அத்தியாயம் : 6
“யாமினி! யாமினி முழிச்சுக்கோ! என்னாச்சு உனக்கு?” என்று கேட்டவாறே யதீந்திரன் யாமினியின் கன்னத்தில் தட்டினான்.
“தீரா! இந்த பெண்ணை தெரியுமா உனக்கு?” என்றான் யாதவன்.
“தெரியும் யாதவா!! என்னோட ஸ்டுடென்ட்!!”
“என்னது ஸ்டுடென்ட்டா? இந்த மாதிரி பொண்ணுங்களுக்கு தான் நீங்க கிளாஸ் எடுக்கறீங்களா தீராண்ணா?” என்ற யுவிக்கு காரணமே இல்லாமல் யாமினியை பிடிக்காமல் போனது.
“ஷ் யுவி! இந்த பெண்ணைபத்தி உனக்கு என்ன தெரியும்ன்னு இப்படி பேசிக்கிட்டு இருக்க?” என்று கேட்டான் யாதவன்.
“எனக்கு இவளைப் பத்தி ஒண்ணும் தெரியாது தான். ஆனா, வீட்டுக்குள்ள தூக்கிட்டு வரும்போது கூடவே வருதே ஒரு நாத்தம், அது இவ குடிச்சிருக்கான்னு காட்டுதே!! எப்போ இருந்துண்ணா குடிகாரங்களுக்கு பாடம் எடுக்க ஆரம்பிச்ச?”
“யுவி!! வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் இட்!!” என்று பல்லைக்கடித்தான் யதீந்திரன்.
யதீந்திரனின் கோபக் குரல் யாமினியின் மூளையை சென்று அடைந்ததோ, என்னவோ “சாழ்ர்! ப்ராழ்ஜெக்த்ட் பினிச் பண்ழ்ன்ட்டேன்!!!” என்று உளறினாள் யாமினி.
“யாமினி!! இங்கப்பாரு!! என்ன நடந்தது?” என்று மீண்டும் அவளைப் போட்டு உலுக்க ஆரம்பித்தான்.
யாமினியின் உளறலை கேட்ட யுவராணிக்கு கோபம் தான் பெருகியது. ‘ரொம்ப சின்சியர் ஸ்டுடென்ட் தான்!’ என்று கிண்டலாக மனதிற்குள் பேசிக்கொண்டாள்.
“தீரா, அவளை விடு! கொஞ்ச நேரம் அப்படியே தூங்கட்டும். அவ பரன்ட்ஸ் போன் நம்பர் தெரிஞ்சா கூப்பிடு! பாவம் பொண்ண காணோம்ன்னு தேடப் போறாங்க!!” என்றான் யாதவன்.
“இல்லை எனக்கு தெரியாது யாதவா!” என்று சில நொடிகள் யோசித்தவன், “பட் என்னால இவளோட பர்சனல் டிடைல்ஸ் செக் பண்ண முடியும். என்னோட ஸ்டுடென்ட்ஸோடதை மட்டும் செக் பண்ண எனக்கு பெர்மிஷன் இருக்கு! என்றவன் தன்னுடைய மடிக்கணினியை எடுத்தான்.
மனதிற்குள் இவளை தன் மாணவியாக அனுப்பியதற்கு இறைவனிடம் நன்றி உரைத்தவனின் கைகளோ அதன் வேலையை மடிக்கணினியில் செவ்வனே செய்துக்கொண்டிருந்தது. கண்களால் அவ்வப்பொழுது யாமினியை வருடிக்கொண்டே அவளின் பெர்சனல் டிடைல்ஸை எடுத்து முடித்தான்.
அதில் கார்டியன் என்ற இடத்தில் இருந்த யசோதராவின் அலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டவனுக்கு, யாமினிக்கு பெற்றவர்கள் இல்லையோ? என்ற கேள்விமனதினுள்எழுந்தது.
மணி அடித்தஉடனேயே யசோதரா அதை உயிர்ப்பித்திருந்தாள்.
“ஹலோ! யசோதரா ஹியர்!!”
“திஸ் இஸ் யதீந்திரன்!”
