குருபூர்ணிமா – 3
பாலகுரு அவனின் அறையில் இருந்து வேகமாய் வெளியே வந்து பார்க்க, அங்கே பூர்ணிமா இல்லை.. அவனோடு பின்னேயே முத்துராணி வர,
“சித்தி பூர்ணி எங்க???” என்றான் மைதிலியைப் பார்த்து..
முத்துராணியோ அவனுக்கு பின்னே நின்று சொல்லாதே என்று சைகை செய்ய, மைதிலியோ அவனையும் அவனுக்கு பின்னிருக்கும் அவன் அம்மாவையும் மாறி மாறி பார்க்க, நடப்பது எது என்று தெரியாமலே மாடியில் இருந்து வந்துகொண்டு இருந்த தனபால் பாலகுருவின் கேள்வி கேட்டு, “எல்லாம் சாரு ரூம்ல தான் இருக்காங்க பாலா…” என,
முத்துராணி “அய்யோ…!!!” என்று தலையில் கை வைத்துக்கொண்டார்..
பாலகுருவோ மேற்கொண்டு யாரிடமும் எதுவும் பேசாது மாடியேறி போக, “என்னாச்சு இவனுக்கு… உர்ருன்னு இருக்கான்.. நாளைக்கு நிச்சயம் அது இவன் முகத்துல எதுவுமே தெரியலை…” என்று தனபால் பேசிக்கொண்டே வர, முத்துராணி மைதிலியை ஒருபார்வை பார்த்தவர் வேலை இருப்பது போல அந்தப்பக்கம் நகர்ந்துவிட்டார்..
மைதிலியோ “என்னங்க நீங்க.. வீட்ல ஆளுங்க இருக்காங்க.. பாலாதான் எதுவும் புரியாம பூர்ணி எங்கன்னு கேட்டா நீங்களும் சொல்றதா…” என,
“ஏன்??!! பூர்ணி என்ன புது மனுசியா.. சின்னதுங்கள்ள இருந்து எல்லாம் இருக்கிறதுதானே…”
“அதுசரி ஆனா யாரும் இப்போ சின்ன பிள்ளைங்க இல்லை…” என்று மைதிலி நகர்ந்துவிட,
“ம்ம் நாளைக்கு வேலை எக்கச்சக்கமா இருக்கு.. ஆனா இங்க சின்னபிள்ளை பெரிய பிள்ளைன்னு பட்டிமன்றம்…” என்று முனங்கியபடி தனபால் வெளியே கிளம்பிவிட்டார்..
பாலகுரு எத்தனை வேகமாய் மாடி ஏறி போனானோ அதே வேகத்தில் அப்படியே சாருலதாவின் அறைக்கு வெளியே நின்றுவிட்டான்.. உள்ளே இருப்பது மூவர் தான், கதவு லேசாய் மட்டுமே சாத்தியிருக்க, மெதுவாய் பேசினாலும் பேச்சு கொஞ்சம் தெளிவாகவே வெளியே இருப்போருக்கு கேட்கும்படியாய் தான் இருந்தது..
அதுவும் அவனைப் பற்றிய பேச்சாய் இருக்க, தன்னப்போல் அப்படியே பாலகுரு நின்றுவிட்டான்..
“எப்படி டி உன்னால இப்படி இருக்க முடியுது?? சும்மா இல்ல.. எழு வருஷம்.. நாங்க பேசறோம்னு சொன்னாலும் வேண்டாம் சொல்லிட்ட… இப்போ பாலாண்ணாக்கு வேற பொண்ண முடிச்சிட்டாங்க.. உனக்கு எப்படியோ ஆனா எங்களுக்கு நிஜமா உன்னைப் பார்க்கிறப்போ அத்தனை கஷ்டமா இருக்கு..” என்று சாரு சொல்ல,
“என் கல்யாணத்தப்போ இருந்து நானும் சொல்லிட்டேன்.. எங்க இவ கேட்டா.. இப்போ பாரு எனக்கு குழந்தை கூட பிறக்க போகுது.. இப்பவும் அதே பிடிவாதம் பண்ணா எப்படி பூர்ணி…” என்று மகிலா, சாருவிடம் ஆரம்பித்து, பூர்ணிமாவிடம் முடிக்க, பூர்ணிமாவோ அமைதியாகவே இருந்தாள்..
