ஸ்மிரிதியின் மனு – 4_1
“அம்மா, வீட்ல நடக்கற பேச்சை நான் உங்கிட்ட ஷேர் செய்துகிட்டேன்..அந்தக் கல்யாணத்துக்கு நான் கண்டிப்பா போகணும், போவேன்… மெஹக் டான்ஸ் இருக்கு.” என்றாள் ஸ்மிரிதி.
“மெஹக்கு சினிமால சம்பாதிக்கறது பத்தலையா?..அவதான் இந்தக் கல்யாணத்துக்கு வந்து டான்ஸ் ஆடணுமா? ..எல்லாரையும் அப்பவே விடச் சொன்னேன்..இன்னும் பிடிச்சு வைச்சுகிட்டிருக்க.” என்றார் பிரேமா.
“எத்தனை முறை சொல்லிட்டேன் பழைச பேசாதீங்கனு…கேட்க மாட்டீங்கறீங்க..போதும் விடுங்க.” என்று அலுத்துக் கொண்டாள் ஸ்மிரிதி.
“அவங்களால எல்லாம் கெட்டு போச்சு…படிப்பு, பழக்க வழக்கம்.” என்று விடுமுடியாமல் வார்த்தையை விட்டார் பிரேமா.
“உளறாதீங்க..மெஹக் பற்றி தெரிஞ்சும் இப்படி பேசறீங்க..என் பிரண்ட்ஸுனு இல்ல அப்ப எங்களோட படிச்ச எல்லாருக்கும் எல்லா பழக்கமும் இருந்திச்சு..” என்று கோபமாக ஆரம்பித்த ஸ்மிரிதி, வலுக்கட்டாயமாகப் பொறுமையை வரவழைத்து,
“மெஹக் டான்ஸூக்கு அ ரேன் ஜ் செய்ய முடியுமா தீதினு கீதிகாவோட அண்ணன் பொண்ணு ஸப்னா என்கிட்ட கேட்டா.. நானும் செய்யறேனு ஒத்துகிட்டேன்..மெஹக்க அவரோட இன்னொரு மகளாதான் அப்பா  நடத்தறாரு..அவளும் நம்ம குடும்பத்தில நடக்க போற கல்யாணத்துக்குதான் வரா.” பிரேமாவிற்கு விளக்கினாள். ஆனால்,
“உங்கப்பா போல எல்லாருக்கும் எல்லாம் அரேன் ஜ் செய்து உன்னோட அரசியல் வாழ்க்கைய ஆரம்பிக்க போறியா?” என்று ஆற்றாமையுடன் பிரேமா கேட்க,
“அம்மா, நீங்க இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க.” என்று பொறுமையைக் கைவிட்டு ஆத்திரமாகப் பதில்லளித்தாள் ஸ்மிரிதி. அதுவரை தாய், மகள் வாக்குவாதத்தை மௌனமாகப் பார்த்து கொண்டிருந்த சிவகாமியிடம்,
“ஆன் ட்டி, அம்மாவ நீங்க இப்பவே புவனா ஆன் ட்டி வீட்டுக்கு அழைச்சுகிட்டு போயிடலாம்..நான் இரண்டு ரூமையும் செக்-அவுட் செய்திட்டு..என் பிரண்டோட கார ஏர்போர்ட்ல வந்து கலெக்ட் செய்துக்க சொல்றேன்.” என்றாள்.
“அப்ப நீ என்னை உன்கூட இன்னிக்கு நைட் பெங்களூருக்கு அழைச்சுகிட்டு போகலையா?” என்று பிரேமா கேட்க,
“அது தப்பு..புவனா ஆன்ட்டிகிட்ட அவங்களோட தங்கறேனு சொன்னப் பிறகு எப்படி உங்களால அதை மாற்ற முடியும்..சாயந்திரம் உங்களை அவங்க வீட்ல கொண்டு விடறேனு சொல்லிட்டுதான் உங்கள இங்க கூட்டிகிட்டு வந்தேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“நான் மறுத்தா என்ன செய்வ?” என்று பிரேமா விதண்டாவாதமாக கேட்க,
“உங்களை ஆள் வைச்சு தூக்கிகிட்டு போயி அவங்க வீட்ல விட்டிடுவேன்.” என்று அசால்டாக பதில் சொன்னாள் ஸ்மிரிதி.
“அவ பாதி ரௌடி..அவகிட்ட எதுக்கு வம்பு வைச்சுக்கற..நமக்கு ஆளெல்லாம் வேணாம்..நாம இரண்டு பேரும் அமைதியா புவனாவோட வீட்டுக்குப் போயிடலாம்..என்ன சொல்ற?” என்று சமாதான முயற்சியில் இறங்கினார் சிவகாமி.
