அத்தியாயம் 26
கண்களை மெதுவாக திறந்த அஜித் தான் ஒரு கதிரையில் அமர்ந்திருப்பதையும், கை பின்னால் இழுத்து கட்டப்பட்டு கால்கள் இரண்டையுமே கதிரையின் கால்களில் கட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவன் என்ன நடந்ததென்று சிந்தித்து பார்க்க, அன்னையும் உதித்தும் பேசியவைகளும் அதை தொடர்ந்து தன்னை அடித்தது அஜய் என்று நியாபகத்தில் வரவே தலை வின் வின் என்று வலிக்க ஆரம்பிக்கவும் கண்களை மூடி மூடி திறந்தான். 
தான் எங்கே இருக்கிறோம் என்று சுற்றும் முற்றும் பார்த்தவன் அது தங்கள் வீட்டின் வாகனங்கள் நிறுத்துமிடம் என்று புரிய,  வெளிச்சம் புகவென்றே பொருத்தியிருந்த கண்ணாடியிலான பேனல்களினூடாக வெளிச்சமும் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வர விடிந்து விட்டததா? அல்லது தான் காண்பது கனவா? என்று குழம்பினான். 
கனவுமல்ல, கற்பனையுமல்ல என்பது போல் ஒரு கதிரையை இழுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தான் அஜய்.
“ஹாய் டா தம்பி, கேக்க கூடாததை கேட்டுட்ட, மீதியையும் கேட்டுட்டு மேல போய் சேறு” என்றவன் கதிரையை போட்டு அஜித்தின் முன் அமர்ந்துகொள்ள 
“டேய் இவன போட்டு தள்ளினா சொத்தெல்லாம் அனாதை ஆசிரமத்துக்கு போய்டுமேடா” சமேலி கவலையான குரலில் கூறியவாறே அஜய்யின் வலது புறத்தில் வந்து நின்று கொண்டாள்.  
“என்னமா நீ, உடனே எல்லாம் போட்டுட மாட்டேன். இங்கயே அடச்சி வச்சிடலாம். இவன் சித்தப்பன போட்டுட்டு, இவன போடலாம், அப்போதானே சொத்து கைக்கு கிடைக்கும்” 
அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அஜித் புரியாமல் முழிக்க 
“டேய் டேய் பாவம்டா இவன். பச்ச மண்ணு. எதிரிங்க கூட கூட்டு சேருரோம்னு தெரியாமையே சேர்ந்து இருந்தான்ல இவன் பிளாஷ் பேக்கையே இவனுக்கு சொல்லு அப்போ தானே இவனுக்கு நாம பேசுறது என்னனு புரியும்” என்றவாறு உதித் அஜய்யின் இடது புறத்தில் வந்து நின்று கொண்டான். 
“டேய் யாரடா நீங்க, என்னென்னமோ பேசுறீங்க, கொஞ்சம் புரியும் படி சொல்லித் தொலைங்கடா” கடுப்பாகி அஜித் கத்த 
“பாத்தியா கட்டிப் போட்டும் இவன் அடங்க மாட்டான். மகனே இவன் வாயையும் கட்டிடட்டுமா?” உதித் அஜய்யை கேட்க 
“வேணாம். இவன் கேள்வி கேக்கணும், கத்தனும் அப்போதான் காதுல தேன் பாயும்” என்றவன் “இவங்க என் அம்மா அது உனக்கு தெரியுமே! இது என் அப்பா…” என்று ஆரம்பித்த அஜய் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக செலவழித்து அஜித்துக்கு குடும்ப கதை முதல் தன்னுடைய திட்டம் வரை சொல்லி முடிக்க, காரி உமிழ்ந்தான் அஜித்.  
அஜித்துக்கு அன்னை என்ற ஒருத்தி பாசம் காட்டி ஏமாற்றி விட்டாள் என்பதை விட சொத்துக்காக பாசம் காட்டும் அப்பாவையே ஒருவன் கொல்ல நினைக்கிறான் என்ற கோபம், கைகள் கட்டப்பட்ட நிலையில் அஜய்யை அடித்து தும்சம் பண்ணும் வெறியில் இருந்தவன் கோபத்தின் உச்சநிலையில்தான் காரி உமிழ்ந்தான்.
