பூந்தேன் – 5
இலக்கியா முன்பே சொன்னது போல் கல்யாணத்திற்கு பிறகு தன் வேலையை விட்டிருந்தாள். புகழேந்திக்கு பார்த்து பார்த்து செய்வதிலேயே அவளுக்கு நேரம் சரியாய் இருந்தது..
இதெல்லாம் போதாது என்று அவள் வீட்டினர் வேறு ‘புகழேந்தி அப்பா அம்மா இல்லாத புள்ளை.. நீ தான் நல்லா பார்த்துக்கணும்…’ என்று பேசும்போதெல்லாம் அவளுக்கு சொல்ல, புகழேந்தியை கவனிப்பது தான் அவளது முழு நேர வேலையாகவே போனது..
இத்தனை நாள் வேண்டா வெறுப்பாய் தன் வேலைகளை தானே செய்தவன் இன்று அவனுக்காக, அவனை கவனிக்க, அவனில் சரிபாதியாய் ஒருத்தி வந்துவிட, அனைத்திற்கும் இலக்கியா இலக்கியா இலக்கியா வேண்டுமாய் இருந்தது..
“ஸ்ஸ்…. உங்களை வளர்க்கிறதுக்குள்ள பத்து பிள்ளைங்களை வளர்த்திடலாம் போல…” என்று இலக்கியா கிண்டலாய் சொல்வாள்..
“பத்தா… சரி எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை..” என்று அவன் சொல்ல,
“இருக்கும் இருக்கும்… வாய் பாரு…” என்று அவனோடு இருக்கும் பொழுதுகள் எல்லாம் பேச்சும் சிரிப்புமாகவே கழியும்..
இலக்கியா இதை தான் எதிர்பார்த்தாள், கணவனாக வருபவன், முதலில் நண்பனாகவும் இருக்க வேண்டும் என்று. கேலி கிண்டல்கள் எல்லாம் இயல்பாய் புரிந்து முதலில் தோழமையோடு பழகவேண்டும். அவள் எதிர்பார்த்தது போலவே அவனும் இருக்க மகிழ்ச்சியாய் இருந்தது அவளுக்கு.
“லக்கி மேடம்.. என்ன நீங்களா சிரிக்கிறீங்க..???” என்றபடி அவளை உரசிக்கொண்டு வந்து நின்றான் புகழேந்தி..
“ஏன் சிரிக்க கூடாதா???”
“சிரி… சிரி… எனக்கு ஷர்ட் பட்டன் போட்டுவிட்டுட்டே சிரி…” என்று அவளை தன் புறம் திருப்ப,
“இதுக்கும் நான் தானா…” என்று சொல்லிக்கொண்டே அவன் சொன்னதை செய்ய,
“எல்லாத்துக்குமே நீ தான் பேபி…” என்று என்று அவள் மூக்கோடு மூக்கை வைத்து உரச,
“ம்ம்ம் என்னதிது நேரமாச்சு…” என்று அவள் விலக.
“எப்போ பார் இதே தான் நேரமாச்சு நேரமாச்சுன்னு…”
“ஆமா லேட்டா கிளம்பிட்டு அப்புறம் வேகமா பைக் ஓட்டி போவீங்க..” என்றாள் கண்டிப்பாய்..
“உத்தரவு Mrs.. ரூல்ஸ்…” என்று சிரிக்க,
“ரொம்பத்தான்.. நைட்டுக்கு சுஸ்மி வீட்ல டின்னர்க்கு கூப்பிட்டு இருக்காங்க” என்று அவள் நினைவூட்ட,
“நல்லவேளை சொன்ன.. சீக்கிரமே வந்திடுவேன்..” என்றவன் உண்டுமுடித்து, ஒருவழியாய் கிளம்பிச் சென்றான்..
இது தினமும் நடக்கும் ஒன்று தான்.. ஏற்கனவே புகழேந்தி திருமணத்தை முன்னிட்டு விடுமுறை என்று பத்து நாட்கள் மேலே எடுத்திருந்தான்.. அடுத்து தேனிலவுக்கு வேறு நெருக்கி ஐந்து நாட்கள் என்று விடுமுறை எடுத்திருக்க, அடுத்து விடுமுறை என்பது இல்லவே இல்லை..
