அத்தியாயம் – 6
அவனால் உறுதியாய் அவளை தன்னிடத்தில் பேச வைக்க முடியும். ஆனால் அவன் அதை செய்ய மாட்டானே!!
அவர்கள் இருவரும் மின்னலே படத்தில் வரும் அப்பாஸ், மாதவன் போல் தான். எப்போதுமே மோதல் தான் இருவருக்குள்ளும்.
சாதாரணமாய் நடந்து சென்றால் கூட ஏனென்றே தெரியாமல் அவர்கள் இருவரின் பார்வையும் வெட்டியே செல்லும் எப்போதும்.
எதனால் இந்த மோதல் எதற்கு என்று இருவருக்குமே தெரியாது. சிலரை பார்த்தால் நமக்கு பிடிக்காது, ஏனென்று தெரியாது ஆனாலும் பிடிக்காது.
அப்படி தான் இவர்கள். ஒருவனுக்கு தான் மற்றவனை பார்த்து அது போல உணர்வென்றால், அவனுக்கும் இதே உணர்வு தான் இவனைக் கண்டு.
அவர்களிருவரும் சாதாரணமாய் பேசியதேயில்லை எப்போதுமே!!
பெரும்பாலும் ஒருவர் விஷயத்தில் மற்றவர் தலையிடுவதில்லை. வீண் ரசாபாசம் இருவருக்குமே பிடிக்காது என்பதால் ஒதுங்கியே செல்வர். நேருக்கு நேர் பார்த்தாலும் முகத்தில் அப்படியொரு துவேஷமிருக்கும் இருவருக்குமே.
அவர்களிருவருமே ஒத்த குணத்தை கொண்டவர்கள், அதனாலேயே கூட ஒத்து போகாமல் இருந்திருக்கலாம். வடக்கும் தெற்கும் இணையும், வடக்கும் வடக்கும் சேருமா என்ன??
அதனால் அவனை பார்க்கும் எண்ணத்தை கைவிட்டான். காலை உணவை முடித்துக்கொண்டு மனம் போன போக்கில் அங்கு நடந்தான்.
முன்பு அவனும் அவளுமாய் சுற்றித்திரிந்த இடங்களை நோக்கி தன் கால்கள் செல்வதை உணர்ந்தே தானிருந்தான்.
சஞ்சீவையா பார்க்கில் சென்று அமர்ந்தான். இதே இடத்தில் இருவரும் பேசிக் களித்த நாட்கள் கண் முன் வந்து அவனை இம்சித்தது.
எங்கெங்கு காணினும் அவள் முகமே போல் ஒரு பிரமை அவனுக்கு. மிகத்தாமதமாய் இங்கு வந்திருக்கக் கூடாது என்பதை மனம் உணர்த்தியது.
நிம்மதி என்று தேடி வந்த இடத்தில் அவன் தன் நிம்மதியை தொலைத்திருந்தான். மனம் அமைதியடைவதற்கு பதில் ஆர்ப்பரித்தது ஏனென்றே தெரியாமல், அதை அடக்கும் வழி புரியாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
அருகில் சிறு பெண் ஒருத்தி அவள் தம்பியை போன்று இருந்த குட்டிப் பையன் ஒருவனை தானாய் தூக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
குழந்தை வேறு வெகு அழகாய் கொழு கொழுவென்றிருந்தான். அச்சிறுமியால் அவனை நிச்சயம் தூக்க முடியாது.
மீறி தூக்கினால் கீழே போட்டுவிடுவாள் என்பது உறுதி. வேகமாய் எழுந்தவன் சிறுமியின் முன்னே சென்று சென்றான். “என்ன பாப்பா பண்றீங்க??” என்றவாறே.
