*4*
பிடிவாதம். பிடிவாதம். பிடிவாதம். கொள்கையை விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து என்ன பயன்? அவள் விரும்பியது கிடைக்கவில்லையே. தச்சன் இனி தான் வேலை பார்க்கணும் என்று சொல்லியிருக்க, அதை அப்படியே தந்தையிடம் கடத்தி என்திது என்று கேட்க, அவரோ சாவுகாசமாய்,
“அவங்க வழிவழியா விவசாயம் செய்யுற குடும்பம். குடந்தை பக்கமா தான் இருக்காங்க. வசதி குறைவு தான் என்றாலும் மட்டுமரியாதை தெரிந்த பாரம்பரிய குடும்பம்.” என்று அவர் கைவிரிக்க, குந்தவைக்கு வந்த கோபத்தில் அங்கிருந்த டீவி ரிமோட்டை சுவற்றில் விசிறியடித்தாள்.
“குந்தவை.” தந்தையின் குரல் உயர, சுமதியின் குரலும் உயர்ந்தது. 
“ஆரம்பத்திலேயே குந்தவை தனக்கு என்ன தேவை, என்ன எதிர்பார்ப்பு இருக்குனு தெளிவா சொல்லிட்டா தானே? அதற்கு ஏற்ற மாதிரி பார்க்காம உங்க விருப்பத்திற்கு பார்த்திருக்கீங்க? அதுவும் உண்மையை மறைச்சு பரிசமும் போட்டாச்சு.”
மனைவி குரல் உயர, நந்தனும் பொறுமையை உடைத்து, “அவளுக்கு என்ன தெரியும் இதை பற்றியெல்லாம்? வானதிக்கும் சாமர்த்தியம் பத்தல, அவ வீட்டுக்காரனுக்கும் சாமர்த்தியம் பத்தல. நிலைமையை சமாளிக்க தைரியம் இல்லாமல் அப்படி பண்ணிட்டான். அதற்காக ஒட்டுமொத்த வேளாண் சமுதாயமே வளர்ச்சி இல்லாம, வாழ வக்கில்லாம உயிரை மாய்ச்சிக்குறாங்கனு முத்திரை குத்திவிட முடியுமா? வழிவழியா நாம கூட வேளாண்மை செய்யும் குடும்பம் தான். ஏதோ என் அப்பா வெகுளியா இருந்ததால உழுநிலம் எல்லாத்தையும் பேக்டரி கட்டுறேன்னு சொல்லி ஏமாற்றி எழுதி வாங்கிட்டாங்க. நாங்களும் அப்படியே வேற வேலைனு வந்துட்டோம்.”
“உங்க கதையெல்லாம் எனக்கு வேண்டாம். விவசாயம் செய்றவங்க எல்லாம் வாழ்ந்திட்டு தான் இருக்காங்க, நான் இல்லைனு சொல்லல. எனக்கு வேண்டாம்னு தான் சொல்றேன். இன்னொரு வானதியா நிலையில்லாத வாழ்க்கையை வாழ எனக்கு விருப்பமில்லை. மற்ற வேலையில் இருந்து சம்பளம் குறைவென்றாலும் மாசா மாசம் வருமானம் வரும் என்ற நம்பிக்கையிலாவது நிம்மதியா வாழ்வேன். இந்த இடம் வேண்டாம்னு அவங்ககிட்ட சொல்லிடுங்க.” என்றாள் வெட்டு ஒன்றாய் துண்டு ரெண்டாய்… 
“இனி வேண்டாம் என்று மறுக்கவெல்லாம் முடியாது. பரிசம் போட்டாச்சு.”
