அத்தியாயம் 24
அக்ஷய் மதிக்கு ஷாக் கொடுப்பதை போல் அஜய் வீட்டிலையே பெரிய பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான். வீட்டை காவல் படுத்தவென்றும். கால்யாணத்துக்காகவென்றும்,  கெட்ட பார்வைகளிலிருந்து குடும்பகத்தை பாதுகாக்கவென்றும் பல காரணங்களை கூறி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான். அது மட்டுமல்லாது காஜல் குடும்பத்தாரையும், அக்ஷய் மற்றும் மதியையும் அழைத்திருந்தான். இதை அக்ஷய் மற்றும் மதி சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. 
பூஜையை உதித் வீட்டில் செய்வான். குழந்தையை நரபலி கொடுக்க போகிறான் என்று புரளியை கிளப்பி அதிரடியாக போலீஸ் உள்ளே புகுந்து உதித்தை கைது செய்து விசாரிக்கலாம். அவ்வாறு செய்தால் உதித் உளறலாம் என்று அக்ஷய் திட்டமிட, அக்ஷையின் திட்டத்தை முறியடித்திருந்தான் அஜய். போதாததற்கு அவன் தந்தை உதித்தான் எல்லா ஏற்பாட்டடியும் செய்து கொண்டிருக்கிறான்.
உதித்தை கண்டு அக்ஷய் முகம் மாற வேண்டும். அல்லது கேள்வி கேக்க வேண்டும் என்பது தான் அஜய்யின் திட்டமாக இருந்தது. ஆனால் அவன் நேரடியாக உதித்ததை சம்பந்தப்படுத்தாமல் அஜித்தை கொண்டுதான் வேலை வாங்கிக்கொண்டிருந்தான். 
இதில் அஜய் அறியாதது. மதியோ அக்ஷயோ உதித்ததை நேரில் சந்தித்தது இல்லை. எப்படி இருப்பார் என்று கூட தெரியாது. இதில் இவர்களின் முகங்கள் மாற்றம் ஏற்படவும் இல்லை. கேள்வி கேட்கவும் இல்லை. காரணம் நடப்பது பூஜை என்பதால், தந்தையையும், சிம்ரனையும் அந்தப்பக்கம் வரக்கூடாது என்று மதியின் உத்தரவு. இனி யார் இவர்களுக்கு உதித்ததை அடையாளம் காட்டுவார்கள். அஜய் போட்ட திட்டம் அக்ஷய் மதிக்கு வெற்றியைத்தான் ஈட்டிக்கொடுத்தது.
ஓவர் ஆக்ட்டிங் என்பது போல் சமேலியிடம் கூடுதல் அக்கறை, அஜித்திடம் பணிவு என்று  உதித்தின் சில செய்கைகள் அக்ஷையின் கவனத்தை ஈற்கத்தான் செய்தது. 
அஜய்யிடமே உதித்ததை கைகாட்டி அஜித்தோடு இருப்பவர் யார் இதற்கு முதல் பார்த்ததில்லை என்று கேட்க அஜய்க்குமே உதித்தின் நடவடிக்கையால்தான் கேட்கிறான் என்று புரிய, அஜித்தின் கையாளாக இருப்பான் என்றே! கூறினான். 
அஜித்தின் கையாளுக்கு சமேலியுடன் என்ன வேலை? என்ற கேள்வி தோன்ற? அஜித் அவனை உதித் என்று அழைப்பது காதில் விழவும் இவர் யார் என்று புரிந்து கொண்ட அக்ஷய் அப்படியாயின் வீட்டுக்குள்ளையே வந்து போகிறான் என்றால், சமேலியோடும் பழகும் விதத்தில் தந்தைக்கு விஷம் வைத்ததில் அனைவரினதும் கூட்டு சதி என்று தெள்ளத்தெளிவாக புரிய பொறுமையாக புன்னகையினூடாகவே அமர்ந்திருந்தான்.
