எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 6
அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஜெய்யை அவன் தந்தை அழைக்க, எங்கே என்று பார்த்தால்… அவர் அறையில் இருந்தார். உடன் அமுதாவும்.
அப்பா அறைக்குள் அழைத்துப் பேசுகிறார் என்றால்… நன்றாகத் திட்ட போகிறார் என்று அர்த்தம். காப்பாற்ற வேறு வீட்டில் யாரும் இல்லை.
சந்திரன் அவர்கள் உரக் கடைக்குச் சென்றிருக்க, தங்கைகள் இருவரும் கல்லூரிக்கு சென்றிருந்தனர். யஸ்வந்த் பொறியியல் முடித்துக் கோயம்புத்தூரில் வேலையில் இருக்கிறான். சனி ஞாயிறு மட்டுமே வீட்டுக்கு வருவான். சத்யா பதினோராம் வகுப்புப் பொள்ளாச்சியில் படிக்கிறான்.
காமாட்சியும் காலை வேலைகள் முடிந்து, அவர் அறைக்குச் சென்றிருந்தார். இனி குளித்துத் துவைக்க வேண்டிய துணிகளைத் துவைத்துவிட்டு பதினோரு மணிப் போலத்தான் கீழே இறங்கி வருவார்.
“என்னப்பா கூப்பிடீங்களா?” என்ற மகனை ஏற இறங்க பார்த்தவர், “வெண்ணிலாவை கேட்காம நீயாவே அவளுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம்னு சொல்லி இருக்க…” என்றதும்,
ஐயையோ, அதுக்குள்ள மாட்டிகிட்டோமா என விழித்தவன், வெண்ணிலாவுக்கும் தெரிந்திருக்குமே, அவள் எப்படிசமாளித்தாளோ… அவளிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
வெண்ணிலா வீட்டில் இருந்து தகவல் வரும் போது அவன் வீட்டில் இல்லை. அவன் வருவதற்குள் மகேஸ்வரியும் வெண்ணிலாவும் புறப்பட்டுச் சென்றிருந்தனர். இல்லையென்றால் அவனே வெண்ணிலாவிடம் சொல்லி இருப்பான்.
“பேசுடா இப்படிப் பேசாம நின்னா என்ன அர்த்தம்?”
“எனக்கு வேற வழியில்லை. வெண்ணிலாவுக்கு இஷ்டம்னு சொன்னதுனால தான், இந்தக் கல்யாண விஷயத்தைப் பேசவே ஆரம்பிச்சீங்க. இல்லைனா என்னோட விருப்பத்தை இங்க யாரு மதிக்கப் போறா?”
“உன் விருப்பத்தை மதிக்கக் கூடாதுன்னு எங்களுக்கு ஆசைப் பாரு.”
பேச்சுத் திசை மாறுவதை உணர்ந்த அமுதா, கணவனுக்கும் மகனுக்குமான பேச்சில் குறுக்கிட்டார்.
“போதும், இப்ப ஏன் இந்தப் பேச்சு? அதுதான் கல்யாணம் முடிவு ஆகியிருக்கு இல்ல.. அதுக்கான வேலையைப் பாருங்க.”
“பெரிய இடத்தில பொண்ணு எடுக்கனும்னு ஆசைபட்டா போதாதது, அதுக்கு ஏத்த மாதிரி நாமும் செய்யனும்.”
“பதினோரு பவுனுக்குத் தாலி, முகுர்த்த புடவை, கல்யாண மண்டபம் என ஏகப்பட்ட செலவு இருக்கு. ஆனா கையில கொஞ்சம்தான் பணம் இருக்கு. சார் எதுவும் ஐடியா வச்சிருக்காரா?”
சமீபத்தில் தான் வீடு கட்டினார்கள். அதனால் நிறையப் பணம் அதற்கே செலவாகி இருந்தது. பத்தாததற்கு அமுதா மற்றும் காமாக்ஷியின் நகையை வேறு அடகு வைத்திருந்தனர். ஜெய் ஆனந்தனும் லோன் போட்டு வீட்டுக்குப் பணம் கொடுத்திருந்தான்.
மாதாமாதம் லோன் கட்டியது போக ஒரு லட்சம் கையில் இருந்தது. ஆனால் அது பத்தாது என அவனுக்குத் தெரியும். திரும்ப அவன் இன்னொரு லோன் தான் போட வேண்டும். அப்படிப் போட்டால்… வாங்கும் சம்பளம் முக்கால்வாசி கடனை அடைக்கவே சென்று விடும்.
என்ன செய்வது என அவன் யோசனையில் இருக்க, “இந்தக் கல்யாணம் நம்ம கவுரவம். நாம என்ன செய்றோம்னு உங்க அத்தை வீட்ல கண்ணுல விளக்கெண்ணை விட்டுட்டு பார்ப்பாங்க. அவங்க முன்னால நாம இந்தக் கல்யாணத்தை நல்லா நடத்தனும்.” என்றவர், “அமுதா, லாக்கர்ல இருந்து எடுத்து வந்த அகல்யாவோட நகை பீரோவில் இருக்கு அதை எடு.” என்றவர், மனைவி எடுத்து வந்து கொடுத்த நகையை மகனிடம் கொடுத்து, “இதை வச்சுப் பணம் வாங்கிட்டு வா.. அகல்யாவுக்குக் கல்யாணம் செய்ய இன்னும் ஒரு வருஷம் ஆகும். அதுக்குள்ள மீட்டுடலாம்.” என்றார்.Advertisements
தங்கைக்குக் கல்யாணம் முடியாமல் தான் திருமணம் செய்வதே தவறு, இதில் அவள் நகையை வைத்துத் திருமணம் செய்துகொள்ள ஜெய்க்கு மனமில்லை.
Advertisements