அத்தியாயம் – 14

இரவு ஒன்பது மணி போல வந்தான் சிம்மன். அவளது அறையைக் கண்டுபிடித்து உள்ளே நுழைய, கட்டிலில் படுத்திருந்தாள் குமுதினி. வலது கால் பெரிதாக பாண்டேஜ் சுற்றப்பட்டு சற்று உயர்த்தி வைக்கப்பட்டிருந்தது. இடது கை முட்டியில் ப்ரெஷர் பாண்டேஜ் போட்டு கழுத்துடன் தொங்க விடப்பட்டிருந்தது. நெற்றியில் காயத்திற்கான பாண்டேஜ் இருந்தது.

இதையெல்லாம் நொடியில் கிரகித்தவன், அவளது சோர்ந்த முகத்தைப் பார்த்து வருந்தினான்.

“என்னடி இப்படி விழுந்து வாரி வெச்சிருக்க?”, என்று கேட்க,

“அவளா விழலை, ரோட்ல நடந்து வந்தவளை டார்கெட் பண்ணி பைக்ல வந்து எட்டி உதைச்சு தள்ளி விட்டிருக்காங்க”, பதில் அவினாஷிடமிருந்து வந்தது.

கீழே விழுந்து கால் பிசகி, ஹேர்லைன் ஃப்ராக்சர் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன் என்று அவினாஷ்தான் அழைத்துக் கூறினான். தனக்கு முன்னால் அவனை அழைத்திருக்கிறாள். ஹாஸ்பிட்டலில் சேர்ந்திருப்பதை அவன் தனக்கு தகவல் சொல்கிறான் என்றதே எரிச்சல். டேய் இத்தனை வருஷம் நீயா பார்த்துகிட்ட, எப்படி உன்னை கூப்பிடுவா? என்று மனதை தேற்றிக்கொண்டேதான் வந்தான்.

இதைக்கேட்டவன் திகைத்து, குமுதினியின் புறம் திரும்பி,

“யாரு? மறுபடி அந்த அமைச்சரா? ஆள் பார்த்தியா?”

சோபையாக ஒரு புன்னகை சிந்தினாள் குமுதினி. அவினாஷ் கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்த்தான். “திருந்தவே மாட்ட சிம்மன். குமுதினியை டார்கெட் பண்றது உங்கப்பா. ஆனா அது தோணலை இல்ல?”, வெறுப்பாய் கேட்க, அதிர்வுடன் குமுதினியைப் பார்த்தான். அவினாஷ் ஒருமையில் அழைத்தது கூட பதியவில்லை.

“பேசுடி… நிஜமா?”

“இடிச்சவன் வேஷ்டி கட்டியிருந்தான். இங்க இருக்கவன் யாரு மல் வேஷ்டி கட்டி பைக் ஓட்டுறான்? அமைச்சர் ஏன் திரும்ப என்னை டார்கெட் பண்ணப்போறார்? எனக்கென்னவோ உன்னையோ, என்னையோ உங்கப்பா திரும்ப வாட்ச் பண்றாருன்னு நினைக்கறேன். உன் வீட்டுக்கு நான் வந்துட்டு போன செய்தி அவருக்கு போயிருக்கு. அதுதான் இங்க இருக்கற அவர் ஆளைவிட்டு ஏவியிருக்கார். இப்பக்கூட நீ இங்க வந்துட்டு போனது அவருக்கு தெரிஞ்சா, அதுக்கும் எதாவது செய்யலாம்.”, மெலிந்தே வந்தது குமுதினியின் குரல்.

“நான் செக்யூரிட்டி செர்வீஸ்ல பேசிட்டேன் குமுதினி, உடம்பு சரியாகி வெளியே வர ஆரம்பிச்சா, உன் கூட பாடிகார்ட்ஸ் எப்பவும் இருப்பாங்க.”, என்று அழுத்தாமாகக் கூறியவன் சிம்மனிடம்,

“குமுதினி உன்னை பார்த்துட்டு வந்த மூணு மணி நேரத்துல , படுத்த படுக்கையா இருக்கும்போதே அவரால இப்படி பண்ண முடியுது. அவளுக்காக யாரும் இல்லைன்னு நினைச்சிட்டுதான இந்த வேலை பார்க்கறாரு அந்தாளு? கட்டிக்கப்போறவன் நான் இருக்கேன்னு அவருக்கு காட்டவா? வீடு பூகுந்து துவம்சம் பண்ணச் சொல்ல வா?”, கோபத்தில் அவினாஷின் முகம் சிவந்துவிட்டது.

“நீ சொல்லு குமுதினி!”, என்று அவள் வார்த்தைக்கு அவினாஷ் நிற்க,

“ப்ளீஸ்… அமைதி அவினாஷ். நீயும் இப்படி ரௌடியிசத்துல இறங்கினா எப்படி?”

“அவங்களுக்கு புரியறது அது ஒன்னுதானே? “

அதுவரையிலுமே திகைப்பில் இருந்த சிம்மன், மெல்ல அருகிலிருந்த  நீள்விருக்கையில் அமர்ந்தான்.

