பனி சிந்தும் சூரியன்

அத்தியாயம் 34

ஸ்வர்ண ஹாலில் உட்கார்ந்து இருந்தால்… அபர்ணாவும் அங்குதான் இருப்பாள். காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு மொபைலில் பாட்டுக் கேட்டுக் கொண்டு இருப்பாள்.

அவர் உறங்க சென்று விட்டால். மாடியில் இருக்கும் ஊஞ்சலில் அல்லது கீழே முன்புறம் தோட்டத்தில் அமர்ந்து இருப்பாள்.

அபர்ணா அந்த வீட்டில் சின்னச் சின்ன வேலைகள் அவளே செய்ய ஆரம்பித்தாள். வீடு பெருக்கி துடைத்ததும், முன் வாசலில் அவளே கோலம் இடுவாள். கருப்பு நிற கிரானைட் கல்லில் கோலம் போடுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

பூஜை அறை வேலைகளை அவளே பார்த்துக் கொண்டாள். அவள் அறைக்குள் வேலை செய்பவர்களை, அவள் விடுவது இல்லை. அதனால் அவளே அவர் அறையைச் சுத்தம் செய்து கொள்வாள். தோட்டத்திற்குத் தண்ணீர் விடுவதும் அவளே. எதாவது செய்து பொழுதை போக்கிக் கொண்டு இருந்தாள்.

ஸ்வர்ணாவும் அவளோடு இரண்டு ஒரு வார்த்தைகள் பேச ஆரம்பித்தார்.

காலை வேலையில் வீட்டின் முன்புறம் ராம் கார்த்திக் இருவரும் ஒரு அரைமணி நேரம் ஷட்டில் விளையாடுவார்கள். அபர்ணா தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டபடி அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

விளையாடி முடித்து இருவரும் வியர்த்து விருவிருத்து, இவள் அருகில் இருந்த சேரில் வந்து அமர்ந்தனர்.

“நீயும் எங்களோட கொஞ்ச நேரம் விளையாடலாம் இல்லை.” ராம் அபர்ணாவை பார்த்து சொல்ல….

“இப்படி எல்லாம் கஷ்ட்டபடனும்ன்னு எல்லாம் அவசியம் இல்லை. சாப்பிடும் போது அளவா சாப்பிட்டு, கொஞ்சம் சுறுசுறுப்பா வீட்டு வேலை பார்த்தாலே போதும்.” என்றாள்.

அவள் சொல்வது உண்மைதான். எவ்வளவு சுவையாக இருந்தாலும், ஒரு அளவுக்கு மேல் அவள் உண்ண மாட்டாள். அதே போல், ஒரே மாதிரி மாவு சத்தாக இல்லாமல், பழங்கள், ப்ரோடீன் எனக் கலவையாக உணவு வகைகள் இருப்பது போலப் பார்த்துக் கொள்வாள். ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல் கொஞ்சம் இடைவெளி விட்டு சாப்பிடுவதால்… அவள் உடல் எடை அதிகரிக்காமல் இருந்தாள்.

ஸ்ரீகாந்த முடியாமல் போன பிறகு அவருக்காக ஆரம்பித்தது. அதை அப்படியே அபர்ணா கடைபிடித்தாள். எல்லா நாளும் அப்படி இருக்கவும் மாட்டாள். பண்டிகை நாள், வெளியே செல்லும் போது விரும்பியதை சாப்பிடவும் செய்வாள்.

ராமிற்காவது வேலையில் அங்கே இங்கே கொஞ்சம் அலைவான். ஆனால் கார்த்திக் ஒரே இடத்தில் இருந்து வேலை பார்ப்பதால்… அவன் கண்டிப்பாக உடற்பயிர்ச்சி செய்ய வேண்டும் எனக் கட்டாயத்தில் இருந்தான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, டைகர் அங்கு வர… அபர்ணா அலறுவாள் என்று பார்த்தால்… அவள் கூலாக நின்று கொண்டிருந்தாள். அவளிடம் வந்த டைகர் அவளைச் சுற்றி சுற்றி வர….

