பார்வதியும்இ அவரின் அப்பாவும் வீடு வந்து சேர்வதற்குள்.. அங்கு நடந்ததை பார்வதியின் அம்மாவிடத்தில் அந்த ஊரில் இருப்பவர்கள் சொல்ல.. முதலில் நம்பாதவர் பிறகு முந்தைய நாள் இரவு ரகுராமின் அப்பா பேசியதை வைத்து ஒப்பிட்டு பார்த்து.. ஒரு முடிவிற்கு வந்தவராய்.. எதைப் பற்றியும் யோசிக்காமல் செடிகளுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். சிவகாமி பூச்சி மருந்துகுடித்து இருபது நிமிடம் கழித்துதான் பார்வதியும் வீராச்சாமியும் வீட்டின் உள் நுழைந்தனர். மயங்கிய நிலையில் இருந்த சிவகாமியைப் பார்த்த வீராச்சாமி பதட்டத்துடன்..
‘சிவகாமி… சிவகாமி.. ஏய்..” என்று அவரைதூக்கி தன் மடிமீது போட்டுக்கொண்டு பதறினார். லேசாக கண்விழித்தவர்.. ‘நேத்து நைட் ஒருத்தர் வந்து.. உன் பொண்ணு என் பையனை வளைச்சிப்போட்டுகிட்டா.” என்று நேற்று சுந்தரம் பேசியது அணைத்தையும் சொல்லி.. அப்பல்லாம் நான் பயந்துக்கல. ஆனா.. இப்ப நம்ம ஊர்ல எல்லாரும் ஏதேதோ சொன்னாங்க. என்னால தாங்கமுடியலை. என்னை மன்னிச்சிடுங்க.. நான் உங்களை விட்டுட்டுப் போறேன்..” என்று கண்மூடினார்.
அருகில் கிடந்த பூச்சிமருந்து பாட்டிலைப் பார்த்தவர்.. ‘ஐயோ.. என்று தலையில் அடித்தபடி அந்த கத்து கத்தினார். ஊரே கூடிவிட்டது. அதைப் பார்த்த வீராச்சாமியும்.. ஒரு முடிவோடு எழுந்திரிக்கவும் ‘அப்பா.. நீங்களும் என்னை விட்டுட்டு போகப்போறிங்களா..? அப்ப என் குழந்தையோட நான் அநாதையாத்தான் இனிமே இருக்கனுமா..? ஒருத்தரை உண்மையா காதலிச்சது தப்பாப்பா..? என்னை காதலிச்சவன் கைவிடலாம். ஆனா நீங்க..? என்னைப் பெத்தவங்க. நீங்களும் அவனை மாதிரியே கைவிடப்போறிங்களா..?” என்று அப்பாவின் காலைப் பிடித்து கதறியவள்.. சற்று நேரம் கழித்து ‘அம்மாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போலாம்ப்பா..” என்று தன் அம்மாவை தூக்க.. சிவகாமியின் உடல் விட்டு உயிர் பிரிந்திருந்தது.
‘அம்மா..” என்று பார்வதி அலறிய அலறல் அங்கிருந்தவர்கள் அணைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. உழைக்கிறதைத் தவிர வேற எதுவுமே தெரியாத உங்களை உக்காரவச்சி ராணிமாதிரி பார்த்துக்கணும்னு ஆசைப்பட்டேனே..‚ நான் பண்ணின தப்புக்கு உங்களுக்கு ஏன்மா இப்படி ஒரு தண்டனையை கொடுத்துக்கிட்டிங்க..? அப்பாவை விட்டுப்போக உங்களுக்கு எப்படிம்மா மனசு வந்திச்சி..? என்னை கண்முழிச்சப் பாருங்கம்மா..” என்று அழுது அழுது.. ஓய்ந்துபோனாள் பார்வதி. நேற்றுவரை சோலைவனமாய் இருந்த வீடு ஒரே நாளில் சோகத்தின் உச்சகட்டமாய் மாறியிருக்க.. வீராச்சாமி சிலையாய் அமர்ந்திருந்தார்.
