அத்தியாயம் 5 
நீ பேசும் காதல்
மொழிகளே போதும்
புது இலக்கியம் படைக்க!!!
அண்ணனின் கேள்வியில் கடுப்பானவள் “எல்லாத்துக்கும் உன்னோட பிரண்ட் தான் காரணம் போதுமா? அவனால தான் நான் கிரவுண்டுக்கு வர வேண்டாம்னு நினைக்கிறேன். அவனைப் பாக்க கூடாதுன்னு தான் இப்படி. போதுமா?”, என்று சொன்னாள் ஆஷா. சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கியது.
“என்னது என்னோட பிரண்டா? என்னோட கிளாஸ் பசங்க யாரும் உன்னை கிண்டல் செஞ்சாங்களா? யாருனு சொல்லு. நான் பாத்துக்குறேன்”, என்று சொன்னான் நிர்மல். 
“அதெல்லாம் இல்லை. உன்னோட பிரண்ட் மனோஜ் தான் காரணம்”
“மனோஜ் என்ன பண்ணுனான்?”
“அவன் பண்ணுறது சரியே இல்லை. இப்ப எல்லாம் அவனுக்கு என்னை விட அவ பெருசா போயிட்டா”
“என்ன உளற ஆஷா? எவ அவ? நீ யாரை சொல்ற?”
“அந்த சரண்யாவைத் தான் சொல்றேன். இப்ப எல்லாம் மனோஜ் அவ கிட்ட தான் பேசுறான். என்னைக் கண்டுக்கவே மாட்டிக்கான். தினமும் பாக்குற தானே? நம்ம மூணு பேர் இருக்கும் போது நம்ம எவ்வளவு சந்தோஷமா பேசிட்டு இருப்போம்? ஆனா இப்ப அவங்க ரெண்டு பேர் மட்டும் பேசுராங்க. உனக்கு ஒண்ணு தெரியுமா? அந்த சரண்யா மனோஜ் கிட்ட பேச தான் கேம்ல சேந்தா. அவ நினைச்சது நடந்துருச்சு. எனக்கு பிடிக்கலை. அவங்க ரெண்டு பேரும் பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்கலை”
“நீ என்ன பேசுற ஆஷா? சரண்யா உன்னோட பிரண்ட்”
“அவ இனி என்னோட பிரண்டே கிடையாது. அவ என்னோட எனிமி.  மனோஜ் ஏன் அவ கிட்ட பேசுறான்? அவனும் ரொம்ப மாறிட்டான்”, என்று அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு தன்னுடைய தங்கையின் மனநிலை தெளிவாக புரிந்தது. 
தன்னுடைய நண்பனை விட்டுக் கொடுக்க முடியாமல் “அவளை நீ தானே எங்க கிட்ட அறிமுகப் படுத்துன? மனோஜ் உன் கிளாசுக்கு வந்து அவ கிட்ட பேசினானா?, என்று கேட்டான். 
தன்னுடைய அண்ணன் போட்டு வாங்குவது தெரியாமல் “அவளா தான் அவன் கிட்ட பேசுறதுக்கு வந்தா. நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா இவனும் தான் மாறிட்டான். அன்னைக்கு பாத்தியா? அவ முழு பேரை தெரிஞ்சு வச்சிருக்கான். ஆனா என்னோட முழு பேர் அவனுக்கு தெரியாது தெரியுமா?”, என்றாள் ஆஷா. 
“ஆஷா, நீ இப்ப என்ன தான் சொல்ல வர? அவன் அவ கிட்ட பேசுறதுக்கும் நீ கிரவுண்ட் வராம இருக்குறதுக்கும் என்ன சம்பந்தம்? நானும் அவ கூட நல்லா தானே பேசுறேன்”
“நீ பேசுறது வேற? ஆனா மனோஜ் பேசினா கோபமா வருதுண்ணா. எரிச்சலா இருக்கு. இப்ப அவ இல்லைன்ன உடனே என்கிட்ட பேச வந்தான். நான் அதோ உன் ஆள் வாரா பாரு. அவ கிட்டயே பேசுன்னு திட்டிட்டு வந்துட்டேன்”, என்று ஆஷா சொன்னதும் மனோஜுக்கும் விஷயம் தெரிந்து விட்டது என்று புரிந்தது. 
