“என் மாமியாரை நான் தான் பார்த்துக்கணும்னு தெரியும்..நீங்க இரண்டு பேரும் கூட்டு சேர்ந்து தைச்சு கொடுத்ததைக் கழட்டி போட சொல்லிட்டு அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி வேற ஏற்பாடு மீரா ஆன்ட்டி மூலம் பிளான் செய்து வைச்சிருந்தேன்..ஆனா ஆன்ட்டியை அவங்க கூட்டுக்குள்ளேயிருந்து வெளியே கொண்டு வர இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காதுன்னுதான் அவங்களைக் கன்வின்ஸ் செய்து அதே புடவையைக் கட்ட வைச்சிருக்கேன்.” என்று மெஹக், சுசித் ரா இருவருக்கும் அவர்கள் ஏற்படுத்திய நெருக்கடியில் ஆத்திரமடையாமல் அமைதியாக இருந்த காரணத்தை விளக்கினாள் ஸ்மிரிதி.
“ஹா..ஹா..மாமியார் மேலே பாசாமா? பயமா?” என்று கிண்டலாகக் கேட்டாள் சுசித் ரா.
“ஆன் ட்டியோட விளையாடறது விபரீதமாகும்னு அம்மா பயப்படறாங்க.” என்று பிரேமாவின் பயத்தை தோழிகளிடம் பகிர்ந்து கொண்டாள் ஸ்மிரிதி.
“ஸாரி ஸ்மிரிதி..விளையாட்டுக்குதான் செய்தோம்..நீ ஒருமுறையாவது புடவையைப் பற்றி விசாரிச்சிருந்தா உன்கிட்ட சொல்லியிருப்போம்..கடந்த இரண்டு வாரமா நீ ரொம்ப பிஸி.. எப்ப பேச முயற்சி செய்தாலும் உனக்கு டயமிருக்கலே.” என்று தோழிகள் இருவரும் மன்னிப்பு கேட்டனர்.
அவள் ஆடிக் கொண்டிருந்த ஆபத்தான ஆட்டத்தைப் பற்றி அவள் தோழிகளுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லாமல் மௌனமானாள் ஸ்மிரிதி.
ஏழு மணியாக சில நிமிடங்களுக்கு முன், கனமான பட்டுப் புடவை, ஷீயர் பிளவுஸ் (sheer), காத்திரமான நகை, அளவான மேக் அப் என்று மாறுபட்ட கலவையில் கலக்கலாக ரிஸெப்ஷன் ஹாலில் நுழைந்தனர் சிவகாமி, ஸ்மிரிதி, மெஹக் மூவரும்.
அவர்களை வரவேற்றது பக்கா தமிழ் பெண் மீரா மிலிந்த். நெற்றி சுட்டி, வேணி அலங்காரம், தோடு, ஜிமிக்கி, வளையல், ஒட்டியானம் என்று முழு அலங்காரத்தில், பட்டுப் புடவையில் அவரைப் பார்த்த போது அவர்தான் அந்த ஹோட்டலின் சொந்தக்காரர் என்று தோன்றாமல் சிவகாமியின் நெருங்கிய சொந்தம் போல் தோற்றமளித்தார்.
ஸ்மிரிதி உள்ளே நுழைந்தவுடன் அவளுக்கு திருஷ்டி கழித்த மீரா அவள் காதருகே,”நீ ஃபோன் செய்வேன்னு காத்துகிட்டிருந்தேன்..உன் மாமியாருக்குப் புடவை பிடிச்சிருச்சு போல..பிளவுஸ் தைக்கறத்துக்காக அந்தப் பொண்ணைப் பிடிச்சு வைச்சிருந்தேன் இப்ப அனுப்பி விட்டிடுவா?” என்று விசாரித்தார்.
“ஸாரி ஆன் ட்டி..மெஹக் அடிச்ச கூத்துலே உங்களுக்குத் தகவல் கொடுக்க மறந்துட்டேன்..அவங்களுக்கு எல்லாமே பிடிச்சிருக்கு..நீங்க அந்தப் பொண்ணை அனுப்பிடுங்க..இனி வேற புடவைக்கு மாற சான்ஸ் இல்லை.” என்றாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியுடன் மீரா பேசிக் கொண்டிருக்கும் போதே அவரை சூழ்ந்து கொண்டு மெஹக், சுசித் ரா இருவரும் அவரைக் கேலி, கிண்டல் என்று கத்தி ஆரவாரம் செய்ய அதை கேட்டு அங்கே வந்த மீராவின் இரண்டு மருமகள்களும் அவர்களுடன் சேர்ந்து கூச்சலிட அந்த இடமே கல்லூரி கலை விழா போல் களைக் கட்டியது.
