வீராச்சாமி அமைதியாக இருக்கவும் ‘நீங்க இப்ப பேசலைன்னா நான் இன்னும் கொஞ்சநேரத்தில அங்க இருப்பேன்..” என்றான்.
‘ஒரு கேஸ் விசயமா வெளில போயிருந்தேன்.. இனிமேதான் சாப்பிடனும்..” என்றார்.
‘அப்படின்னா.. ஒரு ஐஞ்சி நிமிசம் வெய்ட் பண்ணுங்க.. நான் வேலுச்சாமி ஹோட்டல்ல இருந்து சாப்பாடு கொண்டுவர சொல்லியிருக்கேன்..” என்றான்.
‘இல்ல.. வேணாம்.. நான் கொண்டு வந்திருக்கேன் அதையே சாப்டுக்கிறேன்..” என்றார்.
‘உங்க பொண்ணு சமைச்ச நளபாகத்தை இன்னைக்கு ஒரு நாள் சாப்பிடாம இருந்தா ஒன்னும் ஆகாது.. இன்னைக்கு நான் அனுப்புற சாப்பாட்டை சாப்பிடுங்க..” என்றான்.
‘என் பொண்ணு சமைக்கிறதே பெரிய விசயம் அவ சுடுதண்ணி வச்சா கூட அது எனக்கு நளபாகம்தான்..‚ என் சாப்பாடு விசயத்தை நான் பார்த்துக்கிறேன்..‚” எனும்போதே.. ‘சார்.. இதை உங்ககிட்ட ரகு ஐய்யா கொடுக்க சொன்னார்…” என்று கொடுத்தான் ராமு.
‘என்னாலயே இவன் இம்சை தாங்க முடியலை…‚ என்பொண்ணு பாவம் இவன்கிட்ட என்ன பாடுபடறாளோ..‚” என்று முனகினார். சிரித்துக்கொண்டே இணைப்பை துண்டித்தான்.
‘துரையப்பா வீட்;ல என்ன விசேசம்..?” என்றாள் பார்வதி.
விவேக் வீட்ல இருந்து நாளைக்கு சுகுனாவை உறுதி பண்றதுக்காக வராங்க.”
கண்களை அகல விரித்து ‘உண்மையாவா..?” என்றாள்.
ஆமாம் என்று அங்கு நடந்ததை பார்வதியிடம் சொல்லிமுடித்து ‘உங்கப்பா இப்படி நினைக்கிறார்ன்னு நீ என்கிட்ட சொல்லியிருக்கலாமில்ல..?” என்று கோபமில்லாமல் கேட்டான்.
‘எங்கப்பா அப்படி சொன்னது எனக்கே கஷ்டமா இருக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்..? அதனாலத்தான் சொல்லலை.. “ என்று தன் அப்பாவின் பேச்சுக்கு வருந்தினாள்.
‘நானும் அவரை அப்படியெல்லாம் நினைக்கல ஏன்னா.. கல்யாணத்துக்கு முன்னாடி எங்கம்மாகிட்ட வந்து அப்படி பேசினவர்.. இப்ப கல்யாணம் நடந்ததுக்கு அப்புறம் இதுவரை எங்ககிட்ட ஒரு கோபத்தையும் காட்டிக்கல.. ஆனா உங்கப்பாவை புரிஞ்சிக்கிறதுக்கு எங்கப்பாக்கு இன்னும் கொஞ்சம் டைம் ஆகும். நீங்க கொஞ்சம் பொறுமையா இருந்தா நான் எல்லாத்தையும் சமாளிச்சிடுவேன் உங்க தொல்லைதான் எனக்கு பெரும் தொல்லையா இருக்கு..” என்றாள்.
பார்வதியின் இந்த பேச்சால் சந்தோசமாய் அவளை பார்த்தான் ரகு. அவனின் பார்வையை உணர்ந்த பார்வதி பின் வாங்கி.. ‘துரையப்பா சாயங்காலம் உங்க மாமனாரைப் பார்க்க வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்காங்க.. நாம போலாம்..” என்றாள்.
ஏற்கனவே சந்தோசமான மனநிலையில் இருந்த ரகு.. தன் மாமாவை இப்பொழுது பார்வதி துரையப்பா என்று சொன்னது அவனை மேலும் சந்தோசப்படுத்த.. பார்வதியை பூப்போல அணைத்து தன் பார்வையால்… அவளிடம் தனக்கு வேண்டியதை உணர்த்தினான். பார்வதி ரகுவிற்கு மறுக்கவும் முடியாமல் சம்மதிக்கவும் முடியாமல் திண்டாட.. கல்யாணத்திற்கு முன்பு அடாவடியாகவே தனக்கு வேண்டியதை பார்வதியிடம் இருந்து பெற்றுக்கொள்பவன்.. இன்று பார்வதியின் உடல் நிலையையும் மனநிலையையும் அறிந்து ‘ப்ளீஸ்… டி..“ என்று முதன் முதலாய் அவளிடம் கெஞ்சினான். அவனின் கெஞ்சுதலை தாங்கமுடியாமல் தன் இமைகளை மூடி அவனுக்கு சம்மதம் தெரிவித்து அவனுள் அடங்கினாள்.