அதை அசால்ட்டாக துடைத்துக்கொண்டு அஜய். “உன் பாட்டி, அந்த கிழவி அப்படி ஒரு உயில் மட்டும் எழுத்தலைனா நீ செத்த இடத்துல மரமே மொளச்சி இருக்கும்” என்று சத்தமாக சிரிக்க, 
கண்களில் மிரட்ச்சியோடு “ஆவியாக அலைஞ்சிகிட்டு இருப்பான்” என்றான் உதித்.   
அவனை முறைத்த சமேலி “சே சே மறுபிறவி எடுத்திருப்பான்” என்று சத்தமாக சிரிக்க, 
“லூசா இவனுக” என்று பாத்திருந்தான் அஜித். 
“என்ன தம்பி அமைதியாகிட்ட”
“அப்பா ஒன்னும் என்ன தேடாம இருக்க, மாட்டாரு, இந்நேரம் எனக்கு போன் பண்ணி நா எடுக்கலைனதும் என்ன ஏதுனு விசாரிக்க ஆள் அனுப்புவார், அப்போ நீ மாட்டிக்குவ அஜய்” தெனாவட்டாகவே சொன்னான் அஜித். அது அவன் இரத்தத்தில் ஊறிய ஒன்றுதானே!
தனது அண்ணனின் உருவத்தில் இருக்கும் அஜித்தின் மேல் அசோக்குக்கு தனிப்பாசம் எப்போதும் உண்டு, அவன் தப்பு செய்தாலும் கண்டிப்பாரே தவிர தண்டிக்க மாட்டார். தினமும் அவனை ஒருதடவையாவது சந்தித்து பேசாவிட்டால் அந்த நாள் ஓடாது. ஆதலால் காலையிலையே அழைப்பு விடுத்து பேசிவிடுபவர் எங்கே சந்திக்கலாம் என்று முடிவும் செய்வார். இன்றும் அழைப்பார் என்று அஜித் கூற சத்தமாக சிரித்தான் அஜய்.       
“என்னடா தம்பி நைட்டு மயங்கியவன் காலைல கண்ணு விழிச்சதா நினைச்சி கிட்டு இருக்கியா? அச்சச்சோ… நீ மயங்கி மூணு நாளைக்கும் மேலாகுதே! இப்போ மணி அஞ்சு இருக்குமா இல்லமா…” என்றவன் கைக்கடிகாரத்தை பார்வை இட்டான்.
“என்ன சொல்லுற?” அஜித் அதிர்ச்சியடைய, 
“அட இதுக்கே ஷாக் ஆனா எப்படி, அதான் உன் சித்தப்பா அவர் மகன் வீட்டுக்கு போனாரே! மனசு சரியில்லாம படுத்தவருக்கு உடம்பு முடியாம போயிருச்சாம். அக்ஷய் போன் பண்ணி சொன்னான். ரெஸ்ட்டுல இருக்கிறவரை தொந்தரவு செய்ய வேணாமாம். அவர் உனக்கு போன் பண்ண போறது இல்ல. அக்ஷய்… அவனுக்கும் உனக்கும் ஆகாது. நீ அவனோட பெரியப்பா பையன் என்கிறதே அவனுக்கு தெரியாது. ம்ம்.. உன் சித்தப்பா சொல்லி இருப்பாருனு நினைக்கிறியா? சொல்லி இருந்தா இந்நேரம் என் கிட்ட போன்ல சொல்லி இருப்பானே! அவன் ஒரு கூமுட்ட, பாசத்தை பொழிஞ்சா அப்படியே நம்பிடுறான். அடுத்து அவனுக்குத்தான். வலை.. தம்பி வலை. நீ இங்கயே இரு” என்றவன் எழுந்து செல்ல, அவனை பின் தொடந்தனர் சமேலியும் உதித்தும்.
அஜய் சொன்னது போல் அசோக்குக்கு மனநிம்மதியை இழந்ததால் உடல்நிலை கொஞ்சம் சீரற்று போனது உண்மை. அந்த நிலையிலும் அஜித்தின் பெயரை கூறி புலம்பியவாறுதான் இருந்தார் அசோக். 
மதியிடம் தந்தையை ஒப்படைத்த அக்ஷய் அஜித்தை ஆபீசில் சந்தித்து பேசி அழைத்து வரலாம் என்று சென்றவன் யாருக்கும் சந்தேகம் வராமல் ஒரு கோப்பை எடுத்துக்கொண்டு அவன் கையொப்பம் இட வேண்டும் என்பது போல் அவன் ஆபீஸினுள் நுழைய, அவன் ஆபீஸ் வரவில்லை. என்ற செய்திதான் அவனுக்கு கிடைத்தது. 
