சிம்மன் கலாய்த்ததில் முறைத்த அவினாஷ், “உன் முகம் கூடத்தான் லவ் டயலாக் பேசற மாதிரி இல்லை. ஆனா நீயெல்லாம் இரண்டு வருஷம் லவ் பண்ணன்னு சொல்றாளே. எப்படின்னுதான் புரியலை!” என்று நக்கலடித்தான்.

குமுதினி அதைக்கேட்டு சிரிக்க, “ஹ்ம்ம்… இப்ப பேசிக்காட்டவா கும்கி?”, என்று அவளருகே செல்ல, முகம் மாறியவள், “ஜெய். கிளம்பு. போதும்”, என்று அழுத்தமாகக் கூறினாள்.

அதற்கு மேல் சிம்மன் விளையாடவில்லை. “நைட் யாரு இருக்கா உன் கூட?”

“யாரும் வேணாம். தேவைப்பட்டா நர்ஸ் கூப்பிடறேன்னு சொன்னா அவினாஷ் கேட்க மாட்டேங்கறான்.”

“நான் இருக்கேன் குமுதினி. தட்ஸ் இட்.”, அவினாஷ் சொல்ல, “பால்டப்பா இன்னிக்கு என்ன ஃபயர் மோட்ல இருக்கான்?”, அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்து அவளது உஷ்ணப்பார்வையை பெற்றுக்கொண்டான்.

மனதிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும், யாருமே இல்லாது தனியாக இருப்பதை விட, அவினாஷுடன் இருக்கட்டும் என்று நினைத்து, காலையில் வருவதாக கிளம்பிச் சென்றான்.

காலை எட்டு மணிக்கு விசிடிங் ஹவர் ஆரம்பித்ததும் முதல் ஆளாய் உள்ளே வந்தது ஜாஸ்மின்.

“குட் மார்னிங் அவினாஷ். குமுதினி இப்ப எப்படி இருக்கீங்க?” என்ற முகமனுடன், பளிச்சென்று  உள்ளே வந்தாள்.

அப்போதுதான் கீழே கான்டீனில் காஃபி வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்தான் அவினாஷ். குமுதினிக்கு ஹார்லிக்ஸ் மருத்துவமனையே வழங்கிவிட்டது.

ஜாஸ்மின் குமுதினியை விசாரிக்கையில் ஒரு வாய் காஃபியைக் குடித்தவன் முகம் அஷ்டகோணலானது.

“ஒஹ்… அவினாஷ் இங்க கிடைக்கறதெல்லாம் உங்களுக்கு பிடிக்காதுன்னு , நான் காஃபி எடுத்துட்டு வந்திருக்கேன். அதுக்குள்ள ஏன்..”, என்றவள் மேசையிலிருந்த பையில் ஒரு சிறிய காஃபி ஃப்ளாஸ்க் எடுத்து, கூடவே எடுத்து வந்திருந்த ஒரு கப்பில் ஊற்றிக் கொடுத்தாள்.

“யூ ஆர் அன் ஏஞ்சல் ஜாஸ்..”, என்று வாங்கிக்கொண்ட அவினாஷ் புன்னகை முகமாக ரசித்து காஃபியைப் பருக ஆரம்பித்தான்.

“அவினாஷ் குடிக்கற ஸ்பெஷல் கொலம்பியன் காஃபி. நைட் எப்படியும் சரியா தூங்கியிருக்க மாட்டார்னு ரெடி பண்ணி எடுத்துட்டு வந்தேன். எப்பவும் கொஞ்சம் என் பையில ரெடியா வெச்சிருப்பேன் குமுதினி. இதுன்னா ப்ளாக் காஃபியா கூட குடிச்சிடுவார்.”, ஜாஸ்மின் தகவல் சொல்ல தலையாட்டி கேட்டுக்கொண்டாள்.

பேச்சு சற்று அவினாஷின் காலை அலுவலக வேலைகள், எதை எப்போது தள்ளி வைப்பது என்று சென்றது. “பத்து மணி போல அம்மா வந்து உன் கூட இருப்பாங்க குமுதினி. லன்ச் டைம் போல அவங்க கிளம்புவாங்க. அடுத்து..”