“பரிசம் தானே போட்டிருக்கு. இன்னும் கல்யாணம் ஆகலையே. இப்போவே சொல்றது தான் நல்லது. நீங்க சொல்றீங்களா இல்லை நான் சொல்லவா?” என்று தான் பார்த்தாள் குந்தவை. குந்தவை மறுப்பாள் என்று தெரிந்த நந்தன் ஏற்கனவே யோசித்து வைத்திருந்தார், “நீ கேட்கிற மாதிரி பெரிய வேலையில் பெருநகரில் இருக்கும் மாப்பிள்ளை பார்த்தால் வரதட்சணை அதிகமா கேட்பாங்க, அதைச் செய்ய சாதாரண எழுத்தர் வேலையில் இருக்கும் இந்த தகப்பனுக்கு வக்கில்லை. இவங்க தான் உங்களால முடிஞ்சதை செய்யுங்க போதும்னு சொல்லியிருக்காங்க. நான் எதிர்பார்த்த மாதிரியே வேளாண்மை பார்க்கும் குடும்பம். இப்படி எல்லாம் தோதாய் அமையறது எவ்வளவு பெரிய விஷயம். சின்ன வேலையில் இருப்பவரைவிட ஊர் வாழ உணவு உற்பத்தி செய்யும் உழவனுக்கு உன்னை சந்தோசமா கட்டிக்கொடுக்கலாம். புன்னியமாவது சேரும்.” என்று அவர் தரப்பு காரணத்தை மிகைப்படுத்தி பேச, பொங்கிவிட்டாள் குந்தவை.
“வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம். அந்த சட்டத்தை பயன்படுத்தி வரதட்சணை கொடுக்காமல் நமக்கு ஏத்த மாதிரி வரன் பார்த்துக்கலாம். இதெல்லாம் ஒரு காரணம்னு என்னை சமாதானப்படுத்த பார்க்காதீங்க. ரெண்டு புள்ளைங்களோட இந்த வயதிலேயே அநாதரவான நிற்கும் வானதியின் வலியை, எதிர்காலம் குறித்த பீதியை அருகில் இருந்து பார்த்திருக்கேன். ஒவ்வொரு நிமிடமும் எப்படி இனி வாழ்க்கையை சமாளிக்க போறோம், பிள்ளைங்களுக்கு அப்பா என்கிற உறவின் ஏக்கத்தை தீர்த்து எப்படி ஒற்றை ஆளாய் இரு பிள்ளைகளையும் வளர்க்கப் போகிறோம்னு தினம் தினம் பயந்துட்டு இருக்கா அவ. படிச்சி முடிச்சதும் கல்யாணம் செய்யாம அவளை வேலைக்கு அனுப்பியிருந்தா கூட நிமிர்ந்திடலாம் என்கிற தைரியம் அவளுக்கு இருந்திருக்கும். அதையும் செய்யாம விட்டுட்டு இப்போ என்னையும் அதே குழியில் தள்ளப் பார்க்குறீங்க. கிராமத்தில் போய் நான் என்ன வேலை தேடிக்க முடியும்? வாழ்க்கை அமைத்து கொடுக்குறோம் என்கிற பெயரில் எங்களோட சிறகை வெட்டி மறைமுகமா தன்னம்பிக்கையை அழிச்சி கணவன் என்றவனையே சார்ந்திருக்க வைக்குறீங்க.” என்று கத்திவிட்டு அறைக்கு வந்த குந்தவை உடனேயே தச்சனுக்கு அழைத்து தன்னிலையை விளக்க, அவனுடனான பேச்சுக்கள் வளர்ந்து சண்டையில் முடிந்து அதுவேறு ஆத்திரத்தை கிளப்பியது.
‘என்ன தைரியம் இருந்தா என்னையே டி போட்டு கூப்பிடுவான்? என்கிட்டையே சவால் விடுவான். அவனா நானான்னு பார்த்துடுறேன்.’ என்று கருவிக்கொண்டிருந்தவள் மீது சட்டமாய் ஏறி அமர்ந்தான் அறிவழகன்.
அவனை தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டவள், “டேய் குட்டிப்பையா என்னடா பொசுக்குன்னு அவனைப் போய் அப்பான்னு கூப்பிட்டுட்டு இருக்க. அவனும் அவன் பேரும், மூஞ்சியும், பேச்சும்… சகிக்கல. அவன் நமக்கு வேண்டாம்டா. இனி அவனை பார்த்தால் தூக்குனு போய் அவன்கிட்ட நின்ன சித்தி உன்கூட டூ விட்டுருவேன்.” என்று அவனை மிரட்ட, ஒருவயது அறிவழகனுக்கு என்ன புரிந்துவிடப் போகிறது? சித்தி ஏதோ சொல்கிறாள் என்று மட்டும் அவளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.
