விலகிச்செல்வது ஏனோ..?? -19
அமைதியாய் கார் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் நுழைந்தது…காரை ஒரு ஓரமாய் நிறுத்தியவன் தூங்கிக்கொண்டு இருந்த நந்துவை எழுப்பினான்…தூக்கத்தில் இருந்து விழித்த நந்து அப்போது தான் பார்த்தான் கிருஷ்ணகிரியை வந்தடைந்ததை…பின் காரில் இருந்து இறங்கியவன் உள் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை கொண்டு முகத்தினை கழுவினான்…
பின் தனது கைக்குட்டையை கொண்டு முகத்தை அழுந்த துடைத்த நந்துவின் முன் தனது பயண பையோடு நின்று கொண்டு இருந்த
வருவினை கேள்வியாய் அவன் கேள்வியாய் நோக்கவும்,நந்துவின் பார்வையில் இருந்த கேள்வியை உணர்ந்த வரு“நானே வீட்டுக்கு போறேன்டா…இங்க இருந்து கொஞ்ச நேரம் தான…ஏற்கனவே என்னால உனக்கு சிரமம்…”என சொல்லியவனின் கண்கள் அவனையும் அறியாமல் ஜெயஸ்ரீயினை பார்த்துவிட்டு மீண்டது..
கண்மூடி உறங்குபதுபோல் நடித்துக்கொண்டு இருந்தவளின் காதில் வரு சொல்லியது தெளிவாய் விழுந்தது…எல்லாம் தன்னால் தான் என்றும் அவளுக்கு தெரிந்தது…தனக்குள் ஏற்படும் வேதனையை கூட விழுங்க முடியாமல் அமைதியாய் சிலைபோல் அமர்ந்து இருந்தாள்…
வருவின் கண்கள் ஜெயஸ்ரீயின் மீது படிந்து மீண்டதை கண்ட நந்து,இன்னும் வரு ஜெயஸ்ரீயின் பாரா முகத்தினை தான் நினைத்து வருந்துகிறான் என எண்ணி “சாரி டா மாப்புள்ள…அவ ஏதோ கோவத்துல செஞ்சிட்டா..அதையே இன்னும் மனசுல வச்சிட்டு இருக்காத டா…”என்றான் ஆறுதலாய்..
அவனை பார்த்து சோக புன்னகை ஒன்றை உதிர்த்தவன் “நான் எதுவும் நினைக்கலடா…நான் அப்பவே அதை எல்லாம் மறந்துட்டேன்…”
என்றவன் வாய் தான் அதை சொன்னதே தவிர அவனது மனமோ ஜெயஸ்ரீயினை இம்மியும் மறக்காமல் நினைத்துக்கொண்டு தான் இருந்தது,இருக்கிறது இந்நொடிவரை…
சிறிது நேரம் ஜெயஸ்ரீ அவளது நடிப்பை விட்டுவிட்டு தன்னை நோக்குவாள் என எண்ணி இருந்தவனின் எண்ணத்தில் மண்ணை கணக்கே இல்லாமல் அள்ளிபோட்டு கொண்டு கண்ணை மூடியே நிலையிலேயே இருந்தாள் வருவின் ஜெயஸ்ரீ…
நந்துவை நோக்கியவன் “சரி டா..நான் கிளம்புறேன்..நேரம் ஆகுது…உங்களுக்கும் நேரம் ஆகிட்டே இருக்கு…சீக்கிரம் கிளம்பு…”என்றான்..
நந்து “ஏன் டா..இப்படி பண்ற..இவ்வளவு தூரம் வந்துட்டு,கொஞ்ச தூரத்துக்கு நடந்து போகனுமா,வா நானே கார்ல கொண்டு போய் விட்றேன்..”என்றான்…அதனை “வேண்டாம்”என மறுத்தவன் தனது தோளில் பையினை மாட்டிக்கொண்டு “நீ இங்கவே இருந்தா இப்படி தான் சொல்லுவ,முதல்ல நீ வண்டியை கிளப்புற வழியை பாரு…”என்றான் விடாபிடியாக…
அவனிடம் இதற்கு மேல் பேசி எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என உணர்ந்தவன்,காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்தான்…நந்து காரை இயக்காமல் அமைதியாய் இருப்பதை கண்ட வரு “டேய்..இப்போ வண்டியை எடுக்கிறியா.??..இல்லையா…??”என்றான் சற்று கோவமாக..
நந்து “இதோ போறேன் டா கிராதகா..”என்றவன் வருவிடம் இருந்து தலை அசைப்போடு விடைபெற்றுக்கொண்டு காரை இயக்கினான்…போகும் காரினையே பார்த்துக்கொண்டு இருந்தவன் கண்கள் ஒரு முறை ஜெயஸ்ரீ தன்னை பார்க்கமாட்டாளா..?? என ஏங்கி தவித்தது..ஆனால் அவனின் ஏக்கம் ஜெயஸ்ரீக்கு புரிந்தால் தானே..
அதற்கு பிறகு நடு ரோட்டில் நிற்பது சரியில்லை என்று உணர்ந்து வீட்டை நோக்கி தனது நடையை போட்டான்…இனிமேல் அவளிடம் எப்படி பேசுவது,அவளிடம் பேசுவதற்கு முன்பு நந்துவிடம் பேசிவிடலாமா…??,என பல வகை யோசனையோடு வீட்டில் அவன் காலடி எடுத்து வைக்கவும் “மாமா,சித்தப்பா,அண்ணா..”என அவனின் சொந்தகார குட்டிகள் சந்தோசமாய் அவனை சூழ்ந்து கொள்ளவும்,சிந்தனை எல்லாம் ஒதுக்கி வைத்தவன் “டேய் குட்டிகளா…??..என்ன எல்லோரும் இங்க இருக்கீங்க…என்ன விஷயம்..”என்றான் அவர்களுக்கு இணையாய் சந்தோசத்தோடு
அவர்களை அணைத்துக்கொண்டு…
அவனின் தோளில் சாய்ந்த ஒரு சுட்டி “இன்னைக்கு நா உன்னை பைய பாத்க்க வந்து இருக்கே மாமா…”என்றாள் அவள் மொழியில் அந்த 7 வயது சுட்டி…
அவளின் சொல்வது புரிந்து வாய்விட்டு சிரித்தவன் “என்னது…என்ன பையன் பார்க்க வந்து இருக்கியா…அப்போ என்னோட வருங்கால பொண்டாட்டி நீ தானா…??”என்றான் அவளிடம் ரகசியமாக…
அவன் அவளிடம் அப்படி பேசுவதை பிடிக்காத இன்னொரு வாலோ “சித்த பா…இவ எனக்கு சித்தியா எல்லாம் வேண்டாம்…இவ சரியான ராங்கி…”என்றாள் 7 வயது வாலு அச்சுட்டியை முறைத்துக்கொண்டே…
வாலை கண்ட வரு “அட நம்ப வாலு குட்டி இங்க தான் இருக்கா…ஆமா நீங்க எப்போ வந்தீங்க..”என்றான் அவளை தன் கையின் அருகில் அணைத்துக்கொண்டே…
“நான் நான் நாளைக்கே வந்தேன்..”என்றவள் “சித்த பா ,இவளை நீ கட்டிக்க மாட்ட தானா…”என்றாள் அவளது காரியத்தில் கண்ணாக…
சுட்டியை அவன் காண அவளோ இவன் பதில் என்னவாக இருக்கும் என பார்த்துக்கொண்டு இருந்தது…சுட்டியின் கண்ணில் வாலுவிடம் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையும்,வாலுவின் கண்ணில் சுட்டியிடம் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது..
இருவரையும் மாறி மாறி பார்த்தவன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்க,”அண்ணா..”என்று ஒரு பையன் இருவரையும் தகர்த்துவிட்டு அவனின் மேல் ஏறிக்கொண்டான்…
வாலுவும் சுட்டியும் அவனை முறைத்துக்கொண்டு அழுவதற்கு தயாராய் உதட்டை பிதுக்கிக்கொண்டு நிற்க,வருவிற்கு நிலைமையை எப்படி சமாளிப்பது என்ற தெரியவில்லை…அவனை காப்பது போல “கண்ணா,ஜானு,நிஷா..”என மூவரையும் அழைத்துக்கொண்டு வெளியில் வந்த 35 வயது ஒத்த பெண் வருவினை கண்டு “ஹே…வரு,நீ எப்போ வந்த..என்ன வாசல்ல நிக்கிற..”என்றவள் அவன் பதில் சொல்லும்முன் “அக்கா வரு வந்தாச்சு…”என்று உள்நோக்கி குரல் கொடுத்தாள்…
“அப்புறம் வரு,எப்படி இருக்க,பார்த்து ரொம்ப நாள் ஆச்சு..”என்றாள் அக்கறையோடு..அவளை பார்த்து மெலியதாய் புன்னகைத்தவன் “எனக்கு என்ன சிவா கா…நான் நல்லா இருக்கேன்…நீங்க எப்படி இருக்கீங்க..”என்றவன் “ஆமா மாமா எல்லாம் வந்து இருக்காங்களா..”என்றான் அவரிடம்..
