நித்யா மற்றும் திலீபன் இருவரையும் பற்றி தெரிந்ததால் தான் மனோஜ் அப்படி சொன்னான். “என்ன எல்லாரும் வாயை மூடிட்டு இருக்கீங்க? சொல்றது காதுல விழுந்தது தானே? அக்கா, உன்னோட கொழுந்தனைக் கட்டி வைக்கணும்னா உன் புருஷன் கிட்ட சொல்லி நான் செலவு பண்ணின பணத்தை தரச் சொல்லு. செலவு கணக்கு எழுதி வச்சிருக்கேன். அப்புறம் அப்பா, உங்க அக்கா மகனைக் கட்டி வைக்கணும்னு நினைச்சா உங்க சின்ன மகன் கிட்ட சொல்லி நான் கட்டிய பீஸ் பணத்தை தரச் சொல்லுங்க. அவளுக்கு செலவு பண்ணி கல்யாணம் பண்ணி வைங்க. இல்லைன்னா, வெறும் கையோட அனுப்புங்க. அப்படி இல்லைண்ணா என்னோட தங்கச்சி வாழ்க்கையை நான் பாத்துக்குறேன். எல்லாரும் ஒதுங்கிக்கோங்க”, என்றான் மனோஜ். 
“மனோஜ் இப்படி சொன்னா எப்படி பா? அவ உன் தங்கச்சி. நீயே அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பாரு”, என்றார் துரைப்பாண்டி. 
“இப்படி சொல்லிட்டு நாளைக்கு பேச்சு மாற மாட்டீங்களே?”
“மாட்டோம். பா. அவளை நீ தான் படிக்க வச்ச. நீ தான் அவளுக்கு மாப்பிள்ளையும் பாக்கணும்”

“இப்ப இப்படி சொல்றவங்க முன்னாடி ஏன் அப்படி சொல்லலை? நீங்களும் அம்மாவும் கூட அம்முவை கல்யாணத்துக்கு கட்டாயப் படுத்திருக்கீங்க?”
“அது சொந்தத்துக்குள்ளே கட்டி வைக்கலாம்னு”, என்று இழுத்தாள் பார்வதி.
“ஒரு சின்ன பொண்ணை போய் எல்லாரும் சுத்தி வளைச்சு டார்ச்சல் பண்ணிருக்கீங்க. அவ தப்பான முடிவு எடுத்திருந்தா என்ன செய்ய முடியும் உங்களால? என் தங்கச்சிக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும். யாராவது இடைல வந்தா நான் மனுசனா இருக்க மாட்டேன். அம்மு இங்க வா”
“என்னண்ணா?”, என்று கேட்டாள் சிவானி. 
“உனக்கு இன்னும் இந்த வருஷ படிப்பு இருக்கு. ஏற்கனவே வீடு சந்தை கடை மாதிரி ஆகிட்டு”, என்று செந்திலைக் குறிப்பாக பார்த்துக் கொண்டே சொன்னான். 
இந்த குத்தல் பேச்செல்லாம் செந்திலை எங்கே பாதிக்கும்? அவன் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றான். “எருமை மாட்டுல மழை பெஞ்ச மாதிரியே நிக்குறதைப் பாரு”, என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள் பார்வதி. 
“இங்கயே இருந்தா உன்னால ஒழுங்கா படிக்க முடியாது”, என்றான் மனோஜ். 
“ஆமாண்ணா, எனக்கு இந்த வருஷம் ரொம்ப வேலை இருக்கு. இங்க இருந்தா என்னால படிக்கவே முடியாது. ஏதாவது செய்ண்ணா”
“ஒரு நிமிஷம் இரு”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று ஆஷாவை அழைத்தான். 
அவன் போனை எடுத்து “என்ன பாஸ் இந்நேரம் கால் பண்ணிருக்கீங்க? பிரேக் டைம் முடிய போகுது. சீக்கிரம் சொல்லுங்க”, என்றாள் ஆஷா. 
