அடுத்த பத்தாவது நிமிடத்தில் வீராச்சாமி மருத்துவமணைக்குள் வந்தார். ரகுராமிடம் எதுவும் கேட்காமல் டாக்டரிடம் .. ‘என் பொண்ணுக்கு என்ன ஆச்சு..?” என்றார்.
‘எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தாங்க..? ரொம்ப வீக்கா இருக்காங்க. அப்பாவும் புருசனும் இப்ப மட்டும் இப்படி பதறுறிங்க. ஆனா.. ஒரு கர்பினிபொண்ணு சாப்ட்டாங்களா..? இல்லையான்னு கூட கவனிக்காம இருந்திருக்கிங்க…‚” என்று டாக்டர் கோபப்பட்டார்.
‘டாக்டர் நான் நாளைக்கு வந்து உங்களை பார்க்கலாம்னுதான் இருந்தோம். அதுக்குள்ள இப்படி ஆய்டுச்சி..” என்று மிகவும் வருந்தினார் வீராச்சாமி.
‘இப்ப மட்டும் கரெக்ட் டைம்க்கு நீங்க கூட்டிட்டு வராம இருந்திருந்திங்கன்னா.. பி.பி. ரொம்ப லோவாயிருக்கும். அப்புறம்…” என்று ஏதோ சொல்ல வந்ததை நிறுத்தியவர்.. ‘கொஞ்சம் கவனமா பார்த்துக்கங்க சார்..” என்றார்.
‘என் வாழ்க்கையே இவதான்..” என்று ஒரே நேரத்தில் இருவரும் கோரசாக சொல்ல.. டாக்டர் சிரித்து.. ‘உங்க வாழ்க்கையை ரெண்டு பேரும் இனிமேல் கொஞ்சம் கவனமா.. பத்திரமா பார்த்துக்குங்க..” என்றார்.
வீராச்சாமி சங்கடமாய் உணர்ந்தார். ரகுராம் சந்தோசமாய் உணர்ந்தான். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து பார்வதி கண்விழித்தாள். முதலில் தன் அப்பாவைத்தான் பார்த்தாள்.
‘பார்வதி… “ என்று அவளின் தலையை நீவியபடி அவள் நெற்றியில் முத்தமிட்டார் வீராச்சாமி. ‘என்னை மட்டும் கரெக்ட்டா சாப்பிட வச்சிட்டு இப்படி உன் உடம்பை பார்த்துக்காம விட்டுருக்கியேம்மா..? உனக்கு எதாவது ஒன்னுன்னா நான் என்ன பண்ணுவேன்..? உங்கம்மா இருந்திருந்தா இப்படி நடக்க விட்டுருக்கமாட்டா.. பேசாம நான் போய் உங்கம்மா இருந்திருக்கனும்..” என்று கண்கலங்கினார்.
‘அப்பா.. “ என்று கண்ணீர் விட்டாள்.
‘இது ஹாஸ்ப்பிட்டலா..? இல்ல உங்க வீடா..?” என்று கேட்டபடி உள்ளே வந்தார் டாக்டர்.
‘பார்வதி.. தலைசுத்தல் இப்ப பரவாயில்லையா…?” என்றார் டாக்டர்.
‘ம்ம்.. பரவாயில்லங்க டாக்டர்.” என்றாள்.
‘ரொம்ப வீக்கா இருக்கிங்க. ஒரு ரெண்டு நாளைக்காவது கம்ளீட் ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. இப்ப நீங்க கிளம்பலாம்.” என்று டாக்டர் விடைபெற்றார்.
‘பார்வதி ஒரு நிமிசம் இங்க உக்காரும்மா.. நான் பில் கட்டிட்டு வந்திடறேன்.” என்று வீராச்சாமி ரிசப்சன் நோக்கி போனார். ரகுவுடன் தனித்து இருக்க வேண்டி வருமே என்று நினைத்த பார்வதி எழ முற்படவும்.. ‘பார்வதி… உக்காரு..‚” என்று ஆர்டர் போல் சொன்னான். உனக்கெல்லாம் நான் பயப்படுவேனா… என்பது போல் பார்த்து வைத்தாள்.
ரிசப்பனில் இருந்து வந்த வீராச்சாமி.. எதுவும் சொல்லாமல் ரகுராமிடம் பணத்தை நீட்டினார். அவரிடம் தன் கோபத்தை காட்டமுடியாமல்.. பார்வதியிடம் ‘வா.. போலாம். நான் உங்க ரெண்டு பேரையும் உங்க வீட்ல டிராப் பண்ணிடறேன்.” என்றான்.