தன் மகளுக்கு வேலை கிடைச்சிருச்சி.. என்று ஏற்கனவே தனது சக ஊழியர்களிடம் வீராச்சாமி சொல்லியிருந்ததால்.. அதற்கு வாழ்த்து சொல்வதற்காக வீராச்சாமிக்கு வந்த ஒவ்வொரு செல்பேசி அழைப்பிற்கும் பதிலாய் கிடைத்தது.. அவரின் மனைவியின் இழப்புதான். வீராச்சாமியின் நற்குணங்களுக்காகவே அவ்வூரில் போலீஸ்துறையின் மிகப்பெரிய அதிகாரிகள் கூட அவரது மனைவியின் இழப்பிற்க்காக வந்திருந்தனர். பார்வதியை கேவலமாக பேசியவர்கள் வந்திருந்த அதிகாரிகளைப் பார்த்ததும் வாயடைத்து நின்றனர். மனைவியை நல்லடக்கம் செய்துவிட்டு வீடு வந்ததும் வீராச்சாமியிடம்..
‘இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..? வீராச்சாமி. உன் மகளை யார் ஏமாத்தினான்னு சொல்லு.. அவன் எப்பேர்பட்ட கொம்பனா இருந்தாலும் பார்த்துக்கலாம்..” என்று சக ஊழியர்கள் அணைவரும் கேள்விமேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்.
‘சார்.. அவங்க எதாவது பிரச்சணை பண்ணினாங்கன்னா கண்டிப்பா நான் உங்கிட்ட சொல்றேன். என்பொண்ணு ஏமாறுற அளவிற்கு வெகுளி இல்ல.. அவ உண்மையாத்தான் அவனை விரும்பினா. அந்த பையனும் இவளை ஏமாத்தற அளவுக்கு மோசமானவன் இல்ல.. அடிச்சோ.. மிரட்டியோ அவன்கூட என்பொண்ணு வாழ்றதை நான் விரும்பலை. அதை அவளும் விரும்பமாட்டா. அவ கர்பமா இருக்கான்னு இப்ப ஊருக்கே தெரிஞ்சிடுச்சி அதனால.. அவங்களுக்கே மனசாட்ச்சின்னு ஒன்னு இருந்தா நல்ல முடிவா எடுக்கட்டும் . அப்படியில்லைன்னாலும்.. என்பொண்ணுக்கு பிறக்கிற குழந்தைக்கு தாத்தாவா மட்டும் இல்லாம எல்லாமாவும் நானே இருந்துக்கிறேன். வேணும்னா எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்ங்க சார்.. என் பொண்ணுக்கு அவங்களால என்பொண்ணுக்கு மனரீதியா எந்த பிரச்சணையும் வராதமாதிரி மட்டும் கொஞ்சம் பார்த்துக்குங்க.” என்றார்.
ஒரு உயர் அதிகாரி.. ‘நான் நாளைக்கு ஒன்பது மணிக்கு இங்க வரேன்மா.. உன் பதவிக்கான கம்பீரம் உன் முகத்தில தெரியனும். வீராச்சாமிக்காக இந்த தடையெல்லாம் தாண்டி நீ நல்லபடியா வெளிய வரனும். கொஞ்ச நாளைக்கு டெய்லியும் நானே வந்து உன்னை ஆபிஸ்க்கு கூட்டிட்டுப்போறேன்.” என்று ஆறுதலளித்துவிட்டு கிளம்பினார்.
அத்யாயம் — 4
சுந்தரத்தின் எஸ்டேட்டில் வேலைசெய்யும் பெண் ஒருவர் பார்வதி வீட்டில் நடந்த அணைத்தையும் சுந்தரத்திடம் ஒன்றுவிடாமல் கூறினாள். சுந்தரம் செய்வதறியாது நின்றார். ஆனால் சுசிலாவால் தாங்கமுடியாமல்.. அழுதே விட்டார்.
இதுவரை எதற்கும் ரகு இப்படி அழுவதை பார்த்திராத சுந்தரம் குற்ற உணர்ச்சியோடு நின்றிருந்தார். ரகுராமின் பேச்சை கேட்டதும் சுந்தரத்திற்கு.. பார்வதியின் அம்மாவோடு தான் பேசும்போது.. அவர்கள் தன்னை அண்ணா அண்ணா என்று பேச்சுக்கு பேச்சு அழைத்தது நினைவுக்கு வரவும் அவர் மனதும் சற்று பதறியது. அதை மறைத்தவராய் இறுகிய முகத்தோடு தன் அறைக்குள் சென்றுவிட்டார்.
ரகுராம் நேராக பார்வதியின் வீட்டிற்கு வந்தான். உறவினர்கள் பாதிபேர் அங்குதான் இருந்தார்கள். ரகுராமைப் பார்த்த வீராச்சாமி ‘அங்கையே நில்லு..” என்று உத்தரவிடுவது போல் சொன்னார். ‘என் பொண்ணு வெளிய வரதுக்குள்ள போய்டு..” என்று மிரட்டினார். ரகுராமும் வேதனையில் இருப்பதை அவன் முகத்தை பார்த்தே தெரிந்துகொண்டார்.
