“அஞ்சலி.. தம்பிக்கும் உனக்கும் டீ எடுத்துட்டு வா..” என்று நாயகி சொல்லவும், வேறுவழி இல்லாமல், உள்ளே சென்று கொண்டு வந்தவள், கணவனுக்கு கொடுக்க,
அவனோ.. “எனக்கு வேண்டாம்” என்றுவிட்டான், அவன் பார்த்தபோது தராததால், மறுக்கிறான் என்று புரிந்து கொண்ட அஞ்சலிக்கு, அவனின் தலையில் நறுக்கென கொட்டினாள் என்ன என்றே ஆத்திரம் கிளம்பியது.
“நான் ரூமுக்கு போறேன்..” என்று மனைவியை முறைத்துவிட்டு மேலே சென்றவன், “அஞ்சலி..” என்று அங்கிருந்து கூப்பிட, உள்ளே சென்றவளிடம், எடுத்தவுடனே,
“நான் அடங்காதவன் தான் எப்போ என்னாங்கிற நீ..? ஏன் நான் இப்படிதான்னு உனக்கு தெரியாதோ..? என்னமோ என்னை புதுசா பாக்கிற மாதிரி பாக்கிற.?” என்று கோவத்தோடு எகிறியவனிடம்,
“நீங்க செஞ்சது தப்பு இல்லங்கிறீங்களா..?” என்று நிதனமாக கேட்டாள் மனைவி.
“நான் செஞ்சது தப்பு.. தப்பில்லை அது பேச்சு கிடையாது, நீ ஏன் என்னை எப்பவும் தப்பு செஞ்சவன் மாதிரியே பாக்கிற..? இன்னும் சொல்ல போனால் நான் எது செஞ்சாலும் உன் கண்ணுக்கு தப்பாதான் தெரியுது..”,
“நான் ஏன் செய்றேன் எதுக்கு செய்றேன் எல்லாம் உனக்கு தேவையில்லை, நான் தப்பு செய்றேன் இதுமட்டும் தான் உனக்கு நல்லா தெரியுது, உனக்கு என்மேல் அவ்வளவுதான் நம்பிக்கை”,
“இதுல நான் டீ கேட்டா தரமாட்டேன்னு வேற நிக்கிற, போடி.. நீதான் வேணும்ன்னு உன்னை தூக்கிட்டு வந்து நான் தாலி காட்டினேன் இல்லை, அந்த திமிர்தான் உனக்கு.. அதனாலதான் உனக்கு என்கிட்ட இப்படி நடந்துக்க தோணுது”,
“இனி உன்கையில எனக்கு எதுவும் வேணாம்..!!!”, உன்கிட்ட நான் ஏதாவது கேட்டேனா பாரு..!!?” என்று அஞ்சலியை பேசவிடாமல் கத்தியவன், வெளியே வந்துவிட, அஞ்சலிக்கு ஆற்றாமையாக இருந்துது,
இருவரும் சேர்ந்து வாழஆரம்பித்து முழுதாக இருநாட்கள் கூட முடியவில்லை, அதற்குள் எத்தனை பிரச்சனைகள், இது இப்படியே தொடர்ந்தால்..!!! நினைக்கவே பயமாக இருந்தது,
மாலை வெளியே சென்றவன், இரவு வெகுநேரம் கழித்தே வந்தான், வந்தவன் சொன்னதுபோல் இரவு உணவு பரிமாற வந்த மனைவியை தடுத்து, தனக்கு தானே பரிமாறி உண்ண, பார்த்திருந்த அஞ்சலியின் கண்ணில் நீர் கோர்த்தது,
“உன்னுடைய கட்டாயத்தால் தான் உனக்கு எல்லாம் செய்கிறேன்..!!” என்ற பேரில், முழுமனதுடன் காதலாக கணவனுக்கு எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்த அஞ்சலிக்கு, அவனின் விலகல் சொல்லமுடியாத துயரத்தை கொடுத்தது,
இரண்டு நாட்களாக தன்னை கேட்பவன், இன்று “தான் சாப்பிட்டேனா..?” என்று கூட கண்டுகொள்ளாமல் தன்பாட்டில் சாப்பிட்டவன், நேரே ரூமிற்கு சென்றும் விட்டான்,
கதிரின் ஒதுக்கத்தில் பாதிக்கப்பட்ட அஞ்சலி, இரவு உணவையும் மறந்து, ரூமிற்கு வர, அங்கே கணவன், பெட்டில் ஓர் ஓரமாக படுத்து தூங்கியிருந்தான்.