பூர்ணிமாவின் இயல்பிற்கு, அவள் அமைத்தியாய் இருக்கிறாள் என்றால், ஒன்று எதையோ செய்துவிட்டு வந்திருப்பாள் இல்லையோ எதையோ செய்ய காத்திருப்பாள்.. ஆனால் அப்படி எதுவுமில்லாமல் எதுவுமே செய்யாது, இப்படி அமைதியாய் இருப்பது அவளின் தோழிகள் இருவருக்கும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..
“ம்ம்ச் பதில் பேசு பூர்ணி.. இப்படி இருந்தா எப்படி.. ஹாயா இருக்க… நீ இப்படி இருக்கிறது பார்த்து எங்களுக்கு நீ நிஜமாவே பாலாண்ணாவ லவ் பண்ணியான்னு டவுட்டா இருக்கு…” என்று சாருலதா சொல்லும்போதே,
“ஜஸ்ட் ஷட்டப்….!!!!” என்று கத்திவிட்டாள் பூர்ணிமா..
அவளின் அந்த அரட்டலில் பாலகுரு கூட, இங்கே வெளியே யாருக்கேனும் கேட்டுவிட போகிறது என்று கொஞ்சம் பதறித்தான் போனான்..
‘லூசுங்க.. டோர் கூட லாக் பண்ணாம என்ன பேச்சு இது…’ என்று எண்ணிக்கொண்டே அறைக்குள் செல்ல நினைக்க, இப்போதோ பூர்ணிமாவின் பேச்சு அவனை அப்படியே நிறுத்தியது.
“ஜஸ்ட் ஷட்டப் சாரு… என்ன பேசுற நீ?? இல்ல நான் என்ன பண்ணனும் நினைக்கிறீங்க ரெண்டு பெரும்… அவன்கிட்ட போய் அழுது புலம்பி கெஞ்ச சொல்றியா???” என்று அடிக்குரலில் சீறியவள்,
“நல்லா கேட்டுக்கோங்க. எஸ்.. நான் பாஸ்ஸ லவ் பண்றேன்.. இன்னமும் பண்ணுவேன்.. அது என்னோட விருப்பம்.. அது அவனுக்கும் தெரியும்தானே.. ஆனா இப்போ வரைக்கும் அதைப்பத்தி அவன் ஒருவார்த்தை பேசினதில்லை கேட்டதில்லை என்கிட்டே.. வேண்டாம் சொன்னதோட சரி… இதோ நாளைக்கு ஒருத்திக்கு என்கேஜ் ஆகப்போறான்..
இந்த ஏழு வருசமா அவனுக்கும் தெரியும்தானே… அப்படியிருந்தும் இந்த மேரேஜுக்கு ஓகே சொல்லிருக்கான்னா என்ன அர்த்தம்… அது உங்களுக்கே புரியலையா?? அப்படி இருக்கப்போ என்னை கல்யாணம் பண்ணு பண்ணுன்னு அவன்கிட்ட போய் நிக்க சொல்றீங்களா என்னை.. அதுமட்டும் என்னால முடியாது..” என்று பூர்ணி திட்டவட்டமாய் சொல்ல, பாலகுரு மலைத்துத்தான் போனான்..
உள்ளே செல்ல என்று நினைத்தவனுக்கு அவன் நினைத்ததை செய்ய முடியவில்லை.. பூர்ணிமாவின் பேச்சு அப்படியே கட்டிப்போட, நின்றுவிட்டான்.. அவளோ வெளியே இவன் இருப்பது தெரியாது பேசிக்கொண்டு இருந்தாள்..
