினால் பீல் பண்ணுவாளே”, என்று ஒரு அண்ணனாக கவலை கொண்டான். 
அதே நேரம் மனோஜும் ஆஷாவை தனியாக பார்த்து அவளுக்கு புத்தி சொல்ல தயாராக இருந்தான். கண்டிப்பாக ஆஷா அவனிடம் பேசியிருந்தால் கடுமையாக அவளிடம் மனோஜ் பேசியிருப்பான். 
ஆனால் ஒரு சுடு சொல்லைக் கூட தன்னுடைய தங்கை தாங்க மாட்டாள் என்று புரிந்து வைத்திருந்த நிர்மல் தங்கையும் மனோஜும் பேசக் கூடாது என்பதற்காக காவல் இருந்தான். 
இருவருக்காகவும் ஆஷா காத்திருந்தால் கிரவுண்டில் இருந்து அனைவரும் வருவதற்கு ஐந்து நிமிசத்துக்கு முன்பே ஆஷாவை அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவான். 
“அண்ணா, இன்னும் மனோஜ் வரலை. கொஞ்ச நேரம் கழிச்சு போகலாமா?”, என்று ஆஷா நேரடியாக கேட்டும் “எனக்கு படிக்க நிறைய வேலை இருக்கு ஆஷா. என்னோட பப்ளிக் எக்ஸாம் தான் எனக்கு முக்கியம். அவனும் இப்ப கிளம்பிருவான். நீ வா”, என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றான். 
மொத்தத்தில் ஆஷாவால் அவனை பார்க்க மட்டுமே முடிந்தது. ஆனால் அவனுடன் பேச முடியவில்லை. மனோஜ் நினைத்திருந்தால் அவளுடன் பேசியிருக்கலாம். ஆனால் நிர்மலுக்காக அவளை விட்டு ஒதுங்க ஆரம்பித்தான். 
ஏதாவது மேட்ச்க்கு செல்லும் போதும் இருவருக்கும் இடையில் இருந்த நிர்மல் அவர்களை எப்போதுமே பேச விட வில்லை. மொத்தத்தில் ஒரே நேரத்தில் நல்ல நண்பனாகவும், நல்ல அண்ணனாகவும் செயல் பட்டான் நிர்மல். 
இப்படியே சில மாதங்கள் கடக்க அவர்களுக்கு அந்த வருடம் முடியும் தருவாயில் இருந்தது. அப்போது மனோஜுக்கு ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்தது. அதில் அவன் இரு கால்களிலும் அடி பட ஏகப் பட்ட தையல்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தான். 
விஷயம் அறிந்து அவனைக் காண நிர்மல் சென்று விட்டு வந்தான். இந்த விஷயம் அறிந்த ஆஷா அவனை பார்க்க வேண்டும் என்று அண்ணனிடம் அடம் பிடித்தாள். 
“இங்க பாரு ஆஷா, நினைச்ச நேரம் போய் பாக்க முடியாது. அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரும் இருப்பாங்க. அதே நேரம் நம்ம வீட்லயும் வெளிய எங்கயும் விட மாட்டாங்க. புரிஞ்சிகோ. நானே எங்க கிளாஸ் பசங்க கூட தான் அம்மா கிட்ட கேட்டுட்டு போயிட்டு வந்தேன். அப்பவும் அம்மா முழுமனசா விடலை”, என்று பொறுமையாக எடுத்து சொன்னான். 
இரண்டு முறை, நான்கு முறை என்று பொறுமையாக புத்தி சொன்ன நிர்மலே கோப படும் படி “அண்ணா நீ இப்ப மனோஜைப் பாக்க என்னைக் கூட்டிட்டு போகலைன்னா நான் செத்துருவேன்”, என்று சொன்னாள் ஆஷா. 