அந்தப் பெயர் அவளுக்கு கேள்விப்பட்டது போலிருந்தது. சில நொடிகளிலேயே அது தங்கையின் கம்ப்யூட்டர் டீச்சர் என்று நினைவிற்கும் வந்தது.
“சொல்லுங்க சார்! யாமினி டீச்சர் தானே நீங்க?”
“எஸ்! உங்க சிஸ்டர் இப்போ எங்க வீட்டுல சுய நினைவு இல்லாம இருக்காங்க!!” என்றவன் யாதவன் அவளை அழைத்து வந்த விதத்தை அவளிடம் பகிர்ந்துக்கொண்டவன், இப்போதைய அவளின் நிலையையும் தெரிவித்தான்.
யசோதரா தங்கையின் நிலையை அறிந்ததும் கவலைக்கொண்டாள் தான். ஆனால் சற்றும் அவள் நிதானத்தை இழக்கவில்லை. தைரியமாகவே பேசி யதீந்திரனின் விலாசம் வாங்கிக்கொண்டாள்.கூடவே தன்னை எவ்வாறு தொடர்பு கொண்டான் என்பதையும் கேட்க மறக்கவில்லை.
“தங் யு வெரி மச் சார்! இன்னும் தேர்ட்டி மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.!!” என்றவள் யதீந்திரனிடம் முறையாக விடைப்பெற்று அலைபேசியை அணைத்தாள்.
“யாதவா! யாமினி வீட்டுலேர்ந்து அரைமணி நேரத்துல வந்துருவாங்க!” என்றவன் திரும்ப யாமினியிடமே சென்று அமர்ந்தான்.
அதுவரை அங்கே நடப்பவற்றை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த ரோஜாவிற்கு யதீந்திரனின் கவலை, பதட்டம் அனைத்தும், அவனின் மனதில் யாமினி இருப்பது தெரிந்தது.
அதை அவனிடமே கேட்க முடிவு செய்தாள் ரோஜா. அதற்குள்ளாக யாதவனே யதீந்திரனை கேட்டிருந்தான்.
“தீரா! உன்னோட இந்த பதட்டம், யுவி மேல நீ காட்டின கோபம் எல்லாமே எனக்கு உன்னை புதுசா காட்டுது! சொல்லு மனச திறந்து உண்மையை சொல்லு!”
“எதை சொல்ல சொல்ற யாதவா? யுவி மேல கோபத்தை காட்டல. அவ மேல எனக்கு கோபமும் வராது. ஆனா, யாமினி இப்படி இருக்கிற பதட்டத்தில் தான் பல்லைக்கடிச்சு பேசிட்டேன். ஏன்னா இன்னிக்கு யாமினி கிட்ட ப்ரொபோஸ் பண்ண நினைச்சிருந்தேன். பட் அவ கிளாஸ்க்கு வரல.
அந்த வருத்தத்துல இருக்கும் போது சிக்னல்ல அவங்களைப் பார்த்துட்டேன். அந்த கோபமும் இப்போ மனசுல இருந்ததுனாலக் கூட யுவி கிட்ட கத்தியிருப்பேன்!! சாரி டா யுவி!!” என்ற யதீந்திரனை யாதவன் நெருங்கி வந்து அணைத்தான். யுவராணியும் அவனின் மனநிலை புரிந்ததால், அவனின் அருகில் சென்று கைகளைப் பற்றிக்கொண்டாள்.
யதீந்திரன் ‘அவங்களை’ பார்த்துட்டேன் என்று சொன்னதும் யாரைப் பார்த்து இந்த கோபம்? என்று ரோஜா மட்டும் தான் யோசித்தாள். யாதவனுக்கும், யுவராணிக்கும் அந்த ‘அவங்க’ யார் என்று தெரிந்ததால் யதீந்திரனை சமாதானம் செய்ய முயன்றார்கள்.
யாதவன் இன்னும் ரோஜாவிடம் யதீந்திரனின் வாழ்க்கையில் நடந்திருந்ததைப் பற்றி கூறியிருக்கவில்லை.