தங்கையின் மனதில் மனோஜ் மேல் ஒரு உரிமை உணர்வு எழுந்திருப்பதை அவன் புரிந்து கொண்டான். ஆனால் இது அடுத்த நிலைக்கு சென்றால் ஆபத்து என்று அவனுக்கு புரிந்தது. 
மனோஜிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன் “சரி கொஞ்ச நாள் நீ கிரவுண்டுக்கு வர வேண்டாம். ஒரு வாரம் கழிச்சு கிரவுண்ட் போறதைப் பத்தி பேசிக்கலாம்”, என்று சொன்னதும் சரி என்று சொன்னாள் ஆஷா. 
அடுத்த நாள் காலை ஆஷாவுக்கு புரிய வைக்கலாம் என்று அவளுக்காக காத்திருந்த மனோஜ் அவள் நிர்மலுடன் வரவும் “இவன் கூட வருவாங்குறதை எப்படி மறந்தேன்? இப்ப எப்படி இவனுக்கு தெரியாம ஆஷா கிட்ட பேசுறது?”, என்று யோசித்தான். 
அருகில் வந்ததும் அவனை முறைத்த படி நின்றாள் ஆஷா. அதைக் கண்ட நிர்மல் “ஆஷா, நீ கிளாஸ்க்கு போ”, என்று சொன்னதும் உடனே கிளம்பி விட்டாள். 
இருவரும் போகும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க “கிளாஸ் ஆரம்பிக்க கொஞ்சம் நேரம் இருக்கு தானே? வா இப்படி உக்காந்துருப்போம்”, என்று அழைத்தான் நிர்மல். 
“நிர்மல் கிட்ட ஆஷா பேசினதை சொல்லலாமா? நான் சொல்றதை நிர்மல் சரியா புரிஞ்சிக்குவானா? இல்லை ரெண்டு பேரையும் தப்பா நினைப்பானா? என்னை தப்பா நினைச்சா எங்களோட பிரண்ட்ஷிப் முரிஞ்சிரும். ஆஷாவை தப்பா நினைச்சா அவளுக்கு வீட்ல ஏதாவது பிரச்சனை வரும். இப்ப என்ன செய்யன்னு தெரியலையே”, என்று எண்ணி அவன் அருகில் அமர்ந்திருந்தான் மனோஜ்.
மனோஜ் யோசனையில் இருக்க நிர்மலோ “சாரி டா”, என்றான். 
தன்னுடைய நினைவுகளில் இருந்து வெளியே வந்து “சாரியா? எதுக்கு டா? நீ எதுக்கு என்கிட்ட சாரி கேக்குற?”, என்று கேட்டான் மனோஜ். 
“என் தங்கச்சி பண்ணின தப்புக்கு நான் தானே மன்னிப்பு கேக்கணும்?”
“நிர்மல்…”
“எனக்கு தெரியும் டா. ஆஷா எல்லாம் சொல்லிட்டா. அவ சொன்னதைப் பத்தி நீ என்ன முடிவு பண்ணிருக்க?’
“எனக்கு தெரியலை டா. நீ என்னை எதுவும் தப்பா நினைக்கலை தானே?”
“நிச்சயமா இல்லை. ஆனா உன் மனசுல அப்படி எதுவும்…..?”
“நான் அப்படி நினைக்கவே இல்லை டா”
“புரியுது. இது சாதாரணமா பாத்தா பெரிய விஷயம் இல்லை மனோஜ். ஆனா கண்டுக்காம விட்டா பெரிய பிரச்சனை வரும். அவ சின்ன பொண்ணு., நாமளும் பெரிய பசங்க இல்லை தான். ஆனா….”
“சொன்னா புரிஞ்சுக்குவாளா டா?”
