அத்தியாயம் 9
“இந்த பொம்பளைங்களோட ஷாப்பிங் போனாலே! நம்மளுக்கு செலவை இழுத்து வச்சி கழுத்த அறுத்துடுவாங்க. நா வரல. நீங்க போங்க. நா ஜாலியா டிவி பாத்துகிட்டு ஏசி ரூம்ல ஹாயா படுக்க போறேன்” சக்கரவர்த்தி வர்ஜனை பண்ண 
“அப்படி என்ன ஷாப்பிங் பண்ணி கிழிச்சீங்க? கல்யாணமாகி இத்துணை வருஷத்துல எனக்கொரு நல்ல புடவை வாங்கி தந்திருக்கிறீங்களா?” மேனகை கோபமாக 
“ஏன் ஆருவோட மஞ்சள் நீராட்டு விழாக்கு வாங்கித் தந்தேனே!” சக்கரவர்த்தியும் கோபமாக  
“மூன்னூறுவா புடவ அத எங்க வீட்டு வேலைக்காரி கூட கட்ட மாட்டா.. புடவ வாங்கிட்டு வந்தாராம் புடவ” சக்கரவர்த்தியின் குமட்டிலையே குத்த. 
“என்ன சத்தம்” என்றவாறே உள்ளே நுழைந்தான் சீனு 
சக்கரவர்த்தி தான் வரமாட்டேன் என்று சொன்னதையே சொல்ல 
“ஆமா ஓடியாடி  வேலை செஞ்சு களைச்சு போய் ரெஸ்ட் எடுக்கணும் னு வரமாட்டேன்னு சொல்லுற, நீ நேத்து டிரஸ் எடுத்த லட்சணத்தை தான் நா பார்த்தேனே! கடைல இருக்குற ஒரு பொம்மையையும் விடாம குறுகுறு னு பாக்குற” மேனகை முறைக்க சக்கரவர்த்தி தலை கவிழ 
“பையனுக்கு கல்யாணம் பண்ணுற வயசுல சைட் அடிக்கிற. உன்னயெல்லாம் அடிக்காம இருக்குற தாத்தாவ சொல்லணும். பொண்ணுக்கு கல்யாணம் நடக்க போகுது பொம்முக்கு அப்பாவா… பெரிய மனிசன்னு தான் உன்ன நாலு இடத்துக்கு கூட்டிட்டு போறோம். மத்தபடி நீ ஒரு ஆணியையும் புடுங்க வேணாம். எல்லாம் நாங்க பாத்துகிறோம். நீ பொத்திகிட்டு வந்து உக்காந்திருந்தா போதும்” இத்தனை வருடங்களாக மனதில் இருந்த வெறுப்பு, கோபம், ஆதங்கம், எரிச்சல் என்பவற்றை வார்த்தைகளாக்கி இருந்தான் சீனு. 
எல்லா குழந்தைகளுக்கும் அப்பா தான் முதல் ஹீரோ. ஆனா சீனுவின் அப்பா ஒரு ஸீரோ. அம்மாவின் பெயரில் சொத்து இருந்தாலும், எல்லாவற்றயும் மாமாவும், தாத்தாவும் பார்த்துக் கொள்வதால்  சின்ன வயதிலிருந்தே மாமாவை அண்ட வேண்டிய நிலை. மாமா குடும்பம் நல்லவர்களாகிப் போக குடும்பத்தில் குழப்பம் ஏற்படவில்லை. வார்த்தையிலாவது அப்பாவை “தண்டசோறு” னு மாமாவோ! ஆதியோ! சொல்லி இருந்தால்? 
வளர வளர ஒரு ஆண் குழந்தையாக பெரும் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டான் சீனு. குடும்பத்தாரின் அன்புதான் அவனைக் கட்டிப் போட்டு நல்ல நிலைமையில் வைத்திருக்க இல்லையானால் மனஉளைச்சலால் மனநோயாளியாகி இருந்திருப்பானோ என்னமோ! 