அங்கேயிருந்த மற்ற பெண்களைக் கண்டிக்க முடியாமல் அவர் மருகளை “ஸ்மிரிதி..மெல்ல பேசு.” என்று சொன்ன சிவகாமியிடம்,
“நம்ம கெஸ்ட்ஸ் தான் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வர போறாங்க அதான் நானும் இந்த மாதிரி அலங்காரத்துக்குச் சரின்னு சொன்னேன்..சின்ன பசங்க சந்தோஷத்தைப் பார்த்து எனக்கும் சந்தோஷமா இருக்கு.” என்று மீரா சொல்ல அதைக் கேட்ட சிவகாமிக்கும் முதல் முறையாக அந்தப் புடவையில் கூச்சமாக உணராமல் இயல்பு போல் பொருந்திப் போனார்.
அதே நேரம்,“பேட்டா..இந்த சாமனெல்லாம் டான்ஸ் ஆடும் போது கீழே விழுந்திடாதே?” என்று சந்தேகமாக ஸ்மிரிதியிடம் மீரா கேட்க,
“டான்ஸ்ஸா?” என்று சிவகாமி அதிர்ச்சியுடன் மீராவை கேட்க,
“ஆமாம்…மெஹக் தான் மெயின்..நாங்க எல்லாரும் அவக்கூட சேர்ந்து ஆடுவோம்..நீங்களும் ஆடணும்.. எல்லாருமே டான்ஸ் ஆடணும்.” என்று வெடி வெடித்தார்.
“ஆன்ட்டி..எனக்கும் தெரியாது.” என்று உண்மையாகவே அதைப் பற்றி தெரியாத ஸ்மிரிதி உடனே மீராவைப் பார்த்து,
“ஆன்ட்டி, எப்ப டான்ஸ் வைச்சிருக்கீங்க?” என்று கேட்டாள்.
“கெஸ்ட்ஸ் போன பிறகு…பாட்டு, டான்ஸ், பார்ட்டி..ஃபேமிலி அண்ட் பிரண்ட்ஸ் மட்டும்.” என்றார் மீரா.
“என்ன பாட்டு? என்ன டான்ஸ்? என்ன பார்ட்டி?” என்று விசாரித்த சிவகாமிக்கேத் தெரியாது அவரது இரண்டு மகன்களும் கபீரின் உதவியோடு சில நாட்களாகப் பாட்டு பயிற்சி செய்து வந்தார்களென்று.
“ஆன்ட்டி..மனுவும், என் பிரண்ட்ஸும் அரேன் ஜ் செய்திருக்காங்க..எனக்கு விவரம் தெரியாது..மனுக்கு தான் தெரியும்.” என்று கணவனை அவன் தாயிடம் மாட்டி வைத்தாள் மனைவி.
“எல்லாம் முடிஞ்சு எத்தனை மணிக்கு வீடு திரும்ப முடியும்?” என்று அவர் கவலையுடன் கேட்க,
“நீங்கெல்லாம் கிளம்பிடுங்க..இந்தப் பசங்க மேலே ஒரு கண்ணு வைச்சுக்கணும் அதனாலே நான் இங்கதான் இன்னைக்கு நைட்டு.” என்றார் மீரா.
“எத்தனை மணியாகும்னு சொல்ல மாட்டீங்கறீங்க..எத்தனை லேட்டானாலும் மனுவும், ஸ்மிரிதியும் இன்னைக்கு நைட் கண்டிப்பா வீட்டுக்குதான் வரணும்.” என்றார் சிவகாமி.
“அவங்களுக்கு இங்கே ஸ்பெஷல் ஸுவிட் தயார் செய்திருக்கோம்.” என்றார் மீரா.