ஆகையால் யார் விருந்திற்கு அழைத்தாலும், அது இரவு உணவிற்காக தான் இருந்தது.. ஒவ்வொருநாள் ஒவ்வொருத்தர் என்று முறை வைத்து அழைக்க, இன்றைய நாள் சுஸ்மிதா வீடு போவதாய் இருந்தது.
சுஸ்மிதா.. அவளை பற்றி இலக்கியாவிற்கு புரிந்துகொள்ள முடியவில்லை.. எப்போது எப்படி பேசுகிறாள், நடந்துகொள்கிறாள் என்றே அவளால் கணிக்க முடியவில்லை.. அவள் செய்வதை எல்லாம் அப்படியே சும்மா என்றும் ஒதுக்கமுடியவில்லை..
அன்று கிச்சடியை குப்பையில் போட்ட தினம், சுஸ்மிதா போகவும், இலக்கியா ஒன்றுமே பேசாமல் இருக்க, “சாரி லக்கி.. அவ அப்படி செய்வான்னு நானே நினைக்கலை.. பட் அது டேஸ்ட் நல்லா இல்லை போல.. அதான் கொட்டிட்டா..” என,
“ப்ளீஸ் இன்னொருத்தருக்காக நீங்க என்கிட்டே சாரி சொல்லாதீங்க..” என்றவள் அதற்குமேல் இதைப்பற்றி பேசவில்லை. ஆனாலும் மனதில் ஒரு ஏமாற்றம்.
புகழேந்தியோ “லக்கி தனியா இருக்கா சுஸ்மி… அப்பப்போ வந்து பார்த்துக்கோ…” என, சும்மாவே அவள் வருவாள், இப்போது தினமும் அவன் போகவும் வந்துவிடுகிறாள். முதலில் ஒன்றும் தெரியவில்லை..
கொஞ்ச நாள் செல்ல செல்ல, அப்படி எதையும் இயல்பாய் எடுத்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை நாம் தான் இப்படி நினைக்கிறோமோ என்று அவளுக்கு அவள் மீதே ஒரு சந்தேகம் வரத் தொடங்கியது.
இப்படியே எண்ணங்கள் ஓட, பாத்திரங்களை ஒழித்து போட்டு, அப்போது தான் வந்து அமர, “என்ன லக்கி செய்ற…” என்றபடி மெல்ல மெல்ல ஸ்டிக்கை ஊன்றி நடந்து வந்தாள் சுஸ்மிதா..
“வாங்க சுஸ்மி…” என,
“புகழ் கிளம்பி போயாச்சா…???” என்றபடி அமர,
“ஹ்ம்ம் கொஞ்ச நேரம் முன்னாடி தான் போனார்… நீங்க சாப்பிட்டீங்களா???” என,
“ஆச்சு ஆச்சு…” என்றவள், “என்ன லக்கி டல்லா இருக்க..” என்று விசாரிக்க,
“ஒண்ணுமில்ல லேசா தலைவலி…” என,
“அவனுக்கு தெரியுமா??” என்று அடுத்த கேள்வி வந்தது சுஸ்மிதாவிடம்.
“ம்ம்ஹும்…”
“ஏன்..??”
“அவரே அவசரமா கிளம்பி போறார்.. நான் கொஞ்சம் தூங்கி எழுந்தா சரியாகிடும்னு சொல்லலை சுஸ்மி.. இதெல்லாம் என்ன பெருசா..”
“அட என்ன இப்படி சொல்லிட்ட லக்கி.. கண்டிப்பா இதெல்லாம் சொல்லணும்.. அவனை நீ ஆபிஸ்க்கு போகவே விட்டிருக்க கூடாது.. கட்டின பொண்டாட்டியை கவனிக்கிறதை விட்டு என்ன வேலை.. இரு நான் சொல்றேன்…” என்று தன் அலைபேசியை எடுக்க,
“ஐயோ வேணாம் வேணாம் சுஸ்மி.. வேணாம் ப்ளீஸ்…” என்று வேகமாய் அவளது அலைபேசியை வாங்கி வைத்தவள்.
