“என்ன மா செய்றது? விஜி அம்மாவும், எங்க அம்மாவும் நிறைய பொண்ணுங்க போட்டோ காட்ட தான் செய்றாங்க. ஆனா எனக்கு தான் எதுவும் பிடிக்க மாட்டிக்கு”
“எதுக்கு அண்ணா பிடிக்க மாட்டிக்கு? எந்த மாதிரியான பொண்ணை எதிர் பாக்குறீங்க?”
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மா. ஆனா எந்த பொண்ணை பாத்தாலும் எக்சிபிஷன்ல உன் பக்கத்துல நின்னாளே அந்த பூசணி நினைவு தான் வருது. பாலா பாலான்னு உருகுனா. அந்த நினைவு தான் வருது. பாக்கலாம் ரெண்டு அம்மாவும் கட்டாய படுத்தி கல்யாணம் செஞ்சு வச்சா தான் உண்டு”, என்று சிரித்தான் முரளி.
கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள் பூரணி. அவன் சொன்ன இந்த வார்த்தை போதும் என்று தோன்றியது அவளுக்கு. அவளை மாதிரியே அவனும் உணர்கிறான் என்று நினைத்து சந்தோசமாக இருந்தது அவளுக்கு.
அடுத்து பதினோரு மணிக்கு விஜியும், நந்திதாவும் சமையல் வேலை ஆரம்பிக்க எழுந்தனர்.
பூரணி கையை பிடித்து “நீயும் வா வெங்காயம் உரிக்க”, என்று அழைத்தாள் நந்திதா.
“ஹி ஹி, கை அழுக்காகும். நான் வரலை. இங்கயே இருக்கேன்”, என்று சிரித்தாள் பூரணி.
“எதுக்கு இங்க உக்காந்து வாய் குள்ள ஈ போறது கூட தெரியாம அண்ணாவை சைட் அடிக்கிறதுக்கா? ஒழுங்கா எந்திச்சு வாடி”
“நான் உன் கெஸ்ட் நந்து. வேலை எல்லாம் செய்ய சொல்ல கூடாது”
“கொன்னுருவேன் ஒழுங்கா எந்திச்சு வா”, என்று அழைத்து சென்று விட்டாள் நந்திதா.
அவள் போன பிறகு “அப்பாடி அந்த பொண்ணு எந்திச்சு போய்ட்டா”, என்று ஹரியிடம் சொன்னான் முரளி.
“எதுக்கு டா அப்படி சொல்ற?”, என்று கேட்டான் ஹரி.
“எதிரே உக்காந்து குறு குறுன்னு பாக்குறா டா. ஒரு மாதிரி கூச்சமா இருக்கு”
“உனக்கு யாரை யார் பாத்தாலும் எல்லா பொண்ணுங்களும் உன்னை பாக்குற மாதிரியே இருக்குமே. வாயை மூடிட்டு படத்தை பாரு”
மதியம் விருந்து சாப்பிட்டு முடித்த பின்னர் சிறிது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு சுதாகரும், விஜியும் தூங்க சென்ற பின்னர் நால்வரும் அதே இடத்தில் மீண்டும் அமர்ந்தார்கள்.
“சரி டா முரளி. உனக்கு இப்ப ஒரு அதிர்ச்சி கொடுக்க போறோம். அதனால கொஞ்சம் மனசளவுல தயாராகிக்கோ”, என்று சொன்னான் ஹரி.
“என்ன அதிர்ச்சி டா? அடுத்த விருந்து நடக்க போகுதா? கொஞ்ச நேரம் கழிச்சு வச்சிக்குவோமா? இப்ப வயிறு புல்லா இருக்கு”, என்றான் முரளி.
“திங்குறதுலே இரு. இது வேற டா. இப்ப உன் முன்னாடி உன்னை லவ் பண்ண அந்த பொண்ணு வந்துச்சுனா என்ன பண்ணுவ?”