“அதெல்லாம் வேணாம்..இராத்திரி வீடுதான்..நான் வீட்லே இல்லாததுனாலே ராமும், ஜனனியும் அவங்க கல்யாணதன்னைக்கு நைட் உங்க ஹோட்டலே தங்க வேண்டியதாயிடுச்சு..இன்னைக்கு அந்த மாதிரி சூழ் நிலை இல்லை..மனுவும், ஸ்மிரிதியும் வீட்டுக்குதான் வரணும்..அவங்களை லேட்டாக்காம, ஜாக்கிரதையா வீட்லே கொண்டு விட வேண்டியது உங்க பொறுப்பு மீரா.” என்று ஹோட்டலின் முதலாளியின் திட்டத்தை நிராகரித்து அவருகே ஆர்டர் போட்டு முன்னாள் கலெக்டரின் மனைவி என்று நிரூபித்தார் சிவகாமி.
“நோ பிராப்ளம்..நீங்க சொல்லிட்டீங்க ..நான் செய்திடறேன்.” என்று வாக்குறுதி அளித்தார் மீரா.
அப்போது அமைதியாக நுழைந்தது ஆண்கள் கூட்டம். சம்மந்திகள் இருவரில் அதிகாரி தில்லை நாதன் ஃபார்மல் ஸுட் அணிந்திருக்க, முன்னால் அரசியல்வாதி பட்டு குர்த்தா பைஜாமாவில் இருந்தார். கார்மேகத்தை போல் குர்த்தா பைஜாமாவில் இருந்தனர் மிலிந்த், கபீர், தல்ஜித், மஞ்சுநாத் நால்வரும். தில்லை நாதனைப் போல் ஸுட் அணிந்து அவருக்கு ராம் கம்பெனி கொடுக்க, அவருடைய மகன்கள் ஒரே போல் அச்கன் ஷர்வானியில் மனிஷுக்குக் கம்பெனி கொடுத்தனர்.
ராய்ல் ப்ளூ அச்கன் ஷர்வானி, வெளிர் பிரவுன் லைனின் பேண்ட், ஃபார்மல் ஷுஸ்ஸில் மனு, பர்கண்டி அச்கன் ஷர்வானி, வெளிர் மஞ்சள் லைனின் பேண்ட், ஃபார்மல் ஷுஸ்ஸில் மாறன் என்று அவர்கள் இருவரும் அண்ணன், தம்பி என்று சந்தேகத்திற்கு இடமளிக்காது தோற்றமளித்தனர். கோல்டன் ஆரன் ஜ் அச்கன் ஷர்வானி, வெண்பட்டு சுரிதார், ஜூத்தி என்று அவன் வயதிற்கு ஏற்றார் போல் அதே சமயம் மனு, மாறனைப் போலவே உடையணிந்து அண்ணன், தம்பி இருவர் அணியில் சேர்ந்திருந்த புது நபர் அவந்தான் என்று நிரூபித்தான் மனிஷ்.
மற்ற விருந்தினர்களின் வருகைக்கு முன், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரும் ஒன்றாக கூடி இருந்த அந்த நொடிகள் காண்டிட் ஷாட்ஸாக பதிவாகி கொண்டிருந்தது.
மீராவுடன் பேசிக் கொண்டிருந்த சிவகாமியை சட்டென்று அடையாளம் தெரியாமல் நுழைவாயிலில் நின்றபடி அந்தக் கூட்டத்தில் அவர் மனைவியைத் தில்லை நாதன் பார்வையால் தேடிக் கொண்டிருக்க அதே சமயம் அவர் மகன்கள் இருவரும் “அம்மா” என்று கத்திக் கொண்டு சிவகாமியின் அருகே வந்தனர்.
சிவகாமியின் தோற்றத்தைப் பார்த்து நம்ப முடியாத அதிர்ச்சியில் மூத்த மகன் சமைந்து நிற்க, இளையவனோ அவரை தூக்கி ஒரு சுற்று சுற்றி,”அட்டகாசமா இருக்கீங்க” அவன் சந்தோஷத்தை வெளியிட்டான்.
“டேய்..முதல்லே கீழ இறக்கி விடுடா..எல்லாரும் வேடிக்கைப் பார்க்கறாங்க.” என்று அவர் இளைய மகனின் வெளிப்படையான பாராட்டில் வெட்கப்பட்டார் சிவகாமி.