ரகுவை பிரிய விருப்பமே இல்லாமல் கிளம்பி வெளியே வந்தவள்.. ரகு வீட்டைப் பூட்டியதும்.. ‘இனிமே இங்க வரசொன்னிங்கன்னா.. அப்புறம் இங்கயிருந்து நான் வரவேமாட்டேன்..” என்று சிறு பிள்ளைப்போல் சினுங்கினாள்.
அமைதியாக பார்வதியைப் பார்த்து சிரித்து ‘உக்காரு..” என்றான்.
‘எல்லாரும் பார்ப்பாங்க.. எனக்கு ஒரு மாதிரியிருக்கும்.. “ என்று புலம்பினாள்.
‘உன்கிட்ட இருக்கிற பிரச்சணையே இதுதான்.. ஒரு புருசன் பொண்டாட்டி வண்டியில போறதுக்கு யார் என்ன சொல்வாங்க..?” என்று கடுப்பாக கேட்டான்.
அப்படியே வண்டியை யூடர்ன் போட்டு திருப்பினான். மெயின் ரோட்டில் இருந்து சிறிய குறுக்குப்பாதை வந்ததும்.. வண்டியை நிறுத்தியவன்.. ‘என்ன சொன்ன..?” என்றான்.
‘உடம்புக்கு நல்லதுன்னு… உங்க கோபத்தை தான் குறைச்சிக்க சொன்னேன்..‚” என்று குனிந்துகொண்டு சிரித்தாள்.
அவள் சிரிப்பில் மயங்கியவன்.. ‘என்னை வாடா போடான்னு சொல்றதுல உனக்கு என்ன அப்படி ஒரு சந்தோசம்..? எத்தனை நாள் ஆசை இது..? ம்ம்..?” என்று அவளின் முகத்தை நிமிர்த்தினான்.
கல்யாணத்துக்கு முன்னாடியெல்லாம் அப்படி இல்லை.. என் அசிஸ்டென்ட் பழனிலயிருந்து.. யார் உங்களை பார்த்தாலும் பயந்துக்கிறாங்களா..? அது பத்தாததுக்கு.. எங்கப்பாவோட ஒர்க் பண்ற எஸ்.பி. அங்கிள் கூட உங்களை ரொம்ப பெருமையா அன்னைக்கு சொன்னார்.” என்று சற்று இடைவெளி விட்டவள் ரகுவை மேலிருந்து கீழ் வரை பார்த்து.. ‘அப்பேர்பட்ட அப்பாடக்கரை இப்படி வாடா போடான்னு கூப்பிடறதால உண்மையாவே ஒரு தனிசுகம் கிடைக்குதுதான்..” என்று சிரித்தாள்.
‘இருக்கும் டி.. இருக்கும்…‚” என்று அவளை அணைக்க வந்தவனை தடுத்து.. ‘இப்ப இங்க வச்சி வேணாம். உங்க வீட்ல என்னை சேர்த்துக்காததால தான் இப்படி பண்றாங்கன்னு பார்க்கிறவங்க நினைப்பாங்க.. அப்புறம் இந்த அப்பாட்டக்கரோட இமேஜ் ஸ்பாயில் ஆய்டும்..” என்று சிரித்தபடியே மெயின்ரோட்டிற்கு வந்து நின்றாள்.
சிரித்துக்கொண்டே பார்வதி சொன்னாலும் இவள் எப்படியெல்லாம் யோசிக்கிறாள்..? என்று நினைத்துக்கொண்டான். சுகுனா கல்யாணம் முடியட்டும். இதுக்கு ஒரு வழி பண்ணிடலாம். என்று யோசித்துக்கொண்டே அவளை வீட்டில் வந்து விட்டான்.
அவள் இறங்கியதும்.. ‘சுகுனாக்காகவும் உங்கப்பாக்காகவும்தான் உன்னை இங்க விட்டு வச்சிருக்கேன். பிரிஞ்சிருந்தாலும் நீயும் நானும் இப்ப புருசன் பொண்டாட்டியா ஆய்ட்டோம். மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னே எப்பவும் யோசிக்காத..” என்றான்.
‘சரி.. நீங்க கிளம்புங்க..” என்றாள்.
