அன்று ஞாயிற்றுக் கிழமை, பைரவ் மஜும்தார் வீட்டில் வசந்த உற்சவத்துக்கான விழா காலையிலேயே ஆரம்பித்து விட்டது.
சஞ்சய் வலியுறுத்தி சொன்னதால் மினியிடம் கெஞ்சி கேட்டு அன்று விடுப்பு எடுத்திருந்தாள் மீரா. மினியும் அத்தனை எளிதில் தந்திருக்கவில்லை, பைரவ் தாதா வீட்டின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என மீரா காரணம் சொல்லவும் மினிக்கு வியப்பு.
அவர்தான் தங்கள் திருமணத்தை நடத்தி வைத்ததையும் சொன்னாள் மீரா. மினியின் கணவனுக்கும் இந்த விழாவுக்கு அழைப்பு கொடுக்க பட்டிருக்கிறது, நானும் குடும்பத்துடன் வருவேன் என்பதை பகிர்ந்த மினி, “இதுக்கு மேல எப்படி லீவ் இல்லைனு சொல்றது? எடுத்துக்க” என சொல்லி விட்டாள்.
அப்படியே விழாவுக்கு மஞ்சள் நிற ஆடை அணிந்து வருவது சம்பிரதாயம் என்பதையும் சொன்னாள்.
சனிக்கிழமை மாலையில் மாலினியின் வீட்டிலிருந்து திரும்பி வந்த சஞ்சயிடம் இதை கவலையுடன் சொன்னாள் மீரா.
“இப்படி ஃபங்ஷனுக்கு ட்ரெஸ் கோட் எல்லாம் நார்மல்தானே மீரா, அதுல உனக்கென்ன வருத்தம்?” எனக் கேட்டான் சஞ்சய்.
“என்கிட்ட எல்லோ கலர்ல இருக்கிறது ஒரு சுடிதான், அது கூட ஃபங்ஷனுக்கு போட முடியாத படி ஃ பேட் ஆகிடுச்சு சஞ்சய். நீங்க மட்டும் போய்ட்டு வாங்களேன்”
“என்கிட்டேயும் எல்லோ கலர் ஷர்ட் எதுவும் இல்லை. அதுக்காக போகாம இருக்கிறதா, நீ கிளம்பு புதுசா வாங்கிடலாம்”
“விளையாடுறீங்களா சஞ்சய்? நமக்கு அடுத்த மாச சம்பளம் வர்ற வரை இருக்கிறத வச்சுத்தான் சமாளிக்கணும். இப்போ போய் ட்ரெஸ் எடுத்தா நாமதான் சிரம படனும்” என மறுத்தாள் மீரா.
“இன்னிக்கு மட்டும் என்ன பிரச்சனைன்னு பாரு மீரா. நாளைக்கு என்ன வேணா நடக்கும், அதுக்காக அந்தந்த நேர ஹாப்பி மொமெண்ட்ஸை ஏன் லாஸ் பண்ணணும்? உன் கவலை என்ன… மாசக் கடைசிய எப்படி ஓட்டுறதுன்னுதானே? பைசா முடியுறப்போ சொல்லு, என் ஆஃபிஸ்ல அட்வான்ஸ் வாங்கிக்கலாம், அந்த ஃபெஸிலிட்டி இருக்கு” என்றான் சஞ்சய்.
“இல்லை சஞ்சய் ஏன் அப்படி…”
“ட்ரெஸ் எடுக்க இவ்ளோ தம் கட்டி பேசணுமா மீரா? நீயும் சரி நானும் சரி வேலைக்கு போறோம், தினம் தினம் எவ்ளோ ப்ரஷர் ஹேண்டில் பண்றோம்? அதிசயமா நமக்கு சேர்ந்த மாதிரி லீவ் கிடைச்சிடுச்சு, ஒரு ஃபங்ஷனுக்கு போக என்னென்ன சொல்ற நீ?” எரிச்சலாக கேட்டான் சஞ்சய்.
அவள் முகம் சுருக்க, “பாரு நமக்குள்ள பிட்டர்னெஸ் வருது. சீக்கிரம் கிளம்பு… ட்ரெஸ் வாங்க போலாம்” என முடிவாக சொல்லி விட்டான். மேலும் பேசி சஞ்சயின் மனநிலையை அவளும் பாழ் செய்ய விரும்பவில்லை.
மீராவுக்குத்தான் முதலில் பார்த்தனர்.
பெண்களுக்கான ஆடை என முதன்முதலில் அன்றுதான் எடுக்கிறான் சஞ்சய். வீட்டில் தன் அம்மாவுக்கு வாங்கித் தர வேண்டும் என்றால் அக்காக்கள், அவர்களுக்கு வாங்கித் தர வேண்டும் என்றால் அம்மா என அவர்களை சார்ந்தே இருந்து விட்டான்.