அடுத்த நிமிடம் அவளை நன்கு அடி சாத்தி விட்டான். நண்பனின் நிலை, தங்கையின் டார்ச்சல் என கடுப்பான நிர்மல் “இங்க பாரு ஆஷா இனி நீ மனோஜ் பத்தி பேசின நான் கண்டிப்பா உன்னைப் பத்தி நம்ம அம்மா கிட்டயும் அப்பா கிட்டயும் சொல்ல வேண்டியது இருக்கும்”, என்று எச்சரிக்கை செய்தான். 
இருவருமே ஒருவரை ஒருவர் பெற்றவர்களிடம் காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பதால் நிர்மல் பொய் சொல்கிறான் என்று எண்ணி பள்ளி முடிந்தத்தும் மனோஜைக் காண ஹாஸ்பிட்டலுக்கு சென்றாள் ஆஷா. 
எப்போதும் இந்நேரம் கண் முன் விளையாடிக் கொண்டிருக்கும் தங்கையை காணாத நிர்மல் பயந்து போய் ஒரு நொடி யோசித்தான். பின் அடுத்த நொடி மனோஜ் அனுமதிக்க பட்டிருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு சென்றான். அவள் அங்கே தான் போயிருப்பாள் என்று அவனுக்கு தோன்றியது. 
அங்கே வாசலிலே நின்று கொண்டு எப்படி உள்ளே போக என்று தயக்கத்துடன் நின்றாள் ஆஷா. அவளை அப்படி ஒரு சூழ்நிலையில் பார்த்ததும் கோபம் கொப்பளித்தது நிர்மலுக்கு. 
“நான் அவ்வளவு சொல்லியும் இவளுக்கு இவ்வளவு தைரியமா? ஸ்கூல் எங்க இருக்கு? ஹாஸ்பிட்டல் எங்க இருக்கு? இவ்வளவு தூரம் இவள் வரணும்னா இவளுக்கு எவ்வளவு தைரியம்?”, என்று மனதில் கடுப்புடன் நினைத்த படியே அவள் முன்னே சென்று நின்றான். 
முதலில் அவனைப் பார்த்து பயந்தவள் பின் “அண்ணன் தானே?”, என்று எண்ணிக் கொண்டு “உள்ளே கூட்டிட்டு போ அண்ணா”, என்றாள். 
“நான் அவ்வளவு தூரம் சொல்லியும் நீ இங்க வந்துருக்கன்னா  உனக்கு மனசுல எந்த பயமும் இல்லை அப்படித் தானே? மனோஜ்க்கு கால் உடைஞ்சதுனால நம்ம ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாம் அவனைப் பாக்க வந்து போய் இருக்காங்க. அவங்க கண்ணுல நீ மாட்டிருந்தா நேரா விஷயம் அம்மா காதுக்கு போயிருக்கும். அப்பவும் என்னைத் தான் கேள்வி கேப்பாங்க. இப்ப என்னை அண்ணனா நீ நினைக்கிறதா இருந்தா வீட்டுக்கு கிளம்பு”, என்று கண்டிப்புடன் சொன்னான். 
தன்னுடைய அண்ணன் அப்படி சொல்லவும் அந்த ஹாஸ்பிட்டலையே திரும்பி திரும்பி பார்த்த படி சென்றாள் ஆஷா. 
அதன் பின் மனோஜை அவள் பார்க்க வில்லை. பரீட்சை எழுத மட்டுமே மனோஜ் பள்ளிக்கு வந்தான். அப்போது அவளுக்கு விடுமுறை என்பதால் அவனை அவளால் பார்க்கவே முடியவில்லை. 
ஆனால் பரீட்சை எழுத வந்த மனோஜை நிர்மல் பார்த்தான். “நிர்மல், நான் அடுத்த வருஷம் ஸ்கூல்க்கு வர மாட்டேன் டா”, என்றான் மனோஜ். 