“இன்னிக்கு உங்க யார் கிட்டயும் பேசற மூட் கூட இல்லை எனக்கு! கொஞ்ச நேரம் அமைதியா இருக்க தான் நினைச்சேன். அப்போ தான் நீ மெசேஜ் செஞ்ச. அந்த பொண்ணு பாவம்ன்னு நினைச்சுக்கிட்டு உனக்காக வெயிட் செஞ்சுட்டு இருந்தேன்.
நீ வந்ததும் பார்த்தா யார் கிட்ட காதலை சொல்ல போனேனோ அவளை சுயநினைவு இல்லாம பார்த்ததும் அதிலும் அவளுக்கு வந்த ஆபத்தை நினைச்சதும் உடம்பெல்லாம் நடுங்கிடுச்சு. அந்த பதட்டத்துல தான் பேசியிருப்பேன் யாதாவா!”
“சரி விடு தீரா, பார்த்துக்கலாம். எல்லாம் சரியா போகும்!” என்ற யாதவன் மறந்தும் அந்த ‘அவங்களை’ பற்றி பேசவில்லை.
ஆனால் யதீந்திரன் முகத்தில் இருந்த சோகம் மாறவேயில்லை. யாமினியையே கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
யுவராணிக்கு யாமினியை பிடிக்காமல் போனாலும், யதீந்திரனின் சோகத்தை போக்க நினைத்தாள்.
“தீராண்ணா அப்போ காலைல நான் சொன்ன மாதிரி இரண்டாவது அண்ணி ரெடியா? என்னை விட சின்னவளா இருப்பா போல இருக்கே கண்டிப்பா நான் அண்ணின்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.!” என்று சகஜமாக உரையாட ஆரம்பித்தாள்.
“அவ வயச பார்த்ததுமே எனக்கும் கொஞ்சம் தயக்கம் தான் டா யுவி! பட் காதலுக்கு முன்ன வயசெல்லாம் ஒரு தடையா?ன்னு என்னை நானே கேட்டுக்கிட்டு தான் இன்னிக்கு இவை கிட்ட ப்ரொபோஸ் செய்ய நினைச்சிருந்தேன். ப்ப்ச் எல்லாம வேஸ்ட்டா போச்சு!!” என்று நொந்துக்கொண்டான் யதீந்திரன்.
அழைப்புமணியின் ஓசை அவர்களின் பேச்சுக்களை தடை செய்தது.
யதீந்திரனே சென்று கதவை திறந்தான்.
கதவை திறந்தவனிடம் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டாள் யசோதரா.
யாமினியைவிட ஓரிரு வயதுகளே அதிகமிருக்கும் ஒரு சின்னப் பெண்ணை அங்கே சற்றும் யதீந்திரன் எதிர்ப்பார்க்கவில்லை.
தங்கை யுவராணியின் வயதை ஒத்தவள், யாமினியைவிட ஐந்து வயது மூத்தவள் என்பது யதீந்திரன் அறிந்திருக்க நியாயமில்லை.
யசோதரா உள்ளே நுழையும்போதே கண்களால் ஒவ்வொருவரையும் அளந்துக்கொண்டே தங்கை யாமினியை தேடினாள்.
தங்கையை கண்டதும் அவளின் அருகில் விரைந்தவள், “யாமி, யாமி!!” என்று லேசாக கன்னத்தை தட்டியவாறே எழுப்பினாள்.
அக்காவின் தொடுகையை உணர்ந்த யாமினி, “யழ்துக்கா!!” என்று கூறியவள் அக்காவின் மடியில் தலையை வைத்து படுத்துக்கொண்டாள்.
“பனையூர் கிட்ட தான் யாமினியை பார்த்தேன் சிஸ்டர்!!” என்று பேச ஆரம்பித்தான் யாதவன்.
“தேங்க்ஸ் பிரதர்!” என்றவள் தங்கையை எழுப்பும் வேலையில் இறங்கினாள்.
“ட்ரிங்க்ஸ் சாப்ட்டிருக்கா போல இருக்கு.! இருங்க லெமன் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன்.” என்ற ரோஜாவை நன்றியுடன் பார்த்தாள் யசோதரா.
“இவங்களுக்கு எத்தனை நாளா இந்தப் பழக்கம் இருக்கு?” என்று நேரடியாக கேட்டாள் யுவராணி.