‘என்னாலதான் எங்கப்பா அத்தைகிட்ட அப்பா தப்பா பேசிட்டார். அதை தாங்கமுடியாமதான் அவங்க உயிரை விட்டுட்டாங்க. அதுக்காக என்ன தண்டனை வேணும்னாலும் எங்களுக்கு கொடுங்க. அது என்னை ஜெயில்ல போடறதுன்னாலும் சரி.. இல்ல கேஸ் போட்டு தூக்குல போடறதுன்னாலும் சரி. அதை நான் தாராளமா ஏத்துக்கிறேன். ஆனா நான் உயிரோட இருக்கிற வரைக்கும் இந்த ஜென்மத்தில உங்க பொண்ணுதான் என் பொண்டாட்டி. அது பார்வதிக்கும் தெரியும்.” என்று எவ்வளவோ பேச வந்தவன் பேச வாய் வராமல் இதைமட்டும் சொல்லி கிளம்பினான்.
வீராச்சாமிக்கு ரகுராம் பேசியது சற்று ஆறுதலாக இருந்தது. இருந்தாலும் தன் மனைவின் சாவிற்கு ரகுராமின் அப்பாதான் காரணம் என்று எண்ணம் வீராச்சாமியை ரகுராமிடம் பேசவிடாமல் தடுத்தது. பார்வதி உள்ளிருந்து கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.
பார்வதியின் அம்மா இறந்து ஒரு மாதம் முடிந்திருக்க.. முப்பது நாள் விடுப்பிற்கு பிறகு வீராச்சாமி வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். வீராச்சாமி பயந்ததுபோல் ரகுராமின் வீட்டிலிருந்து பார்வதிக்கு எந்த தொல்லையும் யாரும் கொடுக்கவில்லை. பார்வதி ஒரு மாதமாக ரகுராமிடம் போனில் பேசுவதைக் கூட தவிர்த்திருந்தாள். இன்று பார்வதியிடம் பேசியே ஆகவேண்டும் என்று அவள் அலுவலகத்திற்கே சென்றிருந்தான்.
‘அங்கிள் உங்களுக்குதான் தினமும் சிரமம். ஏன்னை யாரும் எதுவும் செய்திட மாட்டாங்க. இனிமே நானே வந்திடறேன்.” என்று பார்வதி அந்த எஸ். ஐ .யிடம் வருந்தினாள்.
‘எனக்கு ஒரு சிரமமும் இல்லம்மா.. வீராச்சாமி இதுவரைக்கும் யார்கிட்டையும் எதுவும் கேட்டது கிடையாது. உன்னோட நிம்மதியைத்தான் முதன்முதலா கேட்டிருக்கார். அதுகூட செய்யலைன்னா எப்படி..? அதுவுமில்லாம நீயும் எனக்கொரு பொண்ணுமாதிரிதான். அதனால சங்கடப்படாதம்மா..” என்று அலுவலகத்தின் வெளியே பார்வதியை இறக்கிவிட்டு கிளம்பினார்.
பார்வதி அலுவலகத்தினுள் நுழைய அணைவரின் முகத்திலும் ஒரு படபடப்பு இருப்பதை உணர்ந்தாள். அவளின் தனியறைக்குள் செல்வதற்கு முன் ஒரு நிமிடம் நின்றவள்.. ‘ஏன் எல்லாரும் டென்சனா இருக்கிங்க..?” என்றாள்.
‘நாங்க என்ன சொன்னாலும் உங்களை பார்த்திட்டுதான் போவேன்னு சொல்றார்.”
பார்வதி கேட்டது ரகுராமின் காதில் விழவேயில்லை பார்வதியையே புதிதாய் பார்ப்பதுபோல் பார்த்திருந்தான். ரகுராமின் பார்வையை சந்திக்க முடியாமல் பார்வதி வெளியே போக எத்தனிக்கவும்.. அவளின் கைப்பிடித்து நிறுத்தினான்.
‘கையை விடுங்க..” என்றாள் ஆத்திரத்தோடு. அப்பொழுதும் அவள் கைகளை ரகுராம் விடவில்லை. பார்வதியின் தோற்றம் அப்படியிருந்தது. பார்வதியின் கண்களில் அவளின் பதவிக்கான மிடுக்கு இருந்தது. ஆனால் கண்களை சுற்றி கருவளையமும் இருந்தது. அது அவளின் சிவந்த நிறத்திற்கு அப்படியே காட்டியது. ஒரே மாதத்தில் ஐந்துகிலோ எடை குறைந்தது போல் காணப்பட்டாள் பார்வதி.