காலேஜ் சேர்ந்த பிறகு பலதரப்பட்ட பிரச்சினைகளோடு இருக்கும் சக நண்பர்களோடு பழகும் வாய்ப்பினால் “சிலர் இப்படித்தான்” “திருந்தாத கேசு” “நம்ம வாழ்க நம்ம கைல” “யார் என்ன சொன்னா என்ன” போன்ற வாக்கியங்களை உணர்வுபூர்வமாக கற்றுக் கொண்டான். அதன் பின்தான் அவனுக்குள் மறைந்திருந்த குறுப்புக்காரன் தலைத் தூக்கினான்.
நகைக் கடைக்கும் இரு குடும்பத்தாரும் வருகை தந்திருக்க, நேற்று போல் ஜவுளிகளை வாங்க ஒவ்வொருத்தருக்கும் பொறுப்பை கொடுக்காது வரளி நாயகி நகைகளை தானே தேர்வு செய்யலானார். 
தங்களுடைய குடும்ப வழக்கப்படி தாலி செய்திருந்தார். அதற்கான மாலையும் தங்கத்திலையே வாங்கலாம்  என்றும் எத்தனை பவுனில் வாங்க வேண்டும் என்றும் வரளி பாட்டி சொல்லிக் கொண்டிருக்க,  
“பாட்டி  ஒரு ரெண்டு அல்லது மூணு பவுன்ல இருந்தா பரவால்ல. இல்லனா.. கழுத்து சுளுக்கி கூன் விழுந்துடும்” கவி கிண்டலடிக்க 
“இல்லமா நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு” அவர் மறுக்க, 
“பாட்டி பத்து பவுன்ல தாலிய கட்டி கிட்டு ஹாஸ்பிடல் போனா.. என்ன மனநோயாளி மாதிரி பார்த்து யாரும் வைத்தியம் பார்க்க வர மாட்டாங்க” அவருக்கு எவ்வாறு புரியவைப்பதென்று கவி தடுமாற கவியின் அருகில் அமர்ந்த ஆதித்யா 
“பாட்டி தாலி கட்ட போறது நான் நா சொல்லுற படி மாலைய வாங்கலாம் இல்ல” பதினஞ்சு பவுன்ல ஒரு தங்க மாலையை கையில் வைத்துக் கொண்டு சொல்ல கவி ஏகத்துக்கும் அவனை முறைக்கலானாள். 
“என் ராசா.. உன் பொண்டாட்டிக்கு வாங்குறத நீயே வாங்கு” என்று அவனின் கன்னத்தை நெற்றி முறிக்க, கவியை பார்த்து கண்சிமிட்டியவன் கையில் இருந்த மாலையை அவளின் கழுத்தில் போட போவது போல் பாவனை செய்ய திகைத்தவாறே பின்னாடி நகர்ந்தாள் கவி. 
“என்ன செல்ல…ம் மாமா ஆ…சையா மாலை போட வந்தா இப்படி பின்னா…டி போற? தஞ்சாவூரு பொம்மை போல தலையா….ட்டி கிட்டே கழுத்த நீட்ட வேணாமா? ஒரு ரிகாசல் தான்” இழுத்து பக்கா நாட்டான் போல பேச “பே” என்று விழித்தாள் கவி. 
அவள் முக பாவனையில் சிரிப்பு எட்டிப் பார்க்க கையில் இருந்த மாலையை கடை ஊழியர் ஒருவனிடம் கொடுத்து அவர் கையில் மூன்று பவுனில் இருந்த மாலையை வாங்கிக் கொண்டவன் கவியின் கழுத்துக்கு மாலையிடுவதை போல் வைத்து “இந்த மாலை எப்படி இருக்கு?” அவனின் அக்மார்க் புன்னகையை வீச அந்த மாலையை பார்த்தே அசந்து விட்டாள் கவி. 
மூன்று மாலைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து இலை போன்ற வடிவம் அழகான, நேர்த்தியான கண்ணை உறுத்தாத, அதே சமயம் கண்ணை கவரும் வேலைப்பாடு. “நல்ல ரசனை” மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் வாய் திறந்து ஒரு வார்த்தையாவது சொல்லாது முகத்தை சுருக்கிக் கொள்ள ஆதியின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது. 
இந்த பக்கம் அமர்ந்திருந்த ஆருத்ரா கார்த்தியிடம் “இந்த வளையல் நல்லா இருக்கா? இந்த ரிங் நல்லா இருக்கா? இந்த மாலை” என்று ஒவ்வொன்றாக காட்ட அவன் கவனம் பூரா கண்ணாடியில் தெரிந்த உருவத்தின் மீதே இருந்தது. 
