“எதுக்கு துளசி இவ்வளவு பிடிவாதம்” என்று அகிலாண்டேஸ்வரி பேச,

“அதுதானே எப்பவும் வாங்கற பேச்சு தானே, இப்போ மட்டும் புதுசா என்ன வீராப்பு!” என்று ஷோபனா வெளியே வந்து வாயை விட்டாள்.

“நீ உள்ள போ முதல்ல” என்று அகிலாண்டேஸ்வரி பொறுக்க முடியாமல் அதட்டினர்.

ஃபோன் பேசி வந்த திருவிடம் அவனின் முகம் பார்த்தாள். அவன் கோபமாக எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தான்.

“என்னை ஒரு நிமிஷம் பாருங்க” என்றாள் துளசி எல்லோர் முன்னேயும். அவன் எதற்கென்று புரியாத போதும் துளசி சொல்லியதை தட்டாமல் செய்தான்.

அவளின் முகம் பார்த்தவனிடம், “இவங்கப்பாக்கு நீங்க பணம் குடுக்கக் கூடாது” என்றாள் ஆணை போல ஷோபனாவை பார்த்துக் கொண்டே.

“ஏன் எதற்கு” என்று எதுவும் கேட்காமல், “சரி குடுக்கலை” என்றான் உடனே, அதுவரை அலட்சிய பாவனை பூசியிருந்த ஷோபனாவின் முகம் மாற ஆரம்பித்தது.

“கண்டிப்பா குடுக்கக் கூடாது” என்றாள் மீண்டும்.

“குடுக்க மாட்டேன்” என்று மீண்டும் திரு பொறுமையாக சொல்லியவன், “அவங்களை உள்ள கூப்பிடு” என்றான்.

“வேண்டாம்” என்று சொல்லிய போது கண்கள் கலங்கி அவளுக்கு அழுகை வந்து விட்டது. பின்பு திரு எதுவும் வற்புறுத்தவில்லை.

அதுவரையிலும் அவர்கள் வாசலில் நின்றனர். பின் அவளும் பையை தூக்கியவள் “நான் போயிட்டு வர்றேன்” என்று மாமனாரிடமும் மாமியாரிடம் சொல்லி வெளியில் வர, பெற்றவர்கள் முகத்தினில் அவ்வளவு கலவரம்!

அவர்களின் முகங்களை பார்த்த திரு தான் “ரெண்டு நாள் இருந்துட்டு வர வர்றா” எனச் சொல்ல அவர்களின் முகங்கள் தெளிந்தது.      

திருமணமாகி இத்தனை வருடங்களில் திரு அவர்களிடம் அதிகமாக பேசுவதே இன்று தான். அதுவே அவர்களை இன்னும் தேங்கி அங்கே இருக்க வைத்தது.

அதற்குள் இன்னோவா வந்து விட, துளசியின் இந்த பரிமாணத்தில் பிடிவாதத்தில் திருவால் எதுவும் யோசிக்க கூட முடியவில்லை. காலையில் இருந்த இதமான மனநிலை எங்கே? இப்போது என்ன நடக்கிறது! அதுவும் துளசி இப்படி எப்போதும் நடக்க மாட்டாள்.

அவளை ஓரளவிற்கு புரிந்தது, அவளுக்கு என்றால் அமைதியாய் கடந்து இருப்பாள். பெற்றோர் என்பதால் இந்த பிடிவாதம்.

மீனாக்ஷியை அவன் தான் அழைத்து வந்தான். அவளை முன் சீட்டில் அமர வைத்து அதனை நன்றாக சாய்வாக வைத்து தலையணை எடுத்து வந்து வசதியாக அமர வைத்தவன், “வலிக்குதா?” என்றும் மகளிடம் கேட்டான்.

“வலிக்குது, ஆனா இதனால வலிக்கலை” என்று மீனாக்ஷி புன்னகைக்க, ஏனோ அவர்களை போக வேண்டாம் என்று சொல்லத் தோன்றியது.

மேகநாதன் வெளியில் கூட வரவில்லை, துளசியின் இந்த பிடிவாதம் அவரை தளரச் செய்திருந்தது. அகிலாண்டேஸ்வரி தான் நின்று பார்த்திருந்தார்.

மகனை இப்படி அவர் பார்த்ததேயில்லை. இவ்வளவு அக்கறையாக, அதுவும் துளசி சொல்ல அடுத்த நொடி சரியென்றது, என்னவோ மகன் பிடிப்பற்று துளசியுடன் குடும்பம் நடத்துவதாக இத்தனை நாள் நினைத்திருக்க, அப்படி இல்லை என்று நிச்சயமாய் தோன்றியது.

