கணவனின் ஸ்பரிஸத்தில் சற்று நேரம் அமைதியாக இருந்தவள் அவனை விலக்கி “எனக்கு என்ன பிராப்ளம் அத்வி?” என்றாள் ஹர்ஷிதா யோசனையுடன் .
எப்படி தெரிந்தது என்று அதிர்ந்து மனைவியின் முகம் பார்த்தவனை “குட்டீஸ்க்கு எந்த ஆபத்தும் இல்லையே? நல்லபடியா பிறந்துருவாங்க தானே? சொல்லு அத்வி…. எனக்கு ஏதாவது பெரிய பிரச்சனையா? என் குழந்தைகளை பத்திரமாக பெற்றுத்தர முடியாதவளா நானு? எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை நம்ம குட்டீஸ பத்திரமா உன் கையில் நான் ஒப்படைக்கணும்” அத்விக்கின் பிடியில் தன் ஒரு கரம் இருக்க வயிற்றில் தன்னுள் வித்திட்ட இரு ஜீவன்களிடம் மறு கரத்தை வைத்திருந்த ஹர்ஷிதா உணர்ச்சிப் பெருக்குடன் மூச்சுவிடாது படபடத்தாள் .
அவளை அப்படியே அணைத்து கொண்டவன் “உனக்கு ஒன்றும் ஆகாது. நம்ம குழந்தைகளுக்கும் ஒன்றும் ஆகாது. நான் இருக்கிறேன்ல” அதற்கு மேல் பேச்சு வராமல் போக தன்னவளை இறுகப் பற்றியபடி சுற்று சூழல் மறந்தவனுக்கு பிரகதி இரு முறை கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தது கூட தெரிந்திருக்கவில்லை .
“அண்ணா உன் ரொமான்ஸ் போதும் குட்டீஸ் பயந்திட போறாங்க” சத்தமாக அவள் கூறவும் ஹர்ஷியை விடு வித்தவன் “அவங்க தான் இவளுக்கு உள்ளே இருக்காங்கல்ல” என்றான் அத்விக் சமாளிப்பாய்.
” உள்ளே இருக்கிறார்களா… இன்னும் கொஞ்ச நாட்களில் நீ பேசுவது திட்டுவது கொஞ்சுவது ஹர்ஷியிடம் கெஞ்சுவது எல்லாமே அவர்களுக்கு கேட்கும். மகாபாரதத்தில் சுபத்திரை அபிமன்யுவிற்கு வயிற்றில் இருக்கும்போதே சக்கரவியூகம் பாடம் நடத்திய கதையை அப்பத்தா சொன்னார்கள் தானே….. அது எல்லாமே சயன்டிஃபிகல்லி ப்ரூவன். நீ உன் பசங்களை
உன்னை போலவே போலீஸ் ஆக்கணும் என்று ஆசைப்பட்டால் இப்போது இருந்தே ட்ரை பண்ணலாம். நீ பேசுகிற ஒவ்வொரு பேச்சும் அவர்களுள் ஆழமாக பதியும்”
அத்விக் சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருக்க ஹர்ஷியின் முகம் தெளியாததை கண்டு ‘உண்மையை சொல்லனும்னு சொன்னேன் அதற்காக இப்படியா இவளை குழப்பி வைப்பான்’ அத்விக்கை மனதில் திட்டிய பிரகதி “ஏன் இப்படி இருக்க ஹர்ஷி? உன் ஃபேஸ்ல ஹாப்பினெஸை காணோம் !!” என்றாள் .
சிரிக்க முயன்று தோற்றுப் போன ஹர்ஷிதாவிடம் “அழுமூஞ்சி மம்மி என்று குட்டீஸ் ரெண்டும் பேசிக் கொள்ளும். உனக்கு பயமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத உன் ஒவ்வொரு அசைவும் குழந்தைகளையும் தாக்கும். ஆக்சுவலா இதில் பயப்பட ஒன்றுமே இல்லை.
இப்போது தான் சுலோச்சனா மேம்கிட்ட கன்சல்ட் பண்ணினேன். ஒன்றும் பிரச்சனை இல்லை . கொஞ்சம் கேர் எடுத்து பார்த்துக்கொண்டால் போதும் என்றார்” ஊக்கமளிக்கும் விதமாக உரைத்தாள் பிரகதி.
