அத்தியாயம் 06
திங்களன்று இன்முகமாக இணைந்து வரும் நண்பர்கள் இருவரையும் விஜய் ஆச்சரியமாகப் பார்க்க, கண்டிப்பாக ஆராதனாவின் வேலை இதில் உள்ளது என்றது உள் மனது! அது மட்டுமின்றி இருவர் முகத்திலிருந்த மலர்ச்சி அவன் மனதையும் குளிர்விக்க மகிழ்வுற்றான். 
வெளி மரத்தடியின் நின்றிருந்த விஜயின் அருகில் வந்த அகில், “எங்கடா மச்சான் ஆரா?” என்க, “ஏன் என்னை பார்த்தா மனுஷனா தெரியலையா?” என்றான். 
“தெரியலையே..!” அவனும் கேலியாக உரைக்க, முறைத்தவன் பின் வந்த தர்ஷினியை பார்த்து, “ஹொவ் ஆர் யூ?” என்றான். 
“குட், வேர் ஸ் ஆரா..?” அவளும் அதையே கேட்க, “அப்படி என்ன செய்துட்டா இரண்டுபேரும் அவளையே தேடுறீங்க?” என்றவனின் குரலில் சிறு பொறாமை கூட எட்டிப்பார்க்க, அகில் சிரித்தே விட்டான். 
“ஒன்னுமில்லைடா மச்சான் அவளுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்ல” என்க, “அவளால தான் எனக்கு உடம்புக்கே முடியாம போச்சு” என்றாள் தர்ஷினி.
“ஹோ, அதான் அன்னைக்கு உன் பின்னவே சுத்திட்டு இருந்தாளா?” என்றவன் கேட்கும் போதே, சரியாக பார்கிங் ஏரியாவிலிருந்து அவர்களை நோக்கிப் புன்னகை முகமாக வந்தாள் ஆராதனா. 
இருவரையும் பார்த்தவள், “அப்பாடா, ஒருவழியாக சமாதானமாகிட்டீங்க போல?” எனக் கண்சிமிட்டி அறியாதவள் போலே கேட்க, தர்ஷினி முறைக்க, “எல்லாம் உன்னால தான்..” என அகில் புகழ்ந்தான். 
“ஹாஹா…சரி, சரி இப்போவாது உங்க மேரேஜ்க்கு கொடுக்குறேன்னு சொல்லி ஏமாத்தின பார்டி கொடுப்பிங்களா இல்லையா?” எனக் கேலியாகக் கேட்க, “கண்டிப்பா இந்த வீக் என்ட் வைச்சுக்கலாம், மச்சான் நீயும் வந்துட்டுடா” என்றான் அகில். 
விஜய் பதிலின்றி சிரிக்க, இருவரும் விடைபெற்று முன்னே சென்றுவிட்டனர். அலைபேசியை ஆராய்ந்தபடி மெல்ல நடந்த விஜய் தன்னருகில் நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க, ஆராதனா தான் அவன் நடை வேகத்திற்கு இணையாக உடன் வந்து கொண்டிருந்தாள். 
“என்ன..?” என்றவன் கேள்வியாய் பார்க்க, “தேங்க்ஸ் சொல்லுங்க..” என அவனிடமே அடம்பிடிக்கும் குழந்தை போலே கேட்டாள்.
“எதுக்கு..?”
“உங்க பிரண்ட்ஸ் பிரச்சனையை முடிச்சி சேர்த்து வைத்ததற்கு”
“அதுக்கு தான் நேற்றே நீ கேட்டபடி ஸ்ரீயை மீட் பண்ணிட்டியே..!” 
“அது ஜெஸ்ட் கோஇன்ஸ்சிடன்ட், அதுவும் நான் பார்க்கவும் நீங்க பேபியை மறைக்கத் தான் செய்தீங்க” என மூக்கை துருத்திக்கொண்டு, உதடு பிதுக்கி நேரடியாகவே குற்றம் சாட்டினாள்.
அதில் புன்னகை பூத்த போதும் அடக்கிக்கொண்டு, “எப்படியோ பார்த்து, பேசி, ஃபோட்டோ கூட எடுத்துட்டில அதுக்கு இது சரியா போச்சு” என்றான். 
“க்கும், நல்ல சமாளிப்பு…” என்றவள் உதட்டைச் சுழித்துக்கொள்ள, அந்த அழகை ரகசியமாய் ரசித்தான். 
