‘எதாவது சண்டை போடப் போறிங்களா..?” என்று பதறினார் சுசிலா.
‘என்னைப் பார்த்தா உனக்கு எப்படியிருக்கு..? அவனை கூப்பிடு..” என்றார்.
‘ரகு..“ என்று அழைத்தார். ரகுவிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக.. சுசிலா அழைத்ததில் வெளியே வந்த ராஜா.. மேலே இருந்து .. ‘என்னம்மா..?” என்றான்.
‘ரகுவை கூப்பிடு.. அப்பா கூப்பிடறார்.”
‘ரகுவையா..? அப்பாவா..?” என சொல்லி ‘ரகு..” என்று கதவைத் தட்டினான்.
‘அப்பா கூப்பிடறாராம்.. வா..” என்றான்.
இருவரும் வந்தார்கள். ரகு அமைதியாக சோபாவில் உக்கார்ந்து தன் மொபைலை எடுத்து ஆன் செய்தான். சுந்தரம் முகத்தை பார்த்த ராஜாதான்.. தன் அப்பா ஏதோ முக்கியமான விசயத்திற்குதான் அழைத்திருக்கிறார் என நினைத்து..
‘என்ன விசயம்ப்பா..?” என்றான்.
சுந்தரம் ராஜாவை தவிர்த்து.. ரகுவைப் பார்த்து.. ‘ரகு.. “என்றார்.
‘சொல்லுங்கப்பா..” என்று சுந்தரத்தை அப்பொழுதுதான் நிமிர்ந்து பார்த்தான்.
‘நாளைக்குப் போய் உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வரலாம்..” என்றார். இதைக் கேட்ட சிவகாமியின் முகத்திலும் ராஜாவின் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி.
ஆனால்.. ரகு.. எந்த முகமாறுதலும் இல்லாமல் ‘எதுக்கு..?” என்றான் சாதாரணமாய்..
ரகுவை முறைத்துப் பார்த்தவர்.. ‘கல்யாணம் பண்ணினா போதுமா..? குடும்பம் நடத்த வேண்டாமா..?” என்றார்.
‘அதை நான் பார்த்துக்கிறேன்..‚” என்று முகத்தில அடித்ததை போல் சொன்னான்.
‘பார்வதிதான் வேணும்னுதான கல்யாணம் பண்ணின..? அப்புறம் ஏண்டா அந்தபுள்ளையை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலை..?” என்று கோபமாகத்தான் கேட்டார்.
‘நான் காதலிச்சேன் கல்யாணம் பண்ணினேன் எனக்கு அவளை கூட்டிட்டு ஓடறதுக்கும் பிடிக்கலை இங்க கூட்டிட்டு வரதுக்கும் பிடிக்கலை..‚ அதனாலதான் கூட்டிட்டு வரலை..” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் சொன்னான்.
சட்டென ரகுவின் எண்ணங்களை புரிந்தவர்.. ‘சரி.. கூட்டிட்டு வரவேணாம்.. நாம எல்லாரும் போய் அழைச்சிட்டு வரலாம் வா..” என்று கோபமில்லாமல் தன்மையாய் சொன்னார்.
கொஞ்சம் கோபம் குறைந்தவனாய்.. ‘என்ன காரணத்துக்காக இவ்ளோநாள் இல்லாம இன்னைக்கு இதைப்பத்தி பேசனும்னு உங்களுக்கு தோணியிருக்கு..? நான் தப்பு பண்ணினேன்னு இதுவரைக்கும் நான் நினைச்சதில்ல இருந்தாலும்.. நான் இப்படி பண்ணினதுக்கு உங்களை யாராவது எதாவது சொன்னாங்களா..? சொல்லுங்க நான் பார்த்துக்கிறேன்..” என்று கேட்டான்.
‘என்னை சொல்றதுக்கு யாருக்குடா தைரியம் இருக்கு..? நீ இப்படியே எவ்ளோ நாளைக்கு இருப்ப..? அதனாலதான் சொல்றேன் நாளைக்கு பார்வதி வீட்டுக்கு போலாம்..”
