அவளது எண்ணத்திற்கு நேற்மாறாக ஆறு பேர் அமரும் மேஜையில் ஒரு பக்கமாக அமர்ந்திருந்த மூவரையும் பார்த்து திக்கென்றானது மணிக்கு. அர்ஜுனை நடுவில் அமர வைத்து அவனின் ஒரு பக்கம் மணி மறுபக்கம் மீனா அமர்ந்து கொண்டனர். மீனாவின் எதிரே சிவமூர்த்தியும் மணியின் எதிரே உத்தமும் அமர்ந்திருந்தனர். பசியின் இடத்தை பயம் எடுத்துக் கொண்டதால் தலையை உயர்த்தாமல் மேஜையில் இருந்த
காலி தட்டை வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார் மீனா. ஒரே வீட்டில் பல வருடங்களாக வாழ்ந்து வந்தாலும் இதுவரை இது போன்றதொரு சூழ்நிலை வரவேயில்லை.வீட்டில் நடக்கும் தினசரி சமையலாகட்டும் சுப நிகழ்வுகளுக்காக செய்த விருந்தாகட்டும் ஒரு நாள், ஒரு பொழுது வீட்டினரோடு சேர்ந்து உண்டதில்லை. இந்தப் புது நிகழ்வுகள் அவரது மனக்குழப்பத்தை அதிகரித்து எங்கு போய் முடியப் போகிறதோ என்ற அச்சத்தை விளைவித்தது.
உத்தம் எதிரே அமர்ந்திருந்த மணியின் மனதும் மீனாவைப் போல் தான் யோசித்துக் கொண்டிருந்தது. ’இவங்க இங்கே இருந்தா புதுசு புதுசா எதையாவது செய்து எல்லாத்தையும் தலைகீழா மாத்தி எங்கே கொண்டு போய் விடப் போறாங்களோ?’ என்று உத்தமின் செய்கை ஏற்படுத்த போகும் எதிர்வினையை நினைத்துக் கலங்கிப் போயிருந்தாள்.
அவர்கள் எல்லோரும் ஒரே மேஜையில் அமர்ந்து சாப்பிடுவது துளி கூட காவேரிக்குப் பிடிக்கவில்லை. அவருடைய மகனின் நடவடிக்கைகள் அவருள் கோபத்தை ஏற்படுத்தினாலும் அதை வெளி இடத்தில் வெளிப்படுத்த முடியாது என்பதால் மெனு கார்ட்டை பார்ப்பது போல் அதிரே அமர்ந்திருந்தவர்களைப் புறக்கணித்தார்.
உணவு வேளை தொடங்குவதற்கு முன்பே அது எப்போது முடியும் என்ற மன நிலையில் இருந்தனர் பெண்கள் மூவரும். ஆண்களின் மனநிலை வேறாக இருந்தது. பெண்களின் விருப்பத்தைக் கேட்டறிந்து, அவனுடைய அப்பாவிற்கு ஒத்துக் கொள்ளும்படியான உணவையும் அர்ஜுன் சாப்பிட பிரியப்பட்டதையும் ஆர்டர் செய்து ஒவ்வொருவரையும் ஸ்பெஷலாக உணர வைத்து மதிய உணவு நேரத்தை மனத்திற்கும் நாவிற்கும் இனியதாக மாற்றிக் கொண்டிருந்தான் உத்தம்.
