மதுரை மாவட்டம் சிம்மக்கல் கடை வீதியில் நடுநாயகமாக வீற்றிருந்தது ஒரு மெக்கானிக் ஷாப். அதன் உரிமையாளன் மனோஜ்.
அதே ஊரைச் சேர்ந்த துரைப்பாண்டி, பார்வதி இருவரின் மகன் தான் மனோஜ். துரைப்பாண்டி தான் அந்த மெக்கானிக் ஷாப்பை முதலில் ஆரம்பித்தார்.
வீட்டின் பொருளாதார நிலை காரணமாக படிப்பை பத்தாம் வகுப்போடு நிறுத்தி விட்டு அப்பாவின் தொழில் மீது ஆர்வம் கொண்டு அதை செய்ய ஆரம்பித்தான் மனோஜ்.
எந்த வண்டியையும் அக்கு வேறு ஆனி வேறாக பிரித்து அதை சரி செய்யும் திறமை கொண்டவன். சில மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் எந்த திறமையும் இல்லாமல் இருக்கும் போது அவனுக்கு அத்தனை திறமையும் உண்டு.
அவனுடைய திறமையையும் வளர்ச்சியையும் கண்ட துரைப்பாண்டி கடையை மகனிடம் கொடுத்து விட்டு விவசாயத்தை பார்க்க சென்று விட்டார். அதனால் அந்த மெக்கானிக் கடை முழுமையாக மனோஜ் கண்ட்ரோலுக்கு வந்தது. அங்கே மூன்று பேர் பணி புரிகிறார்கள்.
ராம் மற்றும் ஜெகன் இருவரும் அந்த கடையில் தான் வேலை செய்கிறார்கள். அவர்களுடன் மூர்த்தி என்ற சிறுவனும் உண்டு. பகலில் பள்ளிக்கு போகும் மூர்த்தி பள்ளி விட்டு வந்ததும் கடையில் வேலை செய்வான். அனைத்தையும் இந்த சிறு வயதிலே கற்றுக் கொள்வான்.
அவனை படிக்க வைப்பது மனோஜ் தான். இவர்கள் மூவருக்கும் குடும்பம் கிடையாது. அதனால் அவர்களும் மனோஜுடன் அந்த ஷெட்டில் தான் தங்கியிருப்பார்கள்.
சில நாட்கள் இவர்களே சமையல் செய்வார்கள். பல நாட்கள் ஹோட்டலில் உண்பார்கள். இவர்கள் மூவருக்கும் சம்பளம் என்று எதையுமே கொடுக்க மாட்டான் மனோஜ். ஆனால் அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கு ஆரம்பித்து அதில் வரவு வரும் போதெல்லாம் பிரித்து பணம் போட்டு விடுவான்.
இப்போதைக்கு மனோஜின் குடும்பம் என்றால் இவர்கள் மூவரும் தான். மனோஜ் வீடு இரண்டு தெரு தள்ளி தான் இருக்கிறது. ஆனால் கடந்த ஒரு வருடமாக அவன் வீட்டுப் பக்கமே செல்ல வில்லை. ராம், ஜெகன், மூர்த்தியுடனே தங்கிக் கொள்கிறான்.
அவன் வீட்டுக்கு வராதது துரைபாண்டி மற்றும் பார்வதிக்கு வருத்தம் தான். ஆனால் அவனை எந்த விசயத்திலும் கட்டாயப் படுத்த முடியாது. அவன் சுயம்பு. படிப்பு என்ற ஒன்றைத் தவிர மற்ற அனைத்திலும் மிகவும் உயர்ந்தவன்.
மனோஜ்க்கு நித்யா மற்றும் சிவானி என்ற இரண்டு சகோதரிகளும், திலீபன் என்ற தம்பியும் உண்டு.
நித்யா மனோஜ்க்கு நேரே மூத்தவள். அந்த குடும்பத்தில் அவள் தான் முதல் வாரிசு. சில வீட்டில் அனைத்து பொறுப்புகளும் மூத்தவள், தலை மீது விழும். ஆனால் நித்யாவோ பொறுப்பா? அப்படின்னா என்ன? என்ற கேள்வியைக் கேட்பாள். சுயநலத்தின் மொத்த உருவம் அவள்.