அப்பெண்ணோ பதிலேதும் சொல்லாமல் அவனை ஏற இறங்க பார்த்தது. பின் மீண்டும் தன் வேலையில் கவனமாய் அந்த குட்டியை தூக்கப் போக “வேணாம் பாப்பா தூக்காதீங்க”
“உங்களால தூக்க முடியாது, அப்புறம் தம்பி கீழே விழுந்திடுவான்”
“அதெல்லாம் என்னால முடியும் நான் பெரிய பொண்ணு தான்” என்றுவிட்டு மீண்டும் சரணை தூக்க முயல குழந்தை இவனை நோக்கி கையை நீட்டியது.
சட்டென்று அவனை தூக்கிக் கொண்டான். “அக்கா… அக்கா…”
“உங்க அக்காவா அவங்க… சொன்ன பேச்சு கேட்க மாட்டேங்குறாங்களே உங்க அக்கா… ஏன் கண்ணா அப்படி??” என்று குழந்தையை பார்த்து கேள்வி கேட்டான்.
குழந்தைக்கு அவன் கேட்ட கேள்வி புரியவில்லை. அவனை பார்த்து சிரித்தான் அவன்.
“உங்க அம்மா எங்கே?? நீங்க மட்டும் தனியா இங்க எப்படி வந்தீங்க??” என்று இப்போது அச்சிறுமியை பார்த்து கேட்டான்.
அவள் பதில் சொல்லும் முன் “பிரியா” என்ற குரலில் அவள் திரும்பினாள். அந்த பிரியா என்ற பெயர் அவனை தீண்டிச் செல்ல திரும்பி அச்சிறுமியை பார்த்தான்.
“சரண் இங்க என்ன பண்ணுறே??” என்று குழந்தையை நோக்கி கையை நீட்டியவாறே புதிதாய் இருந்தவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள் அங்கு வந்தவள்.
அவனை எங்கோ பார்த்தது போன்று இருந்தது அவளுக்கு. சரியாய் அடையாளம் காண முடியவில்லை.
“நான் பிரியன்… சாரி இந்த குட்டிப்பொண்ணு இவரை தூக்க முயற்சி பண்ணிட்டு இருந்தா… கீழே போட்டிருவாளோன்னு அவங்ககிட்ட பேசிட்டு இருந்தேன்”
“டோன்ட் மிஸ்டேக் மீ” என்றான் மரியாதையாய்.
“இட்ஸ் ஓகே…” என்றவள் “பிரியா தம்பியை தூக்கினியா, அப்பா எத்தனை முறை சொல்லியிருக்காங்க… அவனை தூக்கக் கூடாதுன்னு” என்று மகளை கண்டிப்பாய் பார்த்தாள் சுகுணா.
“சுகும்மா நான் பெரிய பொண்ணு தானே. நீங்க தானே அன்னைக்கு சொன்னீங்க. இப்போ தம்பி தூக்குறதுக்கு மட்டும் வேணாம் சொல்றீங்க”
“இவங்களும் அப்பா மாதிரியே சொல்றாங்க… நான் இவனை தூக்கினா கீழே போட்டுடுவேன்னு” என்று சிணுங்கினாள் அச்சிறுமி.
“நான் தூக்க வேணாம்ன்னு சொன்னதுல மேடம்க்கு என் மேல கோபம் போல…” என்று சிரித்தான் அவளை பார்த்து.
அவளோ “இவ எப்போமே இப்படி தான். இவனை தூக்குறேன்னு சொல்லி கலாட்டா பண்ணுவா… இவங்கப்பா வேண்டாம்ன்னு சொல்லுவாரு”
“நாம இதுக்கு முன்னாடி பார்த்திருக்கோமா… உங்களை எங்கயோ பார்த்த மாதிரியே எனக்கு பீல் ஆகுது” என்று சொல்லியே விட்டாள் அவள்.