இரவில் இவ்வளவு குடித்து மட்டையானாலும், ஒரு மணித்தியாலம் என்ன மூன்று மணித்தியாலங்கள் கடந்த நிலையிலும் தவறாது தினமும் ஆபீஸ் வந்து விடுபவன் அஜித். தனது உரிமையை விட்டு கொடுக்க மாட்டானாம். அதைத்தான் சொல்ல வருகிறான் அவன் செயலில். அப்படிப்பட்டவன் ஆபீஸ் வரவில்லை என்றால்? ஒருநாள் கூட தவறாமல் வருபவன் தொடர்ந்து நான்கு நாட்களாக வரவில்லை என்றதும் அக்ஷய்க்கு ஏதோ தப்பாகப்பட்டது.
அஜய்யிடம் நேரடியாக விசாரிக்க விரும்பாத அக்ஷய் மதியிடம் கலந்துரையாட, ராஜவேலுவை அசோக்கின் வீட்டுக்கு அனுப்பினால் ஆவிகள் உள்ளே புகுந்து விடாத படி வீட்டை சுற்றி காவல் செய்யப்பட்டிருப்பதாக ராஜவேலு தெரிவித்தார்.
“நடப்பது எதுவும் நல்லதா படல மதி. அப்பா இங்க இருக்கிறதுதான் கொஞ்சம் நிம்மதிய கொடுக்குது” 
“அஜய் இங்க வந்தா உள்ள அனுமதிக்க கூடாதுன்னு உங்க சிகியூரிட்டி கிட்ட   சொல்லித்தானே வச்சி இருக்கிறீங்க”   
அக்ஷய் ஆமாம் என்று தலையசைக்கவும் “முதல்ல மாமாவை நாம வேற இடத்துக்கு ஷிப்ட் பண்ணனும் அக்ஷய். அஜய் வரத தடுத்தா சிக்கல் வரலாம். அஜய் வந்தால் மாமா சொல்லாம கொள்ளாம எங்கயோ போய்ட்டதா நாடகம் ஆடலாம் அதான் அவருக்கு சேப்டி” 
“தடுக்குறதால என்ன பிரச்சினை வந்துடும் மதி” தன்னை மீறி என்ன நடந்து விடப் போகிறது என்ற கர்வத்தில் அக்ஷய் பேச
“மாமாக்கு உடம்பு முடியாம இருக்குற சமயம், அஜய்த்தான் உண்மையான வாரிசு, அவரை கடத்தி வச்சிக்கிட்டு நீங்க சொத்தை அபகரிக்க பாக்குறீங்க, அஜித்தையும் ஏதாவது செஞ்சி உங்க தலைல போட கூடும், இதுவே மாமா இங்க இருந்து நாங்க இல்லாத நேரம் வந்து அவருடைய உயிருக்கு ஆபத்தை விளவிச்சிட்டு போகக்கூட செய்வாரு. சோ மாமா இங்க இருக்க வேணாம்” 
“யு ஆர் ரைட் மதி, அவன் வந்து பார்த்து ஏமாறட்டும் கூடவே நாமும் ஷாக் ஆகுவோம். அவனை நம்ப வைக்க நம்மால முடியாதா என்ன? ஆவி இல்லனு நம்ப வச்ச பின்னாலும் வீட்டை காவல் படுத்தினவன் தனக்கும் காவலாக ஏதாவது கைல போட்டிருப்பான் மதி. வீட்டுக்குள்ள அஜித் இருக்கானா? இல்லையா? இருந்தா என்ன மாதிரியான நிலமைல இருக்கானு தெரியலையே! என்ன பண்ணுறது? ஒன்னும் புரியல?” அஜித்தை பத்தின கவலையும் சேர்ந்துகொள்ள புலம்பலானான் அக்ஷய்.
“அதுக்கு ஒரு வழி இருக்கு அக்ஷய்” மதி தான் செய்யப்போகும் காரியத்தை ஏற்கனவே ராஜவேலுவோடு பேசிவிட்டதால் உறுதியாக கூற
“என்ன மதி” அக்ஷய் ஆர்வமாக கேட்க, 
“நாளைக்கு பாருங்க” என்றவள் கண்சிமிட்டி சிரித்து விட்டு தூங்க சென்றாள். 