‘நான் நல்லாத்தான் இருக்கேன்.. நீங்க என்னை நினைச்செல்லாம் கவலைப்படாதிங்க யாரும் எங்கையும் போகவேண்டாம்..” என்று சொன்னான்.
‘மத்தவங்க சந்தோசத்தையெல்லாம் பார்த்துப்பார்த்து செய்யறவன் நான்.. என் மகன் சந்தோசமில்லாம இருக்கும்போது என்னால எப்படிடா நிம்மதியா இருக்க முடியும்..?” என்று வருந்தினார்.
‘உங்களுக்கே பிடிக்கலைன்னாலும் என் மனசுக்கு பிடிச்சவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் சந்தோசமாத்தான் இருக்கேன்.. நீங்க வருத்தப்படாதிங்கப்பா..”
‘என்ன சந்தோசமா இருக்க..? சந்தோசமா வாழ வேண்டிய வயசுல இப்படி தனித்தனியா இருக்கிறதுதான் சந்தோசமான வாழ்க்கையா…? பார்வதியை போய்ப் பாரு.. எப்படி இளைச்சிப்போய்ட்டா..” என்றார் ஆதங்கமாய். ஆச்சர்யமாய் தன் அப்பாவை பார்த்தவன்…
‘கர்பமா இருக்கிறதுனாலயா இருக்கும்.. போனவாரம்தான் செக்கப்புக்கு போனா.. டாக்டர் மாத்திரை எழுதிக்கொடுத்திருக்காங்க.. ஒழுங்கா சாப்பிட்டா சரியாய்டுவா..” என்று ரகுவும் சற்றே குரல் தளர்ந்து சொன்னான்.
‘இப்ப அவங்க அம்மாவும் இல்ல ஒரு ஆம்பிளைக்கு என்ன தெரியும்..? பார்வதி இங்க இருந்தான்னா.. உங்கம்மா நல்லா பார்த்துக்குவா..” என்றார் விடாமல்..
‘இந்த பரிதாபமெல்லாம் அவளுக்கு தேவையில்லை அவங்க அப்பாக்கு ஒன்னும் தெரியலைன்னாலும் அங்க சமைக்க வர மாலாம்மா.. அவளை நல்லா பார்த்துக்கிறாங்க..”
‘அப்ப.. நீ பார்வதியை இங்க கூட்டிட்டு வர ஐடியாவில இல்ல அப்படித்தான..?” என்றார்.
ரகு அமைதியாக இருந்தான். ‘அண்ணா.. உனக்கு என்ன ஆச்சி..? ஏன் இப்படி பேசற..? நீ பேசறது சரியில்லைன்னு உனக்கே தெரியலையா..?” என்று ராஜா கேட்டான்.
‘நான் சரியாத்தாண்டா பேசறேன்…” என்றான்.
‘அப்ப நான் பேசறதுதான் சரியில்லையா..? என்னதாண்டா உன் பிரச்சணை..?” என்று வேண்டுதலாய் கேட்டார் சுந்தரம்.
‘எனக்கு ஒரு பிரச்சணையும் இல்லப்பா..”
‘ராஜாவுக்கு கல்யாணம் எப்ப பண்ணலாம்..?” என்றார்.
‘அதை நீங்களும் அவனும்தான் முடிவு பண்ணனும்..” என்று சாதாரணமாய் சொன்னான்.
‘வீட்டுக்கு பெரியவன் நீ.. நீங்க இரண்டு பேரும் இப்படி பிரிஞ்சியிருக்கும்போது அவனுக்கு எப்படிடா கல்யாணம் பண்ணமுடியும்..?” என்று சுந்தரம் கேட்டதுதான்.. பட்டென்று எழுந்தான்.
ஆனால்.. மிகப்பொறுமையாக.. ‘ஓ… உங்களுக்கு அதுதான் பிரச்சணையா..? நீங்க கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிங்க சுகுனா கல்யாணத்தில எப்படி எல்லா பங்சன்லையும் கலந்துகிட்டாளோ.. அதேமாதிரி ராஜா கல்யாணத்திலயும் பார்வதி கண்டிப்பா கலந்துக்குவா.. அவளால எந்த பிரச்சணையும் வராது.” என்று சொல்லி தனதறைக்கு செல்ல திரும்பினான்.