அப்போது சிவகாமியின் வித்தியாசமானத் தோற்றத்தில் ஆடி போயிருந்த நாதன்,”எனக்கு உன்னை அடையாளமே தெரியலே சிவகாமி..யாரோ கெஸ்ட்கிட்ட மீரா பேசிக்கிட்டிருக்காங்கன்னு நினைச்சேன்..உன் முதுகு பக்கம்தான் தெரிஞ்சிச்சு அதான் மிஸ் ஆகிடுச்சு..முகத்தைப் பார்த்திருந்தா உடனே கண்டு பிடிச்சிருப்பேன்.” என்று அவர் சறுக்கியதை ஒப்புக் கொள்ளாமல் சப்பைக் கட்டு கட்டினார்.
“நம்ம காதலிச்ச காலத்திலிருந்து எனக்கு முன்னும், பின்னும் ஒரே மாதிரியாதான் இருக்கு..இன்னைக்கு உங்க பேச்சுதான் முன்னே பின்னே இருக்கு.” என்று சிவகாமி சண்டைக்குத் தயாராக, அதைக் கண்டு கொண்ட மாறன்,
“விடுங்க மா..அப்பா எப்பவும் அப்படிதான்னு உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டு தில்லை நாதனைக் காப்பாற்றுவதாக நினைத்து அவனே அகப்பட்டுக் கொண்டான்.
“சரி டா என் புருஷனுக்கு எப்பவும் அவ்வளவுதான்..ஆனா உனக்கு இன்னைக்கு தான் உங்கம்மா அட்டகாசமா தெரியறேனா? இவ்வளவு நாள் அப்ப நீ சொன்னதெல்லாம் பொய்யா?” என்று புருஷனை மன்னித்து விட்டு மகன் மேல் பாய்ந்தார்.
“ஐயோ அம்மா…என் தெய்வமே..இன்னைக்கு நீங்க வேற மாதிரி அழகா இருக்கீங்க அதைதான் அப்படி சொன்னேன்.” என்று அவரைச் சாதுர்யமாக சமாதானப் படுத்த முயன்றான்.
ஆனால் சிவகாமிக்கு மாறனின் பாராட்டு கடந்து போன வாய்ப்புக்களை நினைவுக்கு கொண்டு வர,”இத்தனை வருஷத்திலே எத்தனை மீட்டிங், வெட்டிங், கதெரிங் அட்டென்ட் பண்ணியிருப்பேன்..ஒருமுறையாவது உங்க இரண்டு பேர்லே யாராவது ஒருத்தன் இந்த மாதிரி ஸஜஷன் கொடுத்தீங்களாடா?..எப்பவும் ஒரே போல “நல்லா இருக்குண்ணு” சொல்லி என்னை வேற எதுவும் டிரை செய்ய விடாம தடுத்துட்டீங்க..இன்னைலேர்ந்து நான் எதையும் வேணாம்னு ஒதுக்க போகறதில்லை..எல்லாத்தையும் ஒருமுறையாவது முயற்சி செய்து பார்க்க போறேன்..ஸ்மிரிதி சொன்னது கரெக்ட்..போர்வையைத்தான் இவ்வளவு நாள் புடவைன்னு நினைச்சு சுத்திக்கிட்டிருந்திருக்கேன்.” என்று பொரிந்து தள்ளினார்.
அங்கே நடப்பதை வேடிக்கைப் பார்த்தபடி சிவகாமி அருகில் நின்று சிரித்து கொண்டிருந்த ஸ்மிரிதியிடம்,”உன் வேலையாதான் இருக்கும்ணு நினைச்சேன்.” என்று சொன்ன மாறன், அவனருகில் மௌனமாக இருந்த மனுவிடம்,”நீ வக்கீலா எப்படி இருக்கேன்னு இப்பதாண்டா புரியுது..பேச வேண்டிய நேரத்திலேக்கூட மௌனமா இருந்து மத்தவனை மாட்டிவிடற டா.” என்று வருத்தப்பட, உடனே தம்பியின் துணைக்கு வந்தான் அண்ணன்.
