எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 15
ஜெய் சனிக்கிழமை இரவு ஒன்பது மணிப் போலத்தான் வந்தான். வந்தவன் வேலை இருக்கிறது என அதிகாலையே வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சிக்கு கிளம்பிவிட்டான். மதியம் உண்டுவிட்டுக் கிளம்பலாம் என்றால் கேட்கவில்லை.
அதிகாலையில் எழுந்தது, அதிலும் உடனே பேருந்து பயணம் என்பதால்… வெண்ணிலாவுக்கு உறக்கம் வர… இந்தமுறை அவளாகவே கணவனின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.
ஒன்பதரை மணிப்போலப் பொள்ளாச்சிக்கு வந்து விட்டனர். இறங்கியதும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றவன், அவளுக்கு வேண்டியது கேட்டு உண்ண வைத்தான்.
இருவரும் உண்டு அங்குத் தெரிந்தவர் இடத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் அவர்கள் ஊரை நோக்கி சென்றனர். செல்லும் வழியாவும் பசுமை தான். சுற்றிலும் இயற்கையை ரசித்தபடி கணவனோடு செல்லும் பயணத்தை வெண்ணிலா வெகுவாக ரசித்தபடி வந்தாள்.
“வீட்டுக்கு போகும் போது பதினொன்னு ஆகிடும். உன்னை வீட்ல விட்டுட்டு உடனே கிளம்பனும்.” என ஜெய் சொன்னதும், அதுவரை மனதில் இருந்த குளுமை மறைந்து, மனதில் வெப்பம் உண்டானது.
“எங்கப் போகப் போறீங்க?” என அவள் கடுப்பாக,
“வேலை இருக்குன்னு சொன்னேன் இல்ல…” என்றான்.
“ஞாயிற்றுக் கிழமை கூட என்ன வேலையோ?” என வெண்ணிலா முனங்க… ஜெய் வண்டியை நிறுத்தி இருந்தான்.
“என்ன சொன்ன?” என அவன் கேட்க, வண்டியில் இருந்து வெண்ணிலா இறங்கி நின்றவள், அவன் முகம் பார்க்காமல் வேறு எங்கோ பார்க்க, “இப்ப உனக்கு என்ன டி பிரச்சனை?” அவன் கேட்க,
“இதுக்கு நான் எங்க வீட்லயே இருந்திருக்கலாம்.” என்றாள்.
“இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தான இன்னைக்குக் கூட வீட்ல இருக்க மாட்டீங்களா?”
“வீட்லதான் அத்தனை பேர் இருக்காங்க இல்ல… நானும் வீட்ல இருந்து என்ன பண்றது?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒன்னு நீங்களும் வீட்ல இருக்கணும்… இல்லை என்னையும் உங்களோட கூடிட்டு போங்க.”
ஜெய் அவளைப் பார்க்க, அவள் உடல் மொழியில் இருந்தே அவள் பிடிவாதத்தை அறிந்தவன், “சரி வா…” என, எங்கே என வெண்ணிலா சந்தேகமாகப் பார்க்க,
“என்னோட தான் கூடிட்டு போறேன் வா…” என்றதும், வெண்ணிலா பைக்கில் ஏற, ஜெய் வண்டியை திருப்பினான்.
“பார்க்க ரொம்ப அமைதியா இருக்க… ஆனா செம பிடிவாதம். நினைத்ததைச் சாதிக்கிற.” என ஜெய் வண்டியின் கண்ணாடியில் அவளைப் பார்த்து முறைத்தபடி சொல்ல, அது தெரிந்தாலும், வெண்ணிலா வேடிக்கை பார்ப்பது போல நடித்தாள்.
திரும்பப் பொள்ளாச்சி வந்துதான் செல்லவேண்டும். பொள்ளாச்சியில் ஒரு உணவகம் முன்பு வண்டியை நிறுத்தியவன், “போற இடத்தில ஹோட்டல் எல்லாம் இல்லை. மதியத்துக்கு உனக்கு என்ன சாப்பிட வேணுமோ இப்பவே வாங்கிக்க. கூடவே ரெண்டு சாப்பாடு சேர்த்து வாங்கு. அங்க வேலை செய்றவங்களுக்குக் கொடுக்கலாம்.” என அவன் பர்சை எடுக்க…
“என்கிட்டே இருக்கு நான் வாங்கிட்டு வரேன்.” என்றபடி வெண்ணிலா ஹோட்டல் உள்ளே சென்றவள், பதினைந்து நிமிடங்கள் சென்று பார்சலுடன் வெளியே வந்தாள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு பெரிய இரும்பு கேட்டின் முன்பு சென்று வண்டியை நிறுத்தினான். இவனைப் பார்த்ததும் வாயில் காவலாளி கேட்டை திறந்து விட… வண்டியை உள்ளே விட்டான்.
சிறிது தூரம் சென்ற பிறகுதான், வீடே கண்ணில் தட்டுப்பட்டது. வீடு இல்லை பெரிய மாளிகை. ஏக்கர் கணக்கில் இருக்கும். அதன் வெளிப்புறம் ஆட்கள் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வீட்டின் முகப்பில் நாற்காலி இருக்க அதில் வெண்ணிலாவை உட்கார சொல்லிவிட்டு, ஜெய் வேலை ஆட்களிடம் சென்றான்.
ஏற்கனவே செடி கொடிகள் நடப்பட்டிருக்க, கார்பெட் போல இருந்த ரெடிமேட் புற்களை… செம்மணலில் பாய்ப் போல வைத்துக் கொண்டிருந்தனர்.
வசதியாக உட்கார்ந்து கொண்டு வெண்ணிலா தண்ணீரை எடுத்து குடித்தவள், சுற்றிப் பார்ப்போம் என எழுந்து சென்றாள்.
தோட்டம் பெரிதாக இருந்தது. வீட்டின் முன்புறம் அலங்கார செடிகள், பூ செடிகள் என இருக்கப் பின்புறம் மா பலா வாழை என வைத்திருந்தனர். அதுதவிர அங்கங்கே தென்னை மரங்கள் வேறு இருந்தது.
வீட்டின் பக்கவாட்டில் பெரிய நீச்சல் குளமும் இருக்க.. வெண்ணிலா அதைச் சுற்றி நடந்து கொண்டிருந்தாள்.
ஜெய் வேலை ஆட்களிடம் பேசிவிட்டு திரும்பி பார்க்க வெண்ணிலா அங்கே இல்லை. அதே நேரம் அவன் கைபேசி அழைக்க எடுத்து பார்த்தால் வெண்ணிலா தான் அழைத்தாள்.Advertisements
ஒரு நொடி பயந்தே போனான். “ஹே எங்கப் போன?”
Advertisements