“அவினாஷ்…நான் என்ன குழந்தையா? எப்படியும் தூங்கிடுவேன். சோ மதியம் மேல யாரும் வேண்டாம். நீ ஈவினிங் விசிடிங் டைம்ல வா. நைட் கிளம்பிடனும்.  நேத்தே இவங்க பிபி செக் அது இதுன்னு வந்து போனது, அந்த அடெண்டர் பெட் எதுவும் உன்னை சரியா தூங்கவே விடலை.”

“ம்ம்… பார்க்கலாம். ஆனால் நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆனதும் நம்ம வீட்டுக்குத்தான் போகணும் குமுதினி. அங்க ஆளுங்க இருப்பாங்க, அம்மாவும் இருப்பாங்க பார்த்துக்க. ஒன் வீக் டென் டேய்ஸ் கழிச்சு நீ உன் அப்பார்மென்ட் வந்துக்கலாம். அதுல மாற்றமில்லை சரியா?”

“ம்ம்.. சரி பார்க்கலாம்”, என்று அவனைப் போலவே சொல்லி வைத்தாள் குமுதினி.

அவளது காலை சிற்றுண்டி வரவும், அவினாஷை தடுத்து, ஜாஸ்மினே குமுதினி உண்ண ஏதுவாக மெத்தையின் மேல் மேசை அமைத்து உணவை பிரித்து வைத்தாள். இட்லி இரண்டும் தொட்டுக்கொள்ள சாம்பார் சட்னி இருந்தது. ஸ்பூன் இருக்கவும், “நானே சாப்பிடறேன் ஜாஸ்மின். ஒன்னும் பிரச்சனையில்லை”, என்று உண்ண ஆரம்பித்தாள்.

“அவினாஷ்… உங்களுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் கொண்டு வந்திருக்கேன். எடுத்து வைக்கவா?”

“ஜாஸ்… என் ட்ரபுள் பண்ணிக்கற? நான் வீட்டுக்குப் போய் கூட பார்த்துக்குவேன்.”, என்ற அவினாஷைப் பார்த்து புன்னகைத்தவள்,

“அதெல்லாம் ஒரு ட்ரபிளும் இல்லை. உங்க ஃபேவரிட், நிறைய மிளகு போட்டு ரவா பொங்கலும் புதினா சட்னியும். சாப்பிட்டு வீட்டுக்கு போய் தூங்கி எழுந்தா ஃப்ரெஷ் ஆகிடுவீங்க.”

சிரித்தவன், “என் வீக்னெஸ் எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்க ஜாஸ். வீட்டுல செஞ்சு கூட வாரம் பத்து நாளாகிடுச்சுன்னு நினைக்கறேன்”, என்று சொல்லி அமர்ந்தான்.

“கையோடு ஒரு பீங்கான் தட்டு வைத்தவள், அளவான ஒரு கப்பில் நிறைத்திருந்த ரவா பொங்கலை தட்டில் கவிழ்த்தி, பக்கத்தில் ஒரு சிறு கிண்ணத்தில் புதினா சட்னியை வைத்து, இரண்டு புதினா இதழை கவிழ்த்திருந்த பொங்கலின் மீது செருகி வைத்து, கூடவே அவன் பருகும் ஒரு சிறு மினரல் வாட்டர் பாட்டிலையும் வைத்தாள்.

ஙே.. என்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள் குமுதினி. செக்ரட்ரிக்கு தெரிஞ்சிருக்கு கட்டிக்கப் போற உனக்குத் தெரியலை, மனது நக்கலடித்தது,

“என்ன குமுதினி? இட்லி நல்லாயில்லையா? கொஞ்சம் பொங்கல் வேணா ட்ரை பண்றியா?”, அவினாஷ் கேட்க, வேண்டாம் என்று தலையசைத்தவள்,

“ஜாஸ்மின் உங்க திறமையே திறமை. எஃபிஷியன்சி லெவல் எங்கேயோ போயிடுச்சு போங்க. அந்த புதினா இலை செம்ம ட்ச்”, என்று மனதாரப் பாராட்டினாள்.

“அது…அவினாஷ்க்கு சாப்பிட்டு முடிச்சு இரண்டு  மின்ட் லீஃப் சாப்பிடப் பிடிக்கும், அதுதான் வெச்சேன். “

“ஓஹ்..”, புருவம் உயர்த்தி கேட்டுக்கொண்டவள், “இதெல்லாம் எப்படி தெரிஞ்சு வெச்சிருக்கீங்க ஜாஸ்மின்?”