அவன் மௌனம் கண்டவள் என்ன என்பது போல் கேள்வியாய் ஒற்றை புருவம் உயர்த்திப் பார்க்க, மறுப்பாய் தலையசைத்தவன், “நைஸ் ட்ரெஸ், இட்ஸ் கேவ் அ பிரச்சென்ட் லுக் ஃபார் யூ” என்றான். 
அவன் சம்மதமில்லாத பதிலிலும் தன் உடை வரை கவனிக்கிறானா என்ற அதிர்ச்சியிலும் ஒரு நொடி விழி விரிய நின்றவள், “தேங்க்ஸ் ஃபார் யுவர் காப்ளிமென்ட்” எனச் சிரித்தாள். 
“பட் நேத்து நீ அப்படியில்லை..” என லேசாக முகம் சுழித்தபடி அவன் முன்னே சென்றுவிட, நேற்றைய உடையில் என்ன குறை என யோசித்தபடி நின்றாள் ஆராதனா. 
இரயில்வே குடியிருப்பில் தான் பிறந்ததிலிருந்து ரவிக்குத் திருமணமாகும் வரை இருந்தனர். பின்பு தான் போதுமான அளவு வசதிக்கென வாடகை வீட்டிற்கு மாறினர். அதுவரையிலும் அவர்கள் பக்கத்து ஏரியாவிலே குடியிருந்த சுபத்ராவும் அவள் திருமணம் முடித்த மூன்றாம் வருடத்திலே ஜெய்பிரகாஷிற்கு தொழிலில் நல்ல இலாபம் பெற, சொந்தமாக பெரிய வீடு வாங்கி வேறு பகுதிக்குச் சென்றுவிட்டனர்.
பெரும்பாலான நடுத்தர வர்க்க குடும்பத்தின் பெரும் கனவு போலே ரவிக்கும் சொந்தவீடு என்ற ஆசையிருந்து. அதனாலே குடும்பத்திற்கு என செய்யவேண்டியவற்றை நிறைவாகச் செய்த போதும் தனக்கென அழகுக்கோ, ஆரோக்கியத்திற்கோ ஒரு ரூபாய் கூட செலவு செய்திட மாட்டான். கௌஷி கூட எத்தனையோ முறை சொல்லியிருந்தாள் இருந்தும் கேளாது மதிய உணவு வீட்டிலிருந்து அன்னை கட்டித்தருவதை தான் எடுத்துச் செல்வான். 
அவன் ஆசை நிறைவேறுவதற்கான வாய்ப்பு விஜய் தலையெடுக்கவுமே அமைத்தது. அதுவும் அவன் தந்தை இருந்த போதே வாங்கி வைத்திருந்த இடம் தற்போது குடியிருப்பு பகுதிகளாக மாறிவர, அண்ணனும் தம்பியும் சேர்ந்து சேமிப்போடு, ஹோவுசிங் லோனும் எடுத்து வீடு கட்டும் முயற்சியில் இறங்கியிருந்தனர். 
காலையிலே கிளம்பிவிட்ட சுபத்ராவை விஜய் இன்னும் அழைக்க வராமல் இருக்க, மாமியார் எழும் முன்னே வேலைகளை முடித்து கணவரிடம் சொல்லிவிட்டு அவளே அம்மா வீட்டிற்கு வந்திருந்தாள். 
இங்கு அப்போது தான் அனைவரும் பரபரப்பாகக் கிளம்பிக்கொண்டிருக்க, இன்னும் யாரும் காலை உணவு உண்ணவில்லை என்பதால் அனைவருக்கும் காஃபி கலந்து கொண்டிருந்தார் பவானி. ரவி தயாராகி வந்திருக்க, கௌஷிகா தயாராகிக் கொண்டிருக்க, எப்போதும் உறங்கும் குழந்தையை ரசித்து பார்த்துக்கொண்டிருக்கும் விஜய் இன்று அவளை எழுப்புவதற்கு பெரிதும் பாடுபட்டுக்கொண்டிருந்தான். 
இத்தனை நாளும் எவ்வளவு வியாக்கியானம் பேசுவான் இன்று அனுபவிக்கட்டுமென அந்த பரபரப்பிலும் கௌஷிகாவின் மனம் நினைக்காமலில்லை. சுபத்ராவின் வருகையை பார்த்ததுமே பவானி அன்போடு வரவேற்றார். 
“நல்லாயிருக்கியா..?” எனப் பவானி நலம் விசாரிக்க, “அவளுக்கு என்ன குறை அதெல்லாம் நல்லா தான் இருப்பாள்” என்றான் ரவி. 