‘தன்னை என்ன கையாலாகாத மழுமட்டை என்று நினைத்துக்கொண்டிருக்கிறாரா அப்பா?’, குமுதினியைப் பார்க்கப் பார்க்க உள்ளம் தகித்தது. என்னை கல்யாணம் செய்த குற்றத்திற்கு இந்த பெண்ணிற்கு எவ்வளவு கஷ்டம்? அவளாக விலகிப் போக முடிவெடுத்தும் மீண்டும் அவளுக்கு கஷ்டத்தைத்தான் இழுத்து விட்டிருக்கிறேன். மிகவும் வருத்தமாகிப்போனது.

“என்ன சிம்மா? எல்லாத்துக்கும் பொங்குவ, இப்ப பேச்சே காணோம்?”, அவினாஷ் கேள்வியில், “ரொம்ப ஆடாதே. யோசிக்க விடு”, என்று கடித்தான்.

“கேட்டதுமே டைவர்ஸ் குடுத்திருந்தா, இதெல்லாம் வந்திருக்காது. வேணும்னு இழுத்தடிக்கவும்தான் உங்கப்பாக்கு சந்தேகம். மிரட்ட பாட்டியும் இல்லை. அதுதான் இப்படி இறங்கியிருக்கார்.”

அவினாஷ் கூறியதில் பல்லைக் கடித்தான் சிம்மன். ‘டேய் பால்டப்பா, டைமிங்கல தாக்கறியேடா!’, என்று நினைத்தாலும் திருப்பி அடிக்க முடியாத இடத்தில் உட்கார வைத்துவிட்டாரே அவன் தந்தை என்று மனம் கசந்தது.

“உங்கப்பா பண்ணதுக்கு கண்டிப்பா அனுபவிக்கணும் சிம்மன். பெரியவர், முடியாதவர்னு மன்னிச்சு விட முடியாது. குமுதினியை அவர் டாமேஜ் பண்றது இது இரண்டாவது தரம் முதல்ல அவ பேரை கெடுத்தார், இப்ப அவளை ஹர்ட் பண்றார்.”, அவினாஷ் மேலும் பேச,

“போதும். அவர் மேல எனக்குமே எக்கச் செக்க கோவம் இருக்கு. வீடு புகுந்து அடிக்கற நேரம் ஊர் காரங்க எல்லாரும் ஒன்னா கூடிருவாங்க. நீ அனுப்பின ஆளுங்களை அடிச்சு கொண்டுபோய் போலீஸ்ல நிறுத்துவாங்க. வேணும்னே ந்யூஸ் சானலுக்கு கண்டபடி பேட்டி குடுப்பாங்க. தேவையா?”

இடுப்பில் கைவைத்து முறைத்த அவினாஷ், “ஓ…சரி… நீதான் ஐடியா சொல்லேன்?”

சிம்மன் குமுதினியைப் பார்க்க, அவள் அமைதியாக அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். முன்னர்தான் கண்ணைக் கட்டிக்கொண்டு இருந்தாய். இதோ இப்போது என்ன செய்யப் போகிறாய் என்பதாக இருந்தது அவள் பார்வை.

“இது கொஞ்சம் அவர் வழியிலதான் செய்யணும். முதல்ல அவர் சொல்றதை செய்யற முத்தையனை வெளியேத்தணும். அடுத்த ஸ்டெப்னி முருகன், அவனையும் கிளப்பிட்டு என்னோட ஆள் ஒருத்தனை போடணும். அதுவே அவரை முடக்கிடும்.”

“இதெல்லாம் அவர் இனிமே எதுவும் செய்யாம இருக்கறதுக்கு வேணா யூஸ் ஆகும். இப்ப செஞ்சதுக்கு என்ன தண்டனை?”, அவினாஷ் விடாது குடைந்தான்.

குமுதினியை ஒரு பார்வை பார்த்தவன், “இந்த வயசுக்கு அவரை என்ன அடிக்கவா முடியும்? அவர்கிட்ட மிஞ்சி இருக்கறது இப்ப மூளைதான். வந்த பக்கவாதம், உடம்பை விட்டுட்டு அவர் மூளையை முடக்கியிருக்கலாம்.”, பெருமூச்செறிந்தான்.

“…”

“முத்தையன் கிட்ட வாரிசு உரிமை கேட்டு லாயர் நோட்டீஸ் வரும். அந்த லாயர்தான் அவனை விசாரிக்கச் சொன்னார்னு அவனை விசாரிச்ச அடியாள் மூலமா சொல்லி வெச்சிருக்கேன். ஒரு ஃபேக் நோட்டீஸ் அனுப்பணும். டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க எனக்கு ஆர்டர் வந்திருக்கறதா சொல்லணும். உனக்கும் எனக்கும் பிறந்த குழந்தைன்னு..”

“வாட்? கண்டிப்பா முடியாது. என் பேரை கெடுத்த வரைக்கும் போதும்”, இடையிட்டாள்.