அதில் மனதில் அடிவாங்கிய யசோதரா ஒன்றுமே பேசாமல், அவளை தீர்க்கமாகப் பார்த்தாள்.
அந்தப் பார்வையில் தானாகவே “சாரி!!” என்றயுவராணி, கண்களாலேயே யதீந்திரனிடமும் மன்னிப்பை யாசித்தாள்.
“உங்க கேள்விய தப்பு சொல்ல முடியாது. விடுங்க!” என்றவள், “எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி நாங்க கிளம்பறோம்!” என்று கிளம்ப முயன்றாள் யசோதரா.
யதீந்திரன் தவிர மற்ற யாருடனும் அறிமுகம் ஆகியிருக்காததால், யுவராணியின் பெயர் யசோதராவிற்கு தெரியவில்லை.
அந்த பெயர் தெரியாத பெண்ணின் கேள்வி அவளின் மனதை தைத்தது.
தங்கையின் நிலையும் கவலையை கொடுத்திருந்தது.
ட்ரீட் என்று சொன்னவள் இவ்வளவு நேரமாக வீட்டிற்கு வரவில்லையே என்ற கவலையுடன் திரும்ப திரும்ப யாமினியின் அலைபேசிக்கு முயன்று கொண்டிருந்தாள். ரிங் போனதே தவிர யாமினி போனை எடுக்கவேயில்லை. அதில் கொஞ்சம் பயந்து தான் போனாள் யசோதரா.
அந்த நேரத்தில் தான் யதீந்திரன் அழைத்து தகவலை சொன்னதும், கனத்த மனதுடன் கிளம்பி இங்கு வந்திருந்தாள்.
மயங்கிய நிலையில் இருக்கும் தங்கையைப் பார்த்து, எத்தனை நாள் இந்த பழக்கம்? என்று கேட்டதும் மனதினுள் மாண்டு தான் போனாள் யசோதரா.
யாமினிக்கு அவள் சகோதரி அல்ல அன்னை. எந்த தாய்க்குமே பெண்ணின் இந்த நிலையை கண் கொண்டு பார்க்கவே முடியாது தான். அதேப்போல தான் இந்த கன்னி தாய்க்கும் யாமினியின் நிலையை பார்க்கவே முடியவில்லை.
மனதினுள் அழுதுக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து யுவராணி கேட்ட கேள்வியினால் மேலும் துவண்டு போனாள்.
இன்னும் சற்று நேரம் இங்கயே இருந்தால், மனதின் அழுகை பெரிய கேவலாக வெடித்துவிடும் என்று தெரிந்ததால் தான் அங்கிருந்து செல்லும் முடிவை எடுத்தாள் யசோதரா.
“சாரி யசோதரா!! என்னோட சிஸ்டர் யுவராணி கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு இருக்கிறதுனால தான் இந்த கேள்வி! யாமினி இந்த நிலைல இருக்கும்போது, இங்க இருந்து உடனே கிளம்பவேண்டாமே! ப்ளீஸ் ட்ரை டு அன்டர்ஸ்டான்ட்.” என்று இறைஞ்சினான் யதீந்திரன்.
அவனுக்கு யாமினி மயக்கம் தெளிந்து எழுந்தால் தான் நடந்தவற்றை முழுமையாக அறிந்துக்கொள்ள முடியும் என்று தோன்றியது. இப்பொழுது இவர்கள் கிளம்பி சென்றால் அது முடியவே முடியாது என்ற நிதர்சனத்தையும் புரிந்து தான் யசோதராவிடம் இறைஞ்சிக்கொண்டிருந்தான்.
“யுவராணி ரொம்ப வருத்தப்பட்டுக்காதீங்க, உங்க நிலைல நான் இருந்திருந்தா கூட இப்படி தான் கேள்வி கேட்டு இருப்பேன்.!” என்று நேரடியாக யுவராணியிடம் பேசி அவளின் குற்ற உணர்ச்சியை முதலில் குறைத்தாள் யசோதரா. பின்,
“யதீந்திரன் சார், என்னோட கார்ல தான் வந்திருக்கேன். வீட்டுக்கு நாங்க சேஃபா ரீச் ஆகிடுவோம். யாமிக்கு இப்போதைக்கு மயக்கம் தெளியற மாதிரி எனக்கு தெரியல. அவளுக்கு தேவை நல்ல உறக்கம். அதே மாதிரி உங்களை எல்லாம் இந்த அளவுக்கு டிஸ்டர்ப் செஞ்சதே போதும். இனிமேலும் தொந்தரவு செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க சார்!” என்றாள்.