“நானே தானே சொன்னேன்.. பிடிச்சிருக்குன்னு.. வேண்டாம்னு சொல்லிட்டேன்.. அப்புறம் எப்படி போய் நான் பின்னாடியே சுத்த முடியுமா??? என்னால அதெல்லாம் முடியாது.. பின்னாடியே சுத்துறது.. கண்ணீர் வடிக்கிறது.. கெஞ்சுறது.. இதெல்லாம்.. எனக்கு தெரிஞ்சதெல்லாம் அவனை லவ் பண்ண மட்டும் தான் தெரியும்..” என்று பேசி நிறுத்த,
‘இதுக்கு மேல தாங்காதுடா சாமி…’ என்று தலையை உலுக்கியவன், கதவை திறந்துகொண்டு உள்ளே செல்ல, மூவரும் அதிர்ந்து தான் முழித்தனர்..
உள்ளே நுழைந்தவன் மூவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மகிலாவை பார்த்தவன் “அறிவில்ல உனக்கு.. அடுத்த மாசம் டெலிவரி வச்சிட்டு.. இவதான் வந்தான்னா நீயும் இப்படிதான் கிளம்பி வர்றதா???” என்று கடிய,
“இல்லண்ணா… அது…” என்று மகிலா வார்த்தைகளை தேட,
“பாஸ்.. என்மேல இருக்க கோவத்தை அவமேல ஏன் காட்டனும்…” என்ற பூர்ணிமாவை கொன்றுவிடுவது போல்தான் பார்த்தான் பாலகுரு..
பார்வை பூர்ணிமாவிலேயே இருக்க “சாரு, மகிலாவ கூட்டிட்டு போய் சாப்பிட ஏதாவது கொடு…” என்று வார்த்தைகள் மட்டும் சாருலதாவிடம் சொல்ல, மற்றவர்களுக்கு புரியாதா என்ன பாலகுரு பூர்ணிமாவிடம் தனியே பேச எண்ணுகிறான் என்று..
“ம்ம் சரிண்ணா…” என்ற சாரு, மகிலாவை அழைத்துக்கொண்டு செல்ல, “டோர் லாக் பண்ணிட்டு போ…” என்றவனின் குரலே சொல்லியாவது அவர்களுக்கு ஒரு நடுக்கம் கொடுத்தது..
ஆனால் பூர்ணிமாவோ, நீ சொல்வதற்கும் செய்வதற்கும் நான் பொறுப்பாகவே முடியாது என்பதுபோல் நிற்க, பாலகுரு திரும்பவும் அவளைப் பார்த்து நிற்க, அவனுக்கு பின்னே நின்ற இருவரோ ‘இப்போவாது பேசு…’ என்று சைகை செய்துவிட்டு வெளியே செல்லவும்,
“உன் போன் கொடு…” என்று பாலகுரு கேட்கவும் சரியாய் இருந்தது…
‘இதை நான் எதிர்பார்த்தேன்..’ என்று பூர்ணி பார்க்க,
“ம்ம்ச் பூர்ணி. என் பொறுமை ரொம்ப சோதிக்காத.. வீட்ல கெஸ்ட் இருக்காங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா மேல வருவாங்க.. எல்லாம் உனக்கும் தெரியும்.. அதுனால சொல்றதை கேட்டு ஒழுங்கா போன் கொடு…” என்று ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தம் திருத்தமாய் உச்சரிக்க,
மறுபேச்சே எதுவும் பேசாது பூர்ணிமா அவளின் போனை நீட்ட “லாக் யார் ஓப்பன் செய்வா???” என்றவனை பார்த்தபடியே மெதுவாய் லாக் ஓப்பன் செய்தவளிடம் பிடுங்காத குறையாய் பிடுங்கினான்..
ஐந்தே நிமிடம் தான், அவளின் போன் முழுவதிலும் பூர்ணிமா சொன்ன அந்த போட்டோ இருக்கிறதா என்று தேடியவன் அது இல்லை என்றதும் “பூர்ணி அந்த போட்டோ எங்க?? வேற எதும் லிங்க்ல சேவ் பண்ணி வச்சிருக்கியா.. எடு.. எடுத்து டெலிட் பண்ணு…” என்று அடக்கப்பட்ட கோபத்தில் திரும்ப அவன் போனை நீட்ட,
“எந்த லின்ங்லையும் இல்ல.. இந்த போன்லையும் இல்ல..” என்றவள் அவன் நீட்டியதை வாங்கி வைத்துகொள்ள,
“பின்ன?? பின்ன எதுல வச்சிருக்க.. ம்ம்ச் பூர்ணி இது நீ நினைக்கிற மாதிரி சின்ன விஷயம் கிடையாது…” எனும்போதே,
“இது சின்ன விசயம்னு யார் சொன்னா.. உன்னை பத்தின எதும் எனக்கு சின்னது இல்ல பாஸ்…” என்றாள் வேகமாய்..