மதி காஜலோடு ஐக்கியமாகி இருந்தாள்.  அவள் கவலையோ காஜலுக்கு உண்மை தெரிய வரும் பொழுது அவள் நிலை என்ன ஆகுமோ என்றிருக்க, அவளோடு சகஜமாக பேச முடியாமல் திணறலானாள். 
மதி அக்ஷையிடம் காஜலிடம் அஜய்யை பற்றி கூறலாமா என்று கேட்க, அக்ஷய் கூறியது “மதி காஜலும் உன்னை போல் போல்டான பொண்ணுதான் தவறான முடிவெல்லாம் எடுக்க மாட்டாள். ஆனா இப்போ சொன்னா புரிஞ்சிக்க மாட்டா. உண்மை தெரிய வரும் பொழுது மட்டும் தான் ஏற்றுக்கொள்வாள். காதலிக்கும் பெண்கள் அப்படிதான்” என்று மதியின் முறைப்படியும் பரிசாக பெற்றுக்கொண்டான்.
பூஜை ஆரம்பிக்க இன்னும் அரைமணித்தியாலங்களுக்கு மேலாகும் என்று சொல்ல அசோக் அக்ஷையை தனது காரியாலய அறைக்கு அழைத்தார். 
இருவரும் உள்ளே நுழைந்து அமர்ந்தவாறே “அக்ஷய் நா உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” அசோக் சொல்லி முடித்த உடன் 
கதவு தட்டுப்பாட்டு இரண்டு குவளையில் ஜூஸ் ஏந்திய தட்டுகளை சுமந்தவாறு உள்ளே வந்த உதித் “இதை பருகியவாறே பேசுங்க சார்” என்று விட்டு கதவை சாத்திக்கொண்டு சென்றான். 
“அக்ஷய் நான்” 
இரண்டு குவளைகளுக்கும் நடுவே ஒரு சிறிய மலர் சாடி இருக்கவே உதடு வளைத்து புன்னகைத்த அக்ஷய் அதில் ஒட்டுக்கேக்கும் உபகரணம் பொருத்தி இருப்பதை புரிந்துக்கொண்டான்.
“பார்க்க நல்ல மனுசனா இருக்காருல்ல. குறிப்பறிஞ்சி வேல செய்யிறாரு இந்த மாதிரி மனுசங்க கூடவே இருந்தா நாம முன்னேறிக்கிட்டே இருக்கலாம்” அக்ஷய் சம்பந்தமே இல்லாமல் பேசவும் அவனை யோசனையாக அசோக் பார்த்திருக்கவும் அக்ஷய் அவனது அலைபேசியை எடுத்து எதையோ டைப் செய்து தந்தைக்கு காட்டினான். 
அதில் எந்த ஒரு முக்கியமான விஷயத்தையும் இங்கே பேச வேண்டாம். யாரோ ஒட்டு கேக்கிறார்கள் என்று இருக்க, புருவம் உயர்த்திய அசோக் 
“நீ ஆபீஸ் வரதா அஜய் சொன்னான் ரொம்ப சந்தோசம் அக்ஷய்” என்று கூற 
“எதோ அஜய் கேட்டு கிட்டதால வரேன் பா.. அவன் கல்யாணம் வரைக்கும் இங்க இருக்கணும்னு முடிவு பண்ணி இருக்கேன். இங்க உங்க எல்லார் கூடயும் இருக்கலாம்னு மதி சொல்லுறா. அதுவரைக்குமாவது ஆபீஸ் வரலாம்னு முடிவு பண்ணினேன்”
“அவன் கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கே! அதுவரைக்கும் உன் பிஸ்னஸ்?” 