அவரின் இயல்புக்கு மாறாய் எதுவும் பேசாமல் அமைதியாய் பார்த்திருந்தார். திருவை மட்டுமே பார்த்திருந்தார். வீட்டில் சகஜமாய் திரு பேசும் ஒரே ஜீவன் அவர் மட்டும் தானே. “நான் மக்களை சரியாக கவனிக்க வில்லையோ, அவர்களை தெரியவில்லையோ?” என்று பார்த்திருந்தார். 

எல்லோரும் ஏறிய பிறகு, “பத்திரமா பார்த்து கூட்டிட்டு போ” என்று சொன்னவன், “பணம் என்கிட்டே இங்க வந்த பிறகு வாங்கிக்கோ” என்றும் உரைத்தான்.

துளசி ஏறி அமர்ந்தவள் கண்களை மூடிக் கொண்டாள், “உன்னை பார்க்க விருப்பமில்லை என்பது போலா இல்லை கோபதினாலா” எதனால் என்று தெரியவில்லை.

அவளுடைய அம்மாவிற்கும் அப்பாவிற்குமே அவளிடம் பேச பயமாய் இருந்தது.

“என்ன வந்தது இவளுக்கு” என்ற யோசனை மட்டுமே திருவிடம், செல்லும் வாகனத்தை பார்த்து நின்றவன், வீட்டின் உள் கூட வரவில்லை, அப்படியே பைக்கினை எடுத்தான்.

மகனின் முகமே சரியில்லை என்று உணர்ந்தார். “திரு” என்ற அகிலாண்டேஸ்வரியின் அழைப்பில், எதுவும் பேச பிடிக்காதவனாக “கொஞ்சம் வேலை இருக்கும்மா” என்று சொல்லிச் சென்று விட்டான்.

அவர் அப்படியே நின்று விட்டார்!

திரு சென்றதுமே அவனின் சித்திகள் இருவரும் அங்கே வந்து விட்டனர். சத்தியநாதனின் மனைவி வசுமதியும் கமலானதனின் மனைவி மேகலாவும்.

“அப்போவே வரலாம்னு பார்த்தோம், எதுக்கு அவங்க ரெண்டு பேரும் வெளியவே நின்னுட்டு இருந்தாங்க!”

“அதான் வரலையா” என்று கேட்டவர், “எவங்க ரெண்டு பேரும்” என்றார் கூடவே,

வசுமதியும் மேகலாவும் புரியாமல் பார்த்து இருக்க, “துளசியோட அப்பா அம்மான்னாவது சொல்லணும் இல்லை திரு நமக்கு இல்லாம போய்டுவான்” என்றார் பெருமூச்சோடு.

“என்ன சொல்றீங்க?” என்று அவர்கள் புரியாமல் கேட்க,  

“அவங்க அப்பா அம்மாக்கு மரியாதை குடுக்கலைன்னா துளசி நம்மளை கண்டுக்க மாட்டா, துளசி பார்க்கலை திருவும் பார்க்க மாட்டான்”

“என்ன ஆச்சு?” என்று இருவரும் கேட்க,

“ஒரு பிடாரியை வீட்டுக்கு கொண்டு வந்திருக்கேனே மருமகளா சொந்தம்னு” என்றே சொல்லிவிட்டார்.

“என்ன அக்கா இப்படி பேசறீங்க?” என்று இருவரும் அதிர்ச்சியாய் பார்த்தனர்.

“வீட்டுக்கு வந்த ரெண்டு பேரும் சாப்பிட்டிட்டு இருந்தப்போ பேசியிருக்கா கண்டவங்கன்னு, அவங்க அதுக்கப்புறம் சாப்பிடக் கூட இல்லை, துளசி இனிமே அவங்களை இந்த வீட்டு வாசப்படி மிதிக்க கூடாதுன்னு சொல்லிட்டா, எங்க யாராலையும் பேச முடியலை!”

“ஏன் திரு அப்பா பேசியும் துளசி கேட்கலை, ரெண்டு நாள் இருந்துட்டு வர்றேன் கிளம்பிட்டா.

நாம இதுவரை துளசியோட அப்பா அம்மாக்கு பெருசா மரியாதை குடுத்தது இல்லைன்னாலும் வீட்டுக்கு வந்தவங்களை அவமானப்படுத்தினது இல்லை. இன்னைக்கு அதுவும் செஞ்சிட்டோம்” என்றார் வருத்தமாக.