பார்வதி அவளின் அப்பாவைப் பற்றி பேசவும் அவள் கையை விடுவித்து ‘ஹாஸ்பிட்டல் போலாம் வா பார்வதி..” என்றான்.
‘எதுக்கு..? என் குழந்தையை கொல்றதுக்கா..?” என்றாள்.
அவளின் உடல்நிலையை மனதில் வைத்து.. கோபத்தை அடக்கியவன்.. ‘எவ்ளோ வீக்கா இருக்க..? முதல்ல உன்னோட ஹெல்த்தை பார்த்துக்காம அப்படி என்ன வேலை வேண்டியிருக்கு..? நான் உன்கிட்ட சண்டை போட வரலை.. தயவு செஞ்சி என்னோட வா.. ஒரே ஒரு செக்கப் மட்டும் பண்ணிக்கிட்டு வந்திடலாம். நானே உன்னை இங்க கூட்டிட்டு வந்து விட்டறேன்.” என்று கெஞ்சினான்.
‘அதெல்லாம் எங்களுக்கு தெரியும். நீங்க முதல்ல கிளம்புங்க.. “ என்றாள்.
‘நீ ஹாஸ்பிட்டல் வரேன்னு சொல்லாம நான் இங்கயிருந்து இன்னைக்கு போகமாட்டேன்…” என்று சட்டமாய் அவள் சீட்டிலேயே அமர்ந்தான்.
‘என்னை கொண்டு வந்து இங்க விட்டுட்டுப்போன அங்கிள்க்கு மட்டும் இது தெரிஞ்சதுனா.. அவ்ளோதான்..‚” என்றாள்.
‘என்ன..? பயமுறத்திறியா..?” என்றான் கோபமாக.
‘உங்களை பயமுறுத்தலை.. ஆனா.. நான் பயந்துக்கிறேன். நீங்க இப்படி பண்றதால எங்கப்பாவும் எதாவது பண்ணிக்குவாரோன்னு நான் பயந்துக்கிறேன். எங்கப்பாக்கு இப்ப இருக்கிற ஒரே நிம்மதி நான் இந்த வேலையில இருக்கிறதுதான். உங்களை மன்றாடிக் கேட்டுக்கிறேன்.. என்னை அசிங்கப்படுத்தாம முதல்ல இங்கயிருந்து போய்டுங்க.. ப்ளீஸ்..” என்று கையெடுத்து கும்பிட்டாள்.
‘உங்கப்பாக்காக வேணும்னா இப்ப இங்கயிருந்து போறேன்.. ஆனா.. நீ உன் உடம்பை நல்லாப் பார்த்துக்கனும். ஒரே மாசத்தில ரொம்ப மெலிஞ்சிட்ட.. இன்னும் ரெண்டு நாளைக்குள்ள நீ டாக்டரைப் போய் பார்க்கனும். டாக்டர் என்ன சொல்றாங்களோ.. அதை நீ கண்டிப்பா பாலோ பண்ணனும். இரண்டு நாளைக்கு ஒருமுறை உன்கிட்ட நான் பேசியே ஆகனும். அதை யாராச்சம் தடுக்க முயற்ச்சி பண்ணினாங்கன்னா.. அப்புறம் நான் வேற மாதிரி முடிவெடுக்கவேண்டி வரும்.. டேக் கேர்..” என்று மிரட்டி பிறகு அவள் கன்னத்தில் லேசாக தட்டிக்கொடுத்துவிட்டு சென்றான்.
ச்ச்சே.. காலங்காத்தாலையே நம்மளை டென்சன் பண்ணனும்னே வந்துட்டான். இவன் நினைப்பை ஒதுக்கினாத்தான் நம்மால ஒழுங்க வேலை செய்ய முடியும்.. என்று நினைத்துகொண்டு தன் மனதை திசைதிருப்பி தன் வேலையில் கவனமானாள்.
மாலை வேலைமுடிந்து கிளம்பும்போது.. எஸ். ஐ. டூவீலரோடு பார்வதிக்காக காத்திருந்தார்.