“அப்படியா? சரி உனக்கு டைம் கிடைக்குறப்ப ஹாஸ்டல் போய் சீட் இருக்கான்னு விசாரிச்சிட்டு வரியா?”
“உங்களுக்கு எப்படி பாஸ் எங்க காலேஜ்ல சீட் கிடைக்கும்?”
“ஏய் அறிவாளி, என் தங்கச்சிக்கு தான் சீட் வேணும். அவளும் உன்னை மாதிரி பைனல் இயர் தான். நீ மெக்கானிக்கல், அவ ஈஸிஈ. அவளுக்கு தான் இடம் இருக்கான்னு பாக்கணும்”
“பாத்தீங்களா உங்க தங்கச்சி என் கூடவே படிக்கிறா. என்கிட்ட நீங்க சொல்லலை”
“ஆமா ஆமா நாம இத்தனை வருஷம் பேசிட்டு தானே இருந்தோம் என் தங்கச்சி அங்க தான் படிக்கிறான்னு உன்கிட்ட கதை பேச. இன்னைக்கு தான் நீயே என்னை பாக்க வந்த?”
“இதை சோகமா சொல்றீங்களா?”
“ஏய் வாயைக் கிளராத டி. எப்ப பிரீயோ அப்ப போய் விசாரி. இல்லைண்ணா நான் வரவா?”
அவன் சொன்ன டி அவளுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வை தோற்றுவித்தாலும் “நீங்க ஏன் அலையப் போறீங்க பாஸ்? நான் கால் மணி நேரத்துல கேட்டு சொல்றேன்”, என்றாள். 
“அப்ப கிளாஸ்?”
“அது போனா போகுது”, என்று அசால்டாய் சொல்லி விட்டு போனை வைத்தவள் அடுத்த நொடி ஹாஸ்டலுக்கு சென்றாள். 
அங்கே சீட் இருக்கவும் அதை அவனுக்கு சொல்லி விட்டு கிளாசுக்கு சென்றாள். . 
“சிவானி உங்க காலேஜ் ஹாஸ்டல்ல சீட் இருக்கு. அங்க போய் இருக்கியா?”, என்று கேட்டான் மனோஜ். 
“இங்க இருக்குற காலேஜ்க்கு எதுக்கு டா ஹாஸ்டல்?”, என்று கேட்டாள் பார்வதி. 
“அம்மா நீங்க வேணும்னா கூட்டத்தோட கோயிந்தா போடுங்க. என் தங்கச்சிக்கு இந்தக் குடைச்சல் வேண்டாம். அவ கொஞ்சம் பிரீயா இருக்கட்டும்”, என்று கடித்தான் மனோஜ். 
“நீயும் வீட்டை விட்டு போன. இப்ப அவளையும் அனுப்புறியே டா?”
“நீங்க பெத்த பிள்ளைங்களே பிறந்த வீட்ல நிம்மதியா இருக்க முடியாத அளவுக்கு நம்ம வீடு இருக்கு. என்ன செய்ய? சிவானி நான் சாயங்கலாம் அஞ்சு மணிக்கு வரேன். உனக்கு தேவையானதை எடுத்து வை. ஹாஸ்ட்டல்ல சேத்து விடுறேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பினான். 
“ஒரு வாய் சாப்பிடாம கூட போறானே”, என்று அழுதாள் பார்வதி. 
“விடு மா, எல்லாம் மாறும்”, என்று சொல்லி மனைவியை சமாதானப் படுத்தினார் துரைபாண்டி. 
இது எல்லாத்துக்கும் காரணமான திவ்யாவை முறைத்தாள் பார்வதி. “ஐயோ என்ன இந்த அத்தை திடீர்னு முறைக்குது?”, என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து ஓடியே விட்டாள் திவ்யா. 