‘ரகு.. ஒரு நிமிசம் நில்லு…‚ என்னை என்னன்னு நினைச்சிட்ட..? ஒருவேளை நான் அப்படி மீனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்..” எனும்போதே… ‘வாயை மூடு ராஜா..” என்று வீடே அதிரும்படி அப்படி ஒரு கத்து கத்தினான். ரகு இவ்வாறு ராஜாவிடம் ஒருநாளும் பேசியது இல்லை. ஸ்தம்பித்து நின்றான் ராஜா.
‘நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு தெரியும்..‚ இதுதான் உனக்கு கடைசியா சொல்றேன் நீ சொல்ல வந்ததை இனிமே என்கிட்டன்னு இல்ல வேற யார்கிட்டையாவது சொன்னன்னு நான் கேள்வி பட்டேன்.. அவ்ளோதான்.‚” என்று எச்சரித்தான்.
‘எதுக்கு ரகு இவ்ளோ கோபப்படுற…? உன்னை நினைச்சி தினம் தினம் வருத்தப்படுறார்டா உங்கப்பா..” என்று சுசிலா அழுதார்.
‘அம்மா.. நீங்க எதுக்கு அழறிங்க..? நீங்க இரண்டுபேருமே என்னை நினைச்சி வருத்தப்படுறிங்கன்னு எனக்கு தெரியாதா..? அதுக்காக என்ன பண்ணலாம்..? உங்களுக்குத்தான் நான் பார்வதியை கல்யாணம் பண்ணினது பிடிக்கலையே..‚ வேணும்னா உங்களுக்கு பிடிச்சமாதிரி ஒரு பொண்ணுக்கு இன்னொருமுறை என்கையால தாலிகட்டி இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடலாமா..?” என்று அழுத்தமாக கேட்டான்.
‘என்ன பேச்சுடா பேசற..?” என்று ஆத்திரத்தில் பக்கத்தில் இருந்த பூத்தொட்டியை எடுத்து ரகுமீது வீசினார் சுந்தரம். அது ரகுவின் காலை பதம் பார்க்க.. காலைபிடித்தபடி சோபாவில் அமர்ந்தான்.
‘அச்சோ.. உங்களுக்கு எதுக்கு இப்படி கோபம் வருது..?” என்று முதன்முதலாய் தன் கணவரை கோபமாய் திட்டிய சுசிலா ‘நீ இப்படி பேசலாமா.. ரகு..?” என்று ரகுவின் காலைத்தேய்த்துவிட்டபடி அழுதார் சுசிலா.
‘இவனெல்லாம் என்ன காதலிச்சி என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டானோ..? இன்னொரு பொண்ணுக்கு தாலி கட்றானாமில்ல..? கொன்னுடுவேன்டா உன்னை..‚ என் மருமக அழகுக்கும் குணத்துக்கும் திறமைக்கும்.. இந்த உலகத்தில யாராவது இணையா வருவாங்களாடா..? நீ என் மருமகளோட வாழ்ந்தா வாழு இல்லாட்டிப் போ.. நான் என் மருமகளை நாளைக்குப் போய் கூட்டிட்டு வரத்தான் போறேன்..‚ ஏய்.. சுசிலா.. நம்ம ரூம்க்கும் பக்த்தில இருக்குற ரூமை க்ளீன் பண்ண சொல்லுடி என் மருமக இங்க வந்ததுக்கப்புறம் எவனாச்சம் அந்த ரூம்பக்கம் மட்டும் போகட்டும்.. அப்புறம் இருக்கு கச்சேரி…” என்று கோபமாய் வெளியே கிளம்பப்போனார்.
‘சரி.. நானும் வரேன்.. உங்க மருமகளை நாளைக்கே போய் கூட்டிட்டு வரலாம்..”
சட்டென்று திரும்பிய சுந்தரம் ‘பேச்சுன்னா ஒன்னா இருக்கனும்.. நீ ஒன்னும் வரத்தேவையில்லை போடா..” என்று முன்பு வெளியே போனவர் மீண்டும் உள்ளே வந்தார்.