இரவு முழுவதும் தூங்கியும், தூங்காமலும் கணவனை பார்த்தபடியே படுத்திருந்தவள், மறுநாள் காலையிலே சுந்தரத்தின் குலதெய்வ கோவிலுக்கு, செல்வதற்கு எழுந்து தயாரானவள், கணவனை எழுப்ப, அவன் எழுந்து கேள்வியாக பார்க்கவும்,
“அப்பாவோட குலதெய்வ கோவிலுக்கு போகணும்..” என, மனைவியிடம் எதுவும் பேசாமல், குளிக்க செல்ல, அவன் வருவதற்குள் உடை எடுத்து வைத்தவள்,காபி கொண்டுவர சென்றவள், வந்து பார்த்தால்,
அவள் எடுத்து வைத்த உடைய அணியாமல், இன்னொரு உடையை அணிந்து தயாராக நின்றவன், மனைவி காபி கொடுக்க, கண்டுகொள்ளாதவன் போல், ஒதுங்கி கீழே இறங்கிவிட்டான்,
அவனின் கோவம் அஞ்சலிக்கு மீண்டும் கண்ணீரை உற்பத்தி செய்ய, கோவிலுக்கு செல்வதால், முயன்று தன்னை சாமளித்தவள், கீழே இறங்கிவர, அவன் ரெடியாக காரை ஸ்டார்ட் செய்தடி உட்கார்ந்திருந்தான்,
மனைவி ஏறவும், காரை கிளப்பியவன், நேரே சுந்தரத்தின் வீட்டிற்கு செல்ல, அங்கே அனைவரும் தயாராக இருக்கவே, சுந்தரம், மீனாட்சி தனி காரில் கிளம்ப, அசோக் குடும்பத்துடன் கதிரின் காரிலே ஏறினான், அசோக்கின் மடிமேல் அமர்ந்திருந்த ஸ்வேதாவை சிரிப்புடன் பார்த்த கதிர்,
“ஹலோ பியூட்டி..” என, ஸ்வேதாவிற்கோ புதுமாமனின் பேச்சில் வெட்கம் வர, தந்தையின் மேல் முகத்தை புதைத்து கொண்டாள், அவளின் வெட்கத்தில் சிரித்த கதிர், மேலும் அவளை வம்பிழுத்தபடியே வர, அஞ்சலிக்கு கோவம் புசுபுசுவென வந்தது, பின் சீட்டில் உட்கார்ந்து கணவனை முறைத்தபடியே வந்தாள்,
கோவில் வரவும், பூஜை ஏற்பாடு முன்னமே செய்யப்பட்டு இருந்ததால், இவர்கள் சென்று சிறிது நேரத்திலே கற்பூரம் காட்டி பூஜை முடிய, எல்லோருக்கும் பிரசாதமும், பூ, திருநீறும் தர, முதலில் தான் வைத்துக்கொண்டவள், அடுத்து கணவனை பார்க்க,
அவன் கையில் வைத்திருந்த ஸ்வேதாவிடம் திருநீறு வைத்து கொண்டிருந்தான், அதில் மேலும் பொங்கிய அஞ்சலி, கணவனோடு ஸ்வேதாவையும் சேர்த்து முறைத்தவள், கதிரின் கையிலிருந்த ஸ்வேதாவின் தலையில் கொட்டிவிட்டு செல்ல,
கோவில் பிரச்சனைக்காக பஞ்சாயத்து ஆரம்பிக்க, ஊர் தலைவர்கள் நடுவில் அமர்ந்திருக்க, மாறனும், சுந்தரமும் நடுவில் சேரில் அமர்ந்திருக்க, கதிர் ஓரமாக நின்றிருந்தான், அசோக் எப்போதும்போல் தன் தந்தையின் அருகில் நின்றிருந்தான்,
கதிரின் அண்ணன்கள் தங்களின் எடுபிடிகளோடு நடுவில் நிற்கவைக்க பட்டிருந்தனர், ஊர் பெருந்தலைகள் முதலில் பொதுவாக பேச ஆரம்பித்து, முதலில் கைவைத்த கதிரின் அண்ணன்களிடம் விசாரிக்க, “அவர்கள் அசோக்கின் ஆட்களை கை காட்டி அவர்கள் பேசியதை சொல்லி, வேண்டுமென்றே தங்களை அடிக்க தூண்டியதாக சொன்னனர்”,
அசோக்கின் ஆட்கள், “நாங்க இதெல்லாம் பேசியது உண்மைதான், ஆனா இவங்களை பத்தி பேசல, ஒரு படத்துல வந்ததை பத்திதான் பேசினோம், எங்க அவங்களை பேர் சொல்லி பேசுனோம்ன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்” என,
கதிரின் அண்ணன்களால் அவர்கள் சொன்னதை மறுக்க முடியவில்லை, ஆனாலும் விடாமல் பேசி, தங்கள் தரப்பு நியாயத்தை சொல்ல முயன்றனர், ஊரில் எல்லோரும் அவர்களின் செயலால் உண்டான வெறுப்பில், அவர்களுக்கு சப்போர்ட் செய்யாமல் போக,
