அதன் பின் வண்டியின் சூழ்நிலை சகஜ நிலைக்குத் திரும்பினாலும் உத்தம் மட்டும் கொஞ்சம் ஒதுங்கி தான் இருந்தான். அதனால் வண்டியில் அமைதி குடியேற, பாத்ரூம் பிரேக்கிற்குப் பிறகு வந்த அடுத்தக்கட்ட பயணத்தில் உத்தமைத் தவிர அனைவரும் கண் அசந்தனர். அவ்வப்போது விழித்து பார்த்தாலும் யாருக்கும் எங்கே போகிறோம் என்று தெரியவில்லை.
நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்த குறுகிய பாதையில் வண்டியைத் திருப்பினான் உத்தம். மண் பாதை என்பதால் சீராக இல்லாமல் மேடும் பள்ளமுமாக இருந்தது. ஒருவர் பின் ஒருவராக கண் விழித்தவர்கள் இரு பக்கமும் இருந்த செடி கொடிகளை ஆராய்ச்சியாகப் பார்த்தனர்.
“இங்கே என்ன இருக்குன்னு அழைச்சிட்டு வந்திருக்க டா? செடியும் கொடியும் தான் கண்ணுக்குத் தெரியுது.” என்றார் காவேரி.
“இயற்கை விவசாயம்..மூலிகைத் தோட்டம்.” என்று பதில் அளித்தான் உத்தம்.
“இன்னைக்கு நீ அழைச்சிட்டு போற இடமெல்லாம் இப்படித் தான் இருக்கும் போல.” என்று காவேரி கடுப்பாக சொல்ல, அந்த நொடி வண்டியைக் குடில் ஒன்றின் முன் நிறுத்தியிருந்தான் உத்தம். சுற்றுச் சுவர், வேலி எதுவும் இல்லாமல் அத்வானத்தில் இருந்த குடிலைப் பார்த்து பயம் ஏற்பட்டது காவேரிக்கு.
“இங்கெல்லாம் இருக்க முடியாது..பாதுகாப்பு ஏற்பாடு எதுவும் இல்லை..ஓர் ராத்திரியா இருந்தாலும் சரிப்பட்டு வராது..மூணு வயசானவங்க..ஒரு வயசுப் பொண்ணு, ஒரு சின்ன பையன்..நீ ஒருத்தன் தான் ஆம்பிள்ளை..ஆத்திர அவசரம்னா உன் ஒருத்தனாலே எதுவும் முடியாது..வண்டியைத் திருப்பு, வீட்டுக்குப் போயிடலாம்.” என்று கறாராக பேசினார் காவேரி.
காவேரியின் சொற்பொழிவிற்குப் பின் அந்த இடத்தை கண்களால் சுற்றி வந்தாள் மணி. ஆங்காங்கே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் சிறிதும் பெரிதுமாக பல குடிகள் இருந்தன. எதிலும் ஆள்கள் இருப்பது போல் தெரியவில்லை. அதே சமயம் அந்த இடம்அவளது மனத்தில் அச்சத்தை விளைவிக்காமல் அமைதியைக் கொடுத்தது.
“அம்மா, மெயின் ரோட்லேர்ந்து இங்கே உள்ளே வரும் போது பெரிய சுற்று சுவரும் பத்தடிக்கு இரும்பு கேட்டும் இருந்ததை நீங்க பார்க்கலையா? என்று கேட்டான் உத்தம்.அவர் எங்கே அதையெல்லாம் பார்த்தார்? ஆழ்ந்த உறக்கத்தில் அல்லவா இருந்தார். அதை ஒத்துக் கொள்ளாமல்,
“உனக்கு செடி கொடி நடுவுலே இருக்கணும்னா நம்ம தோட்டத்திலே ஒரு குடிலை கட்டிக்கோ.” என்றார்.
உடனே,”அம்மா, அது வேற..இது வேற..இங்கே கிடைக்கற அனுபவம் நம்ம தோட்டத்திலே கிடைக்காது..இறங்குங்க.” என்றான். வேறு வழியில்லாமல் அவனது சொல்லுக்குக் கட்டுப்பட்டு வண்டியிலிருந்து இறங்க ஆயுத்தமானார் காவேரி.