‘நான் என் பொண்டாட்டியைத்தான இங்க கூட்டிட்டு வரமாட்டேன்னு சொன்னேன் உங்க மருமகளையா சொன்னேன்…?” என்று காலில் வலியோடு எழுந்து வரப்பார்த்தான்.
‘நீ அங்கையே இரு.. நான் வரேன்..” என்று ரகுவின் பக்கத்தில் வந்து உக்கார்ந்தார்.
‘எதுக்குடா பார்வதியை கூட்டிட்டு வரவேணாம்னு சொன்ன..?” என்றார்.
‘என் பொண்டாட்டியா மட்டும் இருக்கிற வரைக்கும் நான் எப்படிப்பா அவளை இங்க கூட்டிட்டு வரமுடியும்..? அவ என்னைக்கு உங்க மருமகளா ஆகறாளோ அதுவரைக்கும் வெய்ட் பண்ணலாம்னுதான் இருந்தேன்..” என்றான்.
‘அதுக்கு இப்படியாடா பேசுவ..? வாய் வார்த்தைக்குகூட நீ இப்படி பேசினேன்னு அந்த புள்ளைக்கு தெரிஞ்சா அது மனசு என்ன பாடுபடும்..?” என்று வருந்தினார்.
‘அப்பா ஒருவேளை நான் உண்மையாவே இன்னொரு கல்யாணம் பண்ணினாக்கூட.. போடான்னு என்னை தூக்கியெறிஞ்சிட்டு ஈசியா போய்டுவாப்பா ஆனா அவமேல இரக்கப்பட்டு நாம கொடுக்கிற வாழ்க்கையை மட்டும் அவ வாழவேமாட்டா.. அதனாலதான் நான் அப்படி பேசவேண்டியதாய்டுச்சி..” என்றான்.
‘நாளைக்கு போய் நாம கூட்டிட்டு வரது இருக்கட்டும்.. நாம இன்னைக்கு போய் பார்த்திட்டு வரலாம்..” என்று ரகுவை அழைத்தார் சுசிலா.
‘இப்ப ஆபீஸ்லதான் இருப்பா.. நீங்களும்.. அப்பாவும் போய் பார்த்துட்டு வாங்க.. நான் நாளைக்கே வந்து பார்;த்துக்கிறேன்..” என்றான்.
‘இப்படி உடம்பு முடியாம இருக்கிற நேரத்திலகூட என்ன வேலை வேண்டியிருக்கு..?” என்று சுசிலா சலித்துக்கொள்ள.. ‘ஏய்.. பார்வதியோட வேலை சாதாரணப்பட்ட வேலைன்னு நினைச்சியா..? நீ உன் மருமக வேலைபார்க்கிற அழகை இன்னும் பார்க்கலதான..? நீ வந்து பார்த்தின்னா அப்படியே அசந்துபோய்டுவ..‚ வரியா இப்பவே போலாம்..” என்று ஆர்வமாக கேட்டார் சுந்தரம்.
‘நீங்க எப்பப்பா பார்த்திங்க..?” என்று ஆச்சர்யமாய் கேட்டான் ரகு.
‘நம்ம சுகுனா கல்யாணத்துலயே.. பார்வதிக்கு எல்லாரும் கொடுக்கிற மரியாதையைப் பார்த்து எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சி அதனால ஒருநாள் வேலைசெய்யிற இடத்துல வச்சி பார்வதியை பார்க்கனும்னு தோணுச்சா அதான் போய் பார்த்தேன்.. ஒவ்வெரு நாளைக்கு வேலைமுடிஞ்சதுன்னா.. சீக்கிரமாவே போய்டும் நீ வா நாம இப்பவே போலாம்..” என்று அழைத்துப் போனார்.
அவர்கள் சென்றதும்.. ‘ரகு.. நீ காரணமில்லாம என்கிட்ட அப்படி கோபப்பட்டிருக்கமாட்ட..‚ நான் என்ன சொல்லவரேன்னே தெரியாம நீ எதுக்கு அப்படி கத்தின..?” என்றான் ராஜா.
