நண்பனின் தங்கை என்று தான் மனோஜும் முதலில் அவளிடம் பேசினான். அதன் பின் தினமும் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் இருவருக்கும் அடிக்கடி சந்திப்பு இருக்கும்.
எப்போதும் ஆஷாவும் மனோஜும் நிர்மல் இருக்கும் போது தான் பேசிக் கொண்டிருப்பார்கள். நிர்மலிடம் அவள் எப்படி வம்பிழுப்பாளோ அதே போல தான் மனோஜிடமும் வம்பிழுத்து வாங்கிக் கட்டிக் கொள்வாள். அப்படியே சிறிது சிறிதாக அழகான நட்பு இருவருக்குள்ளும் மலர்ந்தது.
இதை இப்படி செய், அப்படிச் செய்ய கூடாது என்று அவளுக்கு மனோஜ் அறிவுரை சொல்வான். அந்த அறிவுரையையும் நிர்மல் முன்னிலையிலே தான் சொல்லுவான்.
ஆஷாவும் அவனிடம் தான் அனைத்து சந்தேகங்களையும் கேட்பாள். அவனை பேச வைப்பதற்கே அவளுக்கு பல சந்தேகங்கள் எழும்.
நிர்மலும் ஆஷாவும் அந்த ஸ்கூல்க்கே சொந்தக்காரர்கள் என்று இருவருமே மனோஜை பிரித்து பார்த்தது கிடையாது.
நிர்மலும் மனோஜைப் போல் திறமையானவன் தான். நிர்மலிடம் கூடுதலாக படிக்கும் திறமையும் இருக்கும். தன்னுடைய அம்மாவுக்கு பயந்தே நன்கு படிக்கவும் செய்வான் நிர்மல். ஆனால் நிர்மலுக்கே சில நேரம் வழிகாட்டியாக மனோஜ் இருப்பான். இருவரின் திறமையும் நட்பும் ஆஷாவுக்கு எப்போதுமே வியப்பாக இருக்கும்.
இப்படி சாதாரணமாக மூவரின் நட்பும் நகர்ந்தது. ஆனால் ஆஷா மனதுக்குள் மனோஜ் மீது நட்பைக் கடந்த ஒரு உணர்வு இருந்தது. அதை அவள் உணர்ந்ததில்லை.
அதை புரிய வைத்தவள் ஆஷாவின் கிளாசில் படிக்கும் சரண்யா என்ற பெண்.
திடீரென்று ஆஷாவுடன் நன்கு பழக ஆரம்பித்தாள் சரண்யா. ஆஷாவுக்கும் புதிதாக ஒரு தோழி கிடைத்தது சந்தோசமே. ஆஷா என்னவெல்லாம் செய்கிறாளோ அதையே சரண்யாவும் செய்ய ஆரம்பித்தாள். அதுவும் மனோஜ் பற்றி அடிக்கடி பேச ஆரம்பித்தாள். ஆஷவையும் அவனைப் பற்றியே பேச வைத்தாள்.
மனோஜ் பற்றி பேச ஆஷாவுக்கு அதிகம் பிடிக்கும் என்பதால் அவளும் மனோஜ் பற்றி அதிகம் சொல்லுவாள்.
“நேத்து ஈவினிங் மனோஜைப் பாத்தியா ஆஷா? என்ன சொன்னாங்க?”, என்று கேட்டாள் சரண்யா.
“என்ன சொல்வாங்க. அட்வைஸ் மேல அட்வைஸ் பண்ணி கொல்லுவாங்க. நேத்து சும்மா பேசிட்டு இருக்கும் போது டெய்லி பிராக்டிஸ் பிராக்டிஸ்னு வரது கடுப்பா இருக்கு. பேசாம லீவ் போட்டுறலாமான்னு இருக்குனு தான் டி சொன்னேன். நிர்மலாவது முறைச்சான். ஆனா இந்த மனோஜ் மண்டைலே ஒரு கோட்டு கொட்டிட்டாங்க தெரியுமா?”, என்று சரண்யாவின் மனது புரியாமல் புன்னகையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆஷா.
“மனோஜ் கிரேட்ல? எப்படி உன் மேல அக்கறையா இருக்காங்க. எனக்குன்னு தான் யாருமே இல்லை. என் கூட பிறந்த ரெண்டு அக்காவும் என்னைக் கண்டுக்கவே மாட்டாங்க. சாயங்காலம் வீட்டுக்கு போனதும் சரி போர். பேசாம என்னையும் உன் கூட அவங்களைப் பாக்க கூட்டிட்டு போயேன்”, என்றாள் சரண்யா.
