எத்தனை பெரிய பழி இது…, எத்தனை சுலபமாய், எத்தனை வேகத்தில் ஜோடிக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு சென்றுவிட்டதே!!. ஏதும் செய்ய முடியாத நிலையில் அல்லவா இருக்கிறாள், அங்கே ஏன் சென்றாள்?, ஏன் அம்மனிதனை ( மனிதனா ?) அடித்தாள்? என்றெல்லாம் கேள்விகள் வருமே? குர்ஷரன் கவுர் குறித்தும் கூட தெரியவருமோ? த்ரிவிக் இதை எப்படி எடுத்துக் கொள்வான்? அப்பாவுக்குத் தெரிந்தால் என்ன ஆவது? இனி இந்த ஊரில் எப்படி தலை நிமிர்ந்து நடப்பது? யார் செய்திருப்பார்கள் இதை? என பலவாறான கலவர சிந்தனைகள். அவளறியாமலே நங்கையின் கண்கள் கலங்கியது .
அதிர்ச்சியில்… கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆன பின்னும் எவ்விதமான சிந்தனையும் இல்லாது வெறுமையாய் இருந்தாள். மெது மெதுவாக நடப்பிற்கு புத்தியைக் கொணர்ந்து… கணவனுடன் பேச… .. தயக்கத்துடனேயே த்ரிவிக்-கின் அலைபேசிக்கு அழைத்தாள்… அது ‘உபயோகத்தில் உள்ளது என்ற பழைய பல்லவியையே பாடியது. மீண்டும் மீண்டும் முயற்சித்தும் அவ்வாறே பதில் வர… ஓய்ந்தே போனாள் பெண். அவனுக்கு இவ்விஷயம் தெரிந்திருக்குமோ? தன்னைத் தவிர்கிறானோ?,அவமானமாய் உணர்கிறானோ?, போன்ற எதிர்மறை எண்ணங்கள் சூறாவளியாய் சுழன்றடிக்க…. கட்டுப்படுத்தும் வகையறியாது நின்றாள்.
மனதுக்குள் …. ‘நல்லதே நினை, நல்லதே நடக்கும்..’, திரும்ப திரும்பச் சொல்லி உருவேற்றிவாறு, ஒருவேளை கணவன் தனக்குத்தான் முயற்சிக்கிறானோ என நினைத்து, இவளது பேசியின் அழைப்பை நிறுத்தி கீழே வைத்தாள். இவள் வைத்ததுதான் தாமதம்…. உடனே அழைப்பு வர… முகம் மலர ஆவலோடு திரையைப் பார்த்தவளுக்கு அது தெரியாத எண்ணாய் இருக்க, ஏமாற்றமாய் உணர்ந்தபோதும்…. எடுத்தாள்.
“என்ன மேடம்.. ஊர் எல்லாம் உங்க புகழ் கொடி கட்டி பறக்குது?”… இவள் பேசும்முன்னே… மறு முனையில் அதிரடியாக அக்குரல் ஆரம்பித்தது. உடனடியாக பேசியை காதிலிருந்து எடுத்துப் பார்த்தவள்… ஏதோ விவகாரமான அழைப்பு என்ற உள்ளுணர்வு தோன்ற சமயோஜிதமாய் அந்த உரையாடலைப் பதிவு செய்யும் (கால் ரெக்கார்டிங்) பொத்தானை அழுத்தினாள். எதிர்முனையில் முகமறியா அவன் “உங்க வாட்ஸாப் வீடியோ.. சும்மா தீயா பரவுது போல? ம்ம்ம்…மொதல்லயே நாங்க சொன்ன மாதிரி செய்திருக்கலாம். இப்ப பாருங்க, உங்க பேரும் கெட்டு….. லைஃப்ம் கெட்டு…. இனி உங்களால வெளிய வாசல்ல நடக்க முடியுங்கிறீங்க? ஹி ஹி … என்ன சொன்னாரு வீடியோ பாத்து உங்க புருஷன்? உடனே ஊருக்கு பொட்டி கட்டு-ன்னாரா ?”