மகனைக் கண்டிப்போடு பார்க்க வேண்டியவரோ, மகளைப் பரிவோடு பார்த்து, “பிள்ளையை கூட்டிட்டு வரலையா சுபத்ரா..?” என அறிந்தும் கேட்க, “அதான் சொன்னேனேம்மா இன்னைக்கு திவ்யா மகனுக்கு பிறந்தநாள்னு..” என்றாள். 
“நம்மை விட அவங்க வீட்டு சொந்தம் தானேம்மா அவங்களுக்கு ரொம்ப முக்கியம், அதுவும் போக அவங்க ஸ்டேட்டஸ்க்கு நம்ம இடத்துக்கெல்லாம் வருவாங்களா?” சட்டென ரவி கேட்டுவிட, சுபத்ரா அகமும் புறமும் வாடிவிட்டாள். 
அரிதாய் அவள் வரும் சமயங்களில் எல்லாம் ரவியிடம் இது போன்ற பேச்சுகளை கேட்டுவிடுவதுண்டு. அவளுக்கு என்ன நன்றாக இருப்பாள் என்கிறானே அவ்வாறெனில் நான் நன்றாக இருப்பதில் இவனுக்கு மகிழ்ச்சி இல்லையா? இல்லை நான் எப்படி இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறான்? இவர்களாகப் பார்த்துத் தானே அவருக்கு என்னைத் திருமணம் செய்து வைத்தார்கள்! பின் ஏன் இந்த எண்ணம்?
அப்படி என்ன அவனுக்கு தன் மீது மனத்தாங்கல்? தன் கணவனோடு போட்டியா? இல்லை குடும்ப பொறுப்புகளை முழுதாக அவன் தலையில் சுமத்தி தான் நழுவியதாக நினைக்கிறானா? என்னவென்று சரியான காரணம் புரியாத போதும் பிறந்த வீட்டின் உறவு வேண்டி சகித்துக்கொண்டாள். 
சரியாக அறையிலிருந்து வந்த கௌஷிகா, சுபத்ராவைக் கண்டுவிட்டு மலர்ந்த முகமாக வரவேற்ற, அவள் நலம் விசாரித்தாள். கௌஷிகா என்ற குணவதி ஒருத்தியே இந்த குடும்பத்தை இன்னும் உதிராமல் கட்டி வைத்திருக்கும் பிணைப்பு விசை என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உண்டு. 
பவானி சென்று ஸ்ரீயை எழுப்பித் தூக்கிக்கொள்ளவுமே விஜய் தயாராக முடித்தது.  கௌஷி அனைவருக்கும் காஃபி கொடுக்க, “வாங்க அக்கா, சாரி கொஞ்சம் கிளம்புறதுக்கு லேட்டாகிட்டு அதான்..” என விஜய் உரைக்கும் போதே, “பரவாயில்லைடா..” என்றாள் சுபத்ரா. 
அவனுக்கும் காஃபியை கொடுக்க, பவானியும் பேத்தியோடு கிளம்பி வந்தார். விஜய் மட்டும் அவன் பைக்கில் வர மற்ற அனைவரும் வாடகை காரில் கிளம்பினர். 
அவர்களுக்கு பின்பே ஐயர் வந்து பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க அனைவரும் சென்றிறங்கினர். அந்த ஏரியா முழுவதுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக  சில வீடுகள் கட்டியும் கட்டப்பட்டுக்கொண்டும் இருந்தது. 
சில நிமிடங்களுக்குப் பின்னே நல்ல நேரம் தொடங்க, பூஜையை ஆரம்பிக்கலாமா? என ஐயர் ரவியிடம் கேட்டுவிட்டு பூஜையைத் தொடங்கினார். ரவியும் கௌஷியுமே தம்பதிகளாக முன்னிற்க, கௌஷி கையால் முதல் செங்கல் நடப்பட்டுட்டு பூஜை தொடங்கியது.
சுபத்ரா மனநிறைவாய் பூஜையில் நிற்க, சரியா பூஜை நேரம் இரண்டு மூன்று முறை அவளின் அலைபேசி அழைத்தது. அவள் கணவனிடமிருந்தே அழைப்புகள் வர, கட் செய்தவள் சைலண்டில் மோடில் போட்டுவிட்டு பூஜையில் நின்றாள். அனைவரும் இல்லம் நல்லபடியாகக் கட்டப்பட்டு அதில் அன்பும் உறவும் நிலைக்க வேண்டியபடி ஆரத்தி ஒற்றிக்கொண்டனர். 