அவர்கள் அனைவரும் இறங்குவதற்குள் திடீரென்று இருவர் முளைத்து அவர்களின் சாமான்களோடு குடினுள்ளே சென்றனர். அங்கே இருந்த மர நாற்காலியில் அனைவரையும் அமர வைத்து விட்டு வரவேற்பில் இருந்த ஊழியரிடம் சென்றான் உத்தம்.
கால்மணி நேரம் கழித்து அடுத்தடுத்து இருந்த இரண்டு குடில்களுக்கு இடையே ஓடிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட குடிலின் வாயிலில் நின்றபடி,“டேய், போதும் டா..உள்ளே வாடா.” என்று தம்பியை அதட்டினாள் மணி.
“நீ போ க்கா..நான் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரேன்.” என்றான் அர்ஜுன்.
“விளையாட என்ன டா இருக்கு இங்கே? வாடா.” என்று அவனைப் பிடிக்க ஓட அவனோ காவேரி, சிவமூர்த்தி, உத்தம் தங்கியிருந்த குடினுள்ளே சென்று விட்டான். அவனது அந்தச் செயல் மணியினுள் சஞ்சலத்தை ஏற்படுத்த,’இவனுக்கு என்ன ஆகிடுச்சு? இப்படி சொன்ன பேச்சை கேட்காம நடந்துக்கறான்..வீட்டுலேயும் இதே போல இருந்தா, எப்படிச் சமாளிக்கறது?’ என்று கவலையானாள்.
அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட குடினுள்ளே சிறிய வரவேற்பறை அதை அடுத்து வாஷ்ரூமோடு கூடிய இரண்டு படுக்கையறைகள் இருந்தன. அதிலொன்றில் இளைப்பாறிக் கொண்டிருந்த மீனாம்மாவிடம் சென்றாள் மணி.
“எதுக்கு அவனை அதட்டிட்டு இருக்க? எங்கேயும் போக மாட்டான்..வந்திடுவான்.” என்றார் மீனா.
“இங்கேயும் அங்கேயும் ஓடிட்டு இருந்தவன் இப்போ மாமியோட குடில் உள்ளே போயிருக்கான் மீனாம்மா..அவங்களும் இளைப்பாறணுமில்லே?” என்று கேட்க, அதற்கு மீனாம்மாவிடமிருந்து பதில் வரவில்லை.
“மாமிகிட்டே நல்லாத் திட்டு வாங்கிட்டு வரட்டும்.” என்று சொல்லி விட்டு அந்த அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
அர்ஜுனின் இந்த அவதாரத்தை நினைத்து மீனாம்மாவிற்கும் கவலையாக தான் இருந்தது.அதே சமயம் அன்று காலையில் ஆற்றங்கரையில் நடந்தது அவரது மனத்தில் வந்து போக,’நல்லவேளை அவனுக்கு எதுவும் ஆகவில்லை’ என்று ஆசுவாசமடைந்தவர்,”இன்னைக்கு ஒரு நாள் தானே அவன் இஷ்டப்படி இருக்கட்டும்..நாளைக்கு வீட்டுக்குப் போனதும் அவனைக் கண்டிச்சுக்கோ.”என்றார்.
“சின்னவனை ஏதாவது சொன்னா பெரியவருக்குப் பொத்திட்டு வருது.” என்று பொறுமினாள் மணி.
“இன்னைக்கு உத்தம் தம்பியையும் அர்ஜுனையும் பார்க்கும் போது கிருஷ்ணரும் அர்ஜுனனும் இப்படித் தான் இருந்திருப்பாங்கண்ணு தோணுது..அவனுக்கு அந்த மாதிரி ஓர் ஆள் அவசியம் மணி..நான் சொல்ல வர்றது புரியுதா?” என்று கேட்டார்.