“….. “
“எப்படிடா அவருக்கு தெரியும் யோசிக்கிறீங்களா? இந்த வீடியோவை மொதல்ல அனுப்புனது அவருக்குத்தான். அப்புறமாதான் உங்களுக்கு… … அதுக்கப்புறம் ஊருக்கே…… ஹ ஹ ஹ ….”, என்றவன்….தொடர்ந்து,
“ரொம்ப புத்திசாலித்தனமா இந்த நம்பரை வைச்சு என்ன ட்ராக் பண்ண நினைக்காதீங்க. இதை, இந்த நம்பரை இந்த வேலைக்காக மட்டும் தான் வாங்கினேன். முடிச்சிட்டு மொபைலையே தூக்கி போட்… “, என்று அவன் முடிக்கக்கூட இல்லை…
“ஷட்டப்… யார்டா நீ? நீதான் அந்த பொண்ண கடத்தினயா? “, என்று நங்கை குறுக்கிட….
“சாரிங்க அம்மணி… ரொம்ப பேசினா நமக்குத்தான் ஆபத்து… தவிர, பேலன்ஸ்-ம் இல்ல. பை….”, என்றுவிட்டு எதிர்முனையில் இருந்தவன் தொடர்பை துண்டித்தான்.
கையிலிருக்கும் கருவியை.. புது வகை ஆட்கொல்லியென வெறித்து நின்றாள். கொடிய மிருகங்கள் வாழும் அடர்ந்த காட்டின் நடுவே, வெளியேற திசையறியாது நிற்பது போன்ற நிலையில் இருந்தால் நங்கை நல்லாள். வீடியோ ஆடியோ இரண்டு பதிவினையும் காவல்துறையிடம் கொடுத்தாலோ அல்லது ஊடகங்களிடம் கொடுத்தாலோ, மிக சுலபமாக தான் குற்றமற்றவள் என நிரூபித்துவிட முடியும். ஆனால், அப்போது அப்பெண்பிள்ளை குறித்தும் சொல்ல வேண்டி இருக்கும். அவ்வீட்டினர் அனுமதி கொடுத்தாலும் இது குறித்து பேச நங்கைக்கு விருப்பமில்லை.
அனாமதேய அழைப்பிலிருந்து… நங்கை முதலில் கிரகித்தது.. த்ரிவிக்-கிற்கு வீடியோ விஷயம் தெரியும் என்பதைத்தான். அவன் என்ன நினைக்கிறான்? யோசிக்க யோசிக்க மனஅழுத்தம் அதிகரித்து தலைவலி வந்தது. ஆழ மூச்செடுத்து, வேதனைப்படுவதோ, குழம்புவதோ பிரச்சனையை தீர்க்காது, குழப்பத்துடன் எடுக்கும் முடிவுகள் சரியான தீர்வைத் தராது என்பதைப் புரிந்து… எதுவாயினும் பிறகு பார்த்துக் கொள்ளலாம், என்ற முடிவுக்கு வந்தாள்.
த்ரிவிக்ரமனுக்கு அழைக்க… அவனது அலைபேசி இன்னமும் பிசியாக இருந்ததால் பதிவு செய்யப்பட்ட உரையாடலை அவனுக்கு வாட்ஸாப்பில் அனுப்பிவிட்டு, பின் குளியலறை சென்றவள், முகம் கழுவி தன்னை ரிஃப்ரஷ் செய்தாள். ப்ரஜன் வாங்கி வந்திருந்த உணவினை… பசி என்ற ஓர் உணர்வே இல்லாதபோதும்… எதையும் எதிர்த்து நின்று போராட உடலுக்கு சக்தி தேவை என்பதால் உண்டு விட்டு, டாக்டர் கொடுத்த மாத்திரைகளையும் விழுங்கிவிட்டு படுத்தாள்.
படுத்து விட்டாலும்….உறக்கம் வருவேனா பார்? என்றது. கண்களை இறுக்க மூடி, ‘சிவ சிவ சிவ’, என சொல்லிக் கொண்டே இருந்தாள். திக்கற்றவனுக்கு தெய்வமே துணையல்லவா?