“என்ன டா உளறுற? அவ எங்க இருக்காளோ? நம்ம நந்திதா கூட படிச்சிருந்தாவது அவளுக்கு தெரிஞ்சிருக்கும். அவ எந்த ஸ்கூல், எந்த ஊருன்னு கூட தெரியாது. அப்படியே தெரிஞ்சிருந்தாலும் இப்ப அவளுக்கு கல்யாணம் ஆகிருக்குமோ என்னவோ? அப்படி ஒரு வேளை ஆகாம இருந்தா கூட இன்னும் பெரிய பூசணிக்காய் மாதிரி ஆகிருந்தா என்ன செய்ய சொல்லு?”, என்று முரளி கேக்க அவனை கொலை வெறியோடு முறைத்து கொண்டு இருந்தாள் பூரணி.
“எதுக்கு இந்த பொண்ணு என்னை முறைக்குது?”, என்று நினைத்து கொண்டு “எதுக்கு நந்திதா உன்னோட பிரண்ட் என்னை இப்படி முறைக்கிறாங்க?”, என்று கேட்டான் முரளி.
“பின்ன நீங்க அவளை பூசணிகாய்ன்னு சொன்னா அவளுக்கு கோபம் வராதா?”, என்று சிரித்தாள் நந்திதா.
புரியாமல் ஹரியை திரும்பி பார்த்தான் முரளி. அவனும் சிரித்து கொண்டிருந்தான்.
“அப்ப இது இது… அந்த பூசணி ச்சி ஐயோ பேர் மறந்து போச்சே”, என்று உளறினான் முரளி.
“ஆமா டா மச்சான். பூரணி தான் அந்த பூசணி. மேடம் இன்னும் உன்னை மறக்கலை. நந்துவும் அவளும் உங்க காதலை வச்சே பிரண்ட் ஆகிட்டாங்க. அப்ப இருந்து இப்ப வரைக்கும் பிரண்ட்ஸாம். உன்னை பாக்க தான் அவ இங்க வந்துருக்கா. சரி நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. நாங்க இப்ப வரோம்”, என்று சொல்லி விட்டு நந்திதாவை கண்ணை கட்டினான் ஹரி.
“இஞ்சி இடுப்பழகியா வந்துருக்க உன்னை பாத்து அண்ணா பூசணின்னு சொல்லிட்டாங்க. கொஞ்சம் என்னனு கவனி பூரணி”, என்று சொல்லி விட்டு எழுந்து போனாள் நந்திதா.
அவர்கள் போன பிறகு முறைத்து கொண்டிருந்தவளை பார்த்த முரளி “அது வந்து பூசணி ச்சி பூரணி சாரி. தெரியாம சொல்லிட்டேன்”, என்று பயந்து கொண்டே பேசினான்.
அடுத்த நொடி சிரித்து விட்டாள் பூரணி.
“அப்பாடி சிரிச்சிட்டியா? எப்படி இருக்க? இன்னும் என்னை நினைவு இருக்கா?”, என்று சந்தோசமாக கேட்டான் முரளி.
“மறந்தா தான நினைக்கணும் பாலா”
அவளுடைய பாலா என்ற வார்த்தையில் ஸ்கூல் படிக்கும் போது “பாலா இது வேணுமா? பாலா உங்களுக்கு நான் சாப்பாடு எடுத்துட்டு வந்தேன்? பாலா உங்க வீட்ல எத்தனை பேர் இருக்காங்க? பாலா பாலா”, என்று அவள் தன் பின்னே சுற்றியது நினைவில் வந்து மனதை மென்மையாக்கியது. அதே மன நிலையில் அவளை பார்த்தவன் “எனக்கும் உன்னோட நினைவு மறக்கலை பூரணி”, என்றான்.
“தெரியும் பாலா. நாம ரெண்டு பேருமே ஒரே மைண்ட் செட்ல தான் இருந்துருக்கோம். அம்மா அப்பாக்காக வேற ஒருத்தரை கல்யாணம் செஞ்சிருந்தாலும் அந்த ஒரு வாரத்தை மறக்க முடியாதுன்னு தெரியும்”
“ஹ்ம்ம் இப்ப நிஜமாவே என்னை பாக்க தான் வந்தியா பூரணி?”
