“ஜீவா என்னோடு கோவிலுக்கு வருகிறாயா?” என்று மகனை கேட்டுக் கொண்டிருந்தார் பார்வதி.
செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த சங்கரன் பேப்பரை விலக்கிவிட்டு “என்ன பார்வதி… அவனை கோவிலுக்குக் கூப்பிடுகிறாய் ஏதேனும் விஷேசமா?” என்று கேட்டார்.
“இல்லைங்க… ஜீவாவுக்காக ஒரு வேண்டுதல் வைத்திருந்தேன் என்பது உங்களுக்கே தெரியுமல்லவா..? அவனும் கூட வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது… அதனால்தான் கேட்டேன். என்ன ஜீவா… வருகிறாயா?” என்று மீண்டும் மகனைக் கேட்டார்.
அவர்களது பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவன் ‘என்ன சொல்வது?’ என்று யோசித்தவாறே, “எந்த கோவில்மா?” என்று கேட்டான்.
“பக்கத்திலிருக்கும் முருகன் கோவில்தான்ப்பா…” என்று அவர் சொன்னதும், “இன்றைக்கு ஆபீசுக்கு ஒரு முக்கியமான கிளையண்ட் வருவதாக சொல்லியிருக்கிறார். அவரைப் பார்க்க நான் கண்டிப்பாக ஆபீசில் இருக்க வேண்டும். அதனால் நீங்கள் போய்வாருங்கள் அம்மா. நான் இன்னொருநாள் நிச்சயம் வருவேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
அவன் போவதைப் பார்த்தவாறே “என்னங்க இவன்..? எப்போதும் இப்படியே செய்கிறான்?” என்று கணவரிடம் வருத்தப்பட்டார்.
மகன் எப்போதுமே இப்படி எதையாவது சொல்லி நழுவிக் கொள்வதையறிந்தவர், “அவனை விடு பார்வதி நான் உன்கூட வரட்டுமா?” என்று கேட்டார்.
“நீங்களா! உங்களுக்கு முட்டிவலி இருக்கிறது என்றுதானே அலுவலகம் செல்வதில்லை…” என்று நினைவுபடுத்தியவர், “கோவிலில் நூற்று எட்டு படி இருக்கிறது… எப்படி ஏறுவீர்கள்?” என்று கேட்டார்.
“என்ன பார்வதி… மகனுக்காக கஷ்டப்பட்டு நீ அத்தனை படிகளில் ஏறும்போது… நான் ஏறிவரமாட்டேனா?” என்று கேட்டவர், “புறப்படு… ரெண்டுபேரும் சேர்ந்து போய் மகனுக்காக வேண்டுவோம்” என்று சொல்லி குளிக்கச் சென்றார்.
“அம்மா நான் கோவிலுக்குப் போயிட்டு வர்றேன்” என்று அன்னையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள் சத்யா.
“வேலைக்கு போகலையா சத்யா?”
“இல்லைம்மா… ஒரு வாரம் லீவு கேட்டிருக்கிறேன்” என்று பொய் சொன்னவள், தாயார் ‘எதற்கு?’ என்று அடுத்த கேள்வி கேட்டுவிடும் முன்பாகக் கிளம்பிவிட எண்ணி “கோவிலுக்குப் போயிட்டு சீக்கிரம் வந்துடுறேன்மா…” என்று நிற்காமலே சென்றுவிட்டாள்.
வீட்டுக் கதவை லாக் செய்தவள்… மழைத் தூரலைக் கண்டதும் கையில் வைத்திருந்த குடையை விரித்தாள்.
முதல்நாளிலிருந்தே மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்ததால் கோவிலில் கூட்டமுமில்லை.
மனநிறைவோடு தரிசனத்தை முடித்துவிட்டுப் பிரகாரத்தை வலம் வந்தவள் ஒரு ஓரமாக அமர்ந்து மனதிற்குள் செந்திலாண்டவனின் முருகா சரணத்தை சொல்லத் தொடங்கினாள்.
