எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 4
ஜெயராமன் மகேஸ்வரி முதல் மாடியில் இருந்த பால்கனியில் நின்று தான் பேசிக்கொண்டிருந்தனர். இரண்டாம் மாடி பால்கனியில் நின்று அவை அனைத்தையும் ஜெய் கேட்டிருந்தான். இரவின் நிசப்தத்தில் அவர்கள் பேசியது அவனுக்குத் தெளிவாகவே கேட்டிருந்தது.
சின்ன வயதில் இருந்தே ஜெய்க்கு வெண்ணிலாவை பிடிக்கும். பாட்டி அவளை நன்றாகக் கவனித்துக் கொள்வதைப் பார்த்து தான் அவனும் ஆரம்பித்தான். எப்போதுமே அவள் முகம் வாடுவதை அவனால் பொறுக்க முடியாது. ஆனால் எப்போது அவள் மீது வைத்திருந்த பிரியம் காதலாக மாறியது என்பது அவனுக்கே தெரியாது.
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி படித்துக் கொண்டிருந்தான். விடுதியில் தங்கித்தான் படித்தான். எல்லோரையும் போலக் கல்லூரி வாழ்க்கை என்பது அவனுக்கும் இனிமையானவையே…. உடன்படித்த தோழியின் பார்வை தன் மீது நட்பையும் தாண்டி ஆர்வமாகப் படிவதை உணர்ந்தான்.
மனதில் பட்டாம்பூச்சி பறப்பதை விட்டு, ஒருவிதமான சங்கடமே எழுந்தது. அதன் பிறகு அந்தப் பெண்ணைப் பார்ப்பதையும் தவிர்த்தான். அந்த முறை அத்தை வீட்டிற்குச் சென்ற போது வீட்டில் கற்பகம் இல்லை. எப்போதும் கொடுக்க வந்ததைக் கொடுத்துவிட்டு உடனே கிளம்புபவன், இந்தமுறை அத்தை பரிமாற உணவு உண்டான். வெண்ணிலாவும் அவனோடு உணவு அருந்தினாள்.
ஜெய் இளநிலை படிப்பின் இறுதி ஆண்டிலும், வெண்ணிலா ஒன்பதாம் வகுப்பிலும் இருந்தனர்.
மகேஸ்வரி, காலை உணவுக்குத் தோசையும், கறிக் குழம்பும் செய்திருந்தார். உண்டு விட்டு கணவர் வெளி வேலையாகச் சென்றிருக்க, மகனும் பாட்டியை அத்தை வீட்டில் விடச் சென்றிருந்தான். ஞாயிறு அன்று தான் நிதானமாகத் தலைக்கு எண்ணெய் வைத்து வெண்ணிலா குளிப்பாள். அதனால் நிதானமாகத் தான் உண்ணுவாள்.
அவள் மட்டும் உண்ணாமல் இருக்க…. அண்ணன் மகன் வருவது மகேஸ்வரிக்குத் தெரியாது. ஜெய்யை பார்த்ததும் வேகமாகப் பூரிக்கு மாவு பிசைத்து சுட்டு எடுத்தவர், மகளையும் அழைத்து இருவருக்கும் ஒன்றாகப் பரிமாறினார்.
முதல் தடவை பரிமாறி விட்டு பூரி சுட மகேஸ்வரி உள்ளே சென்றிருக்க… குழம்பு கொஞ்சமாக இருந்ததால்… ஜெய்க்கு இருக்கட்டும் என்று வெண்ணிலா லேசாகத் தொட்டுக் கொண்டு உண்ண, அதைக் கவனித்த ஜெய் ஏன் என்று கேட்க, வெண்ணிலா சும்மாதான் என்றாள்.
ஜெய் குழம்பை அவள் பக்கம் தள்ளி வைக்க, வெண்ணிலா ஜெய் பக்கம் நகர்த்தி வைத்தாள். இப்படியே இருவரும் மாறி மாறிச் செய்ய… இது வேலைக்கு ஆகாது என நினைத்த ஜெய், தனக்குத் தேவையானதை போட்டுக் கொண்டு கொடுக்க… அதன் பிறகே வெண்ணிலா எடுத்துக் கொண்டாள்.
“பிடிவாதம்.” என ஜெய் சொல்ல.. வெண்ணிலா அவனைப் பொய்யாக முறைத்தபடி உண்டாள்.
“ஜெய், மதியம் சாப்பிட்டு போ டா…” என மகேஸ்வரி சொல்ல… அவனும் சரியென்றான்.
உண்டு முடித்து ஜெய் டிவி பார்த்துக் கொண்டிருக்க…. மகளின் தலையில் இருந்த துண்டை உருவிய மகேஸ்வரி, மகளுக்குத் தலை துவட்ட ஆரம்பிக்க… “இது கூட நீ பண்ண மாட்டியா?” என ஜெய் கேட்க…
“நிறைய முடி இருக்கு இல்ல… கை வலிக்குது.” என்றாள். அவளைப் பார்த்து ஜெய் சிரித்தான். உண்மையில் வெண்ணிலாவுக்கு நல்ல நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் தான்.Advertisements
அப்போது கற்பகம் வந்து விட… இவர்கள் மூவரும் ஒன்றாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து முகம் மாறினார்.
Advertisements