மருத்துவமனையிலிருந்து வீடு வந்து ஒரு வாரக்காலம் கடந்திருந்தது. தேன்மொழி இரண்டு வார விடுப்பு எடுத்து இருந்தாள். கல்லூரி முதல்வருமே உடல்நிலை சீரானதும் கல்லூரிக்கு வந்தால் போதும் என்று சொல்லியிருந்தார். இவள் இல்லையென்றால் கல்லூரிக்கு கெட்ட பெயர் வந்திருக்குமே.

இவள் விரைந்து செயல்பட்டதால் தான் இரு மாணவிகளும் உயிர் பிழைத்திருந்தார்கள். அவள் முன்னதாகவே அவர்களை நோக்கி சென்றதால் தான் அவர்களைக் காப்பாற்ற முடிந்திருந்தது. இல்லையென்றால் நீரின் வேகத்தில் எங்காவது அடித்துச் செல்லப்பட்டிருப்பார்கள்.

விளையாட்டாக இருவரும் முன்னேறி சென்றது, வினையாகிவிட்டது. பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிட்டது. அதுவும் தேன்மொழியை தூங்கிக் கொண்டு வந்ததை பார்த்தவர்கள் பயந்து தான் போனார்கள், தங்களால் தான் அவள் நிலைமை இப்படியாகிவிட்டது என்று. அடித்து செல்லபட்ட இருவரும் சுயநினைவுடன் இருக்க, அவர்களை காப்பாற்ற சென்ற தேன்மொழியோ மூச்சின்றி கிடந்தாலே.

“தேன்!! தேன்!!! கண்ண தொற…” என்ற குரல்கள் அவர்களை அச்சுறுத்தியிருந்தது. சரியாக முதல் உதவி செய்திருந்ததால், பெரிதாகப் பயப்படும் அளவிற்குச் செல்லவில்லை. மருத்துவரும் இதனைக் குறிப்பிட்டிருந்தார். அதன் பின் தான் அந்த மாணவிகள் சமாதானம் ஆனார்கள்.

அப்படியொரு அழுகை அவர்கள் இருவரும். அதனை கண்டவர்களுக்கு அவர்களை பழி சொல்ல மனம் வரவில்லை. தேன்மொழியும் வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறியதும் தான் மாணவிகளும் வீட்டிற்குச் சென்றார்கள்.

அன்று கண் முழித்ததிலிருந்து எதையோ பறிகொடுத்தது போலவே இருக்கும் மகளை கவனித்துக் கொண்டு தான் இருந்தார் சுந்தரம். அதன் பொருட்டே அவளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லாமல், கடையை வெற்றி மற்றும் கண்மணியை வைத்துப் பார்த்துக் கொண்டார்.

“தாத்தா…. அம்மா சாப்பாடு கொடுத்துவிட்டாங்க. அப்புறம் நீங்க இன்னைக்கு கடைக்கு போவீங்களாம். அம்மா இங்க இருப்பாங்கலாம்.” என்று சொல்லிவிட்டு, தேன் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

“என்ன சித்தி பண்ற?”

அவள் ஒன்றுமில்லை என்று தோள்களைக் குலுக்க,

“ஓஹ்! அப்படி” என்றான் புருவங்களை ஏற்றி.

அவள் என்னவென்று பார்க்க, “சித்தி… தவமிருக்க உனக்கு இடமே கிடைக்கலையா? தண்ணிக்குள்ள போய் தான் தவம் இருக்கணுமா நீ?”

அவன் பேசும் மொழி புரியாதது போல அவனைப் பார்க்க,

“ஹனி பனி! சரியில்லையே நீ…” என்று அவள் அருகில் அமர்ந்தான்.

அவள் எதுவும் பாதிக்காததுப் போல அமைதியாக அமர்ந்துக் கொண்டாள்.

“அப்போ சொல்ல மாட்ட” என்று அவன்  மீண்டும் கேட்க.

கடுப்பானவள், “என்ன சொல்லணும்?”

“அதை நீ தான் சொல்லணும்”

“அதான் எதை?”

“எதை சொல்லணும்னு நீ தான் முடிவு பண்ணனும்”

“எனக்கு எதுவும் சொல்ல இல்லை”

“இல்லையே நியூஸ் வந்துச்சே?”

“ப்ச்…” என்று மீண்டும் கடுப்பானவள்.”விளங்குற மாதிரி பேசுடா… கட்சி மீட்டிங் போய் கெட்டு போயிருக்க”

“ஹ்ம்ம் அத சொல்லு தேனு… போன வாரம் இவன் பண்ண கூத்த கேட்ட தானே! இதெல்லாம் நமக்கு தேவையா?” என்று  உள்நுழைந்தாள் கண்மணி.