அதிக சீர் செய்து தான் அவளை பக்கத்து ஊரில் உள்ள செந்தில் என்பவனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். ஆனால் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் தான் அவளுடைய புகுந்த வீட்டில் இருப்பாள். மற்ற நாட்களில் எல்லாம் பிறந்த வீட்டில் தான் அவள் வசிப்பது. அதுவும் அவளுடைய கணவன் செந்தில் மற்றும் மூன்று வயது மகள் வர்ஷாவும் நித்யாவின் பிறந்த வீட்டில் தான் குடியிருப்பார்கள்.
செந்தில் வீட்டில் அவன் கவர்ன்மெண்ட் பஸ் கண்டக்டர் என்று சொல்லி தான் நித்யாவை பெண் கேட்டார்கள். அரசு உத்தியோகம் என்று நம்பி இவர்களும் பெண் கொடுத்தார்கள். ஆனால் திருமணம் ஆகி ஒரு வாரம் கழித்து தான் தெரிந்தது. பணத்தை கையாடல் செய்த குற்றத்திற்காக அவனை வேலை நீக்கம் செய்திருக்கின்றனர். நான் எந்த பணமும் எடுக்க வில்லை என்று சொல்லி கோர்ட்டில் அதற்காக கேஸ் போட்டிருந்தான் செந்தில்.
அது உண்மையா பொய்யா என்று யாருக்கும் தெரியாது. கேஸ் முடிவதற்குள் அவனுக்கு வயசு கூடினாலும் ஆச்சர்ய படுவதிற்கில்லை.
கேஸ், வக்கீல் பீஸ் என்று நித்யா வீட்டில் பணம் கேட்கும் போது “ஏன் இப்படி பண்ணுனீங்க மாப்பிள்ளை? உண்மையிலே பணம் எடுத்தீங்களா? இல்லையா? வீணா பணம் கரையுது. வேலை போனா போகட்டும். வேற ஏதாவது வேலை தேடுங்க. சும்மா அந்த கேசை சொல்லி வீணா காசை கரியாக்குறீங்க”, என்று துரைப்பாண்டி கேட்டதற்கு மாப்பிள்ளை முருக்கை காட்டினான் செந்தில்.
“என்னை என்ன திருடன்னு சொல்ல வறீங்களா? உங்க வீட்ல பொண்ணை எடுத்தா என்ன வேணா செய்வீங்களா? சும்மா என்னமோ அள்ளிக் கொடுத்த மாதிரி சொல்றீங்க?”, என்று சண்டையிட்டான் செந்தில்.
அவன் சண்டை போட்டது பத்தாது என்று தன்னுடைய தாய் சரோஜாவிடமும் சொல்லி அவள் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து “என் மகனை எப்படி நீங்க சொல்லலாம்? என் மகன்னா உங்களுக்கு இளிச்ச வாயனா? பொண்ணைக் கொடுத்துருக்கோமே, மாப்பிள்ளைன்னு மரியாதை இருக்கா?”, என்று பயங்கர சண்டை போட்டாள்.
இதற்கு மேல் அவனை யாரும் ஒரு வார்த்தை கேட்பார்களா? பெண் கொடுத்த பாவத்திற்காக மனோஜ் வீட்டில் அனைவரும் பொறுமையாக போனார்கள். ஆனாலும் மாதத்தில் பத்து பதினைந்து நாட்கள் மாமியார் வீட்டில் இருக்கும் போது சமையலில் ஆரம்பித்து, துணி துவைப்பது முதற்கொண்டு அனைத்திலும் நொட்டை சொல்லிக் கொண்டு இருப்பான்.
இட்லி சாப்பிடக் கொடுத்தால் “தக்காளி சட்னி எங்க, சாம்பார் எங்கே?”, என்பான். அனைத்தையும் வைத்துக் கொடுத்தால் “பொடி எங்க?”, என்பான்.
முட்டை இல்லாமல் அவனுக்கு உணவே உள்ளே இறங்காது. சாதாரண கோழி முட்டை செய்து கொடுத்தால் “இது உடம்புக்கு கேடுன்னு உங்க வீட்ல யாருக்கும் தெரியாதா? நாட்டுக் கோழி முட்டை செய்ய சொல்லு”, என்பான். “உங்க அம்மா துணியை எப்படி தான் துவைச்சிருக்கு? சுருக்கம் சுருக்கமா இருக்கு”, என்று வாய் சவடால் அடிப்பான். “வர்ஷாவுக்கு கொலுசு கருத்துருச்சு. அதை உங்க வீட்ல வாங்கிப் போட்டா என்னவாம்?”, என்பான்.