அதில் அதிர்ந்து போன நிர்மல் முதலில் அவனுடைய வீட்டு சூழ்நிலையை எண்ணி “அப்பாவால பீஸ் கட்ட முடியலையா டா? நான் வேணும்னா எங்க அம்மா கிட்ட சொல்லவா?”, என்று கேட்டான். 
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை டா. எனக்கு படிக்கிற இண்டரெஸ்ட் இல்லை”
“டேய், அவரேஜா படிச்சாலும் உனக்கு விளையாடப் பிடிக்குமே? உன்னோட ஸ்போர்ட்ஸ் கனவு என்ன ஆகுறது டா?”
“அதெல்லாமே கனவு தானே? போனா போகுது”
“சரி உன் தம்பி தங்கைங்க படிக்கிற ஸ்கூல்ல தான் சேரப் போறியா?”
“இல்லை நான் படிக்கிறதையே விடப் போறேன்”, என்று சொன்னதும் அதிர்ந்து தான் போனான். அடுத்து நிர்மல் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மனோஜ் கேட்கவே இல்லை. 
ரிசல்ட் வந்ததும் டி‌சியை வாங்கிக் கொண்டு சென்று விட்டான் மனோஜ். அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். அப்போது அறைக்குள் அமர்ந்து தாயும் தந்தையும் பேசிக் கொண்டிருந்த போது திரும்பி போக எண்ணினான். 
அவர்களின் பேச்சில் மனோஜ் பேச்சு அடிபடவும் “அவனைப் பத்தி என்ன பேசுறாங்க?”, என்று எண்ணி அவர்கள் பேசியதை நின்று கேட்டவனின் கோபம் முழுவதும் அவனுடைய தங்கையிடமே திரும்பியது. 
“இப்ப உனக்கு சந்தோஷமா? உன்னால ஒருத்தனோட வாழ்க்கையே போச்சு. சின்ன பொண்ணுன்னு அவள்ளவு படிச்சு படிச்சு சொன்னேன். என் பேச்சைக் கேட்டியா? உன்னால மனோஜோட வாழ்க்கையே போச்சு”, என்று பொரிந்து தள்ளினான். 
என்ன விஷயம் என்று தெரியாமல் அண்ணன் பொரிந்து தள்ளவும் அவனிடம் விசாரித்தவளிடம் அனைத்து உண்மையையும் சொன்னான் மனோஜ். அதைக் கேட்டு அதிர்ந்தவள் அவன் நெஞ்சிலே சாய்ந்து அழுதாள். 
தங்கை மீது தவறு இருந்தாலும் அவளுக்கு ஆதரவாக இருப்பதை தவிர அந்த அண்ணனுக்கு வேறு வழி இருக்க வில்லை. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவனுடைய வீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் துடங்கினான் நிர்மல். 
அதே நேரம் ஆஷாவும் பெற்றோர்களிடம் இருந்து விலகத் துடங்கினாள். ஆனால் அப்படி உன்னை விலக விடுவேனா பார் என்பது போல அவளை இறுக்கி பிடிக்க ஆரம்பித்தாள் புஷ்பா. 
தன்னுடன் தான் பள்ளிக்கு வர வேண்டும். ஸ்போர்ட்ஸ் எல்லாம் வேண்டாம். எங்கயும் போக கூடாது. தேவையில்லாம பசங்க கூட பேசக் கூடாது என்று தேவையில்லாத கட்டுப்பாடுகள் போடப் பட்டது. 
அது எதற்கு என்று புரிந்ததால் அமைதியாக ஏற்றுக் கொண்ட ஆஷா போகும் போதும், வரும் போதும் எங்காவது மனோஜ் தென்படுகிறானா என்று ஏங்க ஆரம்பித்தாள். 
அப்படி ஒரு நாள் அவள் மனோஜைப் பார்த்தாள். அன்று புஷ்பாவின் வேறு முகத்தை நேரடியாக கண்டாள் ஆஷா. 
பூக்கள் மலரும்….