பனி சிந்தும் சூரியன்

அத்தியாயம் 24

அபர்ணா வீட்டிற்கு வந்தபோது சுகன்யா மட்டுமே அவளுக்காகக் காத்திருந்தார். மற்றவர்கள் ஏற்கனவே படுக்கச் சென்று இருந்தனர். கதவை திறந்து விட்டவர், உடை மாற்றி விட்டு வருவாள் எனக் காத்திருக்க… அவள் வருவதாகத் தெரியவில்லை.

“இந்தப் பொண்ணு என்ன பண்றா? எனப் பார்ப்பதற்காக, அவளின் அறைக் கதை திறந்து கொண்டு சென்றால்…. அபர்ணா உடை கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் படுத்து இருந்தாள்.

“அபர்ணா சாப்பிட வரலை?” என்றபடி சுகன்யா அருகில் சென்று பார்க்க… அப்போதுதான் அவள் அழுதிருப்பது அவர் கண்ணில் பட்டது.

“என்ன டி ஆச்சு? எதுக்கு டி அழற?” என அவளைப் பிடித்து உலுக்க ஆரம்பித்து விட்டார். வெளியே இருந்து வந்தவள் அழுது கொண்டிருந்தால்… அவரும் தான் என்ன நினைப்பார்.

அவரின் பதற்றம் அபர்ணாவுக்கு எரிச்சலை தர… “அம்மா, ஒன்னும் இல்லை. என்னைக் கொஞ்சம் தனியா விடுறீங்களா?” என்றாள்.

“என்ன ஒன்னும் இல்லை. இப்ப எதுக்கு அழற? முகம் எல்லாம் சிவந்து இருக்கு…என்ன ஆச்சு அபர்ணா? யாரவது எதாவது சொன்னாங்களா?”
கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்தவள், சிறிது நேரம் எதுவும் சொல்லவில்லை.

“ராம் அவங்க வீட்ல பொண்ணு பார்க்க சொல்லிட்டார்.” எனச் சற்று இடைவெளி விட்டவள், “இப்ப உங்களுக்குச் சந்தோஷமா மா…” என்றாள்.

“ஏன் அபர்ணா இப்படிப் பேசுற? எங்களுக்கு மட்டும் வருத்தம் இல்லையா?”

“இதே ராம் ஸ்வர்ணாவோட பையன் இல்லைன்னு வச்சுக்கோ.. நானும் உன் அப்பாவும் அவங்க வீட்ல போய்ப் பேசி இருக்க மாட்டோமா…” என்றவர், கட்டிலில் உட்கார்ந்து மகளை மடி சாய்த்துக் கொண்டார்.

“நீ இவ்வளவு கஷ்ட்ட்படுவன்னு தெரிஞ்சிருந்தா… துபாய்யை விட்டு வந்தே இருக்க மாட்டோம்.”

“அப்பா நேத்துக் கூடக் கேட்டார். அருணை மட்டும் ஹாஸ்டல்ல விட்டுட்டு நாம திரும்பத் துபாய் போயிடுவோமான்னு.”

“அப்பா உன்னை நினைச்சு ரொம்பக் கவலைப்படுறார் அபர்ணா. உன்னை இப்படிப் பார்த்தா அவர் தாங்கவே மாட்டார்.”

தன் தந்தையின் உடல்நிலையை அறிந்தவள் அல்லவா… அது கொஞ்சம் வேலை செய்தது. சட்டென்று தன் கண்ணீரை துடைத்தாள்.

“நான் சரியாகிடுவேன் மா.” என்றாள்.

“இன்னைக்குப் பெரிசா தெரியிற கஷ்ட்டம்… கொஞ்ச வருஷம் கழிச்சு யோசிக்கும் போது… இதுக்கா அன்னைக்கு அப்படி இருந்தோம்ன்னு உனக்கே தோணும்.”

“யார் யாருக்கு எங்கையோ அங்கதான் கல்யாண ப்ராப்தம் மட்டும். நம்ம கையில ஒண்ணுமே இல்லை.”

“இப்ப எதையும் நினைச்சு குழப்பாத… மனசை வேற பக்கம் திருப்பு. உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல… எப்படி நடந்துக்கணும்ன்னு உனக்குத் தெரியும்.”

“ம்ம்….”

“முதல்ல முகம் கழுவி டிரஸ் மாத்திட்டு சாப்பிட வா…சாப்பிட்டாதான் தூக்கம் வரும். நான் போய்த் தோசை ஊத்துறேன்.” என எழுந்து சென்றார்.