கடைக்கு சென்றதும் ராமும் ஜெகனும் என்ன பிரச்சனை என்று விசாரித்தார்கள். நடந்ததைச் சொன்னான் மனோஜ். 
அதன் பின் அவர்களின் வேலை எப்போதும் போல் நடந்து கொண்டிருந்தது. 
ஒரு காருக்கு அடியில் படுத்து வேலை செய்து கொண்டிருந்தான் மனோஜ். அப்போது அவனுடைய போன் அடித்தது. 
“ஜெகா யாரு போன் பண்ணுரான்னு பாரு டா”, என்றான் மனோஜ். 
“சரிண்ணா”, என்று சொல்லி எடுத்த ஜெகன் “அண்ணா, அண்ணி பேசுறாங்க”, என்றான். 
தூக்கி வாரிப் போட காருக்கு அடியில் இருந்து வெளியே வந்த மனோஜ் “அண்ணியா? எந்த அண்ணி டா?”, என்று கேட்டான். அவர்களின் உரையாடலை ராமும் ஆர்வமாக கேட்டான். 
“காலைலே வந்தாங்களே அந்த அண்ணி தாண்ணே? அவங்க போட்டோ தான் வருது”, என்று ஜெகன் சொன்னதும் “ஹா ஹா, அண்ணின்னு முடிவே பண்ணிட்டியா டா?”, என்று கேட்டான் ராம். 
போலியாக இருவரையும் முறைத்த மனோஜ் “உங்களை பேசிட்டு வந்து வச்சிக்கிறேன் டா”, என்று சொல்லி போனை பிடுங்கிக் கொண்டு அறைக்குள் சென்றான். இருவரும் அவனை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள். 
உள்ள சென்ற மனோஜ் “சொல்லு ஆஷா”, என்றான். 
“என்ன சொல்ல? நீங்க தான் சொல்லணும்? உங்க தங்கச்சிக்கு என்ன பிராப்ளம்? திடீர்னு எதுக்கு ஹாஸ்டல்?”
“வீட்ல அக்கா, தம்பி பொண்டாட்டி எல்லாரும் கொஞ்சம் அவளை படிக்க விடாம செய்றாங்க. அதான்”
“ஓ, சரி சிவானி என்னைக்கு சேரப் போறா?”
“இன்னைக்கு சாயங்கலாம் தான்”
“அப்படியா? எத்தனை மணிக்குன்னு சொல்லுங்க. நான் வெயிட் பண்ணுறேன். அவளை ஹாஸ்டல்ல விட்டுட்டு நாம கிளம்பலாம்”
“உனக்கு ஏன் அவ்வளவு கஷ்டம்? நான் பாத்துக்குறேன்”
“ஓ”
“என்ன ஓ?”
“ஒண்ணும் இல்லை விடுங்க”
“சொல்லு ஆஷா”
“சொன்னா மட்டும் உங்களுக்கு புரியவா போகுது?”

“நீ வெயிட் பண்ண வேண்டாம்னு சொன்னது தப்பா?”
“தப்பு இல்லை. தப்பே இல்லை போதுமா? உங்க வாழ்க்கைல இருந்து என்னை தள்ளி வச்சிட்டீங்கன்னு எனக்கு தெரியும். ஆனா உங்களுக்கு உதவி செய்யக் கூடாத அளவுக்கு என்னை தள்ளி வச்சிட்டீங்கன்னு இப்ப தான் தெரியுது. தேங்க்ஸ் பாஸ்”
“லூசா டி நீ? உன்னை தள்ளி வச்சிருந்தா நான் ஏன் மதியம் உன்கிட்ட உதவி கேக்க போறேன்? அப்புறம் நான் உன்னை தள்ளி வைக்கலை. நான் தான் ஒதுங்கிப் போறேன். புரிஞ்சிக்கோ. சாயங்காலம் வெயிட் பண்ணு. கிளம்பி போயிராத”
“முழு மனசோட சொல்றீங்களா? இல்லை…”
“எம்மா தாயே, முழு மனசோட தான் சொல்றேன். தங்கச்சியை அங்க சேக்குற வரைக்கும் என் கூடவே இரு போதுமா?”