நங்கை நிலைமை இவ்வாறிருக்க…
வெளியூரிலிருந்த த்ரிவிக்ரமன்…, காலை அவன் சென்றிருந்த நிறுவனத்தின் மென்பொருள் திட்ட ஆய்வுக்கான கலந்துரையாடல் மதிய உணவுநேரத்தையும் தாண்டிச் செல்ல, அவ்வேலையை முடித்த பின்னரே அனைவரும் விடைபெற்றனர். அந்த நிறுவனத்திலேயே, உணவு தருவிக்கப்பட… பரபரப்பில்லாமல் நிதானமாய் சாப்பிட்டு விட்டு அலைபேசியை Do not Disturb மோட்-ல் இருந்து நார்மல் மோட்-க்கு மாற்றினான். சுமார் அரைமணிநேரம் கழித்து, ப்ரஜன்.. போனில் அழைத்து , குழந்தை குர்ஷரன் கடத்தப்பட்டதையும், நங்கை அக்குழந்தையைத் தேடி சென்று கொண்டிருப்பதையும் கூறியவுடன், பதைபதைத்தான். அந்த நொடி … மனைவியின் அருகே பக்கபலமாய் நிற்க தான் அங்கு இல்லையே என்று நொந்தவன்… மாலை அதே ஊரில்.. இன்னுமொரு நிறுவனத்திற்கு செல்லவேண்டி இருந்ததை …. தள்ளிவைத்து, அவர்களுக்கு தகவல் அளித்து.. நேரம் தாழ்த்தாது… விமான நிலையம் சென்றான்.
இடையில்… ப்ரஜனை தொடர்பு கொள்ள முயற்சிக்க… அது முழுமையாய் அடித்து ஓய்ந்தது. அடுத்து நங்கைக்கு அவன் அழைக்க… அதுவும் எடுக்கப்படவில்லை. சரி… சிக்கலில் இருந்திருக்கிறாள், அதை தீர்க்க அவளாளான பிரயத்தனம் செய்து, அயர்ந்திருப்பாள், தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அமைதியானான். கூடவே சின்னதாய் ஒரு நெருடல். பிரச்சனை என்றவுடன் மனைவி தன்னை அனுகவில்லையே?, என ஒருபுறம் மனம் சுணங்க…. தான் ப்ரஜனைப்போல்.. களத்தில் அவளுடன் கூட நின்றிருக்க முடியாதல்லவா? தவிர , மீட்டிங் முடியும்வரை, பேசியை DND -ல் போட்டிருந்தோமே? எனவே சகி சரியாகத்தான் முடிவெடுத்திருக்கிறாள் என்று அறிவு இடித்துச் சொன்னது. இது மனதிற்கும் அறிவிற்குமான முரண்.
விமானம் ஏறியதும் அலைபேசி ஏர்ப்பிளேன் மோட்-ல் போனதால்… நங்கை, இவனது மிஸ்ட் கால் பார்த்து திரும்ப த்ரிவிக்-கினை தொடர்பு கொள்ள முயற்சித்த போது … அவளால் முடியவில்லை. இரண்டு மணி நேரத்தில் தாய்த்திருநாட்டின் தலைநகர் வந்து சேர்ந்த த்ரிவிக்ரமனுக்கு… இடியாய் வந்தது புலனத்தில் வந்த காணொளி.
சிறுவயதில் இருந்து எதையும் தெளிவாக திட்டமிட்டு செய்யும் வழமையுடையவனான த்ரிவிக்ரமன், வாழ்வில் முதன்முறையாக.. அடுத்தென்ன செய்வதெனப் புரியாது அதிர்ந்து நின்றான். கையறுநிலையில் விமான நிலையத்திலேயே சிலையென சமைந்தவன்… தலை சுற்றுவது போல தோன்ற… அருகிருந்த இருக்கையில் அமர்ந்தான். பயணப்பொதியில் இருந்த தண்ணீரை மடக் மடக்-கென குடித்து… ஓரளவு தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். மனதுக்குள்…., ‘செயலாற்ற வேண்டிய நேரமிது.. மனமே மயங்காதே, துக்கத்தை தூர வை… அடுத்தென்ன? யோசி… என்று கட்டளையிட்டான். என்ன செய்ய…? ஓடிப்போய் மனைவியின் அருகே இருந்து ஆறுதல் சொல்வதா? அல்லது இந்த அவதூறினை பரப்பியவனை தேடிச் சென்று… இவ்விஷ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா?’, அமர்ந்திருந்த த்ரிவிக், முழுதாய் ஐந்து நிமிடங்கள் சிந்தனையில் செலவளிக்க.. அவனது கேள்விகளின் பதிலாக நங்கை செய்த ஓர் செயலே மனதில் தோன்றியது.