அவனின் கேள்விக்கு “ம்கும்…உன்னோட மாமா வந்துட்டாலும்..எப்போ பாரு கடை கடை அதையே கட்டிட்டு அலையிறார்..அவர் என்னை கட்டிகிட்டதுக்கு பதிலா அந்த கடையையே கட்டி இருந்து இருக்கலாம்..”என்றாள் கோவமாக…
வீட்டில் இருந்து வெளியே வந்த சாரதா,சிவகாமியின் புலம்பலை கேட்டவர் “வீட்டுக்கு வந்த பையன்கிட்டையும் உன்னோட புலம்பலை ஆரம்பிச்சிட்டியா..”என அவளை செல்லமாய் திட்டியவர் “வா வரு,எப்படி இருக்க..”என்றார் அவனிடம்…
“ஹ்ம்ம்…நான் நல்லா இருக்கேன் மா..நீங்க எப்படி இருக்கீங்க..”என்று அவரிடம் நலம் விசாரித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்…வீட்டில் யாரும் இல்லாமல் போல் இருப்பதை கண்டு “எங்க மா..அப்பா,அண்ணா எல்லாம்..”என்றான் அவரிடம்…
சாரதா “அப்பா உரக்கடைக்கு ஏதோ லோட் வந்து இருக்காம்,அதை பார்க்க போயிருக்கார்…யாதவ் அவனோட ப்ரெண்டை பார்க்க போய் இருக்கான்…”என்றார் அவனின் கேள்விக்கு பாதிலாய்…
“ஓ…”என்றவன்,”சரி மா…நான் ரூம்க்கு போறேன்…”என்று அவனின் அறைக்கு சென்றான்…அறைக்கு சென்றவன் கண்ணில் அவன் வைத்து இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடப்பதை பார்த்து கோவம் வந்தது…எப்போதும் அவன் அறையை யாரும் பயன்படுத்த விடமாட்டான்..அவனுக்கு என்று தனி அறையும்,யாதவுக்கு என்று ஒரு அறையும் அவனது பெற்றோர்களுக்கு என்று ஒரு அறையும் என அனைவருக்கும் தனித்தனி அறையே அவனது பருவ காலம் முதல்…
யாதவும் சரி,வருவும் சரி எப்போதும் அறையினை தூய்மையாய் வைத்துகொள்வதில் வல்லவர்கள்…அறைக்குள் இருந்த நிலை பிடிக்காமல்,சில நிமிடம் யோசித்தவன் பின் மடமடவென அறையினை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தான்…
”வரு…”என்று அழைத்துக்கொண்டு சாரதா அவனின் அறைக்குள் நுழைய செய்வதை நிறுத்திவிட்டு அவரை முறைக்க ஆரம்பித்தான்.
அவனின் முறைப்பை கண்டவர் “என்னை ஏன்டா முறைக்குற..அப்பா தான் உன்னோட ரூமை சிவகாமிக்கு ஒதுக்கி கொடுக்க சொன்னார்.
யாதவ் ரூம்க்கு அவனோட ப்ரண்ட் ரெண்டு நாள் வந்து தங்கி இருந்தான்…நானே சரி பண்ணலாம்னு இருந்தேன்,,,ஆனா வாலும் சுட்டியும் எது பண்ணாலும் கலைச்சி போட்றாங்க…அவங்க போன பிறகு பண்ணலாம்னு பார்த்தேன்…”என்றவர் “சரி..சரி..நீ போ..மீதியை நான் பார்த்துக்குறேன்…வெந்நீர் வச்சு இருக்கேன்..குளிச்சிட்டு வா..சாப்பிடலாம்…”என்றார் அவனிடம்…
“சரி மா..அஞ்சு நிமிஷத்துல வந்துட்றேன்..”என்றவன் தனது துணிகளோடு குளியல் அறைக்கு சென்றான்…அவன் குளித்து முடித்துவிட்டு வரவும் சாரதா அவனுக்கு சாப்பிட தேவையானதை எடுத்துவைக்க ஆரம்பித்தார்…
“ஷ்..அப்பா…எவ்ளோ நாள் ஆச்சு..இந்த புதினா சட்னி வாசம் பிடிச்சு…”என்றவன் சாரதா தோசையும் சட்னியும் தட்டில் வைத்து அவனிடம் கொடுக்க அதனை சாப்பிட ஆரம்பித்தான்…
சாரதாவும் அவனின் அருகில் அமர்ந்து அவனுக்கு பரமாறிகொண்டு இருந்தார்…”பாட்டிடிடி….”எனக்கும் எனக்கும் என மூவரும் ஓடி வந்து ஆளுக்கு ஒரு சேரை பிடித்துக்கொண்டு கேட்க “டேய்..மெதுவா டா..எதுக்கு இப்படி கால்ல சக்கரத்தை கட்டிக்கிட்டு ஓடி வறீங்க..”என்று பின்னாலே மூச்சு வாங்க சிவகாமி ஓடி வந்தாள்…
சின்ன சிரிப்போடு வரு சாப்பிட,”புள்ளைகளை திட்டாத சிவகாமி…”என அவளை கடிந்தவர் “இருங்க செல்லங்களா..உங்களுக்கும் சாப்பாடு எடுத்துட்டு வரேன்..”என்றுவிட்டு மூவருக்கும் பரிமாறினார்…
“இதுங்களா பிள்ளைகள்,பிசாசுங்க..என்ன ஓட்டம் ஓட்றாங்க…கால்ல சக்கரம் கட்டின மாதிரி..என்னால முடியல…”என்றுவிட்டு சேரில் அமர்ந்தாள்…
“பிசாசோட புள்ளையும் பிசாசு தான மாமா…”என படு சுட்டியான சிவகாமியின் பெண் ஜானு கேட்கவும்,தண்ணீர் குடித்துகொண்டு இருந்த வருவிற்கு புரையேறியது…
“டேய்ய்ய்…பார்த்து பார்த்து..இப்போ தான் இது எல்லாம் ஸ்டார்ட் ஆகி இருக்கு..இதுக்கே இப்படியா…”என அவனின் தலையை தட்டிக்கொண்டு அவனின் அருகில் அமர்ந்தான் அவனின் அண்ணன் யாதவ்…
வாலோ ஒரு படி மேலே சென்று “குண்டா இருந்தா ஓடனுமாம்,அப்போ தான் உடம்பு குறையுமாம்..ஆமா தானா சித்த பா…”என்றாள் சிவாகாமியின் அக்கா பெண் நிஷா..