“அம்மா, உங்களுக்கு எது பிடிக்கும், எது ஸுட்டாகும்னு உங்களுக்கேத் தெரியாத போது எதுக்கு அப்பாவையும், மாறனையும் கோவிச்சுக்கறீங்க..இது ஸுட்டாகியிருக்காட்டா என்ன செய்திருப்பீங்க..இவனைதானே வீட்டுக்கு அனுப்பி வேற புடவை எடுத்திட்டு வர சொல்லியிருப்பீங்க..ரிஸ்க் எடுக்கற நேரமா மா இது?” என்று வக்கீல் பாயிண்டாக பேச, அதை மறுக்க முடியாமல் சிவகாமி தடுமாறியதைப் பார்த்து, கேட்ககூடாத கேள்வியைக் கேட்டு அந்த நேரத்திலும் அவன் திறமையான வக்கீலென்று நிரூபித்ததைப் பார்த்து கடுப்பான வக்கீலின் மனைவி,
“நீ வக்கீலாதான் யோசிப்பேன்னு தெரியுமே.. அதான் இன்னைக்கு மத்தியானம் நீ தூங்கும் போது வக்கீல் பொண்டாட்டியா நானும் எல்லாத்தையும் யோசிச்சிட்டேன்.” என்று மனதிற்குள் நினைத்து, மந்தகாச புன்னகை ஒன்றை மாமியாரை பார்த்து உதிர்த்து,
”ஆன்ட்டி..உங்களே அப்படியே நான் விட்டிடுவேனா? மீரா ஆன்ட்டிகிட்ட சொல்லி ஹோட்டல் புட்டீக்லே ஏற்கனவே உங்களுக்கு பொருந்தற மாதிரி புடவையை எடுத்து வைக்க சொல்லியிருந்தேன்.அதுக்கு பொருந்தற மாதிரி பிளவுஸ் தைக்க ஒரு ஆளையும் ஏற்பாடு செய்து வைச்சிருந்தேன் ..இப்ப மீரா ஆன் ட்டி போட்டுகிட்டு இருக்கற அத்தனை அலங்கார சாமானும் உங்களுக்கும் ஒரு செட் ரெடியா இருக்கு..நீங்க “உம்”நு சொல்லுங்க..பத்து நிமிஷத்திலே உங்க அப்பியரன்ஸை மறுபடியும் மாத்திடாலம்.” என்று மாமியாருக்கு அவள் மீதிருந்த நம்பிக்கையை அசைக்க பார்த்த கணவனை முறைத்தபடி சிவகாமிக்கு மீண்டுமொருமுறை ஆதியிலிருந்து ஆரம்பித்து அவரின் முழு அலங்காரத்தையும் மாற்றி கொள்ள ஆப்ஷன் அளித்தாள் ஸ்மிரிதி.
“மீரா போலவா..?” என்று சற்று யோசனையுடன் மீராவின் புறம் சிவகாமி பார்வையைத் திருப்ப, அதில் சற்று பதட்டமடைந்து அவர் முகத்தை வலுக்கட்டாயமாக அவன் புறம் திருப்பிய அவரின் மூத்தமகன்,”வேணாம்..உங்களுக்கு அது ஸுட்டாகது..இதுதான் நல்லா இருக்கு.” என்று கடைசியாக அவரின் தோற்றத்தைப் பாராட்டி அவன் அம்மாவின் மனதைக் குளிர்வித்து அவன் மனைவியிடம் தோல்வியைத் தழுவினான்.
அந்த மாலைப் பொழுதில் கார்மேகம், கபீர், மனு மூவர் மட்டும் சிறிது படபடப்புடன் காணப்பட்டனர்.
ஸ்மிரிதியின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் விருந்தினர்களின் எண்ணிக்கையைப் பலமுறை மாற்றியமைத்து அவர்கள் பெயர் பட்டியலை இரகசியமாக வைக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தார் கார்மேகம். அவர்கள் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் எங்கேயும் ஒரு சிறு தவறுகூட நேரக்கூடாது என்று அவனின் ஒவ்வொரு முடிவையும் கார்மேகத்திடமும், மனுவிடமும் கொண்டு போக வேண்டிய கட்டாயத்திலிருந்தான் கபீர். அவனுடைய மாமானாரின் தொழில் வட்டமும், அவன் அப்பாவின் நட்பு வட்டமும் ஒரே இடத்தில் சந்திக்க போவதால் மெனுவிலிருந்து, கிஃப்ட் வரை ஒவ்வொரு முடிவையும் முடிந்தவரை அலசி ஆராய வேண்டிய கட்டாயத்திலிருந்தான் மனு. அதனால் அவர்கள் மூவரும் ஒரு முடிவிற்கு வந்து அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவிருந்த விருந்தினர்களைப் மூன்று பிரிவாகப் பிரித்து, மூன்று விதமான அழைப்பிதழ்களை அனுப்பி, அவ்விருந்தினர்களின் வருகையை உறுதி செய்தபின் தான் மற்ற ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.
