அத்தியாயம் 8
உன்னைப் பார்க்க துடிக்கும் 
என் விழிகள் கூறுகிறதா அன்பே, 
என் மனதின் காதலை!!!
“ப்ளீஸ் டி செல்லம். உன் அத்தான் ரொம்ப டயர்டா  ஆகிட்டேன். நாளைக்கு லீவு தான். அதனால இன்னைக்கு நைட்டை தூங்காத நைட்டா மாத்திரலாம். இன்னைக்கு மட்டும் விட்டுரு”, என்று கெஞ்சி தான் அவளிடம் இருந்து விலகினான் தேவா.

அதில் வெட்கத்துடன் சிரித்த மது, “ரொம்ப அலையுறேனோ?”, என்று வாய் விட்டே கேட்டாள்.

அதை ரசித்தவன் “என் பொண்டாட்டி இப்படி இருக்குறது தான் எனக்கு பிடிச்சிருக்கு. ஆனாலும் மனோஜ் பாவம். அவனுக்கு கொஞ்சமாவது உதவி செய்யணும்ல? இல்லைன்னு வை இந்த ரூமை விட்டு உன்னை விடவே மாட்டேன்”, என்றான்.

“பொய். டயர்டா இருக்குனு சொன்னீங்க”

“ஜூஸ் குடிச்சு தெம்பா ஆகிட்டு, உன்னை ஆண்டு முடிப்பேன் டி. வா இப்ப குளிக்கலாம்”

இருவரும் சாவித்ரியிடமும், மீராவிடமும் சொல்லி விட்டு மதுவின் வீட்டுக்கு சென்றார்கள்.

உண்மை தேவாவுக்கு தெரிந்தது, மதுவுக்கு இறக்கை இல்லாமல் பறப்பது போல இருந்தது. “இன்னைக்கு எல்லாத்தையும் அத்தான் கிட்ட சொல்லணும்”, என்று நினைத்து கொண்டாள்.

வீட்டுக்குள் வந்த தேவா, மரியாதைக்காக வதனியை பார்த்து “ஹாய்”, என்று சொல்லி விட்டு அனைவரிடமும் “கிளம்புறேன்”, என்றான்.

“கொஞ்ச நேரம் இருங்க அத்தான்”, என்று மது சொன்னதும் அவள் அருகில் அமர்ந்தவன் அவளை கொஞ்ச ஆரம்பித்து விட்டான்.

அதை பார்த்து கொண்டிருந்த வதனிக்கு எரிந்தது. “நல்ல வாழ்க்கையை இழந்துட்டேனோ?”, என்று யோசித்தாள்.

இவன் இவ்வளவு பணக்காரன் என்று அவள் நினைத்தது இல்லை. தேவாவின் அழகு மட்டும் தான் அவளை அவனை கட்டி கொள்ள சம்மதிக்க வைத்தது. அதுவும் கண் இல்லை என்று தெரிந்தவுடன் அந்த ஆசையும் போய் விட்டது.

ஆனால் இன்று அழகின் மொத்த உருவமாக விலை உயர்ந்த காருடன் வந்திறங்கிய அவனையும், மதுவையும் பார்த்து அவன் முகத்தில் சிந்திய காதலையும் பார்த்து ஆசை கொழுந்து விட்டெறிந்தது. 

“நல்ல வாழ்வு மதுவுக்கு கிடைக்க கூடாது”, என்று நினைத்து வந்த வதனிக்கு அந்த வாழ்க்கையே தனக்கு வேண்டும் என்று கெட்ட ஆசை உருவானது. 

காதலுடன் கொஞ்சி கொண்டிருந்த அவர்களை பார்த்து மனதுக்குள் பொருமி கொண்டிருந்தாள் வதனி. 

“சாப்பிட வாங்க மாப்பிள்ளை”, என்று அழைத்தாள் அன்னம்.

“இல்லை அத்தை. வீட்ல இருந்து சாப்பிட்டு தான் வந்தோம். சரி நீங்க பேசிட்டு இருங்க. சாயங்காலம் ஆறு மணிக்கு கிளம்பி இரு மது. நான் வந்து கூட்டிட்டு போறேன். போயிட்டு வரேன்”, என்று அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்பி விட்டான். 