அர்ஜுனிடம் அவன் காட்டிய அன்பை பார்த்தவளுக்கு அவனைக் கிருஷ்ணனோடு மீனாம்மா ஒப்பீடு செய்தது மனத்தில் வந்து பசை போல் ஒட்டிக் கொள்ள, அவளை அறியாமல் அவனது முகத்தில் சில நோடிகள் அவளது பார்வை தேங்கி நிற்க ஆரம்பித்தது. அதைக் கண்டு கொண்டவன், ஒருமுறை, ’என்ன?’ என்று புருவத்தை உயர்த்திக் கேட்க, டக்கென்று தலையைக் குனிந்து கொண்டாள் மணி. அதே வழக்கத்தை உணவு நேரம் முடியும் வரை அவள் தொடர்ந்திருக்கலாம். ஆனால் அவளுடைய மனது அவள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அவள் உணர வேண்டிய நாள் அது என்பதால், சில நொடிகள் கழித்து, உத்தம் மீது கள்ளப் பார்வை வீச, இந்தமுறை,“உன்னை மாதிரி வாய்லே தானே நான் சாப்பிடறேன்..வேற வழிலே சாப்பிடற மாதிரி என்னோட முகத்தை உத்து உத்து பார்க்கற..என்ன விஷயம்?” என்று அவன் கேட்க, மணியின் மூச்சு நின்றது, முகம் சிவந்தது. மாமியின் எதிர்வினை நினைத்து மிரண்டு போனவள் காவேரியைப் பார்க்க பயந்து உத்தமை உறுத்துப் பார்த்தாள்.
அதுவரை அவரெதிரே அமர்ந்திருந்த மீனாவின் முகத்தை அவ்வப்போது உத்துப் பார்த்துக் கொண்டிருந்த சிவமூர்த்தி அவரது உணவு தட்டின் மீது கவனத்தைத் திருப்பினார்.
மணி மீது மகன் வைத்த குற்றசாட்டை கண்டு கொள்ளாமல்,”டேய், நீ சாப்பிடற வேலையை மட்டும் பார்.” என்றார் காவேரி.
அவனுடைய அம்மா சொன்னது போல் செய்யாமல், மணியின் பார்வையோடு அவனது பார்வையைக் கலக்க, சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள் மணி.
மணியை முறைத்துப் பார்த்தபடி,“அதைத் தான் பார்த்திட்டு இருந்தேன்..அவ தான் என்னையே பார்த்திட்டு இருந்தா..இப்போ கூட பார்த்தா..என்னென்னு கேளுங்க” என்றான்.
‘இவங்க என்ன முடிவுலே இருக்காங்க? எதுக்கு இப்படி பிரச்சனையை இழுத்து விடறாங்க?’ என்று மிகவும் பயந்து போனாள் மணி.
அதுவரை அவனது உணவில் கவனமாக இருந்த அர்ஜுன் அவனது தலையை உயர்த்தி மணியை உத்தம் முறைப்பதை பார்த்தாவன்,”அண்ணா, நீங்க தான் அக்காவை முறைச்சுப் பார்த்து பயமுறத்தறீங்க..பார்க்காதீங்க.” என்றபடி அவனது இருக்கையை பின்னே தள்ளி விட்டு உத்தமை நோக்கி ஓடி வந்தவன், பக்கவாட்டில் நின்றபடி உத்தமின் கண்களை அவனது இடதுக் கரத்தால் மூட,
“டேய்..கையை எடுடா..அவன் தட்டை பார்த்து சாப்பிட வேணாமா?” என்று காவேரி அதட்ட,
“அக்காவைப் பார்க்க மாட்டேன்னு சொல்லச் சொல்லுங்க.” என்று மணிக்காக அர்ஜுன் வரிந்து கட்டிக் கொண்டு காவேரியோடு சண்டைக்கு வந்தான்.அதைக் கேட்டு மிரண்டு போன மணி காவேரியின் புறம் பார்வையைத் திருப்பினாள்.
இதுவரை வீட்டுப் பெரியவர்களிடம் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேசியிராதவனின் இந்தச் செயல் ஏற்கனாவே கோபமாக இருந்த காவேரியின் கோபத்தை மேலும் கிளறினாலும் அவனது இந்த நடவடிக்கையால் மணியைப் பற்றிய அவரது கவலையை லேசாக குறைந்தது. ‘சாரதி போல இல்லை இவன்..அக்காவைப் பத்திரமாப் பார்த்துக்குவான் இந்தக் தம்பிக்காரன்.’ என்று மனத்தில் மெச்சிக் கொண்டவர், அவரைப் பார்த்துக் கொண்டிருந்த மணியை நோக்கி கோபப் பார்வை வீச,”அவன்..அவன்..” என்று சமாதானம் செய்ய சரியான வார்த்தை கிடைக்காமல் மணி தடுமாற, அவரது பார்வையை அர்ஜுன் மீது திருப்பினார் காவேரி.