“என்ன டி புலிக் குட்டியா இருந்த என் நாயை இப்படிப் பூனைக் குட்டி ஆக்கி வச்சிருக்க…” என ராம் பொய் கோபம் கொள்ள….

“உன்னை மாதிரியே உன் நாயையும் ஆக்கி வச்சிருக்க டா.” என்றான் கார்த்திக்.
பகலில் தோட்டத்தில் இருக்கும் போது எல்லாம், இவள் சாப்பிடும் நொறுக்கு தீனி எல்லாம் அதற்கும் கொடுக்க… இதற்கு முன் அதற்கு யாரும் அப்படிக் கொடுத்தது இல்லை. அதனால் டைகர் அபர்ணாவுடன் ப்ரண்ட் ஆகிவிட்டது.

“ஹே இப்படித்தான் திருடன் பிஸ்கட் கொடுத்தாலும், அவன் கூட ப்ரண்ட் ஆகிடுவியா?” என அபர்ணாவே அதனிடம் கேட்டும் இருக்கிறாள்.

ராம்மும் அதையே கேட்க, “நீங்க வேணா என்னை அடிக்கிறது போல.. சும்மா கை ஓங்குங்க. என்ன பண்றான்னு பார்க்கலாம்?” அபர்ணா சொன்னது போல, ராம் அபர்ணாவை விளையாட்டுக்கு அடிக்க, டைகர் அவனைப் பார்த்து குலைத்து, அவனை அடிக்கவிடாமல் இருவருக்கும் இடையே வந்து காலைத் தூக்கி நின்றது.

“இப்ப நான் உங்களை அடிக்கிறேன்.” என அபர்ணா ராம்மை அடிக்க…. டைகரும் அவளை உற்சாகப்படுத்துவது போல… சுற்றி சுற்றி வர….

“போ… இனிமே நீ என் டைகர் இல்லை. இவளோட டைகர் …..” எனச் சொல்லிவிட்டு ராம் சென்றான். கோபமாகச் சொல்வது போல இருந்தாலும், உள்ளுக்குள் மகிழ்ச்சியாகவே உணர்ந்தான்.

காலை பத்து மணி போல, சுகன்யா அபர்ணாவை செல்லில் அழைக்க… அபர்ணா தோட்டத்திற்குச் சென்று பேசிக்கொண்டு இருந்தாள். ஸ்வர்ணா ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாடியை துடைக்கச் சென்ற பெண், வெறுமனே அந்த ஹாலை மட்டும் லேசாகத் தடவி விட்டு, துடைத்தது போலப் பாவானை செய்துவிட்டு கிளம்ப, சற்று நேரத்திற்கு முன்பே மேலே வந்திருந்த அபர்ணா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தினமும் துடைப்பதால்… ஒருநாள் துடைக்கா விட்டால் ஒன்றும் தெரியாது என அந்தப் பெண் அடிக்கடி இப்படிச் செய்வதுதான். ஆனால் இன்று அபர்ணாவிடம் மாட்டிக் கொண்டாள்.

ராம் அகிலா இருவரின் அறையும் மாடியில் தான். அவர்கள் இல்லாத நேரத்தில் அவர்கள் அறைக்குள் யாரும் நுழையக் கூடாது. ஆனால் அங்கிருந்து இருந்த இன்னொரு அறை, பால்கனி எதையுமே துடைக்க வில்லை.

“ஒழுங்கா வேலை செய்றதுன்னா செய்யுங்க… இல்லைனா வராதீங்க.” என்றாள் அபர்ணா கோபமாக.

அந்தப் பெண் திகைத்து போய் நிற்க, “நாங்க பார்க்கிறோம் பார்க்கலை… அது வேற விஷயம். ஆனா உங்களுக்குன்னு ஒரு மனசாட்சி இருக்கு இல்ல… அதுக்காகவாவது வாங்கின காசுக்கு ஒழுங்கா வேலை பண்ண வேண்டாமா.” என நறுக்கென்று அவள் கேட்க, ஸ்வர்ணாவுக்கு அவள் பேசுவது நன்றாகக் கேட்டது. ஆனால் அவர் எதிலுமே தலையிடவில்லை.