    
தனது காரியாலயத்தில் அமர்ந்து அக்ஷையிடம் கையொப்பம் வாங்க வேண்டிய சில முக்கியமான ஆவணங்களை அந்த கோப்பில் இணைத்து சரி பார்த்துக்கொண்டிருந்தான் அஜய். அவனது அலைபேசி விடாது அடிக்கவே காஜல்தான் தொந்தரவு செய்கிறாள் என்று முணுமுணுத்தவாறு கண்களை திரையின் பக்கம் செலுத்த அன்னை என்று மின்னி மின்னி மறையவும் உடனே இயக்கி காதில் வைத்தவன் என்னவென்று விசாரித்தான். 
“டேய் அஜய் அவ வந்திருக்கா டா” மொட்டையாக உளற
“எவ?” அஜய்யும் புரியாது கேட்டான் 
“அதான் அந்த மதி.
“அவ எதுக்கு வந்திருக்கா?”
“ஜீப்பை ஒட்டிக்கிட்டு அவளே தனியா வந்திருக்கா, கைல ஏதோ சாப்பாடு பாத்திரம் போல அநேகமா எனக்கு சமைச்சி எடுத்துட்டு வந்த மாதிரிதான் தெரியுது” சமேலி யோசனையாக சொல்ல இந்த சந்தர்ப்பத்தை விட விரும்பாத அஜய். அக்ஷய் எங்கே இருக்கிறான்? என்ன செய்கிறான்? என்று சீசீடிவியின் மூலம் கண்காணித்து உறுதி செய்து கொண்டவாறே
“அம்மா அவ கிட்ட பேசிக்கிட்டே இரு, இன்னும் ரெண்டு மணித்தியாலத்துக்கு அவ உன்ன விட்டு அகல கூடாது” என்றவன் கோப்பை அங்கையே விட்டு விட்டு அக்ஷையின் ஹோட்டலை நோக்கி வண்டியை செலுத்தினான். 
அவ்வளவு நேரமும் அஜய்யை கண்காணித்துக்கொண்டிருந்த சிம்ரன் அவன் அறையை விட்டு வெளியேறினாள்.
“மதிமா நாம வந்து கேட்டு கிட்ட ரொம்ப நேரமா நிக்கிறோம். இந்த பொம்பள கேட்ட திறப்பாளா? மாட்டாளா?” ராஜவேலு கடுப்பாக கேட்க 
“மகன் கிட்ட இருந்து உத்தரவு வர வேணாமா? அதான் எட்டி பாத்துகிட்டே போன் பேசுறா, கொஞ்சம் இருங்கப்பா… கேட்ட திறந்ததும் வண்டிய நிறுத்திட்டு மொத வேலையா வாசல் நிலைக்கதவுல தொங்குறத கழட்டி எரிஞ்சிடுறேன். அப்பொறம் நீங்க உள்ள வரலாம்” புன்னகையினூடாகவே கேட்டின் அருகில் ஜீப் வண்டியில் அமர்ந்திருந்த மதி தந்தைக்கு மெதுவான குரலில் கூறிக்கொண்டிருந்தாள்.
கேட் திறக்கப்பட்டதும் மதியின் வண்டி மெதுவாக உள்ளே நுழைந்தது. மதி வேண்டுமென்றேதான் ஜீப் வண்டியில் வந்திருந்தாள். அதுவும் முற்றாக திறந்த வண்டியில். சமேலி பார்த்தால் மதியை நன்றாக தெரிய வேண்டும், மதி என்ன வைத்திருக்கிறாள், என்ன கொண்டு வந்திருக்கிறாள் என்று கூட தெரிய வேண்டும் என்றே தான் இந்த வண்டியில் வந்தாள். 
வண்டியை விட்டு இறங்கியவள் வாசல் கதவை பார்க்க ஏழடி இருக்கவே “அன்னைக்கும் வந்தோமே! இவ்வளவு உயரமாகவா இருந்தது? நாம ஹீல் போட்டாலும் இத கழட்ட முடியாதே! இப்போ இத எப்படி கழட்டுறது, அப்பா எப்படி உள்ள வர்றது” மண்டையை குடைந்து யோசனையில் விழ, ராஜவேலு மகளை முறைத்துக்கொண்டிருக்கும் வேளையில் வாசலுக்கு வந்து அவளை வரவேற்றாள் சமேலி. 