“வாய் நம நமன்னு இருக்கு. நாட்டுக் கோழி இல்லைன்னா மட்டன் வைக்க சொல்லேன்”, என்பான். அவன் வந்தாலே வீட்டில் உள்ளவர்கள் பதற தான் செய்தார்கள்.
“எதுக்கு இப்படி மாப்பிள்ளை பொறுப்பில்லாமல் இருக்கார்? இங்க அடிக்கடி கூட்டிட்டு வராத நித்யா. அவங்க வீட்டில இருந்தா தான் அவருக்கு பொறுப்பு வரும்”, என்று பார்வதி நித்யாவிடம் ஒரு நாள் புலம்பினாள்.
“நானா இந்த மாப்பிள்ளையை பாத்தேன்? நீங்க தானே பாத்தீங்க? நான் ஏதாவது சொன்னா எங்களுக்குள்ள பிரச்சனை வரதுக்கா? அவர் என்னை நல்லா வச்சிக்கிறார் மா. எங்களுக்குள்ளே சண்டை மூட்டி விடாத. அப்புறம் என்னையவே இங்க வரக் கூடாதுன்னு சொல்ற? அப்ப நான் உன் பொண்ணு இல்லையா? நான் தான் இந்த வீட்டில் முதல்ல பிறந்துருக்கேன். எனக்கு அப்புறம் தான் மத்த எல்லாரும். தெரிஞ்சிக்க. எனக்கும் என் வீட்டுக்காரருக்கும், என்னோட மகளுக்கும் தானே செய்யுறீங்க? என்னமோ அடுத்தவங்களுக்கு செய்யுற மாதிரி சலிச்சுக்குறீங்க?”, என்று சண்டைக்கு வந்தாள் நித்யா.
தங்களின் மகளே புரிந்து கொள்ளாத போது வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையா புரிந்து கொள்ள போகிறார்? அதற்கு பின் அவளிடம் எதுவும் சொல்ல முடியாமல் பார்வதி வாயை மூடிக் கொண்டாள்.
நித்யாவுக்கு அடுத்தது தான் மனோஜ். பேருக்கு ஏற்றார் போல அதிக மன திடம் உடையவன். அந்த வீட்டில் அதிக பாரம் சுமப்பவன். இன்னும் சுமக்க ஆசை படுபவன் தான். வீட்டில் நடக்கும் அனைத்துக்கும் பொறுமையாக போவான். ஆனால் அந்த பொறுமை அவனை விட்டு சில நேரம் காணாமல் போய் விடும்.
அவனுக்கு அடுத்தது தான் திலீபன். காலேஜில் டிகிரி முடித்து விட்டு பேங்கில் கலெக்சன் வேலை செய்து கொண்டிருக்கிறான். அவன் சம்பாதிப்பதை வீட்டுக்கு என்று கொடுத்ததே இல்லை. இரண்டு முறை பெற்றோர்கள் கேட்டதற்கு ஒழுங்கான பதில் இல்லை என்றதும் தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்கள்.
அவனுக்கு அடுத்து சிவானி. காலேஜ் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.
மனோஜ் வீட்டில் தங்காததற்க்கு காரணம் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு தான்.
ஒரு வருடத்திற்கு முன்பு மனோஜ்க்கு துரைபாண்டியின் தங்கை மகள் திவ்யாவை திருமணம் செய்து வைப்பதாக அனைவரும் பேசி முடித்தார்கள். அவனுக்கு திருமணம் பற்றி எந்த எதிர்பார்ப்பும் கிடையாது.
எப்படியும் திருமணம் செய்ய வேண்டும். அது யாரா இருந்தா என்ன என்பது தான் அவன் எண்ணம். திவ்யாவைப் பற்றி அவன் எதுவுமே யோசித்தது கிடையாது. அதனால் வீட்டில் உள்ளவர்கள் சொன்னதும் மேம்போக்காக சரி என்றான். ஆனாலும் அவனுக்குள் ஒரு மரண வலி எழத்தான் செய்தது. அது அவன் மட்டுமே அறிந்த ரகசியம். அதை யாருக்கும் காட்டாமல் மறைத்து விட்டு நடமாடினான்.
கடைசியாக நிச்சயதார்த்த தினமும் வந்தது. அன்று காலை அவனை எழுப்பிய பார்வதி “எந்திரி தம்பி, போய்க் குளிச்சிட்டு வா. நம்ம சொந்தக்காரங்க எல்லாம் அண்ணி வீட்டுக்கு வந்துட்டாங்களாம். நாம தான் போக வேண்டியது இருக்கு”, என்றாள்.