“ஆமா”
அடுத்து என்ன பேச என்று தெரியாமல் இருவரும் அமைதியாய் இருந்தார்கள்.
அவன் மௌனம் தாங்க முடியாமல் “என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா பாலா?”, என்று கேட்டே விட்டாள் பூரணி.
“ஆனா எனக்கு இந்த பூரணியை விட அந்த பூசணி தான் பிடிச்சிருக்கு”, என்று சிரித்து கொண்டே சம்மதம் சொன்னான் பாலமுரளி.
“ஐ லவ் யு பாலா”
“இதை இப்ப சொல்ல வேண்டாம் பூரணி. கல்யாணம் முடிஞ்ச பிறகு சொல்லு. இன்னைக்கே விஜி அம்மாகிட்ட சொல்லி எங்க அம்மா கிட்ட பேச சொல்றேன்”
“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம். விஜி ஆண்ட்டி அப்பவே உங்க அம்மாகிட்ட பேசுறேன்னு சொன்னாங்க. இப்போதைக்கு பேசிருப்பாங்க. நீங்க அத்தை கூட வந்து எங்க வீட்ல பேசணும், அவ்வளவு தான்”
“இவ்வளவு வேகம் தாங்காது பூரணி. ஆமா என்னை பாத்த உடனே உனக்கு அடையாளம் தெரிஞ்சிட்டா?”
“பாத்த உடனே என்ன நினைச்ச? இவனை போயா விழுந்து விழுந்து காதலிச்சோம்னு நினைச்சியா?”
“இல்லையே”, என்று சொல்லி அழகாக முகம் சிவந்தாள் பூரணி.
“என்ன இப்படி வெக்க படுற? ஓய் ஒழுங்கா சொல்லு. என்ன நினைச்ச?”
“அதுவா உங்களுக்கு உடனே முத்தம் கொடுக்கணும்னு தோணுச்சாம். ஸ்மார்ட்டா இருக்கீங்கன்னு சொன்னா”, என்று சொல்லி கொண்டே அங்கு ஹரியுடன் வந்தாள் நந்திதா.
“ரெண்டு கரடியும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வந்திருக்கலாம். அப்படி தான பூரணி?”, என்று கேட்டு அவளை மேலும் வெட்க பட வைத்தான் முரளி.
அடுத்து வேலைகள் மட மட என்று நடந்தது.
எல்லாரும் சேந்து பூரணி வீட்டுக்கு பெண் கேட்க போனார்கள். அங்கே அவர்களுக்கும் சம்மதம். ஆனால் யாருமே காதல் என்ற வார்த்தையை சொல்லவே இல்லை. விஜி பார்த்த பெண்ணாகவே கல்யாணம் நிச்சயிக்க பட்டது. ஆனால் ஒரே ஒரு வருத்தம் முரளிக்கும் பூரணிக்கும். ஏன் என்றால் கல்யாணம் நான்கு மாதம் கழித்து வைத்திருந்தார்கள்.
“அது வரைக்கு போன்ல காதலிங்க”, என்று அவர்களை கிண்டல் அடித்தாள் நந்திதா.
அவர்கள் நிச்சயம் முடிந்து மறுபடியும் வேலைக்கு போக ஆரம்பித்தான் ஹரி. அவனுடனே ஸ்கூலுக்கு போவாள் நந்திதா.
சாயங்காலம் அவனுடனே வீட்டுக்கு வருவது, அடுத்து அவர்கள் வேலை முடித்து விட்டு ஊஞ்சலில் அமர்ந்து கதை பேசுவது, அதன் பின்னான அவர்களின் காதல் என்று வாழ்க்கை அழகானதாக சென்றது.
அவர்களின் காதல் வாழ்க்கைக்கு அர்த்தமாக அடுத்த மூன்று மாதத்தில் மசக்கையில் மயங்கி விழுந்தாள் நந்திதா.
“நந்து நந்து”, என்று அவளை உள்ளங்கையில் வைத்து தங்கினான் ஹரி.
