அடுத்த ஒரு மணி நேரம் அண்ணன், தம்பி இருவரும் அடித்து போட்டது போல் உறங்கி இளைப்பாற, அந்த வீட்டின் புது மருமகளோ மெஹக்கிற்கு ஃபோன் செய்தே களைப்படைந்திருந்தாள். மாலையில் நடக்க போகும் ரிஸெப்ஷனிற்கு வேண்டிய ஏற்பாட்டில் கபீர் பிஸியாக இருப்பான் என்பதால் அவனையோ, அவளுடைய ஹோட்டல் அறையில் இளைப்பாறி கொண்டிருந்த சுசித் ராவையோ தொந்தரவு செய்ய விரும்பாமல் ஒரு முடிவுக்கு வந்து தல்ஜித்திற்குப் ஃபோன் செய்தாள் ஸ்மிரிதி.
அந்த நேரத்தில் ஸ்மிரிதியின் ஃபோனை எதிர்பார்த்திராத தல்ஜித், அவள் அழைப்பை ஏற்று“என்ன ஸ்மிரிதி?” என்று யோசனையாகக் கேட்க,
தில்லி வந்த பின்னும் அவளின் கல்யாணத் தினத்தன்று அவளை வாழ்த்தாமல், அவளுடன் ஒரு வார்த்தைப் பேசாமல் அவளின் ஃபோனை அணைத்து வைத்திருந்த மெஹக்கின் செய்கையில் எழுந்த கோபத்தை அடக்கியபடி,
“தல்ஜித்..அவளுக்கு என்ன மனக்குழப்பம் வேணும்னாலும் இருக்கட்டும்..எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை..இன்னைக்கு காலைலே எனக்கு கல்யாணம் ஆகியிருக்கு..சாயந்திரம் ரிஸெப்ஷன் நடக்க போகுது..அதனாலே நான் அங்கே வரமாட்டேன்னு அவளைப் போல நீயும் தப்பு கணக்குப் போடாத…நான் அதே ஸ்மிரிதி தான்.” என்று குரலை உயர்த்தினாள் ஸ்மிரிதி.
“நோ..நோ…இனி நீ அவளுக்கு ஃபோன் செய்ய வேணாம்..இங்கேயும் வர வேணாம்..உங்களுக்கு முன்னாடி அவ அங்கே ஹோட்டல்லே இருப்பா..நான் பார்த்துக்கறேன்” என்று வாக்குறுதி கொடுத்தான் தல்ஜித்.
மனுவின் அறையில் இளைப்பாறாமல் ஃபோன் பேசிக் கொண்டிருந்த மகளின் குரலைக் கேட்டு அங்கு வந்த பிரேமா,
“என்ன ஸ்மிரிதி இப்படி ஃபோன்லே கத்தி பேசிக்கிட்டிருக்க? சிவகாமியும், நாதனும் வாசல்லேதான் உட்கார்ந்திருக்காங்க.” என்று கண்டித்தார்.
ஆனால் எப்போதும் போல் பட்டென்று பதில் சொல்லாமல் கவலையாக அமர்ந்திருந்த ஸ்மிரிதியின் தோற்றம் பிரேமாவிற்கும் கவலையைக் கொடுத்தது.
“என்ன ஸ்மிரிதி?” என்று அவளருகே அமர்ந்து அவர் விசாரிக்க, ஒரு நொடி அவருக்குப் பதில் சொல்ல தயங்கிய ஸ்மிரிதி, முதல்முறையாக அவரிடம் அவள் மனத் தவிப்பை பகிர்ந்து கொண்டாள்.
ஸ்மிரிதி சொன்னதைக் கேட்ட பிரேமாவிற்கும் அந்த செய்தி அதிர்ச்சியாகதான் இருந்தது.
“ஏன் அவ ஃபோனை அணைச்சு வைச்சிருக்கா?”
“அவ பேச தயாரா இல்லைன்னா அப்படிதான் செய்வா..இன்னைக்கு அவ ஏன் அந்த மூட்லே இருக்கான்னு தெரியலே..எனக்கு அவகிட்ட கட்டாயமா பேச வேண்டியிருந்திச்சு..ஏதோ குழப்பத்திலே ஆன் ட்டியோட பிளவுஸை மும்பை அனுப்பி வைச்சிட்டா ஜனனி.. எனக்கு மெஹக்கும், சுசித் ராவும் ஆன் ட்டி பிளவுஸை வைச்சு ஏதோ விஷமம் செய்திருக்காங்கன்னு தோணுது.” என்றாள் ஸ்மிரிதி.