“இங்க இருந்தே பாத்துப்பேன். மதிக்கு ஒரு மாற்றம் தேவைன்னு டாக்டர் சொல்லுறாரு அதான்” என்றவன் அலைபேசியில் அதை பற்றி அப்பொறம் சொல்வதாக சொல்ல 
“சரி” என்று தலையசைத்த அசோக் “நீயும் மதியும் மாற்றம் தேவைன்னு வெளிநாட்டுக்கு போகாம எங்க கூட இருக்கணும்னு முடிவெடுத்து சந்தோசம். அஜய் கல்யாணத்தை சேர்த்து உன் கல்யாணத்தையும் பண்ணலாமா?”
“நா வேணானா சொல்ல போறேன்” என்று சிரிக்க, 
“அப்போ அன்னைக்கே பண்ணலாம். இத பேசத்தான் வர சொன்னேன். உன்ன பத்தி வந்த புரளிகளை நினைச்சி ஒவ்வொரு நாளும் நான் பட்ட மனவேதனை இருக்கே!”
“டோன்ட் ஒர்ரி பா.. அதான் ஒன்னும் இல்லனு ஆகிருச்சே” 
“இந்த அஜித்தான் எந்த பிடிப்பும் இல்லாம இருக்கான், அவனுக்கும் ஒரு கல்யாணத்த பண்ணிட்டா, நான் உலகத்தை சுத்த போய்டலாம்னு இருக்கேன்” 
“சரி வாங்க பூஜை ஆரம்பிக்க போகுது. நம்மள தேடுவாங்க” என்றவன் தந்தையோடு பூஜை நடக்கும் இடத்தை நோக்கி செல்ல காரியாலய அறையிலிருந்து வெளிப்பட்டான்.
பக்கத்து அறையிலிருந்து உதித்தோடு அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அஜய் 
“அப்போ அக்ஷய் சொன்னது போல மதிக்கு உண்மையிலயே மனநோய் இருக்கு அதுக்காகத்தான் அவன் டில்லில தங்க முடிவு செஞ்சி இருக்கான். மதியோட மனநோய் பத்தி அசோக் அப்பாக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. அந்த டைம்ம வேஸ்ட் பண்ண கூடாதுன்னு ஆபீஸ் வர முடிவு பண்ணிட்டான். அவனுக்கு உன்ன அடையாளம் தெரியல. சோ சிம்ரன் ஆவியை பார்த்ததாக மதி சொன்னது சுத்த பித்தலாட்டம்”   
“அப்படித்தான் தெரியுது மகனே!” உதித் சொல்ல 
“ஆனாலும் கல்யாண விசயத்த எதுக்கு தனியா போய் பேசணும்? சொத்து விஷயமா தான் பேச போறாங்களோனு நினச்சேன்” அஜய்யின் மூளை விழிக்க, 
“அதுவும் நல்லதுக்குதான். சொத்து விஷயம் மட்டும் அந்த அக்ஷய் பயலுக்கு தெரிஞ்சது உஷாராகிடுவான்” உதித் யோசனையாக சொல்ல ஆமோதித்தான் அஜய்.  
காஜல் மதியை அழைத்துக் கொண்டு வீட்டை சுற்றிப்பார்க்க கிளம்பி இருந்தாள். தான் வாழப் போகும் வீடு என்று பெருமையாக காஜல் பேசிக்கொண்டு வருவதும், மதி இழுத்து வைத்த புன்னகையில் என்ன சொல்வதென்று இருக்கவும் 
“ஹேய் மதி என்ன நீ நான் சந்தோசமா பேசிக்கிட்டு இருக்கேன். நீ ஆர்வமே இல்லாம கேட்டு கிட்டு இருக்க, ஓஹ் சாரி அக்ஷய் இந்த வீட்டுக்கு வர விரும்பல்னு அஜய் அடிக்கடி சொல்லுவாரு. அதனாலதான் அம்மணி முகத்தை தூக்கி வச்சி கிட்டு இறுக்கிக்கியா? இப்போதான் ஒண்ணுக்குள்ள ஒன்னாகிட்டோமே! இனி எல்லாரும் ஒன்னாகவே இருக்கலாமே!” காஜல் சந்தோஷமாகவே சொல்ல அதற்கும் புன்னகைத்த மதியின் சிந்தனையில் குடும்பத்த்தில் நடக்கும் பிரச்சினை வரை காஜலிடம் பேசி இருக்கிறான் என்றால் இவ்வளவு வன்மம் அஜய்யின் மனதில் இருக்க வேண்டும் என்று தோன்றியது. 
