சமேலியின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. தனது வாழ்க்கையில் எல்லாமே ஏமாற்றம். காதலிலும் ஏமாற்றம், கல்யாண வாழ்க்கையிலும் ஏமாற்றம்.
அந்த ஹோட்டலின் பாரில் காதலனை தேடிவந்த சமேலி அசோக்கை சந்தித்தது, அவரோடு தண்ணியடித்தது நன்றாக நியாபகம் இருக்க, அசோக்கோடு சேர்ந்து நடந்தது கொஞ்சம் நியாபகம் இருந்தது. அன்று அசோக்கோடு அந்த அறைக்கு எவ்வாறு வந்ததென்று நினைவில்லை.
கண்விழித்த அசோக்கும் சமேலியை கண்டு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சமேலியும் அலட்டிக்கொள்ளவில்லை. அமைதியாகத்தான் அவ்வறையை விட்டு வெளியேறினாள்.
காதலனால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று உணரும் பொழுதே வயிற்றில் குழந்தையும் உண்டாகி இருப்பது தெரிய வர, கருவை கலைக்கலாம் என்று முடிவு செய்தவள் தொலைக்காட்ச்சியில் அசோக் சாம்ராட்டை கண்டதும் அவனுடைய குழந்தையை சுமந்திருப்பதாக கூறி காசு பார்க்கலாம் என்று முடிவெடுத்தவள் அவரை சந்திக்க சென்றாள்.
ஆனால் அவளே எதிர்பார்க்காமல் அசோக் அவளை திருமணம் செய்துகொள்வதாக கூற, பணத்தை கறக்கலாம் என்று எதிர்பார்த்து வந்தவளுக்கு சொகுசான வாழ்க்கையே கிடைக்க வேண்டாம் என்றா சொல்லுவாள்? உடனே கண்ணீரோடு சம்மதம் சொன்னவள் கல்யாணத்துக்கு பிறகு கருவை கலைத்து அசோக்கோடு புதிய வாழ்க்கையை தொடங்க முடிவு செய்தாள்.
ஆனால் அசோக் அப்பொழுதே “நீ எனக்கு மனைவி மட்டும் தான் எந்த உரிமையும் எடுத்துக்கொள்ள கூடாது” என்று திட்டவட்டமாக கூறியும் விட, வயிற்றில் இருக்கும் குழந்தையால் தான் இந்த வாழ்க்கை என்று புரிந்துகொண்ட சமேலி கருவை கலைக்காது குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தாள்.
அசோக் ஏற்கனவே திருமணமானவர் அவர் தன்னை எவ்வாறு திருமணம் செய்வார்? அவர் வீட்டில் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்வார்களா? என்றெல்லாம் சமேலி கேட்கவில்லை. அந்த கவலையும் சமேலிக்கு இல்லை.
அபேய் சாம்ராட் அசோக் சாம்ராட்டின் அண்ணன். அண்ணன் குடும்பத்தின் அத்தனை பொறுப்பையும் பார்த்துக்கொள்ள, தன் மனதின் இச்சை படிதான் வாழ ஆரம்பித்தான் அசோக்.
வெளிநாட்டுக்கு சென்று படிக்க வாய்ப்பு கிடைத்தும், டில்லியிலையே சாதாரண ஒரு காலேஜில் படிக்க முடிவு செய்தான். அங்குதான் இந்திராவை சந்தித்து காதலும் வயப்பட்டான்.
காலேஜில் கடைசி ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் இந்திரா மாயமாய் மறைந்து போனாள். அவள் பிரிவு அசோக்கை தனித் தீவில் விடப்பட்டதை போல் வாட்ட பைத்தியம் பிடிக்காத குறையாக தன் அறையிலையே அடைந்து கிடந்தான்.
தன் செல்ல மகனின் இந்த நிலையை கண்டு பதறிய அசோக்கின் தாய் லலிதாஞ்சலி அவனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்ய அசோக் மறுப்பு தெரிவித்தான்.
அன்னை தான் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுக்கவும் வேறு வழியில்லாது அப்போதைய மனநிலையில் திருமணமும் செய்துகொள்ளும் அசோக் முதலிரவில் சந்திக்கும் மனைவி பிரேமாவிடம் தனக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லை என்று கூற பிரேமாவும் தனக்கும் இஷ்டமில்லை. வீட்டாரின் கட்டாயத்தின் பேரில்தான் திருமணம் செய்ததாகவும், தான் வேறொருவரை விரும்புவதாகவும் கூறுகிறாள்.
இதற்கொரு தீர்வு நிச்சயமாக கிடைக்கும், அதுவரை பொறுமையாக இருக்கும் படி கூறிய அசோக் வீட்டுக்கு அடங்காமல் சுற்றிக்கொண்டு இருக்கும் பொழுதுதான் சமேலியை சந்திக்கிறான்.