அவனுடைய அன்பில் நெகிழ்ந்து போய் இருந்தாள் நந்திதா.
“உன்னை இப்ப தான் ஸ்கூல்ல பாத்தது மாதிரி இருந்தது. ஆனா இன்னைக்கு நமக்கே ஒரு பாப்பா வர போகுது. எனக்கு சந்தோசமா இருக்கு நந்து”, என்றான் ஹரி.
“எனக்கும் ஹரி”, என்று சொல்லி கொண்டே அவன் வெற்று மார்பில் தலை வைத்து படுத்திருந்தாள் நந்திதா.
“இந்த நேரத்தில் அம்மாவை பாக்கணும் போல இருக்கும்னு சொல்லுவாங்க. உனக்கு அம்மாவை தேடுதா?”
“ஐ லவ் யு செல்லம். இப்பவே அம்மா கிட்ட விசயத்தை சொல்லுவோமா?”
“வேண்டாம் ஹரி நாளைக்கு நேரா போய் சொல்லிக்கலாம்”, என்று சொல்லி கொண்டே அவனை இறுக்கி கொண்டாள் நந்திதா.
அடுத்த நாள் இருவரும் கிளம்பி சென்னைக்கு சென்றார்கள். விசயம் அறிந்து சுதாகரும், விஜியும் சந்தோசப்பட்டார்கள்.
அவளுக்கு பிடிச்சது எல்லாத்தையும் கேட்டு செய்து கொடுத்தாள் விஜி.
“நானும் இங்க தான் இருக்கேன். என்னையும் கொஞ்சம் கவனிக்கலாம்”, என்று சொல்லி கிண்டல் அடித்து கொண்டிருந்தான் ஹரி.
அடுத்து அவளை விஜியிடம் விட்டு விட்டு ஊருக்கு வேலைக்கு சென்றான் ஹரி. அங்கே மல்லிகா அவனுக்கு சாப்பாட்டை கொடுத்தாள்.
ஹரி வார விடுமுறையில் இங்கே வீட்டுக்கு வந்தாலும், நந்திதா கூட இருந்து கவனிக்காததால் அவனுடைய உடலிலும் மெலிவு ஏற்பட்டது.
“ஏன் ஹரி இப்படி மெலிஞ்சு போய்ட்டிங்க? ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா? அங்கிள் வீட்ல சாப்பிட ஒரு மாதிரி இருக்கா?”, என்று அவன் கழுத்து எலும்பை தடவிய படி கவலையாக கேட்டாள் நந்திதா.
“சாப்பிடுறேன் நந்து. ஆனா உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்”, என்று உண்மையை சொன்னான் ஹரி.
அந்த வாரம் “அத்தை நான் உங்க பிள்ளை கூட போறேன்”, என்று விஜியிடம் சொன்னாள் நந்திதா.
“நீயே இங்க வாந்தி எடுத்துட்டு ஒழுங்கா சாப்பிடாம இருக்க. நீ அவனை பாக்க போறியா? அதெல்லாம் அவனே அவனை பாத்துப்பான். நீ இனி இங்க தான்”, என்று சொன்னாள் விஜி.
உதட்டை பிதுக்கி அழ தயாரான நந்திதா, கண்ணீரை மறைத்து தன்னுடைய அறைக்கு சென்றாள்.
அவள் அழுகையை பார்த்து “என்ன மா? என்ன ஆச்சு?”, என்று பதறினான் ஹரி.
“அத்தை திட்டிட்டாங்க”
“உன்னோட செல்ல அத்தை திட்டுற அளவுக்கு நீங்க என்ன செல்லம் செஞ்சீங்க?”
“நான் உங்க கூட போறேன்னு சொன்னேனா? அதான்”
“பின்ன திட்டாம என்ன செய்வாங்க? அங்க வந்தா நீ கஷ்ட படுவ டா குட்டி”
“எனக்கும் உங்களை தேடுது”
அவளை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டவன் “நீ இப்படி அழுதா அங்க போய் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் நந்து”, என்று சொல்லி அவளை சமாதான படுத்தினான் ஹரி.