“நான் இங்க தான் படிச்சேன் பத்து வருஷத்துக்கு முன்னால. மே பீ நீங்க அப்போ என்னை பார்த்திருந்தா தான் உண்டு. இப்போ நான் சென்னையில இருக்கேன்”
“அங்க நீங்க வந்திருந்தா என்னை பார்த்திருக்கலாம்”
“நான் சென்னைக்கு இதுவரைக்கும் வந்ததில்லை. ஹைதராபாத்க்கு நான் வந்தே சில வருஷம் தான் இருக்கும்” என்றாள் சுகுணா.
“உங்க பேர்…”
“சுகுணா…”
“இந்த பேருல எனக்கும் கூட யாரையும் இதுவரை தெரியாது” என்றான் அவன்.
“எனக்கும் அப்படி தான் உங்க பேருல யாரையும் தெரியாது. ஆனா பார்த்த மாதிரி இருக்கு. உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசம். நாங்க கிளம்பறோம், டைம் ஆகிடுச்சு” என்றுவிட்டு அவள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
பிரியனுக்கு இரண்டு மனதாயிருந்தது அவனை பார்க்கச் செல்வதா வேண்டாமா என்று. ஒரு மனமோ அவன் காலில் போய் நீ விழ வேண்டுமா என்றது மறுமனமோ மனைவியை நினைத்தது.
ஏன் இதற்கு முன் நீ அவனிடத்தில் விழவில்லையா என்று மனசாட்சி வேறு எடுத்துக் கொடுத்தது. இன்றைய அவளின் நிலைக்கு நீ தானே காரணம், இல்லையென்றால் என்னாகியிருக்குமோ!!
அவனாய் இருக்கப் போய் அவளை காத்தான், வேறு யாராவது இருந்தால்… இருந்தாலும் அவளுக்கு எதுவும் ஆகியிருக்காது. ஆனாலும் இன்றைய அவளின் நல்லநிலைக்கு அவன் மட்டுமே காரணம்.
அவனிடம் உனக்கென்ன விரோதம்… உனக்காகவும் உன் மனைவிக்காகவும் போய் பேசினால் தான் என்ன என்று தன் தரப்பு வாதங்களை மனம் எடுத்துரைக்க அதுவே இறுதியில் ஜெயித்தது.
இரவு அறைக்கு சென்றவனுக்கு ஏதேதோ எண்ணங்கள் மறுநாள் காலையிலேயே அவனை சந்திக்கச் சென்றான். அவனின் முகவரி தற்போது அவனிடத்தில் இல்லை தான்.
ஆனால் ராவ் கிரானைட்ஸ் என்றால் ஹைதராபாத்தில் தெரியாதோர் இருக்க முடியாது. புகழ்பெற்ற அந்நிறுவனத்தின் முகவரியை கண்டுப்பிடிப்பதொன்றும் அவனுக்கு கஷ்டமில்லை.
அலுவலகம் ஏன் செல்லவேண்டும் வீட்டிற்கே செல்வோம் என்றெண்ணியவன் பழைய நண்பன் ஒருவனின் எண்ணிற்கு அழைத்து முகவரியை வாங்கினான்.
இதோ அவன் வீட்டின் வாயில் வந்து நிற்கிறான். செக்யூரிட்டியிடம் அவனைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல அவர் இன்டர்காமில் அழைத்திருந்தார் உள்ளே.
“உங்க பேரு…” என்றவனிடம் “பிரியன் கல்லூரி தோழன்” என்று சொன்னான். ‘நீ தோழனா அவனுக்கு?? பின்னே எதிரியா??’ என்று மனம் கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக்கொண்டது.
இண்டர்காம் அழைக்க அதை எடுத்தவள் சுகுணா. விபரம் கேட்டுவிட்டு மீண்டும் அழைப்பதாய் சொல்லி வைத்தவள் ராமை தேடிச் சென்றாள்.
“என்னங்க யாரோ பிரியனாம் உங்களை பார்க்க வந்திருக்காங்க” என்றதும் அவன் புருவமத்தியில் ஒரு முடிச்சு.