“இல்லைன்னு தான் தோணுது. உன் மேல ஒரு ஹிரோயிசம் டெவலப் ஆகிருக்கு. அதுக்கு காரணம் சரண்யா. நீ இவளை விட்டு அவ கிட்ட பேசுறதை ஆஷாவால தாங்கிக்க முடியலை”
“நான் ரெண்டு பேர் கிட்டயும் சாதாரணமா தான் டா பேசினேன். அதுவும் சரண்யா கிட்ட ஆஷாவோட பிரண்ட் அப்படிங்குறதுனால தான் பேசவே செஞ்சேன். நீயும் என் கூட தானே இருந்த? நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேன்னான்னு எனக்கே கவலையா இருக்கு. அதே நேரம் அடுத்து என்ன பண்ணன்னும் தெரியலை. ஆஷா இப்படி நினைப்பான்னு நான் யோசிக்கலை டா”
“நீ இன்னொன்னும் யோசிக்கலை மனோஜ். ஆஷா அப்படி நினைக்கிறதுக்கு காரணம் சரண்யா. அப்படின்னா சரண்யாவும் உன் மேல கொஞ்சம் இண்டரெஸ்ட் எடுத்து பேசுறான்னு எனக்கு தோணுது. இந்த ஸ்கூல்ல எல்லாருக்குமே உன்னை ரொம்ப பிடிக்கும். நம்ம கிளாஸ் பொண்ணுங்க கூட உன்னை விரும்புறாங்க. ஆனா ஆஷா விஷயத்தை எப்படி சரி செய்யனு எனக்கும் தெரியலை. ஏதாவது யோசிக்கணும்”
“நானும் அதை தான் யோசிச்சேன் டா. இப்ப என்ன செய்யுறது நிர்மல்?”
“ரெண்டு பேர் கிட்டயும் நீ கொஞ்ச நாள் பேசாத மனோஜ். உன் மேல நம்பிக்கை இல்லாம நான் இதை சொல்லலை. வேற எதுவும் பெரிய  பிரச்சனை ஆகாம இருக்கணும்னா இதை செஞ்சா தான் உண்டு. ஏன்னா நான் ஆஷாவோட வாழ்க்கையையும் பாக்கணும். அப்பா என்ன சொன்னாலும் ஓரளவுக்கு புரிஞ்சிப்பாங்க. ஆனா அம்மா எல்லா விசயத்துலயும் பிடிவாதமா இருப்பாங்க. அவங்களுக்கு ஆஷா விஷயம் தெரிஞ்சா என்ன நடக்குமோ? கொஞ்சம் ஒதுங்கி இருக்கியா டா?”
“சரி”, என்று உடனடியாக ஒத்துக் கொண்டான் மனோஜ். 
“நான் திருப்பியும் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத மனோஜ், நம்மளே நிறைய பொண்ணுங்களை சைட் அடிச்சிருக்கோம். கிளாஸ் மிஸ் பத்தி கூட கமெண்ட் அடிச்சிருக்கோம். உன்கிட்ட சொல்லாம நான் எங்கயாவது ஊருக்கு போனா கூட அங்க ஏதாவது பொண்ணை நான் சைட் அடிச்சிருக்கேன். இதெல்லாம் வேற. அப்படி உனக்கு ஆஷா மேல ஏதாவது பீலிங்க்ஸ் இருக்கா? இருந்தா இப்பவே சொல்லிரு. நாம வேற யோசிப்போம்”
“நிஜமாவே அப்படி எல்லாம் இல்லை டா. ஆஷாவை நான் அப்படி யோசிச்சது இல்லை”
“சரி, சாயங்காலம் பிராக்டிஸ் முடிஞ்சு உடனே கிளம்பிருவோம். நின்னு பேச வேண்டாம். கொஞ்ச நாளைக்கு தள்ளி இருப்போம், வா கிளாஸ்க்கு போவோம்”, என்று நிர்மல் சொன்னதும் இருவரும் சென்றனர். 
அன்று மாலையும் வந்தது. ஆஷா உடனடியாக வீட்டுக்கு சென்று விட்டாள். சரண்யா மட்டும் கிரவுண்டுக்கு சென்றாள். மனோஜும் நிர்மலும் விளையாடி முடித்து விட்டு வரும் போது அவர்களுக்காக சரண்யா மட்டும் காத்திருந்தாள். 
தூரத்தில் இருந்தே அவளை பார்த்து விட்டார்கள். “மனோஜ், இந்த பொண்ணையும் நீ அவாய்ட் பண்ணப் பாரு டா. இல்லை இவ மேல உனக்கு இண்டரெஸ்ட் இருக்குன்னா யோசிச்சிக்கோ. என்னோட தங்கச்சி விசயத்துல தான் நான் உன்னை சொல்ல முடியும். நான் கிளம்புறேன். நீ பேசு”, என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டான் நிர்மல். 
