“ப்ச்… நான் என்ன லட்ச கணக்கிலா செலவு பண்றேன்? இப்படி எல்லாத்துக்கும் கணக்கு பார்க்காத.” என்று அவன் முகத்தை சுழிக்க, விவாதங்கள் விவகாரமாக மாறியது.
“லட்ச கணக்கில் செலவு பண்ண இங்க பணம் மரத்தில் காய்க்கல. ஏற்கனவே இந்த வருடம் ஏகப்பட்ட செலவு. இதுல நீ வேற விவசாயம் பண்றேன்னு லாபம் கொடுக்குற நிலத்தில் நஷ்டம் வரமாதிரி பண்ணி வச்சிருக்க. எவ்வளவு உழைப்பு போட்டாலும் இழப்பு வரப்போவது தெரிஞ்சே நிலத்தை அப்படியே விடமுடியாம வேலை நடக்க நீ கேட்கும் போதெல்லாம் காசு கொடுத்துட்டு இருக்கோம். அப்பா பார்க்குற நிலத்தில் லாபம் வந்தாலும் அது கடனை அடைக்கவும், அடுத்த போகத்துக்கு முதலீட்டுக்குமே சரியா இருக்கும்.
விளைச்சல் அதிகமா இருக்குறதால இந்த வருடம் அறுவடை இயந்திரத்துக்கும் கிராக்கியாமே… ஏற்கனவே இந்த நூறு நாள் வேலைத்திட்டம் வந்த பிறகு ஆள் கிடைக்கிறது இல்லை. இப்போ இந்த இயந்திரமும் அதில் சேர்ந்துடுச்சு. தஞ்சாவூரில் இருந்து பத்து மெஷின் தான் நம்ம சுற்று வட்டாரம் மொத்தத்துக்கும் வருதாம். அதை யார் முதலில் வாடகைக்கு எடுக்குறதுன்னு போட்டி வேற… முன்பணமா இப்போவே கொஞ்சம் கட்டி இயந்திரத்தை முன்பதிவு செஞ்சிடுறது நல்லதுன்னு அப்பா சொல்லிட்டு இருக்காரு. கிராக்கியா இருக்குறதால வாடகையும் அதிகமாம். ஒரு மணி நேரத்துக்கு ஆயிரத்து எண்ணூறு ரூபாவாம், அதுவும் எட்டு மணி நேரம் தான் வேலை செய்யுமாம். ஒரு ஏக்கருக்கு குறைஞ்சது நாலு இயந்தரமாவது வேணும். நம்ப மொத்த வயலுக்கும் இந்த வாடகையே ஐம்பதாயிரத்தை தாண்டிடுமாம். அப்புறம் கூலி, குடோனுக்கு அனுப்ப வண்டி வாடகை, சாக்கு தைக்க கூலின்னு செலவே எக்கச்சகமா இருக்கு…”
“இப்போ என்ன… நான் நஷ்டமாக்கிட்டேன் அதுனால இந்த பணத்துல கையை வைக்காதேன்னு சூசகமா குத்திக்காட்டுறீயா?” என்று எரிச்சலாய் கேட்டான் தச்சன்.
இவ்வளவு பொறுமையாய் செலவீனங்களை எடுத்துச்சொல்லியும் அதை கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் பேசுகிறானே என்ற கடுப்பில் நீலா வார்த்தையை சிதறவிட்டார்.
“பணத்தை சிக்கனமா செலவு பண்ணுன்னு சொல்றதைக் கூட உன்னால புரிஞ்சிக்க முடியல… இன்னும் எத்தனை நாள் தான் இப்படி பொறுப்பில்லாம சுத்தப்போற? இந்த லட்சணத்தில் நீ சம்பாரிச்சு கொட்டுன மாதிரி நினைச்ச நேரத்துக்கு பணத்தை எடுத்து தண்ணியா செலவு பண்ற… இன்னைக்கு மட்டும் தஞ்சாவூரு போறேன்னு சொல்லி அஞ்சாயிரம் செலவு பண்ணியிருக்க. அப்படி என்னத்த வாங்கிக் கிழிச்சேன்னு தெரியல… இதுல குந்தவைக்கு பத்தாயிரதுக்கு மேலத்தான் செலவு பண்ணுவாராமாம்… இன்னமும் இந்த குடும்பம் உங்கப்பா உழைப்பில் தான் ஓடிட்டு இருக்கு. அதை மனசுல வச்சுக்க…” என்று நீலா கடுமையாய் பேச, தச்சனின் தன்மானம் சீண்டப்பட்டதோ இல்லையோ அதை எதேர்ச்சையாக கேட்ட குந்தவையின் தன்மானம் சீண்டப்பட்டு சுயம் விழித்தெழுந்தது.