‘திரும்பி வந்திட்டானா!! என்னைத் தேடி வரமாட்டான்னு நினைச்சேன். வந்திட்டானா!! கொஞ்சம் அவனை அழவிடுவோம்’ என்று எண்ணிக்கொண்டு “சரி உள்ள வரச்சொல்லு” என்றிருந்தான் மனைவியிடம்.
அவள் அப்புறம் நகரப்போக “சுகுணா வந்திருக்கறது யாருன்னு தெரியுமா??” அவள் இல்லையென்று தலையசைக்க “மேடமோட ஹஸ்பன்ட்” என்று அழுத்திச் சொன்னான்.
“நிஜமாவா?? எனக்கு அவரைப் பார்க்கணுமே” என்றாள் அவள் ஆர்வமாய்.
“சுகுணா நீ இப்போ போகாதே… செக்யூரிட்டிக்கு போன் பண்ணி சொல்லு”
“ஏங்க??”
“காரணமாத்தான்” என்றவன் எதையோ தீவிரமாய் யோசிப்பதுப் பட அவளும் விலகிச் சென்றாள்.
வெளியில் பிரியனிடம் செக்யூரிட்டி உள்ளே செல்லுமாறு கூற அவனும் வந்திருந்தான்.
பிரமாண்டமாய் இருந்த அவன் வீட்டிற்குள் நுழையும் போது இவனையா நாம் அவ்வளவு கீழாய் பார்த்தோம் என்று கூட ஒரு கணம் தோன்றி மறைந்தது.
‘எப்படி இருந்தால் என்ன!! அவனுக்கு காசிருந்தால் அது அவனோடு, எனக்கென்ன!!’ என்று எண்ணிக்கொண்டே உள்ளே சென்றான்.
யாருமில்லை வரவேற்பறையில் சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கிருந்த சோபாவில் உட்காரலாமா வேண்டாமா என்ற யோசனை வேறு.
‘வரச்சொல்லிவிட்டு வராமல் இருந்தால் என்ன அர்த்தம் அந்த திமிர் இன்னும் இவனுக்கு குறையவில்லை’ முணுமுணுத்தான்.
“ஹேய் அங்கிள் நீங்க இங்க எப்படி வந்தீங்க??” என்றவள் “அப்பா நான் சொன்னேன்ல பார்க்ல ஒரு அங்கிள் உங்களை மாதிரியே என்னை தம்பியை தூக்கக் கூடாது சொன்னார்ன்னு”
“அவர் வந்திருக்காருப்பா” என்று கத்திக்கொண்டே சென்றவள் முதல் நாள் அவன் பார்க்கில் பார்த்த அச்சிறுமியே தான்!!
ராம் எதிரில் வந்தவன் “யாரைடா செல்லம் சொல்றீங்க” என்றவன் அவளை தூக்கிக் கொண்டே வெளியில் வந்தான்.
வெளியில் இருந்தவனை பார்த்ததும் ‘இவனை தான் சொல்றாளா’ என்று எண்ணிக்கொண்டு “செல்லம் நீங்க உள்ள அம்மாக்கிட்ட போங்க” என்று அனுப்பி வைத்தான்.
வந்தவன் பிரியனின் முன் வந்து நின்றிருந்தான். இவன் பேசுவான் என்று அவன் பார்த்திருக்க அவன் பேசுவான் என்று இவன் பார்த்திருந்தான்.
ராம் தானாய் வாய் திறப்பான் போல் தோன்றவில்லை பிரியனுக்கு. கல்லுளிமங்கனாய் இருந்தானவன், கையை மார்புக்கு குறுக்காய் கட்டி மிடுக்காய் ஒரு பார்வை பார்த்தான்.
“உன்னோட பொண்ணா??”
“ஹ்ம்ம் ஆமாம் என்னோட பொண்ணு தான்” என்றான் அழுத்தமாய்.
