வலது காலின் குட்டி விரலில் மட்டுமிருந்த சிகப்பு நிற நகப் பூச்சில் கண் நிலைக்க.. இரத்தமோ என்று தொட்டுப் பார்த்தான். மெல்லத் தடவ அது வரவில்லை. கை நடுங்கியது. காரணமே இல்லாமல் அந்த பாதத்தில் முகம் புதைத்து அழத் தோன்றியது.
கை நடுங்க மென்மையாய் தடவி விட்டான்.. விக்கிக்கொண்டு வந்தது. எத்தனை முறை அந்த விரலில் இதழ் பதித்திருப்பான்.. எதுவுமே நினைவில் இல்லை. அவன் பூசிய சாயம் கூட இன்னும் அவள் விரலில் இருக்க… அவள் நினைவு மட்டும் எங்கே போனது? இரண்டு சொட்டு கண்ணீர் அவனின் செல்ல சுண்டு விரலைக் கட்டி தழுவி முத்தமிட்டது.
‘சுதாஆஆஆ.. என் உயிரே’ காலியான கூடு ஓலமிட்டது. அவனுக்கே கேட்காத சத்தம் அவளுக்குக் கேட்குமா என்ன? அவனுக்குள் ஏதோ சுக்குநூறாய் உடைந்து சமாதியாகிக் கொண்டிருந்தது. அவன் நிம்மதியோ?
தரைக்கு வலிக்காமல் அருகில் சென்று அவள் வலது தோளில் அவன் கையை பதித்தான். “சுதா.. பயப்படாத.. நீ சீக்கிரமே சரி ஆகிடுவ. நாங்க எல்லாரும் உனக்காக இருக்கோம். சீக்கிரம் சரி ஆகிடுவ” என்று படுத்திருந்தவளுக்கு ஆறுதல் சொன்னான். அது அவனுக்கே சொல்லிக் கொண்டதா? கையோடு குரலும் நடுங்கியது.
மென்மையாய் தடவிவிட்டுக் கொண்டே அதையே மீண்டும் மீண்டும் கூறினான். உள்ளங்கை உஷ்ணம் அவளுக்கா? அவனுக்கா? யாருக்கு ஆறுதல்?
ஒருமுறையேனும் கேட்டுவிடாதா? அவன் சத்தம் கேட்டு கண் விழித்துவிட மாட்டாளா என்ற நப்பாசை!
“சுதா..” என்றான்.. இயலாமையோடு. அழுகை முட்டிக் கொண்டு வந்தது. குரல் எழும்ப மறுத்தது. குரல் நடுங்கத் தன்னையும் மறந்து மீண்டும் மீண்டும் தாரகை மந்திரம் போல் அவள் பெயரைப் பிதற்றினான்.. குரல் கரகரக்க.
அவள் கழுத்து வளைவில் அவனை மறந்து அவள் வாசம் நுகர்ந்து ‘சுதா.. சுதா..’ என்று பிதற்றியது எதுவுமே நினைவில் வராமலே போனது.
தலை மீண்டும் வலிக்க ஆரம்பித்து.
வயிற்றை புரட்டிக்கொண்டு வாந்தி வரவா என்று அவனைப் படுத்தியது. இருந்தாலும் அவன் அசையவில்லை. அவள் மூடியிருந்த அந்த ஒற்றை கண்ணைப் பார்த்து நின்றான். திறந்துவிடேன்.. என்னை பார்த்துவிடேன் என்பது போல்.
அங்குப் படுத்திருப்பது அவன் அன்றில் என்று யார் அவனிடம் கூறுவது? அவனுக்குத் தெரியவில்லை.
அவன் மார்பில் முகம் புதைத்துப் படுத்திருந்த அவன் மனைவி இவள் தான்…
அவள் உன் சுதா.. அதனால் தான் உன்னையறியாமலே நீ துடிக்கின்றாய்.. இதையெல்லாம் யார் கூறுவது அவனிடம்!!??
அவளைப் பார்த்தபின்னும் சுதாவை யார் என்றே கண்ணனுக்குத் தெரியவில்லையே…
அறையினுள் வந்த வெங்கட் அதிர்ச்சியை வெளி காட்டாமல், “டேய் அஷோக்.. இங்க தான் இருக்கியா?” என்று தயங்கினான்..