‘புரிகிறது’ என்று தலையசைவில் தெரிவித்தவளின் மனது அர்ஜுனின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. அவனுக்காக சாரதியின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்று ஒரு மனது சொல்ல, மற்றொன்றோ ‘உன்னைப் பற்றியும் யோசி..உன் வாழ்க்கை பாழாய் போனா அவனோடது நல்லா இருக்காது..நீயும் அவனும் தனி தனி கிடையாது.’ என்று எச்சரிக்கை செய்தது.
இந்த வருஷம் இல்லை என்றால் கட்டாயமாக அடுத்த வருஷம் அவள் ஒரு முடிவு எடுத்து தான் ஆக வேண்டும். மாமி சொன்னது போல் சாரதி தானே அவளுக்கும் அர்ஜுனுக்கும் பொறுப்பு. அவன் தானே அவர்கள் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்க உரிமை படைத்தவன். அவர்களின் ஒரே இரத்த சொந்தம் அவன் தானே. அவன் சொல்வதை அவர்கள் கேட்டு தானே ஆக வேண்டும். இப்போதுவரை மாமியின் ஒப்புதலைக் கேட்பவன் நாளை அவரிடம் தெரிவிக்காமல் அவளை அவனோடு நிரந்தரமாக அழைத்துக் கொண்டால் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாதே. அந்த நினைப்பே அவளது உள்ளத்திலும் உடலிலும் ஓர் அசௌகரியத்தை ஏற்படுத்த,
“மீனாம்மா, நான் போய் குளிச்சிட்டு வேற உடுப்புக்கு மாறிக்கறேன்..இது இன்னமும் முழுசா காயலை.” என்று தெரிவித்து விட்டு அவளது அறைக்கு சென்று விட்டாள்.
அதே சமயம், அடுத்திருந்த குடிலில், அவன் அமர்ந்திருந்த ஒற்றை இருக்கையின் கைப்பிடியில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த அர்ஜுனோடு ஒரு கையால் பொய்யாக குத்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்த உத்தம், அவனெதிரே இருந்த இருக்கையில் மௌனமாக அமர்ந்திருந்த தந்தை, தாய் இருவரிடமும்,”லன்சை இங்கேயே சாப்பிடலாமா?…இல்லை ரெஸ்டாரண்ட் போய் சாப்பிடலாமா?” என்று கேட்டான்.
அவர்கள் பதில் அளிக்குமுன், உத்தமின் கையைப் பிடித்து அதை அவனது வயிற்றுக்கு எடுத்து சென்ற அர்ஜுன்,”அண்ணா, ரெஸ்டாரண்ட்போய் சாப்பிடலாம்.. ரொம்ப பசிக்குது.” என்றான்.
அவனது வயிற்றில் லேசாக குத்தி,“இவ்வளவு நேரம் விளையாடிட்டு இருந்த போது இந்தப் பசி எங்கே டா போச்சு?” என்று உத்தம் கேட்க,
“தெரியலை.” என்று அவனது உண்மையான பதிலில் புன்னகை சிந்திய உத்தம்,”மீனாம்மாவையும் உங்கக்காவையும் ரெஸ்டாரண்ட்டுக்கு அழைச்சிட்டு வா..நாங்க நேரா அங்கே வந்திடறோம்.” என்று சொல்லி முடிக்குமுன் அந்த இடத்திலிருந்து பறந்து போயிருந்தான் அர்ஜுன்.
“மீனா பாட்டி, நாம எல்லோரும் ஹோட்டல்லே போய் லன்ச் சாப்பிடணும்..அண்ணா அழைச்சிட்டு வரச் சொன்னாங்க.” என்று பரபரப்பாக அறிவித்தான் அர்ஜுன்.
அர்ஜுனின் அறிவிப்பு மீனாம்மாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. குளித்து முடித்து வந்த மணியிடமும் அதைத் தகவலை அர்ஜுன் பகிர, ஒரே மேஜையில் அமர்ந்து உணவு அருந்த காவேரி மாமி ஒப்புக் கொள்ள மாட்டார் என்பதால் எந்தப் பயமுமில்லாமல் தம்பி, மீனம்மாவோடுஉணவகத்திற்கு சென்றாள் மணி.