அவள் அமர்ந்த சற்று நேரத்திலே கோவிலுக்குள்ளிருந்த சிலர் ஒருவித பதற்றத்துடன் அவளைக் கடந்து ஓடினர். கண்மூடி அமர்ந்திருந்தவள் பரபரப்பாக ஓடும் சத்தத்தில் கண்களைத் திறந்து பார்த்தாள்… அநேகர் வெளியே செல்வதைக் கண்டவளுக்கு இனி சரணம் சொல்வதைத் தொடர முடியாது எனத் தோன்ற தானும் வெளியே சென்று பார்த்தாள்.
அங்கு வயதான ஒரு பெண்மணி ஒருவரை… அவரது கணவராக இருக்க வேண்டும் மயக்கமுற்றிருந்தவரின் தலையைத் தன் மடியில் சாய்த்து கன்னத்தைத் தட்டி அவரை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தார்.
கூடி நின்றிருந்தவர்களும் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டார்களே தவிர தங்களால் இயன்ற உதவியை அவருக்குச் செய்வதற்கு முன்வரவில்லை. சுற்றியிருந்த கூட்டத்தால் அவர்களைக் காண முடியாதபோதும்… அந்தப் பெண்மணிக்கு தண்ணீர் தேவைப்படலாம் என்றெண்ணியவள் கோவிலுக்குள்ளிருந்த குழாயிலிருந்து நீர் பிடித்துக் கொண்டு அவர்களிடம் ஓடினாள்.
கூட்டத்தை விலக்கிக் கொண்டு சென்றவள், டம்ளரை அவரிடம் நீட்டி “சார், இந்தாங்க… இந்த நீரை அவங்க முகத்தில் தெளிங்க…” என்று கொடுத்தாள்.
தண்ணீரை வாங்குவதற்காக நீண்ட அவரது கரங்கள் நடுங்கவும், அவருக்குப் பின்புறமாக நின்றிருந்தவள் அவரைச் சுற்றிக் கொண்டு முன்பக்கமாக வந்து அந்த பெண்மணிக்கு அருகில் அமர்ந்தாள்.
அவரது முகத்தைக் கண்டதும் வியப்புற்று ‘பார்வதிம்மா…!’ என்றவள் அவரது முகத்தில் நீரைத் தெளித்து அழைத்தாள். அவர் கண் விழிக்காதிருக்கவே, மீண்டும் ஒருமுறை நீரைத் தெளித்தவள் அப்போதுதான் அவரது நெற்றியில் அடிபட்டு இரத்தம் வடிவதைப் பார்த்தாள்.
தன் கைக்குட்டையை ஈரமாக்கி இரத்தம் வடிந்த இடத்தில் அழுத்திப் பிடித்தவாறே ஒருமுறை நீரை முகத்தில் தெளிக்க… இப்போது கண் திறந்தவர் “ம்….” என்று வலியில் முணங்கினார்.
சுற்றியிருந்த கூட்டத்தைக் கண்டதும் கணவனைத் தேடியவருக்கு அப்போதுதான் அவரது மடியில் படுத்திருப்பது புரிந்தது.
அவரது முகத்தில் குடிகொண்டிருந்த பதற்றத்தைக் கண்டதும் “என்னங்க? என்னாச்சு..?” என்று அவசர அவசரமாக எழுந்தவர் “ஸ்..! ஆ..!” என்று நெற்றியில் கைவைத்தார்.
வலியில் முகம் சுழித்த மனைவியின் நெற்றியிலிருந்த ரத்தத்தைத் துடைத்தவாறே “என்னம்மா… என்னை இப்படி பயமுறுத்திட்டியே! தலை சுற்றுவதுபோலத் தோன்றினால் என்னிடம் சொல்ல வேண்டாமா? கொஞ்ச நேரம் இருந்து வந்திருக்கலாமே…! இப்போது பார் அடிபட்டுவிட்டது…” என்று தனக்கே அடிபட்டதைப் போல வருந்தியவரைப் பார்க்க சத்யாவிற்கு மகிழ்ச்சியாயிருந்தது.