மாமனார் உழைப்பில் தான் இருப்பதோடு இல்லாமல் தன் அக்கா, அவள் பிள்ளைகள் என குடும்பமே வாழ்வதா? என்ற எண்ணம் தீச்சுட்டது போலச் சுட, அவளால் அங்கு அதற்கு மேல நிற்கவே முடியவில்லை.
உள்ளம் உலகலம் போல் கொதிக்க, விரல்களை பிரிப்பதும் சேர்ப்பதுமாய் அவர்கள் அறையில் நடந்து கொண்டிருந்தாள். அந்நேரம் எதுவுமே நடக்காதது போல சாதாரணமாய் பணத்தை எண்ணிக்கொண்டு அறைக்கு வந்தான் தச்சன்.
“என்ன போன் வேணும்னு சொல்லுடி… இப்போ சொன்னா கடை அடைச்சிட்டு வரும்போது எடுத்துட்டு வந்து தருவான்.” என்று இயல்பாய் கேட்க, அவனை நம்பாமல் பார்த்தாள் குந்தவை.
“உனக்கு ரோஷமே வராதா?”
“ஏய் என்னடி பேச்செல்லாம் ஒருமாதிரி இருக்கு.” என்று அவன் சுதாரிக்க, அது பயனற்றுப்போனது.
“நேராவே பொட்டில் அடிச்ச மாதிரிதானே அத்தை சொன்னாங்க… உழைச்சி காசு சாம்பாரிச்சிட்டு செலவு பண்ணு, அப்பா காசுலேயே இன்னும் உடம்பை வளர்க்காதேன்னு சொன்னாங்க… அதை கேட்ட பிறகும் எந்த முகத்தை வச்சிக்கிட்டு காசு வாங்கிட்டு வந்து எனக்கு போன் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு நிக்குற? சுரணையா வராதா உனக்கு? இவ்வளவு வயசான பிறகும் அப்பா காசில் உட்கார்ந்து சாப்பிடுறது மட்டுமில்லாம உன்னை நம்பி வந்த என்னையும் இப்படி நிக்க வச்சிருக்க… இதில் என் அக்கா பசங்களுக்கு வேற காசை வாரியிறைக்குற… இன்னும் எவ்வளவு நாளுக்கு மாமா சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியும்? வீட்டுப் பெரியவரை உழைக்க அனுப்பிட்டு அவர் காசுல சொகுசா இருக்க எப்படி மனசு வருது உனக்கு? தன்மானம் குத்தல? நம்பி வந்தவளுக்கு உன்னால ஒத்த ரூபா சம்பாரிச்சு அதில் ஒரு குன்டூசியாவது வாங்கித் தர முடிஞ்சிதா? எல்லாத்துக்கும் மாமா காசு… அப்போ நீ எதுக்கு இருக்க? எதுக்கு கல்யாணம் பண்ண?” என்று அவள் சத்தம் போட, அவனுக்கும் ரத்த அழுத்தம் எகிறியது.
“ரொம்பப் பேசுற குந்தவை… இது என் வீடு. நான் என் அப்பா காசில் தான் சாப்பிடுறேன்… என் அம்மா தான் திட்டுறாங்க… எனக்கும் இங்க உரிமை இருக்கு. என்னை திட்ட என் அம்மாவுக்கும் உரிமை இருக்கு. நீ சும்மா குதிக்காத… உன்னை யாரும் எதுவும் சொல்லிட மாட்டாங்க. காசு விஷயத்தில் என்ன செய்யணுமோ அதை நான் பார்த்துப்பேன். என் அப்பா பார்த்துப்பார்… எனக்கு உரிமையான பணத்தில் தான் உனக்கும் செலவு பண்றேன்… நீ தேவையில்லாம பிரச்சனையை கூட்டாத… இங்க ஒன்னும் மாச சம்பளத்துக்கு வேலை பார்க்கல… அறுவடை முடிஞ்சா தான் காசு கைக்கு வரும்…”
“இதுதான் இதுக்குத்தான் அப்போவே நமக்கு ஒத்துவராது… இது வேண்டாம் வேண்டாம்னு சொல்லிகிட்டே இருந்தேன். யார் என் பேச்சை கேட்டா? ஏற்கனவே வருமானம் இல்லை இதில் இப்போ உனக்கு நஷ்டம் வேற… அடுத்து என்ன? எது எல்லாம் என் வாழ்க்கையில் நடக்கக்கூடாதுன்னு நினைச்சேனோ அதுவே தான் நடக்குது. இன்னும் எதெல்லாம் எனக்கு பிடிக்காததை செஞ்சு வச்சிருக்க? மொத்தமா சொல்லிடு எல்லாத்தையும் ஒரே நேரத்தில் கேட்டுட்டு மொத்தமா தலை மூழ்கிடுறேன். இப்படி ஒன்னு ஒன்னா தெரிஞ்சிக்கிட்டு தினம் சண்டை தான்…” என்று குந்தவை ஆவேசமாய் நிதானத்தை அடகு வைத்துவிட்டுப் பேச, தச்சனும் தன் பொறுமை இழந்தான்.
