தந்தையின் இன்னொரு மகன் அக்ஷய். அவனை தந்தையோடு நெருங்க விடாமல் பார்த்துகொண்டாயிற்று, இது போதாது அவனை முற்றாக குடும்பத்தை விட்டே விலக்க வேண்டும், அந்த பிஞ்சு வயதில் அவ்வளவுதான் அவனால் சிந்திக்க முடிந்தது. 
பதினைந்தாம் வயதில்தான் உதித் வந்து அஜய்யை சந்தித்து தான் தான் உன் தந்தை என்று கூறி, டி.என்.ஏ, டெஸ்ட் வரை எடுக்க வைத்து சமேலியோடு சண்டை போட வைத்தான். 
உதித்ததை கண்டு சமேலி அதிர்ச்சியடைந்தாலும், அஜய்க்கு அவனின் உதவி தேவை என்று புரிந்து கொண்டு அவனோடு கைகோர்த்தாள்.
அஜய்க்கு வாழ்க்கையே சூனியமாகிப் போனது. என்ன செய்வது என்று குழம்பி இருந்த அந்த இளம் குறுத்தின் மனதில் பெற்றவர்கள் விஷத்தை விதைக்க ஆரம்பித்தனர். 
அதுதான் அசோக் சாம்ராட்டின் சொத்து மாத்திரமன்றி குடும்ப சொத்து முழுவதையும் அஜய்க்கே சொந்தம். அதை மொத்தமாக அடைய வேண்டும் அதற்கான திட்டத்தை போட ஆரம்பித்தனர். 
என்று அசோக் அஜய்யின் கையில் பாதி பொறுப்பை கொடுத்தாரோ அன்றிலிருந்து அசோக்குக்கு ஸ்லொவ் பாய்சன் கொடுக்க ஆரம்பிக்கபட்டது. அசோக் இறந்து விட்டால், முழுப்பொறுப்பும் அஜய்யிடம் வந்து விடும். 
அக்ஷய் குடும்ப சொத்தை பற்றி அக்கறைகொள்ள மாட்டான். அவனுக்கென்று ஏகப்பட்ட சொத்து இருக்க, அதை பார்க்கவே நேரம் போதாது. அவனே அஜய்க்கும் அஜித்தும் சொத்தை எழுதி கொடுப்பான். அதற்கு அவனோடு நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும். 
அஜித் எதிரியாகவும், தான் நல்லவனாகவும் தெரிந்தால் தனக்கே எல்லாவற்றையும் கொடுத்தாலும் கொடுப்பான், அவனை காணும் பொழுதெல்லாம் அவனிடம் பேச முயன்று தோற்றவன், தன்னுடைய நிச்சயதார்த்தமன்று அக்ஷையின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்க, ஒரு சிம்பதியோடு ஆரம்பித்த கதைதான் தன் அன்னையையே கேவலமாக பேசியது. 
அஜித்துக்கு தான் யார் என்று தெரியாத வரைக்கும் அன்னையின் முந்தானை நுனியை பிடித்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்பான். அசோக் இருக்கும் வரை அஜித்தின் சொத்துக்களை அடைய அஜித்தை ஒன்றும் செய்ய முடியாது. உயிலின் படி சொத்துக்கள் அநாதை ஆசிரமத்துக்கு போய் விடும், அசோக் இறந்து சில ஆண்டுகள் போகட்டும் அப்பா போன இடத்துக்கே! இல்ல இல்ல சித்தப்பா போன இடத்துக்கே! மகனையும் அனுப்பி வச்சிடலாம்” இதுதான் இவர்களுடைய மாஸ்டர் பிளானாக இருந்தது. 
ஆனால் எதிர்பாரத விதமாக அக்ஷையும், அசோக்கும் சிங்கப்பூரில் சந்தித்துக் கொண்டதும், அங்கே அசோக்கின் உடல்நிலை திடீரென நலம்குறைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அக்ஷய் தந்தையை வற்புறுத்தி புள் பாடி செக்கப் செய்ய வைத்ததும் கடவுளின் செயலன்றி வேறென்ன?
அதில் உண்மையை அறிந்து கொண்ட அக்ஷய் குற்றவாளியை தேடி வலை வீசியத்தில் தன் வாழக்கையில் குடைச்சல் கொடுக்கும் அஜித்தின் மேல் சந்தேக பார்வை விழுந்தது. 