‘எல்லாம் எங்களுக்கு தெரியும்..‚ போடி…” என்று அவளை துரத்தினான்.
திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றவள்.. குளித்து வெளியே வந்ததும்.. ரகு போய்விட்டானா என்றுதான் முதலில் பார்த்தாள். அச்சோ இன்னும் போகலையா..? ‘யார் இந்த அம்மா..? இப்ப என்ன பிரச்சணையை கொண்டு வந்திருக்கான்னு தெரியலையே..”என்று புலம்பிக் கொண்டிருக்கும்போதே.. பார்வதியின் அப்பா வந்தார்.
ரகுவை கண்டுகொள்ளாமல் உள்ளே போனவரை.. ‘மாமா.. ஒரு நிமிசம்..” என்றான்.
என்ன என்பதுபோல் பார்த்தார். ‘இவங்க.. பேரு மாலா. உங்க எஸ். பி. வீட்ல சமையல் செய்றவங்க. அங்க ஏழு மணிக்குதான் போவாங்களாம் அதனால இங்க தினமும் ஐஞ்சி மணிக்கு வந்து சமைச்சிட்டு போய்டுவாங்க. நைட்டுக்கு.. ஒரு ஏழு மணிக்கு வந்திடுவாங்க. இவங்களுக்கும் கொஞ்சம் பணக்கஷ்டம் போன மாதிரி இருக்கும்…” என்றான்.
‘நான் கேட்டேனா..?” என்று ரகுவிடம் கடிந்துவிட்டு ‘நைட் ஏழு மணிக்கு வந்தா.. அப்புறம் அங்க எப்போ போய் சமைப்ப..? இவர் உன்னை மிரட்டி கூட்டிட்டு வந்தாரா..?” என கேட்டார்.
‘இதுல இந்த அம்மாவை மிரட்டுறதுக்கு என்னங்க மாமா இருக்கு..? அங்கிள்கிட்ட நான் பேசிட்டேன் அவரும் ஒத்துக்கிட்டார். இரண்டு பேருக்கு சமைக்க எவ்ளோ நேரம் ஆகும்..? எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க..” என்றான்.
உங்க சண்டைக்கு கொஞ்சம் பிரேக் எடுத்திட்டு எனக்கு துரையப்பாவோட போன் நம்பரை மெசேஜ் பண்ணுங்க நான் அவருக்கு போன் பண்ணனும் அப்பா வந்ததும் பண்ணசொன்னார். என்று ஒரு குறுஞ்செய்தியை ரகுவிற்கு அனுப்பினாள். பார்வதிகிட்ட இருந்தா.. என்ற யோசனையோடு அதை பார்த்தவன்.. சிரித்துக்கொண்டு அவளுக்கு அவன் மாமாவின் நம்பரை அனுப்பிவிட்டான்.
‘டியூட்டில இருந்து இப்பதான் வந்திருக்கார் எங்க மாமனார் போய் .. ஒரு டீ வச்சி கொடுங்க…” என்று அந்த பெண்மணிக்கு பணித்தான் ரகு. மாலா உள்ளே சென்றதும்
‘மாமா.. தயவுசெய்து கோபப்படாதிங்க உங்க விருப்பம் இல்லாம இப்படி செய்றதுக்கு எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு.. என்ன பண்றது…? சூழ்நிலைதான் அப்படி என்னை செய்ய வைக்குது. பார்வதி ரொம்ப வீக்கா இருக்கா.. இதுல சாப்பாடும் சரியில்லன்னா.. ரொம்ப கஷ்டம். அதைவிட கஷ்டம்… அவ சமைச்ச சாப்பாட்டை நீங்க சாப்பிடறது. டெய்லியும் அவ சமைச்ச நளபாகத்தையே நீங்க சாப்பிடிங்கன்னு வைங்க.. அப்புறம் அவளை விட நீங்க வீக்காயிடுவிங்க.. என்னயிருந்தாலும் இதை ஒன்னை வச்சே நான் ஒத்துக்கிறேன்.. என்னைவிட உங்களுக்குத்தான் பார்வதிமேல பாசம் அதிகம்னு.. இவ்ளோ பொறுமையெல்லாம் எனக்கு இல்லப்பா…“ என்றான்.
லேசாய் சிரித்தபடி வீராச்சாமி உள்ளே போனார். ‘ரகு.. எங்கைய்யா இருக்க..? உன் மாமனார் வந்துட்டாராம்.. அவங்களுக்கு சொல்லனும்..” என்றார்.
‘நீங்க வாங்க மாமா.. நான் என் மாமனார் வீட்லதான் இருக்கேன்.” என்றான்.
‘சரிய்யா…” என்று கால் மணிநேரத்தில் வந்தார் தம்பிதுரை.