“சரி.” என்று சொல்லி சினேகிதியுடனும், ஸ்மிரிதியுடனும் சமரசம் செய்து கொண்டார் பிரேமா.
அந்த சிங்கிள் கட்டிலில் ஒரு புறம் அவர்கள் இருவரும் அமர்ந்திருக்க மறுபுறம் கால்களை நீட்டிப் படுத்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி..மனுக்கு போன் செய்து என் பேகை கொண்டு வரச் சொல்லிடு..நான் இங்க வந்தபோது என் பேகையும் என்கூடவே கொண்டிட்டு வந்திருக்கணும்.” என்று அவர் வருந்த,
“அப்படி செய்திருந்தா நான் உங்க இரண்டு பேரையும் புவனா ஆன் ட்டி வீட்ல விட்டிட்டு நேரா ஏர்போர்ட் போயிருப்பேன்..அங்கிளும், மனுவும் டிரெக்டா வந்திருக்கலாம்..இப்ப உங்க பைய எடுத்துகிட்டு அவன் வரணும் இல்ல நாம உங்க ஹோட்டலுக்குப் போயிட்டு அங்கேயிருந்து புவனா ஆன் ட்டி வீடுக்கு அப்பறமா ஏர்போர்ட்.” என்று வாயாலையே நீண்ட பயணம் செய்தாள்.
“என் பையனும்தான் பாவம்… காலைலேர்ந்து ஒரே அலைச்சல்.” என்று மகனுக்காக மனக் கஷ்டப்பட்டார் சிவகாமி.
“உங்க வெட்டி வக்கீல் அலைய வேணாம்..நானே உங்க இரண்டு பேருரையும் கொஞ்ச நேரம் கழிச்சு உங்க ஹோட்டலுக்கு அழைச்சுகிட்டு போறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“மனுவ நீ எப்படி வெட்டினு சொல்லுவ?” என்று ஸ்மிரிதிக்கும் சிவகாமிக்கும் சண்டை ஆரம்பமானது.
“சரி..அவன எதுவும் சொல்லல..அவனோட வேலையில்லாத அம்மாவ கேட்கறேன்..பிஸியான வக்கீல் மகனோட  நீங்க போன வேலை என்ன ஆச்சு?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“என்ன வேலை?” என்று புரியாமல் கேட்டார் சிவகாமி.
“வாய்தா வாங்கிட்டான் போல.” என்று அவளே முடிவுக்கு வந்தாள் ஸ்மிரிதி.
அப்போது ஸ்மிரிதியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு,”சும்மா இரு ஸ்மிரிதி.” என்றார் சினேகிதியுடனான சமரசத்தைச் சிதைக்க விரும்பாத பிரேமா.
ஆனால் ஸ்மிரிதி சும்மா இருக்க விரும்பவில்லை.  மனுவைப் பற்றி தெரிந்து கொள்ள அவள் மனம் முரண்டு செய்தது.
“எங்கம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க..மனு கல்யாணத்துக்கு நீங்கப் பத்திரிக்கை வைக்கலைனு.” என்றது அவளின் அடங்காத வாய்.
“மனுவுக்கு கல்யாணாமா? “ என்று ஆச்சர்யமானார் சிவகாமி.
“அம்மா, கேட்டுகிட்டீங்களா? ஆன் ட்டி உங்கள கழட்டி விட்டுடல.” என்றாள் ஸ்மிரிதி.
“என்ன டி சொல்றா ஸ்மிரிதி?” என்று பிரேமாவிடம் கேட்டார் சிவகாமி.
“காலைல கல்யாண மண்டபத்திலிருந்து எங்க அலைய போனீங்க?” என்று பிரேமாவை வாட்டிக் கொண்டிருந்தக் கேள்வியைக் கேட்டாள் ஸ்மிரிதி.
“இது என்னோட சொந்த ஊர்..ஆயிரம் வேலை எங்களுக்கு.” என்று மேம்போக்காகப் பதில்லளித்தார் சிவகாமி.
“ஆயிரம் வேணம் ஒண்ணு மட்டும் சொல்லுங்க..மனு விஷயமா போனீங்களா?” என்று மனதினை அடக்கமுடியாமல் அதன் ஓட்டத்திற்கு அடிபணிந்தாள் ஸ்மிரிதி.
உடனே உஷாரான சிவகாமி,”என் பையனுக்காகதான் போனேன்..அதைப் பற்றி நீயே அந்த வெட்டி வக்கீல்கிட்ட கேட்டுக்க வாயாடி.” என்றார்.