“அடிப்பாவிகளா…இதுக்கு மேல இங்க இருந்தா என்னை கஞ்சி ஆக்கிடுவீங்க…நான் போறேன் சாமி…”என அலறியவன் “டேய்..யாதவ் நான் உன்கூட அப்பறமா பேசுறேன்…”என போகிற போக்கில் சொல்லியவன் “அம்மா நான் தூங்க போறேன்…நைட் சாப்பிடும்போது எழுப்புங்க…”என கத்திக்கொண்டே அறைக்கு ஓடினான்…
யாதவ் அவனை பார்த்து சிரிக்க,”யாதவ் மாமா…நீங்க
சொல்லுங்க..”என்று சுட்டி ஆரம்பிக்க,”அய்யோ..நான் வரல இந்த ஆட்டத்துக்கு…”என்று விட்டு ஓடினான் யாதவும்…
சிவகாமி “அடிங்க…என்னையே கலாய்க்கிறீங்களா..உங்களை..”என துரத்த சுட்டியும் வாலும் அங்கு இருந்து ஓட்டம் பிடித்தனர்…
மூச்சு வாங்க அறைக்குள் வந்து கட்டிலில் படுத்தவன் முகமும் மனமும் என்றும் இல்லாமல் இன்று அமைதியாய் இருந்தது…போனை கையில் எடுத்தவன்,லாக் பட்டனை அழுத்த திரையில் ஜெயஸ்ரீயின் முகம் ஒளிர்ந்தது…
“என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ரொம்ப பேசிட்டடி நீ…அந்த அளவுக்கு நான் உன்னை கஷ்டபடுத்துறேனா..எவ்ளோ கஷ்டபட்டு இருக்க என்னால…அதை எப்படி நான் சரி செய்ய போறேன்…உன்னோட இந்த சிரிப்பு முகம் தான் உனக்கு அழகுடி,இன்னைக்கு நான் வரும் போது பார்த்த முகம் சத்தியாம என்னால அதை பார்க்க முடியலடி…என்னை பார்க்க கூட பிடிக்காம எப்படி உன் கண்ணை இறுக்கி மூடிட்டு இருந்த நீ…உன்னோட இந்த ஒரு முறை முக திருப்பலே எனக்கு இப்படி ஒரு வேதனையை தருதுனா…நான் உன்கிட்ட எத்தனை முறை முகம் திருப்பி இருக்கேன்…அப்போ எல்லாம் நீ எப்படி கஷ்டபட்டு இருப்ப..”என அவளின் புகைபடத்திடம் பேசிக்கொண்டு இருந்தவனின் விரல்கள் அவளின் முகத்தினை விரல்களால் வருடியது மென்மையாக…
“சத்தியமா இனிமேல் இப்படி ஒரு பைத்தியகாரதனம் பண்ண மாட்டேன்டி,எவ்ளோ சீக்கிரம் முடியோ அவ்ளோ சீக்கிரம் நந்துகிட்ட என்னோட காதலை சொல்லிட்டு அப்புறம் உன் கிட்ட என்னோட விருப்பத்தை சொல்றேன்…அவன் என்னை “ச்சீ…நீயா இப்படினு ஒரு வார்த்தை சொல்லிட கூடாதுடி…அப்படி சொன்னா என்னால தாங்கிக்க முடியாது…அவன் மனசுல உன்னை பத்தின நினைப்பை முதல்ல கேட்டு தெரிஞ்சிக்கணும்..”கூடிய சீக்கிரம் “என்னை கட்டிக்க சம்மதமா..“ அப்படின்ற இந்த மூணு வார்த்தையை உன்கிட்ட என்னோட தயக்கத்தை எல்லாம் ஒதுக்கிட்டு வந்து சொல்லுவேன்..”என உறுதிகொண்ட பின் நெஞ்சில் இருந்த பாரமெல்லாம் இப்போது விலகியது போல இருந்தது அவனுக்கு…
பின் மீண்டும் அவளின் முகத்தை திரையில் கண்டவன் “ஷ்…அப்பா..இன்னைக்கு என்ன சூடா இருந்தீங்க மேடம்..இந்த வாய் இன்னைக்கு என்ன போடு போட்டுச்சு என் கிட்ட…”என அவளிடம் பேசியவனின் விரல் இப்போது அவளது உதட்டினை வருடியது…பின் மெலிதாய் சிரித்துக்கொண்டு அத்திரையில் கண்ட அவளின் உதட்டில் மெலியதாய் தன் முத்திரையை பதித்தான்..
“பாவி,இப்படி என்னை உன் போட்டோ கூட புலம்பவிட்டுட்டியே.
.உன்னை என்ன பண்றேன் பாரு…”என சொல்லியவன் அவளது தலையில் செல்லமாய் கொட்டினான்…”ஆனாலும் நீ ரொம்ப மோசம்டி…கொஞ்சம் கூட உனக்கு என் மேல பாசமே இல்ல…எல்லாத்துக்கும் சேர்த்து உனக்கு இருக்கு இருடி என்கிட்டே..”என அவளை செல்லமாய் திட்டினான்…
இவன் இங்கு திட்ட அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்தவளுக்கு புரையேறியது…”பார்த்து மெதுவா…உன்னை யாரோ நினைக்கிறாங்க..”என நந்துவின் அம்மா மலர் சொல்லிக்கொண்டே அவளுக்கு தண்ணீரை புகட்ட,ஜெயஸ்ரீக்கு வருவின் நினைப்பு தான் முதலில் வந்தது “ஒரு வேளை அவன் தான் இப்போ நினைக்கிறானோ…”என எண்ணவும் செய்தது…
இவள் அவனை நினைத்துக்கொண்டு உணவை உண்ண ஆரம்பிக்க,நந்துவின் அப்பா மாணிக்கம்,மலரின் கேள்விக்கு “வேற யாரு நினைக்க போறா..எல்லாம் உன்னோட அண்ணாவா தான் இருக்கும்…”என்றார் சிரிப்போடு…
ஜெயஸ்ரீ விக்கித்து போய் நிமிர்ந்து அவரை பார்க்க,மாணிக்கமோ அவளை கவனிக்காது,மேலும் தொடர்ந்தார்..”விட்டா அவரு இப்பவே வந்து இருப்பார்..உன்னோட அண்ணிதான் பிடிச்சு வச்சி இருப்பாங்க..”என்றார் சிரிப்போடு…
அவர் சிரிப்பதை பார்த்து “அய்யோ…மாமா எதுக்கு இப்படி சிரிச்சு என் அக்காவை பயமுறுத்துறீங்க…பாருங்க அவளை எப்படி பயந்து போய் உட்கார்ந்து இருக்கா…”என ஜீவா மாணிக்கத்திடம் சொல்ல,அதற்கும் அவர் பெரிதாய் சிரிக்க தான் செய்தார்…
“மருமகளே…என்னோட சிரிப்பை பார்த்து தான் உன்னோட அத்தை என் கிட்ட மயங்குனதே…நீ என்ன இப்படி சொல்ற…”என அவர் கேட்க…”அய்ய…என் அத்தை உங்களோட சிரிப்பை பார்த்து மயங்குச்சா..இதை நான் நம்பனுமா..அதுக்கு வேற ஆளை பாருங்க..”என்றாள்…
ஜெயஸ்ரீயின் அருகில் வந்து “அக்கா இதுக்கு போய் எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்க,அவர் இருக்கார் டப்பா பீசு.. நீ வா…”என சொல்லி ஜெயஸ்ரீயினை உழுக்கியவள்,”மாமா இதுக்கு பிறகு இப்படி சிரிச்சு என்னோட அக்காவ பயமுறுத்தீனிங்க,அப்புறம் அத்தைக்கு தெரியாம இனிமேல் நான் குலாப் ஜாமூன் தரமாட்டேன்…”என மிரட்டியவள் போகிற போக்கில் வெடியையும் கொழுத்திவிட்டு சென்றுவிட்டாள்..