அவர்கள் கடைக்குள் நுழைந்ததிலிருந்து அவன் இவர்களை நோட்டம் வீட்டுக் கொண்டிருப்பதை கண்டவன் “நேத்து இவனை ஜவுளிக் கடையில் பார்த்தது போல் நியாபகம்”  அவனை நோட்டம் விட ஆருத்ரா சொல்வது அவன் காதில் விழவே இல்லை. 
அவன் முகத்தை தன் புறம் திரும்பியவள் “எங்க பாத்து கிட்டு இருக்கீங்க? இங்க பாருங்க ஏ.கே னு அழகா பொறிக்க பட்ட ரிங்க. ஏ.கே நா என்னனு தெரியுமா?” 
சற்றும் யோசிக்காது “கவி…. ஆதித்யா…” என்றவன் மீண்டும் கண்ணாடியில் தெரிபவனை பார்க்க ஆருத்ராவுக்கு அப்படி ஒரு கோபம் அவன் கையை நன்றாக கிள்ளி விட அவனோ கையை தடவிக் கொண்டு அவன் வேலையை தொடர்ந்தான். 
அது அவளை மேலும் சீண்ட அவன் காதோரம் குனிந்தவள் காதை கடித்து விட்டாள். “ஆ…” என்று கத்தியவாறே ஆருவின் புறம் திரும்பியவன் அவளை முறைக்க, 
“நா பேசுறதுல கவனம் சிதறினா உன் மூஞ்சி பஞ்சர் ஆகும்” அடிக் குரலில் மிரட்டியவள் அவன் கையில் அந்த ரிங்கை மாட்டியவாறே “ஆருத்ரா… கார்த்திக்” என்று சொல்ல 
“போலிஸையே மிரட்டுற ரொம்ப தான் தைரியம் உனக்கு” 
“போலீஸ்காரன் பொண்டாட்டி வேற எப்படி இருப்பாளாம்?” பதிலை உடனே கொடுத்தவள் புருவங்களை தூக்கி கண்சிமிட்டினாள்.
 அவள் செய்கையில் அவள் புறம் சாயும் மனதை இழுத்து நிறுத்தி அவள் கையில் இருந்த மோதிரத்தை பார்த்தவன் அவள் கையை பிடித்து மோதிரத்தை அவளுக்கு அணிவித்தான். 
“அட… அட.. இப்படி சிம்பலா.. நிச்சயதார்த்தத்தை முடிச்சிட்டீங்களே! நம்மளுக்கு செலவே வைக்கமாட்டிங்க போல. சீனு கை தட்டி கிண்ட்லைடிக்க, மற்றவர்கள் புன்னகை முகமாக பாத்திருந்தனர்.  
சிரித்து சமாளித்த கார்த்திக் கண்ணாடியில் தெரிந்தவனை தேட அவனைக் காணவில்லை. ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் என்றவன் ஆருத்ராவிடமிருந்து நழுவி அவனைத் தேட அவனோ கடையில் இருந்து மறைந்திருந்தான். ஒருவாறு நகைகளை வாங்கியவர்கள் கல்யாண பத்திரிகை தேர்வு செய்து அச்சிட கொடுப்பதர்காக சென்றனர். 
இரண்டு கல்யாணம் என்றாலும் ஒரே விதமாக தான் கல்யாண பத்திரிகை, எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாத ஒரு பத்திரிக்கையை தேர்வு செய்தவர்கள், எத்தனை பத்திரிகை என்று ஆடர் கொடுக்க, அரைமணித்தியாலம் கூட எடுத்துக் கொள்ளவில்லை.
அதன் பின் உணவை முடித்துக் கொண்டு வேறு எங்கயாவது போகலாமா? என்ற ஆருத்ராவின் கேள்விக்கு கார்த்திக் வேலை இருப்பதாக மறுக்க, கவியும் தலைவலி என்று வீட்டுக்கு கிளம்பு, வரளி நாயகி, மகள் மருமகனோடு ஊர் திரும்ப, ஆதித்யா சீனு மற்றும் வாசு சில வேலைகள் இருப்பதாகவும், காலையில் வருவதாகவும் இங்கயே தங்கி விட்டனர்.