“எனக்கு எதுவும் தெரிய வேணாம்..உங்க சினேகிதிதான் கொஞ்சம் செண்ட்டியாயிட்டாங்க..அவங்கள விட்டிட்டு பையன் கல்யாணத்த முடிச்சீட்டீங்கனு.” என்று சிவகாமி அவள் மனதைப் படித்துவிட்டாரோ என்ற சந்தேகத்தில் அடக்கி வாசித்தாள் ஸ்மிரிதி.
“என் பையன் கல்யாணத்த உனக்கு சொல்லாம முடிப்பேனா? நீ என்னைப் பற்றி எப்படி அப்படி நினைக்கலாம்.” என்று பிரேமாவிடம் அங்கலாய்த்தார்  சிவகாமி.
“கல்யாண வீட்ல என்னைச் சேர்க்கறபடியாவா நான் இருக்கேன்? அதனாலதான் நீயும் என்னை ஒதுக்கிட்டியோனு நினைச்சேன்.” என்றார் பிரேமா.
“ஏன் டீ..புவனா அவ பையன் கல்யாணத்துக்கு உன்னை கூப்பிடறச்சே..மனு கல்யாணத்துக்கு நான் உன்னைக் கூப்பிடாம இருப்பேனா?” என்று ஆதங்கத்துடன் கேட்டார் சிவகாமி.
“புவனாவும், நானும் ஒத்தையா ஒத்து போயிட்டோம்..நீ அப்படி இல்ல.” என்றார் பிரேமா.
“நான் எப்படினு நீ எனக்கு சொல்ல வேணாம்..நீ எப்படி என்னைப் பற்றி அப்படி நினைக்கலாம்?” என்று கோபமானார் சிவகாமி.
சிவகாமி பேசியதைக் காதில் போட்டு கொள்ளாமல்,“நீ என்னை மனு கல்யாணத்துக்கு கூப்பிடு டீ.” என்று கெஞ்சலாகக் கேட்டார் பிரேமா.
சிவகாமி பதில் சொல்லுமுன்,
“ஆன் ட்டி..எப்படி, இப்படி, அப்படி எல்லாத்தையும் பற்றி அப்பறம் பேசிக்கலாம்..முதல்ல எங்கம்மாகிட்டேயிருந்து அவங்க கொடுத்த மனுவ அப்ஜெக்ட் செய்யாம அக்செப்ட் செய்துகிட்டு மனு கல்யாணத்துக்கு உங்க சினேகிதி பிரேமாவிற்கும், அவங்க பொண்ணுக்கும் கண்டிப்பா இன்விடெஷன் அனுப்புங்க..மறந்தீங்க..ரிடையர்ட் கலெக்டர் கிட்ட மேல் முறையீடு செய்வேன்..அதுவும் சரி வரலைனா வெட்டி வக்கீலுக்கு வேலைக்கு கொடுத்து எங்க தரப்புல ஆஜராகச் செய்வேன்.” என்று சினேகிதிகளிடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தை முடித்து வைத்தாள் ஸ்மிரிதி.
“ஐயோ..உன் பொண்ணாடி இவ? யாரு தலைல எழுதியிருக்கோ இவகிட்ட வாய் கொடுத்து பாடுபடணுமுனு.” என்றார் சிவகாமி.
தலையெழுத்து கண்ணெதிரே தெரியும் போது அதன் எதிரே நிற்கும் மனிதர்களின் கண்களுக்குத்  தெரியாமல் போவதறக்கு காராணம் பார்வைக் கோளாறா இல்லை மூளைக் கோளாறா என்ற பட்டிமன்றத்தில் பங்கேற்க சிவகாமி, பிரேமா,ஸ்மிரிதி மூவரும் அன்று தேர்ச்சிப் பெற்றனர்.  
சினேகிதிகள் சம்மந்தி ஆகப் போகிறார்கள் என்று இருவருக்கும் துளிக்கூட சந்தேகம் வரவில்லை.  கட்டிலில் படுத்தபடி கால்களை ஆட்டிக் கொண்டிருந்த ஸ்மிரிதியும் சந்தேகம் கொள்ளவில்லை அவள் விவாதித்து கொணடிருந்த சிவகாமியின் மகன் அந்த வெட்டி வக்கீல்தான் அவளை விவாகம் செய்து கொள்ள போகிறானென்று.
அதற்கு மேல் ஹோட்டலில் தமாதிக்க விரும்பாமல்,
“ஒகே பிரண்ட்ஸ்..கிளம்பலாம்.” என்று முடிவெடுத்தாள் ஸ்மிரிதி.
அவள் சொன்னதைக் கேட்டு,“நாங்க இரண்டு பேர் மட்டும்தான் பிரண்ட்ஸ்..நீ எப்ப எங்க பிரண்ட் ஆன?” என்று கேட்டார் சிவகாமி.