சரி என்று சொல்லி குளிக்க சென்றவன் ஒரு சாதாரண பேண்ட் சட்டையில் கிளம்பினான். எப்போதுமே அவனுக்கு எளிமை பிடித்தமான விஷயம்.
“எல்லாரும் கிளம்புவோமா? இந்த திலீபனைத் தான் காணும்? முதல் ஆளா திவ்யா வீட்டுக்கு போய்ட்டானோ என்னவோ?”, என்று சொல்லி அனைவரையும் கிளப்பினாள் பார்வதி.
அனைவரும் அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது அங்கே நிலைமை வேறு மாதிரி இருந்தது. அனைவரும் ஏதோ பதட்டத்தில் இருப்பது போல இருந்தது.
“என்ன ஆச்சு கண்மணி?”, என்று தன்னுடைய தங்கையிடம் கேட்டார் துரைப்பாண்டி.
மனோஜ்க்கு ஒரு மாதிரி இருந்தது. தான் இங்கே வந்திருக்க கூடாதோ என்று நினைத்தான். அப்போது அங்கே மாலையும் கழுத்துமாக ஆட்டோவில் வந்து இறங்கினார்கள் திலீபனும் திவ்யாவும்.
அத்தனை பேரின் முன்னிலையிலும் அவமானப் பட்டு நின்றான் மனோஜ். அவனை வேண்டாம் என்று சொல்லி அவனுடைய தம்பியை மணந்தால் அது அவனுக்கு தானே இழுக்கு.
“என்னமோ அத்தை மகன்னு பேசி முடிச்சீங்க? அவ கிட்ட கேட்டீங்களா, என்னை பிடிச்சிருக்கான்னு? ஊரைக் கூட்டி என்னை அசிங்கப் படுத்திட்டீங்கள்ள? உங்களுக்கு நான் வேணுமா அவன் வேணுமான்னு முடிவு பண்ணிட்டு நம்ம வீட்டுக்கு வாங்க. அதுக்கப்புறம் நான் என் முடிவை சொல்றேன்”, என்று தன் தாய் தந்தையிடம் சீறியவன் அடுத்த நொடியே வீட்டுக்கு வந்து விட்டான். திலீபனை மன்னிக்க அவன் தயாராக இல்லை.
திலீபனையும் திவ்யாவையும் துரைபாண்டியும் பார்வதியும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு என்ன செய்ய என்றும் தெரிய வில்லை.
“மூத்த மகனுக்காக பார்த்து இளைய மகனை தெருவில் விட முடியாது. மனோஜை சமாதானம் செய்யலாம். இப்ப திலீபனை நம்பி திவ்யாவும் இருக்கிறாள். இருவரையும் எப்படி விட முடியும்? மனோஜ் சமாதானம் ஆகிறுவான்”, என்று சொல்லி துரைப்பாண்டியை சமாதானப் படுத்தினாள் பார்வதி.
அதன் பின் அனைவரும் வீட்டுக்கு வந்தார்கள். அதைக் கண்டு மனோஜ் முகம் கருத்தது. “எனக்கு என்ன ஆனாலும் இவர்களுக்கு வருத்தம் இல்லையா? ஒரு வேளை கட்டிக்க போற பொண்ணுன்னு நினைச்சு நான் அவளை விரும்பிருந்தா என்னோட நிலைமை என்ன ஆகிருக்கும்?”, என்று எண்ணிய மனோஜ் அடுத்த நொடி வீட்டை விட்டு கிளம்பினான்.
அனைவரும் தடுக்க தடுக்க கிளம்பி விட்டான். அதன் பின் மெக்கானிக் ஷெட்டிலே தங்கிக் கொண்டான். அவனால் திலீபனை மன்னிக்க முடியாது என்று தோன்றியது. ஒரு வார்த்தை நான் அவளை விரும்புறேன்னு முன்னாடியே சொல்லியிருந்தால் மனோஜே அவர்களுக்கு திருமணம் செய்து வைத்திருப்பான்.
அதனால் மனோஜுக்கு திலீபனை பிடிக்க வில்லை. திவ்யாவையும் தான். தன்னை வேண்டாம் என்று சொன்ன பெண்ணை யாருக்கு தான் பிடிக்கும்?
அவர்கள் உடன் தன்னால் இருக்க முடியாது என்று உணர்ந்து தான் இங்கே கிளம்பி விட்டான்.