மறுநாள் அலுவலகம் சென்ற அபர்ணா, தான் அடுத்த மாதத்தில் இருந்து வேலையில் இருந்து விடுபடுவதற்கான முன் அறிவிப்பை அகிலாவிடம் கொடுத்தாள்.

ஏன் திடிர்ன்னு வேலையை விட்டு போறா? என நினைத்தவள், அதை அபர்ணாவிடம் கேட்கவில்லை. அவள் கொடுத்த காகிதத்தை வாங்கி வைத்துக் கொண்டாள்.

அபர்ணா சென்றதும் கார்த்திக்கு அழைத்துச் சொன்னாள்.

“அபர்ணாவுக்கு விஷயம் தெரிய வாய்ப்பே இல்லை. வேற எதோ காரணம் இருக்கும்.” என்றான் கார்த்திக்.

“இல்லை அவ முகமே சரியில்லை… அவளுக்கு விஷயம் எப்படியோ தெரிஞ்சிருக்கு. ஒரு வேளை அண்ணன் சொல்லி இருப்பாரோ.”

“யாருக்கு தெரியும், உங்க அண்ணன் உளறி வச்சாலும் வச்சிருப்பான்.”

“நீ அவளை வேலை விட்டு போக விடாத… எதாவது காரணம் சொல்லி மூன்னு மாசம் தள்ளி போடு… அதுக்குள்ள எதாவது பண்ண முடியுதான்னு பார்க்கலாம்.”

“சரி… ஆனா பிரவீணா அத்தை அண்ணனுக்குப் பொண்ணு பார்க்கிறதுல ரொம்பத் தீவிரமா இருக்காங்க. நாளைக்கே பெண்ணைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லை.

“ஹே… நீ வேற எதாவது சொல்லி பயம் பொருத்தாத… உங்க அம்மா அபர்ணாவை மருமகளா ஏத்துக்க வாய்ப்பு இருக்கா? இல்லையா?”

“இருக்கு, அண்ணன் நான் அபர்ணாவை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா… அம்மா சரின்னுதான் சொல்வாங்க. ஆனா அதுக்குப் பிறகு எப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது.”

“அண்ணாவும் கண்டிப்பா அம்மாகிட்ட கேட்க மாட்டார்.”

“சரி நான் அபர்ணாகிட்ட பேசி பார்க்கிறேன்.” என்றான் கார்த்திக்.
மாலை கார்த்திக் அகிலாவின் அலுவலகத்திற்கு வந்தான். அகிலாவிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தவன், அபர்ணாவை பார்க்க சென்றான்.

“ஹாய் அபர்ணா.”

“ஹாய் கார்த்திக், அகிலாவை பார்க்க வந்தீங்களா?” எனக் கேட்க வேண்டுமே என்று கேட்டாள்.

“உன்னைத்தான் பார்க்க வந்தேன். அப்புறம் என்ன விசேஷம்? ராம் எதுவும் போன் பண்ணானா?”

“அவர் எதுக்கு எனக்குப் போன் பண்றார்? அவர் அம்மாவைத்தான் பொண்ணு பார்க்க சொல்லி இருக்கார் இல்லையா… பொண்ணு பார்த்ததும் அவகிட்ட பேசுவார்.”

“அபர்ணா அன்னைக்கு நானும்தான் அங்க இருந்தேன். அவன் கோபத்தில் அப்படிச் சொல்லிட்டான்.”

“கோபமா சொன்னாரோ, சந்தோஷமா சொன்னாரோ…அவர் வாயில இருந்து அந்த வார்த்தை வந்திடுச்சு… மனசுல இருக்கிறதுதான் வார்த்தையா வரும்.”

“நீ அவன்கிட்ட பேசி பாரேன்.” கார்த்திக் சொல்ல.. அபர்ணா கையெடுத்து கும்பிட்டாள்.

“என்ன பேச சொல்றீங்க? நான்தான் அவரை லவ் பண்றேன்னு சொல்லிட்டு இருந்தேன், அவர் ஒரு தடவையும் சொல்லலை… அவர்கிட்ட போய் நான் என்ன கேட்க முடியும்? என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கெஞ்ச சொல்றீங்களா… அது என்னால முடியாது.”

“விட்டுடலாம் கார்த்திக், இது சரி வராது.” அபர்ணா முடிவாகச் சொல்லிவிட… கார்த்திக் யோசனையுடன் அங்கிருந்து சென்றான்.