அவள் வயிற்றில் வளர்வது தன் குழந்தையா? என்று முடிவு செய்யாமல் ஒரு பெண் இந்த விஷயத்தில் பொய் சொல்ல மாட்டாள் என்று நம்பி, அவளை பயன் படுத்தி பிரேமாவுக்கு மணவிலக்கு கொடுத்து சமேலியை மறுமணம் செய்துகொள்ள குடும்பத்தார் அசோக்கை குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைத்தனர்.
சமேலிக்கு என்னடா இது என்றிருந்தது. சொத்துக்காக திருமணம் செய்தால், அந்த சொத்து கிடைக்காமல் போகும் போல இருக்கே என்று வருந்த, அசோக் சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்து கொஞ்சம் முன்னேற்றம் கண்டிருந்தான்.
லலிதாஞ்சலிக்கு சமேலியை முதல் பார்வையிலையே பிடிக்காமல் போக வீட்டுக்குள்ளேயே சேர்க்கவில்லை. அபேய் அன்னை அறியாமல் தம்பிக்கு உதவிக்கொண்டிருக்க, லலிதாஞ்சலி அதை அறிந்தும் அறியாமல் இருந்து விட்டாள்.
அஜய் பிறந்தால் குடும்பம் ஒன்றாகும் என்று சமேலி கனவு கண்டு கொண்டிருக்க, அஜய் பிறந்த பின் அசோக்கின் குடும்பத்திலிருந்து யாரும் எட்டி கூட பார்க்க வில்லை. அபேய்கு மகள் சாக்ஷி மாத்திரம் தான் இருந்தாள். ஆண் வாரிசு என்றால் அசோக்கின் வாரிசு என்று கூறும் அஜய் தான். அவனையே கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று அசோக்கிடம் கொதித்தாள் சமேலி.
அவளை சாட்டை செய்யாது “அவர்களை நம்பியா நீ என்னை திருமணம் செய்தாய்? அவர்களை எதிர்பார்த்தா நீ என்னை திருமணம் செய்தாய்?” என்று அவளை கேள்வி கேட்டு வாயை அடைத்து விட்டான்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தாலும் அஜய்யை அசோக்கின் வாரிசாகவும், குடும்பத்து வாரிசாகவும் லலிதாஞ்சலி ஏற்றுக்கொள்ளவில்லை. அபேயும் பல தடவை அன்னையிடம் கேட்டுப் பார்த்து விட்டான்.
“அபேய் நீ தான் இந்த குடும்பத்து மூத்த வாரிசு உன் குழந்தைதான் அடுத்த தலைமுறையை கொண்டு செல்ல வேண்டும், நீ தான் எனக்கு பேரனை பெற்றுக் கொடுக்க வேண்டியவன் அதற்கு ஏற்பாடு செய்” என்று விட அபேய் அதன் பிறகு அன்னையோடு வாதாடுவதை விட்டு விட்டான்.
மூன்று ஆண்டுகள் கடந்து அபேயின் மனைவி மெஹெக் அழகான ஆண் குழந்தையை பிரசவிக்க, அஜித் சாம்ராட் என்று பெயரிட்டு மகிந்தனர். குழந்தைக்கான விழாவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்க, அசோக் மற்றும் சமேலியும் அஜையோடு வருகை தந்திருக்க, விழா ஏற்பாட்டையும், விருந்தையும் கண்டு சமேலி புகைந்து கொண்டிருந்தாள்.
அவளின் பார்வையை வைத்தே அவளை கணித்த லலிதாஞ்சலி அவளை எட்டியே வைத்து, விருந்தாளி போல் கவனித்து விடை கொடுத்தார்.
அவரின் போதாத காலம் அபேய், மனைவி மகளோடு ஆக்சிடண்டில் இறந்து போக பேரனோடு தனித்து விடப்பட்டார் லலிதாஞ்சலி.
முதுமை வேறு, தனிமை வேறு பேரனை கவனிக்கவும் முடியாமல் திண்டாட, அசோக் தங்களோடு வந்து தங்குமாறு வற்புறுத்த, முடியாது என்று திட்டவட்டமாக கூறியவர் ஒருநாள் அசோக் மற்றும் சமேலியை வீட்டுக்கு அழைத்திருந்தார்.
இனி தாங்கள் அந்த பெரிய மாளிகையில் தான் வசிக்க போகிறோம் என்று ஆசையாக சமேலி எதிர்பார்த்து செல்ல அவள் ஆசையில் மண்ணை போட்டார் லலிதாஞ்சலி.
தனது மூத்த மகனின் வாரிசுக்கே இந்த மாளிகை சொந்தம் அதன் படி இந்த மாளிகை அஜித்துக்கு தான் சொந்தம். அவன் இறந்தாலோ அல்லது புத்தி பேதலித்து போனாலோ! குடி, சூது, போன்ற கெட்ட பழக்கங்களில் ஈடு பட்டு குடும்ப மானத்தை வாங்கி சீரழிந்து போனாலோ! அவனுக்கு சேர வேண்டிய சொத்துக்கள் முழுவதும் அநாதை ஆசிரமத்துக்கு சேர வேண்டும், மற்ற சொத்துக்கள் அசோக் பெயரில் எழுதி வைத்திருக்கிறேன். அவன் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் அது அவன் விருப்பம். என்று உயில் எழுதியவர் அஜித்தை அசோக்கிடம் ஒப்படைத்து தன் மகன் போல் வளர்க்க சொல்லவும் சந்தோசமாக அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டான் அசோக்.