பாலகுரு அத்தனை நேரம் ஒருவேகத்தில் அந்த போட்டோவை வாங்கி அழித்துவிட வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்க, பூர்ணிமா சொன்ன இந்த ஒரு வாக்கியம், அவனது வேகத்தை குறைப்பதை அவனே உணர, அது இன்னமும் அவனுக்கு எரிச்சலாய் இருந்தது..
“ஏய்.. இன்னா டி.. ஒருதடவ சொன்னா புரியாது.. அறிவில்ல.. நிம்மதியா இருக்க விடுறியா நீ.. நான் தான் அப்போவே இதெல்லாம் வேணாம் ஒத்துவராது சொல்லிட்டேனே.. பின்ன இன்னாத்துக்கு டி இப்படி தாவு எடுக்கிற???” என்று பாலகுரு அத்தனை நேரமிருந்த பொறுமை எல்லாம் விடுத்தது கத்த,
“இப்போ நான் உன்னை என்ன பண்ணிட்டேன்??!!” என்றாள் அசராது..
பாலகுருவிற்கு இந்த ஒருவிசயம் தான் பூர்ணிமாவிடம் பிடிக்கவே பிடிக்காது.. யார் யாரோ அவன் பேசும் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து நடக்க, இவளோ அவன் என்ன கத்தினாலும் அசராது நிற்பது அவனுக்கு சுத்தமாய் பிடிக்காது.. என்னவோ அவனின் பேச்சிற்கும் உணர்வுகளுக்கும் அவளிடம் எவ்வித பிரதிபலிப்பும் இல்லாது இருப்பதாகவே அவனுக்குத் தோன்றும்..
“பூர்ணி.. வேணாம்.. அந்த போட்டோவ நீயே எடுத்து டெலிட் பண்ணு… அதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது…” என்று கைகளை நீட்டி பாலகுரு பேச,
“எனக்கு அப்படியொரு நல்லதே வேணாம்.. அப்புறம்.. அதுனால உனக்கு எந்த பிரச்னையும் வராது… அந்த போட்டோ யார் கைக்கும் கிடைக்காது.. அது நீயா இருந்தாலும் சரிதான் பாஸ்..” என,
“வேணாம் பூர்ணி.. எப்பவும் காலம் நம்ம நினைக்கிற போல இருக்காது.. நான் உன்னோட நல்லதுக்கும் சேர்த்து தான் சொல்றேன்.. அதை டெலிட் பண்ணிடு.. யார்கிட்ட போனாலும் அது நல்லதுக்கில்ல..” என்று அவளுக்கு புரிய வைத்துவிடும் நோக்கில் பாலகுரு கொஞ்சம் இறங்கி வந்தே பேச,
“அப்படி ஒரு சூழ்நிலை வந்தா ஐ வில் ஹேண்டில்…” என்றவளை கைகளை பிடித்து பின்னே முறுக்கிவிட்டான் கோபம் தாங்காமல்..
“ஹேண்டில் பண்ணுவியா?? என்னடி ஹேண்டில் பண்ணுவ நீ.. இப்போ என்னை ஹேண்டில் பண்ணு பாப்போம்.. நான் பாப்பாக்கு சொல்றப்போல சொல்லிட்டிருக்கேன்.. அடங்கி ஒருவழிக்கு வரமாட்ற..” என்று அவன் இன்னும் தன்னோடு சேர்த்து அவளை அழுத்த,
“நான் ஏன் உன் வழிக்கு வரணும்…” என்று திமிரியவள்,
“இப்போ நீ பண்றதை மட்டும் யாரும் பார்த்தா அப்போ எதுவும் ஸ்பாயில் ஆகாதா பாஸ்…” என சட்டென்று அவளின் கரங்களை விட்டுவிட்டான்..
