மனுவின் கருத்தை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஸ்மிரிதி, அவளுடைய கனவு, லட்சியம், குறிக்கோள் பற்றி யோசித்து அவன் முடிவுகளை எடுத்த அந்த நிமிடத்திலிருந்து அவளும் அவர்களுக்காகதான் செயல்பட்டு கொண்டிருக்கிறாளென்று அவனுக்கு அப்போது விளக்க விரும்பவில்லை.
அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்வதைப் பார்த்து கொண்டிருந்த பிரேமா “ஸ்மிரிதி..இங்க வா.” என்று அவளுக்கு அழைப்பு விடுத்தார்.
“சண்டையெல்லாம் இல்ல மா..அவன் என்ன சொன்னான்னு தெரியுமா உங்களுக்கு?”
“என்ன வேணுமுனாலும் சொல்லட்டும்..ஹி இஸ் யுவர் ஹஸ்பண்ட்..இந்த மாதிரி எல்லார் முன்னாடியும் சண்டைப் போடறத்துக்கு ஹி இஸ் நாட் யுவர் பிரண்ட்.” என்றார்.
“ஹி நேவர் வாஸ் மை பிரண்ட்…இனிதான் நாங்க புதுசா ஒரு உறவை ஏற்படுத்திக்கணும்….டோண்ட் வரி மாம்..மனுவும், நானும் பார்த்துப்போம்.” என்று திடமாகப் பதில் சொன்ன மகளை ஆச்சரியத்துடன் பார்த்தார் பிரேமா.
அப்போது அவர்கள் அருகே வந்த சிவகாமி,”பிரேமா..நீயும், நானும் முன்னாடி போயிடுவோம்..இவங்களெல்லாம் நமக்கு அப்பறம் வருவாங்க..புவனாவும் நம்மளோடையே வந்திடறேன் சொல்றா.” என்றார்.
“அவ சாமானெல்லாம் இங்க கொண்டு வந்திருக்காளா? இல்லை ஹோட்டல்லே இருக்கா?” என்று விசாரித்தார் பிரேமா.
“என்னோட புடவையை மட்டும் கொண்டுகிட்டு வர சொல்லியிருந்தேன்..அவ, ஜனனி, ராம் மூணு பேரும் முகூர்த்த சாப்பாடு முடிச்சிட்டு நேரா ஹோட்டல் கிளம்பி போயிடுவாங்க.” என்றார் சிவகாமி.
“முகூர்த்த சாப்பாடா?”
“ஆமாம்..எல்லாம் கார்மேகம் ஏற்பாடுதான்..இரண்டு இடத்திலே..நம்ம வீட்டுக் கீழ் போஷர்னலே நமக்கும், உறவுக்காரங்களும்…மற்றவங்களுக்கு கபீர் ஹோட்டல்லே ஏற்பாடு செய்திருக்காரு…
நீயும், புவனாவும் ரெடியா இருங்க..நான் எங்க சொந்தக்காரங்களுக்கு ஸ்மிரிதியை அறிமுகப்படுத்தி வைச்சிட்டு அவங்களையும் கிளப்பிக்கிட்டு வரேன்.” என்று அவர் மருமகளை உறவுக் கூட்டத்திடம் அழைத்துச் சென்றார் சிவகாமி.
ஸ்மிரிதியை அனைவருக்கும் பரிச்சயம் செய்து வைத்த சிவகாமியிடம்,
“என்ன சிவகாமி கோயமுத்தூர்லே ரிஸெப்ஷன் வைக்கறேன்னு சொல்லிட்டு கடைசிலே வைக்க மாட்டேனிட்ட..தில்லி வர எல்லாராலேயும் முடியுமா? சொந்தம் விட்டு போகக் கூடாதுனிட்டுதான் நாங்கெல்லாம் கல்யாணத்துக்கு வந்திருக்கோம்.” என்றார் ஒரு பெண்மணி.
“அங்கே ரிஸெப்ஷன் அரென் ஜ் செய்ய முடியலே..ஆனா அடுத்த முறை கோயமுத்தூர் வரும்போது எல்லார் வீட்டுக்கும் கண்டிப்பா வருவோம்..அப்போதான் இவளுக்கும் உறவுமுறையெல்லாம் புரியும்.” என்று அருகில் நின்று கொண்டிருந்த ஸ்மிரிதியைக் சுட்டிக் காட்டினார்.