“நான் அவனைக் கண்டிக்கறேன்..நீ போய் சாப்பிடு.” என்று அவனுக்கு வாக்குறுதி கொடுத்தவர்,”அவ எங்கே வேணும்னாலும் பார்க்கட்டும்..நீ உன்னோட தட்டை மட்டும் பார்த்து சாப்பிடு உத்தம்.” என்று மகனை அதட்டினார்.
அதில் திருப்தி அடைந்த அர்ஜுன் அவனது இடத்திற்குச் சென்றான். அதன்பின் அவ்வப்போது மணியின் பார்வை காவேரியைத் தொட்டு மீண்டாலும் அவரருகே அமர்ந்திருந்த உத்தம் மீது கடுகளவு கூட அவளது கண்கள் பாயவில்லை. உத்தமும் அவனது தட்டிலிருந்து பார்வையை விலக்கவில்லை. சமத்து பையனாக சாப்பிட மட்டும் வாயைத் திறந்தான்.
அவனுடைய அம்மாவிற்கு பயந்து தான் அமைதியாக இருக்கிறானென்று மற்றவர்கள் நினைக்க, அவனுக்குப் பயந்து போய் தான் அக்காவிடம் வம்பு செய்யாமல் இருக்கிறான் என்று அர்ஜுன் நினைக்க,’ஒதுங்கிப் போகலாம்னு நினைச்சா விட மாட்டேங்கறாளே..இவ பார்வையாலேயே பத்த வைப்பா..ஒண்ணும் செய்ய முடியாம நான் உள்ளேயே பொசுங்கிப் போகணுமா? நல்லவேளை அம்மா மூலமா அவளை ஆஃப் செய்தேன்..அக்கா பார்த்தது தெரியாம அவளைப் பார்க்காதேன்னு குதிக்கறான் தம்பிக்காரன்..அக்கா, தம்பி இரண்டு பேருக்கும் டிக்கெட் போட்டிட வேண்டியது தான்..என் பக்கத்திலே உட்கார வைச்சு, அவ கையைப் பிடிச்சிட்டு அவளையே பார்த்திட்டு இருக்கப் போறேன்..இரண்டு பேரும் என்ன செய்யப் போறாங்கண்ணு பார்க்க சுவாரசியமா இருக்கப் போகுது.’ என்ற உத்தம எண்ணத்தில் தான் உத்தம் அமைதியாக இருக்கிறானென்ற உண்மை அவன் மட்டுமே அறிந்தது.
கடந்த சில நாள்களாக நடக்கும் நிகழ்வுகள், இனி நடக்கப் போகும் நிகழ்வுகள், சண்டை, சச்சரவு, சஞ்சலம், குழப்பம், இழப்பு என்று அனைத்தும் புருஷோத்தம யோகம் என்ற குறிப்பு கிடைக்காததால் மணி, மீனாம்மா, காவேரி, சிவமூர்த்தி நால்வர்க்கும் மனக்கலக்கத்தோடு முடிந்தது அந்த உணவு வேளை.
**************
‘யோகம்’ இந்த வார்த்தைக்கு அர்த்தம்னு பார்த்தா வழி, இணைப்பு, சேர்க்கைன்னு பலது இருக்கு.ஆன்மீகம், ஜோதிடம், பஞ்சாங்கம்னு பல துறைகளில் வெவ்வேறு அர்த்தங்களில் உபயோகிக்கப்படுகிறது.
பகவத் கீதையோட அத்தியாயங்கள் அனைத்தின் பெயரும் ‘யோகம்’ என்று தான் முடியுது. அதிலே பதினைந்தாவது அத்தியாயம் புருஷோத்தம யோகம் – சம்சார உலகத்தின் சோதனைகள், சபலங்களை வென்று, பந்தப் பாசப் பற்றுக்களை வேரோடு அறுத்து பரமாத்மாவான பகவானோடு இணைய வழியைக் காட்டுகிறது புருஷோத்தம யோகம்.