“நான் எதுக்கு வந்தேன் என்னன்னு கேட்க மாட்டியா??”
“நீ தானே என்னை பார்க்க வந்தே?? என்னன்னு நீ தானே சொல்லணும், நான் ஏன் கேட்கணும்??” என்று பதில் கொடுத்தவன் ஓங்கி அறைய வேண்டும் என்று தான் தோன்றியது.
ஆனால் அமைதி காத்தான். காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்றால் அவனுக்கு இப்போது அவன் வந்த காரியம் தான் பெரிதாயிருந்தது.
“பிபியை என்னோட வரச்சொல்லு…”
“என்ன பிபியா??”
பிரியன் கண்ணை மூடித் திறந்தவன் “வதனாவை தான் சொன்னேன்”
“பார்றா செல்ல பேரு எல்லாம் வைச்சிருக்காரு…”
“அதைப்பத்தி உனக்கு தேவையில்லாதது” என்றவன் “அவளை என்னோட வரச்சொல்லு” என்றான் மீண்டும்.
“எதுக்கு??”
“இதென்ன கேள்வி??”
“தெரியாம தான் கேக்குறேன் சொல்லு…”
“என் பொண்டாட்டி அவ…”
“அப்படியா…” என்று ராம் கேட்கவும் பிரியனின் பொறுமை கரைந்தது.
பல்லைக்கடித்துக் கொண்டு “ராம் எல்லாம் தெரிஞ்சவன் நீ!! எந்த நிலையில இது நடந்துன்னு உனக்கு முழுசா தெரியலைன்னாலும் ஓரளவுக்கு தெரியும் தானே!!”
“அப்புறம் ஏன் இப்படி பேசிட்டு இருக்கே??”
“எனக்கு எதுவுமே தெரியாது” என்று சாதித்தவனின் சட்டையை பிடித்துவிட்டான் பிரியன்.
கீழே ஏதோ சத்தம் கேட்டு குழந்தைகளிடம் விளையாடிக் கொண்டிருந்த வதனா எழுந்து வந்து மாடியில் இருந்தாவாறே “ராம் என்னாச்சுடா…” என்றவாறே எட்டிப் பார்த்தாள்.
ராமின் முகத்தில் ஒரு திருப்தி இப்போது. “நீ எதுக்குடி இங்க வந்து எட்டிப் பார்க்குறே?? பேசாம உள்ள போடி…” என்று சொல்லவும் பிரியன் ராமை கடுமையாய் பார்தது முறைத்தான்.
வதனாவோ உள்ளே செல்லாமல் இருவரையும் பார்த்திருந்தாள். அவளையே பார்த்திருந்த பிரியனோ சட்டென்று ராமின் சட்டையில் இருந்து கையை எடுத்தான்.
ராம் போவென்று ஜாடை காட்ட அவள் அடுத்த நொடி அங்கில்லை.
“ராம் அவ என் பொண்டாட்டி என் முன்னாடியே நீ எப்படி அவளை ‘டி’ போட்டு கூப்பிடலாம்”
“உன் பொண்டாட்டியை சொன்னா தப்பு தான். ஆனா என் பொண்டாட்டியை நான் சொல்லலாம் தானே!!” என்று மற்றவன் மறுமொழி கூற பிரியன் என்ற வல்லவரையனுக்கு உலகம் தட்டாமாலையாய் சுற்றியது.
‘எப்போ நடந்திருக்கும்?? எப்படி?? இது எப்படி நடந்திருக்கும்?? இருக்காது பிபி இதுக்கு ஒத்துக்கிட்டு இருக்கவே மாட்டா?? ராம் இப்படி செய்ய மாட்டான்??’ என்று கேள்வி மனதில்.