“நான் எங்க அவங்களை பாக்க போனேன்? சாயங்காலம் பிராக்டிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போக நிர்மலுக்காக வெயிட் பண்ணும் போது பேசுறதோட சரி. தனியா கதை பேச எல்லாம் போகலை சரண்யா”
“என்ன? என்ன ஆசை? யார் கிட்ட பேச? நீ என்ன சொல்ற? எனக்கு புரியலை”
“எனக்கு மனோஜை ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்களை பாக்கணும் பேசணும் போல இருக்கு டி. தினமும் பேச சந்தர்பம் கிடைச்சா நல்லா இருக்கும். அதுக்கு ஏதாவது வழி சொல்லு டி”
உள்ளுக்குள் சுறு சுறுவென்று புகைந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் “மனோஜ் அப்படி எல்லாம் தேவை இல்லாம யார் கிட்டயும் பேச மாட்டாங்க. உனக்கு ஒண்ணு தெரியுமா? மனோஜ்க்கு அவங்க கிளாஸ்ல எங்க அண்ணன் மட்டும் தான் பிரண்ட். உன்கிட்ட எல்லாம் பேச மாட்டாங்க. நீ வீணா அவங்களைப் பத்தி யோசிச்சிட்டு இருக்குற?”, என்றாள்.
“உன்கிட்ட எல்லாம் நல்லா தானே பேசுராங்க”, என்று சரண்யா சொன்னதும் “நீயும் நானும் ஒண்ணா டி? மனோஜ் என்கிட்ட மட்டும் தான் நல்லா பேசுவாங்க”, என்று கடுப்புடன் நினைத்தாள்.
இது ஒரு வித உரிமை உணர்வு. யாரும் சொல்லாமலே இந்த உணர்வு ஆஷாவுக்கு வந்திருந்தது. வேண்டா வெறுப்பாக “இதுக்கு நான் எப்படி வழி சொல்ல முடியும் சரண்யா?”, என்று கேட்டாள் ஆஷா.
“பேசாம நானும் உன் கூட பேஸ்கட் பால் கேமில் சேரட்டா? நீ மனோஜைப் பார்த்து பேசும் போது நானும் அவங்க கூட பேசுவேன்ல?”, என்று கண்கள் ஒளிரக் கேட்டாள் சரண்யா.
அவள் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் போல் வந்த கோபத்தை அடக்கியவள் “எங்க மேம் டீம் சரியா இருக்கு. இன்னும் நம்ம வயசுல இருந்து ஆள் எடுக்க போறதில்லைன்னு சொன்னாங்க சரண்யா. நீ வேணும்னா வேற கேம் சேரு. எனக்கு கொஞ்சம் தலை வலிக்கு. நாம அப்புறம் பேசலாம்”,என்று சொல்லி அமைதியான ஆஷாவுக்கு உள்ளுக்குள் கோபம் கொப்பளித்தது சரண்யாவை நினைத்து.
“இவ எப்படி மனோஜ் கூட பேசணும்னு நினைக்கலாம்”, என்று கடுப்பாக வந்தது.
அடுத்த இரண்டு நாட்கள் கழித்து “ஏய் ஆஷா இன்னைக்கு பிராக்டிஸ் போவியா?”, என்று கேட்டாள் சரண்யா.
“ஆமா ஏன் கேக்குற?”
“போகும் போது என்னையும் கூட்டிட்டு போ”
“கிரவுண்டுக்கு நீ எதுக்கு? அடுத்த ஆள் உள்ள வரக் கூடாது சரண்யா. மேம் திட்டுவாங்க. வீணா திட்டு வாங்க நினைக்காதே”
“அதெல்லாம் திட்ட மாட்டாங்க”
“நீ எதுக்கு அங்க வரணும்?”
“மனோஜ் கூட பேச தான்”, என்று அவள் சொன்னதும் கோபமாக வந்தது ஆஷாவுக்கு.
“நிர்மலோட பிரண்ட். அதனால சொல்லலை. நான் யாரையுமே அண்ணான்னு சொன்னதில்லை. ஆனா நீ நிர்மலை அண்ணான்னு தானே சொல்ற? அப்ப மனோஜையும் சொல்லு”
“நீயும் அண்ணான்னு சொல்லலை. நானும் சொல்லலை. அதை வீடு ஆஷா. சாயங்காலம் என்னையும் கூட்டிட்டு போ டி”
“புது ஆள் உள்ள வந்தா மேம் திட்டுவாங்க டி”
“அதெல்லாம் என்னை திட்ட மாட்டாங்க”
“ஏன்?”
‘ஏன்னா நானும் உன்னோட கேம்ல சேந்துட்டேனே?”
“என்னது?”, என்று அதிர்ந்து போனாள் ஆஷா.
“ஆமா நான் நேத்தே மனோரமா மேம் போய் பாத்து கேம் விளையாட ஆசையா இருக்குனு சொன்னேன். அவங்க வந்து சேந்துக்கோ சொன்னாங்க. நானும் இன்னைல இருந்து உன் கூட வருவேன். அப்புறம் சாயங்காலம் நீ மனோஜ் கூட பேசும் போது பேசுவேன். அவங்களை எனக்கு நீ தான் அறிமுகப் படுத்தணும்”
“அடப்பாவி”, என்று உள்ளுக்குள் நினைத்த ஆஷா “மேம் புது ஆள் எடுக்கலைன்னு சொன்னாங்களே?”, என்று கேட்டாள்.