“என்னமா அங்கேயே நின்னுட, உள்ள வரவேண்டியதுதானே!” சுதாரித்த மதி புன்னகைத்தவாறே உள்ளே நுழைந்தாள். 
“என்ன அத்த தனியாவா இருக்கிறீங்க?”
அஜித்தை அடைத்து வைத்திருப்பது வேலையாட்களின் கண்களுக்கு பட்டுவிடும் என்று அனைவருக்கும் லீவும், போனஸும் கொடுத்து அனுப்பி இருந்தான் அஜய். 
“உங்க மாமா இல்லாம எதுக்கு வேலைகாரங்கனு எல்லாரையும் அனுப்பிட்டேன். அதான் கேட்ட தொறக்க லேட் ஆச்சு” அதற்கு காரணத்தையும் சொன்னவளை மனதுக்குள் முறைத்தாள் மதி.
தந்தையை வீட்டுக்குள் அழைத்து வந்தால்தான் தான் வந்த காரியம் நிறைவேறும். வீட்டுக்கே காவல் படுத்தி இருக்கிறார்கள் என்றால், வீட்டுக்குள் வர முடியுமான ஒவ்வொரு கதவுக்கு தாயத்து கட்டி இருப்பார்கள் வீட்டை சுற்றி பார்த்து எந்த கதவில் இருப்பதை கழற்ற முடியும் என்று ஆராய வேண்டும். தந்தை வேறு இந்த நேரம் வெளியே இருந்து ஆராய்ந்து கண்டு பிடித்து இருப்பார்” மதியின் சிந்தனை இவ்வாறு ஓட 
“என்னமா யோசிக்கிற?” சமேலி அன்பொழுக கேட்க, 
“தனியாக இருக்கிறீர்களே! அஜய் மாமா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டா காஜலாவது உங்களுக்கு துணையா இருப்பா இல்ல” மதியும் தேனொழுக பேசினாள். 
“ஏன் நீ இருக்க மாட்டியா?” அதே அன்பு வார்த்தைகளில் வடிய 
“ஆமா அக்ஷய் உன் கூட என்ன கோர்த்து விட்டுட்டுதான் மறுவேலை பார்ப்பார்” உள்ளுக்குள் கமாண்ட் வைத்தவள் புன்னகை மட்டும் செய்தாள். 
“நான் அக்ஷய்க்கு செய்தவைகளை அவன் சொல்லி இருப்பான். என்னை மன்னிக்கவே முடியாது. அவர் செய்ததை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் தான் அந்த பாலகனை” என்று குலுங்கிக் குலுக்கிங்க் அழ, 
“அம்மா… நீலிக்கண்ணீர் வடிக்கிறது பாரு. ஒரு பையன பெத்து வச்சிக்கிட்டு இன்னொரு குழந்தையை வதைக்கிற எந்த தாயும் தாயில்லை பேய்” மனதுக்குள் பொருமினாலும் சமேலியின் அருகில் வந்தமர்ந்த மதி. “நீங்க என்ன பண்ணுவீங்க அத்த….., மாமா அப்படி பண்ணி இருக்க கூடாது. ஒரு பொம்பளையோட மனசு ஒரு பொம்பளைக்குத்தான் புரியும். உங்க இடத்துல நான் இருந்தாலும் இப்படித்தான் பண்ணி இருப்பேன்” என்று ஆறுதலாக கையை தட்டிக் கொடுக்க, 
“நீ என்ன புரிஞ்சிக்கிட்ட மாதிரி அக்ஷய் என்ன புரிஞ்சிப்பானா, மன்னிப்பானா?” கண்களில் நீர் நிறைத்து கேட்டாள்.
“அடுத்த ஆஸ்கார் அவார்டு உங்களுக்குத்தான் மாமியாரே!” மனதுக்குள் வசை பாடியவள் “காலம் எல்லா காயங்களையும் ஆத்தும் அத்த, அவரும் மெல்ல, மெல்ல மாறுவார்”
“உன்ன வச்சே, அவனை மடக்கி, அவன் சம்பாதிச்ச சொத்தை எழுதி வங்கள்ல அசோக் சாம்ராட்டின் வாரிசை பிச்சை எடுக்க வைக்கல என் பேர் சமேலி இல்லடி” மனதுக்குள் சபதம் எடுத்துக்கொண்டவள் மதியை பார்த்து புன்னகைத்தாள். 