‘நீ என்ன சொல்லியிருப்ப நான் மீனா கழுத்தில தாலியே கட்டினாலும்.. அண்ணி இங்க வராம நான் மீனாவை கூட்டிட்டு வரமாட்டேன்னுதான சொல்ல வந்த..? நீ மட்டும் அப்படி சொல்லி பார்வதி கேட்டிருந்தான்னு வச்சிக்கோ அப்புறம் ஜென்மத்துக்கும் என்னோட வாழவே மாட்டா..‚ அவ என்னோட உரிமையாத்தான் வாழனும்னு ஆசைப்படுவாளே ஒழிய.. உன்வாழ்க்கையை பலிகொடுத்து அவ வாழனும்னு ஆசைப்படமாட்டாடா..” என்றான்.
ஆச்சர்யமாய் ரகுவைப் பார்த்த ராஜா.. ‘நான் என்ன நினைக்கிறேன்னு நீ சரியா கண்டுபிடிச்சிருக்கேன்னா.. என்னைப் பத்தி உனக்கு தெரியும்.. அதனால கண்டுபிடிச்சிருக்க அது எப்படி அண்ணிக்கு தெரிய வரும்..? அதுவும் உடனே..” என்று இழுத்தான்.
‘இல்ல ரகு.. நீ வேண்ணாப்போ.. நான் நாளைக்கே வந்து பார்த்துக்கிறேன்.. அப்புறம் இந்த லைவ் டெலிகாஸ்ட் விசயம் உனக்கு தெரியும்னு பார்வதிக்கு தெரிஞ்சிடப்போகுது அப்புறம் அவ இங்க வந்தாலும்.. நான் வாழாவெட்டிதான்.” என்று சிரித்தான்.
‘உனக்கெல்லாம் இப்பேர்பட்ட ஆள்தான் சரியா வருவாங்க அண்ணி இப்படி இல்லன்னா.. அவங்க தலையில நீ மொளகா அரைச்சிட மாட்ட..” என்று சிரித்தான்.
தன் கணவன் வீட்டில் நடந்ததை அறிந்த சந்தோசத்தில் வீட்டிற்கு சீக்கிரம் செல்வதற்காக.. வேலைசெய்து கொண்டிருந்தாள். வெளியில் இருந்து பார்வதியை ஒருமணிநேரமாக பார்த்துக்கொண்டிருந்த சுசிலாவிற்கு அவளிடம் பேசும் எண்ணம்வர.. பழனியை அழைத்து.. ‘உங்க மேடமை முதல்ல வெளிய வரசொல்லு..” என்றார்.
பழனி சொன்னதும்.. வெளியில் நின்றிருந்த சுசிலாவைப் பார்த்த பார்வதி.. ‘அத்தை..” என்று சுசிலாவின் கையைப் பிடித்தவள்.. சுந்தரத்திடம் ‘ரொம்ப நேரமா வெய்ட் பண்றிங்கன்னு பழனி இப்பதான் வந்து சொன்னார்…” என்று படபடப்பாய் பேசினாள்.
பார்வதி வெளியே வந்ததும்.. வீட்டிற்குதான் செல்கிறாள் என நினைத்து.. ஆ பீஸ் ஜீப்பை டிரைவர் எடுக்க.. ‘இல்ல.. நான் இன்னைக்கு என் மாமாவோட போய்க்கிறேன்..” என்று சொல்லி ‘மாமா.. ஒரு ஐஞ்சி நிமிசத்தில வந்திடறேன்..” என்று உற்சாகமாய் வேலையை முடித்து.. சுந்தரத்தோடு தன் வீட்டுக்கு வந்தாள்.
வீடு பூட்டி இருக்கவும்.. ‘அப்பா எப்பம்மா வருவார்..?” என்றார் சுந்தரம்.
‘ஒவ்வொரு நாளைக்கு சீக்கிரம் வந்திடுவார். வேலையிருந்தா லேட்டா வருவார். அம்மா நியாபகம் வந்துச்சின்னா கோவில்ல போய் உக்காந்திடுவார். நான் எப்பவும் வீட்டுக்கு வந்ததும் போன் பண்ணுவேன்…” என்று தன் அப்பாவிற்கு அழைத்தாள்.