“என்னது குலாப்ஜாமூன்னா,இது எப்போ இருந்து,சுகர் அதிகம் ஆக இது தான் காரணமா,இனிமேல் நீங்க கேட்கற எந்த ஒரு பலகாரமும் இல்ல…பத்தியத்தை இனிமேல் தீவிரமா கடைபிடிக்க வேண்டியது தான்..சைடுல வேற இப்படி ஒரு விஷயம் ஓடுதா…”என மலர் மாணிக்கத்தை சாட துவங்கி இருந்தார்…
சுபாவும்,நந்துவும் இருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டு டீவியினை பார்க்க,மாணிக்கமோ அங்கு இருந்து நழுவிக்கொண்டு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தார் பெருமூச்சை ஒன்றை விட்டுக்கொண்டு…
நந்துவினை கண்டவர் “ஏன் டா..அப்பா கஷ்டபட்றாரே,உதவிக்கு வரலாம்ன்னு தோணுதா உனக்கு,இப்படி பொறுப்பே இல்லாம டீவிபார்த்துட்டு உட்கார்ந்துட்டு இருக்க..”என அவனை திட்ட…
நந்து “நான் பொறுப்பு இல்லாம இருக்கேனா..அந்த ராட்ச்சசியை மருமகள்னு சொல்லாதீங்கனு எத்தனை முறை சொல்லி இருக்கேன்..நீங்க கேட்டீங்களா,இப்போ தெரியுதா உங்க மருமகள் பத்தி,அவ அக்காக்கு ஏதாவது ஒண்ணு அப்படின்னா,எதுவும் யோசிக்காம கூட செய்யுற ஆளு அவ..அவகிட்ட போய் உங்களுக்கு எதிர்காலத்துல சப்போர்ட் கிடைக்கும்ன்னு எதிர்பார்க்குறது உங்க தப்பு,அது எல்லாம் விட அந்த ராட்ச்சசியை என்னோட தலையில கட்ட எல்லாம் பிளான் போட்றீங்க…இதுல நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணனுமா முடிவே முடியாது…”என அவரிடம் வாதம் செய்தவன் அடுத்து அவர் பேசும்முன் அங்கு இருந்து எழுந்து அறைக்கு சென்றுவிட்டான்…
மாணிக்கம் அவன் சென்ற திசையை நோக்கியவர் “இவன் என்ன இப்படி பேசுறான்,ஒரு வேலை இவனுக்கு ஜீவாவை பிடிக்கலையோ,நாம்ப தான் அவன் மேல நம்பளோட ஆசையை திணிக்கிறோமோ..”என எண்ணியவர் “எதுவா இருந்தாலும் காலம் வரும் போது பார்த்துக்கலாம்…”என அதற்கு அப்போதைக்கு முற்றுபுள்ளி வைத்தார்…
அவரின் அருகில் வந்து அமைதியாய் அமர்ந்த ஜீவா,”சாரி மாமா,தெரியாம உளறிட்டேன்..இனிமேல் சத்தியமா இப்படி பண்ண மாட்டேன்…அத்தைக்கு தெரியாம நான் தினமும் ஜாமூன் இல்லனா ரசகுல்லா தரேன்…”என ரகசியம் பேசியவள் ,பின் முகத்தை உர் என்று வைத்துக்கொண்டு “போகும் போது அந்த கொக்கு என்ன சொல்லுச்சு மாமா..என்னை கட்டிக்க மாட்டேன்னு தானா சொல்லுச்சு…”என கேட்க…
அவளது பாவனையை பார்த்தவர் சிரித்துக்கொண்டே “அப்படி எல்லாம் இல்ல டா..நீ தான் இந்த வீட்டு மருமக…அவன் கிடக்கிறான்,பிலக்கா பையன்…”என்றார் அவளிடம்…அவரின் பேச்சை கேட்டு சிரித்தவள் “பிலக்கா பையனா,அவனா,நீங்க வேற காமெடி பண்ணிட்டு..அவன் சரியான கொக்கு மாமா,அந்த கொக்கை என்ன பண்றேன் பாருங்க,வருங்காலத்துல…”என்றவள் மனதிற்குள் பெரிய திட்டத்தையே வகுக்க ஆரம்பித்தாள்…
“டேய் ஜீவு..என் பையன் பாவம்டா..நீ இந்த அளவுக்கு யோசிச்சா அவன் பாடு கஷ்டமா போகிடும்..கொஞ்சம் இப்போதைக்கு மனசு வை டா…”என கெஞ்சுவது போல் நடிக்க,அவளும் “சரி சரி,உங்கள் நிபந்தனை பரிசீலனை செய்யப்படும்..”என்று பெரிய மனதாய் அவருக்கு வரம் கொடுப்பது போல தன் கைகளை அவரின் முன் நீட்டி சொல்லினாள்…பின் இருவருமே சிரிப்புடனே அங்கு இருந்து அகன்றனர்…
மேலே அறையில் அமர்ந்து இருந்த நந்துவிற்கு கீழே பேசியது தெளிவாய் காதில் விழுந்தது…அவன் சிந்தனை எல்லாம் காலையில் வருவிடம் ஜெயஸ்ரீ நடந்து கொண்ட முறையை சுற்றியே இருந்தது…
அவளுக்கு என்னவாயிற்று,என்றும் இல்லாமல் இன்று மிகவும் கோவமாய் வருவிடம் நடந்துகொண்டாள்…இதை பற்றி முதலில் ஜெயஸ்ரீயிடம் பேச வேண்டும் என முடிவு செய்தவன் பிறகு தனது வேலைகளை பார்க்க சென்றான்…
ஜெயஸ்ரீயின் அலைபேசி அழைக்க அதை பார்த்தவள்,அதில் சுஜா என ஒளிரவும்,அழைப்பை ஏற்றவள்”ஹே சுஜா எருமை,எங்கடி இருக்க..ஒரு வார்த்தை கூட சொல்லாம அப்படியே ஓடிட்ட உன்னோட மாமா போன் வந்ததும்..சரியானவடி நீ..”என்று பொரிந்து தள்ளவும்…
சுஜா “ஹேய்…ஸ்ரீகுட்டி சாரிடி,இனிமேல் இப்படி பண்ணமாட்டேன்..மாமா தனியா இருந்தாரா..அதான் அவரை பார்க்க ஓடிட்டேன்..மீண்டும் வந்து பார்த்தா நீங்க இல்ல..நல்ல வேலை பேக் அங்கவே இருந்தது…நீங்க கூட எடுத்துட்டு போய் இருந்து இருந்தா கஷ்டமா போய் இருக்கும்…”
ஜெயஸ்ரீ “பேக் சேர்த்து தான் எடுத்து வச்சேன்…நந்து ஏதாவது எடுத்து வச்சு இருப்பான் அங்கவே…உன்னை எல்லாம் என்ன பன்றது..அப்படியே கலட்டிவிட்டுட்டு போயிட்டியே…உன்னோட மாமா சின்ன புள்ளையா என்ன,தனியா இருந்தா யாரவது தூக்கிட்டு போக…”என ஜெயஸ்ரீ மீண்டும் ஆரம்பிக்க..
சுஜா “செல்லம் அதான் சாரி கேட்டுட்டேன் இல்ல..ப்ளீஸ் செல்லம்,சின்ன புள்ளையை மன்னிக்க கூடாதா…??”என கெஞ்சலாக கேட்க..ஜெயஸ்ரீயும் “சரி சரி,இனிமேல் இப்படி பண்ணாத,உன்னை பெரிய மனசு பண்ணி மன்னிக்கிறேன்…”என்றாள் சிரிப்போடு..பின் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தனர்…
இன்றோடு ஜெயஸ்ரீ ஹாஸ்டல் வந்து சேர்ந்து 2 வாரங்கள் ஓடி இருந்தன..நந்துவின் வீட்டிற்கு சென்றவள்,பின் நந்து,ஜீவா,சுபாவுடன் தனது வீட்டிற்கு சென்றாள்..சென்றவள் அவளின் அன்னை தமையந்தியுடன் அரட்டை அடித்து,அவரிடம் செல்லம் கொஞ்சி,ஜீவாவுடன் விளையாடி,மகேஸ்வரனிடம் சிறிது அறிவுரை பெற்றுக்கொண்டு விடுமுறை நாட்களை இனிதாய் முடித்தவள்,விடுதிக்கு திரும்பி இருந்தாள்…
நாட்கள் அதன் போக்கில் கழிய வருவும்,ஜெயஸ்ரீ பார்ப்பதே அரிதாய் போனது…வருவிற்கு ப்ராஜெக்ட் வொர்க் இருப்பதால்,அதை செய்ய நண்பர்களோடு காலையில் செல்பவன்,மாலை வேளையில் மட்டுமே கல்லூரிக்கு திரும்புவான்…திரும்பி வருபவன் அவனது (GUIDE)கைட்டிடம் ரிப்போர்ட் காட்டி,சரி செய்து கொள்வான்…
அவனின் நண்பர்கள் மூவரும் அப்படியே வெவ்வேறு கைட்டிடம் ரிப்போர்ட் காட்டி சரி செய்து ப்ராஜெக்ட்டை செய்து கொண்டு இருந்தனர்…இப்படியே நாட்கள் செல்ல ப்ராஜெக்ட் வொர்க் ஓர் அளவிற்கு முடித்து இருந்த வரு ஜெயஸ்ரீயிடம் பேச எண்ணி வரு ஜெயஸ்ரீயினை அழைத்தான்..தனது தொலைபேசியில் வருவின் எண்ணை பார்த்தவள் அதனை ஏற்காமல் அமைதியாய் விட்டுவிட்டாள்..இப்படியே மூன்று முறை அலைபேசி அடித்து ஓய்ந்து போய் நிற்க “ஹே..போன் அட்டென்ட் பண்ண வேண்டியது தானா..”என சுபா சற்று எரிச்சலோடு கேட்க,”ராங்க் நம்பர்,அதான் எடுக்கல..”என சொன்னவள் அமைதியாய் கட்டிலில் படுத்துக்கொண்டாள்..
சிறிது நேரம் கழித்து மீண்டும் அலைபேசி அலற புது,எண் ஒளிரவும் “யாராய் இருக்கும்..”என்ற யோசனையோடு எடுத்தவள்
“ஹலோ..”என்றாள்..மறுபக்கம் அமைதியாய் இருக்க “ஹலோ..யாருங்க..லைன்ல இருக்கீங்களா..”என கேட்க…
அப்பக்கம் இருந்த வரு ”ஹ்ம்ம்…இருக்கேன்…”எனவும்,முதலில் யார் என அறியாமல் “போன் பண்ணிட்டு பேசமா இருந்தா எப்படி,யார் நீங்க..”என மீண்டும் கேட்க,”நான் யார்னு சொன்னா மட்டும் என் கூட பேசுடிவியா,என்னோட நம்பர்ல இருந்து போன் பண்ணா அட்டென்ட் பண்ணமாட்டன்னு இருக்க,இதே வேற நம்பர்ல இருந்து வரவும் அட்டென்ட் பண்ற…என் கூட பேச பிடிக்கலையா ஜெய்,எதுக்கு இப்படி பண்ற,ஏன் என்னை அவாய்ட் பண்ற…”என வரு கேட்க..
