ஒரு நான்கு மணி போல் தன்னுடைய வீட்டுக்குச் சென்ற மனோஜ் “சிவானி”, என்று அழைத்தான்.
“அண்ணா”, என்ற படி அறையில் இருந்து வெளியே வந்தாள் சிவானி.
“தேவையானது எல்லாம் எடுத்து வச்சிட்டியா மா? ஆட்டோ வரச் சொல்லவா?”
“எல்லாம் எடுத்து வச்சிட்டேண்ணா. நீ வரச் சொல்லு. கிளம்பலாம்”
“ஏதாவது மறந்து போயிருந்தாக் கூட பரவால்ல மா. நீ இப்போதைக்கு கிளம்பு. தேவையான பொருளை அப்புறம் நான் கொண்டு வந்து கொடுக்குறேன்”, என்று சொன்னதும் இரண்டு பைகளை தூக்கிக் கொண்டு வந்தாள் சிவானி.
இதை அனைத்தையும் வீட்டில் உள்ளவர்கள் மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள். பார்வதி மட்டும் அழுது கொண்டு இருந்தாள். அவளுக்கு மனோஜ் வீட்டை விட்டு சென்றதே பிடிக்க வில்லை. இதில் சிவானியும் செல்வது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. திலீபன் அருகில் நின்ற திவ்யாவைப் பார்த்தாள்.
அவள் யாருக்கு வந்த விருந்தோ என்று எண்ணிக் கொண்டு அமைதியாக நின்றாள். “மகராசி வந்தாலும் வந்தா, இவ வந்த உடனே என்னோட மகன் வீட்டை விட்டு போய்ட்டான். இப்ப என் மகளும் போறா”, என்று மனதுக்குள் மருமகளை தாளித்தாள் பார்வதி.
“சரிம்மா, அண்ணா வா போகலாம்”, என்று சொல்லி விட்டு வாசல் நோக்கி நடந்தாள் சிவானி. மனோஜும் அவள் பின்னே சென்றான்.
அப்போது, ”ஏய் நில்லு டி, நான் இருக்கேன். உன் மாமா இருக்கார். ஒரு வார்த்தை போயிட்டு வரோம்னு சொல்லாம போற?”, என்று சண்டைக்கு வந்தாள் நித்யா.
“என்ன டா, இன்னும் யாரும் ஆரம்பிக்கலையேன்னு நினைச்சேன். சிவானி, உன் அக்கா கிட்ட பிரியா விடை கொடுத்துட்டு சீக்கிரம் வந்து சேரு”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான் மனோஜ்.
“அவன் கிடக்கான். உனக்கு இவ்வளவு வயசு ஆகுது. கொஞ்சமாவது அறிவு இருக்கா? நான் இங்க தான் இருக்கேன். என்னைக் கட்டின உன் மாமாவும் பக்கத்துல தான் இருக்கார். ஒரு வார்த்தை போயிட்டு வறேன்னு சொன்னா என்னவாம்? நீ குறைஞ்சிருவியா”, என்று கேட்டாள் நித்யா.
“ஓஹோ, உங்க கிட்ட சொல்லிட்டு வேற போகனுமோ? இது என்னோட வீடு. என் அம்மா அப்பா கட்டின சொந்த வீடு. அந்த வீட்ல நிம்மதியா இருக்க முடியாம நான் ஹாஸ்டல் போறேன். இதுக்கு காரணமா இருந்த உன் கிட்டயும் உன் புருஷன் கிட்டயும் சொல்லிட்டு வேற போகனுமோ? நானே உங்க எல்லார் மேலயும் கொலை வெறில இருக்கேன். ஏதாவது கடுப்பை கிளப்புன நான் அக்கான்னு கூட பாக்க மாட்டேன்”, என்று திருப்பிக் கொடுத்தாள் சிவானி.
“பாத்தியா மா, உன் சின்ன மக எப்படி பேசுறாணு? கொஞ்சமாவது மரியாதை கொடுத்து பேசுறாளா? சரி எனக்கு தான் மரியாதை கொடுக்கலைன்னாலும் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை, என் வீட்டுக்காரரை இவ மதிக்கணுமா இல்லையா? பாரு இவ அப்படிச் சொன்ன உடனே அவர் முகமே வாடி போயிட்டு”, என்று பார்வதியிடம் பற்ற வைத்தாள் நித்யா.