பௌர்ணமிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்க வெண்ணிலாவும் வளர்ந்து தனது ஒளியை பூமிக்கு வீசிக் கொண்டிருந்தது. கவி மொட்டை மாடியில் அமர்ந்து வெண்ணிலாவை வெறித்தவாறு பலத்த யோசனையில் விழுந்திருந்தாள். 
மேகங்களும் அவளை தொல்லை செய்யாது வெண்ணிலாவை மறைக்காது அமைதியாக நகர்ந்து கொண்டிருக்க, வெண்ணிலாவையே பாத்திருந்தவளின் எண்ணமெல்லாம் ஆதித்யாவை சுத்தியே இருந்தது. 
இதுவரை எந்த ஒரு விஷயத்திலும் கவி கார்த்திக் இருவருக்கிடையில் சண்டையோ! வாக்கு வாதமோ வந்ததில்லை. கருத்து வேறுபாடானாலும் பேசி தீர்த்துக் கொள்வார்களே! தவிர முகத்தை தூக்கி வைத்துக் கொண்டதில்லை. இந்த கல்யாண பேச்சு ஆரம்பித்ததிலிருந்து கவி கார்த்திக்குடன் அதிக பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை. கார்த்திக் இப்பொழுது மாட்டிக் கொண்ட கேசின் காரணமாக இதை கவனிக்கும் மனநிலையிலும் இருக்காததால் கவியின் ஒதுக்கம் அவனுக்கு புரியவில்லை. 
இருவரும் மனம் விட்டு பேசாததால் கார்த்திக் ஆருத்ராவோடு அலைபேசியில் லயிக்கிறான் என்று கவி நினைக்க தான் தனிமை படுத்தப் பட்டதாக எண்ணியவாறே மொட்டை மாடிக்கு வந்தவள் வானை வெறித்து அமர்ந்திருக்கும் தோற்றம் கவியை தேடி வந்த கார்த்திக்கின் கண்களில் படவே! 
“அம்மு தூங்காம என்ன பண்ணி கிட்டு இருக்க?” கார்த்திக்கின் குரல் கேட்டு திடுமென திரும்பியவள் அவனை முறைத்து விட்டு மீண்டும் வெண்ணிலாவை நோக்கி பார்வையை செலுத்தினாள். 
அவள் அருகில் வந்தமர்ந்தவன் “அம்மு என்ன பிரச்சினை கொஞ்சம் நாளாவே நீ ஒரு மாதிரியாவே இருக்க” 
கார்த்தி என்னமோ சாதாரணமாகத் தான் கேட்டான். ஆனால் கவியோ எங்கே அவன் கேப்பான் என்று காத்திருந்தாள் போலும். மனதில் உள்ளதெல்லாம் கொட்டலானாள். 
“ஏன் கார்த்திக் சின்ன வயசிலிருந்தே நாம குட் பிரிஎண்ட்ஸ் தானே! இது வரைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நீ என் கிட்ட இருந்து மறைச்சதே இல்லையே! அப்பொறம் ஏன்?” அவனை முறைத்தவாறே நிறுத்தியவள் மீண்டும் தொடர்ந்தாள். 
“நாம ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் பிரியவே! கூடாதென்று ஒரே குடும்பத்துல அண்ணனையும், தங்கையையும் கல்யாணம் பண்ணிக்கலாம். அப்படியே நீயோ அல்லது நானோ காதலில் விழுந்தால் இந்த விசயத்த ட்ரோப் பண்ணிடலாம் னு நாங்க ரெண்டு பேரும் பேசித்தான் முடிவு பண்ணோம். அப்பொறம் ஏன் நீ அந்த தக்காளிய காதலிக்கிறத என் கிட்ட இருந்து மறச்ச?” 
கவி பேசுவதை பொறுமையாக கேட்டிருந்தவன் “நா ஆருவ லவ்  பண்ணுறேன்னு உனக்கு யார் சொன்னா?”
கவிக்கு ஆதித்யாவை பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக அவன் ஆருவை கல்யாணம் செய்ய சம்மதித்திருக்க, கவி சொல்வதை கவனித்தவனின் போலீஸ் மூளை விழித்துக் கொள்ள உடனே நுனியை பிடித்து விசயத்துக்கு வந்தான். 