இப்போது புரிந்தது அவளுக்கு லைனில் இருப்பது வரு என்று…ஜெயஸ்ரீ எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க “பேசு ஜெய்,பேசாம அமைதியா இருந்தா எப்படி,”என மீண்டும் அவன் கேட்க…
போனை காதிற்கு கொடுத்துக்கொண்டே அறையைவிட்டு வெளியேறியவள்,ஹாஸ்டலில் இருந்த படிகளில் அமர்ந்தவள் “நீங்க சொல்றதையே நானும் சொல்லலாமே…முன்னாடி நீங்களும் தான் அமைதியா இருந்தீங்க,என்னை வேணும்ன்னே அவாய்ட் பண்ணீங்க..நான் அனுப்புன ஒரு மெசேஜ்க்கு கூட நீங்க பதில் அனுப்புல..அப்போ எனக்கும் இப்படி தான இருந்து இருக்கும்…அப்படியே இருந்துடலாம்,இப்போ எதுக்கு புதுசா இப்படி ஒரு பேச்சு வார்த்தை நமக்கு…”என்றாள் அழுத்தமாக…
வரு”ஜெய்..நான் பண்ணது தப்பு தான்,ஏதோ தெரியாம பண்ணிட்டேன்..ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோ..”என கெஞ்ச…ஜெயஸ்ரீக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது…
தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவள் “நீங்க எதுவும் புரியாம பண்ணல..எல்லாமே யோசிச்சு,தெள்ள தெளிவா தான் செஞ்சு இருக்கீங்க..ஆனா நான் தான் புரியாத லூசு மாதிரி நடந்து இருக்கேன்…ஒரு தடவை செஞ்ச தப்பே போதும்..இனிமேலும் நான் அந்த தப்பை செய்ய விரும்பல…நீங்க உங்க வழியில போங்க…நான் என்னோட வழியில போறேன்..அது தான் ரெண்டு பேர்த்துக்கும் நல்லது…”என்றாள் தெளிவாக…
வரு “ஜெய்…ஏன் முன்னாடி நடந்ததையே யோசிச்சிட்டு இருக்க,அதுக்கு நான் உன்கிட்ட ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுக்குறேன்..என்னோட உணர்வுகளை புரிஞ்சிக்கோ..”என சொல்ல…
ஜெயஸ்ரீ”என்னது உங்களோட உணர்வுகளை புரிஞ்சிக்கனுமா..என்னோட உணர்வை புரிஞ்சிக்காத உங்களோட உணர்வை நான் எதுக்கு புரிஞ்சிக்கணும்..ஏன் உங்களுக்கு மட்டும் தான் மனசுன்னு ஒண்ணு இருக்கா,எங்களுக்கு எல்லாம் இல்லையா…”என ஜெயஸ்ரீ கோவமாய் கேட்க…
வரு “ஜெய்…நான் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்ட…நான் அப்படி சொல்லல…”என அவளுக்கு அவன் மீண்டும் புரியவைக்க முயற்சிக்க…ஜெயஸ்ரீயோ புரிந்துகொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தாள்…
வரு “நாம்ப என்னைக்குமே இவ்வளவு நேரம் நார்மலா கூட பேசினது கிடையாது…ஏதோ ஒண்ணு உனக்கும் எனக்கும் இடையில இருக்கு..அது உனக்கும் தெரியும்…அந்த சம்திங் எப்படி வந்தது அப்படின்னு ரெண்டு பேருக்குமே தெரியாது…ஆனா இப்போ நீ கோவபட்ற மாதிரி நடிக்க தான் செய்றியே தவிர,உனக்கு கோவம் எல்லாம் எப்பவோ போச்சு…ஆனா ஏன் இப்படி நடந்துக்குற அப்படின்னு எனக்கு தெரியல…எல்லாமே இப்போ முகமூடி போட்ட மாதிரி இருந்தாலும்,ரெண்டு பேருக்குமே தெரியும் நாம்ப ஒவ்வொருத்தரும் என்ன நினைக்கிறோம்னு..கூடிய சீக்கிரம் உன்கிட்ட நான் வந்து பேசுவேன்..ஆனா அதுவரை உன்கூட நான் போன்ல பேசிட்டு தான் இருப்பேன்…”என வரு சற்று அழுத்தமாய் சொல்ல…
அவனின் பேச்சில் மூழ்கி இருந்தவள்,அவனது கடைசி வார்த்தையை கேட்டு “நீங்க போன் பண்ணா நான் பேசணுமா,முடியவே முடியாது…”என மறுக்க…”அப்படியா,சரி நீ எடுக்க வரைக்கும் கால் பண்ணிட்டேன் இருப்பேன்..இதே மாதிரி இன்னும் 50 சிம் கார்ட் வாங்கியாவது போன் பண்ணுவேன்..எப்படி வசதி..”என கிண்டலாய் கேட்க..
இவன் செய்தாலும் செய்வான் என எண்ணியவள் ஒன்றும் சொல்லாமல் “நான் போறேன்…”என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்…”ராட்ச்சசி ஒரு வார்த்தை சரினு சொன்னாளா..இவளை கட்டிட்டு என்ன பாடுப்பட போறனோ..”என சளித்தவன் பின் ப்ராஜெக்ட் வொர்க் மீதி இருப்பதை கவனிக்க சென்றான்..
அழைப்பை துண்டித்துவிட்டு படிகளில் அமர்ந்து இருந்தவளின் யோசனை எல்லாம் வரு சொல்லியதிலே இருந்தது..அவன் சொல்றது போல நமக்கும் அவனுக்கும் சம்திங் சம்திங்கா..இல்லை அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல..சம்திங் சம்திங் வந்து திரிஷாக்கும்,
ரவிக்கும் தானா,எங்களுக்குள்ள எப்பை வரும் என நினைத்தவள்,அப்போ நான் ஏன் அவன் முகத்தை திருப்புனதுக்கு ரொம்ப கஷ்டபட்டேன்..அவன் கூட பேசணும் அப்படின்னு தவிச்சேன்…என யோசிக்க,ஒரு மனமோ “அவன் முதல்ல இருந்து உன்கிட்ட அப்படி நடந்து இருக்கானா..சட்டுன்னு அவன் முகத்தை திருப்பவும் உனக்கு கஷ்டமா போயிருக்கும்…”என அவளுக்கு இலவச அறிவுரை வழங்க…அவளின் இன்னொரு மனமோ “அன்னைக்கு மெஸ்ல,ஒரு பையன் உன்னை பார்த்து முறைச்சிட்டு திருப்பிட்டு போனனே..அவன் போனது கூட உனக்கு பெருசா தெரியல இல்ல..அப்போ ஏன் வரு போனது மட்டும் உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..”என அதனின் பக்க வாதத்தை முன் வைக்க…
“ஆமா..அவன் முகம் திருப்புன போது கூட,ஏன் அப்படின்னு தான் நினைச்சோம்..ஆனா அதை பெருசா எடுத்துக்கல..ஆனா வரு அப்படி பண்ணும்போது உள்ளுக்குள்ள எவ்வளவு தவிச்சு போய் இருப்போம்..”என நினைக்க..ஒரு மனமோ “வருவும்,அவனும் உனக்கு ஒண்ணா..”என அவளை சாட…ஜெயஸ்ரீ சட்டென்று “இல்ல..எனக்கு வருவும் அவனும் ஒண்ணு இல்ல..எனக்கு வரு தான் முதல்ல..”என வேகமாய் பதில் அளிக்க,அப்போது தான் ஜெயஸ்ரீக்கும் தெள்ள தெளிவாய் விளங்கியது….அந்த சம்திங்…
முன்னே சிறு சலனம் இருந்து இருந்தாலும்..அதை எல்லாம் தெளிவு படுத்தாமல் இருந்தவளுக்கு இப்போது ஒரு தெளிவு பிறந்து இருந்தது…”ஒரு நாள் பேசியே என்னை இப்படி கவுத்துட்டானே…தினமும் பேசுனா..நம்ப பாடு திண்டாட்டம் தான் போலடி..கொஞ்சம் கேர் புல்லா இருக்கணும்..இந்த வருகிட்ட…”என தனக்கு தானே சொல்லிகொண்டவள்,பின் அறைக்கு திரும்பினாள்….