மீராவுக்கும் புடவைகள் பற்றியெல்லாம் அதிகம் தெரியாது. படிக்கும் போது கம்யூனிட்டி போஸ்டிங் போது சீருடையே புடவைதான் என்பதால் கட்டிக் கொள்ள ஏதோ வரும். பெண் கல்லூரியில் படிக்கிறாள் என பண்டிகை சமயங்களில்தான் கூட சுடிதார்தான் எடுத்து தருவார் சுபா.
இப்போது மீராவிடம் இருக்கும் ஒரே புடவை திருமணத்துக்கு பைரவ்வின் மனைவி எடுத்துக் கொடுத்ததுதான்.
என்ன பார்க்க வேண்டும் என கடையாள் கேட்கவுமே இருவருமே விழித்தனர். டாப் மட்டும் வாங்கிக் கொண்டால் பாட்டம் தன்னிடமிருக்கும் எதையாவது போட்டுக் கொள்ளலாம் என மீரா நினைக்க, அதற்குள் புடவைகள் பக்கம் எங்கே என கேட்டு விட்டான் சஞ்சய்.
“அது ஜாஸ்தி ஆகும் சஞ்சய், டாப் மட்டும் போதும்” என்றவளை முறைத்தான்.
“எனக்கு சாரீ கட்ட வராது, அப்படியே கட்டினாலும் வசதி படாது” என அவள் அடுத்து சொன்ன காரணங்களை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை அவன். பணத்திற்காகத்தான் பார்க்கிறாள் என நினைத்தவன் கண்டிப்பாக புடவைதான் வாங்க வேண்டும் என அடம் செய்தான்.
“யூ டியூப்ல பார்த்தா ஆயிரம் வீடியோஸ் வரும், அதை பார்த்து கட்டிக்க” என சொல்லி விட்டான்.
ரெடிமேட் பிளவுஸுடன் கூடிய ரகங்களையே பார்த்தாள். விலையை விலையை அவள் பார்க்க, “மீரா…” என கடிந்து கொண்டான் அவன்.
“ப்ச் ஒரு நாள் கூத்துக்கு எடுக்க போறதுல ரொம்ப பணம் போடல்லாம் எனக்கு மனசு வராது” என்றாள் அவள்.
இது போலவெல்லாம் எளிய மனிதர்களின் பட்ஜெட் வாழ்க்கை அவனுக்கு அனுபவமே கிடையாதே. விலை என்ற ஒரு விஷயமே அவனது யோசனைகளில் இருந்தது இல்லை. இவள்தான் அதிகம் செய்கிறாள் என்ற நினைப்பும் வந்தது.
“நீ மத்ததுல பாரு விலை. இது ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் உனக்காக நான் வாங்குறது, லைஃப் லாங் நமக்கு மெமரில இருக்க போற விஷயம் மீரா, என்னை பேட்’டா ஃபீல் பண்ண வைக்காத ப்ளீஸ்” என அவன் சொல்ல, நீங்களே எடுங்கள் என சொல்லி ஓரமாக நின்று கொண்டாள்.
மஞ்சள் நிறத்தில் பெரிது பெரிதாக சிகப்பு பூக்கள் போட்ட புடவை அவனது கண்களை கவர்ந்தது. எடுக்க சொன்னவன் அவளது தோளில் வைத்துப் பார்த்தான்.
“வாவ்!” என அவனை மீறி சிலாகித்து சொன்னான்.
சுற்றத்தை கண்களால் சுட்டிக் காண்பித்து பார்வையாலேயே அவனை கடிந்து கொண்டாள்.
“என் ஃபீலிங்ஸ் எல்லாம் கண்ட்ரோல் பண்ணாத. அப்படியொன்னும் உனக்கு லிப்லாக் கொடுத்திடலையே நான்?” என அவளுக்கு மட்டும் கேட்கும் படி பேசினான்.
“நீ என்கிட்ட ஷை ஆகும் போது உன் எல்லோ ச்சீக்ஸ் இப்படித்தான் ரெட் ஆகும். இந்த சாரீ டிசைன் உன் வெட்கத்தோட சிம்பள் போல இருக்குல்ல?” என ரசித்துக் கேட்டான்.
சஞ்சய்க்கு இவ்வளவு பிடிக்கவும் அவளுக்கும் இதை வாங்கியே ஆக வேண்டும் என அவ்வளவு ஆசை. பயத்துடன்தான் விலையை பார்த்தாள். அவள் திட்டமிட்ட விலை இல்லையென்றாலும் அதீதமாகவும் இல்லை. அதையே வாங்கிக் கொண்டாள்.
சஞ்சய் மஞ்சள் நிறத்தில் குர்தா மட்டும் எடுத்துக் கொண்டான். நாளை அவர்களின் வீட்டுக்கு வெறுங்கையுடன் செல்வதா என இனிப்புகளும் பழங்களும் வாங்கிக் கொண்டு திரும்பினார்கள்.