‘ச்சே நானா இப்படி அதுவும் பூர்ணியிடம்…’ என்று அவனின் மனமே கடிய, “ச்சே…” என்று பக்கத்தில் இருந்த சுவரை குத்த,
“அந்த ஒரு போட்டோ உன்னை அவ்வளோ டிஸ்டர்ப் பண்ணுதா பாஸ்.. ஆனா நான்???” என்றவள் அதற்குமே அவனிடம் எதுவும் பேசாமல் வார்த்தைகளை அப்படியேவிட்டு,
“நாளைக்கு பங்க்சன்ல பாப்போம்..” என்று நடுங்கும் இதழ்களிலும், படபடக்கும் இமைகளாலும் தன் உணர்வுகள் வெளிப்படுவதை கட்டுப்படுதியவள், வேகமாய் அறைக்கு வெளியே வர, முத்துராணி வேகமாய் மாடி படி ஏறிக்கொண்டு இருந்தார்..
அவருக்கு பாலகுரு அங்கே மாடிக்கு போன சிறிது நேரத்திலேயே சாருலதாவும், மகிலாவும் கீழே வர, பூர்ணிமா மட்டும் வரவில்லை என்றதும் என்னவோபோல் ஆகிட, அப்போதே என்னவென்று பார்க்கத்தான் கிளம்பினார்.. ஆனால் இந்த இரு பெண்களும் தான் விடவில்லை..
ஒருவழியாய் மேலேறி முத்துராணி வர, நல்லவேளை பூர்ணிமா கீழிறங்கி வர ஆரம்பித்து விட்டாள்.. பூர்ணிமா அவரை நேருக்குநேராய் காணாது, அவரை கடந்துகொண்டே “நாளைக்கு மண்டபத்துல பாக்கலாம் பெரியத்தை..” என்று சொல்லியபடி சென்றுவிட்டாள்..
‘என்ன சொல்றா இவ…’ என்று முத்துராணி நின்று பார்க்க, அதற்குள் பூர்ணிமா வீட்டு வாசலே தாண்டிவிட்டாள்.. அத்தனை வேகம் அவளுக்குள்.. என்னவோ இன்னும் அங்கிருந்தால், தான் கொண்டிருக்கும் உறுதி எல்லாம் தாண்டி பாலகுரு முன் அழுது விடுவாளோ என்ற பயம்.. தன்னையும் மறந்து அவனிடம் வாய் விட்டு கேட்டுவிடுவளோ என்ற அச்சம்.. அதுதான் அத்தனை ஓட்டம் கொடுத்தது அவளுக்கு..
பாலகுருவோ அவனும் உணர்வுகளின் பிடியில் தான் சிக்கியிருந்தான்.. கடைசியாய் அவள் சொல்லிச் சென்றது என்ன.. உன்னை நான் எதுவுமே செய்திட மாட்டேன் நேசிப்பதை தவிர… பாலகுருவிற்கும் பூர்ணிமா மீது பாசம் இருக்கிறது.. ஆனால் அது விருப்பமாய்.. நேசமாய்.. காதலாய் மாறுமா என்றால் அது தெரியாது .. முதலில் இந்த பேச்சே இப்போது அனர்த்தம் அல்லவா கொடுக்கும்.. அதுவும் நாளைக்கு வேறொரு பெண்ணோடு நிச்சயம் என்று இருக்கையில்..
“கடவுளே…” என்று தலையில் கை வைத்தவனுக்கு, தான் ஏதாவது தவறு செய்கிறோமோ என்ற எண்ணம் கூட வந்துவிட்டது..
நிர்மலாவை பிடித்துத்தான் இந்த திருமணத்திற்கு அவன் சம்மதம் சொன்னான்.. ஒருவேளை நிர்மலாவிற்கு முதலில் பூர்ணியை பிடித்திருந்தால் இந்நேரம் அவர்களின் திருமணமே முடிந்திருக்கும் அல்லவா..?? ஆனால் இதற்குப்பின் அவளை பிடிக்குமா பிடிக்காதா என்று யோசிப்பதே தவறே.. இப்படியெல்லாம் யோசித்து யோசித்து பாலகுரு அதிலிருந்து வெளிவர முடியாது இருக்க, முத்துராணி வந்தவர்,
“நின்னு கூட சொல்லிட்டு போகலை போறேன்னு.. இப்படிதான் எப்பவும்.. பெரியவங்கன்னு ஒரு மரியாதை இல்லை..” என்றபடி மகனை தேடி வர, அவனுக்கு அது இன்னமும் எரிச்சல் கொடுத்தது..
