அதிர்ச்சியில் திறந்த வாயை பொத்தியபடி ரூபா நிற்க தன் தந்தையும் மாமாவும் அவரை எவ்வாறு சமாளிப்பது என்ற இக்கட்டில் நிற்க தர்மதுரை முன்வந்த ஹர்ஷிதா இரு கைகளையும் கூப்பி கண்களை இறுக்க மூடிக்கொண்டு தனக்கு தெரிந்த ஒரே ஸ்லோகமான
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ
தட்சிணாமூர்த்தியின் துதியை பாடினாள்.
இவளுக்கு என்னவாயிற்று என்று அனைவருமே குழம்பி கிடக்க ” என்னை மன்னித்து விடுங்கள் சார். ஆனால் எனக்கு இதைத் தவிர வேறு வழி தெரிந்திருக்கவில்லை. என் அத்தை எவ்வளவு தடுத்தும் செய்தே தீரும் வெறியில் ஓடி வந்து இதில் வெற்றியும் கண்டு விட்டேன். இனி வெற்றி நமதே அமைச்சர் தர்மதுரை வாழ்க என்று முழக்கமிட ஆரம்பித்தாள் ஹர்ஷிதா.
“என்ன பாப்பா சொல்கிறாய் எனக்கு ஒன்றும் புரியவில்லையே” என்றார் அப்போதைய எம்எல்ஏ தர்மதுரை.
யோவ் தர்மதுரை நாகமாய் சீறுவாய் என்று பார்த்தால் இப்படி அந்த ராட்சஸியின் மகுடிக்கு மொத்தமாக அடங்கி விட்டாயே தன்னுள் நொந்து கொண்டான் அத்விக்.
ஹர்ஷிதா ஏதாவது உளறி வைக்கும் முன் நல்லவிதமாகப் பேசி விடலாம் என்று ஹரிஹரன் “அது வந்து சார்’ என்று ஆரம்பித்ததும் “அப்பா ப்ளீஸ். என்னை தடுக்காதீர்கள். உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். விளைவு எதுவாக இருந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளப் போகிறேன். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தானே ஆகவேண்டும்” என்ற வசனத்தையும் கோர்வையாக பேசிவிட்டு “நான் சொல்லப் போவதை நம்புவதற்கு உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம் . ஆனாலும் கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள் வருங்கால அமைச்சரே…… எங்கள் வீட்டில் குலதெய்வ வழிபாட்டிற்கு செல்லும்போதெல்லாம் குறி பார்ப்பது வழக்கம் .அப்படி இரு தினங்களுக்கு முன் பார்த்ததில் உங்கள் வீட்டிற்கு வருகை தரும் ஒரு மாமனிதர் தான் நம் நாட்டை ஆளப் போகும் அனைத்து திறன்களையும் பெற்றவர். இப்போது அவர் சாதாரண பணியில் இருக்கலாம். ஆனால் படிப்படியாக உயர்ந்து மாபெரும் சாதனைகள் புரிவார். மக்களுக்கு தொண்டுகள் பல செய்து அனைவர் உள்ளத்திலும் நீங்கா இடம் பிடிப்பார். ஆனால் அப்படி அவர் உயர்வதற்கு உங்கள் குடும்பத்தினரின் உதவி தேவைப்படும். உங்களில் ஒருவர் அவருக்கு அபிஷேகம் செய்யவேண்டும். இறைவனுக்குப் படைப்பது போல் இல்லாமல் தனித்து இருக்க வேண்டும். அந்த அபிஷேகத்தை பிடிக்காவிட்டாலும் அம்மாமனிதர் மனமார ஏற்றுக் கொள்வார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்றார் குறி பார்ப்பவர். இலவச மருத்துவமனை கட்டுவதற்கு டொனேஷன் பெறுவதற்காக உங்கள் வரவை பற்றி கூறினார் என் அப்பா. அப்போது நான் தர்மதுரை சார் போன்று நாட்டிற்கு சேவை செய்பவரை காண்பது அரிது. அவர் எம்எல்ஏ ஆனபின் தான் நம் பகுதியில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கிறது. பேசாம இந்த அபிஷேகத்தை அவருக்கே செய்து விடுங்கள் என்றேன். நீ சின்ன பெண் என்றும் குறி பார்த்த விசயத்தில் தலையிடாதே என்றும் கூறிவிட்டார் அப்பா. அப்போதும் மனம் கேட்காமல் மாபெரும் பிழை செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் சார். மூச்சே விடாமல் மூன்று நிமிடம் பேசி தீர்த்தாள் ஹர்ஷிதா.