“ஆமாம் மா..சுசித் ரா முடியாதுன்னு சொன்ன பிறகு நம்மளோடது மட்டும் தான் நான் அனுப்ப சொல்லியிருந்தேன் ஆனா ஆன் ட்டியோடதும் போயிடுச்சு..எனக்கு தெரிஞ்சு இன்னைக்கு நைட் மெஹ்க்கோட லேட்டஸ்ட் ஸ்டைல் பிளவுஸ் ஆன் ட்டியும் போட்டுப்பாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“அவ ஃபோன் எடுக்க மாட்டா மா..நாலு மணிக்கு அவளே ஹோட்டலே இருப்பா.” என்ற சொன்ன ஸ்மிரிதி ஒரு முடிவிற்கு வந்திருந்தாள் இன்றைக்கு அவள் மாமியாரை அவள் பிரண்டாக்கிவிட வேண்டுமென்று. அதற்கு அவருடைய சினேகிதியை முதலில் சமாளிக்க வேண்டும் என்று உணர்ந்தவள்,
“அம்மா, ஆன் ட்டி உங்க பிரண்ட்..நீங்க என்னோட பிரண்ட்..அதனாலே கோய முத்தூரிலே சொன்னது போலே நானும் ஆன் ட்டியும் பிரண்ட்ஸ்….நான் பார்த்துக்கறேன்.”
“நீ எப்படி ஸ்மிரிதி கவனமில்லாம இருந்த? சின்ன விஷயம்தான் பெரிய சண்டையைக் கிளப்பும்.. புடவை பர்சேஸ் செய்த பிறகு நீ ஒரு வார்த்தை ஜனனிகிட்ட பேசியிருக்கலாம்..இல்லை சிவகாமிகிட்ட கூட பேசியிருக்கலாம்..உன் கல்யாண வேலையெல்லாம் உங்கப்பாதான் பார்த்துகிட்டாரு..இங்க சிவகாமிதான் பார்த்துகிட்டா..உதய்பூர் வேலையும் நின்னு போயிடுச்சு..நீ அப்படி என்ன வேலை பார்த்துகிட்டு இருந்த இந்த இரண்டு வாரமா?” என்று கேள்வி கேட்டார் பிரேமா.
“வேலை இருந்திச்சு மா…நீங்களும் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..எல்லாம் ஹோட்டல் போய் பார்த்துக்கலாம்.” என்றாள் பிரேமாவின் கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்ல முடியாத நிலையில், நிர்பந்தத்தில் இருந்த ஸ்மிரிதி.
இரண்டு வாரம் முன்பு அவளை அவள் வீட்டில் கொண்டு விட்ட மனுவும் அறிந்திருக்கவில்லை அடுத்து வந்த இரண்டு வாரத்தில் கார்மேகத்தின் மொத்த கணக்கையும் விரிவாகப் படித்து, பிரித்து அவளின் பத்து விரல்களுக்குள் அதைப் பத்திரப்படுத்திக் கொண்டாளென்று.
அவளின் பெயரில் இருக்கும் அனைத்துக்கும் பேப்பர் வேண்டுமென்று மனு கேட்டது தெரிந்த அந்த நொடியில், அவரின் மாப்பிள்ளையை அவருடைய வட்டத்தில் அறிமுகப்படுத்ததான் வரவேற்பு நிகழ்ச்சி என்று கார்மேகம் முடிவெடுத்தது தெரிந்த அந்த நொடியில் ஸமிரிதியும் ஒரு முடிவிற்கு வந்திருந்தாள்.
மனுவை அவர் வட்டத்தில் கார்மேகம் அறிமுகப்படுத்துவதற்கு முன் அந்த வட்டத்திற்குள் நுழைந்து அவளை அவரின் வட்டத்திற்கு அறிமுகப்படுத்தி கொண்ட ஸ்மிரிதி அதை அலசி, ஆராய்ந்து அந்த கடின முயற்சியின் முடிவில் யாருடன் உறவு, யாரிடமிருந்து துறவு என்று அவளின் முடிவைக் கார்மேகத்துடன் கலந்து ஆலோசித்த பின் அவர்கள் பட்டியலில் இருந்த வடிகட்டிய ந(ண்)பர்களைத் தான் வரவேற்பிற்கு அழைந்திருந்தார்கள்.
முதலில் அதற்கு ஆட்சேபம் தெரிவித்த கார்மேகத்திடம்,
“நீங்க விரும்பினபடி மாப்பிள்ளை நம்ம வட்டத்திலேர்ந்து வரலே..வெளிலேர்ந்து வரான்..ஆனா என்னோடது எல்லாம் பார்த்துக்கறேன்னு சொல்றான்….அவன்கிட்ட எதுவுமில்லை..அவனைத் தவிர..அதனாலே அவனை நான் தான் பாதுக்காப்பா பார்த்துக்கணும்..