‘பார்வதி… “ என்று வெளியில் இருந்து கூப்பிட்டார் தம்பிதுரை.
பார்வதி.. தன் அப்பாவிடம்.. ‘அவரோட தாய்மாமாப்பா.. வீட்ல ஏதோ விசேசமாம். உங்களை கூப்பிட வந்திருக்கார். இதை சொல்லத்தான் இவர் என்னைப்பார்க்க என்னோட ஆ பீஸ்க்கு வந்தார். அப்பதான் என் சாப்பாட்டைப் பார்த்து திட்டினார்.” என்றார்.
வீராச்சாமி வெளியில் வந்து.. ‘உள்ள வாங்க..“ என்றார்.
தம்பிதுரை மட்டும் உள்ளே வரவும்.. ‘நீங்களும்தான்.. வாங்க..” என்றார் ரகுவிடம்.
‘எங்க துரைமாமாக்காகவெல்லாம் நான் உள்ளே வரலை. நான் இங்கையே நிக்கிறேன்..”
‘சரி.. பார்வதிக்காக வாங்க..” என்றார்.
‘ஏன்..? அவ சம்பாரிச்சா இந்த வீட்டை வாங்கினா…? நான் வரலை.. ‚” என்றான் ரகு.
‘சரி… எனக்காக வாங்க..” என்றார் கடுப்பாக.
சிரித்துக்கொண்டே ‘உங்களுக்காக மட்டும்தான் வரேன்..” என்று உள்ளே வந்தான்.
இவர்களுடன் ரகுவும் சேர்ந்து உள்ளே வரவும்.. பார்வதியின் முகத்தில் மலர்ந்த மலர்ச்சியை ரகுவொடு சேர்ந்து வீராச்சாமியும் கவனித்தார். ‘என் பொண்ணு சுகுனாவை நாளைக்கு உறுதி பண்ண வராங்க.. நீங்களும் பார்வதியும் அவசியம் வரனும்..” என்றார்.
‘ரொம்ப சந்தோசம்.. ஆனா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க.. உங்க வீட்டு விசேசம்னு இல்ல எந்த விசேசத்திலயும்.. கலந்துக்கிற மனநிலைமைல நான் இல்ல ஆனா பார்வதி வருவா..” என்றார்.
‘இப்படியே எவ்ளோ நாளைக்குங்க இருக்க முடியும்…? அவனவன்.. பொண்டாட்டி செத்து ஒரு மாசம் கூட ஆகாம வேற கல்யாணமே பண்ணிக்கிறானுங்க..” என்றார்.
‘மத்தவங்க மாதிரி என்னால வாழ முடியாதுங்க..” என்று குரல் கமற சொன்னார்.
பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாய் இருக்கும் வீராச்சாமி இப்படி கண்கலங்கவும் அதை தாங்கமுடியாமல்.. ‘சரி.. விடுங்க… நாளைக்கு பார்வதியை மட்டுமாவது அனுப்பி வைங்க..”
ரகுவை காட்டி.. ‘இவரைக் கொஞ்சம் அடக்கி வைங்க.. எனக்கு யார்கிட்டயும் சாப்பாடு வாங்கி சாப்பிட பிடிக்காது. இன்னைக்கு ஒருத்தன் ஸ்டேசன்க்கு சாப்பாடோட வந்து நிக்கிறான் சரி பணமாவது வாங்கிக்கோன்னு கொடுத்தேன். வாங்கினவன்.. நான் சாப்பிட்டு முடித்ததும்.. அந்த பணத்தை என் டேபிள் மேலயே வச்சிட்டு போய்ட்டான். ஒரே இரிட்டேட்டிங்கா இருக்கு..” என்று கடுப்பாக சொன்னார்.
அப்படியா…? என்று ரகுவை பார்த்தாள் பார்வதி.. இரு கண்களையும் சிமிட்டினான் ரகு.
‘இனிமே இப்படி பண்ணமாட்டான். அதுதான் சமைக்க ஆள் வந்திட்டாங்க இல்ல..”
‘பார்வதியை நாளைக்கு நீங்க யாராவது வந்து கூட்டிட்டுப்போங்க. அவளுக்கு இடம் தெரியாது.” என்று துரையைப் பார்த்தபடி சொன்னார்.
ரகு உடனே.. ‘நாளைக்கு விசேசம்ங்கிறதால மாமாக்கு நிறைய வேலையிருக்கும்.. என் பொண்டாட்டியை நானே வந்து கூட்டிட்டுப்போறேன்.. பார்வதியை காலைல ஒரு ஏழு மணிக்கெல்லாம் ரெடியா இருக்க சொல்லுங்க…” என்று சந்தோசமாய் சொன்னான்.