இதயக் கூட்டில் அவள்
அத்தியாயம் 5
விக்ரம் இரவு வெகு நேரம் கழித்துதான் வந்திருந்தான். அதனால் காலையில் எழுந்து கொள்ளவும் நேரம் ஆகி இருக்க, வனிதா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். சுஜி எதாவது கேட்டாலும் கோபப்பட்டாள். மனைவியின் எரிச்சல் எதனால் என விக்ரம் அறியாதவன் அல்ல…அவள் மனதில் இருக்கும் ஆசைகள் புரியாமலும் இல்லை.
நேத்து ஏன் சண்டை போட்டோம் என இப்போது தோன்றியது. இதே மனநிலையில் ஊர் திரும்பினால், இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்றும் தெரியும். வனிதா இதையே மனதில் வைத்துத் தன்னை வதைப்பாள் என நினைத்தான்.
“சுஜி நீ முதல்ல ரெடி ஆகு. அருணோட விளையாடலாம்.” என விக்ரம் சொல்ல.. வனிதா மகளைக் கிளப்பினாள்.
விக்ரம் அவளை அழைத்துக் கொண்டு சென்று வெற்றியின் அறையில் விட்டுவிட்டு வந்தான். இரவு சீக்கிரமே உண்டதால் ஆதிரை பசிக்கிறது என்றதால்… அவர்கள் உணவு அருந்த கிளம்பிக் கொண்டு இருந்தனர்.
“நீங்க போய்ச் சாப்பிடுங்க. நாங்க இனிதான் கிளம்பனும்.” எனச் சொல்லி மகளை மட்டும் அவர்களிடம் விட்டுவிட்டு விக்ரம் அறைக்குத் திரும்பினான்.
விக்ரம் வந்த போது, வனிதா குளிக்கக் கிளம்பிக்கொண்டிருந்தாள். கதவை தாழிட்ட விக்ரம் சென்று அவளை அணைக்க, அவன் கைகளைத் தட்டி விட்டாள்.
“இங்க பாரு வெளியூரு வந்தது சண்டை போடுறதுக்கா? ஜாலியா இருக்கத்தான். இன்னைக்கு இருக்க ஒருநாளாவது நல்லா அனுபவிப்போம்.” என்றவன், மனைவியின் இதழில் முத்தமிட்டு ஊடலை முடித்துக் கூடலுக்கு அச்சாரமிட்டான்.
காலை உணவு பஃப்பே முறையில் விதவிதமான உணவு வகைகள் இருக்க, அவரவருக்குத் தேவையானது எடுத்து நிதானமாக உண்டனர். அவர்கள் ஹோட்டலின் உள்ளேயே பெண்களுக்கான அழகு நிலையம் இருக்க, குழந்தைகளைத் தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி வெற்றி ஆதிரையை அனுப்பி வைத்தான்.
பத்தரைக்கு மணிக்குதான் விக்ரமும் வனிதாவும் உணவு உண்ண சென்றனர். ஆதிரை வந்ததும், வெற்றி சென்று மசாஜ் செய்து கொண்டு வந்தான். மதியம் வரை ஹோட்டலில் ஓய்வாக இருந்தவர்கள், மதிய உணவையும் முடித்துக் கொண்டு, அறையைக் காலி செய்துவிட்டு, ஜீப்பில் இன்னும் சில இடங்களைப் பார்த்துவிட்டு, அப்படியே இரவு பேருந்தை பிடிக்கத் தேனிக்கு சென்றனர்.
மகள் வீட்டில் இரவு உணவை உண்டு கொண்டிருந்த ஜோதி, “நீ என்ன குழம்பு பண்ணி இருக்க. ஆதி இந்தக் குழம்பு நல்லா பண்ணுவா… அவ சமைக்கிறது உங்க அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.” என்றார்.
“உங்க மருமகள் உசத்தி தான் போதுமா… இதை அவகிட்ட சொல்லி இருக்கீங்களா?”
“இப்ப நான் சொன்னதுக்கு நீ கோவிச்சியா? சாதாரணமா எடுத்துக்கிற. இதே உன் தம்பி பொண்டாட்டியா இருந்தா உடனே முகத்தைத் தூக்கி வச்சிப்பா.”
“நீங்க எனக்கு அம்மா, அதே அவளுக்கு மாமியார். எனக்குமே எங்க மாமியார் இப்படிக் குறை சொன்னா கோபம் வரும்தான். அதோட அவ நல்லாத்தானே சமைக்கிறா.”
“நீ உன் தம்பி பொண்டாட்டியை விட்டுக் கொடுக்க மாட்டியே.”
“அப்படியில்லை மா… எனக்கிருக்கிறது ஒரு தம்பி. அவனையும் பகைச்சிக்கச் சொல்றீங்களா? அதுவும் ஆதிரை பட்டு பட்டுன்னு பேசுவாளே தவிர மனசுல ஒன்னும் வச்சுக்க மாட்டா.”
“முன்ன எல்லாம் என்கிட்டே நல்லா பேசுவா, இப்ப பேச கூட மாட்டேங்கிறா.”
தொட்டதிற்கு எல்லாம் குறை சொன்னால் என நினைத்த கிர்த்திகா, தன் அம்மாவிடம் எதுவும் சொல்லவில்லை. சொன்னாலும் பயன் இருக்காது எனத் தெரியும்.
ஆதிரை திருமணம் ஆகி வந்த புதிதில் எல்லோரோடும் நன்றாகக் கலகலப்பாகப் பேசுவாள். ஜோதியிடமுமே நன்றாகப் பேசுவாள். ஆனால் அவள் விளையாட்டுக்கு பேசுவதைக்கூட ஜோதி இப்படிப் பேசாதே, அப்படிப் பேசாதே என அறிவுரை வழங்குவார்.
அவர் முன்பு அவள் மகனை கூடச் செல்லமாக ரவுடி என்றோ போக்கிரி என்றோ சொல்லி விட முடியாது. “நீ அப்படிக் கூப்பிட்டா, அவன் அப்படியே ஆகிடுவான். நல்ல வார்த்தை சொல்லு.” என்பார். மனம் வெறுத்துப் போய் ஆதிரை அவரிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டாள்.
“நாங்க அந்தக் காலத்தில எங்காவது போய் இருக்கோமா… ஒன்னு கோவிலுக்குப் போவோம், இல்லைனா சொந்தத்தில் விசேஷத்துக்குப் போவோம். அதுவும் உங்க அப்பா எங்கையும் வர மாட்டார். நான் தனியாத்தான் போகணும். ஆனா உன் தம்பியை பாரு, பொண்டாட்டியை கூடிட்டு நல்லா ஊர் ஊரா சுத்துறான்.” என ஜோதி தன் புலம்பலை தொடங்க…
ஒருவேளை தான் அனுபவிக்காததை மருமகள்கள் அனுபவிக்கும்போது மாமியார்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் போல என நினைத்த கிர்த்திகா. தானும் பின்னாளில் இப்படித்தான் ஆகி விடுவோமோ என அச்சம் கொண்டாள். அவளுக்கு வேறு இரண்டுமே மகன்கள்.Advertisements
மறுநாள் காலை ஏழு மணிக்குதான் வீடு வந்து சேர்ந்தனர். ஆதிரை விறுவிறுவென அருணை பள்ளிக்கு கிளப்ப… வெற்றி அவளுக்கு உதவினான்.
Advertisements