எதையோ யோசித்து நிமிர்ந்தவன் “ராம் விளையாடாதே!! நீ அப்படி செய்யறவனில்லை. நான் உன்னை நம்பித்தானே இருந்தேன்”
அவனோ கிண்டலாய் சிரித்தவன் “உனக்கு நான் ஏன் நம்பிக்கையா இருக்கணும்”
“நீயும் நானும் அவ்வளவு க்ளோஸ் பிரண்ட்ஸ்ஆ என்ன??”
அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “ராம் ப்ளீஸ்…” என்றிருந்தான் இப்போது.
ராமிடம் சென்று கெஞ்சுவோம் என்று ஒருக்காலும் அவன் எண்ணியத்தில்லை. அதிகாரமாய் தான் எதையும் அவனிடம் கேட்டு வழக்கம்.
“வல்லா இதென்ன புதுசா இருக்கு ப்ளீஸ் எல்லாம் சொல்றே” என்று இகழ்ச்சியாய் பார்த்தான் ராம் மற்றவனை.
அதற்கு மேல் அங்கு நிற்க பிரியன் விரும்பவில்லை. அவன் எள்ளி நகையாடும் அளவிற்காய் தானிருக்கிறோம் என்ற எண்ணம் வேறு. வதனாவும் இங்கிருப்பாள் என்று அவன் எண்ணியிருக்கவில்லை.
‘ஆக இந்த காரணத்திற்க்காக தான் வதனா என்னை தவிர்த்தாளா!! ஆனால் முழுதாய் அப்படி தெரியவில்லையே!!’ என்று பலவித குழப்பம் அவனை சூழ்ந்தது.
பிரியன் அங்கிருந்து நகர்ந்ததும் அவனை திருப்தியாய் பார்த்த ராம் உள்ளே சென்றான்.
அவன் வெளியே சென்றதை மேலிருந்தே பார்த்திருந்த சுகுணா கணவனை நோக்கி வந்தாள்.
அவனை அங்கிருந்த ஒரு அறைக்குள் தள்ளிச் சென்றவள் “என்னங்க பண்ணி வைச்சிருக்கீங்க நீங்க?? எதுக்கு அவங்கக்கிட்ட இப்படி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொன்னீங்க” என்றாள்.
மனைவியின் முகத்தில் தெரிந்த உணர்வை கண்டுப்பிடிக்க முடியாமல் “உனக்கு என் மேல சந்தேகமா??”
“என்னைப்பத்தி தெரிஞ்சும் எப்படி நீங்க இப்படி கேட்கலாம்??” என்று கணவனை முறைத்தாள் அவள்.
“அப்போ பிரியனும் திரும்ப வருவான் என்னைத் தேடி” என்றான் பூடகமாய்.
“நான் என்ன கேட்டா நீங்க என்ன சொல்றீங்க??”
“நீ சந்தேகப்பட்டு கேட்கலைன்னு எனக்கு தெரியும். நான் இப்போ அவனை கொஞ்சம் குழப்பி விட்டிருக்கேன். வருவான் தெளிஞ்சதுமே என்னைத் தேடித்தான் வருவான். அவ்வளவு சீக்கிரம் வதனாவை நான் அவனோட அனுப்பிட மாட்டேன்”
“ஏன்னு உனக்கு புரியும் சுகுணா…” என்று அவன் சொன்னதும் புரிந்தது என்பதாய் கண்ணை மெதுவாய் மூடித் திறந்தாள் அவன் மனைவி.
தன்னை புரிந்த மனைவியை அவனுக்கு மிகப்பிடிக்கும். அருகில் நின்றிருந்தவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன் “லவ் யூ சுகும்மா”
“என்னாச்சு திடீர்ன்னு லவ் யூலாம் சொல்றீங்க…”
“அது மட்டுமா சொல்ல வந்தேன், இன்னும் என்னவெல்லாமோ செய்யணும்ன்னு தோணுது” என்றவன் அவளை தன்னோடு அணைத்தவாறே சென்று அறைக்கதவை தாழிட்டான்.