“இந்த மாசத்தோட நீங்க நின்னுக்கோங்க…. உங்களை மாதிரி ஆளையெல்லாம் நம்பி எப்படி வீட்டுக்குள்ள விட முடியும்.” என்றாள்.

அந்தப் பெண் சென்று ஸ்வர்ணாவிடம் முறையிட, “தப்பு உன் மேல தானே. இனி எல்லாம் அவ பொறுப்புதான்.” என்றுவிட்டார். அவர் சொல்வதை அபர்ணா மாடியில் இருந்து கேட்டுக்கொண்டு இருந்தாள்.

மறுநாள் சமையல்க்காரரை பிடித்தாள். அவர் எதோ சொந்த வீட்டில் இருப்பது போல மிதப்பாக வேலை பார்ப்பார். ராம் மதிய உணவுக்கு வீட்டிற்கே வருவது இல்லை. அகிலாவும் அப்படித்தான். இப்போது எல்லாம் அவளும் மதிய உணவுக்கு மாமியார் வீட்டிற்குச் செல்கிறாள்.

மதிய உணவு ஸ்வர்ணாவுக்கு மட்டும்தான். இப்போது இவள் வந்ததில் இருந்து இவளுக்கும். இரவு அனைவருக்கும் டிபன் தான். ஆனால் இதற்கு அவர் வாங்கும் சம்பளம் மிக அதிகம்.

“இனிமே தினமும் காய்கறி சூப் வைக்கிறீங்க. மதியம் இரண்டு பொரியலோட சாப்பாடு. அதுல கண்டிப்பா கீரை இருக்கணும். இனிமே மதியம் சாருக்கு வீட்ல இருந்து சாப்பாடு போகும்.” என்றவள்,

“நீங்க சமைக்கிறதுக்கு நீங்கதான் காய் நறுக்கிக்கணும். நாங்க சமையல் செய்ய ஒரு ஆள், காய்கறி நறுக்க ஒரு ஆள் எல்லாம் வைக்க மாட்டோம்.”

“இனிமே மதியானத்தோட நீங்க வீட்டுக்குப் போகலாம். நைட் நாங்க பார்த்துக்கிறோம்.” என்றாள்.

சமையல்காரர் ஸ்வர்ணா எதாவது சொல்வாரா என அவர் முகத்தைப் பார்க்க, ஸ்வர்ணா எதுவும் இதில் தலையிடவில்லை. அதனால் அபர்ணாவிடம் தலையாட்டிவிட்டு சென்றார்.

உதவிக்கு இருந்த பெண்ணை அழைத்து, “இனி நீ காய் நறுக்க வேண்டாம். காலையில் சாயங்கலாம் பத்திரம் தேய்க்கணும், அப்புறம் வெளிய நீதான்  கூட்டி வாசல் தெளிச்சுக் கோலம் போடணும்.இனி காலை வேலை முடிஞ்சதும், நீ கிளம்பலாம். திரும்பச் சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்து பாத்திரம் தேச்சா போதும். காலையில இருந்து சாயந்தரம் வரை இங்க இருக்க வேண்டாம்.”அந்தப் பெண்மணி சரி எனத் தலையாட்டிவிட்டு சென்றார்.

வீட்டில் இத்தனை வேலைக்காரர்கள் சுற்றி இருந்தால்…. வீட்டில் சுதந்திரமாக நடமாடவோ, பேசவோ முடியவில்லை என்றே அப்படிச் செய்தாள்.

துணி துவைக்கும் பெண் ஒழுங்காக வேலை செய்ததால்…. அவரை விட்டுவிட்டாள். அந்தப் பெண் கனமான உருப்படிகளை மட்டும்தான் மெஷினில் போடுவாள்,  மற்றவற்றைக் கையில்தான் துவைப்பாள். அவரையே வீடு பெருக்கி துடைக்கச் சொன்னாள்.