சுலோச்சனா டாக்டர் கூறிய சிக்கல்களை எடுத்துரைத்தால் இன்னும் பயந்துவிடுவாள் என்று அவர் நல்லவிதமாக கூறியதை மட்டுமே தெரிவித்தாள்.
” எப்படி கேர் எடுத்துக் கொள்வது ரதி?”
கொஞ்சம் தெளிந்தவளிடம் ” உணவு பழக்கவழக்கங்கள் எக்சர்சைஸ் இது பற்றி பிறகு சொல்கிறேன். ஒன்றை மட்டும் மறக்காதே. நீ எப்படி இருக்கிறாயோ அதையே தான் உன் குட்டிஸும் பிரதிபலிப்பார்கள் ஸோ பி ஹேப்பி எவர். அவர்களிடம் பேசிக் கொண்டே இரு… “ஹெல்தி பேபிஸ் நீங்கள்” என்பது போன்ற பாஸிடிவ்வான முறையில். சரி இப்போது அவர்களை பார்க்கலாமா” என்று மீண்டும் ஸ்கேன் பரிசோதனை அறைக்குள் அழைத்துச் சென்றாள் பிரகதி.
கருவிழிகளுக்குள் வீற்றிருக்கும் பாவை போன்று அவள் கர்ப்பபையில் பொதிந்திருந்த இரு மிளகு வடிவ உயிர்களை காட்டி “இதோ குட்டி போலீஸ் ஆஃபீஸர்ஸ்” என்று பிரகதி கூறவும் அவற்றை அதிசயத்துடன் பார்த்த தந்தையானவன் பேச்சிழந்து பரவசத்துடன் நிற்க ஆச்சரியத்துடன் பார்த்த அன்னையவளோ “எப்போ பெருசாவாங்க ரதி” என்றாள்.
” நல்லா சத்தாக சாப்பிடு சீக்கிரம் பெருசாகிடுவார்கள்”
“நாளைக்கு சாப்பிட்டு வரேன் பெருசாக்கி காட்டு” என்று கூறிய ஹர்ஷிதாவை “சரிடி வாயாடி” என்ற பிரகதி இரண்டு மணி நேரம் ஓய்விற்குப் பின் அவளை வீட்டிற்கு அழைத்து செல்லும் படி அத்விக்கிடம் கூறினாள்.
வாசலில் அவள் கேட்ட அல்வா மற்றும் பாயாசத்துடன் வரவேற்ற பிருந்தாவிடம் “போதும்மா ரொம்ப ஸ்வீட் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று ரதி சொன்னாள்” என்று மறுத்துவிட்டாள் ஹர்ஷிதா.
பிருந்தா வற்புறுத்தவும் மருந்திற்கு ருசி பார்த்துவிட்டு அசதியாக இருக்கிறது என்று ரூமிற்குள் சென்று படுத்து கொண்டாள்.
மனைவியின் அருகில் வந்து அமர்ந்த அத்விக் “தூக்கம் வருதா பேபி” கரிசனமாக கேட்க “என்னை பேபினு கூப்பிடாதே” வேகமாக எழுந்து அமர்ந்தாள் ஹர்ஷிதா.
“மெதுவா மெதுவா ” பதறியவன் “ஏன் கூப்பிட கூடாது” என்று அவள் கோபத்திற்கான விளக்கத்தை கேட்டான்.
” நீ ஒரு நாள் பேபின்னு கூப்பிட்டதற்கே இங்கு ரெண்டு பேபிஸ் வந்துட்டாங்க போதும்டா சாமி” என்றாள் தன் வயிற்றில் கை வைத்தபடி.
” ஏன் பேபி உனக்கு ரெண்டு பேபிஸ் போதுமா? நான் அடுத்து ஒரு சிங்கிள் அதற்கடுத்து ஒரு டபுள்ஸ் என ஐந்து பிளான் பண்ணி வச்சிருந்தேன்” சிரிக்காமல் கூறினான் அத்விக்.