” நான் எதற்காக பாப்பா உன்னை மன்னிக்கணும்… எல்லாம் தனக்கு நல்லதாக நடந்துவிட வேண்டும் என்று நினைக்கும் இந்த சுயநலமிக்க உலகில் நம் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தானே செய்தாய் நீ கவலைப்படாதே… உன் ஆசையை நான் நிறைவேற்றுகிறேன். நம் நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தால் .. ” பேசி கொண்டு போன தர்மதுரையை முடிக்க விடாமல் “கிடைத்தால் என்ன சார் கிடைத்தால்… கிடைக்கும் என்று சொல்லுங்கள். எப்போது எங்கள் வீட்டு அபிஷேகத்தை ஏற்று கொண்டீரோ அப்போதே எனக்கு தெரிந்து விட்டது. நான் சரியானவரைதான் தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று அவரை ஐஸ் சுனாமியில் மூழ்கி எடுக்க அதன் பின் அவர் வீட்டில் என்ன விசேஷங்கள் நடந்தாலும் சரி இவளுக்கு தான் முதல் பத்திரிக்கை அனுப்பி வைப்பார்.
மேலும் “எனக்கு தெரிந்து நாளை மறுநாள் நடக்கவிருக்கும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு கூட இந்த ராட்சஸியிடம் வந்து குறி கேட்டுக் கொண்டுதான் தர்மதுரை சென்றிருப்பார்” என்று தன் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் அத்விக்.
வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்த ராகுல் “நாளை எப்படிடா அந்த ஆளுக்கு நான் சிரிக்காமல் சல்யூட் அடிப்பேன்” என்றபடி மேலும் நகைத்தான்.
“ஷி இஸ் சூப்பர் ஸ்மார்ட் தன் யூ சார்” என்று சர்டிபிகேட் வழங்கிய மிருதுளாவின் நீண்ட கூந்தலை மேலும் கீழும் பார்வையிட்டபடி “இவ்வளவு நீளமான முடியை எப்படி மெயிண்டைன் பண்ணுகிறாய்?” என்றான் அத்விக்.
இக்கேள்வியை எதிர்பாராதவள் சற்று ஆச்சரியமாக புன்னகைத்தவாறே “ஸ்கூல் படிக்கும்போது மடித்து வைத்து பின்னி போட்டதால் நீளமாக வளர்ந்தது. பிறகும் அப்படியே விட்டு விட்டேன். ஏன் சார் நன்றாக இல்லையா?” ராகுலை பார்த்தபடியே கேட்டாள் மிருதுளா.
“ரொம்ப அழகாக இருக்கிறது” என்று அத்விக் கூறவும் எரிச்சலுற்ற ராகுல் “ஏன்டா நீயும் இது போல வளர்க்க போகிறாயா?” என சிடுசிடுத்தான்.
“அடேய்!” என்ற அத்விக் தொடர்ந்து “ஹர்ஷிக்கும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் வரை இதுபோல் நீளமாக முடி இருந்தது.