அகிலா சொன்ன காரணங்களை அபர்ணா ஏற்றுக்கொள்ளவில்லை… அடுத்த மாதம் வேலையில் இருந்தும் நின்று விட்டாள். அதன் பிறகு அவள் என்ன செய்கிறாள் என எதுவும் தெரியவில்லை. அவள் யாரோடும் தொடர்பில் இல்லை. கார்த்திக் அழைத்தாலும் எடுப்பதில்லை. நித்யா அழைத்தாலும் எடுப்பது இல்லை.

ராமிற்குப் பெண் பார்ப்பது கஷ்ட்டமாகவே இல்லை. பெரிய நிறுவனத்தின் பங்குதாரர், கப்பல் மாதிரி வீடு, அதுவும் கண்ணுக்கு லட்ச்சனமான பையன். அவனுக்குப் பெண் தேடும் செய்தி பரவியதுமே… நீ, நான் எனப் போட்டி போட்டுக்கொண்டு பெண் வீட்டினர் வந்துவிட்டனர்.

ஸ்வர்ணா, அவரின் அண்ணி வாசந்தி, பிரவீணா, காயத்ரி, சுமா என ஒரு பட்டாளமே உட்கார்ந்து பெண்ணின் புகைப்படம் மற்றும் பயோடேட்டா வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

“இவ்வளவு பெரிய இடம் எல்லாம் வேண்டாமே… கொஞ்சம் கம்மியாவே பார்ப்போம்.” என்றார் ஸ்வர்ணா. பெரிய இடத்தில் பெண் எடுத்தால், குணம் எப்படி இருக்குமோ என்ற கவலை அவருக்கு இருந்தது.

“அண்ணி, நீங்க நல்ல எண்ணத்துல சொல்றீங்க, உங்களை மாதிரி நல்லவிதமா எல்லாம் பொண்ணு வீட்ல நினைக்க மாட்டாங்க.”

“வசதி குறைவான இடத்தில சம்பந்தம் பண்றாங்களே… பையனுக்கு எதுவும் குறையோன்னு தான் பேசுவாங்க.” எனப் பிரவீணா சொன்னதும் ஸ்வர்ணா பயந்துவிட்டார்.

“நாம நமக்குச் சமமான எடத்தில சம்பந்தம் பண்றதுதான் நல்லது.” என வாசந்தியும் சொல்ல.. அதை மற்றவர்களும் ஆமோதித்தனர்.
சென்னையின் பிரபல நகைக்கடைகாரரின் இரண்டாவது பெண், சுஷ்மிதாவை அனைவரும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தனர்.

அழகு, வெளிநாட்டுப் படிப்பு, செல்வாக்கான குடும்பம் என அனைத்தும் இருந்தது.
மறுநாள் நாள் நன்றாக இருந்ததால், அன்று ஜாதகம் பார்த்துவிட்டு மேற்கொண்டு பேசலாம் என முடிவு செய்தனர். பெரிய வீட்டிற்குதான் ஜோசியரை வர சொல்லி இருந்தனர்.

அவரும் வந்து பார்த்து விட்டுப் பொருத்தம் நன்றாக இருக்கிறது பண்ணலாம் என்றார்.

ஸ்வர்ணா பெண்ணின் புகைப்படத்தையும், மற்ற விவரங்களையும் சேகரித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தவர், மகனிடம் காட்ட ஆவலாகக் காத்திருந்தார்.

ராம் வந்ததும் குளித்து விட்டு வந்து சாப்பிட அமர, ஸ்வர்ணா அவனுக்குப் பார்த்திருக்கும் வரன் பற்றிப் பேச்சை ஆரம்பிக்க… அதுக்குள்ள பொண்ணு பார்த்துடாங்களா என அதிர்ந்து போய் விட்டான்.

அகிலா அண்ணன் முகத்தையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவனுக்கு ரொம்பவும் அதிர்ச்சி என நன்றாகவே தெரிந்தது.

ராம் சாப்பிடும் வரை எதுவும் பேசவில்லை. பிறகு பொறுமையாக விளக்கினான்.

“அம்மா, முதல்ல அம்மு கல்யாணம் முடியட்டும். நான் அவ கல்யாண வேலை பார்ப்பேனா…. இல்லை என் கல்யாண வேலையா அலைவேனா? நமக்குப் பொறுப்பா செய்ய அப்பாவா இருக்கார். நான்தான் எல்லாம் பார்க்கனும்.”

“முதல்ல அம்முவுக்குப் பண்ணிட்டு, கொஞ்ச நாள் கழிச்சு எனக்குப் பார்க்க ஆரம்பிச்சா போதும்.”