வெளிக்கூடத்தில் குந்தவையின் பேச்சில் தளர்ந்து அமர்ந்துவிட்டார் நந்தன். ‘நான் தன்னம்பிக்கையை அழிக்கிறேனா? என் பொண்ணுங்க நல்லா இருக்கணும்னு தானே நினைச்சேன். அவங்களுக்காக தானே எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சு செய்றேன்.’ என்று எண்ணங்கள் அலைபாய, இதயம் படபடவென அடித்துக்கொண்டு வலிப்பது போன்றிருக்க அவர் உடலும் வியர்க்கத் துவங்கியது. அதை கவனித்த சுமதி பதறி அவரை நெருங்கி அவர் நெஞ்சை நீவிவிட,
“ஒன்னுமில்லை சுமதி, ப்ரெஷர் கூடியிருக்கும். காலையில் மாத்திரை போட மறந்துட்டேன், நீ போய் எடுத்துட்டு வா.” என்று நந்தன் மனைவியை அனுப்ப நிமிடத்தில் மாத்திரையுடன் திரும்பி வந்தார் சுமதி. மருந்து உள்ளே இறங்கவும் வலி மட்டுப்பட்டு முகம் சற்று தெளிந்தது.
“கிளம்புங்க டாக்டரை ஒருஎட்டு பார்த்துட்டு வந்துடுவோம். இப்படியெல்லாம் இதுவரை உங்களுக்கு ஆனதே இல்லை.” என்று சுமதி பதற, அவர் கைபிடித்து தடுத்த நந்தன், “அதெல்லாம் ஒன்றுமில்லை.” என்று வாய்மொழியாய் சொல்ல, ஒன்றும் இருக்கக்கூடாது என்று மனமும் மீண்டுமொருமுறை தைரியம் சொல்லிக்கொண்டது.
“வானதி எங்கே? ஆளையே காணோம். குந்தவை பேசியதை கேட்டா மனசு வருந்துவா.” என்று பேச்சை மாற்ற,
“குந்தவையை பொண்ணு பார்க்க வராங்கனு பக்கத்து வீட்டில் வரிசை தட்டு, விரிப்பெல்லாம் வாங்குனோம்ல அதை கொடுத்துட்டு வரச்சொல்லி அனுப்பியிருக்கேன்.” என்று சுமதி சொல்லிக் கொண்டிருக்க, வானதி சரியாக அந்த நேரம் உள்ளே வந்தாள்.
“பெரியம்மாவை இன்னும் அதிக நேரம் இருக்கச் சொல்லியிருக்கலாம். நீ ஏன் போகவிட்ட? அவங்க இருந்திருந்தா அவங்களே வெளியில் முடிக்க வேண்டிய வேலையெல்லாம் முடிச்சிருப்பாங்க.”
“எதுக்கு நீ அறைக்குள்ளேயே அடைந்து கிடைப்பதற்கா?” என்று சுமதி அவளை குற்றம்சாட்டும் பார்வை பார்க்க, கப்சிப்பென்று அறைக்குள் புகுந்துகொண்டாள் வானதி.
***
“காலையிலேயே எங்க கிளம்பிட்ட தச்சா?” என்றும் இல்லாத திருநாளாய் காலை ஏழு மணிக்கே குளித்து தயாராகி உண்ண அமர்ந்திருக்கும் தச்சனை கண்டு ஆச்சர்யம் தான் நீலாவுக்கு.
“மயிலாடுதுறைக்கு தான்.” என்றான் மர்மப்புன்னகையை பதிலுடன் சேர்த்து வீசி.
மகனின் துள்ளலுக்கு மாறாய் எச்சரிக்கையாய் வந்தது நீலாவின் குரல், “அங்கேயா? அங்கே எதுக்கு?”
“இதென்ன கேள்வி நீலாவதி? நாம தான் இப்போ அந்த ஊரோட சொந்தமாகிட்டோமே. அப்பப்போ போய் பார்த்துட்டு வந்தால் தான் உறவு வளரும்.” என்றான் சீட்டியடித்தபடி.
இப்போது நீலாவின் பார்வை கூர்மையாகி அவனின் வெளித்தோற்றத்தை ஆராய்ந்தது. நேற்று கிளம்பியது போலவே இன்றும் சிரத்தை எடுத்து கிளம்பியிருக்கிறான் என்ற நிதர்சனம் உரைக்கவும் உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது.