“எதை தலை மூழ்கிடுவ? என்னையா? என்னை விட்டுருவியா நீ? இப்போவும் நமக்குள்ள ஒத்துவராது… இதுக்குத்தான் வேண்டாம்னு முன்னாடியே சொன்னேன்னு, அதையே பாடிட்டு இருக்க? அப்போ இன்னமும் உன் மனசுல இந்த கல்யாணம் நடக்காம இருந்திருக்கலாம்னு எண்ணம் இருக்கு, அப்படித்தானே?”
“நான் எப்போ அப்படி சொன்னேன்? அப்படியெல்லாம் சொல்லல…” என்று குந்தவை மெலிதான குரலில் மறுத்தாலும், தச்சன் அதை ஏற்கும் நிலையில் இல்லை.
“சும்மா பொய் சொல்லாத… உன் வார்த்தையெல்லாம் அப்படித்தான் இருக்கு… எப்போ இவன் தப்பு செய்வான்… எப்போ இவனை வார்த்தையால குத்தலாம்னு காத்திட்டு இருக்க. நீ என்ன சொன்னாலும் துடைச்சு எறிஞ்சிட்டு திரும்ப உன்கிட்டேயே வரேன்னு உனக்கு அலட்சியம். இவன் எங்க போயிடப் போறான்… நம்மகிட்ட வந்துதானே ஆகணும்னு இருமாந்திருக்க. எப்போதும் இப்படியே இருக்காது குந்தவை…” என்றுவிட்டு அதிர்ந்த அவளது நிலையை கண்டுகொள்ளாமல் மடமடவென பேண்ட்டுக்கு மாறியவன் அவள் உணரும் முன்னே அங்கிருந்து வெளியேறியிருந்தான்.
அதிர்ந்து நின்றிருந்த குந்தவையின் விழி ஓரத்தில் நீர் சுரந்து ஒன்றன் பின் ஒன்றாய் போட்டி போட்டுக்கொண்டு கீழே இறங்க, தன்னுடைய எதிர்பார்ப்புகள் பொய்த்துவிட்டதால் வந்த அழுகையா இல்லை தச்சன் பேசிச் சென்ற வார்த்தைகளால் வந்த அழுகையா என்று எதற்கு அழுகிறோம் என்றே தெரியாமல் ஓசையை விழுங்கிக்கொண்டு தேம்பலுடன் குலுங்கிக் குலுங்கி அழுதாள். எவ்வளவு நேரம் தான் அழ முடியும்… சஞ்சலங்கள் அனைத்தும் கண்ணீராய் வெளியேறிப்பின் மனம் சற்று தெளிந்தார் போல உணர, முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள் யார் கண்ணிலும் படாமல் கொல்லைப்புறம் சென்று தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவிவிட்டு உள்ளே வந்தாள். வானதியின் அப்போது தான் வெளியிலிருந்து உள்ளே நுழைந்திருந்தாள். தங்கையின் முகத்தில் ஏதோ வேறுபாடு தெரிய அவளை தடுத்தவள்,
“உன் முகம் ஏன் ஒருமாதிரி இருக்கு குந்தவை?”
“ஒன்னுமில்லையே… தூக்கம் வரமாதிரி இருந்தது அதுதான் முகம் கழுவிட்டு வரேன்… வேலை ஏதாவது இருந்தா பார்த்துடு… நான் படிக்கப்போறேன்…” என்று வானதியிடமிருந்து நழுவிய குந்தவை, அறையில் பெயருக்கு புத்தகத்தை திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்தாள்.