“ம்மா.. நான் ஹார்பர் போறேன்..” என்று நகரப் போனவனை பிடித்து நிறுத்தியவர் ”முகமே எப்படியோ இருக்கு போய் தூங்கு.. நாளைக்கு வரைக்கும் எங்கயும் போகாத..” என,
“ம்மா…!!!” என்று அவன் மறுக்கும்போதே “ம்ம்ச் உன்னை நான் எதுவும் கேட்கலைல இப்போ அதுனால நான் சொல்றதை நீ கேளு..” என்றதும்,
முத்துராணி எதுவும் கேட்காது இருப்பதே சிறந்தது என்று பாலகுரு “சரி வீட்ல இருக்கேன்..” என்றுசொல்லி வேகமாய் அவனது அறைக்கு சென்றுவிட்டான்..
முத்துராணிக்கு அதெல்லாம் இல்லை பூர்ணிமா வேகமாய் கிளம்பியதும், பாலகுருவும் கிளம்பியதும் எங்கே மகன் அவளைத் தேடி எதுவும் செல்வானோ என்ற எண்ணம். அதனாலே இப்படி சொன்னால் தான் இவன் கேட்பான் என்று பேச, அவனும் அதற்கு ஏற்ப வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னதும் ஒரு சிறு நிம்மதி…
மறுநாள் மாலை வேளை.. அழகாய்.. ரம்யமாய், நகர்ந்துகொண்டு இருந்தது… ஈ.சி.ஆரில் இருக்கும் அந்த பங்களாவிளோ விழாக் கோலம் தான்.. பாலகுரு, நிர்மலாவின் நிச்சயம் அங்கேதான் நடந்துகொண்டு இருந்தது..
வீட்டை சுற்றியிருக்கும் பெரிய தோட்டத்தில் தான் மேடை போட்டிருந்தனர்.. வண்ண விளக்குகள் ஒருப்பக்கம் ஜொலிக்க, அதற்கு போட்டியாய் விழாவை சிறப்பிக்க வந்திருந்தவர்களின் புன்னகையும் ஜொலிக்க, இன்னொரு பக்கம் லைட் மியுசிக் அனைவாரின் மனதையும் நிறப்பிக்கொண்டு இருக்க, அலங்கரிக்கப்பட்ட மேடையில் அழகாய் வீற்றிருந்தனர் பாலகுருவும் நிர்மலாவும்..
வந்திருந்தவர்கள் அனைவருமே ஒன்றுபோல் சொன்னது, இல்லை நினைத்தது அவர்களின் ஜோடி பொருத்தத்தை தான்..
நிர்மலா.. அழகி அல்ல பேரழகி.. ஒருவேளை அதனால் தானோ பாலகுருவிற்கு அவளின் புகைப்படத்தை கண்டதும் பிடித்துவிட்டதுவோ என்னவோ.. ஆனால் பூர்ணிமாவிற்கு அப்படித்தான் தோன்றியது. அவளின் அம்மா சந்தியாவோடு மேடைக்கு நேராய் முன்னே இருந்த வட்ட வடிவிலான மேஜையை சுற்றியிருந்த இருக்கையில் தான் அமர்ந்திருந்தாள்..
அதுவும் பாலகுருவிற்கு நேரே.. இதழில் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத ஒரு புன்னகை. ப்ளைன் சந்தன நிற பட்டுபுடவையில், எண்ணெய் பச்சை நிற டிசைனர் ப்ளவ்ஸில், பார்ப்பவரின் கண்களுக்கு பூர்ணிமா தேவதையாகத்தான் தெரிந்தாள்..