‘வீட்டுக்கு வந்துட்டியாடா பார்வதி.. “ என்றார்.
‘ஆமாம்ப்பா.. நீங்க வர லேட்டாகுமா..?”என்றாள்.
‘வந்துட்டே இருக்கேன்.. இன்னும் ஐஞ்சி நிமிசத்தில வந்திடுவேன்…” என்றார்.
‘ம்ம்.. சீக்கிரம் வாங்கப்பா..” என்றவள்.. ‘அத்தை இருங்க.. நான் டீ போட்டுட்டு வரேன்..” என்று சமையலறை நோக்கி போகவும்.. மாலா வருவதற்கும் சரியாக இருந்தது.
சுந்தரம் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த பார்வதியின் அம்மா.. சிவகாமியின் படத்தைப்பார்த்து கண்கலங்கினார். அங்கு வந்த வீராச்சாமி.. ‘அவளுக்கு விதி முடிஞ்சிடுச்சி.. அதான் போய்ட்டா..” என்று சொல்லிஇ சுசிலாவைப் பார்த்து.. ‘நல்லாயிருக்கிங்களாம்மா..” என்றார்.
‘நல்லா இருக்கேண்ணா..” என்று சொல்லி ‘அடுத்தமுறை செக்கப்போகும்போது என்கிட்ட சொல்லத்தான சொன்னேன்.‚ ஏன் சொல்லலை..?” என்று பார்வதியை அதட்டினார்.
‘நான் யார்கிட்ட சொல்லியனுப்பட்டும்..? உங்க மகன் என்கிட்ட பேசியே ஒரு மாசத்துக்கும் மேல ஆய்டுச்சி..” என்று சொல்லி கண்கலங்கிஇ உள்ளே போய்விட்டாள்.
சுந்தரத்திற்கு வந்த கோபத்தில்.. ‘நீங்களெல்லாம் என்ன காதலிச்சிங்க..? அவன் ஏன் இவ்ளோ நாளா உன்னை வந்து பார்க்கல..? அவன் வந்து உன்னை பார்க்கலைன்னா.. நீ உன்னை பார்த்துக்காம விட்ருவியா..?” என்று ரூமிற்கு வெளியில் இருந்து கத்தினார்.
வெளியில் வந்த பார்வதி.. ‘அவர் மேல ஒரு தப்பும் இல்லமாமா நான்தான் அவர்கிட்ட கோபமா பேசிட்டேன்.. கல்யாணத்துக்கு அப்புறமும்.. நாம இப்படி யாருக்கும் தெரியாம பேசறது.. எனக்கு நம்மளை நாமே அசிங்கப்படுத்தறமாதிரி இருக்குன்னு சொன்னேன். அது அவர் மனசை ரொம்ப பாதிச்சிருச்சி.. அதனாலதான் என்னை அவர் வந்து பார்கலை..”
‘அறிவிருக்கா உனக்கு..? புருசன் பொண்டாட்டி பேசிக்கிறது.. எப்படி அசிங்கமாகும்..? உங்கப்பா சம்மதிக்காமதான் அவனுக்கு செய்னும் பிரேசிலெட்டும் கொடுத்திருக்காரா..? நாங்க சம்மதிக்காமத்தான் அதை அவன் போட்டுட்டு இருக்கானா..? இல்ல.. உனக்கு பிடிக்காமத்தான் நீ சுகுனா கல்யாணத்துல எல்லார்கிட்டையும் நல்லா பேசுனியா..?” என்று கேள்விமேல் கேள்வி கேட்டார்.
பேசிக்கொண்டிருக்கும்போதே.. ராஜா வந்தான். சுந்தரம் பேசும் வரை அமைதியாய் இருந்தவள்.. ராஜாவைப் பார்த்ததும்.. ‘அங்கையே நில்லு..‚ உள்ள வராத.. உனக்கு இன்னைக்குத்தான் இங்க வர வழி தெரிஞ்சதா..?” என்று பார்வதி கோபமாய் கேட்க அதனை சட்டையே செய்யாமல்.. ‘மாமா.. எனக்கு டீ வேணும்..” என்று உள்ளே வந்து உக்கார்ந்தான்.