“பாவம் அஜய் எப்போ பாத்தாலும் குடும்பத்தை பத்திதான் பேசுவாரு. அஜித் இப்படி பொறுப்பில்லாம இருக்கான். அக்ஷய் வீட்டுக்கு வர்ரதில்லன்னு புலம்புவாரு” காஜல் தன் பாட்டுக்கு பேச 
“ஓஹ்.. சிம்பதியா பேசி இவ மனசுல இடம் பிடிச்சி இருக்கான். இந்த லூசு அவனை பாவம்னு நம்பி கிட்டு இருக்கு”  
“என்ன ரெண்டு மருமகள்களும் வாழ போற வீட்டை சுத்தி பாத்துட்டீங்களா?” காரியாலய அறையிலிருந்து வெளிப்பட்டவாறே அசோக் கேக்க, ஆமாம் எனும் விதமாக தலையசைத்தனர் இருவரும். 
“இது நான் சம்பாதிச்சு கட்டின என் சொந்த வீடு. என் பரம்பரை வீடு நொய்டால இருக்கு. அக்ஷய் கூட அங்க போனதில்லை. அக்ஷய் மதிய கூட்டிக்கிட்டு நாளைக்கு போயிட்டு வாயேன்” அசோக் சாதாரணமாகத்தான் சொன்னார். 
“நானும் இதுவரைக்கும் எங்க பரம்பரை வீட்டை பார்த்ததே இல்லப்பா…, இதுவரைக்கும் நீங்க என்ன கூட்டிட்டு போனதும் கிடையாது. பாட்டி இறந்த அன்னைக்கி கூட அம்மா என்ன விட்டுட்டு அண்ணனை மட்டும்தான் கூட்டிட்டு போனாங்க” தந்தையை குறை கூறியவாறே மதியை முறைக்கலானான் அங்கே வந்த அஜித். 
“உனக்கில்லாத உரிமையாடா? உன்ன யார் போக கூடாதென்று தடுத்தது? உங்க அம்மா வா? நீ எப்போ வேணா போய் பார்க்கலாம். எப்போ வேணா அங்க போய் தங்கலாம்” என்று சமேலியை ஒரு பார்வை பார்த்தவாறே உள்ளர்த்தத்தோடு சொல்லியவர் “ஏன் நீ அக்ஷய் மதியோடு போய் வரக்கூடாது” என்று வேறு கேட்டு வைக்க முகம் மாறினான் அஜித்.
பூஜைக்கு நேரமாவதாக இவர்களை அழைக்க வந்த சமேலியின் காதில் இது விழ அஜய்யின் முகத்தை கலவரமாக பார்த்தாள்.
 அன்னையை கண்களாளேயே! அடக்கியவன் “இல்லப்பா அக்ஷய் நாளைல இருந்து ஆபீஸ் வராதா சொல்லி இருக்கான். இன்னொரு நாள் போகட்டுமே” என்று புன்னகைக்க 
அன்னை மகன் இருவரின் பார்வை பரிமாற்றங்களையும் தந்தை மகன் கண்களுக்கு தப்பவில்லை. அசோக்கிற்கு எதோ புரிவது போல் இருந்தது. காரியாலய அறையில் யாரோ ஒரு கேட்பதும், தனக்கு வீட்டிலையே விஷம் வைக்க பார்ப்பதும், அக்ஷையின் முகத்தைத்தான் பார்த்தார். 