பூர்ணிமாவின் மனம் என்ன நினைத்தோ… ஆனால் அவளின் முகம் அத்தனை அமைதியாய் இருந்தது.. ஆனால் நொடிப் பொழுது கூட அவளின் பார்வை மேடையை விட்டு விலகிடவில்லை.
அங்கே மேடையில் இருவரின் பெற்றோர்களும் அருகருகே நின்றிருக்க, முத்துராணி மோதிரம் எடுத்து கொடுக்கவும், அதனை, கொஞ்சம் லேசாய் தயங்கி பின் அவன் தயக்கம் மறைத்து திடமாகவே நிர்மலாவின் கரம் பற்றி பாலகுரு மோதிரம் போட,
‘வேணாண்டா… பாக்காத… பாக்காத…’ என்று அவன் புத்தி ஆயிரம் சொல்லி கத்த, பாலகுருவின் பார்வை தன்னிச்சையாய் பூர்ணிமாவை நோக்க, அவளின் இதழ்களோ அழகாய் விரிந்தன..
பூர்ணிமாவின் கண்களில் தெரிந்த ஒளியும், இதழில் மின்னிய புன்னகையும் பாலகுருவை என்ன செய்ததோ வேகமாய் தன் பார்வையை திருப்பிக்கொண்டான்..
அடுத்து அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்கும் பொருட்டு மேடையேற, சந்தியாவோ “நம்ம கொஞ்சம் கடைசியா போயிக்கலாம் பூர்ணி..” எனவும் சரியென்றே அமர்ந்து, பாலகுருவையும் நிர்மலாவையும் தான் பார்த்துகொண்டு இருந்தாள்.
ஜோடிப்பொருத்தம் பிரமாதம் தான்.. ஆனால் இந்த நிர்மலா பாலகுருவிற்கு ஒத்துவருவாளா என்பது சந்தேகமே??!!!
வந்திருந்த விருந்தினர்கள் ஒவ்வொருராய் மேடையேற, “ம்மா இன்னும் எவ்வளோ நேரம்…” என்று பூர்ணி கடியவும் “சரி வா போலாம்.. ஆனா உங்கப்பா எங்க காணோம்..” என்றபடி சந்தியாவும் எழ, இருவரும் மேடையேற, பாலகுருவின் பார்வை அவனை பார்த்தபடியே நடந்துவந்து மேடையேறும் பூர்ணியைத்தான் பார்த்துகொண்டு இருந்தது..
இவர்கள் மேடையேறியதுமே, முத்துராணி நிர்மலாவிற்கு சந்தியாவை அறிமுகம் செய்ய, பாலச்சந்திரனோ “ராம் எங்க, அவனும் வந்தா நம்ம க்ரூப் போட்டோ எடுக்கலாமே..” என்று சொல்லியபடி, அவரை அழைக்க ஆள் அனுப்ப, ராமலிங்கம் வரும்வரைக்கும் இவர்கள் இருவருமே கூட மேடையில் நிற்கும் நிலை..
ஆனால் சரியாய் அடுத்து தொடர்ந்து ஹார்பரில் இவர்களிடம் வேலை செய்யும் ஆட்கள் மொத்தமாய் மேடை ஏரிட சட்டென்று பூர்ணியாலும் சந்தியாவாலும் கீழே இறங்க முடியாது போக,
போட்டோ கிராபர் வேறு இப்படி நில்லுங்கள் அப்படி நில்லுங்கள் என்று சொல்ல, அடுத்த இரண்டு வினாடியில், மேடையில் பாலகுருவின் அருகே வாழ்த்தவென்று ஏறி வந்தவன் ஒருவன் “ம்மா..!!!!” என்று கத்திக்கொண்டு வயிற்றினில் கத்திக்குத்தோடு கீழே விழுந்தான்..
அவன் விழுந்த அடுத்த நொடி பூர்ணிமாவும் “ம்மா…” என்று அவளின் வயிற்றினை பிடித்துகொண்டு கீழே சரிய, என்ன நடக்கிறது என்று யாரும் சுதாரிக்கும் முன்னமே பாலகுரு எதுவும் புரியாமலே “பூர்ணி…!!!” என்று சொல்லியபடி அவளை தாங்கிப் பிடித்தான்..