“அவர்கள் பக்கம் தான் தவறு..” என்று உறுதி செய்யப்பட்டு, அவர்களையும், அவர்கள் குடுமபத்தினரையும், ஊரில் நடக்கும் எல்லா நல்ல, கேட்ட காரியங்களுக்கும் ஒரு வருடத்திற்கு ஒதுக்கி வைப்பதாக சொல்ல, அப்போதும் குரூர எண்ணம் கொண்ட மோகன்,
“குடும்பம்ன்னா, எங்க அப்பா, என் தம்பியும் சேர்த்து தானே..” என,
“நானும், என்னோட அப்பாவும், அவங்களை விட்டு விலகி, தனியா தோட்ட வீட்லதான் இருக்கோம், அதோட நேத்து நடந்த பிரச்சனையில நானோ, எங்க அப்பாவோ எதுவும் செய்யாமல் விலகி தான் இருந்தோம், அதனால எங்களை இந்த தண்டனைக்குள்ள கொண்டுவர முடியாது..” என திட்டவட்டமாக கதிர் சொல்ல,
அவனின் பேச்சை ஒத்துக்கொண்ட ஊர் தலைவர்கள், “அவர்கள் கிடையாது” என அறிவித்தவர்கள், ஊர் முன்பு பொதுமன்னிப்பு கேட்க சொல்ல, கதிரை மிக வன்மமாக முறைத்தபடி மன்னிப்பு கேட்ட அண்ணன்மார்கள், கோவத்தோடு தந்தையும் முறைத்துவிட்டு தன் எடுபிடிகளுடன் சென்றுவிட்டனர்,
“அப்பறம் இந்த இளவட்ட பசங்க எல்லாம் முன்னாடி வாங்கப்பா..” என்று ஊர் தலைவர்கள் கூப்பிட, முன்னே வந்தனர், இளைஞர் பட்டாளங்கள்,
“நீங்க எல்லாம் ஏன்பா நேத்து எல்லாரையும் அந்த அடி அடிச்சீங்க”,
“ஆமாப்பா.. கையில கிடைச்சதை எல்லாம் வச்சி அடிச்சாங்கப்பா, என்னா அடி..?” என்னன்னு கேளுங்க..” என்று கையில், தலையில் கட்டோடு இன்னொருவர் சொல்ல, அவரின் பக்கத்தில் இருந்த ஒருவன்,
“ஏண்டா மச்சான் அடுத்த வாரம் நம்ம ஊர் திருவிழா வருதுல்ல, கரண்ட் வேற ஆப் ஆகும், உடம்பு பத்திரம், பாத்துகோடா”, என அவருக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாக முணுமுணுக்க, அந்த மனிதர், வேகமாக அமர்ந்து விட்டார்,
“சொல்லுங்கப்பா..” என்று ஊர் தலைவர் மறுபடியும் கேட்க,
“என்ன தலைவரே இது அநியாயமா இருக்கு, எல்லோரும் அடிச்சாங்க, நாங்களும் அடிச்சோம் அவ்வளுதான்..” என அக்கூட்டத்தின் தலைவன் போல இருந்தவன் சொல்ல,
“டேய் அநியாயமா பேசாதீங்கடா, எல்லாரும் எங்கடா அடிச்சாங்க, நீங்க தாண்டா எல்லோரையும் அந்த அடி அடிச்சீங்க..” என்று இன்னொருவர் சொல்ல, கூட்டத்தில் நேற்று அவரை அடித்தவன், “வெளியே வாடி..” என்று சைகை காட்டி தன் கையை முறுக்க, பதறிப்போய் அவரும் அமர்ந்துவிட்டார்,
“நீங்க வேணும்ன்னு தான் செஞ்சீங்கன்னு உங்களுக்கும் தெரியும், எல்லாருக்கும் தெரியும், அதனால நீங்க செஞ்ச தப்புக்கு, எல்லோருகிட்டேயும் பொது மன்னிப்பு கேட்கிறதோடு, ஊர்ல இருக்கிற எல்லா கோவிலுக்கும் திருவிழாக்கு நீங்கதான் வெள்ளை அடிக்கனும், இதுதான் உங்க தண்டனை” என்று தலைவர் சொல்ல,
“எல்லோரும் எங்களை மன்னிச்சிடுங்க..” என்று தலைக்கு மேல் கும்பிடு போட்டு கோரஸாக கத்தியவர்கள், வெளியே செல்லும்போது வேண்டுமென்றே பாட்டு பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் போக, தலையில் அடித்து கொள்வதை தவிர வேறென்ன செய்துவிட முடியும், அசோக்கும், கதிரும் அடக்கிவைத்த சிரிப்புடன் தங்கள் படையின் அட்டகாசத்தை பார்த்து கொண்டிருந்தனர்.