‘மனைவி மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்…!’
அதுவும் அவளுக்குப் பிடித்த பார்வதியம்மாளாயிற்றே…! அதனால் அவளது மகிழ்ச்சி அதிகமாகவே இருந்தது.
அவர் மீதான அவளது பாசமே ரத்தக் காயத்தை நினைவுறுத்த, “சார்.. இந்தாங்க இந்த தண்ணீரை குடிக்கக் கொடுங்க” என்று கொடுத்தவள்… பார்வதி குடித்ததும் “இரத்தம் இன்னும் நிற்கவில்லை சார்… சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கூட்டிப் போங்கள்…” என்று அவசரப்படுத்தினாள்.
பேசியவளது குரலைக் கண்டுகொண்ட பார்வதியின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
உடனே கணவனிடம் திரும்பி “நான் அன்றைக்கு சொன்னேனே..! அது இந்தப் பெண்தான்ங்க! இன்றைக்கும் நமக்கு உதவி செய்கிறாள்” என்றவாறே சத்யாவின் முகத்தைத் தன் கரத்தால் வருடி கையில் முத்தமிட்டார்.
நாணத்துடன் “என்னம்மா.. நான் அப்படி ஒன்றும் பெரிதாக உதவி செய்துவிடவில்லை” என்று அவரிடம் சொல்லிவிட்டு, “வாங்க சார்… நீங்க அந்த பக்கம் பிடிங்க… நான் இந்த பக்கம் பிடிக்கிறேன்” என்று இருவருமாக சேர்ந்து கைத்தாங்கலாகவே பார்வதியை காருக்கு அழைத்து வந்தனர்.
முதலாளியம்மாவை கைத்தாங்கலாகப் பிடித்திருப்பதைக் கண்ட டிரைவர் “ஐயா… அம்மாவுக்கு என்னாச்சு?” என்று ஓடிவந்தார்.
“ஒன்றுமில்லை வேலு…. வண்டியை எடு ஆஸ்பத்திரி போகணும்” என்று சொல்லியவாறே, மனைவியை சத்யா உதவியுடன் காரில் அமரவைத்தார்.
“சத்யா… ரொம்ப நன்றிம்மா! நான் உனக்கு என் போன் நம்பர் தந்திருந்தேனே சத்யா? அவசியம் எனக்கு பேசு!” என்று பார்வதி சொன்னதும் தானும் அவளுக்கு நன்றி தெரிவித்தார் சங்கரன்.
“நன்றியெல்லாம் வேண்டாம் சார்…. அம்மாவை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அவள் சொல்ல, “சரி” என்று அவளது தலையை வருடிவிட்டவர் ஏறி அமர்ந்ததும் கார் கிளம்பிவிட்டது.
கோவிலில் விட்டு வந்திருந்த தன் கைப்பையை எடுப்பதற்காகப் படியேறிக் கொண்டிருந்தவளது மனதில் கோபம் வந்தது… பார்வதியம்மாளின் மகன் மீது…
‘இப்படி உடம்புக்கு முடியாதவர்களைத் தனியாக அனுப்பிவிட்டு அப்படி என்ன வேலை செய்கிறான்? நல்லவேளை இன்று பார்வதியம்மாவின் கணவர் வந்திருந்தார்… இல்லையென்றால் அந்தம்மாவின் நிலை?’ என்று எண்ண எண்ண அவன் மீதிருந்த கோபம் அதிகரித்தது.
மதிய நேரத்திற்கு வீடு வந்த பெற்றோரைக் கண்டதும் தாயாரிடம் சென்ற சஞ்ஜீவன் அவரை சற்று தாங்கலாகப் பிடித்திருந்த தந்தையிடம் வினவினான் பதற்றத்துடன் “அம்மாவுக்கு என்னாச்சுப்பா? எப்படி அடிபட்டது?” என்று .
