எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 2
திருமணத்திற்குப் பத்திரிகை அடித்து வந்துவிட்டது. அதைக் குல தெய்வ கோவிலில் வைக்க இரண்டு குடும்பமும் பொள்ளாச்சி அருகில் இருக்கும், அவர்கள் பூர்வீக ஊருக்கு சென்றனர்.
வேலை இருக்கிறது எனச் சொல்லி கரன் வரவில்லை. வெண்ணிலாவை மட்டும் தனியே வீட்டில் விட முடியாது என அவளையும் அழைத்துக் கொண்டு இரு குடும்பமும் சென்றனர். அப்படியே திரும்பி வரும் வழியில் அவர்கள் சொந்த ஊரில் இருக்கும் உறவினர்களுக்குப் பத்திரிகை வைத்து விட்டு வந்து விடலாம் என எண்ணம்.
இன்னும் திருமணத்திற்கு ஒரு மாதமே இருக்க… சற்றுத் தொலைவில் இருப்பவர்களுக்கு வைத்து விட்டு வந்தால்… உள்ளுரில் இருப்பவர்களுக்குப் பத்து நாட்கள் கழித்துக் கொடுக்க ஆரம்பிக்கலாம் என ராஜகோபால் நினைத்து இருந்தார்.
விடியற்காலை நான்கு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி பொள்ளாச்சி அருகில் இருக்கும் அவர்கள் கோவிலுக்கு எட்டு மணிக்கு வந்து விட்டனர். வெண்ணிலாவின் அண்ணன் யுவராஜ் தான் காரை ஓட்டிக் கொண்டு வந்தான்.
கோவிலில் பொங்கல் வைத்து படைத்து பூஜை முடித்து, கொண்டு வந்த இட்லியோடு, பொங்கலையும் வைத்து உண்டு விட்டு, சிறிது நேரம் கோவிலில் இருந்து ஓய்வு எடுத்தனர். பிறகு அங்கிருந்து கிளம்பி, முதலில் மகேஸ்வரியின் பிறந்த வீடு வரும் என்பதால்… அங்கே பத்திரிக்கை வைக்கச் சென்றனர்.
வெகு நாட்கள் கழித்துப் பாட்டி வீட்டிற்குச் செல்லும் குஷியில் வெண்ணிலா இருந்தாள்.
செல்லும் வழியாவும் சின்ன வயது நினைவுகள் தான். பாட்டியின் வீடு பெரிதாக இருக்கும். அந்தக் கால வீடு. வாசலில் திண்ணை, நடுவில் திறந்த வடிவிலான முற்றம், பின் கட்டில் பெரிய கிணறு எனப் பழமை மாறாமல் இருக்கும்.
முற்றத்தில் அந்தக் காலப் பெரிய வெள்ளை ஆட்டுகல் இருக்கும். சின்ன ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு ஒருவர் மாவு அரைக்க மற்றவர் தள்ளி விடுவர்.
ஒரு நாள் கிரைண்டர் பழுது என அத்தை உரலில் ஆட்ட, நான் தள்ளி விடுறேன் என வெண்ணிலா ஆசைப்பட்டுக் கேட்க, அமுதாவும் சரியென்றார். அப்போது அவள் ஏழாம் வகுப்பில் இருந்தாள். அமுதா அரைக்க, வெண்ணிலா அரிசியைத் தள்ளி விட்டுக் கொண்டிருந்தாள். அப்போது அவள் தெரியாமல் விரலை உரலில் கொடுத்து விட, அமுதாவும் கவனிக்காமல் அவள் விரலை நசுக்கி விட்டார்.
வெண்ணிலா வலியில் துடிக்க, அமுதா தண்ணீர் இருந்த பாத்திரத்தில் அவள் கையை விடச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த நேரம் வெளியில் இருந்து வந்த ஜெய், என்ன நடந்தது எனக் கேட்டு தெரிந்து கொண்டவன், வெண்ணிலாவின் கண்ணில் கண்ணீரை பார்க்கவும் தாங்க முடியாமல், “அதுதான் வீட்ல கிரைண்டர் இருக்கு இல்ல… பிறகு ஏன் இதுல ஆட்டி, அந்தப் பிள்ளை கையை நசுக்கிறீங்க. இது இருந்தா தானே ஆட்டுவீங்க.” என்றவன்,
எல்லோரும் கத்த கத்த, ஆட்டும் குழவியைத் தூக்கி சென்று பின்கட்டில் போட்டு விட்டு வர… அவன் அடிக்கும் கூத்தை பார்த்து, வீட்டில் இருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பு.
இப்போது வீடு எப்படி இருக்கிறது எனத் தெரியவில்லை. பாட்டி இறந்த பிறகு வீட்டை இடித்துக் கட்டினார்கள். ஆனால் வெண்ணிலா இன்னும் அந்த வீட்டை பார்க்க வில்லை.
மதியம் போலக் கோட்டூர் சென்று சேர்ந்து விட்டனர். காரில் இருந்து இறங்கி வீட்டை பார்த்தவளுக்கு ஒரே பிரமிப்பு தான். ஓட்டு வீடு இப்போது இரண்டு அடுக்குகளைக் கொண்ட மாடி வீடாக இருந்தது.