“மொவ்!! அது நம்ம அடையாளம். தமிழ்நாட்டையே தூக்கிடானுங்க. அது எப்படி விட முடியும்? நீங்களும் ஏதும் கண்டுக்காம பார்த்திட்டு இருக்கீங்க. அதான்”

“இங்க இருக்குற பஸ்ல மட்டும் ஓட்டுனா ஆச்சா?”

“சித்தி நீ நியூஸ் பாரு. நான் பற்ற வைத்த நெருப்பொன்று! தமிழ்நாடு முழுக்க நம்ம ஆளுங்க ஆரம்பிச்சுட்டாங்க வேலையை. நாளைக்கு நான் கூட போறேன்”

“டேய்!” என்று கண்மணி அதிர,

“கவலைப்படாத மா”

“நீ பாட்டுக்கு என்னத்தையாவது செஞ்சிட்டு ஸ்டேஷன் போய்டுவ. உன்னை பேசி வெளிய கூட்டிட்டு வரது தான் உங்க அப்பா வேலையா டா?” அவர் பொறுக்கமாட்டாமல் கேட்க,

“கூல் மம்மி!! தாத்தாவுக்கு சாப்பாடு எடுத்து வை. போ போ…” என்று அவரை விரட்டிவிட்டான்.

அவர்களின் சம்பாஷனைகளைப் பார்த்த தேன்மொழியின் முகத்தில் கீற்று புன்னகை.

“என் பொழப்ப பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்குல” என்று கார்த்தி கேட்க,

“ஆமா ஸ்டேஷன்ல யாருடா அந்தப் பொண்ணு” என்று இவள் கேட்கவும்.

“மணியம்மை அதுக்குள்ள சொல்லிடுச்சா?  இந்த மணியம்மையை வச்சுகிட்டு ஒரு ரகசியத்தையும் பேணிக் காக்க முடியுதா?” என்று அலுத்துக் கொண்டான்.

அவனை சட்டைசெய்யாமல் “பேரு என்ன?” என்று கேட்டாள் தேன்மொழி.

“மெல்லினமாம்”

“ம்ம்… அப்புறம்”

“யோவ் சித்தி… நீ பலே ஆளுதான். அப்படியே கதையை என்கிட்ட திருப்பிட்ட பார்த்தியா?”

“உனக்கு என்ன கேட்கணுமோ அதை நேரா கேளுடா”

“கேட்டுட்டாலும்…. அவசியம் நீ தான் போய் அதுங்கள காப்பாத்தனுமா? போனவ, திரும்பி வர வேண்டியது தான, எதுக்கு அங்கேயே தியானம் பண்ண ஆரம்பிச்ச?” என்று கேட்டு முடிப்பதற்குள்,

“தேனு!!” என்று சுந்தரம் வந்துவிட்டார்.

கார்த்தி அப்படியே அமைதியாகிவிட்டான்.

“சொல்லுங்க அப்பா” என்று தேன்மொழி தயங்க,

“சாப்பிட வா… கார்த்தி நீயும் வா, உனக்கும் சேர்த்து தான் கண்மணி எடுத்துட்டு வந்திருக்கா” என்றார்.

அதன் பின் யாரும் யாருடனும் பேசவில்ல. அமைதியாக மதிய உணவை உண்ண, சட்டென நிமிர்ந்த தேன்மொழி கார்த்தியிடம் குரலைத் தழைத்து, “அன்னைக்கு என்னை  காப்பாத்தினது, யாரு அது?” என்று ரகசியமாக கேட்டாள் அவன் பக்கம் சாய்ந்து.

“உனக்கு நான் பார்த்த பையன் தான் தேனு” என்ற சுந்தரத்தின் பதிலில் அதிர்ந்து அவரைப் பார்க்க. அவரோ எதையும் காட்டிக்கொள்ளாது சாப்பிடுவது தான் தன் தலையாய கடமை என்பது போல உண்டுக்கொண்டிருந்தார்.

அப்போது தான் ஒன்றை உணர்ந்தாள் தேன்மொழி. அவளது தந்தை அவள் முகம் பார்த்து பேசி நாட்கள் ஆகியிருந்தது.

உண்டு முடித்த சுந்தரம் எழுந்து கை கழுவ சென்றுவிட, தவறு செய்த குழந்தை போல கண்மணியைப் பார்த்தாள். கண்மணி என்ன? என்பது போல அவளைப் பார்க்க.