ஏதோ பிச்சை போடுவது போல் நாற்பது விகிதமான சொத்துக்களை மாத்திரம் அசோக்கின் பெயரில் எழுதி வைத்து, குழந்தையையும் தங்கள் பொறுப்பில் விடும் லலிதாஞ்சலியின் மேல் கொலைவெறியே வர, சமேலிக்கு அசோக் வேறு தன்னை மனைவியாக ஏற்றக்கொள்ளாத கோபம் மனதில் கனன்று கொண்டிருக்க, அன்றே முடிவு செய்தாள் அஜித்தின் சொத்துக்கள் மொத்தமும் தன் மகன் அஜய் மாத்திரம் தான் அனுபவிக்க, வேண்டும் என்று.
இதற்கிடையில் தான் அசோக் மீண்டும் இந்திராவை சந்தித்து வலுக்கட்டாயமாக திருமணம் செய்திருந்தான். கொஞ்சம் நாட்களில் இறந்து போவாள் என்றிருந்தவள் கருவுற்றதும் சந்தோசம் கொள்வதற்கு பதிலாக கவலைதான் அடைந்தான் அசோக்.
அவளின் நிலையில் குழந்தையை சுமக்கலாமா? சுமந்தாள் தாய் மற்றும் சேயின் நிலைதான் என்ன? என்ற எண்ணம் அவனை வாட்ட, இந்திராதான் தைரியமாக குழந்தையை பெற்றெடுத்தாள்.
பிரசவத்தால் அவள் நோயும் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்ததாக மருத்துவர் கூற, அவளை குணமாக்கிடலாம் என்று எண்ணினான் அசோக், அதன் படி அவளை அழைத்துக்கொண்டு அன்னையின் முன் நின்று உண்மையை கூறி மன்னிப்பும் வேண்டி நின்றான்.
இருவருக்கும் மனமுவர்ந்து ஆசிர்வாதம் செய்த லலிதாஞ்சலி அக்ஷையை மடியில் வைத்து செல்லம் கொஞ்ச அசோக்குக்கும் ஆச்சரியம்தான்.
அந்த தாய்க்கு என்ன புரிந்ததோ “என் மனசுக்கு என்ன சரினு படுதோ அத மட்டும் தான் செய்வேன். நான் அவசரப்பட்டு தப்பா பண்ணது உன் கல்யாணம் மட்டும் தான். உன் கல்யாண வாழ்க நிலையில்லாதனு உன் ஜாதகம் சொல்லுது. அதனாலதான் சிறந்த ஜாதககாரிய தேர்ந்தெடுத்தேன். விதியை வெல்ல முடியுமா?” அதுதான் அவர் அசோக்கிடம் கடைசியாக பேசியது. அதன் பின் பல வருடங்களாக படுத்த படுக்கையில் நோய் வாய்ப்பட்டிருந்தார்.
அடிக்கடி அன்னையை சென்று அசோக் மாத்திரம் பார்த்து விட்டு வர ஒருநாள் அன்னை இறந்த செய்தி அஷோக்கு கிட்டியது. அவர் இறக்கும் பொழுது அஜித்துக்கு பத்து வயது. எங்கே அவனை அழைத்து சென்றால் வீட்டில் உள்ள புகைபடங்களை பார்த்தே உண்மையை அறிந்து கொள்வானோ என்று அவனை வீட்டிலையே விட்டுவிட்டு அஜய்யை மாத்திரம் அழைத்துக்கொண்டு அசோக்கோடு புறப்பட்டாள் சமேலி.
அப்பொழுது அக்ஷய் வெளிநாட்டில் இருந்தான். இந்திராவும் இறந்து விட்டாள். அன்றுதான் அஜய்க்கு அஜித்தை பற்றிய உண்மை தெரிய வர அன்னையை குடைய ஆரம்பித்தான். அசோக் இவற்றை கவனிக்கும் மனநிலையில் இல்லை. மகனை அடக்கியவள் வீட்டுக்கு வந்து உண்மைகளை கூறி அஜித்தின் சொத்துக்களை கைப்பற்ற வேண்டும் என்பதை அஜய்யின் தலையில் புகுத்தலானாள்.
பதிமூன்றே வயதான அஜய் அன்னை சொல் தட்டாதவன். இத்தனை நாளும் அஜித் தனது உடன் பிறந்தவன் என்று எண்ணி இருக்க, அன்னை அவனிடம் தன்னை விட அதிகம் பாசம் காட்டுவதாக பொறாமை கொண்டு மனதால் வெம்பிக்கொண்டிருந்ததெல்லாம் வீண் அன்னை என்றும் தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கிறாள் என்று புரிய அகமகிந்தான்.