‘யாரோ ஒரு ஆள் விலகிட்டாங்க போல டி. என்னை சேத்துக்கிட்டாங்க. நான் ஸ்போர்ட்ஸ் டிரெஸ்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்”, என்று சொன்னதும் அன்றைய நாள் மிகவும் கசந்தது ஆஷாவுக்கு.
அதே போல அன்று மாலை அவளுடனே கிரவுண்டுக்கு வந்த சரண்யா பக்கத்து கிரவுண்டில் விளையாடிக் கொண்டிருந்த மனோஜை அடிக்கடி சைட் அடித்தாள்.
இதில் ஆஷாவுக்கு தான் கோபமாக வந்தது. “இவ எப்படி எங்க மனோஜைப் பார்க்கலாம்?”, என்ற உரிமை உணர்வு எழுந்தது.
இவர்களுக்கு பிரக்டிஸ் முடிந்ததும் “சரி சரண்யா, நீ வீட்டுக்கு போகனும்ல? கிளம்பு”, என்றாள் ஆஷா.
“நீ கிளம்புறப்பவே நானும் போறேன் டி”, என்று சட்டமாக ஆஷாவுடன் அமர்ந்தவள் மனோஜ் எப்போது இங்கே வருவான் என்று ஆஷாவிடம் கேட்க ஆரம்பித்தாள்.
“அவங்க வரும் போது வருவாங்க. நான் இங்கயே ஹோம்வொர்க் முடிச்சிருவேன். வேணும்னா நீ வீட்டுக்கு கிளம்பு. இல்லைன்னா எழுதவேண்டியது இருந்தா எழுது. என்னை தொல்லை பண்ணாதே”, என்று சொல்லி தன் வேலையைத் தொடர்ந்தாள்.
வேண்டா வெறுப்பாக சரண்யா நோட்டை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள். ஓரக் கண்ணால் சரண்யாவை பார்த்த ஆஷா அவளின் பார்வை மனோஜ் மீதே இருக்கவும் இனம் புரியாத கோபம் அவளை ஆட்டிப் படைத்தது.
அந்த கோபத்தில் தன்னுடைய வேலையையும் ஒழுங்காக செய்யாமல் எடுத்து வைத்தாள் ஆஷா.
அவர்கள் இருவரும் வரும் போது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தாள் ஆஷா.
அதைக் கவனிக்காத மனோஜும் நிர்மலும் சரண்யாவையே தான் குழப்பமாக பார்த்தார்கள்.
எப்போதும் “இன்னைக்கு நாள் எப்படி போச்சு ஆஷா?”, என்று கேட்கும் மனோஜ் இன்று அதைக் கேட்காமல் “யார் ஆஷா இந்த புது வரவு?”, என்று கேட்டான்.
அதில் கொதித்த ஆஷா பதில் சொல்லாமல் “நிர்மல் கிளம்புவோமா?’, என்று தன்னுடைய அண்ணனைப் பார்த்துக் கேட்டாள்.
மனோஜும் நிர்மலும் ஆஷாவின் கோபத்ட்வியப்புடன் பார்க்க “என்னோட பேர் சரண்யா. நானும் ஆஷா கூட கேம்ல சேந்துட்டேன். இந்தாங்க சாக்லேட்”, என்று சொல்லி மனோஜ் மற்றும் நிர்மலிடம் கொடுத்தாள்.
“அடப்பாவி, இவ சாக்லேட் வச்சிருக்கேன்னு கூட என்கிட்ட சொல்லையே. முதல் நாளே நல்ல பேர் வாங்கணும்னு நினைக்கிறாளோ”, என்று மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தாள் ஆஷா.
“தேங்க்ஸ் சரண்யா. ஆஷாவுக்கு சாக்லேட் இல்லையா?”, என்று கேட்டான் மனோஜ்.
அதில் ஆஷா முகம் மின்ன “நான் அவளுக்கு கிளாஸ்ல வச்சே கொடுத்துட்டேன். நீங்க சாப்பிடுங்க”, என்று நெஞ்சார பொய் சொன்னாள் சரண்யா.
ஆஷா அவளையே அதிர்ந்து பார்க்க “ஆஷா, உனக்கு இந்த சாக்லேட் ரொம்ப பிடிக்கும்ல? இதையும் நீயே சாப்பிடு”, என்று சொல்லி ஆஷா கையில் அதைக் கொடுத்த மனோஜ் “நிர்மல் லேட் ஆகிருச்சு டா. கிளம்புவோமா?”, என்று கேட்டான்.
அதில் சரண்யா முகம் விழுந்து விட்டது. “நான் ஆசையா கொடுத்ததை அவ கிட்ட கொடுத்துட்டானே?’, என்று கவலையாக எண்ணினாள். அதைக் கண்டு ஆஷா உள்ளுக்குள் குதூகலமானாள்.
பின் நால்வரும் கிளம்பி செல்லும் போது ஆஷா மற்றும் நிர்மல் ஒரு வளைவில் திரும்ப சரண்யா மற்றும் மனோஜ் இருவரும் எதையோ பேசிக் கொண்டு அவர்கள் வீட்டுக்கு சென்றார்கள். அதை திரும்பி திரும்பி பார்த்த படி நிர்மலுடன் சென்றாள் ஆஷா.