எங்க கல்யாணத்து அப்பறம் அவனை உங்க வட்டத்துக்கு அறிமுகப்படுத்த நீங்க விரும்புனீங்க..உங்க விருப்பத்திற்கு அவனும் தடை சொல்லலை..நானும் சொல்ல மாட்டேன்..நாங்க இரண்டு பேரும் வட்டத்துக்குள்ள வர போறோம்னா அந்த வட்டம் என்னென்னு தெரிஞ்சுகிட்டு அதை அளவோடு வைச்சுகிட்டாதான் அவசரம், ஆபத்து நேரத்திலே சுலபமா இருக்கும்..
உங்களோட ஆற்றை குளமா மாற்ற போறேன்..ஓட ற தண்ணிக்கும் தேங்கி நிற்கற தண்ணிக்கு வித்தியாசம் இருக்கும்..ஆனா இனி உங்களாலே ஒடற தண்ணி பின்னாடி ஓட முடியாது..ஒரே இடத்திலே தான் இருக்க முடியும்..நஷ்டம் தான்.. ஆனா கால போக்கிலே நம்ம இஷ்டம் போல அதுலே சந்தோஷமா இருக்க முடியும்..
குளத்து தண்ணிலே நீங்க தனியா இருக்க போகறதில்லை..உங்கக்கூட துணைக்கு நான் இருப்பேன்..நமக்கு பிடிச்ச தண்ணிலே, தெரிஞ்சு ஆழத்துலே வேலை செய்யலாம்..பிடிக்காம போயிடுச்சுன்னா, போதும்னு தோணிடுச்சுன்னா வெளிலே வந்திடலாம்..
இந்த வேலை உடனே முடியாது..நாம ஆரம்பிச்ச பிறகு வெளியே விஷயம் போகும்..இழுப்பறியா இருக்கும்..ஆனா இதை முழுசா செய்து முடிச்சாதான் இது நம்மளை அடிச்சுகிட்டு போகாது..என் வாழ்க்கைலே நான் உங்களோட வாழ்க்கையோட வினாக்களுக்கு விடை கொடுத்திட்டு இருக்க முடியாது..
நான் என்னைப் பற்றி மட்டும் யோசிச்சு இதை சொல்லலை..மனிஷ் பற்றியும் யோசிச்சுதான் சொல்றேன்..அவனுக்கு உங்க பெயர் கொடுத்திருக்கீங்க பா..உங்களோட நல்லது, கெட்டது இரண்டும் அவனுக்கும் தான்பா..நாளைக்கு யாரும் உங்களாலே அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னு சொல்லக்கூடாது.” என்று ஸ்மிரிதியின் ஆழமான விளக்கத்தை கேட்ட கார்மேகத்திற்கு “அவள் ஆள பிறந்தவள்” என்று மிலிந்து சொன்னது நினைவுக்கு வந்ததது. அதன்பின் அவரின் முழு ஒத்துழைப்புடன் கலயாணம் கணக்கைத் தவிர, காலம் காலமாய் கார்மேகம் பார்த்து வந்த பல கணக்குகளைக் காலாவதியாக்கி, களைபறித்து கல்யாணப் பயிரை வளர்க்க தயாரானாள் ஸ்மிரிதி.
அன்று மாலை நான்கு மணி போல் ஹோட்டல் வந்து சேர்ந்த புதுமணத் தம்பதியரை அவர்கள் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டிருந்த தளத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த மெஹக் ஆர்பாட்டமாக வரவேற்றாள்.
“மனு..கன்கிராட்ஸ் மேன்.. என்று மனுவிற்கு வாழ்த்து தெரிவித்தவள் அவனருகில் இருந்த ஸ்மிரிதியை இறுக அணைத்து அவளுக்கு மட்டும் கேட்கும்படி,”ஸாரி.” என்றாள். ஆனால் ஸ்மிரிதி அவள் ஸாரியைக் கண்டு கொள்ளவில்லை. அவளை ஒதுக்கி விட்டு முன்னால் நடக்க ஆரம்பித்தாள்.
உடனே அவள் ஃபோனிலிருந்து தல்ஜித்திற்கு கால் செய்தாள் மெஹக்.
அதற்குள் ஒரு அறையிலிருந்து வெளியே வந்த கபீரும், தல்ஜித்தும் ஆண்கள் மூவரையும் அவர்களுடன் அழைத்து சென்றனர்.
அந்த தளத்தில்தான் ஏற்கனவே புவனாவின் குடும்பமும், சுசித் ராவும் தங்கியிருந்தனர். அதே தளத்தில் மெஹக்கிற்கும் அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
ஸ்மிரிதி, சிவகாமி, பிரேமா மூவரையும் அவளறைக்கு அழைத்து சென்றாள் மெஹக். அங்கே இருந்த வரவேற்பறை சோபாவில் மீரா அமர்ந்திருந்தார். சிவகாமியைப் பார்த்தவுடன்,
“வாங்க சம்மந்தி மா.” என்று எழுந்து நின்று மரியாதையாக வரவேற்றார்.