“லேசா தான் பெய்ன்.. இதுக்கேன் இவ்வளோ ரியாக்ட் பண்ணனும்..” என்று பதற,
“உனக்கு புரியலை லக்கி.. புகழ் என் பிரன்ட் தான் இல்லைன்னு சொல்லலை.. ஆனா ஒன்னு சொல்றேன் நல்லா புரிஞ்சுக்கோ கல்யாணத்துக்கு அப்புறம் ஆம்பிளைங்க கவனம் எப்பவுமே நம்ம மேல தான் இருக்கணும்…” என்று சொல்ல,
‘இவளென்ன இப்படி சொல்கிறாள்…’ என்று தோன்றியது..
ஒருவேளை இப்படிதான் இவள் திருமணம் செய்து போன இடத்திலும் இருந்திருப்பாளோ என்று நினைக்க, அடுத்து பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.. அமைதியாய் இருக்க,
“என்ன லக்கி ரொம்ப முடியலையா???” என,
“அது அதெல்லாம் எதுமில்ல.. வேலை எல்லாம் முடிஞ்சது… ஈவ்னிங் உங்க வீட்டுக்கு வர்றோமே…” என,
“ஹ்ம்ம் சரி.. அப்போ நல்லா ரெஸ்ட் எடு… எதுவும் வேணும்னா போன் பண்ணு…” என்றவள் மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு அவள் வீட்டிற்குச் சென்றாள்..
இதே தான் தினமும். ஒவ்வொன்று சொல்வாள்.. சாதாரணமாய் சொல்வது போல் இருக்கும், ஆனால் அதை அப்படியெல்லாம் எடுத்துகொள்ளவும் முடியாது.. கதவை பூட்டிவிட்டு அறைக்கு சென்று படுக்க, அடுத்த சில நேரத்திலேயே புகழேந்தி அழைத்தான்..
“புகழ்….”
“லக்கி… என்னடா தலைவலியா.??? என்கிட்டே ஏன் சொல்லல??” என்று கேட்டவனின் குரலே அத்தனை தவித்தது..
“புகழ் என்னதிது..?? லேசா தலைவலி அவ்வளோதான் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியாகிடும்.. உங்களுக்கு சுஸ்மி சொன்னாங்களா???” என,
“ம்ம் ஆமா… ஒரே திட்டு.. நான் உன்னை சரியா கவனிக்கலைன்னு.. கஷ்டமா போச்சு லக்கி…” என,
“அச்சோ புகழ்… ப்ளீஸ்ப்பா… நீங்க என்னை கவனிக்கலைன்னு நான் சொன்னா தான் நீங்க சங்கடப்படனும்.. வேற யார் சொன்னாலும் இல்லை.. எனக்கு ஒண்ணுமில்லை..” என்று அடுத்து அவனை சமாதானம் செய்து ஒருவழியாய் பேசி முடிக்க தலை இன்னும் வலித்தது..
‘ச்சே நான் சொல்லவேணாம் சொல்லியும் இந்த சுஸ்மி ஏன் இப்படி பண்ணாங்க…’ என்று கடிந்தவள், இதேது இதை வேறு யாராவது செய்திருந்தால் வீட்டிற்கே போய் நன்றாய் பேசிவிட்டு வந்திருப்பாள், ஆனால் சுஸ்மிதா அவளை கண்டு, அவளது வாழ்வை எண்ணி மனதில் சுரந்த இறக்கம் அப்படியெல்லாம் செய்ய விடவில்லை..
‘இனிமே பார்த்து பேசணும் நம்மளும்…’ என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டு உறங்கிபோனாள்..