“ம்ம்.. பாவம் டா..” குரல் எழும்பவே இல்லை… தொண்டை அடைத்துக்கொண்டு விக்கியது..
‘இவள் தான் சுதா’ என்று யாராவது கூறினால் மட்டுமே அவளைக் கண்டுகொள்ளும் நிலையில் சுதா! பார்த்த வெங்கட்டிற்குமே நெஞ்சைப் பிழிந்தது.
கண்ணன், “எப்பிடி இப்பிடி ஆச்சாம்?”
‘நல்ல வேள அவனுக்கு சுதாவ தெரியல’ சிறு அமைதி கொண்டவனாய், “அவளைத் தொந்தரவு பண்ணாத.. வா போலாம்.. அம்மா காத்திட்டிருப்பாங்க!” என்று மெல்லிய குரலில் அழைத்தான்.
‘அஷோக்..’ அந்த பெயர் அவள் இருதயத்திற்கு இதமாய் இருக்க. அவள் கணவனின் ‘சுதா’ உள்ளக் கதவை தட்டியது. தடித்து வறண்டு வெடித்திருந்த உதடு மில்லிமீட்டர் அசைந்தது. மானிடரில் சமிக்ஞை மாறியது.
அவள் தோளில் பதித்த கையை எடுக்காமலே நகர்ந்தான். அவன் அவளை பார்த்துக்கொண்டே மெதுவாய் நகர.. அவன் விரல்கள் அவள் தோளில் ஆரம்பித்து அவள் கையை வருடிக்கொண்டே விரல் வரைச் சென்றது. பாதி மடித்திருந்த அவள் விரல்களுக்குள் அவன் விரல் மாட்டி நிற்க, நகர்ந்து போகச் சற்றும் மனமில்லாமல் மீண்டும் அவள் விரல்களையே பார்த்து நின்றான். அவனுக்கு ஆசையாய் ஊட்டு.. தலை கோதி… முதுகில் தடம் பதித்த விரல்கள்!
அழகான அந்த நீள விரல்களைக் கட்டை விரலால் நீவிக்கொண்டே நின்றான். அவள் கையின் மென்மை அவன் இதயத்தை நசுக்கிப் பிழிந்தது. ‘உன் கையில் முகம் புதைத்துக்கொள்ளவா?’
காலையில் பிருந்தாவின் விரலைத் தொட்டானே.. ஒன்றுமே தோணவில்லயே. இவள் யார்.. ஏன் இவள் விரல் நகமாய் இருக்க மனம் ஏங்குகிறது? யோசி… யோசி.. மனம் கெஞ்சியது.
‘ஏன் இவ்வளவு வலி?’ அவனுக்குத் தெரியவில்லை. அதை அவன் யோசிக்கவும் இல்லை… உணரவும் இல்லை. யோசிக்கும் நிலையிலோ.. உணரும் நிலையிலோ அவன் இல்லை.
ஒன்பது பெருங்கடல் செய்ய முடியாத சேதாரத்தை கண்மூடி அசைவில்லாமல் படுத்திருந்தவள் செய்துவிட்டாள். அவன் செத்தே விட்டான்.. சுதா நிலை கண்டு!
வெங்கட் அவன் கையை மெதுவாய் பிரித்தெடுத்து “வா அஷோக்” என்று அஷோக்கின் தோளை மெதுவாய் தட்டிவிட்டு நிற்க முடியாமல் அவனை அழைத்து வெளிச் சென்றான்.
கண்ணனுக்கோ உயிரின் பாதியை விட்டு விட்டு போவது போன்ற உணர்வு. அவள் விரலிருந்து அவன் விரல் பிரிக்கபட… வலிக்க வலிக்க இதயம் என்னும் தசையை விதி பிடுங்கிக் கொண்டிருக்க.. அவனால் வலியைத் தாள முடியவில்லை.
வெளிவந்த பின் மூளை ஆராய்ந்தது..
‘யார் இவள்? ஏன் இந்த தாக்கம்?’ இதயம் குடைந்தது! பதிலில்லை.