ஐயரிடம் ரவி பேசிக்கொண்டிருக்க, அனைவரும் பந்தலின் கீழிருந்த நாற்காலில் சென்று அமர, சுபத்ரா கணவனிடம் பேசினாள். காலை உணவு நேரம் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருப்பார். சுபத்ரா இல்லையேல் அவருக்கு கையே இல்லாது போல் இருக்கும், அவளில்லாது அவருக்கு மட்டுமல்ல அவள் வீட்டிலுள்ள யாவருக்கும் அணுவும் அசையாது, அனைவரின் தேவையாக அவளே இருந்தாள்.
“டேபுளில்ல டிபன் எடுத்து வைச்சிருக்கேன், உங்க பைல், பேக் எல்லாம் நம்ம ரூம்ல இருக்கு, மிதுன் எழுந்துட்டானா? எவனிங் சீக்கிரம் வந்திடுங்க”
“இல்லை இன்னும் எழலை, எவனிங் போட்டுக்க இருக்குற ட்ரெஸ் அயன் பண்ணி வைச்சிடும்மா. அங்க பூஜை முடிஞ்சிடுச்சா? கிளம்பிட்டியா?” 
“இப்போ தான், ஒரு ஹாப் நவர்ல் கிளம்பிடுவேன்..”
“சரி சுபத்ரா நாலு சென்ட் மொத்தமும் வீடா கட்டுறாங்களா? அமொண்ட் எதுவும் தேவைன்னா நம்மகிட்டையே வாங்கிக்க சொல்லு, வெளியில எதுவும் வட்டிக்கு வாங்கிட வேண்டாம், பின்ன வட்டிக்கு வட்டின்னு கட்ட முடியாது” என்றவரின் சொல்லில் சுபத்ராவின் உள்ளம் நிறைந்தது. தொழில் கொடுக்கல் வாங்கல் என அனுபவப்பட்டவர் ஜெய்பிரகாஷ். 
பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, அவள் அருகில் அமர்ந்திருந்த பவானி அவள் நலம், குடும்பத்தினர் பற்றியும் குடும்பநிலமை பற்றியும் விசாரிக்கப் பதிலளித்தவள் உரையாடலுக்கு இடையே கணவன் கூறியதையும் உரைத்தாள். ரவியிடம் உரைத்தால் மறுப்பானோ என்ற எண்ணம் ஆகையால் அன்னையிடம் தேவை என்றால் வாங்கிக்கொள்ளச் சொன்னாள். 
தன் மூத்த மகன் உரைத்தது போன்றே, மகள் நிறைவோடு வாழ்வதில் அவர் மனமும் நிறைந்திருந்தது. ஸ்ரீ விஜயின் அலைபேசியில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்க அவனும் அவளோடு நின்றிருந்தான். 
தாம்பூலத்தில் வைத்த பட்டோடு வந்த கௌஷி அதை சுபத்ராவிடம் தர, மறுக்காது வாங்கிக்கொண்டாள். தந்தைக்குப் பின்னும் அவளுக்கு பிறந்த வீட்டுச் சீரில் சிறு குறையும் வந்ததில்லை. கௌஷியும் அமர, சுபத்ரா அவளிடம் அவள் வேலை, கட்டவிருக்கும் வீட்டின் அமைப்பு என சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் அதற்குள் அவள் வீட்டில் மாமியாரிடமிருந்தும் நாத்தனார் திவ்யாவிடமிருந்து கிளம்பிவிட்டாயா என அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. 
இதில் கௌஷிகா தான் டென்ஷனானாள், சுபத்ரவோ பழக்கப்பட்டவள் போலே பொறுமையாகப் பேசி வைத்துவிட்டு, அன்னையிடம் கிளம்ப வேண்டுமென்க, முழுதாக இரண்டும் மணிநேரம் கூட தங்காத மகளின் நிலைய நினைத்து வருந்தினாலும் மறுக்காது விஜயை அழைத்தார்.
விஜயின் கைகளை பிடித்து ஆட்டியபடியே ஸ்ரீயும் ரவியும் உடன் வந்துவிட, “அக்கா கிளம்பணுமாம் கொண்டு போய் பத்திரமா வீட்டுல விட்டு வந்திடு விஜய்” என்றார். 