“நீ எங்க ஊர் பக்கம் வர போற? இந்த ஊர்லே பொண் எடுத்த பிறகு நம்ம ஊர் பக்கம் உனக்கு என்ன வேலை? இவ்வளவு நாள் அங்கேதான் மனுவுக்கு ஏத்த பொண்ணைத் தேடிக்கிட்டிருந்த அதான் ஊர் பக்கம் வந்து போய்கிட்டிருந்த..அடுத்து மாறனுக்குப் பொண்ணு தேடும் போதுதான் வருவே.” என்றார் இன்னொருவர்.
“என் பசங்களைப் போல இவளும் இங்கையே வளர்ந்திட்டா..மத்தபடி இவளும் அந்த ஊர் தான்..அவ அம்மாவும், அப்பாவும் நம்ம ஊர் தானே.” என்று சொந்தங்களிடம் வலியுறுத்தினார் சிவகாமி.
“உன் நல்ல நேரம் உன் சினேகிதியோட மக உனக்கு மூத்த மருமக பொண்ணாயிடுச்சு….அடுத்ததும் இதே போல தமிழாப் பொண்ணா இங்கையேக் கிடைக்கும்ணு சொல்ல முடியாது..நான் ஊருக்குப் போனவுடன நம்ம சொந்த பந்தத்திலே சொல்லி இப்பவே மாறனுக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிக்கறேன் அப்பதான் ஊரோட உறவு இருக்கும்.” என்று சரியான வேலையில்லாமல் பொறுப்பில்லாமல் திரிந்து கொண்டிருந்த மாறனுக்குப் பெண் பார்க்கும் பொறுப்பான வேலையைப் பார்க்க முன்வந்தார் மற்றொரு உறவினர்.
உடனே உஷாரான சிவகாமி,”மனுவுக்கு இன்னைக்கு தானே கல்யாணம் முடிஞ்சிருக்கு..மாறனுக்கு என்ன அவசரம்..அவன் நல்ல வேலைலே சேரட்டும் அப்ப நானே உங்களுக்குச் சொல்லிவிடறேன்..அதுக்கு அப்பறம் நீங்க பொண்ணு தேட ஆரம்பிங்க..உங்களை விட்டா எனக்குன்னு யார் இருக்காங்க…
இப்ப நீங்க எல்லாரும் நம்ம வீட்லேயே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க..மதியம் முகூர்த்த சாப்பாடு வீட்டுக்கே வந்திடும் அதை முடிச்சிட்டூ எங்கையாவது வெளியே போகணும்னா போயிட்டு வாங்க..
இராத்திரி ஏழு மணி போல ரிஸெப்ஷன் ஆரம்பிக்கும்..ஒரு மணி நேரம் தான்..எட்டு மணிக்கு முடிஞ்சிடும்..நீங்க ட் ரெயின் பிடிக்க சரியா ஸ்டெஷனுக்குப் போயிடலாம்.” என்றார் சிவகாமி.
அதைக் கேட்டு உறவு கூட்டம் மொத்தமும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொள்ள அதில் சற்று வயதான பெண்மணி,”சிவகாமி..நாங்க எல்லாரும் ரிஸெப்ஷனுக்கு வந்து என்ன செய்ய போறோம்?..நீ சொத்து பத்தோட சொந்தத்திலேப் பொண்ணெடுத்திருந்தா உன் சம்மந்தி வீட்டுக்கு அழைச்சுகிட்டு போயிருப்ப அங்கே எதையாவது பேசிக்கிடே ரிஸெப்ஷென் வரைக்கும் பொழுது போயிருக்கும்..இங்கே உன்னையும், உன் சினேகிதகளையும் தவிர யாரையும் எங்களுக்குத் தெரியாது..