” வாட்ட்” என்று கத்தும் போதே குமட்ட பாத்ரூமுக்குள் ஓடினாள். அவளுக்கு வேண்டிய உதவியை செய்து விட்டு அவள் மறுப்பையும் மீறி தூக்கிக்கொண்டு வந்தவன் ஹர்ஷிதாவை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு “இது கொஞ்சம் கூட சரி இல்லைடா அப்ரஸண்டீஸ்” என்று புலம்ப ஆரம்பித்தான் அத்விக்.
யாரிடம் பேசுகிறான் என்று ஹர்ஷிதா குழம்பிய வண்ணம் பார்க்க “நானே என் பொண்டாட்டிகிட்ட ஆடிக்கு ஒரு தடவை ரொமான்ஸ் பண்றேன். அது பிடிக்கலையா உங்களுக்கு… சும்மாவே உங்க ஆத்தா ஆடுவா… இதுல ரெண்டு பேரும் சேர்ந்து சலங்கை கட்டி விடுறீங்க” என தன் குழந்தைகளிடம் நொந்து கொண்டவனை முறைக்க பார்த்து சிரித்தாள்.
” நல்லா சிரி” போலியாக கோபித்தவன் “ஆசையாக இருக்கு குட்டிஸிற்கு கிஸ் பண்ணிக்கட்டுமா” என்று மனைவியை நெருங்கினான்.
பர்மிஷன் கேட்டுட்டு தான் எல்லாத்தையும் செய்வாயா என்பது போல் பார்த்து வைத்தாலும் கணவனை தடுக்கவில்லை.
” குட்டி பேபிஸ் பர்ஸ்ட் ஆஃப் ஆல் உங்க ரெண்டு பேருக்கும் தேங்க்ஸ். நான் கேட்ட உடனே என்னிடம் வந்ததற்கு. நான் சொல்றது எப்பவும் மைண்ட்ல வச்சுக்கோங்க. யூ போத் ஆர் மை சூப்பர் குட் வாரியர்ஸ். லைஃப்ல எந்த மாதிரி சிட்டுவேஷன் வந்தாலும் அதை பாசிட்டிவாக அப்புரோச் பண்ணி உடனே போராடி ஈஸியா வெல்ல கத்துக்கணும் அன்ட் மை 2 அச்சீவர்ஸ் வில் ராக் ஃபாரெவர்” என்று சொல்லி கொண்டிருந்தவனை தன்னிடமிருந்து பிரித்து தள்ளி விட்டாள் ஹர்ஷிதா.
” குழந்தைகளிடம் பேசுவாய் என்று பார்த்தால் உன் டிபார்ட்மெண்ட் ஆள் சேர்ப்பது போல் கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறாய். இதில் பேச பேச…….”
“பேசப்பேச…… சொல்லு அரிசி மூட்டை” கன்னம் சிவந்தவளை வம்பிழுத்தான்.
பேபிஸ கிஸ் பண்றேன்னு ஹர்ஷிதாவை முற்றிலும் அவன் வசத்திற்கு இழுத்த முயன்றவனை முறைத்தபடி வெளியே செல்ல யத்தனித்தாள் .
” என் பேபிஸ் நான் கொஞ்சிறேன். இதுல உனக்கு என்ன ?”
“உன் பேபிஸ்னா பிறந்தவுடன் கொஞ்சிக்கோ”
” அப்போ அது வரைக்கும் எனக்காக பிறந்த பேபியை கொஞ்சிக்கவா”
” வாட்ட்ட்ட் “
“உன்ன வாத்து மாதிரி முழிக்காதே என்று முன்னாடியே சொல்லி இருக்கிறேன்ல… இப்போ ஐ குடின்ட் கண்ட்ரோல் மைசெல்ஃப்” என்று அவளது மச்சத்தை வருடியபடி அச்செவ்விதழ்களை முற்றுகையிட்டான் அத்விக்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள் குலதெய்வ வழிபாட்டிற்காக வேலூருக்கு அனைவரும் சென்றிருந்தனர். சென்னைக்கு மாற்றல் கோரி அத்விக் கேட்ட விண்ணப்பம் மும்பையில் உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
அங்கு அவர்கள் வழக்கமாக குறி பார்ப்பவர் முன் விக்னவையும் அதர்வனாவையும் அமர வைக்க சற்று நேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தவர் பின் “அருமையான பொருத்தம்….. லட்சத்தில் ஒரு பொருத்தம் தான் இதுபோல் அமையும்.. குடும்பத்தை கண்ணாடி பாத்திரமாய் உடைய விடாமல் பத்திரமாய் இருவரும் கையாள்வார்கள்…. உங்கள் வாரிசுகளும் உங்களை உரித்து வைத்தபடி பிறப்பர். உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றவர் கூடுதல் தகவலாக “இந்நேரம் உங்களை எட்டி இருக்கும் இன்ப செய்திக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
குடும்பத்தினர் அனைவருக்கும் அவர் கூற்றில் எல்லையற்ற மகிழ்ச்சி உண்டானது . அடுத்தபடியாக அத்விக்கையும் ஹர்ஷிதாவையும் அவர் முன்னே அமரச் சொல்ல அத்விக் அதற்கு மறுப்பு தெரிவித்தான்.
“உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை. எங்கள் திருப்திக்காக இந்த ஒரு முறை உட்காரு கண்ணா” என்று ஜெகன் சொல்லவும் தான் அமர்ந்தான் .
அத்விக் ஜோடியின் முன் பத்து நிமிடத்திற்கு மேலும் கண் மூடி அமர்ந்திருந்தார் குறி பார்ப்பவர். அதில் பொறுமையின்றி எழ போனவனை “இது சரியில்லை சரியே இல்லை….” என்று தலையை ஆட்டியவாறு கண்களைத் திறக்காது மொழிந்தவரை பார்த்து மீண்டும் அமர்ந்தான் அத்விக்.
“சொல்றதுக்கு கஷ்டமாக இருக்கிறது” என்று படி கண்களை திறந்தவர் “உன் வயித்துல இரண்டு சிசு வளருது ….. அதுல ஒன்னு உன்னை கெட்டியாப் பிடிச்சுக்கும்…. திருப்பி கொடுக்காது… உன் ஆயுசு நிலைக்கணும்னா அதை இப்போதே கலைச்சுரு” என்று சொல்லவும் “நோ” என்று கக்தியிருந்தாள் ஹர்ஷிதா.
அங்கிருந்தோர் அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி . “நான் தான் அப்பவே சொன்னேன் உட்கார மாட்டேன் என்று… இப்போது சந்தோஷமா??” என்று அவசரமாக அவ்விடம் விட்டு எழுந்தான் அத்விக்.
கணவனை தொடர்ந்து எழந்த ஹர்ஷிதா “இல்லை நான் நம்ப மாட்டேன். என் பேபியினால் எனக்கு எந்த ஆபத்தும் வராது. நான் நம்பவே மாட்டேன்” என்று கத்தினாள்.
“ஹர்ஷி கூல். எதற்காக இவ்வளவு டென்ஷன் ஆகுற? நம்மை கஷ்டபடுத்தி அதில் ஆனந்தம் கொள்பவர்களின் பேச்சிற்கு முக்கியத்துவம் கொடுக்காதே . லீவ் இட். நமக்கு ஒன்றும் ஆகாது” என்று மனைவியை சாந்தபடுத்தினான் அத்விக்.
“பின்னாளில் நீங்க கஷ்டபட கூடாது என்று தான் சொல்கிறேன். வேணாம் தாயி இந்த புள்ளை… உன் ரேகைபடி உனக்கு இரண்டு கனிகளை ஆண்டவன் ஏற்கனவே அள்ளி போட்டுட்டான். உன்கிட்ட வந்தே சேரணும்னு விதி இருந்தா இதே உசுரு மறுபடியும் உன்கிட்ட வந்துவிடும். இப்போவே அது உனக்கு கிடைக்கணும்னு ஆசை பட்டீனா அதுவும் அழிஞ்சு உன்னையும் இழுத்துக்கும் . நேரம் சரியில்லை….. புரிஞ்சுக்க தாயி” என்று இத்தனை ஆண்டுகள் அவர்கள் குடும்பத்திற்கு குறி சொன்ன விசுவாசத்துடன் கூறினார்.
அவ்வளவு தான் அத்விக்கின் பொறுமை காற்றில் பறந்தது. பயந்தபடி நின்ற மனைவியை பார்த்ததும் குறி பார்ப்பவரை தாக்க போனவன் அவ்வெண்ணத்தை அடியோடு விட்டுவிட்டு அவளை தனியாக அழைத்து சென்று விட்டான்.
“இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கா ? ” என்று ஜெகன் கேட்டதற்கு “அங்க ஒருத்தன் ஏற்கனவே எழுதி வைச்சுட்டு வேடிக்கை மட்டும் பார்க்கிறான். நம்ம கையில் ஒன்றும் இல்லைங்க” என்றார் குறி சொல்பவர்.
அத்விக்கின் சொற்களில் சற்று தெளிவான முகத்துடன் வந்தவளிடம் “இப்போது பேபிஸ் வேண்டாம் அம்மு. உனக்கு ஆப்ரேஷன் பண்ணி ஆறு மாசம் கூட ஆகவில்லை. அடுத்த வருடம் பெற்று கொள்ளுங்கள்” என்றார் பிருந்தா.
“என்னம்மா பேசுற நீ?” என்று ஆரம்பித்தவளிடம் அமைதியாக இருக்கும் படி சமிக்ஞை காட்டியவன் ” நேற்று தான் அத்தை சென்னையில் பணி மாற்றுதலுக்கு கேட்டிருந்தேன். ஆனால் இப்போது அதற்கு அவசியமில்லை என்று தோன்றுகிறது. ஹர்ஷியை அழைத்து கொண்டு நான் மும்பைக்கே போகிறேன் ” என்றான் அத்விக் உறுதியாக.
“அவசரப்பட்டு யோசிக்காமல் பேசாதே அத்வி. அங்கே நீ ஒற்றை ஆளாக எப்படி அவளை கவனித்து கொள்ள முடியும்” என்ற
ரூபாவிடம்
“இங்கு மட்டும் யார் இருக்கிறீர்கள்? அங்கு இருந்தால் குழம்பி தவிக்காமல் ஒழுங்காகவாவது இருப்பாள்”
“எங்களுக்கு ஹர்ஷி முக்கியம் அத்வி” என்ற ஹரிஹரனிடம்
“உங்களுக்கு எப்படி உங்கள் பொண்ணு முக்கியமோ அதைவிட அதிகமாக எனக்கு என் பொண்டாட்டி முக்கியம் மாமா . என் பிள்ளைகளால் அவளுக்கு எந்தவித பாதிப்பும் வராது” என்றான் ஒருவித ஆவேசத்துடன்.
அத்விக் இவ்வளவு சொன்ன பிறகு ஒருத்தருக்கும் குழந்தைகள் பற்றி பேச முடியாமல் போனது. உம்மென்று வந்த பிருந்தாவிடம் “இப்போது நீ சிரிக்கவில்லை யெனில் அத்வி கூட இப்பவே மும்பைக்கு போய்விடுவேன் ” என்று மிரட்டிய ஹர்ஷிதாவை “புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்துகிட்டு வீட்டையே படுத்தி வைக்குதுங்க” என்றார் மரகதம்.
“அப்போ நான் என் புருஷன் கூட சேர கூடாதா பிக் பிரின்ஸஸ்…… டூ விட்டுடவா? டூ மை அத்தான்….
அம்மா நீயும் அப்பா கூட டூ விட்டுடு ….. அத்தை நீங்களும் பி.டி கூட டூ விட்டுங்க …..
ஆனால் ஒருத்தி மட்டும் அவ புருஷன் கூட டூவே விட மாட்டாளே” என்று தன் தோழி அதர்வனாவை வம்பிழுக்க “அம்புட்டு லவ்வோ” என்று அத்ரிஷ் விக்னவை பார்த்து கண் அடித்தான்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை சி.டி ….. பழம் விட்டால் தானே டூவே விட முடியும்…. என்றாவது விக்கி அத்துவிடம் நேரில் பேசி நீ பார்த்திருக்கிறாயா!!! அப்படி ஓர் எட்டாவது அதிசயத்தை பார்த்தால் உடனே அதை வீடியோ எடுத்து விடு… வரலாற்றை அடுத்த சந்நதியினர் கண்டு களிக்கட்டும்….” என்றவளை அடிக்க துரத்தினாள் அதர்வனா.
“பார்த்து பார்த்து… ” ஒரு சேர ரூபாவும் பிருந்தாவும் கத்த விக்னவ் முதலாளாய் சென்று மனைவியையும் தங்கையையும் தடுத்து நிறுத்தினான்.