“சரிம்மா..” என்க, ரவி மணியைப் பார்த்துவிட்டு “அம்மா இந்த டைம் மெயின்ல டாரபிக்கா தான் இருக்கும், பிரேக் ஃபாஸ்ட் முடிச்சிட்டு போயிக்கிடலாம், இரண்டும் சரியான நேரம் தான் ஆகும்” என்றான். 
அதுவே சரியென்று தோன்ற, அனைவரையும் அருகே இருக்கும் உயர்தர சைவ உணவகத்திற்கு அழைத்துச் சென்றான் ரவி. ஸ்ரீயும் சுபத்ராவும் அருகருகே அமர்ந்திருக்க, யாருடனும் சட்டென ஒட்டிக்கொள்ளும் ஸ்ரீநிதி அத்தை, அத்தை என அவளிடமும் தன் பள்ளிக்கதைளையும் சாதனைகளையும் மழலை மொழியில் சொல்ல, ரசித்துக் கேட்டபடி உண்டனர் அனைவரும். 
“ஸ்ரீ, அமைதியா சாப்பிடு…எப்பப்பாரு நையிநையிக்கிட்டு இருக்கக்கூடாது, காலையிலையும் உன்னால தான் விஜய் லேட்..” என கௌஷி அதட்டலிட, “என்னால ஒண்ணுமில்லை சித்தா எழுந்ததே லேட் தான்..” என்றாள் ஸ்ரீ. 
“அவன் ஏன் லேட்டா எழுந்திருச்சான்..” என்ற கேள்வியில், “நைட் தூங்க லேட் அதான் எழுத்திருக்கவும் லேட்..” என்றாள் ஸ்ரீ. 
ஸ்ரீ கௌஷியாக (சந்திரமுகி) மாறுகிறாள் என விஜய் மனதிற்குள் அபாயமணி அடித்தது. 
“நைட் ஏன் தூங்க லேட்…?” என சுபத்ரா கேட்க, “இவ விளையாண்டுகிட்டு அவனையும் தூங்க விட்டுருக்க மாட்டா” என கௌஷி உரைத்தாள்.
அவளையும் முத்திக்கொண்டு, “நைட்டா…? ரொம்ப நேரம் ஆரா கூட சித்தா பேசிக்கிட்டு இருந்தான்” என்றவள் வடையை வாயில் அடைத்துக்கொள்ள, விஜய் தொண்டைக்குழியில் சிக்கிய உணவோடு விழிக்க, மொத்த பெண்களின் விழியும் அவனை கேள்வியாகப் பார்த்தது. 
இரவு வெகுநேரம் ஆராதனாவுடன் பேசியதென்னவோ ஸ்ரீ தான் ஆனால் கடைசி இரண்டு நிமிடம் அழைப்பை துண்டிக்கச்சொல்லி அவன் பேச, இப்போது அனைவரின் பார்வைக்குப் பதிலின்றி நின்றான். கௌஷியை விட சுபத்ராவின் பார்வை தான் அவனை துணுக்குற செய்தது. 
பிள்ளையவா பெத்து வைச்சிருக்கா தன்னோட கார்பன் காபியே பெத்து வைச்சிருக்கா!  என அப்போதும் மனதிற்குள் ஸ்ரீயை சாட இயலாது கௌஷியை குறித்தே புலம்பினான். 
“யார்டா அது..?” சுபத்ராவின் கேள்வியில் “ஸ்ரீயோடு ப்ரண்ட்..” என்றான் சட்டென. ஆனால் தனக்கு யாரவள் என்ற கேள்வியும் உள்ளுக்குள் தோன்றவே செய்தது. 
ஸ்ரீநிதி மறுக்காததில் குழந்தை என்றே அனைவரும் நினைத்துவிட, அப்பாடா என ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டான். எதையும் மறைக்க நினைக்கவில்லை எனினும் அவள் தனக்கு என்ன உறவென்ற தெளிவு அவனுக்கே இல்லாததால் வெளிப்படுத்துவதைத் தவிர்த்தான். 
ஸ்ரீக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ரவி அவள் உண்பதைக் கண்டுவிட்டு, “பாப்பா எத்தனை தடவை சொல்லுறது உங்க அத்தை மாதிரியே மிளகை ஒதுக்கி வைச்சி சாப்பிடாதேன்னு…” என பழக்கம் போலே உரைக்க, சுபத்ராவின் பார்வை அருகில் உள்ள ஸ்ரீநிதியின் இலையிலும் தன் இலையிலும் விழுந்தது. இருவருமே பொங்கலிலிருந்து மிளகை ஒதுக்கி வைத்து உண்டு கொண்டிருந்தனர். 