அதற்கு பின் இருவரும் சகஜமாய் போனில் பேசிகொண்டனர்…நாட்கள் யாருக்கும் காத்திராமல் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடியது…ஜெயஸ்ரீ இரண்டாம் வருடமும்,வரு M.C.A இறுதி ஆண்டும் படித்துக்கொண்டு இருந்தனர்…
அன்றொரு நாள் குறிப்புகளை எல்லாம் எடுத்து வைக்க தேவையான புத்தகங்களை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள் ஜெயஸ்ரீ…சுஜா “ஹேய்ய்ய்….ஜெய்குட்டி..”என சொல்லிக்கொண்டே அர்பாட்டமாய் உள் நுழைய…ஜெயஸ்ரீ “ஹ்ம்ம்…இன்னைக்கு நான் நோட்ஸ் எடுத்த ,மாதிரி தான்..”என்ற புலம்பலோடு அனைத்தையும் மூடிவைக்க…அதை கேட்ட சுஜா “ஏன்டி அப்படி சொல்ற..நான் உன்னை டிஸ்டர்ப் பண்றேனா…”என சோகமாய் கேட்க…”பண்ணிட்டு என்ன டிஸ்டர்ப் பண்றேனா அப்படின்னு கேள்வி வேற…கல்யாணம் ஆனா பொண்ணு மாதிரியா இருக்க நீ…”என கேட்க…”ஏன் கல்யாண பொண்ணுக்கு 3 வாய், 5 கை,9 காலா இருக்கும்…எனக்கு அப்படி இல்லையா…”என பரிதாபமாய் கேட்க…
ஜெயஸ்ரீ “ஹ்ம்ம்…ஒரு வாய் வச்சே உன்னை என்னால சமாளிக்க முடியல,இதுல 3 வாய் இருந்து இருந்தா நான் பைத்தியமா ஆகி இருப்பேன்…”என்றாள் பெருமூச்சுவிட்டபடி…பின் “சரி சரி வந்த விஷயத்தை சொல்லு..”என்க,சுஜாவும் சதீஷிடம் அவள் பேசியது ஆதி முதல் அந்தம் வரை ஒப்பிக்க ஆரம்பித்தாள்…ஜெயஸ்ரீயும் அதை கேட்பது போல”ஹ்ம்ம்..ஹ்ம்ம்…”என்று அவளுக்கு இசை பாடி கொண்டு இருந்தாள்…அவ்ளோதான்டி..”என சுஜா சொல்ல “ஹே அடுத்த டைம் கொஞ்சம் செய்தியை கமியா கொண்டு வா..என் காது காலி ஆகுது…”என்றாள் ஜெயஸ்ரீ சிரிப்போடு…சுஜாவும் “சரி சரி “என மண்டையை ஆட்டிகொண்டு சென்றுவிட்டாள்..
அறையில் இருந்த வரு எப்போது 11 மணி ஆகும் ஜெயஸ்ரீயிடம் பேசலாம் என போனையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தான்…இவனின் செய்கை வித்தியாசமாய் இருக்க சஞ்சீவ் தான் கேட்டான் “என்ன டா..போனையே பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க..என்ன விஷயம்..”என கேட்க…”அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல டா..சும்மா தான் என்றான் மழுப்பலாக..சஞ்சீவ் அவனை நம்பாத பார்வை பார்க்க “ஒண்ணும் இல்ல டா..சொன்னா நம்ப மாட்டியே..”என்றவன் அடுத்த கேள்வி கணை தொடரும் முன் கட்டிலில் படுத்து முகம் வரை இழுத்து போர்த்திக்கொண்டான்…
அவன் அப்படியே உறங்கியும் போய்விட,அதன் பிறகு வருவினால் ஜெயஸ்ஸ்ரீயிடம்,ப்ராஜெக்ட் வேலை பளு காரணமாக இரவு கூட பேச முடியாமல் போயிற்று..அதுவும் இல்லாமல் அவனுக்கு தனிமை என்பது கிடைக்கவில்லை…அவனின் நண்பர்கள் மூவரில் ஒருவன் அவனோடே இருந்தனர்…
வருவின் குழு சாப்பிடகூட நேரம் இல்லாமல் ப்ராஜெக்ட் வொர்க்கில் மூழ்கி இருந்தனர்…ஒரு வாரம் அப்படியே சென்ற நிலையில் வருவிடம் இருந்து அழைப்பு வரும் என காத்திருந்து,காத்திருந்து கடைசியில் கோவம் அடைந்த ஜெயஸ்ரீ தானே அவனுக்கு அழைத்தாள்…
வேலையில் ஈடுபட்டு இருந்தவன் இரவு 11 மணிக்கு அழைப்பு வரவும்,யாராய் இருக்கும் என நோக்கியவனுக்கு ஜெய் என ஒளிர,அப்போது தான் அவனுக்கு உரைத்தது அவளிடம் பேசி ஒரு வாரம் ஆகிறது என்று…
அழைப்பை ஏற்றவன் “ஹெலோ..”என்க..அப்பக்கம் ஜெயஸ்ரீயோ உச்சகாட்ட கோவத்தில் இருந்தாள் எனவே எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்து இருந்தாள்..அவளின் கோவம் புரிந்தவன் “சாரி ஜெய்..ப்ராஜெக்ட் வொர்க் நெட்டி முறிக்கிது,சாப்பிட கூட டைம் இல்ல…அந்த பிஸில உனக்கு போன் பண்ண முடியல…”என மன்னிப்பு கேட்க..அவனின் கூற்று உண்மை என புரிந்தவளும் “ஹ்ம்ம்..சரி சரி..பரவாயில்ல…எவ்ளோ முடிச்சு இருக்கீங்க ப்ராஜெக்ட் வொர்க்…எப்போ முடிப்பீங்க..”என்று சாதாரணமாக வினவ..
அவளின் தன்மையான பேச்சில் சந்தோசம் அடைந்தவன்”இன்னும் 25% இருக்கு..இன்னும் 2 இல்ல 3 நாள்ல முடிஞ்சிடும்…அப்பறம் ரிவியுவ் தான்..”என்றான் அவளிடம்..பின் இருவரும் சிறிது நேரம் பேசியவர்கள் சந்தோசமாகவே அழைப்பை துண்டித்தனர்…
இதனிடையில் அவர்களது கல்லூரிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடக்க அதில் கலந்து கொண்டவனுக்கு பெங்களூரில் உள்ள ஒரு தரம் வாய்ந்த கம்பெனியில் வேலை கிடைத்தது..வரு சந்தோசம் அடைந்ததைவிட ஜெயஸ்ரீ தான் அதிக சந்தோசம் அடைந்தாள்…
போனில் பேசும்போதெல்லாம் அதை அவள் வெளிபடுத்தவும் தவறவில்லை…வேலை கிடைத்ததற்காக ஜெயஸ்ரீக்கு ஏதாவது வாங்கி பரிசு அளிக்க வேண்டும் என எண்ணி அவளுக்கு ஆகாய கலரில்,வாடாமல்லி கலர் பூக்கள் போட்ட புடவையை பரிசளிக்க எண்ணி வாங்கியவன்,அதனை யாருக்கும் தெரியாமல் அவனது கப்போர்ட்டில் பத்திரபடுத்தினான்..பின் காதலையும் பரிசினையும் ஒன்றாய் வழங்க எண்ணியவனுக்கு நாட்கள் சரியாய் அமைய இல்லை…
கடைசி நேரத்தில் ப்ராஜெக்ட்டில் சில குளறுபடி ஆகி,அது வேலை செய்யாமல் போக அவனுக்கு முன்பை விட அதிகம் வேலை பளுவானது..அதை புரிந்துகொண்ட ஜெயஸ்ரீயும் வருவிடம் இரண்டு நாளைக்கு ஒரு முறை என அவளே அழைத்து அவனிடம் பேசினாள்…
இது எல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்க,சுபாஸ்ரீயின் திட்டங்களும் நாளுக்கு நாள் செயல்படுத்தபட்டு கொண்டு இருந்தது…சுபாஸ்ரீயினை பற்றி அறியாத ஜெயஸ்ரீ,தெரியாமலே வருவிற்கும்,அவளுக்கும் இடையேயான உறவினை தெரியபடுத்தி இருந்தாள்..கல்லூரியில் இருவரும் அவ்வபோது பார்த்து கொள்வதும்,இரவில் சிறிது நாட்கள் நெடுநேரம் பேசுவதும் என ஜெயஸ்ரீயின் நடவடிக்கையே சுபாஸ்ரீக்கு எல்லாவற்றையும் விம் இல்லாமலே தெள்ளதெளிவாய் விளக்கியது…
ஆனால் சுபாஸ்ரீ என்ற பாம்பு அதனுடைய விஷத்தை கக்க தக்க தருணம் பார்த்துக்கொண்டு இருப்பது ஜெயஸ்ரீக்கு தெரியாமல் போனது தான் விதியோ…
சிறுவயதில் இருந்து பொறாமை ஒன்றை மற்றுமே தனது குணமாக கொண்டு வளர்ந்த சுபாஸ்ரீக்கு,ஜெயஸ்ரீயின் நற்குணம் எல்லாம் தூசு போல் ஆனது…மனதளவில் தான் பட்ட கஷ்டத்திற்கு ஜெயஸ்ரீ கண்டிப்பாய் அனுபவித்தே ஆகவேண்டும் என்று அவளின் ரத்தத்திலே ஊறி போனது…என்னதான் சீதாராமனும்,ஆனந்தவள்ளியும் அவளுக்கு நல்லதை எடுத்து சொன்னாலும்,பல நேரங்களில் ஜெயஸ்ரீயின் சிறு செயல் கூட அவளுக்கு எதிரானதாய் தான் அவளுக்கு தோன்றி இருக்கிறது…ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதற்கு ஏற்ப,சிறு வயதில் இருந்தே நற்குணங்களையே கொண்டிராத சுபாஸ்ரீயின் செயல்கள்,எண்ணங்கள் எல்லாம் தீயகுணங்களையே கொண்டவையே இருந்தன…
முதலில் நந்துவிடம் பேச எண்ணி நந்துவை அங்கு இருந்த ஒரு புகழ்பெற்ற மால்லிற்கு அழைத்து இருந்தான் வரு…வரு கையில் இருந்த ஜூஸ் கப்பையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருக்க,அவனும் பேசுவான் பேசுவான் என எண்ணி அமைதி காத்த நந்துவிற்கு அமைதி காற்றில் பறந்து போனது…
“என்னடா,எதுக்கு இப்படி அந்த ஜூஸ் கிளாசையே வெறிச்சு பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க…இதை பார்க்க தான் வந்த அப்படின்னா,நீயே தனியா வரவேண்டியது தான,எனக்கு ஆயிரம் வேலை இருக்கு…”என நந்து திட்ட தொடங்க…
“சாரி டா,,எனக்கும் உன்னோட நிலைமை தெரியும்..ஆனா எனக்கு எங்க எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தான் டா தெரியல..நான் சொல்ல போற விஷயத்தை கேட்டுட்டு நீ எப்படி ரியாக்ட் பண்ணுவியோன்னு,
எனக்கு ரொம்ப பயமா இருக்குடா..”என பதபதைப்போடு வரு சொல்ல..