தோழி ஒருத்தியின் பியூட்டி பார்லர் திறப்பு விழாவிற்கு சென்று விட்டு திரும்பிய ஹர்ஷிதாவை கண்டு மொத்த வீடும் அதிர்ந்தது. நமது போலீஸ் கட் தோற்றுவிடும் மச்சி. அதிலும் என் அப்பத்தாவிற்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டது. பின்னே தினமும் காலையில் கறிவேப்பிலையை அம்மியில் அரைத்து அந்த உருண்டையை அவளை விழுங்க வைப்பதற்குள் எவ்வளவு போராட்டங்களை சந்தித்திருக்கும்!
அம்மிக் குழவியை எடுத்துக்கொண்டு “இதை உன் தலையில் போட்டால் தான் என் ஆத்மா சாந்தியடையும்” என்று வீட்டை சுற்றி ரன்னிங் ரேஸ் நடத்தினார்கள் பாட்டியும் பேத்தியும்.
“இக்கால ஃபேஷன் பற்றி தெரியாத உன் ஆத்மா சாந்தி அடைந்தால் என்ன அடையாவிட்டால் என்ன” கத்திக்கொண்டே ஓடிய ஹர்ஷிதா அத்விக்கிடம் திரும்பி “உன் பொண்டாட்டிய உன் கண்ணு முன்னாடியே ஒரு ஓல்ட் ஃபெல்லோ துரத்துகிறது. அப்படியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்” என்று அத்விக்கை உதவிக்கு அழைத்தாள்.
“அடேய் பேரான்டி உன் மாமியார்காரியிடம் சொன்ன மாதிரி என்கிட்ட சொன்னாயானால் உன்னை தான் முதலில் போடுவேன் ஆமா. ஆகையால் எங்கள் விஷயத்தில் தலையிடும் வேலையை எப்போதும் வைத்துக் கொள்ளாதே” என்று கூறிவிட்டு மீண்டும் துரத்தினார் மரகதம்.
யாரும் உதவிக்கு வராத நிலையில் “இன்று சங்குதான் போல” பயத்தில் ஓடியவள் ஜெகனை கண்டதும் அவரிடம் பாய்ந்தபடி “என்னை காப்பாற்றுங்கள் பி . டி உங்கள் அம்மாவிடமிருந்து” என்றவாறு கட்டிக் கொண்டாள் ஹர்ஷிதா.
“என்ன அம்மா இது சின்ன பிள்ளையாட்டம்? ஓடி பிடித்து விளையாடும் வயசா இது… அதுவும் இவ்வளவு பெரிய வெயிட்டை தூக்கிக்கொண்டு! முதலில் அதைக் கீழே போடு” என்று ஜெகன் அதட்டவும் முதல் வேலையாக குழவி கல்லை கீழே போட்டவர் “அவள் செய்து வைத்திருக்கும் காரியத்தை பார்” என்று முறைத்தார் மரகதம் .
ஜெகனிற்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆயினும் அதை மறைத்து “என்ன டார்லிங் வேஷம் இது?” சிரித்தபடி தான் வினவினார்.
” ஏன் பி டி இது நன்றாக இல்லையா? அவ்வளவு லென்தியான முடியை என்னால் பார்த்து கொள்ளவே முடியவில்லை. குறைந்தபட்சம் குளிப்பதற்கு ஒரு மணி நேரம் தலை வாறுவதற்கு அரை மணி நேரம். மை பிரசியஸ் டைம இஸ் கோயிங் வித் திஸ் ப்ளடி ஹேர். எல்லாம் இந்த கிழவியால் தான்” ஹர்ஷிதாவும் சளைக்காமல் வாதாடினாள்.
பிறகு மீண்டும் “உங்களுக்கு பிடிக்கவில்லையா பி டி ” வருத்தமிகு தொனியில் கேட்டது ஜெகனை உருக்கி விட “உன்னை தான் டார்லிங் எப்போதுமே எனக்கு முதலில் பிடிக்கும் . ஆசை ஆசையாக எங்களுக்காக ஜனித்த எங்கள் வீட்டு தேவதை. கற்பனை தேவதைகள் எல்லோரும் நீண்ட கூந்தலுடனே வர்ணித்து பழக்கிவிட்டார்களா.. நீயும் இத்தனை நாட்கள் அதேபோன்று உலாவவும் ஒன்றும் வித்தியாசம் தெரிந்திருக்கவில்லை. அதனால் என்ன இனி பழகிவிட்டால் போகுது” என்றார் .