ஆனால் அந்த வாரம் ஹரியிடம் “நாங்களும் வாறோம். இங்கயும் அங்கேயும் நீ அலையுறதுக்கு நாங்க எல்லாருமே அங்க வந்தா உன்னையும் பாத்துக்கலாம். நந்துவும் நீ இல்லாம கவலை பட மாட்டா”, என்று சொல்லி அவனுடன் கிளம்பினார்கள் விஜியும், சுதாகரும்.
“அத்தை”, என்று அணைத்து கொண்டாள் நந்திதா.
“இப்ப சிரி. அப்ப மட்டும் ஏங்கி ஏங்கி அழுதுட்டு இருந்த”, என்று அதுக்கும் கிண்டல் அடித்தான் ஹரி.
அடுத்து எல்லாரும் இங்கே வீட்டை பூட்டி விட்டு அங்கேயே சென்றார்கள்.
பூரணி, முரளி கல்யாணத்துக்கு இருபது நாள் இருக்கும் போது நந்திதாவின் பிறந்த வீட்டு ஹாலிங் பெல்லை அழுத்தினாள் பூரணி.
சுமதி வந்து கதவை திறந்தாள். “எப்படி இருக்கீங்க மா?”, என்று கேட்டாள் பூரணி.
“இருக்கோம் பூரணி. நீ வா. எப்படி இருக்க? வீட்டில எல்லாரும் எப்படி இருக்காங்க?”, என்று கேட்டாள் சுமதி.
“அவர் உள்ள தான் இருக்கார். உங்க அண்ணனும் அண்ணியும் அவளோட வீட்டுக்கு போய்ருக்காங்க. உன் தம்பி இப்ப தான் மருந்து வாங்க கடைக்கு போனான்”
“மருந்தா? யாருக்கு என்ன மா?”
“அவருக்கு தான் உடம்பு சரி இல்லை”
“அப்பா எங்க மா? என்ன ஆச்சு?”
“வா உள்ள தான் இருக்கார். அவருக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லை. மனசு தான் சரி இல்லை. ஒழுங்கா சாப்பிட மாட்டிக்கார். அதான் சத்து டானிக் வாங்கிட்டு வர சொல்லி தம்பியை அனுப்புனேன்”
உள்ளே சென்று பார்த்த பூரணி திகைத்தாள். அங்கே ஆளே உருக்குலைந்து போய் படுத்திருந்தார் நந்திதாவின் அப்பா.
“என்ன பா இப்படி இருக்கீங்க?”, என்று அவரை பார்த்து கேட்டாள் பூரணி.
விரக்தியாக அவளை பார்த்து சிரித்தார் அவர்.
“அவரோட கவலையே அவரை இப்படி உருக்குலைச்சிட்டு. அதை விடு பூரணி. நீ எப்படி இருக்க? கல்யாணம் எப்ப?”
“கல்யாண பத்திரிக்கை கொடுக்க தான் வந்தேன் மா, இந்தாங்க. கண்டிப்பா எல்லாரும் வரணும்”, என்று சொல்லி கையில் கொடுத்தாள்.
“ரொம்ப சந்தோசம் மா. மாப்பிள்ளை சென்னை தானா? என்ன பண்றார்?”
“இங்க தான் மா பேங்க்ல வேலை பாக்குறாங்க. அப்புறம் அது வந்து நந்திதா…”, என்று இழுத்தாள் பூரணி.
“அவ இங்க இல்ல மா. எங்க இருக்கான்னே தெரியலை. அவளை பாக்கணும்னு வந்தியா?”
“அவ இங்க இல்லைனு தெரியும். நான் உங்களை பாக்க தான் வந்தேன்”
“உனக்கு எப்படி மா தெரியும்? அவ கிட்ட பேசுனியா? அவ எங்க மா இருக்கா? நல்ல இருக்காளா? அவளை நினைச்சு தான் நல்லா இருந்த மனுசன் இப்படி ஆகிட்டார். கைக்குள்ளே இருந்த பொண்ணோட மனசை கொன்னு அனுப்பிட்டோம் மா”