“இது எங்களுக்கு கொடுத்திருக்கற ரூமா? என்று சிவகாமி கேட்க,
“இல்லை..இது மெஹக்கோடது..வாங்க உட்காருங்க.” என்று பிரேமாவையும், சிவகாமியையும் அவர் அமர்ந்திருந்த அதே சோபாவில் அமர வைத்தார்.
“ஆன் ட்டி..சுசித் ரா எந்த ரூம்லே இருக்கா?” என்று ஸ்மிரிதி விசாரித்தாள்.
“இந்த ஃப்ளோர்லேதான் எல்லாரும் இருக்கோம்..நானும் இங்கதான் இருக்கேன்..நீங்கெல்லாம் இன்னைக்கு மெஹக்கோட பொறுப்பு அதான் உங்களை இங்க அழைச்சுகிட்டு வர சொன்னேன்.” என்ற மீரா,
எல்லாரும் கரெக்ட் டயமுக்கு ரெடியாகணும்னு எல்லார் ரூமிற்கும் பியுட்டி ஸலூன்லேர்ந்து ஏற்கனவே ஆள் அனுப்பியாச்சு..ஏழு மணி போல கீழே மீட் செய்யலாம்..ஸ்மிரிதி பேட்டா நீ லேட்டாகாத.” என்று ஸ்மிரிதிக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் சொல்லிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினார்.
அந்த அறையிலிருந்து மீரா வெளியேறியவுடன்,”நான் பாத் ரூம் போயிட்டு வரேன்..என் புடவையை மெஹக்கிட்டேயிருந்து வாங்கி வை.” என்று ஸ்மிரிதியிடம் சொல்லிவிட்டு பாத் ரூமிற்கு சென்றார் சிவகாமி.
அப்போது சோபாவில் தனியாக அமர்ந்திருந்த பிரேமாவின் பாதங்களில் விழுந்து வணங்கிய மெஹக்,”ஸாரி ஆன் ட்டி..என்னாலே காலைலே கல்யாணத்துக்கு வரமுடியலே.” என்று அவள் மன வருதத்தை வெளியிட்டாள்.
“ஏன் மெஹக் நீ கல்யாணத்துக்கு வரலே..உன்னை ஸ்மிரிதி எதிர்பார்த்துகிட்டிருந்தா.” என்று அவர் மகளின் ஏமாற்றத்தை வெளியிட்டார் பிரேமா.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சில நொடிகள் யோசித்த பின்.,
“முயற்சி பண்ணினேன் ஆன் ட்டி..வற்புறுத்த முடியலே..வந்திடுவாங்கன்னு ஈஸியா இருந்தேன் ஆனா அப்படி நடக்கலே அதனாலே இன்னைக்கு ஸ்மிரிதி கல்யாணம் மிஸ் ஆயிட்டுச்சு.” என்று உண்மையாக பதில் அளித்தாள் மெஹக்.
அவர்கள் உரையாடலைக் கேட்டு கொண்டிருந்த ஸ்மிரிதிக்கு சினேகிதியின் பதிலிளிருந்து அவள் மன உளைச்சலை சட்டென்று புரிந்து கொண்டவள் அதுவரை இருந்த ஒத்துக்கத்தை கைவிட்டு விட்டு எப்போதும் போல் மெஹக்கை அரவணைத்துக் கொண்டாள்.
“அம்மா, அவளுக்கு நிறைய கமிட்மெண்ட்ஸ்…எல்லாரையும் கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்திருப்பா..முடியலே..அந்தப் பேச்சை விடுங்க.” என்றாள்.
“நல்லவேளை ரிஸெப்ஷனுக்கு வந்திட்டியே..சிவகாமி புடவையும், பிளவுஸும் எங்கே? என்று உடனே மகளையும், அவள் சினேகிதியையும் நடைமுறைக்கு அழைத்து வந்தார் பிரேமா.
அந்த அறையில் இருந்த கப்போர்டை திறந்து அதில் ஹாங்கரில் மாட்டி வைத்திருந்த நான்கு புடவைகளில் ஒன்றை வெளியே எடுத்து, கசங்காமல் மென்மையாக கட்டிலின் மீது வைத்தாள் மெஹக்.
சிவகாமியின் புடவையைப் பார்த்து,”ஸ்மிரிதி..என்னது இது?” என்று ஷாக்கானார் பிரேமா.
ஸ்மிரிதியின் கவனம் படுக்கை மேலிருந்த பாரம்பரியப் பாய் கட்டம் பட்டுப் புடவை அதற்கு முற்றிலும் முரணாக அதி நவீன டிஸைனில் நெட் துணியில் தைக்கப்பட்டிருந்த பிளவுஸ் மீதிருந்தது.