வாசல் அருகில் வந்துகொண்டிருந்த நர்சிடம், “இவங்களுக்கு எப்படி இப்படி ஆச்சு?” என்று கண்ணன் கேட்க,
“உங்க கூட கார்ல ஆஃஸிடென்ட் ஆச்சே.. அந்த சுதா தான் சார்… பாவம்.. பார்த்தா அடையாளம் தெரியல!” அசராமல் பேரிடியை அவன் தலையில் இறக்கினாள்.
“நாங்க கிளம்பறோம் சிஸ்டர். நீ கொஞ்சம் பேசாம வா டா.. அம்மா தேடிட்டு இருப்பாங்க” சங்கடத்தோடு கண்ணனை அழைத்துச் சென்றான்.
“சுதா.. சுதா.. சுதா..” மீண்டும் மீண்டும் சொல்லி பார்த்துக்கொண்டான். ம்ஹூம்.. நினைவில் வரவில்லை.
ஆனால்.. தெரிந்த உணர்வு, ஒரு தாக்கம். மனதில் ஒரு விதமான சொல்லத் தெரியாத பதைப்பு வந்தது.. புரண்டு வரும் காட்டாறு நிலத்தை அரிப்பது போல் அவள் அவல நிலை கொச்சம் கொஞ்சமாய் அவனை அரித்து அவனைத் தின்றது. உள்ளமும் உடலும் நடுங்கித் துடிக்க ஆரம்பித்தது.
’என்னோடு வந்தாளா? நானா இவளைச் சாய்த்துவிட்டேன்? நான் தான் அந்த பாவியா? என்னோடு ஏன் வந்தாய் நீ? யார் நீ எனக்கு? உன்னையும் மறந்துவிட்டேனா?’
‘சுதா… யார் நீ எனக்கு?’ அஷோக்கிற்கு ஒட்டு மொத்த குழப்பமும் வந்து சேர்ந்தது. தலையைப் பிடித்து நின்றுவிட்டான். கால் நடுங்க.. கை நடுங்க.. நிற்க முடியவில்லை. உடல் முழுவதும் வியர்வையால் நனைந்துவிட..
“டேய் அஷோக் என்ன டா பண்ணுது?” பதறிவிட்டான் வெங்கட்… “டேய் மச்சான்.. என்ன டா பண்ணிது…” அவன் கண்ணிலும் கண்ணீர் அரும்ப..
‘ஒன்னும் இல்லடா’ என்று பொய் சொல்ல முடியவில்லை. “தல.. தல ரொம்ப வலிக்குது டா.. நெஞ்சு அடைக்குது.. மூச்சு..” வராண்டாவில் இருந்த இருக்கையில் அமர.. அடிவயிற்றை பிடித்துக்கொண்டு அப்படி ஒரு வாந்தி. குடல் வேளிவந்துவிடும் அளவு வலி! எல்லாம் இருட்டாக, இதயம் துடிக்க மறுக்க.. உடல் சாவைத் தேட..
தலையைப் பிடித்துக் கொண்டு கண் சொருக, இருந்த இடத்தில் சுறுண்டு விட்டான்.
மருத்துவர்கள் சூழ்ந்துகொள்ள, ‘பிராந்தாவை தான் அழைத்தான்’ வெங்கட். இனி பிருந்தா தான் அழைக்கப்படுவாள் போலும்.
மூச்சை பிடித்துக்கொண்டு ஓடி வந்தாள். சில பரிசோதனைகளைச் செய்து, தலைமை மருத்துவர் பரிசோதித்து, மீண்டும் ஆஸ்பத்திரி அறையில்.. சகல உபகரணங்கள் மத்தியில் அனுமதிக்கப்பட்டான்.
அவன் போவதில் துளி கூட விருப்பமில்லாத பிருந்தா அரண்டு போனாள்.. அடக்க முடியாமல் கண்ணீர் பெருக நின்றுவிட்டாள். அஷோக்கின் வலியை பார்க்கும் துணிவு இல்லை அவளுக்கு!
சுசிலா ஒரேடியாய் பயந்துபோனார். முடியாத போதும் மும்பையிலிருந்து பேரனைப் பார்க்க அவரின் அப்பா வந்திருக்க.. பச்சை மரத்தின் வேரை யாரோ அறுக்க.. அப்பா மடியே கதி என்று சாய்ந்துவிட்டார் சுசிலா,
இன்று பிரசவ வலி ஒன்றுமில்லாமல் போனது..