நாங்க வீட்லேயே இருந்தா ஒருத்தர் முகத்தை இன்னொருத்தர் பார்த்துகிட்டு இருக்கணும்..நீ சொல்றது போலே வெளியே சுற்ற போனோம்னா ரிஸெப்ஷன் நேரத்துக்கு திரும்ப முடியாம போயிடலாம்..நாங்கெல்லாம் ரிஸெப்ஷனுக்கு வந்து என்ன செய்ய போறோம்? ஒரு ஒரமா உட்கார்ந்து வேடிக்கைதான் பார்க்கணும்..அதுக்கு நீ பேசாம எங்களுக்கு ஒரு பெரிய வண்டி ஏற்பாடு செய்திடு..முகூர்த்த சாப்பாடு சாப்டிட்டு நாங்க அப்படியே தில்லியைச் சுற்றி பார்த்திட்டு நேரா ஸ்டேஷன் போய் அங்கேயிருந்து ஊர் போய் சேர்றோம்.” என்று அவர்கள் திட்டத்தை வெளியிட்டனர்.
கல்யாண ரிஸெப்ஷனைவிட ஊர் சுற்றிப் பார்ப்பதை முக்கியமாக நினைக்கும் உறவுகளுடன் போராட விரும்பாமல்,”சரி..நான் ஏற்பாடு செய்யறேன்….எல்லா இடமும் பார்த்திட்டு நேர ஸ்டெஷன் போயிடுங்க..உங்க ஸீட்லே இராத்திரி சாப்பாடோட ஆள் காத்துகிட்டிருப்பான்.” என்று முடிவு எடுத்து அங்கிருந்து அகன்றார் சிவகாமி.
உறவுகளிடம் எந்த உறவும் வைத்து பழக்கமில்லாததால் சிவகாமியின் பொறுமையான பேச்சைக் கேட்டு வியந்து போயிருந்த ஸ்மிரிதி,
“ஆன் ட்டி, கல்யாணதுக்கு வந்திட்டு ரிஸெப்ஷனுக்கு இல்லாம ஊர் சுற்றி பார்க்க போறாங்க.” என்று விசாரிக்க,
“அவங்கெல்லாம் இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்..நானே இன்னும் உங்க வீட்டைப் பார்க்கலே..கீதிகாவும் இதுவரை ஒருமுறை கூட என்னை வீட்டுக்கு வாங்கன்னு சொல்லலே..உங்கப்பாவும் ஒவ்வொரு தடவையும் எங்க வீட்டுக்குதான் வந்து பேசிட்டு போறாரு…நான் எங்கேயிருந்து இவங்களை என் சம்மந்தி வீட்டுக்கு அழைச்சுகிட்டு போகறது..விடு..
இன்னைக்கு ரிஸெப்ஷன் எப்படியும் இங்க இருக்கறவங்களுக்குதான்..அவங்க சொல்ற மாதிரி அவங்க வந்தாக்கூட சும்மாதான் ஒரு மூலைலே உட்கார்ந்திருக்கணும்..அங்கிள் பேச மாட்டாரு..இரண்டு பசங்களுக்கும் யாருமே ரொம்ப பழக்கமில்லை..என்னைத் தவிர உங்கம்மாவும், புவனாவும் தான் அவங்களோட பேசிக்கிட்டு இருக்கணும்..அவங்க இரண்டு பேரும் எவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியும்..அப்பறம் எல்லாம் ஒரே விஷயத்தில்லே வந்து முடியும்..உங்கம்மாவைப் பற்றி..உங்கப்பாவை பற்றி..அதான் அவங்க விருப்பமில்லைன்னு சொன்னவுடனே சரின்னு சொல்லிட்டேன்.” என்று யாராலும் எந்த விதத்திலும் அந்தக் கல்யாணத்தில் சங்கடம் ஏற்படக்கூடாது என்பதை மனதில் வைத்து அத்தனை கவனமாக செயல்படும் சிவகாமியைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள் ஸ்மிரிதி.
அந்த மதிய வேளை எப்படி போனதென்றே தெரியவில்லை புதுமணத் தம்பதியருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும். கோவிலிருந்து திரும்பிய பின் அவர் உறவினர்களை வைத்து வீட்டில் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து முடித்தார் சிவகாமி. எல்லாம் முடிந்து அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்து போது மணி மதியம் ஒன்று. உறவினர்கள் அனைவரும் அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த வண்டியில் புறப்பட்டவுடன், புவனாவும் ஹோட்டல் செல்ல தயாரானார்.