அசோக் மற்றும் சமேலியோடு அஜித் ரெஸ்டூரண் சென்றிருந்த பொழுது ஒரு பைக்காரன் வேகமா வர, பெற்றோரை தள்ளி விட்டு தன் உயிரை பணயம் வைத்து பெற்றோரை காப்பாற்றி இருந்தான் அஜித். பெற்றோரின் மேல் உயிரையே வைத்திருப்பவன் இந்த காரியத்தை செய்திருப்பானா? என்ற சந்தேகம் அக்ஷய்க்கு எழுந்தது. 
அதன் பின் அவன் சந்தேகப்பார்வை சமேலியின் மீது திரும்பி அவளை கண்காணிக்க ஆரம்பித்தான். சொல்லும்படியாக எதுவும் அவன் பார்வைக்கு கிடைக்கவில்லை. அவள் வேலையை அவ்வளவு கவனமான செய்துகொண்டிருந்தாள் சமேலி.
இங்கே உதித்தை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தான் அஜய். “என்ன செலவுக்கு காசு ஏதும் வேணுமா? பேய் பிசாசுன்னு கத விட்டுகிட்டு இருக்க” 
“ஐயோ மகனே நான் பொய் சொல்லல” உதித் சத்தியம் செய்யாத குறையாக பதற 
“அதான் பூஜாரி “ஒன்னும் இல்லனு தெளிவா சொல்லிட்டு போய்ட்டாரே. உன்னால அம்மா வேற அசோக் அப்பா கிட்ட அடி வாங்கிட்டாங்க”
“என்னாலதான் அடிக்க முடியாது, அந்த மகராசனாச்சும் அடிச்சாரே” உதித் முணுமுணுக்க 
“என்ன சொன்ன? போட்டேனா உன்ன…” அப்பாவை அடிக்க கை ஓங்கிய அஜய் உதித் பின் வாங்கவும் கையை கீழிறக்கி “நீ வரவர ஒழுங்கா ஒரு வேலையும் பண்ணுறதில்ல. இந்நேரம் அசோக் அப்பா செத்திருந்தா.. அக்ஷய் சொத்தை எழுதி கொடுத்திருப்பான்” என்று பெருமூச்சு விட தலையை சொரிந்தான் உதித்.
“போ போய் அம்மாக்கு சாப்பாடு கொடு சாப்பிடாம தூங்கிட போறாங்க” தந்தையை விரட்டினான்  அஜய்.  
காஜலின் வீட்டில் காஜலின் அன்னை லஜ்ஜோ தாம்தூம் என்று குதித்துக்கொண்டிருந்தாள். 
“அப்போவே சொன்னேன். சொத்துப்பத்து, பாரம்பரியமான குடும்பம் எல்லாம் சரி, மூணு பொண்டாட்டிய கட்டினவரு நம்ம பொண்ணுக்கு இந்த குடும்பம் வேணாம்னு கேட்டிங்களா? நான் சொல்லுறத எப்போ கேட்டிங்க? சம்மதியாம் சம்மதி, அந்த பொம்பள இவருக்கு பொண்டாட்டியே இல்லையாம், தொட்ட பாவத்துக்கு கட்டிக்கிட்டாராம், யாரோ செத்து போனவங்க தான் பொண்டாட்டியாம். ஊருல உலகத்துல இல்லாத கதையல்ல இது. எங்கயாச்சும் இப்படியெல்லாம் நடக்குமா? உடனே கல்யாணத்த நிறுத்துங்க” 
காஜல் தலையில் கைவைத்து அமர்ந்திருக்க, “பப்லி நீ உள்ள போமா இந்த கல்யாணம் நடக்கும். நீ மனச போட்டு குழப்பிக்காத, உங்கம்மா புரியாம பேசுறா” காஜலின் தந்தை விரேந் கூற தந்தையே கூறிய பின் அவளுக்கு அங்கே என்ன வேலை என்பது போல் அன்னையை ஒரு பார்வை பார்த்தவள் எழுந்து உள்ளே சென்று விட மனைவியின் அருகில் அமர்ந்த விரேந் 
“லஜ்ஜோ நானும் அபேயும் நல்ல நண்பர்கள் எங்க பசங்கள கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு தான் நினைச்சோம் ஆனா பப்லி அஜய்ய விரும்புறா, அவ கிட்ட போய், இந்த விஷயங்களை விளக்கி சொல்லி புரிய வைக்க முடியாது. இந்த ஜெனரேஷன் பசங்க இதெல்லாம் பெருசா கண்டுக்க மாட்டாங்க. அவங்க கல்யாணம் பண்ணி சந்தோசமா இருந்தா போதும் புரிஞ்சிக்க” என்றவர் உள்ளே சென்று விட லஜ்ஜோ அனாதையாக வாசலில் தனியே விடப்பட்டார்.  
தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் அஜித். தந்தை என்ன சொல்ல விழைந்தார் என்று அவனுக்கு புரியவில்லை. அன்னையோடு குடும்பம் நடத்தவில்லை என்றுதானே கூறினார். அப்படியாயின் நான் எவ்வாறு பிறந்தேன். நான் அனாதையா? என்னை தத்தெடுத்தார்களா?  இல்லையே அப்படியாயின் பரம்பரை வீட்டை பார்க்க போக உனக்கில்லாத உரிமையா? நீ போய் தங்கு என்று கூறி இருக்க மாட்டாரே! 
உடனே தந்தையிடம் பேசி விளக்கம் கேட்காவிடிட்டால், மூளை குழம்பி மண்டை வெடித்து விடும் போல் இருக்க, தந்தையின் அறைக்கு சென்றால் அவர் அங்கு இல்லை. அப்பொழுதுதான் நினைவு வந்தது. நடந்த களோபரத்தில் அக்ஷய் வலுக்கட்டாயமாக தந்தையை அவன் ஹோட்டலுக்கு அழைத்து சென்றதை. தந்தைக்கு அழைத்து பேசலாம் என்று பார்த்தால் கண்டிப்பாக தூக்க மாத்திரை போட்டு தூங்கி இருப்பார். 
அவர் பேசியதற்கு அர்த்தம் தெரியாமல் தன்னால் தூங்க முடியாதே! குழம்பியவன் அன்னையிடம் கேக்கலாம் என்று சமேலியின் அறையை நோக்கி செல்ல அவள் அறையில் பேச்சுக்குரல்கள் கேக்க அங்கேயே நின்றவன் உள்ளே செல்லலாமா என்று யோசிக்க, சமேலியின் குரலும் அதை தொடர்ந்து உதித்தின் குரலும் ஒலிக்க, உதித்துக்கு அன்னையின் அறையில் என்ன வேலை என்று சிந்தித்தவன் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று செவி மடுத்தான்.
“என்ன சம்மு அடி ரொம்ப வலிக்குதா?” உதித்தின் குரலில் கவலை தொந்திருந்தாலும் பார்வையில் கேலி அப்பட்டமாக இருந்தது. 
“டேய் முட்டாள் முட்டாள். அந்த ஆள் என்ன அடிக்கிறான் பார்த்துட்டு மரம் மாதிரி நிக்குற? இழுத்து நாலு சாத்து சாத்த வேணாம்?”
“உன் மகனும்தான் நின்னான்” இப்பொழுது கேலி குரலிலும் இருந்தது. 
“ஸ்லொவ் பாய்சன் வாங்கிட்டு வந்தியே இத்து போனத வாங்கிட்டு வந்தியா? அந்த அசோக் இன்னும் சாகாம இருக்கான்” சமேலி கோபத்தில் கத்த 
“நான் வாங்கிட்டு வந்தது நல்லாத்தான் இருக்கு, நீ தான் புருஷன்னு பாசத்துல கொடுக்காம விட்டிருப்ப” அதே கேலிக் குரல்.
“ஆமாயா உனக்கும் சேர்த்து கொடுத்திருக்கணும்” கன்னம் வீங்கி வலி தாங்க முடியாத நிலையிலும் கொஞ்சமேனும் கோபம் குறையாமல் கத்தினாள் சமேலி. 
அவர்கள் பேசியதை கேட்டு அதிர்ச்சியடைந்தவன் இதை அஜய்யிடம் சொல்ல வேண்டும் என்று திரும்ப அங்கே அஜய் ஒரு இரும்பு தடியோடு அவன் முன் நிற்பதை கண்டு என்னவென்று கேட்க அஜித் வாய் திறக்கும் முன் அவன் தலையில் அடித்திருக்க மயக்கத்துக்கு சென்றான் அஜித்.