சரியாக ஏழு மணிக்கு அந்த வரவேற்பு ஹாலின் பிரம்மாண்டமான நுழைவாயிற் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த விருந்தினர்களை மூன்று ஜோடிகள் இன்முகத்துடன் வரவேற்றனர். முதலில் கலெக்டர், அவர் மனைவி, அடுத்து புது கல்யாண ஜோடி, கடைசியாக கார்மேகமும், கீதிகாவும் என வந்த விருந்தினர்களை வரவேற்று, அறிமுகப்படுத்தி அதற்குபின் மாறனிடம் அவர் விருந்தினர்களை தில்லை நாதன் ஒப்படைக்க, கார்மேகத்தின் விருந்தினர்களைக் கபீரும், மிலிந்தும் கவனித்து கொண்டனர்.
வரவேற்பிற்காக தயார் செய்யப்பட்டிருந்த ஹாலின் மேற்பகுதி, கூரை ஸு-த் ரு கண்ணாடியால் அமைக்கப்பட்டிருந்தது. நீல வானத்தையும், அதில் கொட்டி கிடந்த நட்சத்திரதையும் தெவிட்டாமல் பார்க்க ஹாலில் இருந்த விளக்குகள் மிதிமான வெளிச்சத்தை வீசி கொண்டிருந்தன. பிரம்மாண்டமான அந்த ஹாலிலில் நடு பகுதியை மட்டும் காலியாக விட்டு விட்டு சுவற்றையொட்டி வெள்ளை நிறத்தில் சோபாக்களும், அதன் நடுவே கண்ணாடி பதிக்கப்பட்ட டேபிள்களும் விருந்தினர்கள் அமர்ந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இரண்டு சோபாக்களுக்கு நடுவே மினி பார், ஸ்னாக்ஸ் கார்னர். அதனருகே அதை பராமரிக்கவென்று ஹோட்டல் சிப்பந்திகள் தயார் நிலையில் இருந்தனர்.
விருந்தினர்களை வரவேற்க ஆரம்பித்து அரைமணி நேரம் கழிந்த பின்னர் கார்மேகமும், கலெக்டரும் கபீரிடமிருந்த லிஸ்ட்டில் செக் செய்து இனி யாரும் வர போவதில்லை எனறு உறுதியானபின் வாசலிலிருந்து வரவேற்பு ஹாலிற்குள் நுழைந்தனர். அவர்களுடன் புதுமண தம்பதியும் உள்ளே நுழைந்தவுடன் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவர்களுக்கு கோரஸாக வாழ்த்து தெரிவிக்க அதை ஏற்று கொண்டு அங்கே அமர்ந்திருந்த விருந்தினர்களை தனிபட்ட முறையில் சந்திக்க ஆயுத்தமாயினர் மனுவும், ஸ்மிரிதியும்.
முதலில் கார்மேகத்தின் அழைத்திருந்த விருந்தினர்களைச் சந்திக்க ஸ்மிரிதியும், மனுவும் தயாரான போது,
அதிகாரிகளுக்குதான் முதல் இடமென்று நினைத்து,“மனு, நம்ம கெஸ்ட்டை முதல்லே மீட் செய்திடலாம்.” என்று முட்டுக்கட்டை போட்டார் சிவகாமி.
ஒரே வரியில்,”நோ..அவங்க அடுத்து..கடைசிலே பிரண்ட்ஸ் அண்ட் ரிலெட்டிவ்ஸ்.” என்றான் மனு.
“இன்னைக்கு நம்ம உறவுக்காரங்க யாரும் வரலேயே.” என்றார் சிவகாமி.