“நான் இதுவரைக்கும் போனதில்லை. மதியையும் கூட்டிகிட்டு போகும் பொழுது நமக்கு கல்யாணம் ஆகி இருந்த நல்லா இருக்கும் பா” என்று தந்தைக்கு கண்சிமிட்ட அவன் தோளில் தட்டிய அசோக் பூஜை நடக்கும் இடத்துக்கு நடக்க அனைவரும் அவரை பின் தொடர மதியின் கையை பிடித்துக் கொண்டான் அக்ஷய். 
அந்த வீட்டுக்குள் அவள் வழிதவறி விடக்கூடாது என்பது போல் இருந்தது அவன் பிடி. புருவம் உயர்த்தி அவனை பார்த்தவள் புன்னகைக்க, “என்ன’ என்று அவளையே கண்களால் கேட்டவன் அவள் “ஒன்றுமில்லை” என்று தலையசைக்கவும் தனக்குள் புன்னகைத்துக்கொண்டான்.   
   இதோ ஏதோ சாதாரண பூஜையாக தெரிந்தாலும், ஆவியை விரட்ட ஏற்பாடு செய்யப்படுவது அக்ஷய் அறிந்திருந்தமையால் தந்தையின் அருகிலையே அமர்ந்து கொண்டவன், தன் அருகில் மதியையும் அமர்த்திக் கொண்டான்.
அசோக், மற்றும் காஜல் குடும்பத்தாருக்கு அங்கே எந்த மாதிரியான பூஜை நடைபெறப்போகிறது என்று தெரியவில்லை. அக்ஷையும் தந்தையிடம் எதுவும் சொல்லவில்லை. என்று சொல்வதை விட சொல்ல சந்தர்ப்பம் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  
சிம்ரன் ஆவியை வரவழைத்து அடக்க பார்ப்பார்கள் ஆனால் அவள்தான் பாதுகாப்பாக இருக்கிறாளே! இந்த பூஜையால் அவளை ஒன்றும் செய்து முடியாத படி மதி ருத்ரமகாதேவி கொடுத்த காப்பை கழற்றி சிம்ரனை ஒரு குடுவைக்குள் அடைத்து அந்த காப்பை அதன் மீது வைத்து விட்டு வந்திருக்கிறாள். எந்த சக்தியாலும் சிம்ரனை இங்கே வரவழைக்கவோ! அழிக்கவோ முடியாது. போதாததற்கு குடுவைக்கு காவலாக ராஜவேலுவை நியமித்தது மட்டுமல்லாது பாஸ்கரையும் அக்ஷய் வைத்து விட்டுத்தான் வந்திருக்கிறான். இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததன் பின்னால் சிம்ரனை இவர்கள் எதுவும் செய்துவிட முடியுமா? என்று அமர்ந்திருந்தாள் மதி.
பூஜை ஆரம்பித்து சிறிது நேரம் சென்றும் எந்த ஒரு ஆவியும் அங்கு வருவதாக தெரியவில்லை. அஜய் உதித்தை நன்றாக முறைக்க, மதியால் சிரிப்பை அடக்குவதுதான் சிரமமாக இருந்தது. அக்ஷய் அவள் கையை அழுத்தி எச்சரிக்கை செய்து அமைதியாக இருக்கும் படி கூறினான். 
சமேலி அஜய்யின் காதில் இந்திராவின் பெயரை கூற அது சரியாக அந்த நேரம் அசோக்கின் காதில் விழுந்து அசோக்கின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது. 
அஜய்யும் ஒருவேளை இந்திராவின் ஆவிதான் இதெல்லாம் செய்வதாக எண்ணி அவளின் ஆவியை அடக்குமாறு பூஜை செய்யும் பூஜாரியை கேட்டுக்கொள்ள அவரும் இந்திராவின் ஆவியை அழைக்கும் வேலையில் இறங்கி இருக்க, அப்பொழுதுதான் அசோக்குக்கு அங்கே என்ன பூஜை நடைபெறுகிறது என்றே புரிந்தது. இதையெல்லாம் கண்டும் கானதும் போல் அமர்ந்திருந்தான் அக்ஷய்.   