எந்த தாயும் பார்க்கக் கூடாத காட்சி, தன் காலம் முடியும் முன் தன் ஜீவ நாடி மரண வாசலில். மகன் உறங்கத் தயாராக.. கருவறைக்கு கையிருந்தால் மகனை வாரி எடுத்துப் பாதுகாத்திருக்கும்.
கண்ணீர் இல்லை… கண்கள் வறண்டு.. வெறித்தது. மனம் மீண்டும் தெய்வத்தின் பாதத்தின் கீழ்.. ‘என்னை எடுத்துக்கொள், என் மகனை விட்டுவிடு’ என்ற கதறலோடு.
கண்ணனைச் சுற்றியிருந்த அனைவரும் அவனுக்காக பரிதவிக்க அவன் மனமோ அவன் தேவதை சுண்டு விரலில் சிக்கித் தவித்தது.. அந்த சுண்டு விரலின் ஒரு சொட்டு சாயத்தில்!
ஏன் தீடிர் என்று? யாருக்கும் தெரியவில்லை. இருவரைத் தவிர!
சுதாவை பார்த்ததினால் வந்த தலை வலி என்பது வெங்கட்டை அசைத்தது. சொல்ல வேண்டாம் என்பது மாறி சொல்லக்கூடாது என்ற நிலை! தலையை கையிலேந்தி கண்ணீர் சிந்தி அமர்ந்திருந்தான்.
பாட்டி முடிவே எடுத்துவிட்டார் சுதா தெய்வாதீனமாய் பிழைத்தாலும் கண்ணன் கண்ணில் காட்டுவதில்லை என்று! அவரின் வாழ்வின் ஆதாரம் கண்ணன். என்று அந்த பிஞ்சு கை அவர் விரலை இழுத்துச் சூப்பியதோ.. அன்றே அவர் வாழ்வின் ஆதாரம் அவனாய் மாறினான். அவருக்கு உயிர்ப்பைத் தந்தவனை இந்த நிலைக்கு ஆளாக்கிய சுதாவை அவர் மன்னிக்கவே மாட்டார்.
இந்த கொடுமையைப் பார்த்தபின் வெங்கட்டும் வாய் திறக்கப் போவதில்லை! ‘சுதா வேண்டாம் என் அஷோக்கிற்கு’ என்ற முடிவுக்கே வந்துவிட்டான்.
அவன் உயிரின் பாதியைக் கண்ணனுக்குத் தெரியவில்லை. யாரும் அவனிடம் ‘இவள் தான் உன் மனைவி’ என்று சொல்லப் போவதுமில்லை. சொல்ல நினைத்தாலும் ஒருவருக்கும் அவர்கள் உறவு தெரியாது. தெரிந்த நண்பர்களுக்கு அவர்கள் நிலை தெரியாது. அவர்கள் சுதாவைத் தேடி வர அவர்களோடு சுதாவிற்குத் தொடர்பும் கிடையாது. ஆக மொத்தத்தில் உடலும் உயிரும் தனித் தனியே..
அவள் யார் என்று தெரியும் முன்னே… ஏன் என்று தெரியாமலே தன்னை அவளிடம் இழந்தவன்.. “என்னை விட்டுடாத லட்டு.. நீ இல்லேனா நான் இல்லாம போய்டுவேன்..” சொன்னவன்.. இன்று அவள் யாரென்று உணராமலே உணர்வற்று கிடக்கிறான். அவன் சொன்னது உண்மையாகிப் போனது.. அவள் இல்லாமல் அவன் இல்லாமலே போய்க் கொண்டிருக்கின்றான்.
மௌனமான மரணம்.. யாருக்கும் கேட்காத மரண ஓலம் இது. இரத்தம் சொட்டச் சொட்ட கிடந்த போதும் வாழ்ந்த காதல் இன்று மௌனமாய் மரணித்துக் கொண்டிருந்தது விதியின் கொடூர சதியால்.
கண்ணனில் உடல் பொருள் ஆவி அவன் சுதா.. சுதா மட்டும் தான். இது ஒருவருக்கும் புரியாது.
அவன் உயிரை எல்லாம் அவளிடம் ஊற்றியிருக்க… அவன் வெறும் சடலம்.. நடமாடும் சடலம்.