கதைலே உத்தமோட எல்லோரும் இணையப் போகறதை தான் புருஷோத்தம யோகம்னு சொல்லியிருக்கேன். writer’s creative liberty nnu நினைச்சுப் படிங்க..
************
பகவத் கீதை அத்தியாயங்களின் அமைப்பு, நோக்கம், ‘யோகம்’ என்ற பெயர் கொடுத்தற்கான காரணம் பற்றி தெய்வத்தின் குரல்லே சொல்லப்பட்டிருக்கு. அதிலிருந்து ஒரு சில வரிகள் கீழே பகிர்ந்து கொள்கிறேன். முழுமையா தெரிஞ்சுக்கணும்னு நினைக்கறவங்க வலைத்தளத்திலே படிச்சுக்கலாம்..
‘கீதையில் தெளிவாகவே கர்மா, பக்தி, ஞானம் என்று மூன்று யோகங்களைச் சொல்லியிருக்கிறது. முதல் ஆறு அத்யாயம் கர்ம ஷட்கம், அடுத்த ஆறு அத்யாயம் பக்தி ஷட்கம், அதற்கப்புறம் முடிவாக வரும் ஆறு அத்யாயம் ஞான ஷட்கம் என்றுகூடச் சொல்வதுண்டு.
இப்படி முக்யமாக மூன்று யோகங்களை பகவான் சொன்னதோடு, அவற்றின் பிரிவாகப் பதினெட்டு அத்யாயங்களிலும் வரும் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு யோகம் என்றே பெயர் கொடுத்திருக்கிறார். ஸாங்க்ய யோகம், கர்ம யோகம், என்பவைதான் (முறையே) நேராக நிவ்ருத்தி, ப்ரவ்ருத்தி மார்க்கங்களைக் குறிப்பிடுபவை. ஒரு அத்யாயத்திற்கு — பன்னிரண்டாம் அத்யாயத்திற்கு — பக்தியோகம் என்று பெயர். இவை தவிர த்யான யோகம், ராஜவித்யா-ராஜகுஹ்ய யோகம், விபூதி யோகம், புருஷோத்தம யோகம் என்றெல்லாம் மொத்தம் பதினெட்டு யோகங்கள் கீதையில் heading-ஆகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அர்ஜுன விஷாத யோகம் என்று முதல் அத்யாயத்திற்குப் பேர். அதாவது அர்ஜுனனின் மனக்குழப்பத்துக்குக்கூட ‘யோகம்’ என்று பெயர்! ‘பகவான்தான் இப்படிப் பதினெட்டு அத்யாயத்திற்கும் தலைப்புப் போட்டாரா? அவர் பாட்டுக்கு அர்ஜுனனோடு ஸம்வாதம் பண்ணிக்கொண்டு (ஸம்பாஷித்துக் கொண்டு) தானே போனார்? நடுவில் அத்யாயத் தலைப்பு எங்கே வந்தது?’ என்று கேட்டால் எனக்கு பதில் சொல்லத் தெரியாது. கீதை பகவான் சொன்னது என்று வழிவழியாக வந்திருக்கும் நம்பிக்கை நமக்குப் போதும். அதை பாரதத்தில் சேர்த்து எழுதிய வ்யாஸர் அத்யாயத் தலைப்புப் போட்டிருந்தால், அதுவும் பகவானே போட்ட மாதிரிதான். வ்யாஸரும் பகவானின் அவதாரம் தான்; அம்சாவதாரம்.
விஷாதத்தை, (அதாவது) மனக் குழப்பத்தை, ஏன் யோகமென்று சொன்னார்? அதனால் (அந்த மனக் குழப்பத்தால்) தானே அவனுக்கு ஆத்ம ஸம்பந்தமாக நினைக்கத் தோன்றிற்று? அதனால்தான்!