அவளது ஃபோனை மனுவின் அறையில் சார்ஜ் செய்து கொண்டிருந்த ஸ்மிரிதியை நோக்கிப் படபடப்புடன் வந்த ஜனனி அவளை அறையின் ஓரமாக அழைத்துச் சென்று,”ஸ்மிரிதி..சிவகாமி ஆன் ட்டி அவங்களோட ரிசெப்ஷன் புடவை, பிளவுஸை கேட்கறாங்க..என்ன செய்ய?” என்று கேட்டாள்.
“நீ கோவிலுக்கு கொண்டுகிட்டு வரலையா?..ஆன் ட்டி வீட்லேயே ரெடியாயிடுவாங்கன்னு நினைக்கறேன்..அதுக்குதான் புடவையைக் கேட்கறாங்க..மறந்த போயிடுச்சா? நோ பிராப்ளம்..நீ கவலைப்படாத.. நான் கபீர்கிட்ட சொல்றேன்…நீ ஹோட்டல் போனவுடன ஆள் ரெடியா இருப்பான் அவன்கிட்ட புடவையைக் கொடுத்து விடு.. அவன் வீட்லே கொண்டு வந்து கொடுத்திடுவான்.” என்றாள் ஸ்மிரிதி.
அவள் பேசியதை சரியாக காதில் வாங்கிய ஸ்மிரிதி கலவரமாகி,”ஜானு..என்ன சொல்ற? ஆன் ட்டியோட புடவை, பிளவுஸ் மும்பை போயிருச்சா? எப்படி?”
“சுசித் ராதான் சொன்னாங்க…எல்லாருக்கும் ஒரே மாதிரி தைக்கணும்னு ஸ்மிரிதி சொல்லியிருக்கா..என்னாலே ஒரு பிளவுஸ்கூட தைக்க முடியாது.. மும்பை அனுப்பி விடு மெஹக் தைச்சு கொடுப்பான்னு..மெஹக்கிட்ட பேசினேன்..அவங்களும் சரின்னு சொன்னதுனாலே என்னோடது, அத்தையோடது தவிர மற்ற எல்லாரோடதையும் மும்பை அனுப்பி விட்டேன்.” என்றாள் ஜனனி.
“ஜானு..நான் சொன்ன ஸேம் டிஸைன் பிளவுஸ் எங்க மூணு போரோடது..பிரண்ட்ஸ்..என் மாமியாரோடது அதுலே வராது.” என்று வெள்ளம் அடித்து சென்ற பின் அபாய எச்சரிக்கைக் கொடியை ஏற்றினாள் ஸ்மிரிதி.
“யாருக்கு எப்படி பிளவுஸ் தைச்சிருக்காங்கன்னு எனக்குத் தெரியாது ஸ்மிரிதி..உங்க மூணு பேருக்கும் நீ விருப்பப்பட்டது போலே ஒரு மாதிரியும் சிவகாமி ஆன் ட்டிக்கு வேற மாதிரியும் தைச்சிருக்கலாம்.” என்று டீச்சர் அவள் போட்ட தப்பு கணக்கிற்கு சரியான விடையைக் கொண்டு வர பார்த்தாள்
சுசித் ராவின் ஆலோசனையில், மெஹக்கின் மேற்பார்வையில் மும்பையில் என்ன நடந்திருக்கக்கூடம் என்று ஒரளவு யுகித்த ஸ்மிரிதி இனி மெஹக் வந்து சேரும் வரை அவளால் ஒன்றும் செய்யமுடியாது என்று உணர்ந்து,
“ஐயோ..நான் சொல்ல மாட்டேன்..நீயே உன் அத்தைகிட்ட சொல்லிடு..ப்ளீஸ்.” என்று பொறுப்பை ஸ்மிரிதியிடம் தள்ளினாள் ஜனனி.
“சரி..நான் பார்த்துக்கறேன்…நீ கிளம்பு.” என்று சொன்ன ஸ்மிரிதி கண்களால் சிவகாமியைத் தேட, அவர் கிட்சனில் இருப்பதைப் பார்த்து அங்கே சென்றாள்.