“சித்தி சம்பவம் செய்திருக்காங்க மா” என்றான் கார்த்தி தகவலாய்.

“என்ன என்னடா சம்பவம்?” என்று தேன் அவனிடம் எகிற, காரணமே இல்லாமல் அவளை காப்பாற்றியவன் மீது கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது அவளுக்கு.

“யாரது?” என்று அதிகாரமாய் கேட்டாள் இப்போது.

வாயில் விரல் வைத்து தலையை அசைத்தவன், சொல்ல அனுமதி இல்லை என்று காண்பித்திருந்தான்.

“கண்மணி கடைக்குக் கிளம்புறேன் மா… தேனு கிளம்புறேன்” என்று சுந்தரம் சொல்ல, பொறுக்க முடியாமல் “யாருப்பா அது நீங்க பார்த்திருக்கிற பையன்” என்று கேட்டுவிட்டாள்.

அவளை நிதானமாய் பார்த்தவர், “உனக்கு எப்போ கல்யாணம் பண்ண ஓகேவோ அப்போ சொல்றேன். ஒருவேளை அவனுக்கு அதுக்கு முன்ன கல்யாணம் ஆகிடுச்சுனா நாம வேற பையனை பார்ப்போம்.” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

“அக்கா உங்களுக்குத் தெரியுமா?”

“இல்ல தேனு, நான் கடையில இருந்தேன், இவன் தான் அப்போ வீட்ல இருந்தான்.”

“ஓ! அதான் சார் அங்க ஸ்டாஃப்ஸ் கிட்ட சிதப்பானு சொன்னாரோ?”

“ஆப்கோர்ஸ்….” என்று சிரித்தான்.

இடதுகையால் அவனின் உச்சியில் நங்கென்று ஒரு கொட்டு வைத்தாள் தேன்மொழி.

“மம்மி…. சித்தி கொட்டுறா” என்று தலையை தேய்த்துவிட்டவாறு புகார் சொல்ல,

“ரெண்டு பேரும் சீக்கிரம் சாப்பிட்டு முடிங்க. ஃபார்ம் வரைக்கும் போயிட்டு வரணும். தேனு நீயும் தான். தாத்தா உன்னை கூட்டிட்டு வர சொன்னார்.”

மூவரும் கிளம்பி அவர்களின் தோட்டத்திற்குச் சென்றார்கள். தாத்தா அவளின் நலம் விசாரித்துவிட்டு அவளை தன்னுடனே வைத்துக் கொண்டார்.

அவளும் தாத்தாவிடம் கதை அளந்தபடி சிறு சிறு வேலைகள் கணினியில் செய்துக் கொடுத்தாள்.

கார்த்தி வெளியிலுள்ள வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு அங்கு வந்தவன் சேரில் பொத்தென்று அமர்ந்தான்.

“ஷப்பா  என்னா வெயிலு…. தாத்தா உங்க மருமககிட்ட சொல்லி கொஞ்சம் கம்மியா வேலைவாங்க சொல்லுங்க. என் பாடி தாங்காது” என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தான்.

“செய்யலாம் ஒன்னும் தப்பில்ல ஊருக்கு உழைக்கிற. வீட்டுக்கும் உழை” என்று அசால்டாக சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கண்மணி இருக்கும் திசை நோக்கிச் சென்றார்.

சிரிப்புடன் தேன்மொழி, “பங்கம் டா கார்த்தி” என்றாள்.

“சிரிக்காத சித்தி!! இந்த தாத்தா நான் அங்கிருக்கும் போது எப்படி பேசுவாரு தெரியுமா? ஏதோ என்னைய பார்க்கவே தவம் கிடக்குற மாதிரி என்னா பில்டப்! இங்க வந்ததுக்கு அப்புறம் நம்மள கண்டுக்க மாட்டிங்கிறாரு.”

மெல்லிய சிரிப்புடன், “இந்த ஆப் நல்லா டிசைன் பண்ணியிருக்க டா… ஓவர்சீஸ் எக்ஸ்போர்ட் பண்றதுக்கு ஃபார்மாலிட்டி எல்லாம் முடிச்சிட்டியா?”

“இன்னும் ஒரு வேலை மட்டும் பாக்கி இருக்கு சித்தி.”

“அங்க உன் பிரெண்ட் பார்த்துபானா?”

“ஆமா சித்தி இந்தியன் ஸ்டாருக்கு அவன் டிஸ்ட்ரிபியூட் பண்ணிடுவான். ஸ்லோ வா தான் பிக் அப் ஆகும்.” என்று விளையாட்டு தனங்கள் இருந்தும் பொறுப்புணர்வுடன் பதில் கூறினான்.

