ஷ்ரவன் தோளில் சாய்ந்தபடி மதி நீண்ட நாட்களுக்கு பின் நிம்மதியானதொரு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.
ஆனால், ஷ்ரவனின் எண்ணங்களில் பல எண்ணங்கள் சுழன்று  கொண்டிருக்க.
“என்னடா இப்படி பலமா யோசிச்சிட்டு வர?” என்றான் நந்து கண்ணாடி வழியே பார்த்து சிரித்தபடி.
நந்துவை பார்த்து அர்த்தமாய் சிரித்தவன், “உனக்கு தெரியாதா நான் என்ன யோசிக்கிறேன்னு?” என்றான்.
“நீ எதையும் யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காத. உனக்கு வந்த ஆபத்து முடிஞ்சிருச்சு. இனி நீ மதி கூட நல்லா வாழப்போற” என்று சிரித்தான் நந்து.
எதுவும் பேசாமல் அமைதி புன்னகையை வீசி கண்மூடினான் ஷ்ரவன்.
‘இவன் மனசை ஏதோ போட்டு அரிச்சிகிட்டு இருக்கு. என்னனனு  சொல்ல மாட்டேன்றான். பாப்போம்’ என்று தனக்குள்  நினைத்துக்கொண்டு வண்டியை ஓட்டினான் நந்து. 
இதோ வீடு வந்துவிட்டது. இவர்களை காண ஆவலாய்  நின்றிருந்தாள் அகல்யா.
ஷ்ரவனை  கண்டவுடன் “அண்ணா!” என்று ஓடிசென்று கட்டிக்கொண்டாள்.
தன் தங்கையின் தலையை கோதிய ஷ்ரவன், “எப்டிடா இருக்க?” என்றான் மென்மையான குரலில்.
எதுவும் கூற நா எழாமல் தலையாட்டினாள் அகல்யா.
“அம்மாடி அகல்யா! நான் உன் புருசன்.. நான் கூட இதுங்களோட  வந்துருக்கேன். என்மேல பாவமா இல்லையா? எனக்கும் ஒரு ஹக் தரக்கூடாதா?” என்று பாவமாக நந்து கேட்டான்.
அவனின் செயலில் சிரிப்பு வந்தாலும் மனதினில் சிரித்தவள், அவனை முறைத்துவிட்டு தோள்பட்டையில் முகவாயை இடித்து கொண்டு போனாள்.
‘இது எதுக்கு? இந்த இடி இடிக்கிறா. கழுத்து சுளிக்கிக்க போகுது. நானும் தானே இந்த எருமைங்களோட போயிட்டு எவ்ளோ பெரிய ஆபத்தை கடந்து வந்துருக்கேன்’ என்று உள்ளுக்குள் புலம்பியவன்.
“டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர் டா. உன் தங்கச்சிகிட்ட சொல்லி வை. ரொம்பத்தான் சிலிப்பிக்கிறா” என்றான் நந்து.
அவனை திரும்பி பார்த்து குறும்பாய் சிரித்த ஷ்ரவன், “அப்படியா சொல்ற? நீயே சொன்னதுக்கப்புறம் நான் செய்யாம இருப்பேனா? இதோ சொல்லிடறேன்… ” என்று திரும்பி  “அகல்யா!” என்றவனின் வாயை கைகளால் பொத்திய நந்து,
“ஏன்டா? இந்த கொலவெறி? இப்போவாவது சும்மா தான் போயிருக்கா. நீ ஏதாவது சொல்லப்போய் அப்புறம் பத்ர காளியாய் மாறிடுவாடா. நீ திரும்பி வந்துட்ட ஆனா என்  வாழ்க்கைல சங்கு ஊத்திட்டு போயிடாதடா” என்றான் நந்து.
ஷன்மதி ஷ்ரவன் இருவரும் விழுந்து விழுந்து சிரிக்க, 
“சும்மா தான்  இரு ஷ்ரவ். எதுக்கு அண்ணனை வம்பிழுத்துட்டு இருக்க?” என்றாள்.
கையில் ஆரத்தி தட்டுடன் வந்த அகல்யா, ஷ்ரவன் ஷன்மதிக்கு ஆரத்தி எடுத்து வெளியே செல்ல,
“அகல் எனக்கும் சேர்த்து ஆரத்தி எடும்மா. நானும் தானே என் உயிரை பணயம் வைத்து இவங்க கூட போயிட்டு வந்துருக்கேன்.” என்றான் நந்து.
“எதுக்கு? உயிரை பணயம் வச்சி அரண்மனைக்கு வெளிய  நின்னு கூட்டிட்டு வந்ததுக்கா?” என்றாள் அகல்யா முறைப்புடன்.                                 
திரும்பி ஷ்ரவனையும் ஷன்மதியையும் முறைத்த நந்து, ‘என்கூட தானடா இருந்திங்க? இந்த வேலைய எப்போ பார்த்தீங்க?’ என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டு.
“ஹா என்னை உள்ள கூட்டிட்டு போகலை கூட்டிட்டு போயிருந்தாங்கன்னா அப்புறமா தெரிஞ்சிருக்கும்” என்றான் நந்து.