அவள் இதழை தன் வசப்படுத்தி அவளுடன் அவன் கட்டிலில் சரிய தன் உணர்வுக்கு வந்த சுகுணா “அச்சோ ஆளை விடுங்க… காலங்காத்தால என்ன வேலை இது??”
“நான் கிளம்பறேன்” என்று அவனை பிடித்து கட்டிலில் தள்ளிவிட்டு கதவை திறந்து ஓடி மறைந்தாள் அவள்.
ராமின் வீட்டில் இருந்து வந்த பிரியனுக்கு மனம் உளைக்கலமாய் கொதித்துக் கொண்டிருந்தது.
நேரே அவன் அறைக்கு தான் வந்திருந்தான். கட்டிலில் சாய்ந்தமர்ந்தவனின் எண்ணம் முழுதும் ராமின் வீட்டில் நடந்ததிலேயே இருந்தது.
‘எப்படி நடந்திருக்க முடியும்?? வதனாவும் ராமும்…’ அவனால் நினைக்கவே முடியவில்லை.
‘ராமை அவனுக்கு பிடிக்காது என்றாலும் அவனைப்பற்றி அவனறிவான். ராம் அப்படிப்பட்டவன் அல்ல அதனால் தானே தான் அவனை முழுதாய் நம்பினோம்’
‘அவனிடம் சென்றது கூட அதனால் தானே!! ராம் அவளைப் பொறுத்தவரை சிற்பி தானே!! அவளை இப்போது செதுக்கியவன் அவனாய் இருக்கலாம்’
சிற்பியே எப்படி சிலையை சொந்தம் கொண்டாடுவான். உறுதியாய் தெரிந்தது ராம் எதையோ தன்னிடம் மறைத்து பேசுகிறான் என்று. எதுவென்று புரியவில்லை அவனுக்கு. எண்ணங்கள் வண்டாய் மண்டை குடைந்தது.
சட்டென்று ஒரு ஒளி தோன்றியது இப்போது அவனுக்கு. ராம் பொய் தான் சொல்லியிருக்கிறான். அந்த பெண் அந்த சின்னப்பெண் ராமைத் தானே அப்பா என்று சொன்னாள்.
நேத்து அந்த பார்க்ல பார்த்தது அந்த பொண்ணோட அம்மா தானே. அப்போ!! அப்போ!! அவங்க தான் ராமோட மனைவியா இருக்கணும்’
‘பாவி ராம் கொஞ்ச நேரத்துல என்னை கதிகலங்க வைச்சுட்டுட்டியேடா!!’
‘எதுக்குடா பாவி அப்படி சொன்னே?? என்னை ஆழம் பார்க்கறியா!! திரும்பி வந்தவன் எதுக்கு வந்தான்?? ஏன் வந்தான்னு!!’
‘என்னையவா கலங்க வைச்சு பார்க்கறே?? உன்னை நான் கலங்க வைக்குறேன்டா!! இதே மாதிரி நானும் உன்னை கலங்க வைக்குறேன்’
‘கொஞ்ச நேரத்துக்காச்சும் நீ தவிக்கணும். அப்போ தான் என்னோட தவிப்பு உனக்கு புரியும் ராம்!!’
‘ராம் அவர் கேம் ஸ்டார்ட்ஸ்!!’ என்று சொல்லிக் கொண்டான்…
அடுத்த இரண்டு நாட்களுக்கு பிரியன் அமைதியாகவே இருந்தான். ராமிற்கே சந்தேகம் இந்நேரம் இவன் நம்மைத் தேடி வந்திருக்க வேண்டுமே என்று!!
அவன் எண்ணவில்லை தானே அவனைத் தேடி செல்வோம் என்று. பிரியன் தன்னைத் தேடி வரவைத்திருந்தான் ராமை…
விதியை பகடையாக்கி
விளையாடினான் ஒருவன்
வெல்லப்போவது
விதிவசத்தாலா??
மதிவசத்தாலா??