தன் போன்றே ஸ்ரீநிதியின் செயலில் சுபத்ராவின் இதழ்கள் தன்னால் விரிய சிறுவயதில் தன்னையும் ரவி இவ்வாறு தான் கண்டிப்பான் என்ற நினைவும் வந்தது. 
உண்டு முடித்துவிட்டு அனைவருமே குடும்பமாகக் கோவிலுக்குச் சென்றுவிட்டு பின் வீட்டிற்கு செல்வோம் எனப் பவானி கேட்க, அன்னையின் ஆசைக்கு ரவி சரி என்றான். 
ஆனால் மீண்டும் சுபத்ராவிற்கு வீட்டிலிருந்து அழைப்பு வர, உணவுண்டு முடித்திருந்தவள் கிளம்ப வேண்டுமென்க, விஜய் உடன் எழுந்தான். 
“நீயும் கோவிலுக்கு போ விஜய், நான் டாக்ஸி ஆர் ஆட்டோ பிடிச்சி போய்கிறேன்”
“இல்லைக்கா, நான் வரேன்….உங்களை விட்டுட்டு கோவிலுக்கு போய்கிறேன்” என மறுத்தவன் உடன் வர, அனைவரிடமும் விடை பெற்றுக்கிளம்பினாள் சுபத்ரா. 
அவள் என்னவோ கிளம்பிவிட்ட போதும் மனம் என்னவோ இன்னும் சிறிது நேரம் அன்னையின் அருகாமைக்கு ஏங்கவே செய்தது. பிள்ளைகள் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் அன்னையின் கதகதப்பை அகிலத்தில் யாராலும் தர இயலாது அல்லவா! 
சுபத்ராவை வீட்டு வாசலில் விட, கணவன் உரைத்ததை அவனிடம் தெரிவித்தாள். அதன் பின்னும் மனதில் சிறு படபடப்பு. ரவி அளவிற்கு இல்லை எனினும் அறிந்தோ அறியாமலோ விஜயும் அவ்வபோது சட்டென பேசிவிடுபவன் தான். 
அவள் எண்ணத்திற்கு மாறாகப் புன்னகைத்தவன், “அவர் சொன்னதா இல்லை நீங்களே சொல்லுறீங்களாக்கா…?” என்றான். 
தன் கணவனை நம்ப மறுக்கிறானே என்ற ஆதங்கத்தில், “மாமாவே சொன்னது தான்டா..” என்றாள் இறங்கிய குரலில். 
“அதெல்லாம் தேவைப்படாதுக்கா, நாங்க இரண்டு பெரும் சரியா கணக்குக் போட்டு தானக்கா வைச்சிருக்கோம், அதுவும் போகக் கையிலையும் கொஞ்சம் இருக்கு மேனேஜ் பண்ணிப்போம்க்கா” என்றான்.  
இவ்வாறு தான் சொல்லுவான் எனத் தெரிந்த போதும் அவன் பதிலில் திருப்த்தியில்லாது அவள் முகம் வாட, “உள்ள வந்துட்டு போ விஜய்…” என அழைத்தாள். 
அப்போதே தன்னை ஒருமுறை பார்த்துக்கொண்டவன் குழந்தைகளுக்கு எதுவும் வாங்கி வராததை உணர்ந்தான். மிதுன் மட்டுமின்றி அவள் நாத்தனாரின் பையனும் இருக்கிறான். அதுவும் பிறந்தநாள் அதுவுமாக எவ்வாறு வெறுங்கையோடு செல்வது என்ற நினைத்தவன் சங்கடத்தோடு யோசித்தான். 
அதற்குள், “சரி இன்னொரு நாள் வா, இப்போ கோவிலுக்குக் கிளம்பு…” என்றவள் விடைபெற்று தன் வீட்டுக்கு கேட் நோக்கிச் சென்றாள். 
விஜய் ரிவர்ஸ் மிரரை ஒருமுறை பார்த்தபடி சாலையிலே பைக்கை திருப்ப, கண்ணாடியில் விழுந்தது எதிர்வீட்டின் பால்கனி ரோஜாக்கள். அப்போதே நினைவு பெற்றவன் போலே சட்டென எதிர்வீட்டை நிமிர்ந்து பார்த்தான், அத்தனை வருடங்களுக்குப் பின்னும் அங்கு அவள் இல்லாத போதும் அந்த ரோஜாக்களே அவளை நினைவுபடுத்தியது.