அன்றொருநாள், பார்ட்டியில் நங்கைக்கு ஹிந்தி தெரியாதென இவன் நினைத்துப் பேச, தெரியுமென ப்ரஜன் அனைவர் முன்னும் போட்டுடைக்க… நொடியில் “அவருக்கு சொல்லாம சஸ்பென்ஸா வச்சிருந்தேன்”, என்று சமாளித்து தன்னைக் கீழே இறக்காமல் பேசிய மனையாள் நினைவுக்கு வந்தாள். ஆம்.. என்ன செய்யவேண்டும் என தீர்மானித்து விட்டான். இந்த வீடியோவை திரித்து நங்கை மேல் வீண் பழி சொன்னவன்.. அம்பலத்தில் ஏறவேண்டும்… ஊராரின் முன் மண்டியிட்டே தீரவேண்டும், இந்த செய்தி வதந்தியென நிரூபிக்க வேண்டும் என்ற ஒரு முடிவுடன்… செயல் முடிக்கத் தயாராய், தெளிவான திட்டமிடலுடன்.. விமான நிலையத்தில் இருந்து வெளிவந்தான்.
கால் டாக்ஸி பிடித்து, போகும்போதே, ப்ரஜனின் அலைபேசிக்கு அழைத்தான், அவன் அப்போதுதான் நங்கையை மருத்தவமனையில் இருந்து வீட்டில் விட்டு, அவனது இல்லம் சென்று கொண்டிருந்தான். அவர்கள் எதற்காக மருத்துவமனை சென்றார்கள் என்று கேட்டறிந்த த்ரிவிக்ரமனுக்கு, எதிராளியை கொலையே செய்யுமளவிற்கு கோபம் வந்தது. பின்னர், பிரஜனிடம் தான் டெல்லி வந்துவிட்டதையும், அடுத்து என்ன செய்யவிருக்கிறான் என்பதையும் கூறி, ப்ரஜனது காவல்துறை நண்பனின் தொடர்பு எண்ணைக் கேக்க, அவனோ, தன் நண்பனையும் அழைத்துக் கொண்டு தானும் வருவதாகக் கூற… நேரே..’இணையதள குற்றங்களை விசாரிக்கும் தலைமையகம்’, வருமாறு சொன்னான்.
பிறகு அவனுக்குத் தெரிந்த அமைச்சரின் உதவியாளரைத் தொடர்பு கொண்டு… அமைச்சரிடம் பேசி, அவனுக்கு துறை ரீதியான ஒத்துழைப்பை வேண்டினான். அவரும் ஒப்புதல் அளிக்க…, அடுத்து… நங்கையின் தந்தையை அழைத்து தகவலளித்து, உடன் டெல்லி வர பணித்தான். கூடவே.. நங்கை கையில் கட்டுடன் இருப்பதையும் கூறி, பெண்கள் யாரையாவது அழைத்து வர அறிவுறுத்தினான்.
பின் த்ரிவிக், தனது வழக்கறிஞரிடம், நங்கையின் முன் ஜாமீனுக்கு தாக்கல் செய்யுமாறு சொல்லி இருந்தான். அவர் தேவையான விண்ணப்பங்களை எடுத்துக்கொண்டு காலை வீட்டிற்கு செல்வதாக கூறினார். இது குறித்து பேச நங்கைக்கு முயற்சிக்க…. அதில் எங்கேஜ்ட் டோன் வந்தது… இருமுறை முயற்சித்தவன், அவன் செல்லவேண்டிய அலுவலகம் வந்துடவே… திட்டமிட்ட வேலைகள் மூளையில் அணிவகுக்க…. அவற்றைச் செயலாற்ற… வேக எட்டுக்கள் எடுத்து உள்சென்றான். இவன் அவ்வலுவகம் செல்வதற்குள், அமைச்சர் அத்துறையின் மேலதிகாரிக்கு பேசி இருந்தார். எனவே, அவர்களுமே இவனது வரவிற்காக காத்திருந்தால்.. உடனடியாக வேலை துவங்கியது.