சரண்யா அருகில் வந்தான் மனோஜ். “ஹாய் மனோஜ், என்ன நிர்மல் அண்ணா கிளம்பிட்டாங்க. இன்னைக்கு ஆஷாவும் சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பிட்டா. காரணம் கேட்டப்ப பதிலே சொல்லலை. ஏன் நிர்மல் அண்ணாவும் கிளம்பிட்டாங்க?”, என்று கேட்டாள் சரண்யா. 
“எனக்கு தெரியலை. கிளம்பணும்னு சொன்னான். நான் காரணம் கேக்கலை. நீ ஏன் வெயிட் பண்ணுற? கிளம்ப வேண்டியது தானே?”, என்று வேண்டா வெறுப்பாக பேசினான் மனோஜ். 
“உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இப்ப போகலாமா?”
“இங்க பாரு சரண்யா. இனி இப்படி எல்லாம் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காத. ஆஷா இங்க இருந்து, நீ வெயிட் பண்ணிட்டு இருந்தா ஓகே. இல்லைன்னா இந்நேரம் நீ இங்க உக்காந்துருக்குறது தப்பு. நம்ம நாலு பேரும் பேசும் போது யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. ஆனா நம்ம ரெண்டு பேர் மட்டும் பேசினா வீணா பிரச்சனை. என் கூட பிறந்தவங்க எல்லாம் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல படிக்க நான் மட்டும் இங்க பணம் கட்டி படிக்கிறேன். இந்த வருஷம் நான் நல்லா படிக்கணும். அதனால நீயும் உன் படிப்பை மட்டும் பாரு”
“என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க?”
“என்ன ஒரு மாதிரி பேசுறேன்? நீ தான் ஒரு மாதிரி நடந்துக்குற? ஆமா அது என்ன நிர்மலை மட்டும் நிர்மல் அண்ணான்னு சொல்ற? என்னை பேர் சொல்லிக் கூப்பிடுற? என்னையும் இனி அண்ணான்னு சொல்லு”
“ஆன்… அது எப்படி?”
“என்ன அது எப்படி? நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்? இனி இப்படி வெயிட் பண்ணிட்டு இருக்காத. அண்ணான்னு சொல்லி ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு. தயங்காம செய்றேன். ஆனா சும்மா கதை பேசுறதுக்கு எல்லாம் என்னைத் தேடி வராத. எனக்கு படிக்க வேண்டியது இருக்கு. இங்க இருந்து கிளம்பு போ”, என்று முகத்தில் அடித்தது போல சொல்லி விட்டு சென்று விட்டான். 
கண்களில் நீர் வழிய வீட்டுக்கு கிளம்பினாள் சரண்யா. அதே நேரம் வீட்டில் இருந்த ஆஷாவோ “இப்ப பிராக்டிஸ் முடிஞ்சிருக்கும். அந்த சரண்யா மனோஜ் கூட பேசிட்டு இருப்பா. மனோஜும் என்னை மறந்துட்டு பேசிட்டு இருப்பான்”, என்று நினைத்து மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தாள். 
அடுத்த நாள் பள்ளிக்கு சென்றதும் சோகமாக அமர்ந்திருந்த சரண்யா முகம் தான் கண்ணில் தெரிந்தது. “என்ன ஆச்சு இவளுக்கு? எப்பவும், மனோஜ் அது பேசினாங்க, இது பேசினாங்கன்னு கதை அளப்பா. இன்னைக்கு ஒரு மார்கமா உக்காந்திருக்கா”, என்று நினைத்தாள் ஆஷா. 
நேரம் ஆக ஆக அவளுக்கு குறுகுறுப்பாக இருந்தது. “என்ன ஆச்சு சரண்யா? எதுக்கு ஒரு மாதிரி இருக்க?”, என்று நேரடியாக கேட்டு விட்டாள். 
“ஒண்ணும் இல்லை”, என்று சொன்ன சரண்யா வேறு எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டாள்.