“அது அவினாஷ் அம்மா பேச்சுவாக்குல சொன்னது. அவரை கவனிக்கறதுல தெரிஞ்சுக்கறது. அப்படிதான். அவரா இது பிடிக்கும் பிடிக்காதுன்னு சொல்ல மாட்டார்.”, சிறு புன்னகையுடன் கூறினாலும், செல்லமாய் அலுத்துக்கொள்ளும் அவள் தொனியை கவனித்தாள் குமுதினி.

அதை உணராத அவினாஷ், “நான் இங்கதான் இருக்கேன் லேடீஸ். என்னைப் பத்தி என் முன்னாடியே டிஸ்கஸ் பண்றீங்க?”, என்று சிரிக்க,

“பின்னாடி பேசினாத்தான தப்பு அவினாஷ்.”, என்று குமுதினி சொல்ல, அதற்கு மேல் பேச்சு இயல்பாக சென்றது.

அவர்கள் சென்ற பின்பும் யோசனையாகவே இருந்தாள் குமுதினி. ஜாஸ்மின் அவினாஷிற்கென் இத்தனை மெனக்கெட்டு பார்த்து பார்த்து செய்வது கண்டு அவளிடம் எந்த பொறாமையும் தோன்றவில்லை. பிருந்தா ஆன்ட்டியிடம் ஒரு நாளும் அவினாஷுக்கு எது பிடிக்கும், சிறு வயதில் எப்படி இருந்தான் என்று பெரிதாக எதையும் பேசியிருக்கவும் இல்லை.

‘கல்யாணம் முடிஞ்சு மறு நாள் பரிமாற வந்த அந்தப் பொண்ணை அனுப்பிட்டு நீயே ஜெயிக்கு பரிமாறனது ஏன் கண்ணு?”, திடீரென்று முழித்துக்கொண்ட மனசாட்சி கேட்க, ‘அது… அறியாத வயசு, தேவையில்லாம ஒரு உரிமை குணம். இப்ப பக்குவம் வந்தாச்சு.  முதல்ல நான் ஏன் பறிமாறணும்? பொண்ணுங்களை உட்கார வெச்சு கொஞ்சம் ஆம்பளைங்க பறிமாறட்டுமே?’

‘இப்ப எதுக்கு ட்ராக்க பெண்ணியம் பக்கம் திருப்பற. பிரச்சனை பொறாமை அப்ப வந்தது, இப்ப இல்லை. சிம்மனுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சு உன் கையாலேயே செஞ்சு குடுத்தது, அவினாஷ்க்கு என்ன பிடிக்கும்னே தெரியாம இருந்தது’, அவ்வளவுதான்.

பதிலில்லாது விட்டத்தைப் பார்த்திருந்தாள். நர்ஸ் பிசியோ என்று அடுத்து நேரம் சென்றது.

காலையில் அதே நேரம் சிம்மன் அவர்கள் அப்பார்ட்மென்ட் வளாக செக்யூரிட்டி அறையில் இருந்தான், நேற்று மூன்று மணியளவில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை காண, லிஃப்ட்டில் குமுதினி அழுவதும், கண்களை துடைத்துக்கொண்டு வெளியே வருவதும் தெரிந்தது. மற்றொரு பக்கம் வார்ச்மேன் இராமலிங்கம் ஒரு ஆளுடன் பேசுவதும், குமுதினி காரில் ஏறி செல்வதை அவர்கள் இருவருமே பார்ப்பதும் பேசுவதும் தெரிந்தது.

“அந்த ஆள் முகம் தெரியற மாதிரி எதாவது கிடைக்குமா பிரகாஷ்?“

“வாசல் பக்கம் இருக்கற காமெரா பார்க்கலாம் சார்”, என்று காட்ட, அது அவன் ஊரில் இருக்கும் பாண்டியன் என்று கண்டுகொண்டான் சிம்மன்.

“இதெல்லாம் ஒரு காப்பி வேணும் பிரகாஷ்.”, கையோடு பென் ட்ரைவில் வாங்கிக்கொண்டு வாட்ச்மேனை பார்க்க வந்தான்.

“சார்… பார்க்கணும்னு சொன்னீங்களாம்?” இராமலிங்கம் வந்து நிற்க, அவனிடம் பாண்டியன் விசாரித்தது பற்றிக் கேட்டான்.