அங்கே சிவகாமியுடன் பேசிக் கொண்டிருந்த திரேன் ஸ்மிரிதியைப் பார்த்து,”நமஸ்தே தீதி.” என்றான்.
“ஸ்மிரிதி இவன் திரேன்..நம்ம வீட்லே வேலை செய்யறான்..இங்கதான் பின்பக்கம் இவன் ரூம்..திரேன்..பாபி சொல்லு.” என்று அவனைத் திருத்தினார்.
“நமஸ்தே திரேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“நமஸ்தே பாபி.” என்று சொல்லி வெட்கத்துடன் சிரித்தான் திரேன்.
“என்ன வேணும் ஸ்மிரிதி?” என்று சிவகாமி விசாரிக்க,
“ஆன் ட்டி, சாயந்திரம் ரிஸெப்ஷனுக்கு நாம எல்லாரும் ஹோட்டலையே ரெடியாகலாம்…மீரா ஆன் ட்டி பியுடிஷியனுக்கு அரென் ஜ் செய்திருக்காங்க..வீட்லேர்ந்து கொஞ்சம் சீக்கிரமா கிளம்பினோம்னா அங்கே நாலு மணிக்குப் போய் சேர்ந்தா சரியா இருக்கும்.” என்றாள்.
கல்யாண வீட்டைப் பழையபடி கொண்டு வர திரேனுக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்த சிவகாமியும் அந்தப் பரபரப்பில் அதற்கு மேல் விசாரிக்காமல், “சரி…அதுவும் நல்ல யோசனைதான்..அங்கே முன்னாடியே போய்டோம்னா நமக்கும் டென்ஷனா இருக்காது…இவனுக்கும் வீட்டை சரி செய்ய டைம் கிடைக்கும்.” என்று ஸ்மிரிதியின் ஐடியாவிற்கு ஆதரவளித்தார்.
அதற்கு மேல் அங்கே இருந்தால் அபாயம் என்று உணர்ந்த ஸ்மிரிதி, மெஹக்கிடமிருந்து ஃபோன் கால் எதுவும் வந்திருக்கிறதா என்று செக் செய்ய மனுவின் படுக்கையைறைக்குச் சென்றாள். அங்கே அண்ணன், தம்பி இருவரும் விவாதித்து கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் ஸ்மிரிதியின் மூன்று பெட்டிகள் இருந்தன.
அவர்கள் இருவரையும் புறக்கணித்து விட்டு அங்கேயிருந்த பெட்ஸைட் டேபிளில் அவள் ஃபோனை சார்ஜ்ஜில் போட்டிருந்த ஸ்மிரிதி அதை எடுத்து மெஹக்கிற்கு ஃபோன் போட்டாள். அவள் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் என்று மெஸெஜ் வந்தவுடன் சிறிது கவலையானது ஸ்மிரிதிக்கு. அடுத்து யாருக்கு ஃபோன் செய்து விசாரிக்கலாமென்று அவள் யோசனை செய்து கொண்டிருந்த போது,
“ஸ்மிரிதி..உன்னோடது மூணு பெட்டி தானா?” என்று மனு கேட்க,
“நானும் நாலுதான்னு சொன்னேன்..ஆனா நம்ம வீட்டுக்கு மூணு தான் கொண்டு வர முடிஞ்சுது..அந்த ஒண்ணு அங்கிளோட திரும்ப போயிடுச்சு.” என்றான் மாறன்.
“ஏன்?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“ஏன்னா எங்க வண்டிலே இடமில்லே..பெரிய வண்டிலே ஊர்லேர்ந்து வந்தவங்களை அழைச்சுகிட்டு வந்தோம்..சின்ன வண்டிலே நாம எல்லாரும் இரண்டு ட் ரிப்..எங்கேயிருந்து சாமானுக்கு இடமிருக்கும்? என்று பட்டென்று பதில் சொன்னான் மாறன்.