“பிறந்ததுலேர்ந்து எங்கம்மாக்கு நாந்தான் பிரண்ட..நீங்க அவங்களோட பெஸ்ட் பிரண்ட்..அதனால என் பிரண்டாயிட்டீங்க..வேணாமுனா சொல்லுங்க உங்க இரண்டு பசங்களையும் என் பிரண்ட்ஸ் ஆக்கிடறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
அவரின் இரு மகன்களை அவளின் பிரண்ட் ஆக்கிவிடுவாள் என்று சொன்னவுடன்,“ஐயோ..என் பசங்க இரண்டு பேரும் தங்கம்.” என்று அவர் பதில் சொன்னதை ஸ்மிரிதி தவறாக எடுத்து கொள்ளவில்லை அதேசமயம் அந்தப் பதிலை தள்ளி வைக்கவும் முடியவில்லை. ஆனால் அந்தப் பேச்சை தொடராமல்,
“நீங்க பேசறீங்களா உங்க வக்கீல்கிட்ட இல்ல நாம கிளம்பலாமா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“என் பையனுக்கு போன் போட்டு நானே பேசிக்கறேன்.” என்ற சிவகாமி அவர் போனில் மனுவை அழைத்து ஹோட்டலுக்கு வரும்படி கூறினார்.
அப்போது ஸ்மிரிதியின் மனதில் அவர் சற்று முன் சொன்ன வார்த்தைகள் ஊழன்று கொண்டிருக்க,
“உங்க பசங்க தங்கமுங்கறதுனால தான் வெளில விடாம வீட்டுக்குள்ளப் பதுக்கி வைச்சுகிறீங்களா? இப்படி இருந்தா மனுவுக்கு கல்யாணம் ஆன மாதிரிதான்..மாறனுக்கு இன்னும் சான்ஸ் இருக்கு..மனுக்கு கஷ்டம்தான்..கிழவனாயிட்டான்.” என்றாள்.
அவள் பேச்சில் வெகுண்ட சிவகாமி,“என் பையன கிழவனு சொல்றியா? இரு..இப்ப வந்திடுவான்.. அவன்கிட்டயே சொல்றேன்.” என்றார்.
“சொல்லுங்க..என் முன்னாடி வக்கீல் அவன் வாயத் திறந்து வாதாடிடுவானா?” என்று எதிர்கட்சி வக்கீல் போல் களத்தில் இறங்கினாள் ஸ்மிரிதி.
“உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்ல..என் பையன வைச்சிகிட்டு இந்தப் பஞ்சாயத்தக் கூட்டறேன்,” என்றார் சிவகாமி.
“கலெக்டர் குடும்பமாட்டமாப் பேசறீங்க? கட்ட பஞ்சாயத்து குடும்பமாட்டம் பேசறீங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“நீதான் இப்ப லோக்கலாட்டம் பேசற..தில்லிகாரியாட்டமாப் பேசற?” என்று அங்கலாய்த்தார் சிவகாமி.  
“என் அப்பா யாருனு மறந்துடாதீங்க..இந்த ஊர் கட்ட பஞ்சாயத்திலேர்ந்து அந்த ஊர் காப் (khaap) பஞ்சாயத்து வரைக்கும் அவர் புகழ் பரவிக்கிடக்கு..ஜாக்கிரதை.”
“என்னை மிரட்டறியா நீ?” 
“இல்லை கலெக்டர் அம்மா..நான் எங்கேயிருந்து வரேனு கோடிட்டு காட்டினேன்..எங்கப்பா பெயரு சொன்னவுடன பயந்துட்டீங்க.” என்றாள் ஸ்மிரிதி.
அதுவரை அவர் சினேகிதிக்கும், மகளுக்கும் இடையே நடந்த பேச்சில் கலந்து கொள்ளாமல் இருந்த பிரேமா, ஸ்மிரிதி கடைசியில் பேசியதைக் கேட்டு,
“ஸ்மிரிதி..போதும் இந்தப் பேச்சு..உங்கப்பாகிட்ட கத்துக்க வேற எதுவுமேயில்ல அதான் இந்த அடாவடிப் பேச்சுக் கத்துகிட்டிருக்க.” என்று கோபப்பட்டார்.
“அவர்கிட்ட நான் எதுக்கு கத்துக்கணும்? அன்பு ,அராஜகம், அடாவடி, அடிதடி, ஆளுமை…எல்லாம் சேர்ந்தவதான் இந்த ஸ்மிரிதி.” என்றாள் ஸ்மிரிதி கார்மேகம்.