மற்றவர்களுக்கும் அப்படித்தான். இப்படி வீடு பெரிதாக இருக்கும் எனக் கற்பகமே எதிர்பார்க்கவில்லை. வீடு பால் காய்ச்சும் போது மகேஸ்வரி மட்டுமே வந்திருந்தார்.
மகன் தலையெடுத்ததும் நல்ல வசதிதான் போல…. என நினைத்தபடி கற்பகம் உள்ளே சென்றார். வீட்டில் அனைவரும் இவர்களை ஆவலாக வரவேற்றனர்.
அண்ணன் தம்பி இருவரும் இன்னும் கூட்டுக் குடும்பமாக இருந்தனர். மூத்தவர் ஜெயராமன் அவர் மனைவி அமுதா அவர்களது பிள்ளைகளில் மூத்தவன் ஜெய் ஆனந்தன், இளைய மகன் யஸ்வந்த், கடைசி மகள் அகல்யா அதே போல இளையவர் ஜெய்சந்திரன் அவர் மனைவி காமாக்ஷி அவர்களது பிள்ளைகளில் மூத்தவள் ராதிகா, இளையவன் சத்யா எனப் பெரிய குடும்பம் அவர்களுடையது.
முன்தினமே வருதாகச் சொல்லி இருந்ததால்… விருந்தும் தயராகிக் கொண்டிருந்தது. முதலில் பத்திரிகை கொடுத்து விடலாம் எனப் புதுத் தாம்பளத்தில் பூ, பழங்கள் மற்றும் இனிப்போடு பத்திரிக்கையை வைத்து ராஜகோபாலும் மகேஸ்வரியும் தம்பதி சகிதமாக நின்று ஜெயராமன் ஜெயச்சந்திரன் இருவரிடமும் பொதுவாகக் கொடுத்தனர்.
“எல்லோரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்திடுங்க.” என அன்பரசி சொல்ல,
“நம்ம வீட்டுக் கல்யாணம் இல்ல அதெப்படி நாங்க இல்லாம. அம்மா இருந்திருந்தா ரொம்பச் சந்தோஷப்பட்டிருப்பாங்க.” என்றார் ஜெயராமன்.
“ஆமாம் அண்ணா, வெண்ணிலா கல்யாணத்து வரையாவது அம்மா இருந்திருக்காலாம்.” என்றார் மகேஸ்வரியும்.
“சரி இனி அதைப் பேசி என்ன ஆகப்போகுது. சாப்பாடு எடுத்து வைக்கிறேன். எல்லோரும் சாப்பிட வாங்க.” என அமுதா சொல்ல, தயாராக இருந்த உணவுகளை உண்டனர்.
உணவருந்தி முடித்ததும் மகேஸ்வரியின் தங்கை மற்றும் இன்னும் சில சொந்தங்களுக்குப் பத்திரிகை வைக்க வெண்ணிலாவை தவிர மற்றவர்கள் கிளம்பி செல்ல.. அதன் பிறகு தான் வெண்ணிலாவால் இயல்பாக இருக்க முடிந்தது.
ஜெய் மட்டும் தான் அங்கே இல்லை. “ஜெய் அத்தான் எங்க?” என அவள் கேட்க, அங்கே ஒரு சங்கடமான மௌனம்.
“இப்ப சாப்பிட வருவான்.” எனச் சொல்லிவிட்டு ஜெயராமன் உள்ளே சென்று விட்டார். அன்று சின்ன அத்தையின் ஒன்று விட்ட அண்ணன் மகள் கவிதாவும் இருந்தாள்.
அகல்யாவோடு வெண்ணிலா வீட்டை சுற்றிப் பார்த்தாள். முன்பு இருந்த ஓட்டு வீடு அவளுக்கு மிகவும் பிடிக்கும். பாரம்பரியமாக இருக்கும்.
“அந்த வீடு ரொம்ப நல்லா இருக்கும் இல்ல… முத்தம் எல்லாம் வச்சு.” என வெண்ணிலா பழைய நினைவில் இருக்க…
“இங்கேயும் இருக்கே…” என்ற அகல்யா உணவு அறையின் பக்கவாட்டு கண்ணாடி கதவைத் திறக்க, இப்போது இருக்கும் காலத்திற்கு ஏற்ற வகையில் முற்றம் இருந்தது. சுற்றிலும் ரோஜா செடிகள் வைத்து, வெளியே இருந்து யாரும் வந்துவிடாமல் இருக்க, பாதுகாப்பிற்கு உருளையான கம்பிகள் இடைவெளி விட்டு அமைத்திருந்தனர்.
ரொம்ப வெயிலும் விழாமல், அதே சமயம் வெளிச்சமும் காற்றும் வரும்படி, அந்த இடம் இருக்க,
“வாவ் ரொம்ப நல்லா இருக்கு.” என்ற வெண்ணிலா அங்கிருந்த கிரானைட் கல்லில் உட்கார்ந்து கொள்ள…
“ஜெய் அண்ணன் தான் இது வச்சே ஆகணும்னு பிடிவாதம்.” என்றாள் அகல்யா.Advertisements
முதல் மாடியில் சின்ன ஹால் தான். அறைகள் தான் நிறைய இருந்தது. அது தவிர மொட்டை மாடியில் ஒரு அறை. அறை நல்ல விசாலமாக இருக்க, அது ஜெயின் அறை. இருந்த மீதி இடத்தில் தோட்டம் அமைத்திருந்தனர்.
Advertisements