காலையிலிருந்து ஓயாமல் வேலை செய்ததில் மாறனும் களைப்பாக உணர்கிறான் என்று உணர்ந்த ஸ்மிரிதி அவன் பதில் சொன்ன விதத்தில் கோபமடையாமல்,”இந்த மூணு பெட்டி இப்போதைக்கு போதும்..அந்தப் பெட்டி எங்க வீட்லையே இருக்கட்டும்..நானும், மனுவும் போய் எடுத்துகிட்டு வரோம்..அப்படி அர்ஜெண்டா தேவைபட்டுதுன்னா அப்பாவே அதை அனுப்பிவிடுவாங்க.” என்று அமைதியாக பதில் அளித்தாள். அடுத்த நொடி அந்த அமைதியை கைவிட்டுவிட்டு,
“இரண்டு பேரும் இடத்தைக் காலி பண்ணுங்க..நேத்து நைட்லேர்ந்து நான் தூங்கலே..எனக்குத் தூங்கணும்.” என்று ஆர்டர் போட்டுவிட்டு கொஞ்சம் கூட சங்கட படமால் படுக்கையில் அமர்ந்து கொண்டு அவள் தலையிலிருந்து பூவை எடுக்க ஆரம்பித்தாள் ஸ்மிரிதி.
“வா டா..உன் ரூம்லே நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன்..எனக்கும் டயர்டா இருக்கு.” என்று அவனறையிலிருந்து வெளியேறிய மனுவைப் பின் தொடர்ந்தான் மாறன்.
மாறன் அறையினுள் நுழைந்தவுடன்,
“ஏன் டா என் ரூமுக்கு வர்ற? உன் பொண்டாட்டி சத்தம் போட்டதைப் பார்த்து பயந்திட்டியா?” என்று மாறன் அவனைக் கேலி செய்ய,
“நீ எப்ப டா எல்லாத்தையும் சரியா யோசிக்க போற..இராத்திரி நானும், அவளும் முழிச்சிருக்கணும்னா நாங்க இரண்டு பேரும் இப்ப கண்டிப்பா தூங்கணும்.. தனி தனியா.” என்று அண்ணனின் விளக்கத்தைக் கேட்ட தம்பிக்கு “வக்கீல்கிட்ட வாயை விடக்கூடாது” என்று தோன்றினாலும் அவனின் மனத் தாங்கலை வெளியிட தவறவில்லை.
“நானும்தான் எல்லாத்தையும் யோசிக்கறேன்…ஆனா எனக்குதான் எதுவும் நடக்க மாட்டேங்குது..உனக்கு எல்லாமே நீ நினைச்சபடி நடக்குது..நம்ம வீட்லே மூத்த பையன் எப்பவுமே ஸ்பெஷல்….சின்ன பையன் தான் பெட்டியைத் தூக்கணும்..சின்ன பையந்தான் ஊர்லேர்ந்து வந்தவங்களுக்க் ஊரை சுத்தி காட்டணும்..சின்ன பையனைப் பெண்ட் எடுத்திட்டாங்க அம்மாவும், அப்பாவும்..நல்ல வேளை இன்னைக்கு சாயந்திரம் உன் ரிஸெப்ஷன்னாலே நான் தப்பிச்சேன்.” என்று விளையாட்டாக அண்ணிடம் அவன் மனக்கசப்பை வெளியிட்டான் தம்பி.
“டேய்..இரண்டு நாளா நிறைய அலைச்சல், வேலை அதான் உனக்கு அப்படி தோணுது..அம்மாக்கும், அப்பாக்கும் நீயும் ஸ்பெஷல் தான் டா.” என்று தம்பிக்கு உறுதி அளித்த மனு அறிந்திருக்கவில்லை அது மாறன் மனதில் இருந்த உறுத்தலைப் போக்கவில்லையென்று.
ஸ்மிரிதியுடனான மனுவின் திருமணத்தில் யார் மனமும் நோகக்கூடாதென்று திட்டமிட்டு செயல்பட்ட சிவகாமியும் அறிந்திருக்கவில்லை அவர் செய்த முயற்சி எல்லாம் அவரது இளைய மகனின் மனதை நோகடித்துக் கொண்டிருந்ததென்று. அன்று மாலை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண ரிஸெப்ஷனில் மாறனுக்குள் மறைந்திருந்த சின்ன தாழ்வு மனப்பான்மை பெரிதாக உருவாகப் போகிறதென்று.