இத்தனை நேரம் வம்பளந்தவன் தொழில் என்று வரவும் பொறுப்பாகப் பதில் சொல்ல, அவனை நினைத்து தேன்மொழிக்கு பெருமிதமே.

“அப்புறம் கார்த்தி மெல்லிசை என்ன சொல்றாங்க?”

“மெல்லிசை அதாரு?” என்று யோசித்தவன்,

“சித்தி அவ பேரு மெல்லினா…. லீனா” என்று அசடு வழிந்தவன், “எங்க எப்பவும் அந்த இடையினமும் வல்லினமும் கூடவே சுத்துதுங்க” என்று கைகளில் குத்திக்கொண்டான்.

“எப்படி டா… அடுத்துனு அசால்ட்டா மூவ் ஆகிட்ட?”

“பின்ன உன்னை மாதிரியா இருக்கிறது?”

அதற்கு அவள் முறைக்க,

“சித்தி…. ஆசைப்பட்டது கிடைக்கலையா, கிடைக்கிறத ஆசைப்பட வேண்டியது தான்”

“உனக்கு இது கிடைச்சது மாதிரி தெரியலையே?”

“கிடைக்கலனு அப்படியே விட்டுட முடியுமா? மீண்டும் ஆசைப்படலாம்”

“மீண்டும் மீண்டுமா?”

“அதில் என்ன தவறு மகாபிரபுவே!”

“அடேய்! நித்யானந்தா”

“Love is a existential reality!” என்று வலதுக் கையை ஆசிர்வாதம் தருவது போல வைத்து, அவள் சொன்னவரைப் போல பேசினான். அவளும் அவனுடன் சேர்ந்து,

“Marriage is a mega matrix” என்று சொல்லி சிரித்தாள்.

‘அது சரி’ என்றவன், “கிளம்புறேன் சித்தி” என்று அவன் தலை முடியை சரி செய்ய.

“அதுக்குள்ளையா?”

“நீ வேற சும்மா இல்லாம மெல்லினாவை நியாபகப்படுத்திட்ட. அதான் ஒரு அட்டெண்டன்ஸ் போடலாம்னு” என்று நல்லபிள்ளை போல பாசாங்குச் செய்தான்.

“டேய் நல்லவனே! நீ நடத்து”

“அம்மா கேட்டா கட்சி ஆபீஸ் போயிருக்கேனு சமாளி சித்தி” என்று குறிப்பு கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

அவன் அங்கிருந்து சென்றதும் தனிமை அவளை சூழ்ந்துகொள்ள. அவனை போல தன்னால் இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் பெரிதாய் அவளைத் தாக்கியது.

தன் வெற்று கையைப் பார்த்தவளுக்கு ருத்ரன் அணிவித்த கைசெயின் நினைவு வர, அன்று நீரில் அது செடியில் மாட்டிக்கொள்ள அதை எடுக்க தான் அவள் போராடியது.

பின் சுயம் மறந்து அங்கேயே இருந்தது. நினைவு தப்ப அந்த நொடி யாரோ ஒருவர் அவளை பிடித்து இழுப்பது உணர்ந்தாலும் அதன் பின் மயங்கிவிட்டாள்.

‘உங்களையும் தொலைச்சுட்டேன்! உங்க நினைவா இருந்ததையும் தொலைச்சுட்டேன்!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

“அன்னைக்கு வந்தது யாரு? அவன் தான் அப்பாகிட்ட தேவையில்லாம எதையோ சொல்லிருக்கணும். அவனுக்கு தெரியுமா என்ன நடந்ததுனு? ஒண்ணு என்கிட்ட கேட்டிருக்கணும், இல்லனா சரியா தெரியாத விஷயத்தை பேசியிருக்க கூடாது. அரைகுறையா தெரிஞ்சுகிட்டு இஷ்டத்துக்கு கதை அளந்திருக்கான். இடியட்” என்று வண்ண வண்ணமாக திட்டுகளை அள்ளி வீசினாள்.

யாரென்றே தெரியாத ஒருவரை வகை தொகையின்றி சட்டத்தில் ஏற்றி விளாசியிருந்தாள். அவன்  யாரென்று தெரியவந்தால்?

வெகு நேரம் தனிமையில் இருக்க விரும்பாதவள் எழுந்து சென்று அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் பேசினாள்.

அவள் வாயில் அரைப்பட்டவனோ மதுரையை நோக்கி  வந்துக்கொண்டிருந்தான்.