‘முதல்ல ஹாஸ்பிட்டலுக்கு கட்டின பணத்தை வாங்கிக்கோங்க.. நாங்க ஒரு ஆட்டோ பிடிச்சி போய்க்கிறோம்..” என்றாள் பார்வதி.
‘ஏன் நான் பணம் கட்டினா ஆகாதா..? பெரிய ராஜாராணி நயன்தாரா… வந்திட்டா பணம் கொடுக்கிறதுக்கு..” என்று வீராச்சாமி முன்னிலையிலேயே கடுப்பாய் சொன்னான்.
அவனிடம் பேச விரும்பாமல் ‘அப்பா .. போய் ஒரு ஆட்டோ பேசிட்டு வாங்க..” என்றாள். வீராச்சாமியும் ஆட்டோவிற்காக மருத்துவமணைக்கு வெளியில் சென்றார்.
‘ஒழுங்கா வந்து கார்ல உக்காரு இல்லன்னா அதுக்கும் எதாவது நான் பண்ணவேண்டியிருக்கும்.” என்று எச்சரித்தான்.
‘மறக்க முயற்ச்சிதான பண்ணிட்டு இருக்க.. நீ என்னை முழுசா மறந்த உடனே யார்கிட்டையாவது சொல்லியனுப்பு.. இப்ப வந்து கார்ல ஏறு..” என்றான்.
இங்கயிருந்து கிளம்பிடலாம்.. என நினைத்து.. ஒரு அடிதான் எடுத்து வைத்தாள். சட்டென பார்வதியை தூக்கினான் ரகுராம். ‘ஒழுங்கா என்னை விட்ருங்க…” என்று பல்லை கடித்துக்கொண்டு கூறினாள். நான்கே எட்டில் வீராச்சாமியிம் வந்து.. ‘இன்னும் மயக்கம் இருக்கும்போல கொஞ்சம் விட்டிருந்தா கீழ விழுந்திருப்பா மாமா.. அதனாலதான் தூக்கிட்டு வரேன்…” என்று சொல்லியவன் தன் காருக்கு பக்கத்தில் வந்ததும் பார்வதியை இறக்கி விட்டு கார்கதவை திறந்து விட்டான். ‘சீக்கிரம் வாங்க மாமா.. பார்வதிக்கு ரொம்ப டையர்டா இருக்காம். அவளுக்கு எதாவது சாப்பிட கொடுக்க வேணாமா…?” என்றான்.
‘நாங்க போய்க்கிறோம்..” என்றார் வீராச்சாமி.
‘மாமா.. உங்க மேல எனக்கு நிறை மதிப்பும் மரியாதையும் இருக்கு. உண்மையாவே உங்களை மாதிரி ஒரு நாணயமான மனிதரை மதிக்காதவன்.. மனிதனாவே இருக்க முடியாது. உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன்.. என்னை மனிதனா இருக்க விடுங்க..” என்றான்.
‘எங்க நிலைமையையும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க. யாரோட சம்மதமும் இல்லாம இன்னைக்கு காலைலதான் என் பொண்ணு கழுத்தில நீங்க தாலி கட்டியிருக்கங்க.. இப்ப உங்ககூட நாங்க கார்ல வந்தோம்னா.. எல்லாம் எங்க சம்மதத்தோடதான் நடந்திருக்குன்னு எங்களை கேவலமா பேசமாட்டாங்களா?” என்றார்.
‘என் பொண்டாட்டியையும் மாமனாரையும் நான் கார்ல கூட்டிட்டுப் போறதுக்கு யார்.. என்ன கேவலமா நினைக்கப்போறாங்க..? என்னைப் பத்தியும் நீங்க யோசிச்சிப் பாருங்க.. எனக்கு பார்வதியை பிரிஞ்சி இருக்கிறதே ரொம்ப கஷ்ட்டமா இருக்கு. இதுல இவ கர்ப்பமா இருக்கும்போது சாதாரணமா ஒரு புருசன் செய்ய வேண்டிய கடமையை கூட செய்ய வேணாம்னு சொல்றிங்களே..‚ எனக்கு இது ரொம்ப கொடுமையா இருக்கு மாமா. உங்க அனுமதி இல்லாம நான் உங்க வீட்டுக்குள்ள வேண்ணா வராம இருந்துக்கிறேன். ஆனா அதுக்காக பார்வதிக்கே பிடிக்கலைன்னாலும்.. அவளை பார்க்காமையோ இல்ல கவனிச்சிக்காமையோ என்னால இருக்கமுடியாது.” என்று ரகுவும் திடமாகவே சொன்னான்.