அவனை பார்த்து சிரித்த நந்து “டேய்..எதுக்கு இப்போ இப்படி டென்ஷன் ஆகுற..என்ன நீ சொல்ல வந்ததை நான் சொல்லட்டுமா…நீ ஜெயஸ்ரீயை விரும்புற..அவளை கட்டிக்க ஆசைபட்ற கரெக்ட்டா..”என தனது புருவத்தை உயர்த்தி அவன் கேட்க…
வருவோ அதிர்ச்சியில் திறந்த வாயினை மூடாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தான்..அவனின் வாயினை தனது கைகளால் மூடியவன் “போதும்டா..ஈ உள்ளார போகிட போகுது…”என சொல்ல..வருவோ“டேய்ய்ய்…உ..னக்கு…உ…..உனக்கு…எப்ப…டி..தெரியும்..”
என திக்கி திணறி கேட்க…”ஆல் டீடைல்ஸ் ஐ நோ..மாப்புள்ள…”
என்றான் ஸ்டைலாக சட்டை காலரை தூக்கிவிட்டு கொண்டு…
“டேய் என்னோட BP ஏத்தாத..எவ்ளோ பயந்துட்டு வந்தேன் தெரியுமா..இப்படி சப்புன்னு மேட்டரை முடிச்சிட்ட…என்னடா..உனக்கு எந்த கோவமும் இல்லையே…”என வரு சந்தேகமாக கேட்க..
“டேய்..லூசு..எனக்கு எந்த கோவமும் இல்ல..சொல்ல போனா..எனக்கு ரொம்ப சந்தோசம்…ஜெயஸ்ரீக்கு உன்னைவிட வேற யாரு நல்ல மாப்பிள்ளையா கிடைப்பாங்க நீயே சொல்லு..எதையும் போட்டு குழப்பிக்காத,அப்பாகிட்ட சொல்லி நான் மாமாகிட்ட பேச சொல்றேன்..”என்றான் நந்து வருவிற்கு ஆறுதலாக…
“தேங்க்ஸ் டா..தேங்க்ஸ்…நான் பிரச்சனை இவ்வளவு சீக்கிரம் தீரும்னு நினைச்சு கூட பார்க்கல…”என்றவன் அவனை கட்டிக்கொண்டு குதித்தான்…ஆனால் வருவிற்கு தெரியிவில்லை பிரச்சனை இனிமேல் தான் ஆரம்பமாக போகிறது என்று….
சிறிது நேரம் கழித்து அவனை விடுவித்தவன்”டேய் உனக்கு யாரு சொன்னா சொல்லு..”என கேட்க…”ம்கும்…நான் சொல்ல மாட்டேன் பா..அவங்களே உன்கிட்ட சொல்லுவாங்க…நான் அவங்க கிட்ட அடிவாங்க தாயாரா இல்ல…”என பயந்துபோல நடித்தவன்,வரு எவ்வளவு கேட்டும் யார் என்று அவன் சொல்லவில்லை…வருவும் சரி தெரியும் போது பார்த்துகொள்ளலாம் என்று அமைதியாகிவிட்டான்…
வருவின் கல்லூரி வாழ்க்கை நிறைவு பெரும் நாளும் வந்தது…நந்து,ஜீவாவும் அங்கு வந்து இருந்தனர்…ஜீவா ஜெயஸ்ரீயினை பார்க்க வேண்டும் என மலரிடம் சொல்லி அழ,அவள் அழுகையை காண சகிக்காத மலர்,நந்துவுடன் அவளை கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்…
எல்லோரும் சோக கீதம் வாசித்துகொண்டு இருக்க வரு மட்டும் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தான்..பின்னே இருக்காதா,அவனின் காதலை அவனின் ஜெய்யிடம் சொல்ல போகும் நாள் அல்லவா இது…ஒவ்வொரு தருணத்தையும் நெட்டி தள்ளியவன்,
ஜெயஸ்ரீயினை காண அவன் வாங்கிய பரிசுடன் பார்க்க சென்றான்…
எல்லாம் சரியாய் தான் சென்று கொண்டு இருந்தது,வரு சுபாஸ்ரீயின் திட்டத்தில் விழும்வரை…ஆம் சுபாஸ்ரீயின் திட்டத்தின்படி வருவினை தான் முழு வீச்சாய் அவள் பயன்படுத்த நினைத்தது…
புடவை கவரோடு வேகமாய் வந்து கொண்டு இருந்த வருவினை கண்டவள் “என்ன வரு இவ்வளவு வேகமா எந்த பிளைட் புடிக்க போறீங்க…”என சின்ன விஷ சிரிப்போடு கேட்க…அதனை அறியாத வருவோ “ஜெயஸ்ரீ பார்க்கதான் சுபா…எங்க அவ..”என நாளா பக்கமும் தன் கண்களால் அலசிக்கொண்டே அவன் கேட்க….”அவ அங்க கான்டீன்ல இருக்கா…”என்றவள் “சொல்ல மறந்துட்டேன்…உங்களை உங்களோட ப்ரண்ட்ஸ் நந்து கிட்ட கேட்டுட்டு இப்போ தான் இந்த பக்கம் போனாங்க..ஏதோ முக்கியமான விஷயம் போல..”என்க…
”அப்படியா..என் கிட்ட சொல்லவே இல்லையே..என்னன்னு தெரியல..