“வாடிப் போனாலும் உன் புருஷன் ஒரு ஊருகாய் போடுறதுக்கு கூட லாய்க்கு இல்லை. இதுல இவனுக்கு மரியாதை ஒரு கேடு தான்”, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு அமைதியாக நின்றாள் பார்வதி.
“அம்மா கிட்ட என்ன பேச்சு வேண்டி இருக்கு? என் கிட்ட தானே பேசுற்? அப்ப என்கிட்ட கேள்வி கேளு. யாருக்கு மரியாதை கொடுக்கணும், யாருக்கு மரியாதை கொடுக்க கூடாதுன்னு எனக்கு தெரியும்? அந்த அளவுக்கு எனக்கு அறிவு இருக்க தான் செய்யுது”, என்றாள் சிவானி.
“சிவானி நீ பேசுறது தப்பு. எல்லாரையும் எடுத்தெறிஞ்சு பேசுற? உன் அண்ணன் அண்ணனு அவனை தலைல தூக்கி வச்சு ஆடுற. அவன் உன்னை தெருவுல நிறுத்திட்டான்னா திருப்பி எங்க கிட்ட தான் வரணும்”, என்றான் திலீபன்.
“சரியாச் சொன்னீங்க? நாளைக்கு நம்ம கிட்ட வரும் போது இந்த பேச்சல்லாம் அமுங்கி போயிருக்கும்”, என்று அவனுக்கு ஒத்து ஊதினாள் திவ்யா.
“அடடே, வாங்க வாங்க நாட்டாமைகளா. பஞ்சாயத்து பண்ண வாரீங்களோ? என் அண்ணன் என்னை தெருவுல நிறுத்துமா? அப்படி ஒரு நிலை உங்களால தான் எனக்கு வரும். அப்படி வந்தா கூட என் மனோஜ் அண்ணன் தான் என்னை தாங்குவான். உங்க நாலு பேரால தான் நான் என்னோட வீட்டை விட்டு போறேன். என் அம்மா அப்பாவுக்கு வேணும்னா நீங்க முக்கியமா இருக்கலாம். ஆனா எனக்கு என் அண்ணன் மட்டும் தான் முக்கியம். இனி என்னை குறை சொல்றதை விட்டுட்டு அவங்க அவங்க வேலையை பாருங்க. அப்புறம் மரியாதை எல்லாம் தானே வரணும். பிச்சை கேக்க கூடாது. மாமியார் வீட்ல உக்காந்து கொட்டம் அடிக்கிறவங்களுக்கும் புருசனோட அண்ணன் சம்பாதிக்கிற பணத்துல உக்காந்து தின்னு உடம்பை வளக்குறவங்களுக்கும் நான் மரியாதை கொடுக்க விரும்பலை. அப்புறம் அக்கா, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு அண்ணன் எப்படி பட்ட மாப்பிள்ளை பாக்கும் தெரியுமா? என் குடும்பத்தையும் தன்னோட குடும்பமா தாங்குற பையனா தான் பாக்கும். மத்தவங்க மாதிரி மாமியார் வீட்ல உக்காந்து வக்கணையா தின்னுட்டு குறை பேசுற மாதிரி மாப்பிள்ளை பாக்கவே பாக்காது. உங்க கிட்ட எனக்கென்ன பேச்சு? அம்மா அப்பா நான் வரேன்”, என்று அனைவரையும் சாடி விட்டு அங்கிருந்து சென்றாள் சிவானி.
அவள் ஏறியதும் ஆட்டோ கிளம்பியது. “அவ சின்ன பொண்ணு தெரியாம பேசிட்டா. தப்பா நினைக்காதீங்க”, என்று செந்திலை சமாதானப் படுத்தினாள் நித்யா.
“அது தான் எனக்கு தெரியுமே? அவ ஒரு குழந்தை. அவளை விடு. உங்க அம்மா கிட்ட சொல்லி காரப் பணியாரம் செய்ய சொல்லேன்”, என்றான் செந்தில்.