சற்று நேரத்தில் ப்ரஜனும், அவன் நண்பனும் வர… முதலில் அந்த வீடியோ, எந்த எண்ணிலிருந்து வந்ததோ… அந்த எண்ணின் உரிமையாளர் யார், என்ன முகவரி போன்றவைகளைத் திரட்டி, [அவனது யூகம் அவை போலியானவைகளாய்த்தான் இருக்கும் என்பது, ஆயினும்] ஏதோனுமொரு நூல் கிடைக்காதா? என்றொரு கோணத்தில், அம்முகவரிக்கு இரு காவலரை அனுப்பி, தகவல்களை சரிபார்க்கச் செய்தனர். அவன் யூகம் சரியே, அது போலியான முகவரி, யாரோ எப்பொழுதோ வாடகைக்கு இருந்தவரின் அடையாள அட்டையை உபயோகித்து, சிம் கார்டு வாங்கியுள்ளனர். பின் அந்த எண்ணிற்கு வந்த அழைப்புகளை பதிவெடுத்து, அடுத்த கட்ட விசாரணை துவக்கினர். பலன் பூஜ்யமே.
எந்த அழைப்புகளும் அந்த எண்ணிற்கு வரவில்லை. ஒரே ஒரு புலனக்காணொளி தெரியாத ஒரு எண்ணிலிருந்து வந்திருக்க , அதையடுத்து ஒரு காணொளி தொகுப்பு மென்பொருள் [வீடியோ எடிட்டிங் சாஃப்ட்வேர்] தரவிறக்கம் [download] மாத்திரமே இருந்தது. வந்திருந்த நேரம் சரியாக… நங்கையை ப்ரஜன் காரில் மருத்துவமனை கூட்டிச் சென்ற நேரத்தினை ஒத்திருந்தது. பின்னர் சுமார் ஒன்றேமுக்கால் மணி நேரம் கழித்து அதிலிருந்து பற்பல எண்களுக்கு காணொளி சென்றிருந்தது, அதில் த்ரிவிக், நங்கை எண்களும் அடக்கம். இந்த கண்டறிதலுக்கே நேரம் நள்ளிரவைத் தொட்டிருந்தது.
இதற்கிடையில் மருத்துவமனையில், காயம்பட்டவனின் சட்டையில், அவன் ஓட்டும் வேனின் டிராவல்ஸ் முகவரி கிடைத்தது. அங்கு சென்று விசாரித்ததில், அவனது வீட்டு விலாசம் கிடைக்க.. நள்ளிரவென்றும் பாராமல்.. அங்கு சென்றனர். வீட்டின் உரிமையாளர், இந்த நபருடன் கூட ஒருவன் குடியிருப்பதும்… இருவரும் வாகனம் ஓட்டுபவர்கள், என்ற விபரமும் தெரிவிக்க.., “வீட்டுக்குள்ள பாக்க முடியுமா ?”, என்க…
“ஆங்.. அது.. வந்து.. “என்று தயங்க..”நாங்க போலீஸ், திறங்க.. “, மிடுக்காக தோரணையுடன் கூறியவுடன்.. “சரி வாங்க”, என்று சாவியைக் கொடுத்தார். அவ்வீட்டினைத் திறந்து பார்த்ததில், ஒரு ஓரமாக மூலையில் பெரியதாக இருந்த ஸ்பீக்கரின் மேல் நண்பர்கள் இருவரும் எடுத்த புகைப்படம் இருக்க.., நங்கை இவனைப் பற்றி ஏற்கனவே த்ரிவிக்கிற்கு, சிசிடிவி பதிவினையும் காண்பித்தல்லவா சொல்லி இருந்தாள்? எனவே த்ரிவிக்கிற்கு அவனைப்பார்த்த உடனே அடையாளம் தெரிந்தது.
அந்த மற்றொருவன் வேறு யாருமல்ல… நங்கை, விடுதிக்கு வந்த பதின்ம வயதுப் பெண் ஒருவள்.., அவளது கார் ஓட்டுனருடன் வரம்பு மீறி பழகுவதாய் அபெண்ணின் அன்னையிடம் கூறி, அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியதால்… பாதிக்கப்பட்டவன். அந்த கார் டிரைவரின் பெயர் ரியாஸ்…, நங்கையினால் அடிபட்டுக் கிடப்பவன், இவனது நண்பன் வேன் டிரைவர், அமர்.