மாலை புகழேந்தி வந்து, அப்போதும் அவன் அவளை விடாது ‘ஏன் சொல்லலை சுஸ்மி சொல்லி எனக்கு தெரியுது.. நீயே சொல்லிருக்க வேணாமா…’ என்று லேசாய் கடிந்து கேட்க,
“எனக்கு நிஜமாவே அப்போ லேசா தான் தலைவலி… ரொம்ப முடியாட்டி நானே சொல்லிருப்பேனே… சுஸ்மிதாகிட்ட சொல்ல வேணாம் சொன்னேன்…” என்று அவளும் கடிய,
“ஏன் சொன்னதுல என்ன தப்பு லக்கி.. அப்போ எனக்கு தெரியவேணாமா..??” என,
“கண்டிப்பா தெரியனும்.. ஆனா என்னைபத்தி உங்களுக்கு நான் சொல்லி தெரிஞ்சா மட்டும் போதும்… அதேபோல தான் உங்களுக்கும்… சரியா…” என்று அவன் தோள்களில் சாய்ந்து, அவன் கரங்களை இறுக பற்றி சொல்ல, அவனது கோவம் சற்றே மட்டுப்பட்டது..
ஆனால் இலக்கியாவிற்கு மனதினுள்ளே தான் இத்தனை சொல்லியும் இந்த சுஸ்மிதா ஏன் இப்படி ஒரு சீன கிரியேட் செய்யவேண்டும் என்று இருந்தது.. மனதில் ஒரு நெருடல்… இந்த சுஸ்மிதா சொல்வதெல்லாம் செய்வதெல்லாம் சரியா இல்லையா என்று உறுத்த தொடங்கியது..
“என்ன அமைதியா இருக்க லக்கி கிளம்ப வேணாமா…??” என,
“நேரமிருக்கே… போவோம் மெல்ல…” என
“கொஞ்சம் லேட் ஆச்சு… சுஸ்மியே இங்க வந்திடுவா…” என்று எழுந்தபடி சொல்ல,
“ஹ்ம்ம் நீங்க வேற அவங்களை பார்த்துக்க சொல்லிட்டீங்க.. பாவம் டெய்லி இங்கயும் அங்கயும் அலையுறாங்க…” என்று அவள் சாதரணமாகவே தான் சொன்னாள்.
ஆனால் அறைக்கு சென்றுகொண்டு இருந்த புகழேந்தியோ டக்கென்று நின்றவன், “என்ன சொல்ற…??” என,
“என்ன சொன்னேன்… சுஸ்மி தினமும் இங்கயும் அங்கயும் அலையுறாங்கன்னு சொன்னேன்..” என்று அவள் திருப்பி சொல்ல,
“பார்த்தியா நான் சொன்ன ஒருவார்த்தைக்காக அவ வந்து டெய்லி உன்னை பார்க்கிறா.. நீ என்னடான்னா சுஸ்மி உன்னை பத்தி என்கிட்டே பேசினது தப்புன்னு சொல்ற…” என, இலக்கியாவிற்கு மனதிற்குள் ஒரு அபாய மணி ஒலித்தது..
‘பொறுமை பொறுமை இலக்கியா… வார்த்தைகளை விட்டுவிடாதே…’ என்று அவள் மனமே எச்சரிக்க,
“ஆமாமா.. Mr.ரூல்ஸ் சொன்னா மீர முடியுமா.. போங்க பாஸ். ரெடியாகுங்க… அப்படியே எனக்கும் என்ன சேலை கட்றதுன்னு சொல்லுங்க..” என்று அவன் முதுகில் கை வைத்து தள்ளியபடியே அறைக்குள் நடத்தி சென்றாள்..
ஜார்ஜ் மனைவி ஓவரா செய்வா என்று சொல்லியிருக்க, ஆனால் அவளோ இலக்கியாவிடம் நன்றாகவே பேசினாள்.. மேகலா, அவள் கணவன், ஜார்ஜ், சந்தீப் இவர்களின் குடும்பத்து ஆட்களும் நன்றாகவே பேச பழக, இலக்கியாவால் சுஸ்மிதா பேசுவது செய்வதை தான் அத்தனை இயல்பாய் எடுத்துகொள்ள முடியவில்லை..
இலக்கியா மட்டும் சுதாரிக்காவிட்டிருந்தால் கொஞ்ச நேரத்தில் அவளுக்கும் புகழேந்திக்கும் சண்டை வந்திருக்கும் அல்லவா..