அதற்கு மனு பதில் சொல்லுமுன்,”கீதிகா குடும்பத்திலேர்ந்து எல்லாரும் வந்திருக்காங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“உன்னை அவங்க பத்து வருஷமா பார்த்துகிட்டுதான் இருக்காங்க…எல்லாரும் உனக்கு தெரிஞ்சவங்கதான்..நாங்க வந்திருந்தோமே அந்தக் கல்யாணப் பொண்ணும் இன்னைக்கு வந்திருக்கு.” என்றார் சிவகாமி.
“என்னை எல்லாருக்கும் தெரியும்..மனுவை அவங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கறது முக்கியம்.” என்று சிவகாமிக்குக் காரணத்தை விளக்கி விட்டு அவளருகிலிருந்து மனுவிடம்,”நான் மனிஷை அழைச்சுகிட்டு வரேன்..நாம மூணு பேரும் சேர்ந்து அப்பாவோட கெஸ்ட்டை சந்திக்க போகலாம்.” என்று கீதிகாவின் உறவினர் கூட்டம் அமந்திருந்த சோபாவை நோக்கி சென்றாள் ஸ்மிரிதி.
“டேய்..சின்ன பையன் எதுக்கு டா உங்ககூட வரணும்?” என்று சிவகாமி சந்தேகத்தைக் கிளப்ப, மனுவின் மனதிலும் அதே கேள்விதான் இருந்தது. அவனுக்குப் பதில் தெரியாததனால்,
“அதென்னடா அம்பது நிமிஷக் கணக்கு? அந்த மாதிரி டயம் பார்த்து பேச்சை முடிச்சிக்க முடியுமா?” என்று சிவகாமி சிடுசிடுக்க,
“கார்மேகம் அங்கிளோட கெஸ்ட்டுகெல்லாம் காக்டெயில் ரிஸெப்ஷன் இன்விடெஷன் மட்டும்.. அதுக்கு டைம் நாற்பது நிமிஷம் தான், நம்ம கெஸ்ட்டுகெல்லாம் டின்னர் ரிஸெப்ஷன் இன்விடெஷன் அதனாலே அவங்க டின்னர் முடிச்சிட்டுதான் கிளம்புவாங்க… பிரண்ட்ஸ் அண்ட் ரிலெடிவ்ஸ்க்கு ரிஸெப்ஷன் இன்விடெஷன்..காக்டெயில், டின்னர், டான்ஸ்..ஆரம்பத்திலேர்ந்து கடைசிவரைக்கும் இருப்பாங்க.” என்று வியாபாரி போல் வரவேற்பிற்கு வந்திருந்த விருந்தினர்களைத் தரம் வாரியாகப் பிரித்து இருப்பதைக் கேட்டு ஆச்சரியமடைந்தார் சிவகாமி.
ஒருபுறம் மனுவின் கையைப் பற்றி கொண்டு, மறுபுறம் மனிஷின் தோளை அணைத்தபடி கார்மேகத்தின் விருந்தினர்கள் அனைவருக்கும் அவள் வாழ்வின் மிக முக்கியமான இரு நபர்களை அமைதியாக அறிமுகப்படுத்தி இனி அவள் அப்பாவின் அனைத்திற்கும் அவள்தான் என்ற அதிமுக்கியமான செய்தியை அதே அறையிலிருந்த கார்மேகத்தை அறிமுகப்படலத்திற்கு அழைத்து வராமல் தனி ஒருத்தியாக அதை ஸுருதி பிசகாமல் இயற்றி அழுத்தமான ஒசையை இனிமையான இசை போல் அனுப்பி வைத்தாள் ஸ்மிரிதி கார்மேகம்.
அந்த நாற்பது நிமிடங்களின் முடிவில் அந்த அறையிலிருந்த இருவர் மனதில் ஸ்மிரிதியின் அந்தப் புது பரிமாணம் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருந்தது. சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த அனைவரும் ஸ்மிரிதியிடம் காட்டிய பணிவு, பயபக்தி, விசுவாசம், மரியாதையில் செங்கோல் கை மாறி, அவன் மனைவி மகாராணியாகியிருப்பதை உணர்ந்து ஸ்தம்பித்து போன அவள் கணவன், மனு, மந்திரக்கோலை ஆட்டி கார்மேகத்தின் கூட்டத்தை அவள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்த மாயஜாலத்தைப் பார்த்து மலைத்து போன அந்த மாய மோகினியைப் பெற்ற அவள் அம்மா, பிரேமா.