நான் அவங்களை அப்றமா பார்த்துக்குறேன்…”என சொல்லிவிட்டு அவன் நகர போக,சட்டென்று “ஏதோ நீங்க செலக்ட் ஆனா கம்பெனில இருந்து H.O.D க்கு கால் வந்து இருக்கும் போல..அப்படி தான் அவங்க பேசிட்டு போனாங்க..முதல்ல நீங்க என்னன்னு கேட்டுட்டு அவளை பார்க்க போலாம் இல்ல..”என சொல்ல…வருவிற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் அமைதியாய் யோசனையுடன் கவரை பார்த்துகொண்டு நிற்க…
அதனை அவனிடம் இருந்து வாங்கியவள் “இந்த கவரை நான் வச்சிட்டு இருக்கேன்…யார் கிட்டையும் தர மாட்டேன்..நீங்க போய் என்னனு கேட்டுட்டு வாங்க..நான் எங்கவும் ஓடிட மாட்டேன்..என் மேல நம்பிக்கை இல்லையா…”என அவள் சிரித்துக்கொண்டே கூற,அதை உண்மை என நம்பியவன் “ச்ச…அப்படி எல்லாம் இல்ல…சரிங்க…நான் போய்ட்டு வந்துட்ரேன்..”என சொல்லிவிட்டு அவனது துறை தலைவர் அறைக்கு செல்ல மாடி படிகளில் ஏறினான்…
படிகளில் ஏறிக்கொண்டு இருந்தவன் சட்டென்று ஏதோ முனகல் சத்தம் கேட்க,சில நொடி தாமதித்தவன்,மீண்டும் படிகளில் ஏற காலை வைக்க மீண்டும் அதே போல் முனகல் சத்தம் கேட்க சந்தேகம் கொண்டு சட்டென்று நேரம் தாழ்த்தாமல் சத்தம் வந்த அறையை நோக்கி ஓடினான்…அங்கு வேலை செய்யும் ஒரு பெண் கிழிந்த துணியோடு அலங்கோரமாக மூலையில் ஒடுங்கி அமர்ந்து இருக்க,சட்டென்று பார்த்தவன் பயந்து அறையைவிட்டு வெளியேறினான்…
அவன் பயந்துபோய் வேர்த்து வியர்த்து அறையைவிட்டு வெளியேறுவதை கண்ட ஜீவா “இவர் எதுக்கு இப்படி வேர்த்து வழிஞ்ச்சிட்டு போறார்…”என யோசித்து கொண்டே உள்ளே சென்று பார்க்க,அப்பெண்ணை அந்நிலையில் கண்ட அவளுக்கு மூளை எல்லாம் வேலை செய்யாமல் மழுங்கி போனது..என்ன செய்வதென்று தெரியாமல் சிலை போல் சிறிது நேரம் இருந்தவள் ஓடி சென்று அப்பெண்ணிற்கு தனது துப்பட்டாவை போர்த்திவிட அப்பெண்ணும் கூனி குறுகி அவளது துப்பட்டாவை இறுகபற்றி தனது உடம்பின் மீது போர்த்திகொண்டது…
வெளியில் “ஜீவா.. ஜீவா…” என சுபாவின் குரல் கேட்க,அவசரமாய் வெளியே ஓடிவந்தவள்,”அக்கா..அக்கா…”என அவள் அழுகுரலில் சொல்ல…”என்ன ஜீவா,என்ன ஆச்சு..எதுக்கு இப்போ இப்படி அழுகுற…”என சுபா அவளை சமாதானபடுத்த முயன்றாள்…ஆனால் ஜீவா “அக்கா..”என்ற வார்த்தையை மட்டுமே சொல்ல முடிந்தது…
சுபா ஜீவாவினை அவ்வறைக்கு அழைத்து செல்ல அங்கு இருந்த பெண்ணின் நிலை பார்த்து அதிர்ந்தவள் போல நடித்தவள் சட்டென்று தனது பையில் இருந்த ஒரு சுடிதாரை எடுத்து கொடுத்து உடுத்திக்கொள்ள சொன்னவள்,”இந்த விஷயம் யாருக்கும் தெரியவேண்டாம்..அப்படி தெரிஞ்சா உன்னோட வாழ்க்கை தான் பாதிக்கும்…இனிமேல் ஜாக்கிரதையா இருக்க பாரு..”என அப்பெண்ணிற்கு சொன்னவள்,சிறிது பணத்தை செலவிற்கு கொடுத்து அவளை அனுப்பி வைத்தாள்..
பின் ஜீவாவிடம் திரும்பியவள் “ஜீவா,இதை யார்கிட்டையும் சொல்லாத…இந்த விஷயம் நம்பளோடவே இருக்கட்டும்…உன் அக்காகிட்ட கூட நீ இதை சொல்லகூடாது..அவளுக்கு தெரிஞ்சா ரொம்ப பயந்துடுவா… அந்த பொண்ணோட வாழ்க்கை ரொம்ப முக்கியம்…இந்த விஷயம் மட்டும் வெளிய தெரிஞ்சா அந்த பொண்ணுக்கு எதிர்காலமே இல்லாம போயிடும்… நான் சொல்றது புரியுதா..”என கேட்க ஜீவாவும் புரிகிறது என்பது போல் அவளின் பேச்சுக்கு தலையை தலையை ஆட்டினாள்…
“உனக்கு அந்த பையன் யாருன்னு தெரியுமா..”என கேட்க
”ஹ்ம்ம்..தெரியும் கா…”என சொல்ல..”சரி அவனை அடையாளம் காட்டிவியா..”என சுபா கேட்க…”கண்டிப்பா அக்கா..ஆனா நீங்க என்ன பண்ண போறீங்க..”என ஜீவா இனிமேல் இவளால் அந்த பெண்ணின் வாழ்க்கைக்கு என்ன செய்ய முடியும் என சந்தேகமாய் கேட்க…”அவனை அப்படியே விட்றதா ஜீவா..அவனை தனியா பார்த்து நாலு வார்த்தை நறுக்குன்னு நாக்கை புடிங்கிக்கிற மாதிரி கேக்குறது இல்ல…”என பெண்களுக்கு எதிரான அநியாய செயலுக்கு போராடுவதை போல அவள் ஆவேசமாய் பேசுவதை உண்மை என நம்பியவள் “நீங்க சொல்றது உண்மை தான் கா…அந்த ஆளை பார்த்து நாக்கு புடிங்கிக்கிற மாதிரி கேட்கணும்…ஆனா அவரா இப்படின்னு என்னால நம்ப முடியல கா…”என ஜீவா இன்னும் நம்பாமல் சொல்ல..”யார் ஜீவா அது..உனக்கு நல்லா தெரிஞ்சவங்களா.??”என கேட்க…
அவளை பாவமாய் பார்த்தவள் “ஆமா அக்கா..நந்து மாமாவோட ப்ரிண்ட் வரு தான் அது..”என சொல்ல சுபா அதிர்ச்சி அடைந்ததை போல முகத்தை வைத்துக்கொண்டு “என்னடி சொல்ற..அவரா…அவரா இப்படி பண்ணார்…நல்ல மனுஷன்னு நினைச்சேன்…ஆனா இப்படிபட்ட பொறுக்கியா இருக்காரே..உன்னோட அக்கா வேற அவரை விரும்புறாளே..”என ஆடாமல் அசையாமல் வெடிகுண்டை போட ஜீவா அதிர்ந்து போய் அவளை நோக்கினாள்..
அக்காவின் மேல் உள்ள அளவு கடந்த பாசத்தினாலும்,எதையும் சுயமாய் சிந்திக்க முடியாத வயதினாலும் ஜீவா செய்ய போகிற ஒவ்வொரு செயலும் அவளது அருமை அக்காவின் வாழ்க்கை பாழாக போகிறது என்று அப்பேதைக்கு தெரியவில்லை…
அன்னை வாசம் கண்ட
நாள் முதல்..
தந்தை நேசம் கொண்ட
நேரம் முதல்…
புதிதாய் பிறந்தேன்
இப்பூவுலகில்..
அதட்டி என்னிடம் பேசிட
அண்ணன்
இல்லை எனக்கு…
அழுது என்னிடம் சண்டையிட
தம்பி
இல்லை எனக்கு…
தலையில் என்னை கொட்டி
விளையாட தங்கை
இல்லை எனக்கு…
யாவுமாய் இருந்து என்னை
உந்தன் கையிருப்பில்
இருந்த கதகதப்பை
எனக்கு போர்வையாக்கினாய்…
உன்னிள் என் எல்லா
உறவையையும் கண்டேன்..
அன்று முதல் இன்று வரை
அக்கா என்ற இவ்வுறவு
எனக்கு எவ்வளவு ஜென்மம் என்று
தெரியாமல் தத்தளித்தேன்…
தத்தளிப்பை போக்கி
தாயன்பை
தந்தையின் நேசத்தை
எனக்கு ஒட்டுமொத்தமாய்
உந்தன் உறவில் வழங்கி
என்னை ஏழேழு ஜென்மத்துக்கும்
உனக்கு கடன்காரியாக்கினாய்…
சிறு பிள்ளையென
நான் செய்த தவறினை
பெரும் பிழை என என்னுவாயோ..??
உந்தன் சுமை குறைக்க எண்ணி
செய்த எந்தன் செயல்..
உந்தன் வாழ்க்கையில்
உந்தன் மனதில் பெரும் சுமையாய்
ஆறாத வடுவாய்..
அவனே வருவாய்…
வடுக்கள் மறைய அறிந்துகொண்டேன்
வருவின் எண்ணங்களினால்
உந்தன் மனதில் உள்ள வடுவை
எப்படி நான் மறையவைப்பேன்…??
முடிவுகள் சில முன்னுரை
முடிவுரை இல்லாமல்..
வருவின் நினைவுகள் போல..
விலகல் தொடரும்…