‘உனக்கு ஆபீஸ்ல அலாட் பண்ணியிருக்கிற ஜீப்ல உங்கப்பா கொஞ்சநாளைக்கு வரவேணாங்கிறார் அந்த டிரைவர் லோக்கல் ஆளாம்.. அப்படின்னா ஒன்னு பண்ணலாம். எனக்கு தெரிஞ்ச ஒரு ஆட்டோ டிரைவர் இருக்கான். ரொம்ப நல்ல மாதிரி. அவன்கிட்ட வேணும்னா சொல்லிடட்டுமா..? மாசாமாசம் ஒரு அமௌன்ட் கொடுத்துக்கலாம். என்கிட்ட அவன் காசு பணம் எதையும் எதிர்பார்க்கமாட்டான். நீ சங்கடப்படுறியேன்னுதான் இதைக்கூட சொல்றேன்.” என்றார்.
‘சரிங்க அங்கிள்..” என்றாள்.
‘சரிம்மா.. நான் நாளைக்கு ஒருநாளைக்கு மட்டும் அவனை கூட்டிட்டு வந்து உனக்கு அறிமுகப்படுத்திடறேன்.” என்று சொல்லி பார்வதியை வீட்டில் விட்டு விட்டு கிளம்பினார்.
‘அப்பா.. எனக்கு இன்னைக்கு தான் சம்பளம் கிரெடிட் ஆச்சு. இந்தாங்க என்னோட ஏ.டி. எம். கார்டு..” என்று அவர் கையில் தன் கார்டை கொடுத்தாள்.
‘இப்படித்தான்மா.. உங்கம்மா மாசா மாசம் பணம் கொண்டு வந்து கொடுப்பா. இப்படி என்னை பாதியில விட்டுட்டுப் போய்ட்டாளே..‚” என்று கண்ணீர் விட்டார்.
பார்வதிக்கு என்ன சொல்லி தன் அப்பாவைத் தேற்றுவதென்றே புரியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது.. அங்கு ரகுராம் வந்து நின்றான். அச்சோ இவன் வேறு எதுக்கு வந்திருக்கிறான்னே புரியலையே.. என்;று பார்வதிக்கு அழுகையோடு பதட்டமும் சேர்ந்தது.
‘யாரைக் கேட்டு உள்ள வந்திங்க..? முதல்ல இங்கயிருந்து போய்டுங்க. நீங்க யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க இனிமே நான் எதுலையும் தலையிடமாட்டேன். இன்னும் என்னதான் உங்களுக்கு வேணும்..?” என்று ஆத்திரமாக கேட்டாள்.
வீராச்சாமி.. ‘எதுக்குடா இங்க வந்திருக்க..? நானே என் பொண்ணை உனக்கு கூட்டிக்குடுக்கிறேன்னு உங்க வீட்டு ஆளுங்க சொல்லனுமா..?” என்று அவ்வளவு ஆத்திரத்துடன் ரகுராமின் சட்டையை பிடித்துக் கேட்டார்.
எதுவும் சொல்லாமல் ரகுராம் அமைதியாக வீராச்சாமியின் கையிலிருந்து தன் சட்டையை பிரித்துவிட்டு கிளம்பினான். ஆனால் அவன் போகும்போது பார்வதியை அர்த்தத்துடன் பார்த்த படியேதான் சென்றான். பார்வதிக்கு அவனின் பார்வை இன்னும்தான் பயத்தை கொடுத்தது. பார்வதிக்கு ரகுராமின் இந்த பரிமாணம் முற்றிலும் புதிது. காதலிக்கும் காலங்களில் அவன் முகத்தில் என்றுமே சிறு கோபத்தை கூட அவள் பார்த்ததில்லை. அவன் கண்களில் கெஞ்சலும்இ கொஞ்சலும்தான் இருக்கும். இன்று அவன் அலுவலகத்தில் தன்னிடம் நடந்து கொண்ட விதமே பார்வதிக்கு ஒரு புதிய ரகுராமாகத்தான் தெரிந்தான். இப்பொழுது அவனின் பார்வை ஏதே பண்ணப்போகிறான் என்பதை அவளுக்கு அறிவுறுத்தியது. தன் அப்பாவை சமாதானப் படுத்தி சாப்பிட வைத்தவளுக்கு ஒருவாய் சாப்பாடு கூட அவளால் சாப்பிட முடியவில்லை.
காலையில் எழுந்ததும்.. ‘பார்வதி நாளைக்கு உனக்கு ஒர்க்கிங் டே வா..?” என்றார்.
‘இல்லப்பா லீவ்தான்.. ஏன்ப்பா..?” என்றாள்.
‘இல்லம்மா.. ஹாஸ்ப்பிட்டல் போய் உனக்கு ஒரு செக்கப் பண்ணிட்டு வந்திடலாம். ரொம்ப இளைச்சிட்ட..” என்றார்.
ஒரு நிமிடம் மௌனம் காத்தவள்.. ‘சரிங்கப்பா..” என்றாள்.