கோபமாக எழுந்த அசோக் பூஜை பொருட்களை தாறுமாறாக எடுத்தெறிய என்ன நடக்கிறது என்று அனைவரும் ஒருகணம் திகைத்து விழித்தவாறே  எழுந்து நிற்க, சமேலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டிருந்தார் அசோக். 
அவர் விட்ட அடியில் சமேலி சுழன்று விழ அவளை தாங்கி பிடித்திருந்தாள் மதி.   
 தந்தையை இலகுவாக அக்ஷய் தடுத்திருக்கலாம். “இந்த பொம்பளைக்கு இந்த அடி தேவைதான்” எனும் விதமாக நின்றிருக்க, அவனை முறைத்தாள் மதி.  
“எதுக்கு டி இப்போ என்ன முறைக்கிற?” அக்ஷய் கண்களாளேயே மதியிடம் கேள்வி கேட்க 
“உங்களை அப்பொறம் வச்சிக்கிறேன்” அவளும் கண்களாளேயே மிரட்டி விட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள். 
மதியை விட்டு விட்டு தந்தையின் அருகில் சென்று அவரை பிடித்து அமைதி படுத்த முயற்சி செய்ய 
“என்ன காரியம் செய்யுறா பாத்தியா? உன் அம்மா ஆவியா வந்து இவளுக்கு தொல்லை செய்வாளாம். அதுக்கு ஒரு பூஜை ஏற்பாடு செஞ்சி அதுல நம்மளையே உக்கார வச்சிருக்கா, நாமளும் அது தெரியாம உக்காந்து கிட்டு இருக்கோம். அந்த புண்ணியவதி, அவளுக்கு அப்படி ஒரு நோய் இருக்குனு தெரிஞ்சிருந்தா? என்ன விட்டுட்டு போய் இருந்திருப்பாளா? போனவளை நானும் ஆஸ்பிடல்ல பார்த்து கட்டாய படுத்தி ஏன் கல்யாணம் பண்ணி கிட்டேன். இதோ இவ உலகத்துக்குத்தான் என் பொண்டாட்டி. எனக்கில்லை, என் பொண்டாட்டி இந்திரா மட்டும்தான்” சாட்டையடியாக அசோக்கின் வார்த்தை வர சமேலி நடுங்கிப்போனாள். 
எந்த உண்மை உலகத்து தெரிய கூடாது என்று இத்தனை நாள் மிகவும் கவனமாக நடந்து கொண்டாளோ! அதை அந்த உண்மையை தன் கணவன் அஜய்யின் சம்மந்தி வீட்டாரின் முன்னிலையிலையே! கூறுகையில் கூனிக்குறுகித்தான் போனாள் சமேலி.
அஜய் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்காதவனாக அதிர்ச்சியடைந்து பாத்திருக்க, “அம்மாவும், மகனும் என் கிட்டத்தான் எகிறுவானுங்க இவன் பேசினா வாயடச்சி போய்டுவானுங்க” அந்த சூழ்நிலையிலும் அஜய்யையும், சமேலியையும் மனதுக்குள் வசைபாட மறக்கவில்லை உதித். 
“என்னங்க என்ன சம்மந்தி என்னன்னெண்ணமோ  சொல்லுறாரு” காஜலின் அன்னை கணவனின் தோளை பிராண்ட 
“அமைதியா இரு வீட்டுக்கு போய் எல்லாம் சொல்லுறேன்” என்று அவர் மனைவியை அடக்க, புரியாமல் முழித்துக்கொண்டிருந்தாள் காஜல்.