“அம்மா தான் சொன்னாங்க. உனக்கு அந்த தக்காளிய ரொம்..ப பிடிச்சிருக்காம். நீ என் கிட்ட ஒரு வார்த்த சொல்லி இருந்தா நா எப்போவோ ஓகே சொல்லி இருப்பேனே” கண்களும் கலங்க தொண்டையடைக்க கவலையான குரலில் கவி. அவளை அணைத்துக் கொண்டவன் 
தங்களுடைய தேவிமா.. காரணம் இல்லாமல் அவ்வாறு சொல்லி இருக்க மாட்டாங்க என்ற அதீத நம்பிக்கை இருக்க அவர்களையும் மாட்டி விடாது. 
“லவ் எல்லாம் இல்ல அம்மு… ஆரு போட்டோ தேவிமா கைல பாத்தேன் பொண்ணு அழகா இருக்கா யாரு னு கேட்டேன். உனக்கு பாதித்திருக்கும் பொண்ணு னு சொன்னாங்க. எங்க கண்டிஷன் தெரிஞ்சி அவங்க கிண்டல் பண்ணுறதாக நினச்சு எனக்கு பிடிச்சிருக்கு னு சும்மா சொன்னேன்” 
“நிஜமாவா…”
“உன் மேல ப்ரோமிஸ்” 
“அப்போ இந்த கல்யாணத்த நிறுத்திடலாமா?” கவி அவனின் தோள் சாய்ந்தவாறே  கேக்க 
“ஏன் உனக்கு ஆதித்யாவை பிடிக்கலையா?” யோசனையாக அவள் முகம் பார்த்தான் கார்த்தி. 
“பிடிக்குதா? பிடிக்கலையா னு தெரியல ஆனா அவர் ஒரு அரசியல்வாதி அதான்…”
“என்ன சொல்ல வர” 
“அரசியல் ஒரு சாக்கடை அதுல இருக்கிறவன் மட்டும் நல்லவனா இருக்க முடியுமா? ஊருக்கு நல்லவன் வேஷம் போட்டு கிட்டு எவ்வளவு அட்டூழியம் பண்ணுறாங்க? லஞ்சம், ஊழல், கடத்தல், கொலை, கற்பழிப்பு இதைத்தானே மெய்னா.. செய்வாங்க” 
“இப்போ இருக்குற பிஸ்னஸ்லயே! மெடிசின் தான் பெஸ்ட். இல்லிகளா மனுஷங்களோட உடற் கூற வித்து காசு பாக்குற தொழில் நீயும் ஒரு டாக்டராக போற. அப்போ நீயும் அதைத்தான் செய்வ னு நா சொன்னா? ஒத்துப்பியா?” காட்டமாக ஒலித்தது ஆத்தியாவின் குரல் அங்கே அந்த நேரத்தில் அவனை எதிர்பார்க்காத கவி, கார்த்திக் திகைத்து எழுந்து நின்றனர். 
ஜவுளிக் கடையிலும் சரி, நகைக்க கடையிலும் சரி தன்னை மறந்து கவி ஆதித்யாவோடு ஒன்றினாலும் ஒரு ஒதுக்கம் இருக்கவே செய்ய அவளோடு மனம் விட்டு பேச வேண்டும் என்று முடிவு செய்தவன் கல்யாண பத்திரிகை அச்சிட கொடுத்து விட்டு வரும் போது பேசலாம் என்று முடிவு செய்ய கவியோ தலை வலிப்பதாக வீடு சென்றாள். 
நாளை காலையிலையே சென்னையில் உள்ள வேலைகளை முடித்துக் கொண்டு தஞ்சை செல்ல வேண்டியதால் இரவென்றும் பாராது கவியின் வீட்டுக்கு வந்தவனை வர வேற்ற வானதி கவியை அழைக்க முற்பட, தானே சென்று சந்திக்கிறேன் என்றவன் மாடிப்படிகளில் ஏறி அவளின் அறையை அடைய கதவு திறந்தே இருக்க கவி உள்ளே இல்லை. ஒரு வேலை கார்த்திக்கின் அறையில் இருப்பாள் என்று அவனின் அறைக்கு செல்ல அங்கே அவனையும் காணாது மொட்டை மாடிக்கு தாவியேறியவன் கண்டது ஒருவரையொருவர் அணைத்திருப்பதையே! 