மனம் சற்றுமுன் நிகழ்ந்த பிணக்கில் உழன்றிருக்க, அதிகமாக உணர்ச்சிவசப் படுகிறோமோ என்று சுயஅலசலில் இறங்கியது. எதிர்பார்ப்பை வளர்த்துகொண்டு அந்த எதிர்பார்ப்பை அவன் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கிறோமோ… கிடைத்ததை விட கிடைக்காததை நினைத்து மறுகி தானும் வதைப்படுவது மட்டுமில்லாமல் அவனையும் இம்சிக்கிறோமோ என்ற சிந்தைகள் எழுந்தாலும் அதற்கான தீர்வை அவளால் எட்ட முடியவில்லை. நீலாவே நேரில் வந்து தச்சனைப் பற்றி விசாரிக்கும் வரை அவளது யோசனைகள் தொடர்ந்தது.
“அவன் எங்க போயிருக்கேன்னு ஏதாவது சொல்லிட்டு போனானா குந்தவை? வேகமா எங்கேயோ வெளில போனான் இன்னும் ஆளைக் காணோம். போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்குறான்.” என்று தவிப்புடன் நீலா அவள் முன் வந்து நிற்க, குந்தவையின் இதயத்துடிப்பு எகிறியது. அவளுக்குத் தெரிந்தவரை தச்சன் எவருடைய அழைப்பையும் உதாசீனம் செய்து பார்த்ததில்லை. இன்று எடுக்கவில்லை என்றதும் மனதில் அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகள் வந்து பீதி ஏற்படுத்தியது.
“நான்… நான் கூப்பிட்டு பார்க்குறேன் அத்தை.” என்று தவிப்புடன் அலைபேசியை எடுக்க அதுதான் உடைந்து இருந்ததே.
“என்னோட போனிலிருந்து கூப்பிடு…” என்ற நீலாவிடமிருந்து அலைபேசியை பிடுங்கி தச்சனுக்கு அழைத்தாள். இரண்டு மூன்று முறை அழைத்தும் அவன் எடுக்காமல் போக அவளது கலக்கம் கூடியது.
“அவன் எடுக்குற வரை கூப்பிடு.” என்று அவளது கலக்கம் பார்த்து நீலாவும் கலக்கம் அடைய, இரு பெண்களுமே அவனை திட்டாமல் இருந்திருக்கலாம் என்று தங்களைத் தானே சாடிக் கொண்டனர்.
மீண்டும் ஒன்றிரண்டு அழைப்புக்கு பின் அவன் அழைப்பை எடுக்க, அவனுக்கு பேச வாய்ப்பு தராமல் குந்தவை முந்திக்கொண்டாள்.
“ஹலோ… ஹலோ… எங்க இருக்க நீ? சீக்கிரம் வீட்டுக்கு வா… நான் உன்னை பார்க்கணும்.” என்று குந்தவை பதட்டமாய் பேச, மறுபுறம் தச்சன் ம் கொட்டினான்…
அவனின் பதிலில் திருப்தி அடையாமல், “சீக்கிரம் வந்துடு…” என்று குந்தவை இறைஞ்ச, உருகித்தான் போனான் தச்சன்.
“நான்… வந்துடுவேன்… நீ பயப்படாத…” என்று அவன் சொல்லும் போதே, இங்கே நீலா குந்தவையிடமிருந்து அலைபேசியை பிடுங்கியிருந்தார்.
“எங்கடா இருக்க? வீட்டுக்கு வராம எங்க போயிட்ட?” என்று அவர் பீதியில் கேட்க, இணைப்பு எப்போதோ துண்டிக்கப்பட்டிருந்தது.
“தச்சா… ஹலோ…”
“அவர் வந்துடுவார் அத்தை. நீங்க போய் சாப்பிடுங்க.”
“அவன் வரட்டும் அப்புறம் சாப்பிடுறேன்.” என்றுவிட்டு அலைபேசியை பார்த்துக்கொண்டே முற்றத்திற்குச் சென்றார் நீலா. குந்தவை அவன் வாங்கி வந்திருந்த தலையாட்டி பொம்மையை கையிலெடுத்துக்கொண்டு கீழே அமர்ந்து அதை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.
***
குந்தவையிடம் பேசிய பிறகு தட்டுதடுமாறி எழுந்தவன் மெல்ல தோப்பில் இருந்த மோட்டார் அறைக்குச் சென்று முகம் கழுவிவிட்டு, தலையை சிலுப்பியபடியே வெளியே வந்து வண்டியில் ஏறினான்.