“ஐயோ அத்த வாங்க…” என்ற மதி சமேலியின் கையை பிடித்து சமயலறைக்கு அழைத்து செல்ல  என்ன ஏதோ என்று அடித்து பிடித்தவாறு அவளும் செல்ல 
“உங்களுக்கு நான் சூப் எடுத்துட்டு வந்தேன். ஆறிட போகுது. சீக்கிரம் குடிங்க” என்றவள் சாப்பாட்டறையில் அவளை அமர்த்தி சமயலறைக்குள் நுழைந்து கதவை ஆராய அந்த கதவும் ஆறடியில் இருக்க, கதிரையையை வைத்தால் எட்டும் என்றிருக்க, சூப்பை அவசர அவசரமாக ஒரு பாலில் ஊற்றியவள் சமேலிக்கு கொடுத்து ஒரு சொட்டு விடாமல் குடிக்கும் படி ஏவி விட்டு பாத்திரங்களை கழுவ சமயலறைக்குள் நுழைவது போல் நுழைந்தவள் தும்புத்தடியை கொண்டு தாயத்தை இழுத்து கழட்ட ராஜவேலு மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்தான். 
அப்பாடா என்றிருந்தது மதிக்கு. கழண்ட தாயத்தை சாதாரணமாக கழன்று விழுந்தால் எவ்வாறு விழுமோ அவ்வாறு வெளியே வைத்தவள் சூப் கொண்டு வந்த பாத்திரங்களை கழுவிக்கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைந்தாள் சமேலி. 
“எதுக்குமா… நீ இதெல்லாம் செய்யுற?”
“என்ன அத்த நீங்க, தனியா இருக்கிறீங்க. வேலைக்கு ஆட்களும் இல்ல. நான் செய்யுறேன். எனக்கு சமைக்க அவ்வளவா தெரியாது. ஆனா காஜல் நல்லா சமைப்பாளாமே! அவளுக்கு சொன்னா சமைச்சி எடுத்து கொண்டு வர போறா. எப்படி என் ஐடியா” மதி சிரிக்க,
“உன்ன நான் சமைக்க சொல்லி இங்கயே நிக்க வைக்க பார்த்தா…. நீ என் மருமக கிட்ட வேல வாங்க பாக்குறியா? சரியான ஆளுதான் டி நீ” மதியை மனத்தால் வசை பாடிய சமேலி “சொல்லலாமே ஆனா நீயும் இருக்கணும்” என்று கோரிக்கை வைக்க, அக்ஷையிடம் கேக்கணும் என்றாள் மதி.
அதே நேரம் சொல்லி வைத்தது போல் மதியை அழைத்தான் அக்ஷய். “ஐ… அவர்தான் பேசுறாரு அத்த.. ஆயிசு நூறு….” என்றவாறே இயக்கி காதில் வைத்தவள் “சொல்லுங்க அக்ஷய். நான் இங்க உங்க அம்மா வீட்டுக்கு வந்தேன்” அக்ஷையிடம் தான் சொல்லாமல்தான் வந்தேன் எனும் விதமான சமேலிக்கு குறிப்பு காட்டினாள் மதி. 
அக்ஷய் மதியை திட்ட போகிறான் என்று சமேலி எதிர்பார்க்க “காஜல் லன்ச் எடுத்துட்டு வராலாம். அத்த என்னையும் இருந்து சாப்பிட்டுட்டு போக சொல்லி சொல்லுறாங்க அக்ஷய்” குரலில் குலைந்து பேசினாள் மதி. அப்படி ஒரு குழைவை இதுவரை அக்ஷையிடம் அவள் பேசியதே இல்லை. 
மறுமுனையில் அக்ஷய்க்கு சிரிப்பாக இருந்தது. “லவ் பண்ண தெரியாதாம். ஆனா நடிப்பு நல்லா வருது இந்த போலீஸ்காரிக்கு” மனதுக்குள் செல்லம் கொஞ்சியவன் சொன்னதெல்லாம், அஜய் நீ சொன்னது போலவே அப்பாவை தேடி நம்ம ஹோட்டலுக்கு போய் இருக்கிறான் போனவன் அவர் இல்லை என்றதும் என்ன ஆட்டம் ஆட போகிறானோ தெரியவில்லை. இப்போதைக்கு நீ அங்க இரு, ஹோட்டல் போகாத. நானே வந்து உன்னை அழைத்து செல்கிறேன் என்பதே!
ஆனால் அக்ஷய் மதி இருவரும் பிரஜூவை மறந்தனர்.