அதற்குள்ளாக லெமன் ஜூஸ் போட்டு எடுத்து வந்த ரோஜா யாமினிக்கு புகட்ட அருகில் சென்றாள். அதைப் பார்த்த யசோதரா, ரோஜாவிற்கு நன்றி உரைத்துவிட்டு, அவள் கையில் இருந்த ஜூஸை வாங்கி தங்கைக்கு புகட்ட ஆரம்பித்தாள்.
யசோதராவின் பொறுமையுடன் பேசும் பாங்கு, தங்கையை பாசத்துடன் கவனிக்கும் விதம் மற்றும் அவளின் அழகு எல்லாம் யுவராணிக்கு மிகவும் பிடித்து இருந்தது. ‘இந்த தீராண்ணா இந்தப் பொண்ணையே காதலிச்சு இருக்கலாம்!’ என்று மனதினுள் நினைத்துக்கொண்டாள்.
ஆனால் யதீந்தீரனுக்கு யசோதராவைப் பார்த்து ஒரு பிரமிப்பு கலந்த மரியாதை மட்டுமே!!
அவனுக்கு யாமினியை மட்டும் தான் காதலியாக பார்க்க தோன்றியது. யாமினியின் குழந்தை குரலில், பொம்மை போன்று இருக்கும் அழகில் தான் அவன் மயங்கினான்.
கொஞ்சம் கொஞ்சமாக புகட்டிக்கொண்டிருந்த ஜுஸ் யாமினியின் வயிற்றில் போனதுமே, அதுவரை அவள் சாப்பிட்டிருந்த அனைத்துமே வாந்தியாக வெளியேறியது.
யசோதரா அவளை மடியின் போல் போட்டு புகட்டிக்கொண்டிருந்ததால் அவள் உடைகள் அனைத்தும் நனைந்தன. இதனை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை அவள். தங்கையின் நிலையைப் பார்த்ததும் அவளையறியாமலே கண்களில் நீர் சொரிந்தது.
யதீந்திரன் விரைவாக அவளின் அருகில் சென்று யாமினியின் தலையைப் பிடித்துக்கொண்டு, கைக்குட்டையை எடுத்து அவளின் வாயை துடைத்துவிட்டான். முகத்தில் சிறிது அருவெறுப்பில்லை மாறாக இந்த நிலையில் அவளைப் பார்க்கும் வருத்தம் மட்டுமே!
ரோஜா யசோதராவை உள்ளே அழைத்து சென்று யுவராணியின் உடையை எடுத்துக்கொடுத்தாள். யசோதராவின் கண்களை துடைத்துவிடவும் மறக்கவில்லை.
யசோதராவிற்கு உடையை எடுத்துக் கொடுத்த ரோஜா, யாமினிக்கு ஒரு உடையை எடுத்து வைத்து விட்டு யாமினியின் அருகில் சென்றாள்.
“தீரன், நான் பார்த்துகிறேன்! என்ற ரோஜாவிடம் நன்றிப் பார்வைப் பார்த்துவிட்டு யாதவனுடன் வீட்டின் வெளியே சென்றான்.
ரோஜா யாமினியின் உடையை களைய ஆரம்பிக்கும் போதே யசோதராவும் அங்கே வந்து ரோஜாவிற்கு உதவினாள்.
அப்போது யசோதராவின் அலைபேசி அடித்தது.
எடுத்து காதில் வைத்ததுமே,
“ஹலோ யதுக்கா, நான் சுஜி!! யாமினி அவள் போனை எடுக்க மாட்டேங்கிறா! கொஞ்சம் அவளை கூப்பிடுங்க!” என்றவளின் கையில் தான் யாமினியின் அலைப் பேசி இருந்தது.