‘அப்பா.. இவருக்கு பச்சத்தண்ணிகூட கொடுக்காதிங்க..” என்றாள்.
‘மாமா.. எனக்கு பச்சத்தண்ணி வேணாம். சூடா ஒரு டீதான் வேணும்..” என்றான்.
மாலா டீ கொண்டு வந்து கொடுக்க.. ராஜாவை விடுத்து.. தன் மாமனாரிடம் வந்தவள்.. ‘மாமா ராஜாக்கு மீனாவை நீங்களா பேசி முடிவு பண்ணுனிங்க..?” என்று பார்வதி கேட்டதுதான்.. டீ குடித்துக்கொண்டிருந்த ராஜாவிற்கு புரைஏறியது. ‘பார்த்துங்க கொழுந்தனாரே.. புரை.. மண்டை வரைக்கும் ஏறிடப்போகுது..” என்று நிறுத்தி நிதானமாக சொல்லி சிரித்தாள்.
இதுவரை பார்வதியை சட்டை செய்யாமல் இருந்தவன்.. ‘அண்ணி.. இவ்ளோநாளா நான் உங்களை வந்து பார்க்காதது தப்புதான் என்னை மன்னிச்சிடுங்க..” என்று எழுந்து நின்று கைகூப்பி தலைவணங்கி மன்னிப்பை வேண்டினான். சுந்தரமும் சுசிலாவும் ஆச்சரியமாய் பார்க்க.. வீராச்சாமி தன் மகளிடம் ‘பார்வதி.. ஒரு ஆம்பளை பிள்ளைக்கிட்ட இப்படி மரியாதை இல்லாம பேசலாமா..?” என்று கண்டித்தார்.
‘அச்சோ.. மாமா என்னை கண்டிக்கிறதுக்கும் திட்டுறதுக்கும் அவங்களுக்கு இல்லாத உரிமையா…? ” என்று சொல்லி ‘அண்ணி.. அப்பா சொந்தத்துலதான் பண்ணனும்னு ஆசைப்பட்டார்.. அவர் ஆசைப்படி நான் நம்ம மீனாவை செலக்ட் செய்தேன் அவ்ளோதான் வேற ஒன்..னு..ம் இல்ல..” என்று சொல்லி கண்களால் கெஞ்சினான்.
‘சம்மந்தி.. நாங்க வந்து நாளைக்கு பார்வதியை கூட்டிட்டுப்போகலாமா..?” என்றார் சுந்தரம்.
‘தாராளமா கூட்டிட்டுப்போங்க சம்மந்தி என் நிம்மதியே என் பொண்ணோட சந்தோசத்திலதான் இருக்கு..” என்று சந்தோசித்தார்.
‘அவர் ஏன் இப்ப உங்களோட வரலை..?” என்று தவிப்பாய் கேட்கும்போதே.. ரகுவிடமிருந்து அழைப்பு வந்தது. பார்வதி ஆன் செய்ததும்…
‘உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா நான் லைவ் டெலிகாஸ்ட் பண்ணியும் நாளைக்கு லீவ் போடாம கூலா.. வீட்டுக்கு போயிருப்ப..?” என்று கேட்டான்.
‘அதுக்குத்தான் என் மாமனாரோடவே ஓடோடி வந்துட்டிங்களா..?” என்று கோபமாய் கேட்டாள்.
‘வந்தா.. நைட் அங்கையே தங்கிக்குவேன்..‚ பரவாயில்லையா..?” என்று சிரித்தான்.
அணைவரும் இருந்ததால்.. ‘நான் கட் பண்றேன்..” என்று கட்செய்தாள்.
‘டிபனோட ஸ்வீட்டும் ரெடியாய்டுச்சி எடுத்து வைக்கட்டுமா பார்வதிம்மா..?” என்று மாலா கேட்க.. ‘சூப்பர் மாலாம்மா..” என சொல்லி ‘மாமா.. வாங்க சாப்பிடலாம்..”என்று பார்வதி சொல்ல அணைவரும் சாப்பிட்டு கிளம்பினார்கள்.