இடைப்பட்ட நேரத்தில்.. நங்கை அனுப்பிய.. பதிவு செய்யப்பட்ட அலைபேசி உரையாடல் பதிவினை கேட்டவனுக்கு… சிற்ச்சில யூகங்கள் தோன்றின. நங்கையின் தொழில் முறை எதிரி, அவளது செயலால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு எதிரியுடன் கூட்டு சேர்ந்து செய்த பழிவாங்கும் நடவடிக்கை இது என்பது… அந்த மூன்றாமவன் சற்று புத்திசாலி என்பது கண்கூடு.
போலி முகவரி கொடுத்து புது அலைபேசி எண் வாங்கி , அதே எண்ணில் காணொளி உருவாக்கும் மென்பொருளைத் தரவிறக்கி.. அவ்வாறு மாற்றிய காணொளியை அனைவர்க்கும்.. பொது அருகலை உபயோகித்து.. பகிர்ந்து.. IMEI குறித்து தெரிந்தவனாய்அந்த மொபைலையே தூக்கி வீசி… நிச்சயம் புத்திசாலியே. அவன் யார் என்பது.. அடிபட்டு மயக்கத்தில் இருப்பவனோ, அல்லது தலைமறைவாக இருக்கும் ரியாஸோ வந்து சொன்னாலன்றி பிடிப்பது கடினம்.
மருத்துவமனையில் அமரின் உடல் நலம் பற்றி கேட்டறிய, எதுவும் முன்னேற்றமில்லை என்ற போதும் பின்னடைவும் இல்லை என்று மருத்துவர்கள் சொன்னதாக தகவல் வந்தது.
இத்தனை மணி நேர இடைவெளியில்.. ரியாஸ் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் சென்றிருக்கலாம். என்ன செய்து, எப்படி அவனைப் பிடிப்பது? அவனைத்தேடி … டெல்லி ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில், த்ரிவிக்கும், ப்ரஜனும், அவனது காவல்துறை நண்பனும், அவனது குழுவும் .. கையில் இருந்த ரியாஸின் புகைப்படத்தோடு திசைக்கொரு குழுவாக…அலைந்து, திரிந்து கொண்டிருந்தனர்..
++++++++++++++++++++++++++++++
காலையில் இருந்து அலைக்களித்த நிகழ்வுகளால், தன்னையுமறியாது நங்கை உறங்க ஆரம்பித்தாள். சற்று நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, விழிப்பு வந்து எழுந்தவள், மணி பார்க்க அது இரவு பதினொன்று எனக் காட்டியது. யார் இந்த நேரத்தில்?… ஒருவேளை கணவனாய் இருக்குமோ என்று நினைத்து கட்டுக்களால் மூடப்படாத விரல்களைக் கொண்டு கதவைத் திறந்தாள். அங்கு இருந்தது த்ரிவிக்கிரமன் அல்ல, இவளது தந்தை மோகனசுந்தரமும், சின்ன அண்ணனும் அண்ணியும் வந்திருந்தனர். அதற்குள் இவர்களுக்கு தகவல் சென்றுவிட்டதா? என சற்று திகைத்தாலும், “வாங்கப்பா, வாண்ணா, வாங்க அண்ணீ..”, என்றபடி கதவை விரியத் திறந்தாள். சின்ன அண்ணி முதலில் கைகளைப் பார்த்தவர்… வேகமாக வீட்டினுள் வந்து “நல்லா…”, என்றபடி இவளைக் கட்டிக்கொண்டார். சப்தமின்றி அண்ணியின் உடல் குலுங்குவதை உணர்ந்தவள்… அவர் அழுவது தெரிய..”ம்ப்ச். அண்ணீ…..”, என்று கடிந்தாள்.