சிறிது நேரம் மதுவும், வதனியும் பேசி கொண்டிருந்தார்கள். மது அவளுடைய வாழ்க்கையை பற்றி சொல்ல சொல்ல என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள் வதனி.

மதியம் அன்னம் சமைத்த சாப்பாட்டை அனைவரும் உண்டு விட்டு பேசி கொண்டிருந்தார்கள்.

“மது மா, அப்பாவோட மாத்திரை அவர் டேபிளில் இருக்கும். எடுத்துட்டு வா டா”, என்றார் கேசவன்.

“சரி பா”, என்று எழுந்த மதுவை “நீ இரு மது. நான் எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு போனாள் வதனி.

அப்படி அவள் மாத்திரை எடுக்கும் போது தான் அவள் கண்ணில் பட்டது அந்த தூக்க மாத்திரை. அடுத்த நிமிடம் அவளுக்கு அந்த எண்ணம் உதித்தது. இரண்டு தூக்க மாத்திரையை எடுத்து ஒளித்து வைத்து கொண்டவள் சாதாரணமாக நடமாடினாள்.

சிறிது நேரம் கழித்து, “நான் லெமன் ஜூஸ் குடிக்க போறேன். உனக்கு வேணுமா மது?”, என்று நல்லவளாக கேட்டாள் வதனி.

“ஹ்ம்ம் சரி வதனி. எனக்கும் ஒரு டம்ளர்”, என்று சிரித்தாள் மது.

கண்களில் ஒளியுடன் ஜூஸ் கலக்கியவள் அந்த மாத்திரையை போட்டே அவளுக்கு கொடுத்தாள்.

“மாப்பிள்ளை வர வரைக்கும் படுத்துக்கோ மது”, என்று சொல்லி விட்டு அம்மா, அப்பா உள்ளே போனார்கள்.

“என்னோட ரூம்க்கு வா மது. கொஞ்ச நேரம் பேசிட்டே தூங்கலாம்”, என்றாள் வதனி.