அஜித் அப்பா என்ன சொல்கிறார் என்று குழம்பிப்போய் பார்த்திருக்க “அவ சாகும் போது கேட்டு கிட்டது ஒண்ணே ஒண்ணுதான். அக்ஷய்க்கு ஒரு பொண்ணு அவன் வாழ்க்கைல வந்த பிறகு என் அஸ்தியை கங்கைல கரைச்சிடுங்கனு, அத கூட நிறைவேற்றாத முடியாம போய்டுமோனு துடிச்சிகிட்டு இருந்தேன். உனக்கும் மதிக்கும் நிச்சயம் முடிஞ்ச கையேடு நாம போலாம்னு உன் கிட்ட கேட்கலாம்னு இருக்கும் போது இந்திராவோட தம்பி வந்து என்ன சந்திச்சான். அக்காகாக எதுவும் பண்ணல இந்த ஒரு கடமையையாவது பண்ண அனுமதி வழங்குங்கன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டதால, அவன் கைல அஸ்தியை கொடுத்து அனுப்பிட்டேன். நேத்து கங்கையில் கரைச்சிட்டதா போன் பண்ணி சொன்னான்” என்று அசோக் கண்கள் கலங்கியவாறு 
  
“இத்தனை  வருடங்களில் வராத உங்கம்மாவுடைய ஆவி இப்போதான் வந்து இவளை கொல்ல பாக்குதா? இவ என் கண்ணு முன்னால இருக்க கூடாது” என்று கத்த
இத்தனை வருடமாக தன்னோடு இருந்தும் அன்னை கண்முன் வராமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தவள் திடிரென்று சிம்ரன் உருவத்தில் வந்து சில உண்மைகளை கூறி விட்டு முக்தியடைந்த சென்றதன் பின்னணி இதுதானா? தன்னிடம் விடைபெற்று செல்லத்தான் கண்முன் வந்தாளா? தந்தை சொன்னவைகளால் உண்மையை அறிந்து கொண்டவன் மதியை நோக்க,
மதி அக்ஷய்க்கு தந்தையை கவனிக்குமாறு கண்களால் கூறி விட்டு சமேலியை அவளுடைய அறைக்கு அழைத்து செல்ல, அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்ட அஜித் இவள் எதற்கு அம்மாவை கூட்டிக்கொண்டு போகிறாள் என்று மதியின் பின்னால் செல்ல காஜலும் சமேலியின் மறுபுறம் தங்கி பிடித்தவாறு அறைக்கு அழைத்து சென்றாள். 
சமேலியை கட்டிலில் படுக்க வைத்து போர்வையையும் போர்த்தி விட்டு மதி நிமிர, 
“ஏன் மதி அக்ஷையோட அம்மாவை தான் அத்த தப்பா..” என்று காஜல் பேச முயற்சி செய்ய ஆரம்பிக்கவும் அஜித் காதுகளை தீட்டிக்கொண்டான். 
“ஏன் காஜல் நீயும் பிரித்து பாக்குற, அவங்க எதோ குடும்ப நலனுக்கா பண்ணுறதா நினைச்சி பண்ணி இருக்கலாம்ல, அத ஏன் தப்பா எடுத்துக்கணும்” மதி நல்ல விதமாக பேச வேண்டிய சூழ்நிலையில் இருக்க, நல்ல விதமாகவே பேச மதியை பற்றி நல்ல அபிப்ராயம் கொண்டான் அஜித்.
அஜய்யின் அருகில் வந்த பூஜாரி இதற்கு முன்னால் இந்த வீட்டில் ஆவிகளின் அட்டகாசம் இருந்ததா? எனக்கேட்க அஜய் இல்லை என பதில் அழித்தான்.
“அந்த அஸ்தியை கங்கையில் கரைத்ததன் பின்னால் அந்த ஆத்மா முக்தி அடைந்திருக்கும். அந்த ஆத்மா இனி வர இயலாது. நீங்க சொன்ன பெண்ணின் ஆத்மாவும் அழைத்து பார்த்து வரவில்லை. இது ஆத்மாவின் வேலையாக தெரியவில்லை” என்று விடைபெற முற்றாக குழம்பிப்போனான் அஜய்.