ஒருவித கனமான அமைதி அங்கு நிலவ…. “எல்லாரும் சாப்பிட்டீங்களா? ஏதாவது ரெடி பண்ணவா?”, என்க.., “ச்சு… எல்லாம் சாப்பிட்டுத்தான் கிளம்பினோம்.. சும்மாவே இருக்க மாட்டியாடி நீ? கையை இப்படி செஞ்சுவச்சிருக்க?”, கண்களைத் துடைத்துக்கொண்டே.. உரிமையாய் கடித்தார். மணமான பெண்களுக்கு… பிறந்தகத்து சொந்தங்கள் திட்டினாலும் சுகமே. காரணம் அவர்களின் அக்கறையல்லவா? திருமணம் என்று ஒன்றானபின்.. பெண்கள் மருமகளாகவோ.. குடும்பத்தலைவியாகவோ அல்லது தாயாகவோ தானே பார்க்கப்படுகிறார்கள்? அவர்களின் பசி, வலி, துக்கம் அனைத்தும், அவர்களுக்கே இரண்டாம்பச்சம் எனும்போது, சுற்றியுள்ளவர் குறித்து கேட்கவே வேண்டாம். மிகப்புரிதலான கணவர்கள் அடைந்த பெண்கள், விதிவிலக்கு. அவர்கள் நிச்சயம் நல்வரம் பெற்றோரே.
மோகனசுந்தரம் அவள் முகத்தை தான் பார்த்திருந்தார். மகளது அழுது வீங்கிய முகம்… மனதை வருத்த… “அம்மாடி…”, என்று ஆரம்பித்த தந்தையிடம், “ப்பா. டயர்டாருக்கு. டாக்டர் ஸ்லீப்பிங் டோஸ் குடுத்திருக்காங்கன்னு நினைக்கிறன். தூக்கம் தூக்கமா வருது, காலைல பேசிக்கலாம்பா”, என அவரை அமர்த்தியவள்.. அவரவர்களுக்கு அறைகளை காண்பித்து.. ஏற்கனவே சிலமுறை இங்கு வந்தவர்கள்தான்.. எனினும் படுக்கை வசதியை சரிபார்த்து… அவளது அறைக்கு செல்ல… அண்ணி, அவளுடன் உடன் உறங்குவதாகக் கூற.. மறுப்பேதும் சொல்லாமல் அறைக்கு அழைத்துச் சென்றாள். உட்கொண்ட மாத்திரை யின் தாக்கத்தால்,. ஒருவாறு உறங்கியும் விட்டாள்.
மறு நாள்… காலை அனைவரும் எழுந்த பத்து நிமிடங்களில், அண்ணி நங்கையை அடுக்களைக்குள் வரவே கூடாது, என்று ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டு, காஃபி அவரே தயாரித்திட…. குடித்து முடித்து அனைவரும் கூடத்தில் இருக்க, மோகனசுந்தரம் நங்கை நல்லாளிடம், “கிளம்பும்மா… அடுத்த பிளைட் புடிச்சு ஊருக்கு போயிடலாம். என்ன ஆனாலும் அங்க போய் பார்த்துக்கலாம். மாப்பிள்ளை கிட்ட நான் சொல்லிக்கிறேன்”, என்க…
பிறந்ததிலிருந்து இதுவரை அவரை மறுத்துப் பேசாத அவரது மகள், “இல்லப்பா இப்ப நா அங்க வர்றது சரியா வராது, அவருக்கு இந்த விஷயம் தெரியும். இப்ப என்ன பண்ணிட்டு இருக்காங்கங்கிறது எனக்கு தெரியாது, எப்படி இதை எடுத்துகிட்டு இருக்காங்கன்னும் எனக்கு தெரியாது, அதனால அவர் சொல்லாமல் நான் எங்கேயும் வரமாட்டேன்.. அதுவுமில்லாம இங்க என்னை நம்பி, கொஞ்சம் பேர் இருக்காங்க, என் தொழில் இருக்கு. ஒரு பிரச்சனைன்னா நின்னு சமாளிக்கணுமே தவிர… அம்போன்னு விட்டுட்டு ஓடிப்போனா… நம்ம தப்பானவங்கன்னு ஆகிடும். உங்க பேச்சை கேக்கலைன்னு நினைக்காதீங்கப்பா “, என ஸ்திரமாக அவளது நிலைப்பாட்டை கூறினாள்.
“மாப்பிள்ளை உன்ன சந்தேகப்படுவார் ன்னு நினைக்கிறயாம்மா?”, கண்ணில் டன் கணக்கில் கவலையை தேக்கி வைத்து கேட்கும் தன் தந்தையிடம்…இல்லை என்பாளா அல்லது தெரியவில்லை என்பாளா? பதிலேதும் கூறாமல் சின்னதாய் ஒரு புன்சிரிப்பு சிந்திவிட்டு, அடுத்த வேலையை கவனிக்க சென்றாள்.