“ஆனாலும் பி . டி. யூ ப்ரிஃபர் லாங் ஹேர். அப்படி தானே” என்றவளிடம் “அப்படியும் வைத்துக்கொள்ளலாம்’ என்றவர் அவளது முக வாட்டத்தை கண்டு “இப்படியும் வைத்துகொள்ளலாம்” என்று ஹர்ஷிதாவின் தலையை கோதினார்.
சமாதானம் அடையாதவள் ” இனி வெட்டாமல் வளர்க்கிறேன் பி . டி .இட்ஸ் எ ப்ராமிஸ்” என்றாள்.
“இனி வளர்க்கிறேனா… அப்படி என்றால் இத்தனை காலம் நான் வளர்த்தது” கோபத்துடன் கேட்ட மரகதத்திடம் ” அதை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய். ஐ ஜஸ்ட் டொனேட் இட் டூ கேன்சர் பேஷன்ட்ஸ். இதைப்பற்றி திரும்பி பேசாதே” என்று சென்றாள் ஹர்ஷிதா.
“ஏன்டா அவளை ஒரு அதட்டு கூட போட மாட்டாயா” என்ற மரகதத்திடம் “அதட்டினால் நீ பயரிட்டது உனக்கு கிடைத்துவிடுமா? போம்மா பேசாமல் போய் மீண்டும் அதற்கு வேண்டிய வேலையை கவனி” என்றார் ஜெகன்.
” முடியாதுடா முடியாது. இனி அந்த கழுதைக்கு எதையும் நான் செய்து தரப்போவதில்லை” என்ற மரகதம் மறுநாள் காலை முதல் வேலையாக கருவேப்பிலையை பறிக்க தோட்டத்திற்கு விரைந்தார்.
“இப்போது பரவாயில்லை அவளது முதுகை தொடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது” என்றான் அத்விக் கண்களில் ரசனையுடன்.
‘ஹர்ஷி ஸீரிஸ்’ என்ற தொகுப்பினை எங்கள் பத்திரிகையில் வெளியிட்டால் கொள்ளை லாபம் பார்க்கலாம் அத்விக் சார்” என்று சிரித்தாள் மிருதுளா.
“என்ன டார்லிங் இது… அந்த ராட்சஸியை பார்க்கவும் இப்படி கட்சி மாறிவிட்டாயே” என்று ராகுலை ஓரக்கண்ணால் பார்த்தபடி போலியாக வருத்தப்பட்டான் அத்விக்.
” உன் நாடகம்தான் முடிந்துவிட்டது அல்லவா இன்னும் என்னடா டார்லிங்? ” என பாய்ந்தான் ராகுல்.
“யூ ஸி மச்சி. என்னோட டார்கெட் இன்னும் அச்சீவ் ஆகவில்லை . ஒரு முறை ஒரே ஒரு முறையாவது ராட்சஸி எனக்காக ஃபீல் பண்ணனும். அதுவரை இந்த லவ்வ கண்டினியூ பண்ணலாம் என்று நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?”
“உன்னை இந்த கோவிலுக்குள் வைத்து கொன்று புதைத்தால் என்ன என்று நினைக்கிறேன்”
“மச்சி வொய் டா?”
” ஏதோ ஒரு முறை கேட்டாய் சரி நடித்துக் கொள் என்று விட்டேன்… உனக்கு எத்தனை தங்கைகள் இருந்தாலும் பரவாயில்லை மிருதுளாவையும் அதில் சேர்த்துக் கொள். அப்படி முடியாது என்றால் இனி அவளைப் பற்றி நினைத்துக்கூட பார்க்காதே”
” அதை என் டார்லிங் சொல்லட்டும் . கேட்டுக்கொள்கிறேன்” என்ற அத்விக்கிடம் ” சார் அது வந்து….” என்று தொடங்கும்போது மிருதுளாவின் கைபேசி அழைத்தது.