“அவருக்கு ஒரு பிள்ளை இருக்கறதா சொல்லு. எத்தனையோ பொண்ணுங்களோட வாழ்க்கையை பாழாக்கியிருக்கார். எல்லாரையுமா ட்ராக் பண்றார்? “, குமுதினியின் கேள்விக்கு,

“வாரிசு இருக்கு, எனக்கு தெரிஞ்சிரும்ங்கறதைவிட நீயும் நானும் திரும்ப சேர்ந்துடுவோமோன்னு நினைக்கறதுதான் அவருக்கு டார்ச்சர். அதுவும் அவரோட அடியாள் கூட இல்லாம, ஒன்னும் செய்ய முடியாம நிக்கும்போதுதான் உன்னை விரட்டின போது உனக்கிருந்த வலி தெரியும் குமுதினி.”

குமுதினி அவினாஷைப் பார்க்க, அவனோ, “ஏன் சிம்மன், இந்த ஐடியா உங்க அப்பாவை பழிவாங்கறதுக்கா இல்லை குமுதினியை திரும்ப உன் வாழ்க்கையில சேர்த்துக்கிறதுக்கா?”, என்று சிம்மனைத்தான் கூர்ந்து பார்த்தான்.

“ஏன்… உனக்கு உங்க காதல் மேல நம்பிக்கை இல்லையா? குமுதினி மேல நம்பிக்கை இல்லையா?”, சிம்மன் பதிலுக்கு கேள்வியாய் நோக்க,

“அதெல்லாம்விட உனக்கு எதுக்கு நான் வாய்ப்பு குடுக்கணும்னுதான் யோசனை. பேசாம டைவர்ஸ் பேப்பர்ல சைன் போடு. நீயாச்சு உங்க அப்பாவாச்சுன்னு நாங்க விலகிப் போறோம்.”, அவினாஷ் அசராமால் பதிலளித்தான்.

“ஆக அவர் வந்து மிரட்டினதும், நீங்க பயந்து போய் அவர் விருப்பப்படியே செஞ்சு அவரை சந்தோஷமாக்கப்போறீங்களா? இவ்வளவு நேரம் பட்ட கோவமெல்லாம் சும்மா டிராமாவா அவினாஷ்?”, வேறு விதமாக சீண்டினான் சிம்மன்.

“அந்தாள் எப்படி போனா என்ன? இது எங்களை, என் அம்மாவை சந்தோஷப்படுத்தும். கோவம் கண்டிப்பா இருக்கு. நீ எதாவது செய்யலைன்னா, நான் கண்டிப்பா செய்வேன். அவருக்கும் கழுத்திருக்கு, எனக்கும் கத்தி வெச்சு மிரட்ட ஆள் இருக்கு. நீ சும்மா எங்ககிட்ட படம் காட்டிட்டு அவரை ப்ரொடெக்ட் பண்ணலாம்னு நினைச்சா, பொறுத்துகிட்டு இருக்கமாட்டேன்.”

அவினாஷ் சுற்றி சுற்றி அவனை மடக்கியதில் சிம்மனுக்கு எரிச்சல் மண்டியது. ‘இன்னிக்குன்னு பார்த்து இவனுக்கு ஏன் மூளை இப்படி வேலை செய்யுது?’ என்று நொந்தவன்,

“நாளைக்கு ஒரு ப்ளானோட வரேன். அதுக்கு முன்னாடி யார் இடிச்சதுன்னு கண்டுபிடிக்கணும். அந்தாளை முதல்ல அடிச்சு பின்னி எடு அவினாஷ். குமுதினி தனியாள் இல்லைன்னு மெசேஜ் போகும் எங்கப்பாக்கு”, அவினாஷ் கவனத்தை திருப்பினான்.

“நீ பண்றியா இல்லை நான் கண்டுபிடிக்கணுமா? உங்க ஃப்ளாட் சி.சி டீவி ஃபுட்டேஜ் பார்க்கணும்.”, அவினாஷ் சொல்லவும், “நானே பார்த்துட்டு சொல்றேன். எங்க ஊர் ஆளுங்களான்னு நான் பார்த்தாலே தெரியும்.”

“இரண்டு நாளுக்குள்ள விசாரிச்சிட்டு சொல்லு சிம்மன். குமுதினி டிஸ்சார்ஜ் ஆகும் போது, அவன் எதாவது ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருக்கணும்”, அவினாஷ் சொல்லவும்,

“ஏ… என்ன நீ சினிமா டயலாக் மாதிரி பேசற? ஜெய் கூட சேர்ந்து கெட்ட பழக்கம் பழகி வெச்சிருக்க அவினாஷ்”, குமுதினி கடிந்தாள்.

சிம்மன் முகத்தில் புன்னகை அரும்பியது. “டயலாக் நல்லாத்தான் இருக்கு ஆனா பால் வடியற முகத்தோட நீ பேசறதுதான் சிங்க் ஆக மாட்டேங்குது!”