“அங்கெல்லாம் சும்மா சும்மா போகக்கூடாது தச்சா.” என்று எச்சரிக்க,
தட்டில் பழையசோறு பரிமாறப்பட, அதை உள்ளே தள்ளிக்கொண்டே, “ஏனாம்?”
“கல்யாணம் ஆகும்வரை நீ அந்த பொண்ணை பார்க்கக்கூடாது.”
“நீ என்னத்த புதுசா சொல்லுற? இந்த காலத்திலும் இதையெல்லாம் பார்த்துகிட்டு. அவ கிடக்குறா நீ போய் பேத்தியை பார்த்துட்டு வா.” எப்பொழுதும் போல நீலா மறுக்க அதையே ஆதரித்தார் மங்களம். 
“கிழவினா கிழவி தான். என் வண்டிலேயே தான் போறேன், சீக்கிரம் வந்துருவேன். குணாவையும் கூட்டிட்டு தான் போகப் போறேன். அவனும் குந்தவையை பார்க்கணும்னு விருப்பப்படுறான்.” என்று செய்தி சொல்லியவன் உண்டு முடித்துவிட்டு பூசையறைக்கு அருகில் சிறியதாய் இருக்கும் அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த பீரோவைத் திறந்து பணத்தை எடுக்க, அவனை தொடர்ந்து வந்த நீலா அதைப் பிடுங்கி,
“இப்போ எதுக்கு பணம் எடுக்குற?””
அதை திரும்பப் பிடுங்கியவன், “இதென்ன புதுசா கேக்குற? வெளியே போகும் போது எப்போதும் எடுக்குறது தானே?”
“பார்த்து செலவு பண்ணு. கல்யாண செலவெல்லாம் இருக்கு.” என்று அவன் கேள்வியை நிராகரித்துவிட்டு வெளியேறிவிட்டார் நீலா. தச்சன் தான் என்னதிது புதிதாய் என்று பார்த்து நின்றான்.
***
“காலையிலேயே கிளம்ப வச்சி எங்க அழைச்சிட்டு வந்திருக்க என்னை?” பைக்கை விட்டிறங்கி எதிரே இருந்த வீட்டினை ஆராய்ச்சியாய் பார்த்தான் குணா.
வண்டியின் சைட் ஸ்டேண்டை போட்டவன் கூலர்ஸையும் கழற்றி சட்டை பையினுள் வைத்துவிட்டு, “இதுதான் குந்தவை வீடு. வா…” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.
“மாமா…” என்ற விளிப்புடன் உரிமையாய் உள்ளே நுழைந்தவனை அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த நந்தன் தான் எதிர்கொண்டு வரவேற்றார்.
“என்ன தம்பி வீடு வரைக்கும்?”
பேச்சில் நேற்றிருந்த நெருக்கம் குறைந்துவிட்டது போல தோன்றியதை ஒதுக்கி தள்ளிவிட்டு, “இந்த பக்கம் வேலையா வந்தேன். அப்படியே உங்களையும் குந்தவையையும் பார்த்துட்டு போலாம்னு தான் மாமா.” என்க, அவசரமாக இரண்டு நாற்காலியை எடுத்துப் போட்டார் நந்தன். இவர்களின் அரவத்தில் சமையலறையில் இருந்த சுமதியும் வானதியும் வந்து இவர்களை வரவேற்றுவிட்டு மீண்டும் உள்ளே புகுந்து கொண்டனர்.
கூடத்தில் நந்தன் அருகிலேயே விளையாடிக் கொண்டிருந்த அறிவழகன் விளையாட்டு சாமானை அப்படியே போட்டுவிட்டு தச்சனின் மீது ஏறிக்கொண்டான். நேற்று போலத் தயங்காமல் அவனை தூக்கிக்கொண்டவன் தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சாக்லெட்டை எடுத்துக்கொடுக்க, சங்கடமாகிப் போனது நந்தனுக்கு. இந்த திருமணம் நடக்குமா என்பதே கேள்விக்குறியாகி இருக்க தச்சனிடம் பிள்ளைகள் ஒட்டிக்கொள்வது எங்குபோய் முடியப்போகிறதோ என்று தான் இருந்தது.