எப்படியும் ரகுராம் பார்வதியை காரில்தான் அழைத்துப்போவான் என்றுணர்ந்த வீராச்சாமி ‘பார்வதி.. எனக்கு ஸ்டேசன்ல ஒரு சின்ன வேலையிருக்கு. நீ வீட்டுக்கு போ… நான் ஒரு அரைமணிநேரத்தில வந்திடறேன்.” என சொல்லி கிளம்பிவிட்டார் .
‘அப்பா..” என்ற பார்வதியின் அழைப்பிற்கு திரும்பி கூட பார்க்காமல் சென்றுவிட்டார்.
ரகுராம் வெற்றிச் சிரிப்புடன் பார்வதியைப் பார்த்தான். பார்வதியும் அவளின் அப்பாவும் அமர்வதற்க்காக முன்பு காரின் பின் கதவை திறந்துவிட்டவன் இப்பொழுது அதை சாத்திவிட்டு முன் கதவை திறந்துவிட்டான். பார்வதி மீண்டும் பின் கதவை திறக்கப்போக.. ‘ம்ஹ_ம்.. என்று சிரித்துக்கொண்டே அவளின் கையை அழுத்தமாய் பிடித்து இழுத்து.. முன் பக்கம் உக்காரவைத்து ‘இந்த ஜூசை குடி.” என்று தயாராய் வாங்கிவைத்திருந்ததை நீட்ட…
அவனை முறைத்துப் பார்த்தவள் ‘என்னை என்ன உங்க அடிமைன்னு நினைச்சிட்டு இருக்கிங்களா..?” என்றாள் ஆத்திரத்தோடு.
ரகுவின் பேச்சில் பார்வதிக்கு அவன்மீதிருக்கும் கோபம் குறைந்தது. அதை மறைக்க.. எதுவும் சொல்லாமல் இறங்குவதற்காக கார் கதவை திறக்க.. அது திறப்பேனா என்றது. ‘உங்க அப்பாவே என் பேச்சை கேட்க்கும் போது என் கார்.. என் பேச்சை கேக்காம இருக்குமா..? சென்டர் லாக் போட்டிருக்கேன்.. அறிவாளிப் பொண்டாட்டி.. “ என்றான்.
அவ்வளவு கோபமாக ஜூசை எடுத்து கடகடவென்று ஒரே மூச்சில் குடித்தாள்.
‘அடேங்கப்பா.. ஒரு புல்லை ஒரே மூச்சில அடிக்கறவனுக்கு கூட இவ்வளவு வேகம் வராது..” என்று பயந்தவன் போல் சொல்லி.. காரை அவள் வீடு நோக்கி செலுத்தினான். அவள் இறங்கியதும் ரகுராமும் இறங்க.. அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தாள்.
‘நான் என் மாமனாருக்கு வாக்கு கொடுத்திருக்கேன். அதனால வீட்டுக்குள்ள வரமாட்டேன். பயப்படாம போ..” என்று சிரித்த முகமாக அவளுக்கு தைரியம் கொடுத்தான்.
பார்வதி வீட்டினுள் போய் அரைமணிநேரமாகியும் ரகுராம் காருக்குள்ளேயும் உக்காராமல் அவன் வீட்டிற்கும் கிளம்பாமல் வெளியிலேயே நின்றிருந்தான். பார்வதி வீட்டின் சுற்றியுள்ள பூஞ்செடிகளெல்லாம் பராமரிப்பின்றி இருந்தை பார்த்திருந்தான். அவளின் அம்மா உயிரோடு இருக்கும் வரை தோட்டத்தில் உள்ள பூக்களின் நறுமணம் அவ்வளவு சுகந்தமாக இருக்கும். பார்வதி வீட்டை சுற்றியே அவனின் கண்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.. இப்பொழுது வீராச்சாமி தன் புல்லட்டில் வந்து இறங்கினார். தன் அப்பாவின் வண்டி சத்தம் கேட்டு பார்வதி வெளியே வருவதற்கும் ரகுராம் காருக்குள் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்வதற்கும் சரியாக இருந்தது.