“அம்மா அம்மா, என்ன உக்காந்துட்ட? காரப் பணியாரம் செய்யேன். சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு”, என்றாள் நித்யா.
“எடு வெளக்கமாத்த. நானே பொட்டை புள்ள வீட்ல இருக்க முடியாம, மனசொடிஞ்சு போகுதேன்னு வருத்தத்துல இருக்கேன்? உனக்கு காரப் பணியாரம் கேக்குதோ? ஒழுங்கு மரியாதையா போயிரு. இல்லைன்னா சாப்பாட்டுல விஷத்தை வச்சிருவேன். மகனும் பாக்க மாட்டேன், வேற யாரா இருந்தாலும் பாக்க மாட்டேன். ஒழுங்கா இருக்குறதுன்னா இரு. இல்லைன்னா உன் வீட்டுக்கு கிளம்ப பாரு”, என்று கத்தி விட்டு உள்ளே சென்று விட்டாள் பார்வதி.
பார்வதி அப்படி சத்தம் போட்டதும் திகைத்து போய் நின்றார்கள் நித்யாவும், செந்திலும்.
மாமியாரை பிடிக்காத திவ்யாக்கு கூட பார்வதி செந்தில் மற்றும் நித்யாவை திட்டியது பிடித்திருந்தது.
ஆட்டோ சிறிது தூரம் சென்றதும் “வீட்ல இருந்து போறது கஷ்டமா இருக்கா அம்மு? வேணும்னா அண்ணா வேற ஒரு வீடு பாத்து உன் கூட அம்மா அப்பாவை இருக்க வைக்கவா?”, என்று கேட்டான் மனோஜ்.
“ஐயோ அப்படி எல்லாம் இல்லைண்ணா. இந்த வருஷம் மட்டும் தானே? அதல்லாம் பழகிரும். நாம இன்னொரு வீடு பாத்தாக் கூட அம்மா அப்பா அந்த வீட்டை விட்டு வரது கஷ்டம். நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்”
“நித்யா என்ன சொன்னா?”, என்று கேட்டதும் நடந்ததை புன்னகையுடன் அண்ணனிடம் பகிர்ந்தாள் சிவானி.
அவள் முகத்தில் இருந்த சந்தோஷம் அவனுக்கும் புன்னகையை வரவழைத்தது.
“அதெல்லாம் விசாரிச்சிட்டேன். இடம் இருக்கு டா அம்மு”
“எப்படி விசாரிச்ச?”
ஆஷா அந்த காலேஜில் படிப்பதைப் பற்றி சொன்னான். ஆஷா யாரென்று சிவானிக்கு தெரியாததால் “அது யாருண்ணா ஆஷா? உனக்கு அவளை எப்படி தெரியும்?”, என்று விசாரித்தாள் சிவானி.
ஒரு நொடி திகைத்தாலும் “ஸ்கூல் ஜூனியர் டா அம்மு. இன்னைக்கு மெக்கானிக் ஷெட்டுக்கு வந்தா. அப்ப தான் தெரியும்”, என்று சொன்னான்.
பின் காலேஜ் சென்றதும் ஆஷாவுக்கு அழைத்தான். அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்கள் இருக்குமிடம் வந்தாள் ஆஷா.
இருவருக்கும் அறிமுகப் படுத்தி வைத்தான் மனோஜ். யாருடனும் பேசாத தன்னுடைய அண்ணன் ஆஷாவிடம் பேசுவதை வியப்புடன் பார்த்த சிவானி ஆஷாவையும் ஆராய்ச்சியாக பார்த்தாள்.
பின் ஆஷாவும் சிவானியும் நட்புடன் புன்னகைத்து பேச ஆரம்பித்து விட்டார்கள். அதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றான் மனோஜ்.
ஹாஸ்டல் ரூம் கேட்டு சிவானியை அவளுடைய ரூமில் விட்டு விட்டு இருவரும் கிளம்பினார்கள். “சரி ஆட்டோ நிக்குது ஆஷா. நான் கிளம்புறேன். நீ பாத்துப்போ. டைம் கிடைக்கும் போது சிவானியை பாத்துக்கோ”, என்றான் மனோஜ்.