ஒருவழியாய் கிளம்பி இருவரும் சுஸ்மிதா வீட்டிற்கு செல்ல, அங்கே நல்ல விதமாகவே உபசரிப்பு கிடைத்தது.இருவரையும் உண்ண வருமாறு சுஸ்மிதாவின் அம்மா அழைக்க, புகழேந்தியும் இலக்கியாவும் உண்ண அமர, அவரும் பரிமாற,
“அம்மா முதல்ல ஸ்வீட் தான் கொடுக்கணும்…” என்று சொல்லியபடி கையில் ஒரு இனிப்பு டப்பா ஏந்தி வந்தவள்,
“ஹே பேமிலி மேன்.. வாய் திற…” என்று புகழேந்தியின் வாயில் ஒரு பாதுஷாவை திணித்தாள் சுஸ்மிதா…
இலக்கியாவிற்கு இது தவறாக படவில்லை என்றாலும், சட்டென்று ஒருமாதிரி ஆகிவிட்டது.. அத்தனை ஏன் புகழேந்தியே கூட இதனை நினைக்கவில்லை..
“என்ன செய்ற சுஸ்மி… குடு நானே சாப்பிட்டுக்கிறேன்..” என,
“ஏன் நான் கொடுக்க கூடாதா… லக்கி கொடுத்தா சாப்பிடுவ தானே…” என, இலக்கியாவோ மிக மிக சிரமப்பட்டே அவள் முகத்தை சாதாரணமாய் வைத்திருந்தாள்.
புகழேந்தி சங்கட்டமாய் சுஸ்மிதாவின் அம்மாவை பார்த்தவன், பின் இலக்கியாவை பார்க்க, அவளோ அமைதியாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவனுக்கே சுஸ்மிதா செய்தது அதிகப்படியாய் தான் இருந்தது..
எப்போதும் இப்படி செய்தது இல்லை.. சிறு வயதில் தொட்டு விளையாடியது உண்டு.. அதன் பிறகு அனைவருக்குமே ஒரு எல்லை உண்டல்லவா. அந்த எல்லையை யாரும் மீறியதில்லை.. இவர்களின் நட்பு பிறர் கண்களை உறுத்தாமல் இருந்ததால் தான் இத்தனை வருடமாய் நீடிக்கிறது..
ஆனால் இன்று சுஸ்மிதா திடீரென்று இப்படி செய்யவும் அவனுக்கும் ஒருமாதிரி ஆனது.
“சுஸ்மி.. என்ன பண்ற.. அவங்களை சாப்பிட விடு… நீ இப்படி வந்து உட்கார்…” என்று அவள் அம்மா அதட்ட,
“என்னையே சொல்லுங்க எப்போ பார்..” என்று சொல்லியபடி அமர்ந்தாள்.
இலக்கியாவிற்கோ எப்போதடா வீட்டிற்கு செல்வோம் என்று இருந்தது. அங்கே இருக்கவே மனம் ஒருமாதிரி இருக்க, காலையில் அப்படிதான் தான் சொல்லவேண்டாம் என்று சொல்லியும் புகழேந்தி அழைத்து சொல்லியிருக்கிறாள், இப்போது என்னடாவென்றால் லக்கி கொடுத்தா சாப்பிட மாட்டியா என்று இனிப்பு ஊட்டுகிறாள் இதெல்லாம் எண்ண எண்ண கோவமாய் வந்தது. தன் உணர்வுகளை மறைத்து சிரித்து பேசுவதும் சிரமமாய் இருக்க,
‘கிளம்பலாம்…’ என்று புகழேந்திக்கு கண் ஜாடை காட்டினாள். அவனும் நேரமானது உணர்ந்து, “சரி அப்போ நாங்க கிளம்புறோம்…” என்று எழ,
“அட என்ன இப்போவே கிளம்பிட்டீங்க..” என்று சுஸ்மி சொல்ல,
“இல்ல சுஸ்மி.. நேரமாச்சு… இல்லாட்டி காலையில எந்திருச்சு வேலை செய்ய முடியாது…” என்று இலக்கியா சொல்லவும், புகழேந்தியும் அதையே சொல்லி கிளம்பி இருவரும் வீட்டிற்கு வந்துவிட, இலக்கியா ஒன்றுமே பேசவில்லை. அவள் மனநிலை சாதாரணமாய் இல்லை.. சுஸ்மிதாவை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று புரியவே இல்லை..