“உங்க ஆஃபீஸ்லர்ந்து வந்ததா சொன்னார் சார். ஐயா வீட்டுல இருக்காரான்னு கேட்கவும், ஆமான்னேன். காலையில எங்கேயும் போகலையா, ஆஃபீசுக்கும் வரலை. ஒரு ஃபைல் வேணும்னு என்னவோ சொல்லிகிட்டு இருந்தான். அப்ப குமுதினி மேடம் போனாங்க. இவங்க டீ.வில வர குமுதினிதானன்னு கேட்டான். ஆமாம்னு சொன்னேன். அவங்க எப்ப வந்தாங்கன்னு கேட்டான். எனக்கு தெரியலைபா, என் ட்யூட்டி டைம் முன்னாடி வந்திருக்கலாம். நான் பார்க்கலைன்னேன். அவ்வளவுதான் சர்.”

மீண்டும் வீட்டிற்கு வந்தான். அலைபேசியில் பிரபா அழைத்தான். “சார், உங்களை பத்தி வாட்ச்மேன்கிட்ட ஒரு ஆள் விசாரிச்சிருக்கார். நீங்க ஆஃபீஸ்ல இல்லைன்னவும், சரின்னு கிளம்பிட்டாராம். போட்டோ சிசி டி.வியிலர்ந்து எடுத்து அனுப்பியிருக்கேன் பாருங்க.”

அதே பாண்டியன், இப்போது இன்னும் சற்று தெளிவாகத் தெரிந்தான்.

“ம்ம்..இவன் தான் இங்கேயும் வந்திருக்கான் டா. குமுதினி போறதையும் பார்த்திருக்கான். எங்கப்பாகிட்ட போட்டு குடுத்திருக்கான்.”

“பைக்லதான் சார் வந்து விசாரிச்சிருக்கார். மேடம் சொன்ன மல் வேஷ்டி வெச்சு பார்த்தா, இடிச்சதும் இவராத்தான் இருக்கும்.”

“ம்ம்…இன்னிக்கு பத்து மணி கால் ஜூம்ல வரேன். மதியம் குமுதினியப் பார்த்து லஞ்சு குடுத்துட்டு அப்பறமா அஃபீஸ் வரேன். “

“பாஸ், அங்க கொட்டிவாக்கம் பக்கத்துல ஒரு ப்ராபர்ட்டி பார்க்கலாம்னு சொன்னமே?”

“ம்ஃப்ச்…அதுவேற இருக்கா. சரி நாலு மணி போல அங்க இருப்போம்னு சொல்லிடு.”, வைத்தவன்,

“சுப்பு…”, என்று அழைத்து, “ராகி கூழ் பண்ணுங்க. ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க,அதனால் கொஞ்சம் ஈசியா சாப்பிடற மாதிரி, சின்ன வெங்காயம், பச்சமிளகாய் பொடியா கட் பண்ணி தனியா வைங்க, குடிக்கும்போது மிக்ஸ் பண்ணிக்கலாம். கொஞ்சமா சாதம் போட்டு நீர் மோர் தாளிச்சிவிட்டு கரைச்சு, தொட்டுக்க மோர்மிளகாய், காரமா ஒரு தக்காளி தொக்கு எல்லாம் பாக் பண்ணி பதினொன்னரைக்கு ரெடியா இருக்கணும். ம்ம்… இரண்டு சுட்ட அப்பளம். மிளகு போட்டது.”

வேலைக்கு சேர்ந்த இந்த ஐந்து வருடத்தில் இத்தனை விலாவாரியாக சமையல் மெனு கொடுப்பது இதுதான் முதல் முறை. ஆச்சரியமாகப் பார்த்த சுப்பு, “உங்களுக்கு லன்ச் ஐயா?”

“ம்ம்… எனக்கும் அதேதான். இரண்டு பேருக்கா ரெடி பண்ணிடுங்க. அங்கேயே சாப்பிட்டுக்கறேன். கிண்ணம், ஸ்பூன், கரண்டி எல்லாம் செட்டா வெச்சிருக்கங்க.

‘இம்புட்டு மெனக்கெடறாரே இது யாருக்குன்னு தெரியலையே? பிரபாவைக் கேட்ப்போம்.’, என்ற யோசனையுடன் உள்ளே சென்றார் சுப்பு.

சிம்மன் குமுதினியிடம் பேசப்போவதை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான்.