எழுந்து சென்று பேசிவிட்டு வந்தவள் ” எனக்கு நேரமாகிவிட்டது. நான் கிளம்புகிறேன் சார்” என்று அவர்கள் இருவரின் பதிலைகூட எதிர்பார்க்காமல் புறப்பட்டாள் மிருதுளா.
ஆனால் ராகுலுக்கு அவளை அனுப்ப மனமில்லை போலும் அவள் பின்னோடு சென்று “ஒரு நிமிடம் ” என்றான்.
அவள் பின்னோடு சென்று எதையோ சொல்லி விட்டு வந்தான் ராகுல்.
“என்னடா?” என்று அத்விக் வினவியதற்கு “உனக்கு மட்டும்தான் ஆட்டோ பிடித்துக் கொடுக்க தெரியுமா எங்களுக்கும் தெரியும்…. ஆனால் உன் ராட்சசி போல் இல்லாமல் நான் நிறுத்திய ஆட்டோவிலேயே மித்து ஏறி சென்றாளே ” என்று பெருமையுடன் காலரை தூக்கிவிட்டான் ராகுல்.
“ஓ மித்து!!! நீ நடத்து மச்சி” என்ற அத்விக்கிடம் எதையும் கூறினான் இல்லை ராகுல்.
அத்விக்கும் மேற்கொண்டு அவர்கள் விஷயத்தை கிளறாது “அம்மாவிடம் சொல்லி விட்டு வந்தாயாடா?” என்றான் ராகுலிடம்.
” இல்லைடா சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று நான் சொல்லவில்லை”
“அப்படி என்றால் அந்த சர்ப்ரைஸை நாளை கொடு இப்போது வா எங்கள் வீட்டிற்கு போகலாம்”
” ஐயோ சாமி நீயே பல வருடம் கழித்து அமெரிக்காவில் வனவாசம் மேற்கொண்டு விட்டு வீடு திரும்புகிறாய். நடுவில் இந்த அனுமான் எதற்குடா? அதுமட்டுமில்லாமல் அங்கே விக்ரமன் படம் போல சென்டிமென்ட் சீன்ஸ் நிறைய காத்திருக்கும் . இந்த பிஞ்சு மனம் அதையெல்லாம் தாங்காது மச்சி” என்று அத்விக்கை வழியனுப்பி வைத்தான் ராகுல்.
ஒரே வடிவமைப்பிலான இரு பங்களாக்களின் பொதுவான ஒரு இரும்பு கதவில் கை வைத்ததும் தன்னுள் ஏற்பட்ட பரவசத்தை அத்விக்கால் விவரிக்க முடியவில்லை. கதவிற்கு பக்கத்திலேயே வாட்ச்மேனிற்காக ஒரு சிறு அறை கட்டப்பட்டிருந்தது. அங்கு வாசலில் அமர்ந்திருந்த ரவி எழுந்து “அத்விக் தம்பி நீங்களா!” அதிகபட்ச சந்தோஷத்தில் வார்த்தைகள் தேங்கி நிற்க அத்விக் கையில் இருந்த பையை பறித்துக்கொண்டு அவர் உள்ளே விரைந்தார். “ரவி அண்ணா மெதுவா…” அவன் பேச்சு அவர் காதிலேயே விழுந்திருக்காது “ரூபா அம்மா யார் வந்து இருக்கா பாருங்க….” கத்தியபடி வீட்டினுள் ஓடி இருந்தார் ரவி.
விட்டுச் சென்ற போது எப்படி இருந்ததோ அதில் ஏதும் துளி மாற்றம் இல்லாமல் அப்படியே வரவேற்றது அவனது வீடு.