அமைதியாய் அறைக்கு சென்றுவிட, புகழேந்திக்கு மனதில் திக்கென்று இருந்தது.. ஒருவேளை தவறாய் எதுவும் நினைத்துகொண்டாளோ என்று..
“லக்கி…” என்று அழைத்தபடி அவனும் அறைக்குள்ளே செல்ல, அவளோ படுத்தே விட்டிருந்தாள்..
“லக்கி கோவமா???” என,
“என்ன கோவம்.. ஏதுமில்லையே…” என்று அவன்பக்கம் திரும்பாமல் சொல்ல,
“ம்ம்ச் இங்கிட்டு திரும்பித்தான் பாரேன்…” என்று அவளை தன்பக்கம் திருப்ப,
“என்ன சொல்லுங்க…” என்றாள்..
“கோவமா???” என்று அவளையே பார்த்து கேட்க,
“இல்ல…”என
“பின்ன ஏன் வந்ததும் இப்படி படுத்துக்கிட்ட.. ட்ரெஸ் கூட மாத்தல…” என்று ஆராய்ச்சியாய் பார்க்க,
“ஏன்னு உங்களுக்கே தெரியலையா புகழ்…” என்று கேட்டவளின் குரலும் சரி முகமும் சரி மாறிவிட்டிருந்தது..
“லக்கி.. நீ தப்பா…”
“ச்சி ச்சி.. அப்படியெல்லாம் இல்லை..கோவமும் இல்லை.. ஆனா இதெல்லாம் என்னால நார்மலா எடுத்துக்க முடியலை..” என, புகழேந்தி புரியாமல் பார்த்தான்..
“இப்போ.. எனக்கும் பிரண்ட்ஸ் இருக்காங்க.. பசங்க பொண்ணுங்கன்னு.. உங்க முன்னாடி, எவனாவது எனக்கு ஊட்டினா உங்களுக்கு ஒருமாதிரி இருக்காதா..” என,
“ம்ம் ஆமா…” என்றான் அவனும் அவள் மனம் புரிந்து.
“அதே ஆமா தான் எனக்கும்… நான் உங்களையோ, உங்க பிரண்ட்ஷிபையோ தப்பா நினைக்கலை.. நினைக்கவும் மாட்டேன்.. ஆனா சில விசயங்கள்ல நம்மளும் சரியா இருக்கணும்.. அண்ட் இன்னொன்னு எந்த ரீசனுக்காகவும் உங்களும் எனக்கும் நடுவில வேற யார் வர்றதும் எனக்கு பிடிக்காது…” என்று தீர்கமான குரலில் சொல்ல, இலக்கியாவின் இந்த பார்வையும் பேச்சும் புகழேந்திக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவளது பேச்சின் பொருள் வேறாக இருந்தாலும் அவளது எண்ணமெல்லாம் அவன் மீது கொண்டிருக்கும் அளவுகடந்த அன்பு மட்டும் தானே. அமைதியாய் அவனும் படுத்துக்கொள்ள,
“ட்ரெஸ் மாத்தலையா…??” என்று இலக்கியா வினவ,
“Mrs. ரூல்ஸ் மாத்தலை.. சோ Mr.. ரூல்ஸ் மாத்தலை….” என பாவமாய் முகம் வைத்து சொல்ல,
“அடடா… என்ன செல்ல குட்டி… வேணும்னா நான் மாத்தி விடவா…” என கண்களை சிமிட்டி இலக்கியா கேட்க,
“ஓ.. தாராளமா.. நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்…” என்று புகழேந்தி சொல்ல,
“பண்ணுவீங்க பண்ணுவீங்க..” என்று அவன் காதை பிடித்து திருகியவளை, அவள் சொன்னதை செய்ய வைத்தே பின் விட்டான்..