பிறகு மரகதம் தோழிகள் இருவரையும் குல தெய்வத்தை பிரார்த்தனை செய்ய சொல்லிவிட்டு தனித்தனியே பொங்கல் வைக்கும் படியும் கூறினார்.
“எங்க மம்மி சிரிச்சா தான் நான் பொங்கல் வைப்பேன். இல்லாவிட்டால் அது ஸ்வீட்டாவே இருக்காது” என்று இனிப்பை அள்ளி தெளித்து ஐஸ் வைத்தவளை “ஒழுங்காக போய் வைடி வாயாடி” என்று சிரித்திருந்தார் பிருந்தா.
” உனக்கு குட் நியூஸ் சொன்னதற்கு இவ்வளவு பெரிய பனிஷ்மென்ட்டா அண்ணா?” என்று ஹர்ஷிதா பொங்கல் வைப்பதை பார்த்தபடி அப்போது அங்கு வந்த பிரகதி அத்விக்கிடம் வினவினாள்.
” என் குட்டீஸ் கைடன்ஸ்ல அந்த பொங்கல் எவ்வளவு டேஸ்ட்டா இருக்கப் போகுதுன்னு மட்டும் பாரு ரதி”
“ஐயோ அண்ணா இப்படி அப்ஸைட் டவுனாவா கவுந்து கிடப்ப…. ஹர்ஷியை ஓட ஓட விரட்டிய பழைய அத்வி அண்ணா எங்கே… எங்கே…”
“அவனை மொத்தமா அவகிட்டே அடகு வைத்து விட்டேன்”
” நீயா பேசியது என் அண்ணா நீயா பேசியது….” பிரகதி பாடவும் நன்றாக சிரித்துவிட்டான் அத்விக்.
” ரதி இந்த அடகு ரகசியம் நமக்குள்ளே இருக்கட்டும்… டீல்” என்று தம்ஸ் அப் காட்ட பிரகதி “இந்த காக்கி சட்டை ரகசியத்தை நான் காப்பாற்றுகிறேன் அண்ணா… நீ எதற்கும் அஞ்சாதே” என்ற வசனத்தை கோர்த்தாள்.
அத்விக்கும் பிரகதியும் பேசி சிரித்ததை அதர்வனாவின் அருகில் நின்றவாறு பார்த்துக் கொண்டிருந்த ஆர்யனின் மனதில் அவர்களது கல்லூரி காலம் நினைவிற்கு வந்தது. அத்தோடு பிரகதி பேசினால் தனக்கு என்ன பேசாவிட்டால் தனக்கு என்ன என்று ஆர்யன் மனது ஒரு குட்டி பட்டிமன்றம் நடத்தியது.
கல்லூரி சமயத்தில் ஆர்யனின் காரில் ஏற மறுத்த பிரகதி பிரஷனின் வண்டியில் ஏற தயங்கியதில்லை. ஆர்யனிடம் எவ்வளவு சகஜமாக பழகினாளோ அதே அளவில்தான் பிரஷனிடமும் நட்பை பொழிந்தாள். அதுவும் பிரஷனின் காதலை அவள் மறுத்திருந்தபோதும் அவனையும் அவனது நட்பையும் என்றும் விட்டுக் கொடுத்தாளில்லை.
அப்படி பிரகதி பிரஷனுடன் பேசும்போது ஏற்பட்டிராத பொறாமை உணர்வா இப்போது அவள் அத்விக்குடன் உரிமையுடன் பேசும்போது தனக்கு தோன்றி விட போகிறது…… என்று ஆர்யனின் மனசாட்சி கேட்ட கேள்விக்கு இல்லை அப்போது இயல்பாக பழகியவளின் இப்போதைய புறக்கணிப்பு தான் வலிக்கிறது என்றது மனம் . அந்த வலி அவளின் மீது ஏற்பட்டிருந்த சிறு கோபத்தை அதிகரிக்கச் செய்து பேசாட்டி போ!!! நீயாக பேசும் வரை நானும் இனி பேசப்போவதில்லை என்று ஆர்யனை அவளிடம் திருப்பிக் கொள்ளவும் வைத்தது .