“என்ன பாஸ் காரியம் முடிஞ்சதும் கழட்டி விட பாக்குறீங்க? எங்க வீட்ல என்னை டிராப் பண்ணுங்க”, என்று சொல்லி சிரித்தாள் ஆஷா.
“ஏய் உன் வண்டி என்ன ஆச்சு? மாத்த சொன்னாலும் மாத்த மாட்டிக்க? சரி வா உன்னை ஆட்டோல அனுப்பிட்டு நான் வண்டியை என்னன்னு பாக்குறேன்”
“வண்டி எல்லாம் நல்லா தான் இருக்கு”
“அப்புறம் ஏன் உன்னை டிராப் பண்ணனும்?”
“என்னோட வண்டில தான் நீங்க எனக்கு லிப்ட் கொடுக்கணும்”
“அடப் பாவி என்ன விளையாடுறியா? அந்த வண்டில நம்ம ரெண்டு பேருமா? விளங்கிரும். நான் ஆட்டோல கிளம்புறேன் பா”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து ஓடியே விட்டான்.
“எத்தனை நாள் என்னை விட்டு ஒடுறேன்னு பாக்குறேன்”, என்று எண்ணிக் கொண்டு வண்டியை எடுக்க சென்றாள் ஆஷா.
ஆஷா வீட்டுக்கு சென்ற போது அவளுடைய அன்னை புஷ்பா அவளுக்காக காத்திருந்தாள்.
“எதுக்கு டி இன்னைக்கு லேட்?”, என்று கேட்டாள் புஷ்பா.
“ஸ்பெஷல் கிளாஸ் இருந்தது. அதான் லேட்”, என்று வேண்டா வெறுப்பாக பதில் சொன்னாள் ஆஷா.
“உண்மைலே ஸ்பெஷல் கிளாசா? இல்லை வேற எதுவுமா?”, என்று சந்தேகமாக கேட்டாள் புஷ்பா.
“அம்மா, இப்படி சந்தேகப் பட்டுட்டே இருந்தா நான் ஒண்ணும் செய்ய முடியாது”, என்று எரிச்சலுடன் சொன்னாள் ஆஷா.
“என்னமோ நீ பண்ணாததை சொல்ற மாதிரி சிலுத்துக்குற? போ போ முகம் கழுவிட்டு, கண்ணகி டீ குடிப்பா. குடிச்சீட்டு வீட்ல இரு. நான் அண்ணன் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
கடுப்பான ஆஷா நேராக வேலைக்காரி கண்ணகி அருகில் சென்று “எனக்கு பசிக்கலை அக்கா, எனக்கு எதுவும் வேண்டாம்”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு சென்றாள்.
அன்னை சொன்ன முகம் கழுவிட்டு என்ற வார்த்தை நினைவில் வந்தாலும் அதை செய்ய பிடிக்காமல் அப்படியே கட்டிலில் விழுந்தாள்.
பழைய நினைவுகள் அனைத்தும் மனதில் அணி வகுத்தன. கண்களில் இருந்து கண்ணீரும் வடிந்தது.
முத்துவேல் புஷ்பா தமபதியினருக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் நிர்மல் இன்ஜினியரிங் முடித்து விட்டு ஆஸ்ட்ரேலியாவில் பணி புரிகிறான். அடுத்தது ஆஷா பிரியதர்சினி.
முத்துவேல் மதுரை மாவட்டத்தில் ஒரு பெரிய அரசியல்வாதி. எதற்கும் அஞ்சாதவர். எதற்கும் என்றால் அது கொலையாக இருந்தால் கூட. அவருடைய தேவைக்கு என்றால் தயங்காமல் எதையும் செய்வார்.
அவருக்கு பக்கபலமாக இருப்பது புஷ்பாவின் அண்ணன் வாசு தேவன். மலை ஏறக் கூட மச்சினன் தயவு வேண்டும் என்பது போல முத்துவேலுக்கு தோள் கொடுப்பவர் தான் வாசுதேவன்.
வாசுதேவனின் மனைவி பெயர் அன்னபூரணி. இருவருக்கும் பிறந்தவன் தான் ஜெயச்சந்திரன். .