“ஹ்ம்ம் சரி வா”, என்று உள்ளே போனாள் மது.
“இந்த சேலை உனக்கு அழகா இருக்கு மது. எனக்கு இதை தாயேன்”, என்று கேட்டாள் வதனி.
“வச்சிக்கோ வதனி. கல்யாணம் அப்ப எடுத்தது தான். இன்னைக்கு தான் கட்டிருக்கேன். உன் கிட்ட சேலை இருக்காதுல்ல. சரி என் சுடிதார் போட்டுக்குறேன்”
“ஹ்ம்ம் சரி. இப்ப இந்த நைட்டி மாத்திட்டு தூங்கு. டிரஸ் கசங்கிரும்”
“சரி”, என்று சொல்லி சேலையை மாற்றி விட்டு கட்டிலில் அமர்ந்தவள், அப்படியே மயங்கி தூங்கி போனாள்.
அடுத்த நிமிடம் அவள் அணிந்திருந்த சட்டையை எடுத்து துவைத்து காற்றில் காய வைத்தாள் வதனி.
“சேலை ரெடி ஆகிட்டு. தேவா வரும் போது, மது தூங்கிட்டு தான் இருப்பா. வேற என்ன செய்யணும்?”, என்று யோசித்தவள் மதுவின் கழுத்தை பார்த்தாள்.
ஆனால் மதுவின் கழுத்தில் தாலி இல்லை. ஒரே ஒரு செயின் மட்டும் தான் அணிந்திருந்தாள். “அதுக்குள்ள தாலியை கழட்டிட்டாளா?”, என்று யோசித்தவளுக்கு அம்மா அவளிடம் “தாலி எங்க டி?”, என்று கேட்ட கேள்வி நினைவில் வந்தது.
“உங்க மாப்பிள்ளை வீட்டு முறைப்படி புருசனும் பொண்டாட்டியும் சேரும் போது தாலி இருக்க கூடாதாம் மா. அத்தை பாரின் போகுறதுக்கு முன்னாடியே கழட்டி வைக்க சொல்லிட்டாங்க. தாலி பிரிக்கிற அன்னைக்கு வரைக்கும் அப்படி தானாம். ஆனா இப்போதைக்கு நல்ல நாளே வரலை. அதான் அடுத்த வாரம் வரைக்கும் இப்படியே இருன்னு சொல்லிட்டாங்க”, என்று மது சொன்ன பதிலும் நினைவு வந்தது.
“அப்பாடி அப்ப பிரச்சனை இல்லை”, என்று நினைத்து கொண்டு பீரோவில் இருந்த ஒரு செயினை மட்டும் எடுத்து போட்டு கொண்டாள்.
அவள் எப்படி தலை சீவுகிறாள்  என்று பார்த்து விட்டு ஐந்து மணி வரை காத்திருந்தாள். அடுத்து மது மாதிரியே கிளம்பி வெளியே வந்தாள் வதனி.
“எந்திச்சிட்டியா மது மா?”, என்று கேட்டாள் அன்னம்.
“ஆமா மா. உங்க மாப்பிள்ளை இப்ப வருவாரே”, என்று மது போலவே சிரித்தாள் வதனி.
“ஹ்ம்ம் எங்க உங்க அக்கா?”
“அவ தூங்குறா மா”
“ஹ்ம்ம் என்ன பொண்ணோ? அவளை நினைச்சு கவலையா இருக்கு? இன்னும் சுயநலமா பொறுப்பே இல்லாம இருக்கா. எப்ப தான் பொறுப்பு வருமோ?”, என்று எரியுற தீயில் எண்ணைய் ஊற்றினாள் அன்னம்.
மனதுக்குள் அம்மாவை திட்டி கொண்டு சிரித்து சமாளித்தாள். கேசவனும் மது என்று நினைத்தே பேசினார்.
“அப்பாடி அம்மா, அப்பா கண்டு பிடிக்கலை”, என்று நினைத்து கொண்டு “மது எந்திக்கிறதுக்குள்ள அவன் வந்துரணும்”, என்று நினைத்து கொண்டே வாசலை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவனும் வந்தான். “அத்தான் வந்துடீங்களா?”, என்று அவன் முன்பு போய் நின்றவளை தலை முதல் கால் வரை பார்வை இட்டான் தேவா.
அவன் பார்வையில் உள்ளுக்குள் நடுங்கினாள் வதனி. “கண்டு பிடிச்சிருவானோ?”, என்று நினைத்து கொண்டு “என்ன அத்தான்?”, என்று கேட்டாள்.
“ஒன்னும் இல்லை. சும்மா தான்”, என்று சொல்லி உள்ளே போய் சோபாவில் அமர்ந்தவன் அன்னத்திடம் “ஒரு காபி தாங்க அத்தை. தலை வலிக்குது”, என்றான்.
அவன் பக்கத்தில் அமர்ந்தாள் வதனி. அவள் அவனை விட்டு சிறிது இடை வெளி விட்டு அமர்ந்ததால் அவனும் அமைதியாக இருந்தான்.
அவன் காபி குடித்ததும் “கிளம்பலாமா அத்தான்?”, என்று கேட்டாள் வதனி.
“ஹ்ம்ம் போகலாமே. எங்க உங்க அக்கா? கூப்பிடு சொல்லிட்டு போகலாம்”, என்று சொல்லி அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான்.