ஆரத்தியை கொட்டிவிட்டு வந்த அகல்யா, இடையில் கரம் வைத்து முறைத்து “என்ன தெரிஞ்சிருக்கும்?” என்றாள்.
திரு திரு வென்று முறைத்தவன்.
“அதெல்லாம் சொல்ல முடியாது” என்று உள்ளே சென்றான்.
அவனை கண்டு மூவரும் சிரித்து உள்ளே சென்றனர்.
“அண்ணி! நீங்க ரெண்டு பேரும் இந்த ரூம்ல ரெஸ்ட் எடுங்க. நான் சமையல்  முடிச்சிடறேன்” என்று அவர்களுக்கு தனிமை கொடுத்து நகர்ந்தாள்.
 அறையினுள் சென்ற மதி சுற்றி முற்றி பாரக்க, பின்னாலிருந்து அணைத்தான் ஷ்ரவன்.
“ஷ்ரவ்! என்ன பண்றிங்க? விடுங்க. கதவு திறந்திருக்கு. யாராவது வரப்போறாங்க.” என்றாள் சிணுங்கலாய்.
“ஓஹ்! அப்படியா மதிக்குட்டி?  அப்போ இரு வரேன்.” என்று கதவை தாழிட்டு ஷ்ரவன் திரும்ப, அதற்குள் குளியலறை சென்றிருந்தாள்.
‘அடிப்பாவி என்னை டைவர்ட் பண்ணிட்டா. வாலு.’ என்று சிரித்தவன்.
“ஏய் பொண்டாட்டி. என்கிட்டே எஸ்கேப் ஆகி பாத்ரூம்க்குள்ள போய்ட்டா தப்பிச்சிருவியா?” என்று குளியலறையின் கதவில் சாய்ந்து சிரித்தபடி கேட்டான்.
“எஸ் டா புருஷா. இவ்ளோ பண்ண என்னால உன்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிறது பெரிய விஷயமா?” என்று சிரித்தாள் மதி உள்ளிருந்து.
“அதையும் பாப்போம்” என்று கூறினாலும் அவன் சிந்தை வேறு எதையோ சிந்திக்க ஆரம்பித்தது.
****
சமையலறையில் இருந்த அகல்யாவின் கண்களை மூடிய நந்துவின் கைகளை தட்டிவிட்டாள் அகல்யா.
“ஏன்மா மாமா மேல இவ்ளோ கோபம்?” என்றான் நந்து.
“கோபமா? இந்நேரத்திற்கு உன்கூட வாழவே மாட்டேன்னு போயிருக்கனும். ஆனா, என்ன பண்றது இப்போ என்னால போகமுடியாத நிலை” என்றாள் அகல்யா விழிகளில் நீர் கோர்த்து திரும்பாமல்.
அவளின் வார்த்தைகளில் விளையாட்டுத்தனம் இல்லை என்பதை புரிந்து கொண்ட நந்து அவளை தன் புறமாய் திருப்பினான்.
“அகல்” என்றான் மெல்லிய குரலில்.
அவனை பாராமல் அவளோ தலை கவிழிந்திருக்க, “அகல்  ப்ளீஸ்! ஏன்டா இப்படி பேசுற? நீ இப்படி பேசற அளவுக்கு நான் என்ன பண்ணேன்?” என்று  பரிதவிப்பாய் அவளின் பதிலுக்காக காத்திருக்க.
“இன்னும் என்ன பண்ணனும்? நம்ம கல்யாணத்தன்னைக்கே நான் எவ்ளோ தூரம் சொன்னேன். எங்கண்ணன் எதுவும் பண்ணிருக்க மாட்டார். ஒரே ஒரு தடவை அவர்கிட்ட பேசுங்க. இதுல ஏதோ இருக்குன்னு?” என்றாள் கோபத்தில் கண்கள் சிவக்க.
தவறு தன் பக்கம் என்பதால் பதில் ஏதும் கூறாமல் தலைகவிழ்ந்தான் நந்து.
“சாரி அகல். அப்போ இருந்த நிலைமை கோபம் கண்ணை மறைச்சிடுச்சு. தப்பு தான். ரொம்ப பெரிய தப்பு தான். நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன்.” என்றான் நந்து.
“இப்போ தண்டனை கொடுத்து அப்புறம் நான் வருந்திறதுக்கா?” என்றாள் அகல்யா வெடுக்கென்று.
எதுவும் பேசாமல் நந்து அமைதியாய் நிற்க, 
“அன்னைக்கே நான் சொல்றதை கேட்டிருந்தா, எங்கண்ணன் இவ்ளோ கஷ்ட பட்டிருக்கமாட்டான். அந்த நேரத்துல நாம அவன் கூட இருந்திருக்கலாம்ல? ஒருவேளை  இதெல்லாம் நடக்க விடாம  கூட பண்ணிருக்கலாம்.” என்றாள் அகல்யா.
அவள் சொல்வதில் உண்மை இருப்பதால் அவனின் மனதும் அதை ஆமோதித்தது.
“அகல்யா!” என்று குரல் கேட்க வாசலில் திரும்பி பார்த்தாள்.