“போதாது தான். சரி இப்போதைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்”
“சரியான வாயாடி, சரி உன் அண்ணன் எப்படி இருக்கான்?”
“நிர்மல் ஆஸ்த்ரேலியால இருக்கான்”
“அப்ப வீட்ல உன்னோட அராஜகம் தானா?”
“ஆமா”
“சரி என்னோட நம்பர் எப்படி உனக்கு தெரியும்?”
“நான் போன் பண்ணிருவேனோன்னு தானே பழைய நம்பரை மாத்தூனீங்க?”
“அதான் கேக்குறேன். புது நம்பர் உனக்கு எப்படி தெரியும்?”
“இது பெரிய விஷயமா? சில டைம் உங்க மூளை கூட ரெஸ்ட் எடுக்குது பாஸ்”
“மூளை வேலை செய்யலைங்கிறதை டீசண்டா சொல்றியா? எப்படி தெரியும் சொல்லு”
“அதான் கடைல உரிமை மனோஜ்ன்னு போட்டு உங்க நம்பர் போட்டிருக்கே?”
“அட, ஆமா. நான் மறந்தே போயிட்டேன். சரி சாப்பிட்டியா?”
“இப்ப தான் ஆச்சு. நீங்க?”
“இனி தான்”
“என்ன ஸ்பெஷல்?”
“தெரியலை, பசங்க தான் ஏதாவது செஞ்சிருப்பாங்க”
“ஷெட்லயா சாப்பிடுறீங்க? வீட்டுக்கு போகலையா?”
“இல்லை, நான் வீட்டுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு. இங்க தான் இருக்கேன்”
“ஏன்?”
திவ்யா, திலீபன் திருமண விஷயத்தைப் பற்றிச் சொன்னதும் அமைதியாக கேட்டுக் கொண்டவள் அடக்கமாட்டாமல் சிரித்தாள். 
“ஆஷா, நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்? நீ சிரிச்சிட்டு இருக்க?”, என்று கேட்டான் மனோஜ். 
“ஹா ஹா, சிரிப்பா வருது பாஸ்”

“ஏய், சொல்லிட்டு சிரி டி”, என்று கடுப்புடன் கேட்டான் மனோஜ். 
“இல்லை, நிராகரிப்போட வலி எப்படி இருக்கும்னு நீங்க அனுபவிக்கணும்னு ஒரு நாள் சொன்னேன். நான் சொன்னது நிஜமாகிருச்சுல்ல? திவ்யா நிராகரிச்சது உங்களுக்கு பயங்கரமா வலிச்சிருக்கும்ல? அதை நினைச்சேன், சிரிப்பு வந்துருச்சு”
“ரொம்ப சந்தோஷப் படாதீங்க இஞ்சினியரம்மா, எனக்கு எந்த வலியும் வரலை. ஆனா ஏமாத்த பட்டுட்டோம்னு கோபம் தான் வந்துச்சு”
“ஐயையோ, அப்படியா? நான் கூட உங்களுக்கு ரொம்ப வலிச்சு அந்த வலிக்கு மருந்தா நான் வரலாம்னு நினைச்சேனே?”, என்று கேட்டு கொக்கி போட்டாள் ஆஷா. 
“இந்த விஷயம் பேசுறதா இருந்தா நாம பேச வேண்டாம் ஆஷா”, என்று சொல்லி போனை வைத்து விட்டான் மனோஜ். 
“கடவுளே, இவன் அடங்கவே மாட்டானா? இவனை வச்சிக்கிட்டு நான் என்ன பண்ண போறேன்?”, என்று எண்ணி தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் ஆஷா. 
பூக்கள் மலரும்…..