“அது அது அவ தூங்குறா. நாளைக்கு வீட்டுக்கு வர சொல்லிருக்கேன். அப்ப பாத்துக்கலாம். நாம இப்ப கிளம்பலாம்”, என்றாள்.
அவளை ஒரு பார்வை பார்த்தவன் “சரி கிளம்பலாம். வரேன் அத்தை, கிளம்புறோம் மாமா”, என்று சொல்லி வெளியே வந்தான்.
அப்போது அங்கு கையில் ஒரு டம்பளருடன் வந்த அன்னம் “சுடுதண்ணில எலுமிச்சம் பழம் புழிஞ்சிருக்கேன் தம்பி. இதை குடிங்க. தலைவலிக்கு நல்லா இருக்கும்”, என்று கொடுத்தாள்.
காரில் சாய்ந்து கொண்டே அதை வாங்கி குடித்தவன், கை தவறியது போல ட்ரைவர் சீட் அருகே இருந்த சீட்டில் ஊற்றி விட்டான்.
“பாதி கொட்டிருச்சு அத்தை. இந்தாங்க டம்ளர்”, என்று அன்னத்திடம் கொடுத்தவன் வதனியை பார்த்து “பின்னாடி உக்காரு. நாளைக்கு வண்டியை கிளீன் பண்ணணும்”, என்றான்.
ஜூஸ் கொட்டியதால் அவ்வாறு சொல்கிறான் என்று நினைத்த வதனியும் “சரி அத்தான்”, என்று சொல்லி பின்னேஅமர்ந்தாள்.
கார் அவன் வீட்டை நோக்கி சென்றது.
சிறிது நேரம் கழித்து கண் விழித்த மதுவுக்கு  அறையில் இருந்த இருட்டு தான் தென்பட்டது.
“என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்?”, என்று நினைத்து கொண்டு வெளியே வந்தாள்.
அங்கே டிவி முன்னே அமர்ந்திருந்தார் கேசவன். அன்னம் கிச்சனில் நின்றாள்.
அங்கு இருந்த வாட்சில் மணியை பார்த்தாள் மணி ஏழு என்றது.
“என்ன அத்தான் இன்னும் வரலை? நான் தூங்குறேன்னு விட்டுட்டு போய்ட்டாங்களா?”, என்று நினைத்து கொண்டு அவளுடைய அறைக்குள் போக பார்த்தாள்.
“என்ன வதனி இவ்வளவு நேரம் தூங்கிட்ட? சரி டீ குடிக்கிறியா? இல்லை கொஞ்ச நேரத்துல சாப்பிடுறியா?”, என்ற அன்னத்தின் கேள்வியில் அதிர்ச்சியாக திரும்பினாள்.
“அம்மா இப்ப என்னை என்ன சொன்னாங்க வதனின்னா?”, என்று மூளையை கசக்கியவள் “அம்மா என்னை எதுக்கு வதனினு சொல்றீங்க? நான் மது. ஆமா அத்தான் எங்க? இன்னும் வரலையா? நான் தூங்குறேன்னு விட்டுட்டு போய்ட்டாங்களா? நீங்க எழுப்பிருக்கலாம்ல?”, என்று கேட்டாள்.
பெற்றவர்கள் இருவரும் அதிர்ச்சியாக அவளை பார்த்தார்கள்.
“என்ன வதனி இது? எதுல தான் விளையாடுறதுனு இல்லையா? மாப்பிள்ளை வந்து மதுவை கூட்டிட்டு ஆறு மணிக்கே போய்ட்டாரே? நீ ஏன் இப்படி சொல்லிட்டு இருக்க? இது நல்லா இல்லை சொல்லிட்டேன்”, என்று கண்டிப்புடன் சொன்னார் கேசவன்.
அடுத்த நொடி மது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. “அப்பா சத்தியமா நான் தான் பா மது. உங்களுக்கும் என்னை அடையாளம் தெரியலையா? அத்தான் நான்னு நினைச்சு வதனியை கூட்டிட்டு போய்ட்டாங்களா? அப்ப அத்தானுக்கு என்னை கண்டு பிடிக்க முடியலையா? அத்தானுக்கு என்னை தெரியலையா?”, என்று அப்படியே கீழே சரிந்து அழுதாள் மது.  அவள் கண்கள் கண்ணீரை பொழிந்தது.
பெற்றவர்களுக்கு பதறியது. “வதனி.. ச்சி மது நீ மது தானா மா?”, என்று கேட்டாள் அன்னம்.
“பெத்த அம்மா, அப்பாவுக்கும் என்னை அடையாளம் தெரியலை. கட்டின புருஷனுக்கும் தெரியலை. என்னை எதுக்கு மா பெத்தீங்க? எனக்கு எதுவுமே நிரந்தரம் கிடையாதா? பெத்தது தான் பெத்தீங்க? ஒரு அசிங்கமான பொண்ணா கூட பெத்திருக்கலாமே, அவளை மாதிரியே ஏன் மா பெத்தீங்க? உங்களோட அன்பையும் என்கிட்ட இருந்து பிரிச்சா. இப்ப என்னோட அத்தானை. அவ எப்ப மா திருந்துவா?”