அவரது பதிலைக் கேட்கும்முன்பாகச் சென்று அவனும் தாயாரை ஒருபக்கமாகத் தாங்கிக் கொள்ள அவர்களது அறைக்கு அழைத்துச் சென்றவாறே மகனிடம் விபரம் தெரிவித்தார்.
“வலிக்குதாம்மா…?” என்று பரிவுடன் நெற்றியை வருடியவாறே கேட்க, “இல்லைப்பா… பெய்ன் கில்லர் போட்டதால வலி இல்லை” என்றார் பார்வதி.
கட்டிலில் படுக்க வைத்தபோது “நீ உன் கிளையண்டை பார்த்தாச்சாப்பா?” என்று கேட்டார் தாயார்.
“ஆமாம்மா.. என் மீட்டிங் சீக்கிரமே முடிந்துவிடவும்தான் நேரமாகவே வீட்டிற்கு வந்தேன்” என்றான்.
தாயாரை சாப்பிட வைத்து மேலும் சற்றுநேரம் அமர்ந்து பேசிவிட்டு தந்தையிடம் மருந்து மாத்திரைகளைப் பற்றியும் கேட்டுவிட்டு ஆபீஸ் போவதற்காக அவன் வெளியே செல்லத் திரும்பியபோது பார்வதியின் அலைபேசி ஒலித்தது.
தன் போனின் ரிங்டோன் சத்தத்தைக் கேட்டவர், “ஜீவா… அம்மா போன் ஹேண்ட் பேக்ல இருக்கு, அதை எடுத்து… யார் என்று பார்க்கிறாயா?” என்று மகனிடம் சொன்னார்.
“சரிம்மா…” என்று பேக்கைத் தேடி எடுத்தவன், “ஹலோ!!” என்றான்.
மறுமுனையிலிருந்த சத்யா ஆணின் குரல் கேட்கவும் சற்று தயங்கினாள். அந்த சில நொடி இடைவெளிக்குள் பலமுறை ‘ஹலோ! ஹலோ!’ என்று கேட்டுவிட்டான் அவன்.
அவனது ஹலோவை கேட்டுக் கொண்டிருந்த பார்வதி “யாருப்பா?” என்று விசாரித்தார்.
“தெரியவில்லைம்மா… புது நம்பரா இருக்குது பேசமாட்டேங்கறாங்க”
மீண்டும் ஒருமுறை ஹலோ சொன்னவனுக்குப் பதில் ஹலோ சொன்னவள், “இது ……………….. நம்பர் தானே?” என்று கேட்டாள்.
“ஆமா… நீங்க யார்கிட்ட பேசணும்?” என்று கேட்டான் அவன்.
“பார்வதி மேடம் இருக்குறாங்களா?” என்று கேட்டாள் மிக மெதுவாக.
“ம்… இருக்காங்க. ஆனால் அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை… நான் அவங்க மகன்தான். நீங்க ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் என்னிடம் சொல்றீங்களா?” என்று கேட்டான்.
அவள் அழைத்தது பார்வதியம்மாளின் உடல்நிலையை விசாரிக்கத்தான். ‘இதோ இப்போது அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் இதே மகன் அவர்களுடன் சென்றிருந்தால் அவருக்கு இப்படி ஆகியிருக்காதே!’ என்ற எண்ணம் அவள் மனதில் வலுவாகவே இருந்தது. ஆனால் அவன் அவர்களுடன் போகாமல், வீட்டிலிருக்கும் போது மட்டும் ‘தான்தான் சிறந்த மகன்’ போல அவரது போனை அட்டெண்ட் செய்கிறான். இப்படி எண்ணியவள் அவனிடம்,
“உங்களுக்கு உங்க அம்மா மேல அக்கறையே கிடையாதா?” என்று தான் கேட்க நினைத்ததை கேட்டுவிட்டாள்.
அவ்வளவு நேரமும் அமைதியாகவே பேசியவன் “என்ன!!” என்று அதிர்ந்தான்.