“பொம்மு மட்டும் இத பாத்திருக்கணும் ரணகளமாகி இருக்கும்” புன்னகைத்தவாறே அவர்களை தொல்லை செய்யாது கைகட்டி அவர்களையே பாத்திருக்க கவி கல்யாணத்தை நிறுத்தலாமா என்று கேட்டது அதீத கோபத்தை வர வழைத்திருக்க கார்த்திக் கேட்ட கேள்வியில் கவியின் பதில் என்ன என்பதை அறிய அங்கேயே நின்று விட்டான். 
அவளின் அரசியல் பத்தியும், அரசியல்வாதிகளின் பத்தியும் கருத்தை சொல்ல கடுப்பானவன் அவளை சீண்டினான். 
“ஹலோ யாரை பார்த்து என்ன பேசுறீங்க? வார்த்தையை அளந்து பேசுங்க” கோபமாக ஆதியை கவி முறைக்க, 
அவளை கடந்து மொட்டை மாடியில் உள்ள ஊஞ்சலில் இருகால்களையும் மடக்கியமர்ந்து “என்ன பத்தி முழுசா தெரிஞ்சிதான் நீ பேசினியா?” கோபம் கொஞ்சம் குறையாமல் ஆதி. 
“மூணாம் கிளாஸ் கூட தாண்டாத, வேல வெட்டி இல்லாதவன் தான் அரசியலுக்கு வருவான். நல்லா ஊரை ஏமாத்தி காசு சம்பாதிப்பான்” எள்ளலாக ஒலித்தது கவியின் குரல். 
 “ஏய்… யாரப்பாத்து என்ன பேசுற?” கோபம் என்றால் அப்படி ஒரு கோபம் ஆதிக்கு “நா படிக்கலைனு உனக்கு யார் சொன்னா? கல்யாணத்துக்கு  சம்மதிக்க முதல் என்ன பத்தி விசாரிக்காமலையா? ஓகே சொன்ன?”  
கவி என்ன பதில் சொல்வாள் கார்த்திக் ஆருவை விரும்புவதாக நினைத்துத்தானே சரி என்றாள்.
“நான் உன் அம்மா பார்த்த மாப்புள தானே! அவங்க மேல நம்பிக்கை இல்லையா? இல்ல என்ன பத்தி விசாரிக்காமலையே என் கேரக்டர டிசைட் பண்ணிட்டியா? கல்யாணம் பேச, பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கி கூட கேட்டியா? இல்லையே! எல்லா ஏற்பாடும் பண்ண பிறகு கல்யாணத்த நிறுத்தலாமான்னு கேக்குற? அங்க ஒருத்தி மனசுல ஆசைய வளர்த்து வச்சிருக்கிறாளே! அவளுக்கு என்ன பதில் சொல்ல போற? வார்த்தைக்கு வார்த்த பாட்டி, பாட்டி னு செல்லம் கொஞ்சிருயே! அவங்கள நினைச்சி பாத்தியா? இல்ல அப்பா இறந்த அன்னைல இருந்து படுத்த படுக்கையா இருந்த என் அம்மா உன் கூட பேசியதிலிருந்து மருமகளை பார்க்கணும், பேரன், பேத்தியை கொஞ்சனும்  னு ஒரு எதிர்பார்ப்போடு காத்துகிட்டு இருக்காங்களே! அவங்களுக்கு என்ன சொல்ல போற? இப்படி எல்லார் மனசுளையும் ஆசைய வளர்த்துட்டு எப்படி உன்னால இப்படி பேச முடியுது. இப்போ சொல்லுறேன் கேட்டுக்க இந்த கல்யாணம் நடக்கும். நடந்தே ஆகணும். நீ தான் என் பொண்டாட்டி. புரிஞ்சுதா..” ஊஞ்சலில் இருந்து தாவி இறங்கியவன் கார்த்திக்கிடம் எதுவுமே பேசாது படிகளில் தாவி இறங்கலானான். 
ஆதி கோபமாக சொன்னாலும் அவன் சொன்ன விஷயங்களில் உண்மை சுட தலையில் கைவைத்து அமர்ந்தாள் கவிலயா.