ஆம்! ஆகிலாண்டேஸ்வரி பெரிய ஆள் நான் தான் என்று காட்டுவதற்காக ஆதிக்கத்தை காண்பிப்பார், பேசுவார், இப்படி தான். ஆனால் அவரால் குடும்பம் என்றும் உடைந்தது கிடையாது. அதனால் தான் மேகநாதன் தம்பிகள் தங்கைகள் என்று அனைவரையும் அரவணைத்து போகிறார்.  

“சும்மா தங்கச்சி பொண்ணுன்னு தராதரம் இல்லாம கொண்டு வந்துட்டோம் போல. துளசில பத்துல ஒரு பங்கு கூட இல்லை” என்று கோபத்தில் பேச ஆரம்பிக்க,

“அக்கா பேசாம இருங்க, அவங்க அம்மா, அப்புறம் சித்ரா அண்ணி வந்து குதிச்சிடுவாங்க” என்றனர்.

“வரட்டும்! எவ வேணா வரட்டும்! எனக்கு என் பசங்க வாழ்க்கை முக்கியம். துளசியும் திருவையும் விடுங்க, வெங்கடேஷ் எப்படி இவளோட குடும்பம் நடத்துவான். இவ இப்படி பேசினா நாளைக்கு என் பையன் தான் எல்லோர்கிட்டயும் அசிங்கப் படணும்” என்று ஏறக்குறைய சத்தமாக பேசினார் ஷோபனாவிற்கு கேட்கட்டும் என்றே!

உடனே அவள் ரூமில் இருந்து வெளியில் வந்தாள். மேகநாதன் அங்கே அமர்ந்திருந்தவர் “இப்போது என்ன?” என்பது போலப் பார்த்தார், ஆனாலும் மனைவி பேசுவதில் தலையிடவில்லை. சோர்ந்து விட்டார். நேற்று தானே அவ்வளவு நடந்தது இன்று மீண்டும்!

உடல்நிலை என்னவோ அவருக்கு செய்ய, “அகிலா சத்தம் வேண்டாம், எனக்கு ஒரு காஃபி கொடு” என்று தளர்ந்த குரலில் சொல்ல, அகிலா என்னவோ என்று கணவரின் அருகில் செல்ல, தன் கணவருக்கு வசுமதி அழைக்க, மேகலா வேகமாக சமையல் அறையின் உள் போக, அங்கே தனம் காஃபி தான் தயாரித்துக் கொண்டிருந்தாள்.

அவள் கொடுக்கவுமே மேகலா விரைந்து வந்து மேகனாதனிடம் கொடுக்க, அதனை குடித்த பிறகு சற்று ஆசுவாசமனவர். “எனக்கு ஒரு மாதிரி இருக்கு படுக்கறேன்” என்று சொல்லி படுக்கை அறைக்குள் சென்று படுத்து கொண்டார்.

வீடே களேபாரமானது, “உங்கம்மாவை வரச் சொல்லு” என்று ஷோபனாவிடம் கடுமையான குரலில் அகிலாண்டேஸ்வரி சொல்ல,

“எனக்கென்ன பயமா?” என அவள் சொல்லி அம்மாவை அழைக்க முற்பட்டாள்.

அவ்வளவு தான் பொங்கியதே கோபம் அகிலாண்டேஸ்வரிக்கு, அவரே தன்னுடைய அலைபேசியில் இருந்து அழைத்தவர், “பொண்ணையா பெத்து வெச்சிருக்க, சொந்தம்ன்ற பேர்ல என் வீட்டுக்காரரை ஏமாத்தி எங்க வீட்டுக்கு அனுப்பி என் பையன் வாழ்க்கையை வீணாகிட்ட, இத்தனை நாளா உங்களை ஆதரிச்ச பாவத்துக்கு உங்க அண்ணனை படுக்க வெச்சிட்ட” என்று சாரதாவிடம் பேச ஆரம்பித்தவர், அதன் பின் பிடி பிடி என பிடிக்க,

அகிலாண்டேஸ்வரி பேசுவார் எனத் தெரியும், ஆனால் இவ்வளவு பேசுவார் என்பதே இப்போது தான் ஷோபனாவிற்கு தெரியும்.

“மெண்டல் புள்ளையை கட்டிக் கொடுத்து இருக்கீங்கன்னு சொல்லி, என் பையனுக்கு விவாகரத்து வாங்கி, வேற பொண்ணை கட்டி வெக்கற அளவுக்கு யோசனை வர வெச்சிடாத” என ஒரு ஆட்டமே ஆடினார்.

அதற்குள் சத்தியநாதனும் கமலநாதனும் வந்து விட்டனர்.